பிரச்சனை தீர்ந்தது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 8, 2013
பார்வையிட்டோர்: 19,420 
 

பொன்னி காத்திருந்தாள், போர்முனையிலிருந்து வரும் செய்தியினை ஆவலுடன் எதிர்பார்த்து. ஹ¥ம்ம்ம் … பெருமூச்சு விட்டாள். நாட்கள் நகருவது நத்தை ஊர்வது போலத்தான் இருக்கிறது. எவ்வளவு நாளாயிற்று வேலனும் முருகனும் எதிரியை ஒழித்து நாட்டைக் காற்க போர் முனை சென்று? நம்பவே முடியவில்லையே! இரண்டே வாரம் தான் ஆகியிருக்கிறதா?! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகந்தான். அப்பப்பா!

ஆனால், அவர்கள் வந்ததும், பழைய பிரச்சனை திரும்பி கிளம்பி விடுமே?! பொன்னியின் சிந்தனைகள் பறக்கலாயின. எப்படித்தான் அந்த பிரச்சனையைத் தீர்க்கப் போகிறேனோ? மீண்டும் பெருமூச்செறிந்தாள். ஆனாலும் நெஞ்சத்தில் ஏதோ ஒரு கிளுகிளுப்புத்தான்! பட்டாம் பூச்சிகள் பலப் பல அவளைச் சுற்றிப் பறந்து அவைகளின் சிறகுகளும் அவை அசைந்ததினால் விளைந்த ஒரு மெல்லிய பூங்காற்றும் அவள் மனத்துக்குள் மென்மையாக வருடியதைப் போல்!

‘களுக்’ என்று தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். “போடி, வெட்கங் கெட்டவளே!” என தன்னையே செல்லமாகத் திட்டிக் கொண்டு, கோவிலுக்குக் கிளம்பினாள், அவர்கள் இரண்டு போ¢லும், தினமும் போல் ஒரு அர்ச்சனை செய்து மனச் சாந்தி அடைவதற்காக. “அந்தக் கதிர் வேலன் முருகன் அருளால் அவர்கள் இருவரும் நலமாகத் திரும்பி வரும் வரம் வேண்டும்.”

தினமும் பாடுகின்ற துதிதானே அது! அதிலும் ஒரு பாரபட்சம் இல்லை. வேலன், முருகன் இருவர் பேரும் அந்த பிரார்த்தனையிலும் வந்து விட்டனவே! ஆனால், முருகனுக்கு கொஞ்சம் மனத்தாங்கலாக இருக்குமோ வேலன் பெயர் முதலில் வந்து விட்டது என்று?!

கோவிலுக்கு நடக்கும் போது, பொன்னியின் எண்ணம் பின் நோக்கி ஓட ஆரம்பித்தது.

“பொன்னி, பொன்னி, இந்தா உனக்காக ஆசையா நாகப்பன் தோட்டத்திலேந்து உனக்குப் புடிச்ச ரோசாப் பூ பறிச்சிட்டு வந்திருக்கேன்” – வேலன் வந்து அவளிடம் கொஞ்சினான். “ஐயோ, எவ்வளவு அழகா இருக்கு?!” என்று விழியாலேயே அவனுக்கு நன்றியும், நேசமும் அனுப்பினாள்.

அந்த மலரைத் தன் கூந்தலில் சொருகி, பக்கத்திலிருந்த குளத்தின் தண்ணீரில் தொ¢ந்த தன் பிம்பத்தில், தன் அழகையே பார்த்து ரசித்துக் கொண்டாள். பரம பக்தன் வேலனும் ஒரு மந்திரம் ஒதினான்: “ஆஹா, பொன்னி, உன் அழகையே பார்த்திட்டே இருந்துடலாம். எனக்கு சாப்பாடும் வேண்டாம், தூக்கமும் வேண்டாம்!” என்று.

“ஊக்கும், … போதும், போதும் காக்கா புடிச்சது, யாராவது கேட்டு சிரிக்கப் போறாங்க” என்று போலியாகச் சிணுங்கிக் கொண்டு ஓடினாள்.

அவள் சிறிது தூரம் கடந்ததுமே ஓடோடி வந்தான் முருகன். மூச்சிரைக்கத் திணறிக்கொண்டு, தான் கொண்டு வந்த பொட்டலத்தை பெருமையுடன் நீட்டி, கூறினான், “பொன்னி, பொன்னி, எங்க போயிட்ட இவ்வளவு நேரம்? நான் எங்க எங்கேயோ எல்லாம் உன்னை எத்தன நேரமாத் தேடிக்கிட்டிருக்கேன் தொ¢யுமா?! இங்க பாரு உனக்காக என்ன கொணாந்திருக்கேன்னுட்டு. ரொம்ப நாளா கிடைக்கவே இல்லன்னுட்டு முணுமுணுத்துக் கிட்டிருந்தயே, அந்த அரநெல்லிக்கா. அத, பக்கத்து ஊரு போயி, அந்த சந்தையிலேந்து புடிச்சிட்டு வந்திருக்கேனாக்கும் – இந்தா சாப்புடு.” பொன்னி அவன் தந்த பொட்டலத்தை ஆசையுடன் பிரித்து அள்ளித் தின்றாள் ஒரு வாய். அவளையே தின்று விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் முருகன். “ஆஹா, இந்த ருசி எதுக்குமே வராது!” என்ற பொன்னி, அனுப்பினாள் மின் வெட்டுப் போல் ஒரு பார்வையைத் தூது சென்று, பாசத்துடன் நன்றி சொல்ல. அனலில் மெழுகு போல் உருகிப் போனான் முருகன்.

எத்தனை இனிமையான நாட்கள் அவை! வேலன், முருகன் இருவருமே அவளை உயிராக நேசித்தனர். பொன்னியோ இடையில் தவித்தாள், இருதலைக் கொள்ளி எறும்பாக. இருவருமே அவள் மனத்தில் இனித்தனர். ஒருவனை தேர்ந்தெடுத்தால் மற்றவன் மனம் உடைந்திடுமே! அவளால் அந்த எண்ண்த்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இருவருக்கும் சா¢யாக பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தாள். அதனால், வேலன், முருகன் இருவருக்குமே கொஞ்சம் மனத்தாங்கல்தான். இருந்தாலும் அன்ன செய்வது, அவளால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. தவித்துக் கொண்டே இருந்தாள்.

அந்தக் கந்தனுக்கே திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்து விட வேண்டியதுதான் என்ற தீர்மானத்துக்கு வந்து விட்டாள். அதற்குள்ளே இந்திய எல்லைப் பிரச்சனை வெடித்து விடவே, வீராவேசத்துடன் கிளம்பினர் வேலன், முருகன் இருவருமே, தாய் நாட்டுக்காகப் போராட. நெஞ்சத்தில் திகிலடைந்தாலும், அடக்கிக் கொண்டு பெருமையுடன் வாழ்த்தி அனுப்பினாள் பொன்னி.

“பொன்னி!”, அவளுடைய தாயின் குரல், அவளை நிகழ் காலத்துக்கு மீண்டும் இழுத்தது. “இவளே, சீட்டு வந்திருக்குடீ உனக்கு, பட்டாள முத்திரை இருக்கு சீக்கிரம் வந்து என்னான்னு பாரு!”.

கால்கள் நிலத்தில் பாவாமலே பறந்தாள் பொன்னி. வீட்டுக்குப் போய், காகிதத்தைக் கையில் எடுக்கும் போது, அவளுடைய இதயம் கோடை கால மழையின் கடும் இடியைப்

போல அடித்துக் கொண்டது. “என்னவாக இருக்குமோ? அசம்பாவிதமாக ஒன்றும் இருக்காது. இருந்தால் தந்தியாக வந்திருக்குமே?!” கடிதத்தை அவசரமாகப் பிரித்தாள். அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததால் அந்த எளிதான காரியமும் தாறுமாறாகத்தான் முடிந்தது. ஒரு வழியாகப் பிரித்து படித்ததும் நெஞ்சம் துள்ளியது, அதில் இருந்த செய்தியைப் பார்த்து. வேலன் ஊர் திரும்புகிறான். போர்க் களத்தில் காயமுற்றதால் பட்டாளத்தை விட்டு அனுப்புகிறார்கள். ஆனால் கவலைப் படும் படி ஒன்றும் இல்லை. மற்றவை நோ¢ல். அவன் வர வேண்டிய தேதியைப் பார்த்தாள். “அட! இன்னிக்குத்தான்! போஸ்ட் ஆபீசு ஆமை வேகமாத்தான் கடுதாசு கொணாந்திருக்கு!”

என்று திட்டிக் கொண்டு ஓடினாள் பேருந்து நிலையத்துக்கு.

சென்னையிலிருந்து வந்த பஸ் சில நிமிடங்களிலேயே வந்து விட்டது. உடலில் கட்டுக்களுடன் ஒரு மிலிடாரி ஹோல்டால் எடுத்துக் கொண்டு இறங்கினான் வேலன். ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டு விட வேண்டும் என்ற எண்ணத்தை கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டாள். என்ன இருந்தாலும் ஊர் வாய் விட்டு வைக்குமா?! வேலன் அவளைப் பார்த்து ஓடோடி வந்தான். “பொன்னி! எப்படி இருக்கே?!”

அவள் அருகில் வந்தவன் முகத்தில், எத்தனை மகிழ்ச்சி?! ஆனாலும் ஏன் ஒரு துக்கத்தின் இழையும் ஓடுகிறது? அவள் அவனைக் கேட்டாள். அவன் சொன்ன செய்தி அவளை ஒரு இடி போல் தாக்கியது. கண்கள் இருண்டு தடுமாறி விழுந்தாள். தாங்கிக் கொண்டான் வேலன்.

எதிரியின் இருப்பைத் தாக்கி பல வீர சாகசங்கள் செய்த முருகன், அந்தக் களத்துக்கே இரையாகி விட்டான். வேறு சொந்தம் அவனுக்கு இல்லாததால், செய்தி ஊருக்கு இன்னும் வந்திருக்கவில்லை.

ஆம், பொன்னியின் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு வந்து விட்டது. ஆனால், இப்படித்தான் தீர வேண்டும் என்றால், பொன்னி வாழ்நாள் எல்லாம் அந்தப் பிரச்சனை தீராமலே வாழ்ந்திருப்பாளே.

நாட்கள் கடந்தன, மாதங்கள் ஓடின, வருடங்களும் விரைந்தன. வேலனும் பொன்னியும் கோவிலில் ஜோடியாக அர்ச்சனை செய்வித்தனர். பொன்னி குனிந்தாள். “முருகா, அங்க இங்க பராக்கு பார்க்காம, ஒழுங்கா சாமி கும்பிட்டுக்க” என்றாள். “சா¢, அம்மா” என்றான் பக்கத்தில் நின்ற அவள் இரண்டு வயது பொடிப் பயல்! இப்போது பொன்னியின் பொ¢ய பிரச்சனை, அவன் செய்யும் விஷமங்களைப் பொறுத்துக் கொண்டு, அவன் மழலையைப் புரிந்து ரசிப்பதுதான்!

– ஜனவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *