நூலகச் சிறுவர்கள்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 8,287 
 

அன்று சனிக்கிழமை. நூலகம் திறந்திருந்தது. நூலகத்தில் பெரியவர்களும் வாலிபர்களும் தினசரி நாளிதழ்களையும் வார இதழ்களையும் வேலைவாய்ப்பு நாளிதழ்களையும் படித்துக் கொண்டிருந்தனர்.

நூலகச் சிறுவர்கள்நூலகத்தின் அருகில் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. பள்ளிக்கூடத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இருந்தது. மாலை மணி 4.30 இருக்கும்.

பள்ளிக்கூடம் முடிந்ததும் ஆறு சிறுவர்கள் நூலகத்திற்கு வந்தனர். ஆறு சிறுவர்களும் நூலகத்திற்குள் வந்ததும் முதலில் குடத்தில் இருந்த தண்ணீரை ஒவ்வொருவராக டம்ளரின் உதவியோடு அருந்தினர். சிறுவர்கள் தண்ணீர் குடிப்பதைப் பார்த்த பெரியவர் ஒருவர், “”டேய், டம்ளரில் வாய் வைத்துக் குடிக்காதீர்கள். அன்னாந்து குடியுங்கள்” என்றார்.

சிறுவர்கள் பெரியவரை ஒருமுறை பார்த்துவிட்டு மறுபடியும் டம்ளரில் வாய் வைத்தே குடித்தனர்.

ஆறு சிறுவர்களும் பதிவேட்டில் தங்களின் பெயர்களைக் கிறுக்கினர். இவ்வாறு தினமும் கிறுக்கச் சொல்வது நூலகரின் உத்தரவு.

சிறுவர்கள் எவ்வளவு வம்பு பண்ணினாலும் நூலகர் அதைக் கண்டுகொள்ள மாட்டார். என்னதான் சேட்டைகள் பண்ணினாலும் அவருக்கு உதவுபவர்கள் சிறுவர்கள்தான். பள்ளி விடுமுறை நாட்களில் நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் அலமாரியில் ஒழுங்காக அடுக்கி வைப்பதும் சிறுவர்கள்தான். அவ்வாறு அடுக்கி வைக்கும்போது வேண்டும் என்றே புத்தகங்களை அலமாரியிலிருந்து தள்ளி விடுபவர்களும் அவர்கள்தான்.

சில வாசகர்கள் கேட்கும் புத்தகங்கள் நூலகத்தின் அலமாரியின் மேல் இருக்கும். அதனை ஸ்டூல் போட்டு மேல் ஏறி எடுத்துக் கொடுப்பவர்களும் சிறுவர்கள்தான்.

என்னதான் சிறுவர்கள் மூலம் நூலகத்துக்கு பல உபத்திரவங்கள் ஏற்பட்டாலும், சிறு சிறு வேலைகள் நடப்பது அவர்கள் மூலம்தான்.

என்னதான் சேட்டை செய்தாலும் சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமான கதைப் புத்தகங்களைப் படிப்பதில் ஒரு கண் வைத்திருப்பார்கள்.

ஒரு சில சமயங்களில் இரண்டு சிறுவர்கள் ஒரே புத்தகத்தைத் தங்களுக்குப் படிக்க வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.

இப்படித்தான் ஒருநாள் முருகனும் சோமுவும் விக்கிரமாதித்தன் கதைப் புத்தகம் வேண்டும் என்று நூலகரிடம் கேட்டனர்.

நூலகர், “”அடே, ஒரே ஒரு புத்தகம்தான் இருக்கு! ஒருவர் படித்து முடித்த பின்னால் இன்னொருவன் படிக்கலாம்” என்றார்.

ஆனால், இருவரும் சண்டை போட்டு, புத்தகத்தை உனக்கு எனக்கு என்று பிடித்திழுக்க, கடைசியில் 100 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் 50 பக்கங்கள் முருகனின் கையிலும் மீதி 50 பக்கங்கள் சோமுவின் கையிலும் இருந்தது.

பிறகு, நூலகர் அவரிடம் இருக்கும் பசையை எடுத்துக் கொடுத்து, இருவரையும் புத்தகத்தை ஒட்டச் செய்தார்.

ஒட்டி முடித்தவுடன் புத்தகத்தைக் கொடுக்காமல் அவரே வைத்துக் கொண்டார்.

சிறுவர்கள் ஏமாந்து போனார்கள். பிறகு, அவரே இருவரில் ஒருவரைக் கூப்பிட்டு அவனிடம் புத்தகத்தை அன்புடன் கொடுத்தார்.

சில நேரங்களில் நூலகத்திலிருக்கும் பேனா, பென்சில் ஆகியவை கூட திருடு போகும். அதுவும் அந்தச் சிறுவர்களின் கைவண்ணம்தான்.

ஆனாலும் அவர்களை அந்த நூலகர் கோபித்துக் கொல்ள மாட்டார்.

எவ்வளவு பேர் வந்து படித்தாலும், ஒவ்வொரு நாளும் மாலையில் அந்தச் சிறுவர்கள் நூலகத்துக்கு வராவிட்டால் நூலகருக்கு எதையோ பறி கொடுத்தது போல இருக்கும்.

சோர்வாக அமர்ந்திருப்பார்.

– ஆர்.ஜேம்ஸ் ராஜா, திருநெல்வேலி (ஆகஸ்ட் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *