கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 6,586 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவனுள் தவிப்பே மேலோங்கி நின்றது. திரு மணமானதின்பின் வந்த இந்த இரண்டு மாதங்களும் ஏதோ நிறைவின்றிக் கழிந்ததுபோல அவனுக்குப்பட்டது . வார்த்தைகளில் சொல்லமுடியாத, நெஞ்சினுள் கெம்பிக்கெம்பி மேலெழும்புகின்ற, முள்ளாய் உறுத்துகின்ற, மெல்லிய சோகமாய் உள்ளெல்லாம் இழையூடுகின்ற, அவனுக்கும் அவளுக்குமிடையில் உணர்ச்சிகளின் பூரணமான, உன்னதமான ஒன்றிப்பைத் தடை செய்கின்ற அந்த அது’ எதுவாக இருக்குமென அவன் சிந்தித்தான்.

அவனுக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது.

அவன் ஐந்து வருடங்களாக அவளைக் காதலித்தே கைப்பிடித்தான். ‘வாழ்ந்தால் அவளுடன் தான் வாழ்வேன் என்பதில் அவன் தளராத உறுதி கொண்டிருந்தான். அவளுடன் வாழும் அந்த வாழ்க்கைக்காக அவன் எத்தனையோ இன்னல்களைத் தாங்கி இருந்தான். எத்தனையோ ‘அன்புக்குரியவர்களின்’ மனத்தை வருத்தி இருந்தான். எத்தனையோ உறவுப் பிணைப்புகளை மிகுந்த சோகத்துடன் – கவலையுடன் – கண்ணீருடன் அறுத்திருந்தான்.

அந்த இலட்சியப் பயணத்தின் வெற்றிக்காக அவளும் அவனுடன் ஒத்துழைத்தாள். அவளும் எத்தனையோ சோகங்களால் உலுக்கப்பட்டிருந்தாள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் கண்கலங்கி இருந்தாள். எத்தனையோ போதுகளில் மனத்துள் வெதும்பி வெதும்பி அழுதிருந்தாள். எத்தனையோ நாட்கள் பட்டினியாய் – துயிலில்லாமல் கிடந்து உழன்றிருந்தாள்.

அதை எல்லாம் அவன் அறிவான். அதை எல்லாம் அவளும் அறிவாள்.

அப்போதெல்லாம் அவர்கள் தாங்கள் ஒருவர்மேல் ஒருவர் கொண்ட காதலில் எவ்வளவு பற்றுறுதியுடன் இருந்தார்கள். அவள் சிரித்தால் அவன் சிரித்தான். அவன் அழுதால் அவள் அழுதாள். அவள் சிரிக்க வேண்டுமென் பதற்காக அவனும், அவன் சிரிக்க வேண்டுமென்பதற்காக அவளும் சிரித்தார்கள்.

வசந்த காலத்தின் உலகின் குதூகலத்தை அவர்கள் அனுபவித்தார்கள். சுற்றிச் சுழலும் சுழல் காற்றில், கருமிருட்டில், கொடூர இடியின் ஓசையைக் கேட்டு அவர்கள் பயந்தார்கள். அமைதியான நீரோட்டத்தில் உல்லாசமாகப் படகில் பாடிக் கொண்டே மிதந்தது போன்ற மகிழ்ச்சியில் திழைத்திருந்தார்கள். காலம் அப்போதெல்லாம் எவ்வளவு விரைவாகச் சென்றது. கணங்களாக அசைந்து ஊர்ந்து சென்றது; அசையாது நின்று அவர்களைப் பார்த்து இரசித்தது.

அவன் வாசல் நிலையில் சாய்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். முற்றத்துக் கிணற்றடியின் தென்னைமர உச்சிகள் இருண்டிருந்தன. மெல்லிய காற்றில் அவை சலசலக்கும் ஓசை விட்டுவிட்டுக் கேட்டது. கண் சிமிட்டும் தாரகைகள் ……. தங்கக் கடுக்கன்களைக் கையில் அள்ளி வாரி இறைத்தது போல வானமெங்கும் பரந்து கிடந்தன.

அவன் அவள் எங்கே இருக்கிறாளென்று பார்ப்பதற்காக வீட்டினுள் திரும்பிப்பார்த்தான். கண்ணாடி விளக்கின் மஞ்சளொளி மங்கி இருந்தது. ஜன்னல் திரைச்சீலை காற்றில் ஆடஆட , அந்த ஒளிக்கதிர்கள் வெளியே பரவிப் பரவிக் கோலம் போட்டன. வீட்டினுள் ஆழ்ந்த அமைதி கவிந்து கிடந்தது. கிழவி பாக்கு இடிக்கும் சத்தம் மட்டும். அவ்வின் ஒதுக்குப்புற மூலையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. அவள் அறையிலிருந்து ஏதாவது புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பாள்.

அவள் கொட்டாவி விட்டாள்.

அப்போதெல்லாம் இப்படி ஒரு தனிமைக்காக அவர்கள் எப்படியெல்லாம் ஏங்கித்தவிப்பார்கள். அப்படிக்கிடைக்கும் அருமையான தனிமைப்போதுகள்….. எவ்வளவு இன்பங்கள் ………இன்பங்களேதான்; தனிமையின் துயரங்கள், சுமைகள், சோகங்கள், சஞ்சலங்களையெல்லாம் அவளும் – அவனும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் போது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்போது, கண்ணீர்த்துளிகள் உருண்டு வடிகையில் அவற்றை ஆதரவாகத் துடைத்து விடும் விரல்களின் ஸ்பரிசத்தின் போது, மெல்லிய புன்னகையின்போது, இணைந்தொலிக்கும் வெண்கலச் சிரிப்பில் தன்னை மறந்த இலயத்தின் போது, இதமான அணைப்பின் போது, மார்பிலோ தோளிலோ முகம் புதைத்து விம்மும் போது, ஊடல் கொண்டு பிணங்கிப் பின் உறவாடும் போது …….. இன்பங்கள் ……..இன்பங்களேதான். தாம்பத்தியத்தின் …….. ஏன் வாழ்க்கையின் தாற்பரியமே அதுதானோ?

கூடத்தில் சுவர்க்கடிகாரம் ‘டிக் டிக்கென’ ஒரே சீராக ஒலித்துக் கொண்டிருந்தது. பல்லியொன்று தன் பாஷையில் ஏதோ சொல்லிற்று. அடுத்த வீட்டிலிருந்து முதுமையின் கனமேறிய இனிய ஆண்குரலொன்று காற்றில் மிதந்து வந்தது.

“பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தால்மற வாதே நினைக்கின்றேன் ……..”

அவனுக்கு நினைவு வந்தது. மெல்ல ஆடி அசைந்து ஊர்ந்தது தேர். பஜனைக் கோஷ்டியினர் ஆடிப் பாடினர். கரகாட்டம் நடந்தது. நாதஸ்வரம் மேளத்துடன் காவடியாட்டம் நிகழ்ந்தது இடைக்கிடை ஊதுவத்தியின் மனம் காற்றில் கலந்து மனத்தை அள்ளிச் சென்றது. சர்க்கரைத் தண்ணீர் பந்தலில் சிறுவர் கூட்டம் கும்மாளமிட்டது. பட்டுவேட்டி சால்வை, பட்டுச் சேலை, வண்ணச் சட்டைக் கூட்டம் அசைந்தது. ஒலிபெருக்கியில் சின்னத்தனத்துக் கோர், சிங்காரப்பேச்சுக்கோர், சிரித்த முகத்துக்கோராம்… பாட்டுப் பாடியது. அப்போதுதான் அவன் அவளைக் கண்டான்.

வியப்பால் அவன் கண்கள் விரிந்தன. காலச்சுழற்சி அவளை இவ்வளவு மெருகுபடுத்தி உள்ளதா?

என்னமாதிரி வளர்ந்துவிட்டாள் அவள்! ஒல்லியாய். உயரமாய், சிவப்பாய், கவர்ச்சியாய்… அலையலையாக, கறுத் திருண்ட நீளமான தலைமயிர் கற்றையாய் …

அவளும் அவனைக் கண்டு கொண்டாள். கருமணிகள் வெட்டிச் சுழன்றன.

மெல்லிய ஒரு புன்னகையுடன் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்புதான் அவன் அவளை இறுதியாகக் கண்டிருந்தான், அப்போதும் ஏதோ திருவிழாவிலோ – கலியாண வீட்டிலோதான் அவளைக் கண்டதாக அவனுக்கு மங்கலாக ஞாபகம் வந்தது. பட்டுப்பாவாடையுடன் சிறுமியாய் அவள் துள்ளித் திரிந்தது ஞாபகம் வந்தது.

“அப்பனே முருகா” என்று கிழவி முனங்குவது கேட்டது. முற்றத்துக் கிணற்றில் அடுத்த வீட்டார் யாரோ தண்ணீர் அள்ளும் சலசலப்புக் கேட்டது. தாழ்வாரத்தில் கொட்டிலில் கட்டியிருந்த மாடுகன்றுகளின் சந்தடியும் கேட்டது.

ஒவ்வொரு நாளும் ஒரு குறித்த நேரத்தில் அவன் சைக்கிளில் பவனி வரத் தொடங்கினான். கிடுகு வேலித் துவாரத்தினூடாக முதலில் இரண்டு கண்கள் பார்த்துப் பரவசமாயின. நாளசைவில் கண்கள் சிரித்தன. கிடுகு வேலித் துவாரம் பெரிதாக அவள் முகமே செந்தாமரையாய் மலர்ந்து சிரித்தது.

“எப்பிடிச் சுகம்” என்று அவன் ஒருநாள் கேட்டான்.

அவள் பதிலுக்கு இதழால் சிரித்துக் கொண்டாள்.

“எப்படிச் சுகம்” என்று அவன் அடுத்த நாளும் கேட்டான்.

“நல்லாய்த்தான் இருக்கிறேன்” என்றாள் அவள்.

அன்றோடு அந்த இனிய போராட்ட வாழ்க்கை அவர்களுக்கு ஆரம்பமாயிற்று. இனிய போராட்டங்கள் தான் வாழ்க்கையே இனிய போராட்டங்கள் தானா?

வாசல் நிலையில் சாய்ந்து நின்றவன் வாசல் படியில் இருந்து கொண்டான்.

அந்த இனிய வாழ்க்கை எப்படி போராட்ட வாழ்க்கையானதென அவன் சிந்தித்தான். உயர்ந்த சாதி – தாழ்ந்த சாதி என்ற சாதி வேறுபாடுகளைப் பற்றியும் காரணமின்றியே வரட்டுப் பிடிவாதத்திற்காக அவற்றை விடாது பற்றிப் பிடித்திருக்கும் மனிதர்களைப் பற்றியும் அவன் எண்ணிப் பார்த்தான். அதிர்ஷ்டவசமாக அவனும் – அவளும் ஒரே உயர்ந்த சாதியினராக இருந்தாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளினால், அந்தஸ்து வேறுபாடுகளினால் அவர்கள் சுற்றம் – அந்தஸ்தில் உயர்ந்தவன் என்று கருதப் படும் அவனின் சுற்றம் அவர்களின் இணைவுக்கு எதிராகப் படை திரண்டபோது. அவன் தான் கொண்ட கொள்கையில் பற்றுறுதியாகத்தான் இருந்தான். சகோதர பாசத்தையும், பெற்றவரின் பாசங்களையும், உற்றாரின் பாசவலைகளையும் மீறி அவன் அவளைக் கரம் பிடித்ததில் உண்மையில் பெருமை கொண்டிருந்தான். உற்றார் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்த போது – ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ இடர்கள் தலை தூக்கிய போது — எவ்வளவு உறுதியுடன். எவ்வளவு திடசித் தத்துடன், எவ்வளவு சாதுரியத்துடன் அவற்றை எல்லாம் கடந்து தான் அவளைக் கரம் பிடித்தேன் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவன் தன்னைத்தானே வியந்து கொண்டான்.

என்றாலும் ……. என்றாலும்……

அந்த இணைவில் ஏதோவோர் குறை இருப்பதுபோல அவனுக்குப்பட்டது. அவர்களது முதலிரவில் – மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில், அவன் அவளை அணைத்துத் தழுவிய போது – உயிரற்ற பாவையாய் , அவன் கைகளை அவள் மெல்ல விலக்கி – கண்களில் கண்ணீர் மணிகள் பளிச்சிட அவன் முகத்தை அவள் நிமிர்ந்து பார்த்தபோது – அவளது மனத்தின் ஆழத்தில் ஏதோவோர் தவிப்பை ஊட்டும் சோகம் படிந்திருப்பதை அவன் உணர்ந்து சொண்டான்.

அவன் அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு அவளை ஆசுவாசப்படுத்தினான். அவள் கண்ணீரைத் துடைத்தாள்.

“பிரமிளா ஏன் நீ அழுகிறாய்?”

“வாழ்க்கையின் இனிய இந்த நேரத்தில் ஏன் நீ அழ வேண்டும்? இந்த இனிய நாளைப் பற்றியெல்லாம் நாம் எத்தனை கற்பனைகள் செய்திருந்தோம்? அன்றொரு நாள் – அந்தக் கருமிருட்டில் – தனிமையில் நான் எது வெதுவோ செய்ய முற்பட்டபோது நீ சொன்னாய்; “எல்லாவற்றுக்கும் ஒரு காலம் வரும். அந்தக் காலம் வரும் வரையும் பொறுத் திருங்களேன். எல்லாவற்றிலும் உங்களுக்கேன் இந்த அவசரம்?”

அந்த நேரத் தவிப்பில் நான் சொன்னேன். “நாங்கள் ஒன்றாக வாழ்வது நிச்சயம் தானேடி . நீ ஏன் பயப்படுகிறாய்.”

நீ ஒன்றுமே சொல்லாது மௌனமானாய்.

நான் ஒன்றுமே செய்யாது அமைதியானேன்.

“பிரமிளா ஏன் நீ அழுகிறாய்?”

நான் அவளைக் காதலித்துத்தான் கரம் பிடித்தேன். காதலின் அந்த மனோகரங்களெல்லாம் எனக்குத் தெரியும். அதனால், உலகின் – இயற்கையின் நியதிகளுக்கு நான் மாறுபட்டவனல்ல. நான் ஆண்; அவள் பெண்; எனக்கும் சிருஷ்டியின் இரகசியங்களை அறியும் ஆசைகள். கிளர்ந்துதான் இருந்தன. ஆனால், சிருஷ்டியின் நுட்பங்களை அறியும் உந்துதல் தான் ஒன்றாக வாழ்வதின் – தாம்பத்தியத்தின் முற்றுமுழுதான நோக்கமல்ல என்பதும் எனக்கு தெரியும்

“பிரமிளா ஏன் நீ அழுகிறாய்.”

அவள் வெறுமே சிரித்தாள். “அந்தஸ்தில் குறைந்தவர்கள் அந்தஸ்தில் கூடியவர்களோடு இணைவதினால் சமமானவர்களாகிவிட முடியாதுதானே”.

அவனுக்குப் புரிந்தது. அவன் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலேயே தவித்துக்கொண்டிருந்தான். வாழ்க்கையின் பந்தம் பாசம் என்ற உணர்வுகள், உறவுகள் … அவனோடு உறவு கொண்டாடுபவர்கள் அவன் மனைவியான அவளை மதிக்கவில்லைத்தான். அதற்காக…… அவனும் அவளும் ஒரு வரை ஒருவர் புரிந்த ஒருவரை ஒருவர் நேசித்த ஒருவரில் ஒருவர் ஆறுதல் காண்கின்ற, ஒருவருக்காகவே ஒருவர் வாழ்கின்ற தம்பதிகள் ஆனபோது – அவன் அவளுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டுமா? இந்த உலகத்தில் தனித்து விடப்பட்டவர்கள் இணைந்து, தனிமைத் துயரங்களை மறந்து, ஒருவரில் ஒருவர் ஆறுதல் காண்பது தானோ தாம்பத்தியம்?

சுவர் மணிக்கூடு ஒன்பது தடவை அடித்து ஓய்ந்தது.

“சாப்பிட வாருங்கோவேன்.”

வாசல் படியில் இருந்தவாறே நிமிர்ந்து பார்த்தான் அவன். அவள் எவ்வளவு அழகாக ஜொலித்துக் கொண்டிருக்கிறாள். எவ்வளவு எடுப்பாகப் புன்னகை பூக்கிறாள். எவ்வளவு நிஷ்களங்கமானவள் அவள். அவனுக்காகவே தன்னை அர்ப்பணித்து – அவனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிற – அவனுடையவள் அவள்.

அவனுக்கு எதுவெதுவோ எண்ணங்கள் மனதில் மிதந்தன.

“என்ன அப்பிடிப் பாக்கிறியள். சாப்பிட வாருங்கோவேன்.”

அவன் எழுந்து அவள் கரத்தைப் பற்றினான். அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான். “பிரமிளா உன்னைப் புரிந்து கொண்டேன் ; உனக்காகவே வாழ்வேன்.”

அவன் கைகளை இறுகப் பற்றியவாறே, அவன் தோளில் முகம் புதைத்து அப்போதும் அழுதாள் அவள்.

– 1971 – கோடுகளும் கோலங்களும் – அலை வெளியீடு – மார்கழி 1976
– சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *