கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 2,842 
 
 

அலறிக்கொண்டு ஒருத்தி ஓடும் சத்தம் கேட்டு எழுந்த வைதேகி, சுரேஷிடம், “என்னங்க என்னங்க எந்திரிங்க, எதோ சத்தம் கேக்குது வெளியில”, என்றபடி உலுக்கு உலுக்கென உலுக்கினாள்.

ம்கூம்.. சுரேஷ் துளியும் முழித்தபாடில்லை.

“இந்த மனுஷன் தூங்கினா தூங்கினது தான்.”, என பொலம்பிய போது மீண்டும் அதே சத்தம்..

“ஆ ஆ ஆ ஆ”

பயம் நெஞ்சை அடைக்க, திக் திக் என்று சத்தமாக இதயம் துடிக்க, கதவை நோக்கி மெள்ள அடியெடுத்து வைத்தாள் வைதேகி.

“வைதேகி.. வைதேகி.. எங்க போற வைதேகி?”, என ஒரு வித்தியாசமான குரல் அவளின் பின்பக்கமிருந்து கேட்க அப்படியே மூர்ச்சையாகி விழுந்தாள்.


அடுத்த நாள் காலை வைதேகி முழித்துப் பார்த்த போது அவளது அம்மாவும் அப்பாவும் வந்திருந்தனர்.

“வைதேகி.. என்னடி ஆச்சு..? நைட்டே மாப்பிள்ளை போன் பண்ணிட்டார்.. நீ பயந்து மயங்கிட்டேனு..”

“ஓகோ.. அதான் விடியற்காலைலேயே மருமகன் வீட்டுக்கு ரெண்டு பேரும் வந்துட்டீங்களோ?”

“ஆமான்டி.. முன்னாடியே மாப்பிள்ளை சொன்னார்.. இது கொஞ்சம் ஒதுக்குப்புறமான வீடு.. உடனடியா தனிக்குடித்தனம் போக வேண்டாம். ரெண்டு மூனு மாசம் கழிச்சு, இன்னும் நல்ல வீடா பார்த்து பொறுமையா போயிக்கலாம்னு.. நீ கேட்டாத்தானே? எதுக்கு மாப்பிள்ளைய அவங்க அம்மா அப்பாட்ட இருந்து பிரிச்சிட்டு வந்த?”

“அம்மா.. உனக்குப் புரியாது.. ரெண்டு நாள் கூட அந்த பெருசுங்க கிட்ட என்னால குப்ப கொட்ட முடியல தெரியுமா..? ரெண்டு பேரும் சுத்த வேஸ்ட்.. எப்பப் பார்த்தாலும் தொண தொண தொணனுட்டு.. கூடவே இருக்கவே இருக்காளே இவரு தங்கச்சி.. என்ன பேரு..? ஆங்.. மோகினி.. பேரப் போலவே பேயி அவ.. பிசாசு மாதிரி எப்பவுமே அவங்க அண்ணன சுத்தி சுத்தி வந்துக்கிட்டு.. வச்சேன் பாரு ஆப்பு.. அழுது புரண்டு அஞ்சே நாள்ல இங்க வந்தேனா?”

“அடியே.. சரி பயந்து கெடக்காளே.. தைரியம் சொல்லலாம்னு வந்தா.. ஓவரா அலப்பறை பண்றியே..! இது ஆகாதுடி.. குடும்பம்னா சில நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும்.. மாமனார் மாமியார பெருசுங்கற, நாத்தனார பேயிங்கற.. எங்களுக்கும் அப்படி எதாவது பேரு வச்சிருக்கியாடி?”

“சே சே, நீ என் செல்ல அம்மா.. அப்பாவும் ரொம்ப ஸ்வீட்டு”

“அப்படித்தானேடி மாப்பிள்ளைக்கு அவரோட குடும்பமும்”

“அம்மா.. நீ எனக்கு ஆறுதல் சொல்ல வந்தியா .. இல்ல அவங்க குடும்பத்துப் பாட்டப் பாட வந்தியா?”

“என்னடி.. அவங்க குடும்பம் அது இதுனு பிரிச்செல்லாம் பேசற?”

“சரி.. விடுமா.. ஏதோ தெரியாம பேசிட்டேன். காலைல என்ன எனக்கு சமைச்சு தரப்போற? அதச் சொல்லு..”, எனப்பேசி சகஜமாக முயன்றாள் வைதேகி.


அதே நேரம் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் ஒரு கோவிலின் பின்புறம் நின்று கொண்டிருந்தான் சுரேஷ். கூடவே அவனது கல்லூரி நண்பர்கள் மோகன், ராகவ் மற்றும் ராதா..

“ராதா.. கலக்கீட்ட.. என்ன ஒரு அலறல்.. தத்ரூபமா.. அப்படியே பேய் மாதிரி.. எதாவது பேய்கிட்ட டிரெயினிங் எடுத்திருக்கியா என்ன?”

“டே… நம்ம நண்பன் சுரேஷ் ஒரு உதவினு கேட்டான். அதுல முழுசா இறங்கனுமா இல்லையா.. அதான் கொஞ்சம் இன்வால்வ்மென்ட் எடுத்துப் பண்ணேன்.. அதுக்கு நல்ல ரிசல்ட் வந்திருக்கு..”

“எங்க ராதா ரிசல்ட் வந்திருக்கு.. இன்னும் என் பொண்டாட்டி பயந்த மாதிரியே தெரியலையே..!”

“ஹஹா “வைதேகி வைதேகி எங்க போற வைதேகி”…ங்கறது நம்ம ஸ்கிரிப்லயே இல்லையே.. அது எப்படி செம டைமிங்கா வந்துச்சு ராகவ்?”

“நான் ஜன்னலுக்கு வெளியே தானே நின்னுட்டு இருந்தேன். ராதா அலறிட்டு ஓட.. நீ நல்லா தூங்கற மாதிரி நடிச்சுட்டு இருந்த.. உன் வொய்ப் கதவத் தொறக்கப் போனாங்க.. அப்ப தோணின “ஆன் தி ஸ்பாட் டயலாக்” தான் அது”

“செம ராகவ்.. சரி இப்ப கெளம்பலாம்.. வாட்ஸ் அப்ல டைமிங்க அப்டேட் பண்றேன்.. இன்னைக்கும் ஸ்கிரிப்ட் படி கலக்கிடுங்க.. நாளைக்கே நான் வீட்ட காலி பண்ணனும் ஆமா..”

“ஸ்யூர்..”, என்ற படி பிரிந்து சென்றது நண்பர்குழாம்.


வைதேகியின் அம்மாவும், அப்பாவும் தங்குவதாக எவ்வளவோ சொல்லியும், ‘நான் பார்த்துக்கிறேன். நீங்க கெளம்புங்க..’, எனக்கூறி அனுப்பிவைத்தாள் வைதேகி.

இன்று ஆபிஸ்க்கு விடுமுறை சொல்லியிருந்தான் சுரேஷ்.

இரவும் வந்தது.

நண்பர்களுக்கு எல்லா டைமிங்கும் அப்டேட் செய்துவிட்டு படுக்கப்போனான்.

கிச்சனில் இருந்தாள் வைதேகி.

கண்ணை மூடி படுத்திருந்தவனை யாரை எழுப்புவது போல இருந்தது.

கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்து பார்த்தான். சுற்றிலும் யாருமே இல்லை.

அப்போது மேலே சுற்றிக் கொண்டிருந்த ஃபேன்.. சட்டென நின்றது. மெல்ல மெல்ல அவனை நோக்கி கீழே இறங்கி வந்தது.

ஃபேனின் இறக்கைகள் ஒவ்வொன்றிலும் இருந்து செந்நிறமாய் மூன்று கைகள் முளைத்தன.

ஃபேன் பேசத் தொடங்கியது.

“சுரேஷ்.. என்ன டிராமா பண்றியா? எங்க வீட்டுக்கு குடி வந்துட்டு, எங்களை மாதிரியே நடிக்க ப்ரண்ட்ஸ செட் பண்றியா.. படவா.. பிச்சுப்புடுவேன் பிச்சு..”, என்று சொல்லி ஒரு அறை விட்டது.

“ஆவென” அலறியபடி பேயறைந்து விழிகள் திறந்து படுத்துக்கிடந்தவனைப் பார்த்து, கிச்சனிலிருந்து ஓடிவந்த வைதேகி பயந்துபோய் நின்றுகொண்டிருந்தாள்.

வெளியே இப்போது “ஆ”வென கத்தியபடி ஓடிய ராதாவின் சத்தம், வைதேகியின் காதுகளை சுத்தமாய் எட்ட‌வில்லை. வீட்டில் நடந்ததை ஜன்னலில் பார்த்துக் கொண்டு நின்ற ராகவும், மோகனும் இப்போது மயங்கிக்கிடந்தனர்.

– தினமலர் வாரமலர், திருச்சி பதிப்பு, ஏப்ரல் 2024

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *