தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,271 
 
 

ஆப்ரிக்கக் கண்டத்தில் “காமெரா’ என்ற ஒரு நாடு. அந்த நாட்டை ஆட்சி புரிந்து வந்த மன்னன் மிகவும் ஆணவம் பிடித்தவன். குடிமக்களை வாட்டி வதைத்து வந்தான். அவன் பெயரைக் கேட்டாலே அழுத பிள்ளையும் வாய் மூடும்.

ஒருநாள் வழக்கம் போல அரசவை கூடியது. அமைச்சர்கள் அச்சத்துடன் அமர்ந்திருந்தனர். பொதுமக்களும் கூடியிருந்தனர். அகந்தை மிக்க அந்த அரசன் அனைவர் மீதும் பார்வையைச் செலுத்தினான். அந்த மன்னன் லேசாகக் கனைத்தான். அனைவரும் பயந்து நடுங்கினர்.

மன்னன் பேச ஆரம்பித்தான். அனைவரும் அமைதியாகக் கேட்டனர்.

“நான் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி சொல்லப் போகிறேன்’ என்றான் மன்னன்.

யாருக்கு என்ன ஆபத்து வரப்போகிறதோ என்று அனைவரும் அஞ்சினர். அரசன் தன் தலையை உயர்த்தினான். மார்பை நிமிர்த்திக் கொண்டான். “இன்று முதல் நான்தான் உலகின் தலைவன்! உலகில் வாழும் அனைவரும் என்னுடைய அடிமைகள்’ என்று அதிகாரம் பொங்கக் கூறினான்.

அரசன் சொல்வது தவறு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் மனதிற்குள் சிரித்துக் கொண்டு அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். எதிர்க் கருத்து சொல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை.

மன்னன் கூடியிருந்தோர் முகத்தைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் அச்சம் இருந்தது.

அப்போது அங்கே ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது!

பொதுமக்கள் மத்தியிலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

“நீங்கள் சொல்வது தவறு. எல்லா மனிதர்களும் ஒருவருக்கொருவர் பணி செய்யும் வேலைக்காரர்கள்தான்.’

இதைக் கேட்டதும் மன்னனுடைய முகம் கோபத்தால் சிவந்தது. மீசை துடித்தது. இடிபோன்ற குரலில் கேட்டான், “இப்படிச் சொன்னது யார்?’

அவையில் அமைதி நிலவியது. அவர்கள் மனதில் பேரச்சம் எழுந்தது. துணிந்து பேசியவனின் தலை தங்கள் கண்முன்னே சீவப்படுமே என்ற இரக்க உணர்வு அனைவருடைய நெஞ்சிலும் எழுந்தது.

மன்னனின் கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. மறுத்துப் பேசியவன் யார் என்று தெரியவில்லை. மன்னன் விருட்டென்று எழுந்தான்.

அவையோரைப் பார்த்து மீண்டும் உறுமினான்.

“என்னை வேலைக்காரன் என்று சொன்னவன் யார்?’

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு முதியவர் தடியை ஊன்றியபடி முன்னே வந்தார்.

நிதானமாக நடந்து வந்து மன்னன் முன்னால் நின்று வணங்கினார்.

“அப்படிச் சொன்னவன் நான்தான்!’ என்றார்.

கொடுங்கோலனாகிய மன்னனின் கரங்கள் வாளைத் தொட்டன. அந்த முதியவரின் தலை தரையில் விழப் போவதை எண்ணி அனைவரும் பயந்து கொண்டிருந்தனர்.

“இவர் ஏன் இப்படிச் சொன்னார்? தவறுதலாகக் கூறிவிட்டாலும் மன்னன் முன் ஏன் வந்தார்? நான்தான் சொன்னேன் என்று கூற என்ன துணிச்சல் இவருக்கு? இவருடைய உயிர் இப்போது போகப் போகிறதே?’ என்று அனைவரும் வேதனை அடைந்தனர்.

அரசன் ஒரு விநாடி யோசித்தான். வாளைத் தொட்ட கை பின் வாங்கியது. “யார் நீ?’ என்று உரத்த குரலில் கேட்டான்.

உடனே அந்த முதியவர், “அரசே, என் பெயர் பௌபக்கர். எங்கள் கிராமத்தில் குடிநீர் இல்லை. மன்னர் பெருமான் அங்கு கிணறு வெட்டித் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளவே வந்தேன்’ என்றார்.

மன்னன், “அப்படியா! நீ ஒரு பிச்சைக்காரன். அரசனான என்னை வேலைக்காரன் என்று கூறுவதற்கு உனக்கு எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும்!’

என்று கடுங்கோபத்துடன் கேட்டான்.

அந்த முதியவர் நிதானத்துடன், “மன்னா! நான் உண்மையைத்தான் கூறினேன்’ என்றார்.

மன்னன் முகத்தில் வியப்பு பளிச்சிட்டது.

“சரி, நிரூபித்துக் காட்டு. என்னை உன் வேலைக்காரனாக மாற்றிக் காட்டு. அப்படி நீ செய்து விட்டால் நீ வேண்டுவது அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். நீ சொன்னதைச் செய்யத் தவறினால் உன் தலை இப்போதே துண்டிக்கப்படும்’ என்றான் அரசன்.

“நல்லது அரசே! எங்கள் ஊரில் ஒரு பழக்கம் உண்டு. இப்படி யாராவது சவால் விட்டால் அவரது பாதங்களைத் தொடுவோம். அதன்படி தங்கள் பாதங்களை நான் தொட அனுமதி கொடுங்கள்’ என்றார் முதியவர்.

பின்னர், “அதுவரை என் கையிலுள்ள இந்தக் கோலை ஒரு நொடி பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று வேண்டினார்.

பிறகு அரசனிடம் கோலை நீட்டினார். அவனும் அதை வாங்கித் தன் கையில் வைத்துக் கொண்டான்.

முதியவர் அரசனின் காலைத் தொட்டார். பின்னர் கோலை அரசனிடமிருந்து வாங்கிக் கொண்டார். அரசனைப் பார்த்தார்.

“நான் சொன்ன உண்மையை நிரூபித்துவிட்டேன் அரசே!’ என்றார்.

“என்ன சொல்கிறாய் நீ?’ என்று வியப்புடன் மன்னன் கேட்டான்.

“அரசே, நான் உங்கள் பாதங்களைத் தொடுவதற்கு முன் என் கையிலிருந்த கோலை வைத்திருக்கும்படி தங்களிடம் கொடுத்தேன் அல்லவா? நீங்களும் அப்படியே செய்தீர்கள். அதாவது நான் சொன்ன வேலையைச் செய்யும் வேலைக்காரனாக ஆனீர்கள். ஆகவே நான் சொன்ன உண்மையை நிரூபித்துவிட்டேன்’ என்றார் அந்த முதியவர்.

முதியவர் கூறியதிலிருந்த உண்மையை உணர்ந்த அரசன் மிகவும் வியந்து போனான். நுண்ணறிவு மிக்க அவரின் வேண்டுகோளை ஏற்றான். அவர் கேட்டதைவிட அதிக உதவிகளைச் செய்தான்.

அதுமட்டுமன்றி, அந்த முதியவரைத் தன்னுடைய ஆலோசகராகவும் வைத்துக் கொண்டான்.

கொடுங்கோல் மன்னன் அன்று முதல் செங்கோல் மன்னனாக மாறினான்.

– தமிழில்: செவல்குளம் ஆச்சா (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *