சித்திரமலை ரகசியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 24, 2024
பார்வையிட்டோர்: 332 
 
 

1

கி.பி. 2063. அடர்ந்த காட்டினுள்விரிந்து சென்ற நீண்ட அந்த ஒத்தையடிப் பாதையின் முன்பு வந்து நின்றனர் பேராசிரியர் ராகவும், அவரது மகன் சஞ்சையும். சஞ்சையின் மகன் ‘கே’வும், மகள் ‘பிரக்ன்யா’வும் உடன் இருந்தார்கள்.

அவர்கள்இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து ராகவின் தலைமையில் உற்சாகமாக புறப்பட்டனர். அப்போது குழுவில் இருபது பேர் இருந்தனர். தங்களின் நெடுநாள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையோடு கிளம்பிய அந்த குழுவில் பலரும் பல காரணங்களால் வழியிலேயே பிரிந்துபோக இப்போது நால்வர் மட்டுமே மிஞ்சி இருந்தனர்.

சித்திர மலையின் அடிவாரத்தில் இருந்த அந்த காட்டை சுட்டிக் காண்பித்த ராகவ், “இதான் நாமா போகவேண்டிய பாதை” என்றார். எழுபத்தைந்து வயதிலும் அவரது உடல் திடகாத்திரமாக இருந்தது. சுவாசம் சீராகவும், பேச்சு தெளிவாகவும் இருந்தது.

அவரது மகன் சஞ்சை, நாற்பத்தைந்து வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். இரண்டுமாத பயணத்தில் மெலிந்து சோர்வாக காணப்பட்டாலும், ரகசியத்தை கண்டுகொள்ள வேண்டிய பொறுப்பு அவரை ஊக்கமாக செயல்பட வைத்தது. ஆனால் பதினைந்துவயதே நிரம்பியிருந்த கேவாலும் பத்து வயதே நிரம்பியிருந்த பிரக்ன்யாவாலும் மேற்கொண்டு நடக்க முடியவில்லை.

“இங்கதான் இங்கதான்னு இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்துட்டீங்க” கே பொறுமையிழந்து பேசினான். அவனது கோபமான குரல் கேட்டு, பிரக்ன்யாவின் கையில் உறங்கிக் கொண்டிருந்த அவளது நாய்க்குட்டி பப்பு, விழித்துப் பார்த்தது.

“ஒன்னும் இல்ல பப்பு. நீ தூங்கு” என்று பிரக்ன்யா பப்புவின் தலையை தடவிக் கொடுத்தாள். பப்பு மீண்டும் தூங்கிப் போனது.

“நான் எனக்காகவோ உனக்காகவோ வரல, நம்ம மக்களுக்காக, வருங்கால தலைமுறைக்காகவந்திருக்கேன்…” சொல்லிவிட்டு அவனை கூர்ந்து பார்த்தார் ராகவ். தாத்தாவின் கூர்மையான பார்வையை அவனால் சந்திக்கமுடியவில்லை.

“இதுக்கு மேல என்னால முடியாதுப்பா, தாகமா இருக்கு…’”கே தன் தந்தையிடம் சொன்னான்.

“போனவாரம்தானேதாகத்தை அடக்க மாத்திரை கொடுத்தேன். ஒரு மாசம் தாகம் எடுக்கக் கூடாது. நீ இவ்ளோ பலவீனமானவன்னுதெரிஞ்சிருந்தா கூட்டிட்டே வந்திருக்க மாட்டோம்…” சஞ்சை கோபமாக பேசினார். ராகவ் நிறுத்து என்பது போல் செய்கை செய்துவிட்டு, தன் இடுப்பில் சுற்றியிருந்த பையில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்து பாதியாக உடைத்து கேவிடம் கொடுத்தார்.

“இன்னும் மூணு வாரத்துக்கு தாகம்னு சொல்லக்கூடாது. நம்மகிட்ட போதுமான மாத்திரைகள்இல்ல. திரும்பி போற வரைக்கும் இருக்குற கொஞ்சம் மாத்திரைகள வச்சு தான் சமாளிக்கணும்”

கே தலை அசைத்தான். “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாமே. பப்பு டயர்டா இருக்கான்” பிரக்ன்யா சொன்னாள். இருட்டிக் கொண்டு வந்தது. மற்றவர்களுக்கும் அவள் சொல்வது சரி என்றேபட்டது. அங்கேயே இரவு தங்குவதற்காக ஒரு கூடாரத்தை உருவாக்கத் தொடங்கினர்.

2

பெரியதொரு மரத்திற்கு கீழே அமைக்கப்பட்ட அந்த சிறு கூடாரத்தில் நால்வரும் சிறுவட்டமாக அமர்ந்திருந்தனர்.

“அந்த ரகசியம் அவ்ளோ மகத்தானதா தாத்தா?” பிரக்ன்யா வினவினாள்.

“மகத்தானது மட்டும் இல்ல, அத்தியாவசியமானதும் கூட” தன் பையில் இருந்த ஓலைச் சுவடியை எடுத்துப் படிக்க முற்பட்டார் ராகவ். கே அவரிடமிருந்து சுவடியை பிடுங்கி அதில் இருந்த பாடலை பார்த்தான்.

“இது என்ன பாட்டு கொஞ்சம் கூட புரியல. என்ன மொழி” கே வினவினான். சஞ்சை புன்னகை செய்தார்.

“எல்லாம் தமிழ் மொழிதான். நீ எப்ப பாத்தாலும் டேப்ல கேம் விளையாடிக்கிட்டு இருந்தீனா நம்ம மொழி எப்படி தெரியும்” சஞ்சை கேலியாக சொன்னார். பிரக்ன்யா புன்னகை செய்தாள்.

“என்ன சிரிக்கிற! உனக்கு மட்டும் புரிஞ்சிதா” கே பிரக்ன்யாவை அடிக்க சென்றான். அவள் மடியில் படுத்திருந்த பப்பு விழித்து, அவனைப் பார்த்து ‘லொள்’‘லொள்’ என்று குறைத்தது. அவன் பயந்து பின்வாங்கினான். அனைவரும் சிரித்தனர். ராகவ் பேசத் தொடங்கினார்.

“தமிழ் தொடர்ந்து படிக்க படிக்க புரியக்கூடிய அமுத மொழி. நீ போக போக கத்துப்ப” என்றவாறே பாட்டைப் படித்தார்.

‘நாடிநாடி நாடிரெண்டு திங்களும்கழிந்துபோய்
வாடிவாடி அமிர்தம்வேண்டி மாண்டுபோன மாந்தர்கள் ; ஓடிஓடி தாபம்கண்டு தந்தம் தேடி நுழைந்திட, சமம் கடக்க முடிந்தால் கீழிடு சொல்லிடும் ரகசியம்’

பாட்டிற்கு அர்த்தம் புரியாமல் கே திருதிருவென விழித்தான். அதை புரிந்து கொண்ட ராகவ் தொடர்ந்து பேசினார்.

“இது சிவவாக்கியர் வழிவந்த யோகசித்தர் எழுதி வச்சிட்டு போன பாட்டு. மனுஷன் நன்னீர் இழந்து அத தேடி அலையுற காலம் வரும், அப்போ இந்த ரகசியம் பயன்படும்னு சொன்ன தீர்க்கதரிசி அவர். அந்த ரகசியத்த கண்டுகிட்டா போதும், நம்மளோட தண்ணீர் பிரச்சனை தீர்ந்திரும்”

“தண்ணீர் சரி. அது என்ன நன்னீர்!” கே வினவினான்.

“பிரெஷ் வாட்டர் (freshwater). உலகத்துல இருக்குற எல்லா நீரும் நல்ல நீர் இல்ல. பெரும்பாலான நீர் உப்புதண்ணியா இருக்கு. இல்ல நம்மளோட அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்த முடியாத நிலைமைல இருக்கு. நம்மால குடிக்க, மற்ற தேவைகளுக்கு பயன்படுத்த முடிஞ்ச தண்ணியதான் நன்னீர்னு சொல்லுவோம்” ராகவ் விளக்கினார்.

“ஏன் இப்டி பிரெஷ் வாட்டர்பற்றாக்குறை வந்துச்சு? நான்லாம் பிறந்ததுல இருந்தே பிரெஷ் வாட்டர் அதிகம் இல்ல!” பிரக்ன்யா வினவினாள்.

“அதுக்கு முன்னாடி இருந்தே இல்ல…” ராகவ் சொன்னார். எல்லோரும் அவரை ஆச்சர்யமாக பார்த்தனர்.

“எங்க யாருக்கும் பொறுப்பும் அக்கறையும் இல்லாம போனதுதான் காரணம். பொறுப்பில்லாம தான் நாங்க தண்ணீர இழந்திட்டு நிக்குறோம்…

“சிறுதுளி பெருவெள்ளம்னு சொல்லுவாங்க. அதுக்கு சிறுசிறு துளியா தண்ணீர சேர்த்துவைக்கனும்ங்குற அர்த்தமும் இருக்குங்குறது எனக்கு அப்ப புரியல”

ராகவ் தாத்தா சோகமாக சொன்னார். கே, அதைப் பொருட்படுத்தாது, “பசிக்குது” என்றான். சஞ்சை கோபமாக பார்த்தார்.

“எனக்கு பசிக்கலப்பா. பப்புக்கு பசிக்குது. அங்க பாருங்க வால ஆட்டுறான்” என்று கே சமாளிக்க, சஞ்சய் புன்னகை செய்தார்.

3

எல்லோரும் ஆளுக்கொரு கோதுமை ரொட்டியை உண்டனர். பப்புவிற்கு அரை ரொட்டிக் கொடுத்தனர்.

“தாத்தா உங்க காலத்துல நீர் பற்றாக்குறை வர ஆரமிச்சிதுன்னு சொன்னீங்களே!” பிரக்ன்யா தாத்தாவிற்கு அவர்களின் உரையாடலை நினைவுப்படுத்தினாள். தாத்தா அவளுக்கு விளக்க தொடங்கினார்.

“ஆமா. எங்க காலத்துலதான் நீர்நிலைலாம் வற்ற ஆரமிச்சிது. இன்னொரு பக்கம் கிணறோட அவசியம் பல பேருக்கு புரியல. தங்களோட தேவைகளுக்காக கிணற மூட ஆரமிச்சாங்க. எங்க வீட்லயே கிணற மூடிதான் கார் பார்க்கிங் கட்டுனாங்க. எங்க பாத்தாலும் போர் போட்டு தண்ணி எடுக்கலாம்ங்கற மனப்பான்மை பெருக ஆரமிச்சிது. ஐநூறடி ஆயிரமடி கிணறு வெட்டி பெருமைப்பட்ட காலம் போய் பலநூறடி போர் போடுறது பெரிய விஷயமா பட்டுச்சு”

“கிணறுகள் இல்லாம போனதாலதானே போர் போட ஆரமிச்சாங்க? நீங்க கிணற்று தண்ணீர பாதுகாக்க தவறிட்டீங்கப்பா” சஞ்சய் தன் முந்தைய தலைமுறையை குறை கூறினார்.

“கிணறு மட்டும் இல்ல. நிலத்தடி நீரைக் கூட முழுசா உறிஞ்சிட்டோம், எங்களோட அடுத்த தலைமுறைக்கு மிச்சம் வைக்காம… ஒரு வளம் குறையும் போது அதை பாதுகாக்குறது எப்படின்னு யோசிச்சிருக்கணும். அதைநாங்க செய்யல. நான் ஸ்கூல் படிக்கும் போது மழை நீர் சேகரிக்கிறது கட்டாயம்னு சொன்னாங்க. எங்க வீட்லயும் எங்க அப்பா ஒரு ப்ளம்பருக்கு காசு கொடுத்து கடமைக்கு ஒரு தொட்டி கட்டினார். எங்க தெருவுல பலரும் அதான் பண்ணுனாங்க. ஏன் மழை நீர் சேகரிக்கனுங்கற அவசியத்த யாரும் உணரல, மழை தண்ணி பூமி நீரா மாறுதா இல்ல சாக்கடைல போகுதாங்குறத பத்தி யாரும் கவலைப் படல”

“எங்கலாம் பிரஷ் வாட்டர் பயன்பாட குறைச்சிருக்கலாம்னு நீங்க யோசிச்சிருக்கலாம்ப்பா…. மரங்கள் அழிஞ்சு மழையும் இல்லாம போனதுக்கப்பறம் மிச்சமிருந்த தண்ணியோட பயன்பாட்ட சீர் படுத்தியிருக்கணும்” சஞ்சய் சொன்னார். ராகவ் அதை ஆமோதிக்கும் பொருட்டு தலை அசைத்தார்.

“தண்ணீர மனுஷன் இறைத்துபயன்படுத்தின காலம் போய் மோட்டர் மூலம் தண்ணீர் எடுக்க ஆரமிச்ச காலத்துல தான் தண்ணீர் நிறைய வீண் ஆக ஆரமிச்சிது… யோசித்துப் பார்த்தா நம்மளோட சொகுசுதான் எல்லாத்துக்கும் காரணம்…” ராகவ் சொல்லும் போதே கே இடைமறித்தான்.

“கிணறே இல்லாதவங்க வேற என்ன பண்ணிருக்க முடியும்…?”

“தண்ணீர சேகரிச்சு வச்சு மேனுவலா (manual) எடுத்து பயன்படுத்தி இருக்கலாம். அப்படி செஞ்சிருந்தா நிச்சயம் தண்ணீர் பயன்பாடு குறைஞ்சி அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் தண்ணீராவது இருந்திருக்கும். நாங்க எல்லாமே ஆட்டோமேட்டிக்கா (Automatic)இருக்கணும்னு நினைச்சோம்… பாத்ரூம்ல யூஸ் பண்ற ப்ளஷ்கூட ஒரு வகையில எதிரி தான்.”

“வாஷிங் மெசினும் நிறைய தண்ணிய வீணடிக்குதுன்னு எங்க மிஸ் சொல்லுவாங்க” பிரக்ன்யா சொன்னாள்.

“ஆமா… அதிலையும் தண்ணீர வீணடிக்குற ஆட்டோமேட்டிக் வாஷிங் மெசின் மிகப் பெரிய எதிரி. எங்களுடைய வேலையெல்லாம் எவ்வளவு ஈசியா முடியுதுன்னு யோசிச்சோமே ஒழிய அதனால எவ்ளோ வளத்த வீணாக்குறோம்னு யோசிக்கல…”

“அதான் இப்டி புரியாத பாட்ட வச்சுக்கிட்டு ரகசியம் தேடி அலையுறோம், உங்களால….” கே கிண்டலாகசொன்னான். ராகவ் சிரித்தார்.

விடிந்தது. அவர்கள் பயணமும் பேச்சும் தொடர்ந்தது. காட்டினுள் பேசிக்கொண்டே நடந்தனர். பப்பு அவர்களை கடந்து முன்னாடி ஓடியது. காட்டினுள் எதையோ பார்த்து பப்பு ஸ்தம்பித்து நின்றது. பின்னே சென்ற இவர்களும் ஸ்தம்பித்து நின்றார்கள்.

4

அங்கே ஒரு மிருகம் நின்றுகொண்டிருந்தது. அது மிகவும் மெலிந்திருந்தது. அப்படிபட்ட மிருகத்தை அதற்கு முன் கண்டதில்லையே என்று கேயோசித்தான்.

“இது என்ன மிருகம்?” என்று தன் தந்தையிடம் கேட்டான். சஞ்சையும் உடனே பதில் சொல்ல முடியாமல் குழம்பி நின்றார். அவரின் குழப்பத்தை ராகவ் போக்கினார்.

“யானை. தண்ணி இல்லாம மெலிஞ்சிருக்கு… அதோட தந்தத்த வச்சு தான் கண்டுபுடிச்சேன்,” ராகவ் சொன்னதும் கே எதையோ கண்டுகொண்டவனைப் போல் சந்தோசமாக பேசினான்.

“தந்தம்… இதான அந்த சித்தர் பாட்டுல இருக்கு… தந்தம் தேடினு… புடிங்க அந்த யானைய…” கே சொல்ல, எல்லோரும் சிரித்தனர். கேவிற்கு புரியவில்லை.

“தந்தம்னா யானை தந்தம் இல்ல கே. அதுக்கு இன்னொரு அர்த்தம் இருக்கு” சஞ்சய் சொன்னார்.

“போங்கப்பா. நீங்களும் உங்க தமிழும்” கே அழுத்துக் கொண்டான். அந்த யானை அதன் வழியில் சென்றது.

“தந்தத்துக்கு இன்னொரு அர்த்தம் என்ன தாத்தா…?”பிரக்ன்யா ராகவிடம்வினவினாள்.

“தந்தம்னா மலைமுகடு. தாபம்னா காடு. இந்த காட்டு பாதையில போனா சித்திரமலை வரும். அதன் உச்சிக்கு போய்ட்டா போதும், நாம தேடி வந்த ரகசியம் அங்கதான் இருக்கு”அதான் அந்த பாட்டுக்கு அர்த்தம்.

“இந்த பாட்டுக்குள்ள இருக்க அர்தத்த புரிஞ்சிக்கவே ரொம்ப நாள் ஆகும் போல. இதுல எங்க இருந்து ரகசியத்த கண்டு புடிக்கிறது!” கே தனக்குதானே சொல்லிக்கொள்ள, அனைவரும் சிரித்தனர். அந்த சப்தம் கேட்டு, அந்த யானை ஒருமுறை அவர்களை திரும்பிப் பார்த்துவிட்டுச்சென்றது.

“தண்ணீ தேடி அலையுது” சொல்லிய ராகவ் மேலும் தொடர்ந்தார்.

“பாதுகாக்க தவறுனதாலதான் சுத்த தமிழும் சுத்த தண்ணியும் அழிஞ்சிது”

“ப்யூரிபையர்வச்சுக்கோங்க…” கே கேலியாக சொன்னான். ராகவ் அதை பொருட்படுத்தாமல் பேசினார்.

“நான் காலேஜ் படிக்கும்போது எங்க தெருவுல ஒருபெரியவர் இருந்தாரு. குழாய் தண்ணிய காய்ச்சிக்குடிங்க. அதுவே போதும், அதுலதான் சத்துனு சொல்வாரு. தண்ணீர ப்யூரிபைபண்றதுல அவருக்கு உடன்பாடு இல்ல. அதுல ஒரு சத்தும் இல்ல, காசும்தண்ணியும்தான் வீணுன்னு சொல்லுவாரு. யாரும் கேக்கல. RO தண்ணிதான் வேணும்னு பல சைஸ்ல ப்யூரிபையர்வாங்கி வச்சாங்க. ஆனா அந்த RO ப்ராசஸ்ல எவ்ளோ தண்ணீ வீணா வெளிய போச்சுனு யாரும் கவனிக்கல. வீணா போற தண்ணிய வேறெப்படியும் பயன்படுத்த முயற்சிக்கல. தெருவுக்குஒரு சிறிய கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை வேணும்னு சொல்லுவாரு. எங்க தெருல ஒரு ஆலை வைக்க ரொம்ப முயற்சி பண்ணுனாரு அந்த பெரியவர். நான் அதெல்லாம் அப்போ பெருசா எடுத்துக்கல. வாஷிங் மெசின்ல இருந்தும் ப்யூரிபையர்ல இருந்தும் வீணா போற தண்ணீர மற்ற தேவைகளுக்கு பயன்படுத்திருக்கலாம். அதையும்செய்யல. இப்ப மாத்திரைய சாப்பிட்டு தாகத்த அடக்கிக்குற நிலைமைலவந்து நிக்குறோம்…”

5

ஒரு நாள் முழுக்க நடந்ததும் அவர்கள் சித்திர மலை அடிவாரத்தை வந்தடைந்தனர். அவர்கள் முன் உயர்ந்து நின்ற மலையை பார்த்ததும் கே, “இதுல ஏற என்னால முடியாது. நான் இங்கேயே இருக்கேன்” என்றான்.

“குழுவில் வந்த எல்லாரும் சேர்ந்து தான் மேல போனும்… வா…” சஞ்சய் கோபமாக சொன்னார்.

“பல நூறு வருசத்துக்கு முன்னாடி யாரோ எழுதின பாட்ட வச்சு நாமா என்ன பண்ண முடியும்ப்பா…! அங்க ரகசியம் இருக்குனு எப்படி நம்புறது?” கே சலிப்புடன் கேட்டான்.

இப்போது ராகவ் பொறுமையிழந்தார்,

“நமக்கு வேற வழி இல்ல. தண்ணீர் இல்லாம அங்க எல்லாரும் செத்துகிட்டு இருக்காங்க. ரெண்டு மாசமா அலஞ்சிருக்கோம். இப்ப திரும்பி போ முடியாது….”

“என்னால முடியல” கே சொன்னான்.

இதை பார்த்துக் கொண்டிருந்த பிரக்ன்யா, “இங்கதனியா இருக்குறதவிட எங்களோட வரதுதாண்டா உனக்கு சேப்” என்றாள். கே மேற்கொண்டு எதுவும் பேசாமல் நடந்தான்.

“மலை உச்சில சமமான பகுதிய கடந்து போனா வரும் அந்த பழைய கோவில்ல தான் நாம தேடி வந்த ரகசியம் இருக்கு…” ராகவ் சொன்னார்

அவர்கள் மலையின் உச்சியை நெருங்கிக் கொண்டிருக்கையில், ஏதோ சப்தம் கேட்டது. மேல் செல்ல செல்ல, சப்தம் அதிகமாகிக் கொண்டே போனது. பெரும் கூச்சல். யாருக்கும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் உச்சியை அடையும் போது, சஞ்சய் வினவினார்.

“இங்க இன்னும் வேற யாரோ இருக்காங்களோ?”

அப்போதுதான் ராகவிற்கு உண்மை விளங்கியது. அவர் தீவீரமான சிந்தனையில் ஆழ்ந்தார்.

“என்னாச்சுப்பா?” சஞ்சய் அவரை உலுக்கினார்.

எதுவும் பேசாமல் மேல் நோக்கி கை காண்பித்தார் ராகவ். சஞ்சய் மேல்நோக்கி வேகமாக ஓடினார்.

“தப்பு பண்ணிட்டோம். நமக்கு மட்டுமா தண்ணீர் பஞ்சம்?”ராகவ் தனக்குதானே கேட்டுக் கொண்டார். பிரக்ன்யாவும் கேவும் புரியாமல் பார்த்தனர்.

“உலகத்துல இருக்குற எல்லாருக்குமே தண்ணீர் அத்தியாவசியம். எல்லாருமே இப்ப நன்னீர் இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. எல்லாருமே தண்ணீர் ரகசியத்த தேடி அலைஞ்சா என்ன ஆகும்?” ராகவ் ஆக்ரோசமாக கேட்டார்.

“சண்டை வரும்”கே சொன்னான்.

“யுத்தமே வரும்…” ராகவ் சொன்னார்.

6

மலை உச்சியை அடைந்த சஞ்சய் ஸ்தம்பித்து நின்றார். அவர் கண்ணெதிரே பலநாட்டவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் கையிலிருந்த பல வகையான ஆயுதங்களை பார்த்த போது சஞ்சயின் உடம்பு நடுங்கியது. திரும்பி ஓடிவந்தார்.

“அப்பா சமம் கடந்தா கோவில்னு சொன்னீங்க.. அங்க அங்க” அவருக்கு மூச்சு வாங்கியது. ராகவிற்கு விளங்கிவிட்டது.

“சமம்-சமர். அதுக்கு யுத்தம்னு இன்னொரு அர்த்தம் இருக்கு. சமம் கடக்க முடிந்தால்… மேல நடக்குற யுத்தத்துல, நம்மால, நம்ம நாலு பேரால ஜெயிக்க முடிந்தால்….” ராகவால் மேற்கொண்டு பேச முடியவில்லை. எல்லோரும் அதிர்ச்சியாக அப்படியே உறைந்து நின்றனர்.

அந்த தண்ணீர் ரகசியத்தை கண்டுகொண்டால் தான் நாட்டில் உள்ள தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க முடியும். அதற்காக தான் அவர்கள் இவ்வளவு தூரம் வந்தனர். உண்மையில் ராகவ், தண்ணீர் ரகசியத்தை கண்டு கொண்டு உலகில் உள்ள அனைவருக்கும் தெரியப் படுத்த வேண்டுமென்றே எண்ணினார். ஆனால் இப்போது ரகசியத்திற்க்காக சுயநலமாக பலரும் அடித்துக் கொள்கிறார்கள்.

இயற்கை வளங்களை தங்களின் காலத்திலேயே சரியாக பாதுகாத்திருந்தால் தற்போது இப்படி ரகசியத்தை தேடி அலைய வேண்டிய சூழல் வந்திருக்காது. இவ்வளவு பிரச்சனைகளும் வந்திருக்காது.

இயற்கை வளங்களை ஒவ்வொரு தலைமுறையினரும் தங்களுடைய சொத்தாக கருதி பாதுகாக்க வேண்டும். அவற்றை வருங்கால தலைமுறைக்கு நல்லபடியாக விட்டுச்செல்ல வேண்டும் என்ற அக்கறை நாம் எல்லோருக்கும் வேண்டும். இந்த உண்மை அவருக்கு உரைத்த போது, ஏராளமான மைக்ரோ குண்டுகள் அவர்களை நோக்கி பாய்ந்து வந்தது. குழந்தை அழும் சப்தம் கேட்டது.

ராகவ் திடிக்கிட்டு விழித்தார். காலண்டரில் வருடம் 2018 என்று இருந்தது. மணி இரவு ஒன்று. பக்கத்தில் படுத்திருந்த அவரது ஒருவயது மகன் சஞ்சைஅழுதுகொண்டிருந்தான்.

அவனை ஆசுவாசப்படுத்தினான் ராகவ். எல்லாம் கனவாக இருந்தாலும், அந்த கனவு கற்றுத் தந்த பாடம் நிஜம் என்று நினைத்தான் பாத்ரூமில் நீர் சொட்டிக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. எழுந்து சென்று குழாயை மூடினான்.

– ஜூன் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *