கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2023
பார்வையிட்டோர்: 5,775 
 

5 | 6 | 7

காலை பத்துமணிக்கும் புலராத செப்டம்பர் மாதம். சாலை வரை நீண்டிருந்த பென்னட்டுடைய வீட்டின் புல்வெளி எங்கும் இரவு பனிப்பொழிந்ததற்கான அடையாளங்கள் மிச்சம் இருந்தன. திறந்திருந்த வரவேற்பறை ஜன்னல் சுவரில் பதிந்திருந்த கன அடுப்பின் முயற்சியைத் தோற்கடித்தது. வரவேற்பறை மூலையில் உட்கார்ந்திருந்த கிளாராவின் கண்கள் தூக்கத்தை இழந்திருந்தன. ரெண்டு நாட்கள் மூன்று இரவுகள் பயணம் செய்து இங்கிலாந்து யார்க் நகரில் பென்னட் வீட்டுக்கு வந்திருந்தாள். மரப்படிகேட்டுகள் உராயும் ஓசை கேட்க பென்னட் வந்துவிட்டாரென எட்டிப்பார்த்தாள். வேலையாள். பலகைச் சட்டகங்கள் போல, தேவையான அசைவுகளை மட்டுமே உடைய அவளது நகர்வு அதிசயமாக இருந்தது. கிளாராவுக்கருகே இருந்த மேஜையில் சிறு கிண்ணங்களில் இனிப்பு வகைகளை வைத்துவிட்டு அசைவே தெரியாதது போல மறைந்தாள். வெள்ளை மெழுகுவர்த்தி போலிருந்தாள். கதப்பூட்டும் நெருப்பில் அவ்வப்போது வெடித்த மரச் சுள்ளிகளை தவிர உயிர்ப்பே இல்லாத உறைந்தவிட்ட அறை.

டிரெஸ்டன் நகரை விட்டு சொல்லிக்கொள்ளாமல் விடைபெற்றார் பென்னட் எனக் கேள்விபட்டதும் கடும் கோபம் அடைந்தாள் கிளாரா. நெருங்கிய நண்பர் என்பதால் மட்டுமல்ல, ஷூமன்னின் இசையை ஆஸ்த்ரிய ராஜ்ஜியம் தாண்டி எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு பென்னட்டுக்கு இருந்ததாக அவள் எண்ணியிருந்தாள். திடுமென கோவத்தில் கிளம்பிப் போவார் என அவள் எதிர்பார்க்கவில்லை.

அரையிருட்டு நிலவிய பின்கட்டு அறையிலிருந்து பென்னட் வெளிப்பட்டார். கூன் போட்டிருந்தார். ரெண்டு நாட்கள் மழிக்காத முள் தாடி, மஞ்சள் வெண்மை நிறத்தில் வெளிறிய நிற முகம், முன்பார்த்ததை விட கருவட்டங்கள் அதிகமான கண்கள் என சோர்வாயிருந்தார்.

‘வாருங்கள் கிளாரா. தங்கள் வரவு நல்வரவாகுக! நானே உங்களுக்கு மடல் எழுத நினைத்திருந்தேன்..’, என தர்மசங்கடமாகச் சிரித்தார்.

‘பரவாயில்லை பென்னட். உங்களது உஷ்ணக்காற்று எனது பியானோ அறையை இப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. தங்களது மனைவி எலிசபெத் நலம் என நம்புகிறேன்.’, என பென்னட்டின் கண்களை விட்டு அகலாமல் பேசினாள்.

‘உங்களிடம் காரணம் கேட்கப் போவதில்லை பென்னட். மனநல மருத்துவமனையில் இருந்தபோது ஷூமன் எழுதிய இரு சிம்பொனிகள் மற்றும் நான்கு கான்சர்ட்டோக்களை லெப்சிக் மேடையில் அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன்.’, என்றாள்.

‘நான் என்ன செய்ய முடியும் கிளாரா? டிரெஸ்டன் சேம்பர் ஆர்க்கஸ்ட்ராவினராலும் இதுவரை உலகம் பார்த்திராத பியானோ கலைஞரான உங்களாலும் முடியாததை என்னால் முடியுமா? ‘, மிக நிதானமாக கேலித்தொனி வெளிப்படாத வண்ணம் கூறினார் பென்னட்.

நேரடியாக கேள்விக்கு பதில் தராத கிளாரா, ‘இசையால் பெற்றவை குறைவு தான். இல்லை அப்படிச் சொல்லக் கூடாது. மாறாக குறைவுபட்டவைகளையே இசை எனக்குத் தந்தது. மன்னிக்கவும், வேறு ஏதாவது தனிமையான அறைக்குச் செல்லலாமா? உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஒரு பெண் அழுதுகொண்டிருப்பதை விரும்பமாட்டீர்கள்..’, கண் ஓரத்தில் தேங்கிய கண்ணீரை கைக்குட்டையினால் விழி நோகாமல் துடைத்தாள். அவளது பரிதாபமான முகத்தைப் பார்க்க பென்னட்டுக்கு சங்கடமாக இருந்தாலும் மிக திடமான நெஞ்சுடையவள் எனவும் உணர்ந்திருந்தார்.

‘ஒ, மன்னிக்க வேண்டும். வாங்க..’, என பதறியபடி பின் அறையின் இருட்டைக் கடந்து மேஜை மேலிருந்த சிறு கண்ணாடி விளக்கை படியேறத் துணையாக எடுத்துக்கொண்டார்.

மாடி அறை விசாலமாக இருந்தாலும் திரைச் சீலைகள் மூடி இருண்டிருந்தது. கண்ணாடி விளக்கை மேஜை மேல் வைத்ததும் ஜன்னல் நாதங்கிகளை நீக்கிவிட்டு உயரமான திரைச்சீலைகளை இழுத்துச் சேர்த்து நீல நிற சணல் கயிறால் சுவர் ஆணியில் சுற்றிக் கட்டினார்.

கிளாரா முதலில் பியானோவுக்கு அருகே இருந்த நாற்காலியில் ஷூமன்னின் கருப்பு அட்டை போட்ட டயரிக்குறிப்புகளைப் பார்த்தாள். அதற்கு கீழே இசைக்குறிப்புகள் நூலால் கட்டப்பட்டிருந்தன.

‘உங்களிடம் கொடுத்துவிட்டு வர நினைத்தேன்..அவசரத்தில் பொட்டியோடு எடுத்து வந்துவிட்டேன்..இப்பவே அடுக்கி வைக்கச் சொல்கிறேன்.’, எனத் தடுமாறி எல்லா குறிப்புகளையும் சேர்க்கத் தொடங்கினார்.

பெரிய அரசவைக் கூடம் போல விசாலமாக இருந்த அறைக்குள் ஜன்னல் வழியாக சில்லென்று காற்று வீசியது. கண்களில் ஒரு திரை மூடியது போல கிளாராவுக்கு குழப்பம் ஏற்பட்டது. எதற்காக இங்கு வந்தோம்? மைதொட்டு எழுதிய சில இசைக்குறிப்புகளை திரும்ப வாங்குவதற்கா? டிரெஸ்டன் நகரிலிருந்து பெரும் கோபத்தோடு தான் கிளம்பினாலும் இந்த அறைக்குள் ஷூமன்னின் பொருட்களைப் பார்த்ததும் அவளுக்கு குழப்பம் ஏற்பட்டது. இசை நிகழ்ச்சி நடத்துவதும், பென்னட்டிடம் முகம் கொடுக்காமல் கறாராகப் பேசுவதும் முக்கியமல்ல எனத் தோன்றியது. பென்னட் அனைத்தையும் பெட்டியில் அடுக்கிவைத்துக்கொண்டிருந்தார். ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தொடுவானம் தொட்ட இடங்களிலெல்லாம் கடந்த காலத்திலேயே தொக்கி நிற்பது போலத் தோன்றியது.

‘இந்தாருங்கள் ஷூமன் என்னிடம் கொடுத்த புத்தகங்கள், இசைக்குறிப்புகள், அவனது நாட்குறிப்புகள்..இனிமேல் எனக்கு இது தேவையில்லை..’, பெரும் பாரம் குறைந்தது போல பென்னட்டின் முகம் நிம்மதி அடைந்திருந்தது.

விழிகளைப் போல கைகால்களும் கிளாராவுக்கு கனமாக இருந்தன. திரும்ப எடுத்துச் சென்றுவிட வேண்டும் எனும் எண்ணத்தை நீட்டிக்கவிட்டு முடிவு எடுத்தவளாய், ‘இல்லை பென்னட். நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். எனக்காக அல்ல, உங்கள் நண்பரின் கனவை நிஜமாக்கக் கூட அல்ல. ஒரு உண்மையான கலைஞன் அடையாளம் தெரியாமல் உதாசீனத்தின் பிடியில் தவித்த கணங்களிலும் எப்பேர்பட்ட உன்னதமான சிருஷ்டியை செய்து காட்ட முடிந்தது என உலகுக்குத் தெரியப்படுத்துவதற்காக. எனது காதல், புகழ், பெருமிதம், வளர்ச்சி எல்லாம் இதற்கு முன் மண்டியிடவேண்டியவை. ஒரு வேளை நீங்கள் நினைப்பது போல ஷூமன் மீது நான் வைத்திருக்கும் காதல் உண்மையானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதனின் உச்சகட்ட வல்லமைகளின் வரிசையில் ஷூமன்னின் இசைக்கு ஒரு இடமுண்டு. வெறும் இசையின் சாதனைகளால் உண்டான இடமல்ல, அது அவருக்குத் தெரியாது; ஆனால் இசையோடு ஒன்றிய ஒரு கலைஞனின் மொழி இது.’

‘பொதுவாக தனிமைச் சிறையில் சிக்கிக்கொண்டால் மனநோய் உருவாகிவிடும் என்றாலும் அதை கவனிக்கும் பயிற்சியைப் பெற்றவர் என மருத்துவர் ஷூமன் பற்றிக் கூறினார். புறச் சூழலை பிரதிபலிக்க இயலாத கலை தேங்கிவிடும் என்பதை ஷூமன்னனை விட அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. உயிர்ப்பிடிப்பாக அகத்தின் கூவல்கள் புற உலகை சென்றடையும் வழி என்றாலும் இசை அதோடு நின்றுவிடுவதில்லை என உணர்ந்தவர். நுட்பங்களும் இடைவிடாத பயிற்சியும் இசைக்கலைஞரை உருவாக்காது என்பதை ஐரோப்பா உணர வேண்டும். கலையின் உச்சகட்டத்தை நோக்கி உந்திச் செல்லும் ஒரு பெரிய சமூகம் சாவி கொடுத்த பொம்மைகள் போல மாறிவருவதைக் கண்டு வெதும்பியிருக்கிறார் ஷூமன்.’

மேகங்களைத் தாண்டி குளிர்ந்த நிலத்தை பார்த்துவிடுவோமா என வானம் திணறியது. வீசிய மெல்லிய காற்றில் ஆப்பிள் வாசனை. கிட்டத்தட்ட கையறுநிலையில் வெளிப்பட்ட கிளாராவின் வார்த்தைகள் அறைக்குள் மெளனத்தை அதிகப்படுத்தின. சுயவாதை என ஷூமன் தனது இசை பற்றிய ஒரு கடிதத்தில் எழுதியிருந்ததை பென்னட் நினைவுகூர்ந்தார். இசை தரும் போதையே எனக்கான பதாகை; அதுவே எனது உயிரை உறிஞ்சு கொல்லும் நோய். ஷூமன் பற்றி பென்னட்டுக்குத் தெரியாத எதையும் கிளாரா சொல்லிவிடப்போவதில்லை. அழகின் வெளிப்பாடு தான் கலை என நம்பிக்கையை இது போன்ற கலைஞர்களின் வாழ்வு சிதைத்துவிடுகிறது. கலையின் அழகும் மூர்க்கமும் இதுதான்.

‘இந்த உண்மை தெரிந்தும் ஏன் இத்தனை நாள் மறைத்து வந்தேன் என நீங்கள் குழம்பக்கூடும்..உள்ளுக்குள் உணர்ந்த என்னால் வெளிப்படையாக காட்ட முடியவில்லை. சிறு வயதிலிருந்து நான் ஒப்புக்கொண்டுவிட்ட கலை எனும் ராட்சசனின் முகத்தை மறுக்கத் தயாராகவில்லை. ஷூமன்னின் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள எனது அடிப்படை உலகை மாற்ற வேண்டும். இயல்பிலேயே ஒரு பியானோ கலைஞனாக மட்டும் இருந்ததால் இசை என்பது பயிற்சி மூலம் அசாத்திய ஒருமை மூலம் கைவசப்படக்கூடியது என நினைத்திருந்தேன். ஷூமன் காட்டிய உலகை மறைத்து வந்தேன். அதை ஏற்றுக்கொண்டால் எனது வாழ்வே அர்த்தமிலாத பாழும் கிணறு ஆகிப்போகும். நான் இறந்தபின்னும் ஐரோப்பாவின் மிகப்பெரிய பியானோ கலைஞன் எனப் பெயர் நிலைத்திருக்க வேண்டும். அதற்காகவே சிறுவயது முதல் இசைக்குறிப்பு கூட இல்லாமல் பயிற்சி எடுக்கப் பழகினேன். கிளாரா என்பவளது விரலில் உள்ளது பியானோவின் உன்னதமும் மென்மையும் என உலகுக்கு உணர்த்த நினைத்தேன். அதை பல இசைக்கூடங்களில் செய்தும் காட்டினேன். ஐரோப்பாவே என்னைப் போற்றியது. பியானோ வாசிப்பதில் இருக்கும் நுட்பங்கள் அறிந்தவர் என்னளவு யாருமில்லை. இதுதான் உண்மை. ஆனால் ஷுமன்னின் அளவுகோளை ஏற்றுக்கொண்டது நான் அழிந்துவிடுவேன். எனது திறமையான பியானோ வாசிப்பு வெறும் குரங்காட்டிவித்தை மட்டுமே என நானே ஒத்துக்கொள்வது போலாகிவிடும். எனது பிம்பம் அழிவதை விரும்பவில்லை.’ , அழுகையை அடக்கி கம்பீரமாகப் பேசினாலும் அவளது குரல் உடைவதை பென்னட் கவனித்தார்.

‘உதாசீனம் மூலம் என் இருப்பை நிலைப்படுத்தவும், பொதி சுமக்கும் கழுதை போல் மாறாத நுட்பங்கள் வழி உந்திச் செல்லவும் பழக்கப்படுத்தப்பட்டேன். என வாழ்வே இவ்வளவுதான். இதை மீறிய வழி ஒன்று கலையில் உள்ளது எனக் காட்டிய ஷூமன்னனை உள்ளூர வெறுத்தேன். அவரைக் காதலிக்காமல் ஒரு நாளும் இருந்ததில்லை, இன்றும். ஆனால் எல்லையை மீறி அவர் காட்டிய இசைப் பாதையில் கிளாராவுக்கு இடம் கிடையாது.’

‘என்றாவது ஒரு நாள் அவர் தற்கொலை செய்துகொள்வார் என எண்ணியிருந்தேன். பிரக்ஞை இழந்த மனநிலையில் சிருஷ்டியின் உச்சத்தில் இருந்த ஷூபர்ட் போல இவரது ஆயுசும் குறைவே என்பதை உணர்ந்திருந்தேன். என்னைப் போன்றவர்கள் இன்னும் ஆயிரம் வருடங்கள் கூட வாழ்ந்துவிட முடியும். தூண்டிலில் மாட்டிய மீன் போல வானை அள்ளவும் அதன் மூலம் உயிரை விடவும் சபிக்கப்பட்ட உண்மையான கலைஞர்களின் தலைவிதி எதிர்பார்க்கும் பலி இது. கண்டிப்பாக இது சிறு வீழ்ச்சிகள் தாம். ஆனால் கலை எனும் அகண்டாகார ஆத்ம லயிப்பை கோரும் செயல்களுக்கு அவ்வப்போது நமது தரப்பிலிருந்து தரும் அன்பளிப்பு.’

விக்கித்து நின்றிருந்தார் பென்னட். ஐரோப்பிய இசைக் குழுக்களில் உணர்வற்ற ‘மாவு பொம்மை’ என ரகசியமாக பலர் சிரிக்கும் கிளாராவா இது? கிளாராவின் பிரக்ஞை மோதியதன் வலி பென்னட்டை துளைத்தது. அழுது முடித்து கண்ணீர் வற்றிய கிளாராவை வெறித்துப் பார்த்தார். முடிவற்ற ஒரு பயணத்தில் தொடக்கத்தைப் போல மனதைரியமும் அவநம்பிக்கையும் பென்னட் கண்களில் தெரிந்தன. இனி இந்தப் பெட்டியை கிளாராவிடம் கொடுப்பதில் பயனில்லை. ரெண்டு நாட்கள் பயணம் செய்த அலுப்பு கண்ணீரோடு கரைந்துபோனது போல நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் கிளாரா.

இனி ஷூமன்னின் நாட்குறிப்புகளை படிக்கத் தொடங்குவேன் என நினைத்தார் பென்னட்.

– தொடரும்…

– ஜனவரி 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *