கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 13,729 
 
 

என் சிறு வயதில் ஒரு நாள்… வயது எனக்கு அப்பொழுது என்ன ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ இருந்திருக்கலாம் என நினைக்கிறேன், சரியாக நினைவில்லை, அந்த நாள் வழக்கம் போல் ஒரு சாதாரண முக்கியத்துவம் இல்லாத நாளாகத்தான் தொடங்கியது. பள்ளியில் இருந்து திரும்பிய பிறகு வீட்டின் கொல்லைப்புறம் விளையாட ஆரம்பித்தேன். உடன் விளையாடியவர்கள் என்னைவிட ஒரு வயது சிறிய தங்கை, ஐந்து வயது சிறிய தம்பி மற்றும் எங்கள் அண்டை அயல் வீட்டுச் சிறுவர் சிறுமியர் கூட்டம் என ஒரு ஏழெட்டு பேர்.

எங்கள் வீடு தெருவில் கடைசி வீடு. அதனால் மற்ற வீடுகளை விட வீட்டின் இடதுபுறம் அதிகப்படியான இடம் இருந்தது. உடன் படிக்கும் தோழர் தோழிகளும் பக்கத்து வீடுகளிலேயே குடியிருந்தது வசதியாகிப் போனது. பள்ளி முடிந்து திரும்பியவுடன் மீண்டும் ஒன்றுகூடி எங்கள் வீட்டின் குட்டி மைதானத்தில் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்போம். ஒரு சிறிய பள்ளி நடப்பது போல கூச்சலும் களேபரமும் அமர்க்களமாக இருக்கும்.

வழக்கத்திற்கு மாறாக கொல்லைப்புறம் விளையாட சென்றதன் காரணம் அன்று எங்களுடன் விளையாடிய பக்கத்து வீட்டுப் பிள்ளைகளான ராஜேஸ்வரி, ரஞ்சனி மற்றும் ஆனந்த். ராஜேஸ்வரி என் வகுப்பு, ரஞ்சனி என் தங்கை வகுப்பு, என் தம்பியும் ஆனந்தும் பள்ளியில் சேரும் வயதைத் தொட்டிருக்கவில்லை. பக்கத்து வீட்டின் மதில் சுவர் பக்கம் எங்கள் அம்மாவும், பக்கத்து வீட்டு ராஜேஸ்வரியின் அம்மாவும் அவரவர் வீட்டில் இருந்தபடி மதில் மேல் சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள். எங்கள் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்ளும் பொருட்டு அவர்கள் பார்வையில் கொல்லைப்புறத்தில் அன்று விளையாட விட்டிருந்தார்கள்.

இவர்கள் பேச்சில் வீட்டில் கைவேலைகளுக்கு உதவியாக இருக்கும் முஷீராவும் கலந்து கொண்டார்கள். முஷீரா கல்லுரலில் மாவு ஆட்டும் முன் அரிசி களைந்து கொண்டே பேசிக்கொண்டிருக்க, அவர் மகள் தாவணி போட்ட வயதில் இருந்த நூர்ஜஹான் எங்களுடன் விளையாட வந்துவிட்டாள். அவசரத் தேவைக்கு அவ்வப்பொழுது நூரை முஷீரா அழைத்து வருவது வழக்கம்தான். அன்று நூர் நடன ஆசிரியையாக மாறி எங்களை கொல்லைப்புற படிக்கட்டில் கொலுபொம்மைகள் போல் வரிசைக்கு மூவர் என நிறுத்தி, கலா மாஸ்டர் அவதாரம் எடுத்து நடனம் சொல்லிக் கொடுத்தாள்.

“மாடி வீட்டுப் பொண்ணு ஒரு ஜோடி தேடும் கண்ணு
ஆடி ஆடி நடக்கும்போது அதிருதடா மண்ணு
ஐயயோ வாட் ஷல் ஐ டூ, டெல் மீ வாட் டு டூ
அமம்ம்மோ வாட் கேன் ஐ டூ, ஐயாம் மாட் ஆஃப்ட்டர் யு
கொக்கர கொக்கோ, கொக்கர கொக்கோ, கோ கோ கோ கோ”
என்ற பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருந்தோம்.

பெரும்பாலும் டுவிஸ்ட்தான். சின்ன பசங்களுக்குப் பல வார்த்தைகள் தெரியாமல் பாடுவதாக பாசாங்கு செய்தாலும், எல்லோருக்கும் “கொக்கர கொக்கோ” மட்டும் நன்றாகத் தெரிந்தது. அந்த வார்த்தைகள் மட்டும் உற்சாகம் மீறிட உரத்த குரலில் பாடப்பட்டு, சிரிப்பும் கும்மாளமுமாக கொல்லைப்புறம் அதிர்ந்தது.

பேசிகொண்டிருந்த அம்மாக்கள் குழந்தைகள் கூக்குரலினால் பேச்சு தடைபட்டு, கோபத்துடன் எங்களை அடக்க நினைத்தவர்கள் அதை மறந்து எங்கள் ஆட்டத்தைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். இதன் பிறகு அம்மாக்கள் தங்களுடைய விவாதத்தின் தலைப்பை மாற்றி தங்கள் மழலைப் பட்டாளத்தின் குறும்புகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். ராஜேஸ்வரியின் அம்மா அன்று தன் மகள்கள் செய்த குறும்பைப் பற்றி சொன்னவர்கள், இவர்களை குச்சியினால் விளாசினால்தான் அடங்குவார்கள் என்று கூறி தண்டனையைப் பற்றி எண்ணி தன் அடுத்த கட்ட நடவடிக்கைக்குப் போனார்கள்.

இதற்குள் நூரு நாங்கள் அனைவரும் சூழ்ந்திருக்க வித்தை காண்பித்தாள். அவள் கையில், நடுவில் சிறிய சதுரக் கண்ணாடி வைத்து, பக்கத்திற்கு நான்கு நடிகர் நடிகைகள் படம் அச்சடித்த இரண்டு தாள்கள், நட்சத்திரங்களின் படம் வெளிப்புறம் தெரியுமாறு ஒட்டப்பட்ட ஒரு வித்தை சாமான் இருந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் பெயராக மஞ்சுளா, ஜெயலலிதா, சிவாஜி, எம்.ஜி. ஆர்., முத்துராமன், வாணிஸ்ரீ, ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா எனச் சொன்னால், அவள் படத்தாள்களை லாவகமாக மடித்து கண்ணாடியின் பின்புறம் வைத்து நாங்கள் தேர்ந்தெடுத்த நட்சத்திரம் கண்ணாடி வழியே தெரியும்படி செய்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தாள்.

மழலைப் பட்டாளம் வித்தையில் மயங்கியிருக்க, ராஜேஸ்வரியின் அம்மா என்னைக் கூப்பிட்டு “அம்மாடி இங்க வா, மாடில போயி ஒரு வேப்பங்குச்சி ஒடிச்சிட்டு வா, இன்னைக்கு போடுற போடுல, இவளுங்க இனிமே பம்பரமா நான் சொல்றபடி ஆடனும்”, என்றார்கள். உடனே அம்மா, “ச்சே..வேணாங்க பாவம்” என்று இடை மறித்துவிட்டு, “ஏய், நீ போகாத” என்று தோழிகளுக்குத் தண்டனை வழங்க குச்சி ஒடிப்பதில் இருந்து என்னைத் தடுத்தார்கள். ராஜேஸ்வரியின் அம்மாவோ “நீ போம்மா” என்று என்னைத் தூண்டினார்கள்.

என் கண்களோ நூரின் வித்தையில் இருந்தது. பாதியில் விட்டுப் போகவோ மனமில்லை. இருந்தாலும் குச்சி கொண்டு வந்து கொடுத்துவிட்டால் தொந்தரவு இன்றி வித்தை பார்க்கலாம் என்று எண்ணி, பள்ளியில் வந்து இன்னமும் மாற்றாத நீல-வெள்ளைச் சீருடையுடன், மடித்துக் கட்டப்பட்ட இரட்டை சடைகளில் ஒன்று வால் போன்று அவிழ்ந்து தொங்க மாடியை நோக்கி ஓடினேன். எங்கள் வீட்டின் முன்புறம் இரு பெரிய வேப்ப மரங்கள் வளர்ந்து, வளைந்து மொட்டைமாடியில் தலைக்கு மேல் பந்தல் போட்டிருக்கும். அதனால் சிறுவயதினரும் சுலபமாக அதை எட்ட முடியும்.

நானும் மொட்டைமாடியின் அறைக்கதவைத் திறந்து சென்று ஒரு குச்சியும் ஒடித்துக் கொண்டு வந்துவிட்டேன். ஆனால் மொட்டைமாடிக்கதவை திறப்பதற்கு என்றும் அம்மாவின் சிறப்பு அனுமதி தேவை. அது நவ்டால், திண்டுக்கல் என்று எந்த ஒரு பூட்டும் போடமுடியாத, சாதாரணக் குமிழ்க் கைப்பிடி வைத்த தாழ்ப்பாள் உள்ள கதவு. வீட்டில் சிறுபிள்ளைகள் இருப்பதால் அம்மாவிடம் அனுமதி கிடைத்தால் மட்டுமே, அவர்கள் மேற்பார்வையிலோ அல்லது அம்மாவின் நம்பிக்கைக்குரிய ஆள் என அங்கீகாரம் பெற்றவர் முன்னிலையிலோதான் அந்த சொர்க்க வாசல் திறக்கப்படும். ஏதோ ஒரு தர்ம நியாத்திற்குக் கட்டுப்பட்டு நாங்களும் அந்த வயதில் அதைக் கடைப்பிடித்தோம்.

நான் அவசரமாக திரும்பி வருவதற்குள் வித்தையை முடித்துவிட்டு நூர் தன் அம்மாவிற்கு உதவியாக மாவாட்டப் போய்விட்டிருந்தாள். மற்றவர்களும் வேறு ஏதோ விளையாட ஆரம்பித்துவிட, நான் ஒடித்து வந்த குச்சியை ராஜேஸ்வரியின் அம்மாவிடம் சேர்த்துவிட்டு விளையாட்டில் கலந்துகொண்டேன். அம்மாக்களும் உரையாடல்களைத் தொடர்ந்தார்கள். அப்பொழுது திடீரென வார்த்தைகள் குழறிய வண்ணம் பயத்தில் ஒரு கூக்குரல் கேட்டது. வீட்டின் பக்கத்தில் உள்ள தெரு தாண்டி அடுத்த வரிசையில் வசிக்கும் லதாவின் அம்மா வானத்தை நோக்கி கையை விரித்து ஆதிமூலமே எனக் கூப்பாடு போடுவது போல, “ஐயோ புள்ள புள்ள” என்று ஏதோ சொல்ல முயற்சித்தார்கள், ஆனால் பாவம் திகிலில் வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. எல்லோரும் அவர் காட்டிய திசையில் நோக்கினால் …அங்கே என் தம்பி மாடியில். மொட்டைமாடியின் பின்புற மற்றும் பக்கவாட்டு கைப்பிடி மதில்சுவர்கள் இணையும் இடத்தில் உள்ள சமையலறைப் *புகைபோக்கியின் மேல் ஏறி நின்று கொண்டிருந்தான்.

பாவி..எனக்குத் தெரியாமல் என்னைப் பின் தொடர்ந்து வந்து, எப்படியோ சுவரின் வலையத்தில் வானொலிக்காக நட்டு வைக்கப்பட்ட ஏரியல் கம்பில் ஏறி, கையகல மதிலிலும் நடந்து, புகைபோக்கியிலும் ஏறி, இமயத்தின் மேல் வெற்றி வாகை சூடி நின்ற கரிகாலன் போல் நின்று கொண்டிருந்தான். அவசரம் போலும், ஏனோ கையில் புலிக்கொடியை மட்டும் எடுத்துச் செல்ல மறந்துவிட்டிருந்தான். அவன் அங்கு நின்றுகொண்டு விமானத்தில் இருந்தவாறு வெள்ள சேதத்தைப் பார்வையிடும் அமைச்சர் போல வீட்டின் சுற்றுப்புறத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். எல்லோருக்கும் அதிர்ச்சி. அடுத்து என்ன நடக்குமோ, அவன் இன்னமும் நகர்ந்து கீழே விழுந்துவிடுவானோ என அச்சம். இரண்டு பெண்கள் நமக்குப் போதும் என்று அப்பா சொல்ல சொல்லக் கேட்காமல், அம்மா ஆசை ஆசையாக வேண்டும் என்று மூன்றாவதாகப் பெற்றெடுத்த மகன் அவன். அன்று அவன் அவ்வாறு ஒரு ‘உயர்ந்த’ இடத்தில் இருப்பதைப் பார்த்தும் அம்மாவிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் இருந்திருக்க வேண்டும்.

அம்மா உடனே சமயோசிதமாக, “அவனோட யாரும் பேசாதீங்க, நகரப் பார்த்தான்னா நில்லுன்னு கத்துங்க” என எங்களிடம் சொல்லிவிட்டு, அவன் கவனத்தைக் கவராமல் இருப்பதற்காக வீட்டின் பின் வாசலைத் தவிர்த்து, வீட்டின் பக்கவாட்டில் உள்ள சந்து வழியாக ஓடி, முன்புற வாசல் வழியாக மொட்டைமாடிக்கு பி. டி. உஷா போல ஓடினார்கள். ராஜேஸ்வரியின் அம்மா சுலபமாக மதில் ஏறிக் குதிப்பவர். எங்கள் வீட்டிற்கு அவர்கள் வழக்கமாக அப்படித்தான் வருவார்கள். அவரும் மதிலை லாவகமாத் தாண்டிக்குதித்து உஷாவைத் தொடர்ந்து ஓடும் ஷைனி ஆப்ரஹாம் போல அம்மாவைத் தொடர்ந்தார்கள். இதற்குள் லதாவின் அம்மா, குடத்தில் தண்ணீருடன் சென்ற பெண்கள், பூக்காரி, சைக்கிளில் கோலமாவு விற்றவர், கடைக்குப் போகிறவர்கள், சோன்பப்டி வண்டிக்காரர், வீடு திரும்பும் மாணவர்கள் போன்ற பார்வையாளர்கள் என சிறு கூட்டமே பக்கத்துக்கு தெருவில் நின்று அண்ணாந்து தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மொட்டைமாடியை அடைந்த அம்மா சத்தமில்லாமல் பையப் பைய அடியெடுத்து வைத்து தம்பியை பின்புறமாக நெருங்கினார்கள். முதுகுப் பக்கம் எக்ஸ் போல உள்ள சஸ்பெண்டார் வைத்த கால்சட்டை மட்டுமே தம்பி அணிந்திருந்தான். தம்பியின் கால்சட்டையின் முதுகு வாரை அம்மா கபால் எனப் பிடித்ததுத் தூக்கியதும், அவன் பயத்தில் அந்தரத்தில் நீந்துவது போல் கை கால்களை உதைத்துக் கொண்டு வீரிட்டு அழ ஆரம்பித்தான். அதுவரை மூச்சைப் பிடித்துக் கொண்டு அசையாமல் இருந்த அனைவரும், “நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம்” எனத் தம்பி பாடியது போல் உடனே அசைய ஆரம்பித்தோம். தெருவில் போனவர்கள் பிள்ளை பெற்றும் வளர்க்கத் தெரியாத அம்மாவின் துப்புக் கெட்டத்தனத்தை விமரிசித்த வண்ணம் அம்மாவின் மேல் வசை பாடியவாறு கலைந்து சென்றார்கள். சிறுவர் சிறுமியர் நாங்களும் வீட்டின் குறுக்கே புழுதி நிறைந்த கால்களுடன் தட தடவென ஓடி மாடியை அடைந்தோம்.

தம்பி எப்படி மாடிக்கு வந்தான்? யார் மொட்டைமாடிக் கதவைத் திறந்தது? என்று அம்மாவின் மூளை துப்புத் துலக்க ஆரம்பித்தது. அடுத்த வீட்டுப் பிள்ளைகளைத் தண்டிக்க ஒடித்த வேப்பங்குச்சியில் இருந்து உருவிப் போட்ட வேப்பிலைகள் தரையில் சிதறிக் கிடக்க, என்னை சுற்றிலும் என் குற்றத்திற்கான தடயங்களுடன் நான் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன்.

என் நிலைமையைப் புரிந்து கொண்ட ராஜேஸ்வரியின் அம்மா தவறு தன்மேல் என்று அப்ரூவராக மாறி என்னை அடிக்கக்கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். அம்மாவும் மரியாதையின் பொருட்டு சரி …சரி என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர் “அடுத்தவங்கள அடிக்க குச்சி ஒடிக்கிறையா நீ” என்று கூறி அதே வேப்பமரத்தில் இருந்து குச்சியை ஒடித்து எனக்கு அம்மா பூசை நடத்தினார்கள். சாமியாடிக்குதான் வழக்கமாக வேப்பிலை அடிப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அன்று முதன் முறையாக சாமியாடியே வேப்பிலை அடித்தார்.

1 thought on “அம்மனோ சாமியோ!!!

  1. ஹா..ஹா…ஹா…. என் சிறு வயதில் அம்மாவிடம் வாங்கிய அடிகளையும் ஞாபக படுத்தியது…. ஒரு எளிய சம்பவத்தை கோர்வையாகவும் நகைச்சுவையாகவும் அழகாக சொன்ன கதாசிரியருக்கு பாராட்டுகளும் … வாழ்த்துக்களும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *