கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,169 
 

நயாகரா நீர்வீழ்ச்சி இடைவிடாமல் பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் வெகு நேரமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சியின் அருகே வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்தனர்.

“”அதோ பார் அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக வந்துள்ளது,” என்றது ஒரு தேவதை.

“”ஆமாம்… ஆமாம்… அனீலஸ் பறவை, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும். அது நீராடுகிற காட்சியைக் காண்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு வகையில் நாம் இருவருமே யோகம் செய்தவர்களாக இருக்கிறோம்…” என்றது மற்றொரு தேவதை.

அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் நின்று கொண்டிருப்பதை கவனித்தபடியே, பாய்ந்தோடும் நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது.

அதே நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத் தரையை நோக்கிப் பாயத் தொடங்கியது. வேகமாக இழுப்பு விசையோடு பாய்ந்த நீர், அனீலஸ் பறவையையும் தள்ளிக்கொண்டு சென்றது.
இதை எதிர்பாராத அனீலஸ் பறவை, தடுமாறியபடி பாய்ந்தோடும் நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் திடுக்கிட்டனர்.
அதில் ஒரு தேவதை, “”அதோ… அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்!” என்றது.

உடனே மற்றொரு தேவதை, “”வேண்டாம்… அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும்,” என்றது.
அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, “”உன்னை விடவும் நான் குறைந்தவளில்லை. அனீலஸ்ஸை காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது. எனவே, இந்த விஷயத்தில் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்!” என்று கூறியது.
உடனே மற்றொரு தேவதை, “”ம்கூம்… எனக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை உனக்கு எப்படிக் கொடுப்பது? எனக்குக் கிடைத்த வாய்ப்பை நானே பயன்படுத்திக் கொள்கிறேன். நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக் கொடுக்க மாட்டேன்!” என்று பிடிவாதமாகக் கூறியது.

அந்த நேரத்தில், “கீச்… கீச்…’ என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தன. அங்கே தேவதைகளின் அருகே, அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது.

“”தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை எப்போதோ இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து போராடியதால் தான் இப்போது உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்!” என்றது.

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தால் தலை குனிந்தனர்.

“நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே!’ என்று வருத்தப்பட்டனர்.

“”தேவதைகளே! ஏன் கவலைப்படுகிறீர்கள்? இனிமேலாவது உங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்… மனிதர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, நீங்கள் இப்படி அலட்சியமாக இருந்தால், மிகுந்த ஆபத்தாகிவிடும்!” என்று அறிவுரை கூறியது அனீஸ் பறவை. இரு தேவதைகளும் வெட்கத்தில் தலை குனிந்தனர்.

– ஆகஸ்ட் 13,2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *