கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,811 
 
 

(1961 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பால்ய வயதிலேயே திருக்கொட்டியாபுரப்பற்று மூதூரைச் சேர்ந்த சத்தியநாதன் இப்படியாகச் சிந்திக்க வில்லைதான்.

பாடசாலை மாணவனாக இருந்த அந்த நாட்களில், பல்லைக் கிட்டவைக்கும் மார்கழி வாடைக் கடுவலில் அர்த்த இராத்திரியில் பிறக்கப் போகும் புது வருடத்தை எதிர்பார்த்தபடி சத்தியநாதன் விழித்துக்கொண்டேயிருந் திருக்கிறார். கோயிற் பலிபீடத்தின் இடதுபக்க மூலையில் யேசுபாலன் பிறப்பைச் சித்தரிக்கும் மாட்டுந் தொழுவத் தின் முன்னால், வரவிருக்கும் புத்தாண்டில் தங்களுக்குச் சகல சௌபாக்கியங்களையும் அனுக்கிரகிக்கும்படி பிரார்த்தித்து, வருடப் பிறப்பிற்காகக் காத்து கொண்டு இருக்கும் விசுவாசிகளின் கூட்டத்தோடு சத்திய நாதனும் முழந்தாட் படியிட்டு விழித்துக்கொண்டே இருந்திருக் கிறார். அப்போதெல்லாம் அவருக்கு புதுவருட. புத்தாடை யைப் பற்றிய எண்ணங்களே மனதில் நிறைந்திருக்கும். அவைகட்கும் மேலாற் கோயிற்சுவர் மணிக்கூடு தன் இரு சரங்களையும் கூப்பி, பன்னிரண்டாம் மணியின் முதல் நாதத்தை எழுப்புகையில் கோயிற் கோபுரத்தின் உசசியில் கட்டப்பட்டிருக்கும் மணிக்கயிற்றைப் பிடித்து அடித்து புதுவருடம் பிறந்தமையை ஊரறியச் செய்வதில் தான அவர் நாட்டமெல்லாம் முழுமையாக இருக்கும். அந்த ஒன்றிற்கா கவேதான் சத்தியநாதன் சில்லென்றுதும் வாடைக் கடுவலில் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டேயிருப்பார்!

பூமி நடுக்கம் ஏற்பட்ட ஆண்டிலே அதாவது சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே கோயிற் சுவர் மணிக் கூடு தன் இரு கரங்களையும் கூப்பிப் பன்னிரண்டாம் மணியின் முதல் நாதத்தை எழுப்பியபோது, மணிக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு இருந்த அதிர்ஷ்டசாலி சத்தியநாதனேதான்! கோயில் முகப்பு வெண்கலமணியில் இருந்து சு நாதத்தை எழுப்பிப் புது வருடம் பிறந்து விட்டதை ஊர் முழுமைக்கும் அறிவித்த பெருமை அந்த ஆண்டு அவருக்குத்தான் சித்தித்தது.

சத்தியநாதன் மணிக்கயிற்றை இழுத்து மணியில் இருந்து சுநாதத்தை எழுப்பிக்கொண்டு இருக்கையில், ஊர் வாலிபர்கள் தாங்கள் கட்டிவந்த எறிவெடிகளைக் கோயிற்புற மதிலில் எறிந்து முழக்கினார்கள். சப்த ஸ்வரங்களில் பேதமின்றி ஒரே குரலில் நாதத்தை எழுப்பிக் கொண்டு இருந்தான் பறையன். தோளிற் தொங்கிய மத்தளத்தை மற்றப் பறையர்கள் அடித்து முழக்கினார்கள். வேட்டுச் சப்தங்களுக்கும், ஊதுகுழல் நாதத்திற்கும்.

முழவொலிக்கும் மேலாகக் கோயில் மணியின் சுநாதம் ஊரை நிறைத்து நிற்கிறது! ஒன்பது வயதுப் பையனான சத்திய நாதன், மணிக் கயிற்றை இழுத்து இழுத்து நாதத்தை எழுப்பிக் கொண்டே இருந்தார். தன் கைகள் அலுத்துப் போனாலும், பட்டாஸ் வெடிகளின முழக்க மும் ஊதுகுழல் நாதமும், மத்தளங்களின் ஓசையும் ஓய்ந்து ஒடுங்கும் வரை சத்திய நாதன் மணியை அடித்துக் கொண்டே இருந்தார்.

அந்த வருடத்திற்குப் பின்னால், சத்திய நாதனுக்கு மணியடிக்கும் பாக்கியம் என்றைக்குமே சித்திக்கவில்லை.

அந்த ஆண்டு எல்லா ஓசைகளும் ஒடுங்கி – கோயிலைச் சூழ இருந்த விசுவாசிகளின் வீட்டிற்கேட்ட சீன வெடிச் சப்தங்களும் ஓய்ந்த பின்னர் கோயிலின் உள்ளே யேசுபாலலின் மாட்டுக் கொட்டிலுக்கு முன்னால் மௌனமாகப் பிரார்த்தித்துக் கொண்டு இருந்த விசு வாசிகளின் மத்தியிலிருந்து சத்தியநாதரின் மாமனார் ‘அந்தோனிக் கட்டையர்’ உரத்த குரலெடுத்து விருத்தம் பாடினார்.

மயிலிட்டிப் புலவர் பாடிய அந்தப் பிள்ளைக் கவியைச் சத்தியநாதன் தன்னுள்ளேயே பாடிக் கொள்கிறார்.

குவலயத்தவரன்பு கொண்டாட வண்டாடு
குளிர்மலர்ப் பொழில்களாட
கோலமயிலாட வயல் நீடுகுயிலாட நெற்
குலை கலக-லென்றாடிடக்
கவலையற்றிடுமாயர் களியாட இளவாழை
தளிரீடு தளிர்களாட
காராடு மொய்குழலில் நாராடவழகளைய
கழிநீடு தளிர்களாடக்
தவில் முரசமத்தும்பர் சபையாட நவகோடி
சனமாட விளமை கோணிலத்
தண்ணிழல் பரந்தாட் விண்மணியொடுங்கிரண
தாரகை தயங்கியாடத்
திவலையமுதைப் பருகு தெய்வீக பாலனே
செங்கீரை யாடியருளே
திருமருவு பரமகனி மரியுதவுபாலனே
செங்கீரை யாடியருளே

வெளியே வாடைக் கடுவல் சில்லென்று ஊதிக் கொண்டு இருக்கிறது. பிறக்கப் போகும் புதுவருடத்தை எதிர்பார்த்து அவர் குடும்பத்தினர் விழித்துக் கொண்டே இருககிறார்கள். அவருடைய மூத்த மகன், கோயில் மணிக்கயிற்றை எல்லோருக்கும் முன்னர் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஏகாக்கிரக சிந்தையோடு எப் போதோ கோயிலுக்குச் சென்று விட்டான். மூத்த மகள் தன் சகோதரர்களின் புத்தாடைகளுக்குப் பொத்தான் தைத்துக் கொண்டிருக்கிறாள். இளைய மகன் மணிச் கேட்டதும் வெடிகொளுத்துவதற்காக வெடித் தட்டும் நெருப்புப் பெ… டியுமாக வாயிலில் நிற்கிறான். அவர் மனைவி எண்ணைச் சட்டியை அடுப்பில் வைத்தபடி காத்துக் கொண்டே இருக்கிறாள்! ‘புது வருடம் பிறக்கும் போது எதையாவது எண்ணைச் சட்டியல் இட வேண்டும்’ என்று தலைமுறை, தலைமுறையாக அவள் கொண்டு இருக்கும் விசித்திரமான நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்கத் திராணியின்றிச் சத்திய நாதன் சாய்வு நாற்காலியில் அந்தப் பிள்ளைப்பாடலை முணுமுணுத் துக் கொள்கிறார்.

திவலையமுதைப் பருகு தெய்வீகபாலனே
செங்கீரை யாடியருளே
திருமருவு பரமகனி மரியுதவுபாலனே
செங்கீரை யாடியருளே

“வருஷம் பிறக்கப்போகிறது நீங்கள் கோயலுக்குப் போகவில்லையா?”

அடுக்களைக்குள்ளிருந்து வந்த அவர் மனைவியின் குரலில் வெறுப்பைச் சத்தியநாதன் உணர்ந்தார்.

“நமக்கு இது புது வருடப்பிறப்பா? அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தநாம், அன்னியர்கள் சென்ற பின்பும் அவர்கள் கற்பித்த பழக்க வழக்கங்களை மட்டும் இன்னமும் விடாப்பிடியாக பிடித்துகொண்டிருக்கிறோம். கோயிலுக்குப் போகத்தான் வேண்டும். ஆனால் இன்று நமக்கு வருடப்பிறப்பென்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது’ என்று சொல்லத்தான் விரும்பினார் சத்திய நாதர். ஆனாற் சொல்லவில்லை.

“பழக்கதோசத்தினாலும், அறியாமையினாலும், ஆராயாமைராலும், விருத்தசேதனம், ஞானமுழக்கு என்ற புனிதத்துவத்தை மறந்து புதுவருடப் பிறப்பு என்ற புதிய தத்துவத்தைக் கற்பித்து வாழும் சமுதாயத்தின் அங்கமான தன் மனைவியின் நம்பிக்கைக்கு மாறாக எதையும் சொல்லிக் குடும்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தத் திராணியற்றவராய் போகிறேன்” என்று மட்டும் சொல்லி வைத்தார்.

அடுக்களையிலிருந்து மனைவியின் குரல் அபஸ்வரமாக ஒலித்தது.

குறிப்புணர்ந்த சத்தியநாதன் சாய்கதிரையிலிருந்து எழுந்து மின்விளக்கைக் கையில் எடுத்துக் கொண்டு கோயிலை நோக்கி நடந்தார்.

அட்டமி கழித்த வளர் பிறைக் காலமாயிருந்தாலும் வானத்திற் சந்திரனைக் காணவில்லை. ஒரே மழை மூட்டம். வாடைக்கடுவல் முகத்தில் ஊசி குத்துவது போலக் குத்துகிறது. பெருமழை வருவதற்கான அறிகுறி கள் தென்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகப் பெய்த மழையில் ஊரே வெள்ளக்காடாய் குண்டு குழிகளில் எல்லாம் நீர் நிரம்பிக் கிடந்தது. மாரித்தவளைகளின் இரைச்சல் காதுகளைக் குடைந்தது.

சூடுதேடித் தார்ரோட்டில் படுத்துக்கிடந்த கட்டாக் காலிகட்கு வழி விலகி, சாணத்திற் காலைவைத்து விடாமற் பதன மாகக் கோயிலை நோக்கி நடந்தார் சத்தியநாதன் கோயில் வெளிவிறாந்தையிற் சனக்கூட்டம்! வருடப் பிறப்பைப் பாலனோடு கழிக்க வந்த விசுவாசிகள்! அவருடைய மூத்த மகன் மணிக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு தயாராக நிற்பதைக் கண்டபோது சத்திய நாதனுக்குச் சிரிப்பு வந்தது! அந்தக் கணநேர முறுவல் பறையனையும், அவன் கூட்டத்தினரையும் கண்டபோது ஆத்திரமாக வந்தது.

“ஊரில் வரும் சுபகாரியங்களில் எல்லாம் ஒலிபெருக்கி ‘டப்பா’ இசையைப் பொழிகின்றது. அதற்கும் மேலால் கிதார் மெலோடிக்கா என்று ஏதேதோ வாத்தியங்களை எல்லாம் முழக்கித் தமிழ் இசையைக் கொல்லும் இசைக் குழுக்கள் வேறு வந்துவட்டன. ஆனாற் புதுவருடப் பிறப்பென்று புனிதமாக-ஆனால் முட்டாள்த்தனமாக நம்பும் இன்றையத் தினத்திற்கு மட்டும் பறைமேளம். சாவீட்டிற்கு கொட்டப்படும் பிணப்பறை கொட்டப் படுகிறது. ஆனால் இத்தனை காலம் பிணப்பறை கொட்டப்படும் புதுவருடப் பிறப்பு என்று முட்டாள்த் தத்துவம் இன்னமும் சாகவில்லை” என்று மனத்துட் கறுவிக் கொண்டார் சத்தியநாதன்.

நிலத்தை நம்பிச் சுதந்திரமாக வாழும் தன் அயற் கிராமத்து மக்கள், பறையர் என்ற குலத்தியிற் பிறந்து விட்ட குற்றத்திற்காக, எவ்விதத் தேவையுமின்றி ஆங்கில வருடப் பிறப்பன்று காலையில் மேளத்தைத் தூக்கிக் கொண்டு வீடு வீடாக அடிப்பதும் ஒவ்வொரு வீட்டாரும் கொடுக்கும் ‘வருடப்படி’ என்ற பிச்சையைக் கூனிக் குறுகிக் கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டு வாங்குவதும் அப்படி வாங்குவதன் மூலம் தாங்கள் மற்றவர் களைவிடத் தாழ்ந்தவர்கள் என்று தாங்களாகவே கற்பித்துக் கொள்ளுவது…

இந்த அசட்டுத்தனத்தை யெல்லாம் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பத்து ஆண்டுகளுக்கே முன்னே தான் முயன்றதை நினைத்தார் சத்திய நாதன்.

அன்றையதினம் ஆங்கில வருடப் பிறப்பன்று கோயிலிலே பறை முழக்கியவர்கள் விடிந்ததும் ‘வரும்படி’ வாங்க ஊருக்குக் கிளம்பியபோது சத்திய நாதன் அவர் களிடம் சொன்னார்:

இந்த வருடம் பங்கு சபைத் தலைவர் வீட்டிற்கு முதலிற் போங்கள்”

சத்திய நாதன் சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.

வந்தது வினை!

“சபைத் தலைவரென்ன கொம்பா? அவர் வீட்டிற்கு என் முதலிற் போகவேண்டும்” என்று பலர் குமுறி னார்கள். ஊர் இரண்டுபட்டது.

பல வீடுகளில் அவர்கட்கு ‘வரும்படி’ கிடைக்க வில்லை .

அந்த ஆண்டோடு அந்த வழக்கமே இல்லாமற் போய் விடும் என்று சத்தியநாதன் நம்பினார்!

ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அடுத்த ஆண்டும் அவர்கள் வந்தார்கள். இப்போதும் வந்திருக்கிறார்கள்! விருத்தசேதனம்-ஞானமுழக்கு என்ற பனிதத்துவம் மறக்கப்பட்டு, ஆங்கிலப் புது வருடப் பிறப்பு – நமது வருடப் பிறப்பாகக் கற்பிக்கப்பட்டு என்னனென்னவெல்லாமோ நடக்கின்றது. சத்திய நா தனாற் பொறுக்கவே முடியவில்லை. கோயில் விறாந்தையில் நின்ற கூட்டத்தினரிடம், இன்றைக்கு நமது வருடப்பிறப்பா? ஆங்கிலேயனின் வருடப்பிறப்பை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?” என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

எவருமே பதில் தரவில்லை . “தமிழனுக்கு வருடப்பிறப்பு சித்திரையல்லவா?”

என்றார் மீண்டும்.

“ஆனாற் பழக்கமாகி விட்டதே, அதை விட்டுவிட முடியுமா” என்றார் முதியவர் ஒருவர்.

“அப்படிப் பழக்கமாகிவிட்டால், கிறீஸ்துநாதர் விருத்தசேதனஞ் செய்யப்பட்டுப் பெயர் சூட்டப்பட்ட இப்புனித தினத்தில் சாவீட்டிற் கொட்டப்படும் பறை மேளத்தை ஏன் அடிக்கவேண்டும்?” என்று ஆத்திரத் தோடு கேட்டார் சத்தியநாதன்.

கூட்டத்தில் எவருமே பதில் சொல்லவில்லை. பொறுமையிழந்த சத்திய நாதன்,

மெய்வருந்தி உழைத்துச் சுதந்திரமாகச் சீவிக்கும் நீங்கள், ஏன் இப்படி ‘மேளத்தைத் தூக்கிக்கொண்டு கொட்டி எல்லோருக்கும் கூழைக்கும்பிடு போடுகிறீர்கள்” என்றார் மேளக்கூட்டத்தினரிடம்.

“இது வழமையாச்சே ஐயா” என்று குழைந்தார்கள் அவர்கள்,

“வழக்கம், கண்டறியாத வழக்கம்” என்று உச்ச ஸ்தாயியிற் கத்தினார் சத்தியநாதன்.

சுவர் மணிக்கூடு தன் இருகரங்களையும் கூப்பிப் பன்னிரண்டாம் மணியின் முதல் நாதத்தை எழுப்பிற்று.. அந்த ஒலிப்பிலேயே கோயில் மணியை இழுத்து அடித்து புதுவருடம் பிறந்து விட்டமையை ஊருக்கெல்லாம் அறி வித்துக் கொண்டிருந்தான் சத்திய நாதனின் மூத்த மகன்.. குழலோசை இழைந்தது. பறைமேளம் ஒலித்தது. வெடிகள் முழங்கின. விசுவாசிகள் எல்லோரும் கோயிலுட் சென்று, யேசுபாலனின் மாட்டுத்தொழுவத்தின் முன்னால் முழந்தாட்படியிட்டு நின்று, தங்கட்குச் சகல சௌபாக்கி யங்களையும் அனுக்கிரகிக்கும்படி மௌனமாகப் பிரார்த் தித்துக் கொண்டார்கள்.

ஆத்திரங்கொண்ட சத்திய நாதன் கோயில் விறாந்தை யிலிருந்து வெளியேறி இருளிலே நடந்தார்!

திடீரென்று சோனாவாரியாகப் பெய்த மழை அவரை முழுக்காட்டிற்று!

ஆம்! அன்று சத்தியநாதனுக்கு மட்டும் யேசு நாதர் விருத்த சேதனஞ் செய்யப்பட்ட பின்னர் ”ஞானமுழுக்கு” என்ற அருட்கொடையாகத் திருச்சபை கற்பித்த-புனிதத் திருநாள். அப்புனித நாளிலே அவர் வீட்டில் பறைமேளம் பிணமேளம் அடிக்கப்படவே மாட்டாது.

– வீரகேசரி 1961

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *