ஒன்றிற்குப் பின் இரண்டு, பின்னர் மற்றொன்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 11, 2024
பார்வையிட்டோர்: 326 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

எல்லோருடைய இரண்டாவது காதலும், முதல் காதலைப் பற்றியப் பகிர்தலில் தான் ஆரம்பிக்கின்றது. என்னுடைய இந்த இத்தாலியக் காதல் எத்தனையாவது என்பது முக்கியமல்ல. எத்தனையாவது முறை என்றாலும், தங்களது முதல் காதலைப் பற்றியே சுவாரசியமாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள். தனது முன்னாள் காதலியை எதிர்மறைப் பிம்பமாக மாற்றாமல் அவளுக்கு ஒரு தேவதை உருவைக் கொடுத்து, தற்பொழுதைய தோழியிடம் பகிர்வதில்தான், நட்பு காதலாக முன்னெடுப்பதை முடிவு செய்கிறது. பிடித்தமான பெண் நட்புகளிடம் முந்தையக் காதல் பகிரப்படும்பொழுது, கிடைக்கும் அனுதாபம் காதல் உருமாற்றத்திற்கு வலு சேர்க்கும். “நீ எத்தனை வருடங்கள் உன் அம்முவைக் காதலித்தாய்?”

“மூன்றரை வருடங்கள்?, ஆனால் இப்பொழுதும் அவளைப் பற்றி அடிக்கடி யோசிப்பேன்” நிஜத்தில் ஒன்றரை வருடம் தான். பிரிவின் தொடர் தாக்கங்களின் வலிகளையும் கணக்கில் கொண்டதால் மேலும் இரண்டு ஆண்டுகள்,

“உன்னைப் போன்ற நல்லவனைப் பிரிய அவளுக்கு எப்படி மனம் வந்தது?” அடடா, இதே வசனத்தை இடையில் ஸ்வீடனில் இருந்தபொழுது சிலத் தெலுங்குப் பெண்களிடமும் கேட்டிருக்கின்றேனே !!! அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் என்ற வகையில் சுந்தரத் தெலுங்குத் தோழிகளும் வலி தராமல் சென்றுவிட்டனர்.

“நான் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை, குடிப்பேன், பெண்களை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பார்ப்பேன், வாய்ப்பு இருந்தால் வலை விரிப்பேன்”

“எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை, ஏனைய இந்தியர்களைக் காட்டிலும் நீ கண்ணியமாகவே நடந்து கொள்கின்றாய்,”

தன்னிடம் இல்லாத எதிர் விழுமியங்களை, இருப்பதாகக் காட்டிக்கொண்டு, தாழ்த்திக் கொள்ளும் நட்பரசியல் இவளிடமும் வேலை செய்தது. எதிர் இருக்கையில் இருந்து மாறி, என்னருகே வந்து உட்கார்ந்தாள்.

“பொதுவாக தென்னிந்தியாவில் இருந்து வருபவர்கள், குறிப்பாக தமிழ் பேசுபவர்கள் பெண்களை மதிப்பவர்கள், அனுமதி கிடைக்கும் வரை அமைதியாகவே இருப்பார்கள்”

“அம்முவைப் பற்றி மேலும் கொஞ்சம் சொல்லு, உன்னை விலக்கி வைத்தவளைப் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும்” எனக் கதை கேட்க ஆரம்பித்தாள்.

இதைத் தானடா எதிர்பார்த்தாய் என, அலுவலகத்தில் அம்முவைச் சந்தித்தது, அவள் என்னைப் பொறுக்கி என்றது, தொடர் மன்னிப்பு, மாயாஜால் திரைப்படங்கள், பெற்றோர்களிடம் மாட்டிக்கொண்டது, சூழ்நிலைக் கைதியாதல், அவளின் திருமணம் என முழுநீள் விக்ரமன் திரைப்படம் போல சிலப்பல லாலாலா க்களுடன் கதையை முடித்தேன். பின்னணியில் இளையரஜாவின் இசை சூழலுக்கு மேலும் இனிமைச் சேர்த்தது.

“ஒன்று தெரியுமா, அவளின் மேல் என் சுண்டு விரல் கூடப் பட்டது கிடையாது?”

“என்ன?” வியப்பாக கண்களை அகட்டிக் கேட்டாள்.

“இரண்டு காரணங்கள், உடல் சாரா காதல் தான் உயர்ந்தது என்று அன்றிருந்த ஒரு தவறான அபிப்ராயம், இரண்டாவது வாய்ப்புக் கிடைக்காமை”

“இங்கே எல்லாம் காதல், காமத்தில் ஆரம்பித்து, கலவியில் கண்டிப்பாக பரிசோதனை செய்யப்படும், காமமும் கலவியும் காதலில் மிகமிக முக்கியமானது” என்றபடி தோளில் சாய்ந்தாள்.

“ஆமாம் கார்த்தி, இன்னும் நீ பிரம்மசரியத்தைத் தான் கடைப்பிடிக்கிறாயா …”

“இல்லை இல்லை, ஸ்வீடனில் இருந்த பொழுது இடையில் சில பரிட்சார்த்த முயற்சிகள் நடந்திருக்கின்றன”

மனம் விட்டு சிரித்தபடி என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

“கொக்கு ஒன்னு கொக்கிப்போடுது ஹோய்….” என கங்கை அமரன் பாட, காதல் முழுமையடைவது காமத்திலும் கலவியிலுந்தான் என்பதை உணர்ந்தபடி அன்றிரவு நீடித்த இரவாக மாறிப்போனது.

அடுத்த இரண்டு வருடங்கள் இணைந்து வாழ்வது, பின்னர் தோதுப்பட்டால் திருமணம் செய்து கொள்ளாலாம் எனவும் முடிவு செய்தோம்.

அந்த வருட, புதுவருடக் கொண்டாட்டத்திற்காக, அருகில் இருக்கும் மிகப்பிரபலமான உணவரங்கத்திற்கு சென்றபொழுது, எனது இத்தாலியக் காதலி திடிரென வருத்தமானாள். தொடர் வற்புறுத்தல்களுக்குப்பின்னர் தூரத்தில் இருக்கும் மேசையைக் காட்டினாள். அங்கே மொட்டைத்தலையுடன் ஒரு இத்தாலிய இளைஞன், அழகான இத்தாலியப் பெண்ணுடன் அமர்ந்திருந்தான். அவன் எனதுக் காதலியின் முன்னாள் காதலன் எனப் பார்த்தவுடன் புரிந்து கொண்டேன்,

“கடந்த காலங்களைத் திரைப்படங்கள் போலப் பார்க்க பழகிக் கொள்ளவேண்டும், நாம் வேண்டுமானால் வேறு இடத்திற்குப் போகலாமா”

“வேண்டாம் கார்த்தி, நான் அன்று அவனைப் பற்றி நினைத்தது எல்லாம் உண்மை, அவன் உண்மையிலேயே பொம்பளைப் பொறுக்கிதான், அப்பொழுது எல்லாம் என்னை எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கின்றான் தெரியுமா, எதற்கு எடுத்தாலும் சந்தேகம், படுப்பதற்கு மட்டும் தேவையான ஒரு பொருளாக என்னைப் பயன்படுத்திக் கொண்டான்” என அவளின் முன்னாள் காதலனை, சிலப்பல கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துத் திட்டிக்கொண்டிருந்தாள். சிலத் திட்டுகளில் உண்மையிருந்த போதிலும், பெரும்பான்மையான திட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவையாகவேத் தோன்றின. அவளைச் சமாதனப்படுத்தி இரவு உணவை முடித்தோம்.

முன்னாள் காதலன் இவள் இருப்பதைக் கவனித்துவிட்டு, தன்னுடையப் பெண்ணுடன் எங்களின் மேசைக்கு வந்து எங்கள் இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னான். அவன் கண்களில் என்னுடைய காதலி இன்னமும் தேவதையாகவே இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது., ஆண்கள் தங்களுடைய அனைத்துக் காதலிகளையும் எல்லாக் காலக் காட்டத்திலும் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள்., முன்னாள் காதலி என்ற சொற்பதம் என்பதே ஆண்களுக்கு கிடையாது, ஆனால் பெண்களுக்கு தங்களது முன்னாள் காதலன் எப்பொழுதும் வில்லன் தான், என்பதை எனது பேஸ்புக் நிலைத்தகவலாக தமிழில் வைக்கவேண்டும் என முடிவு செய்துகொண்டேன்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *