சிறகொடிந்த சுதந்திரப் பறவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 505 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மேலதிகாரியுடன் சுங்கவரி இலாகா அலுவலகத்திற்குள் நுழைந்த குமரன், “சார்! இவர் தான் என்னிடம் இருபதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். பணத்தை தன்னுடைய மதிய உணவு பாத்திரத்தில் வைத்திருக்கிறார். ரூபாய் தாளிலுள்ள எண்கள் இதுதான்” என்று காகிதத்தில் குறித்து வைத்திருந்ததை நீட்டினான்.

“என்ன மணாளன், ஏன் இப்படி கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்கிறீர்கள்? சாப்பாட்டுப் பாத்திரத்தை எடுங்கள்” என்றார் சி.பி.ஐ. அதிகாரி பாபு.

மணாளன் கொஞ்சம் யோசித்து விட்டு அருகிலிருந்த பெண் குமாஸ்தா சாந்தியின் டிபன் பாக்ஸை எடுத்து நீட்டி, “திறந்து பாருங்கள் சார். சும்மா யாரோ வந்து கொடுத்த புகாருக்கெல்லாம் என் மேல் சந்தேகப்பட்டு விட்டீர்களே?” என்று சீறினார் மணாளன்.

அருகில் நடப்பதை கவனிக்காத சாந்தி, “அது என் பாத்திரம் சார்” என்று சொல்ல, குமரன் “சார் உங்கள் டிபன் பாக்ஸ் உங்கள் மேஜை டிராயரில் இருக்கிறது. அதைக் கொஞ்சம் பாபு சாருக்கு காட்டுகிறீர்களா?” என்று கேட்டான் நக்கலாக.

ஒரு நிமிடம் திகைத்துப் போன மணாளன் “சார் அது.. வந்து… நான் இன்றைக்கு சாப்பாடே எடுத்துக் கொண்டு வரவில்லை. வெளியே தான் போய் சாப்பிட்டு விட்டு வந்தேன்” என்றார்.

“சும்மா கதையெல்லாம் விட வேண்டாம். நீங்களாக டிபன் பாக்ஸை காட்டுகிறீர்களா? இல்லை நானாக திறந்து எடுத்துக்கொள்ளட்டுமா?” என்று மேஜையில் ஓங்கித் தட்டினார் மேலதிகாரி.

அலுவலகத்தினர் எல்லோரும் கூடி விட, “எல்லோருக்கும் போய் அவரவர் இடத்தில் உட்கார்ந்து உங்கள் வேலையைப் பாருங்கள். இங்கே யாரும் கூட்டம் போட வேண்டாம்” என்றார் பாபு. தன்னுடைய மேஜையைத் திறந்த மணாளன் பாத்திரத்தை எடுத்துத் திறக்க உள்ளே ரூபாய் இருபதாயிரம் தலையை வெளியே நீட்டியது.

பணத்தை எடுத்து குமரன் கொடுத்த வரிசை எண்களை சரிபார்த்துக் கொண்ட பாபு, “என்னய்யா பதில் சொல்றீங்க? இப்படி அரசு பணத்தை சம்பளமாக வாங்கிக் கொண்டு அப்பாவி மக்கள் பணத்தை லஞ்சமாக வாங்குகிறீர்களே. உங்களுக்கு வெட்கமாக இல்லை” என்று கத்தினார்.

மணாளனின் மேலதிகாரி வந்து, “சார்! ஒரு நிமிடம் தனியாகப் பேச முடியுமா?” என்று கேட்க, “ஏன் தனியாக? என்ன வேண்டுமானாலும் இங்கே பேசுங்கள். மணாளன் வாருங்கள். உங்களை கமிஷனரிடம் சொல்லி டிஸ்மிஸ் ஆர்டர் வாங்கித் தருகிறேன்” என்று கர்ஜித்தார்.

முழுக்க ஆடிப் போன மணாளன், “சார் கொஞ்சம் அடக்கி வாசிங்க. என்னுடைய மச்சான் தான் உங்கள் டிபார்ட்மென்ட் மந்திரி” என்று பல்லைக் கடித்தார்.

“மந்திரி யாராக இருந்தால் என்னய்யா, மந்திரிக்கு மச்சான்னா கொலை கூட செய்யலாமோ. செய்தது தப்பு தானே. வாருங்க கமிஷனரிடம் பேசிக்கொள்வோம். வாருங்கள் குமரன். நீங்கள் தான் திடமான சாட்சி இருக்கிறீர்களே. தைரியமாக நடந்ததெல்லாம் கமிஷ்னர்கிட்டே சொல்லுவீங்க இல்லை?”

“ஆமாம் சார்! இல்லையென்றால் உங்களிடம் வந்து புகார் கொடுத்திருப்பேனா?”

“அதுவும் சரி தான்” என்று மணாளனை அழைத்துக் கொண்டு குமரனோடு கமிஷனர் அறைக்குள் துழைந்தார்.

கமிஷனர் “என்ன பாபு! எங்க ஆபிஸிற்கு வந்திருக்கிறீர்கள் என்றால் ஏதோ பிரச்சினை என்று தான் அர்த்தம். என்ன மணாளன். என்ன சொல்லுங்க. இது யாரு…” என்று திகைக்க குமரன் எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னான்.

“இப்படி உங்கள் அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுது. நான் சி.பி.ஐ ஆபிஸிலிருந்து வரவேண்டியதிருக்கிறது. மணாளன் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக நடத்துகிட்டீங்க?”.

“என்னிடமிருந்து கமிஷன் வாங்குவது மட்டும் நல்ல செயலாக்கும்” முனங்கினார் மணாளன்.

“சரி தம்பி கொஞ்சம் வெளியே உட்காரு. நாங்கள் பேசிவிட்டு உன்னைக் கூப்பிடுகிறோம்” என்றார் கமிஷனர்.

குமரன் பாபுவைத் திரும்பிட் பார்க்க, அவர் “ஏன் சார் வெளியே போகணும். எல்லா விசாரணைகளும் அவர் முன்னாலே தான் நடக்க வேண்டும். நீங்கள் உட்காருங்க குமரன்”.

“பாபு! இது டிபார்ட்மென் சம்பந்தப்பட்ட விஷயம். அவரை கொஞ்ச நேரம் வெளியே அமர சொல்லுங்கள். விசாரணையின் போது கண்டிப்பாக அவரையும் கூப்பிடலாம்” என்றார் கமிஷனர்.

“என்ன சொல்றீங்க குமரன்?”

“சார்! வெளியே உட்கார்ந்திருக்கிறேன். என்னை நீங்க எப்போது கூப்பிடுகிறீர்களோ அப்போது வருகிறேன்” என்று எழுந்தார் குமரன்.

குமரன் வெளியேறியதும், “என்ன சார் இப்படி முன்னே பின்னே சொல்லாமல் எங்கள் அலுவலகத்திற்கு வந்து மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கமிஷனர்.

“பின்னே என்ன சார், முன்னாலே ஒழுங்காக கூப்பிட்டு எவ்வளவு வாங்குகிறீர்களோ அதற்கு பங்கு அனுப்பித் தந்து கிட்டிருந்தீங்க. இப்போ எதுவும் தர்றதில்லே” என்றார் பாபு சிரித்தபடி.

“இப்போது தான் எனக்கு மூச்சே வந்தது. வேணுமின்னா மொத்த பணத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் சார்” என்றார் பெருமூச்சு விட்டு நிம்மதியான மணாளன்.

“அதெப்படி? மீதிப்பணம்? என்ன கமிஷனர் சார். இந்த கேஸை மூடி மறைக்கணும்னா எவ்வளவு வரும்” பாபு கேட்டார்.

“நீங்கள் கூட்டிட்டு வந்த குமரன் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கிறான் சார்”.

“அதைப் பற்றி ஏன் கவலைப் படுகிறர்கள்? எவ்வளவு தரமுடியும்?”

கமிஷனர் “என்ன மணாளன், எவ்வளவு கலெக்ஷன் இன்றைக்கு?” என்று கேட்டார்.

“சார்! டிபார்ட்மென்ட் முழுக்கச் சேர்த்தால் இரண்டு லகரம் சேரும் சார்” மணாளன் நக்கலாகச் சொன்னார்.

“இந்த நக்கல் தானே வேண்டாம் கமிஷனர் சார். ஐந்து லட்சம் கொடுத்து விடுங்கள். மணவாளன், என்ன கார் வைத்திருக்கிறீர்கள்?”

“டொயட்டா குவாலிஸ்”

“அதையும் என் பெயரில் மாற்றி விடுங்கள்”

“சார் கொஞ்சம் அதிகம்”

“இந்தக் கேஸை அமுக்குவது அவ்வளவு சாதாரண விஷயமில்லை”

“சரி சார், குமரனை என்ன செய்யப் போகிறீர்கள்?”

“என் காரோடு கொளுத்தப் போகிறேன்”

“என்ன சொல்கிறீர்கள்” அதிர்ச்சியோடு கேட்டார் கமிஷனர்.

“ஆமாம் சார். நம்ம டிரைவர் கொஞ்சம் பிளாக்மெயில் பண்ண ஆரம்பித்திருக்கிறான். இனி அவனை விட்டு வைத்தால் தப்பு என்று எண்ணி இன்று சாயங்காலம் ஆறு மணிக்கு டைம்பாம் வைத்திருக்கிறேன். மணி ஐந்தரை ஆகி விட்டது. குமரேசனை என்ன செய்யப் போகிறேன் என்கிறீர்களே, வாருங்கள் காட்டுகிறேன்” என்று எழுந்தார் பாபு.

கமிஷனரும் மணவாளனும் பின் தொடர வெளியே வந்த பாபு, “குமரேசன் வாங்க. இவர்களை சி.பி.ஐ. ஆபிஸிலே தான் விசாரிக்கணும்” என்று அவனையும் அழைத்துக்கொண்டு கீழே இறங்கினார்.

காருக்கு வந்ததும் “டிரைவர்! நீங்களும் குமரேசனும் நேராக நம் ஆபீஸிற்கு வாருங்கள். நான் இன்னொரு காரில் இவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன்” என்று சொல்ல, ‘நன்றி சார்’ என்றவாறு குமரேசன் காரில் ஏறிக் கொள்ள, பாபு கடிகாரத்தைப் பார்த்தார். கொஞ்ச நேரத்தில் தூரத்தில் டமால் என்று வெடிக்கும் சத்தம் கேட்டது.

– ஆகஸ்ட் 2004, தமிழ் போஸ்ட்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *