அப்பா பொண்ணு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 22, 2023
பார்வையிட்டோர்: 2,312 
 
 

“அங்கிள் .. அர்ச்சனா வீட்டில இல்லையா ?!” அன்றைய செய்தித்தாளில் மூழ்கி இருந்த அர்ச்சனாவின் அப்பா காளமேகம் நிமிர்ந்து பார்த்தார். “இருக்கிறாள். உள்ளே வாம்மா…” என்று சொல்லி விட்டு, வீட்டின் உள்புறம் பார்த்து.. “அர்ச்சனா …காவ்யா வந்திருக்காம்மா வா !’ என்றார். “உங்க அம்மா அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா ?!” என்று அவர் கேட்க “ஹான் நல்லா இருக்காங்க …”

அவள் மேலும் பேசுவதற்குள் அர்ச்சனா அங்கே வந்தாள் .

அர்ச்சனா அங்கே வந்ததும், அவர் சட்டென்று எழுந்து ஓன்றும் பேசாமல் உள்ளே போய் விட்டார். ” வா ..காவ்யா ..சர்ப்ரைசா இருக்கு “

என்று கலகலப்பாக பேச முயன்ற அர்ச்சனா முகத்தில் வழக்கத்துக்கு மாறாக ஒரு சோகம் தெரிவதை, காவ்யா உணர்ந்தாள். பின்பு இருவரும் அர்ச்சனாவின் அறைக்கு சென்றார்கள்.

“ஏன் உன் போன் என்னாச்சு .. நான் எத்தனை தடவை கால் பண்ணினேன் தெரியுமா?!.. நீ அட்டென்ட் பண்ணவே இல்லையே. மெசேஜ் அனுப்பினாலும் பதில் வரலை .. ஏன் ? எம்மேல ஏதாவது கோபமா ?!” “என்ன சாப்பிடறே .. காப்பியா ..டீயா .. இல்லே லெமன் ஜூஸ் போடட்டுமா “

காவ்யாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ..கேட்ட அர்ச்சனாவை முறைத்து பார்த்தாள் காவ்யா.

“இந்த விருந்தாளியை கவனிக்கிற மாதிரியெல்லாம் என்கிட்ட பேச வேண்டாம் . என் கேள்விக்கு முதல்ல பதிலை சொல்லு “

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. கொஞ்ச நாள் போன் யூஸ் பண்ண வேண்டாமுன்னு எடுத்து வெச்சுட்டேன் “

“அப்ப நீ ஒரு மெசேஜ் போட்டிருக்காலமே ! நான் தொந்தரவு பண்ணி இருக்க மாட்டேனே. ஆமா ஏன் இந்த திடீர் முடிவு. நாம பேசி இரண்டு வாரம் ஆகுது. கடைசியா பேசறப்ப, அப்பா மாப்பிளை பார்த்துட்டு இருக்காருன்னு சொன்னே. ஒருவேளை.. ஏதாவது ஒரு மாப்பிள்ளையை செலக்ட் பண்ணி அவரோட ஜாலியா பேசிகிட்டு இருக்கே. அதான் என்னை மறந்துட்டேன்னு நினைச்சிட்டு இருக்கேன் “

“ஆமா ..நான் ஜாலியா தான் இருக்கேன் ” என்று கண்களில் நீர் ததும்ப சொல்லி விட்டு விரக்தியாக சிரித்தாள் அர்ச்சனா .

“ஏய் ஏண்டி ..அழுவறே … நான் சும்மா ஒரு ஜோக்குக்கு சொன்னேம்பா…” பதட்டத்துடன் காவ்யா சொல்ல.. அர்ச்சனா, அவளின் தோளில் சாய்ந்து சோகமாக விம்மினாள் .

சிறிது நேரம் பேசாமல் இருவரும் மவுனமாக இருந்தனர்.

அர்ச்சனாவுக்கு நெருக்கமான தோழி காவ்யா தான். இருவரும் தங்கள் பிரச்சனைகளை , எண்ணங்களை எப்போதும் வெளிப்படையா பகிர்ந்து கொள்வார்கள்.

அர்ச்சனாவுடைய அம்மாவுக்கு நீண்ட காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அவளுடைய அப்பா எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் ..பணம் செலவழித்தும்… அவளுடைய அம்மாவை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

அம்மா இல்லாமல் கடைசி வருட கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தடுமாறியவளை காவ்யா தான் தைரியம் சொல்லி … படிக்க ஊக்குவித்தாள். அடிக்கடி அர்ச்சனா வீட்டில் தங்கி அவர்களுக்கு ஆதரவாக இருந்தாள்.

தனக்கு அப்பா மீது இருந்த வருத்தத்தை அவளிடம் எப்படி சொல்வது என்று இதுவரை சொல்லாமல் இருந்த அர்ச்சனா, இன்று காவ்யாவை நேரில் பார்த்ததும் மனது பொறுக்காமல் மனதில் இருந்ததை கொட்டினாள்.

“இந்த அப்பா என்கிட்ட பேசி ஒரு வாரம் ஆகுது தெரியுமா … நான் பேச போனாலும் மூஞ்ச திருப்பிகிட்டு போறார்…அவர் சொல்லறதை நாம மறுத்து பேசக்கூடாது. ஆனா நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சுக்க மாட்டேன்னு ரொம்ப பிடிவாதமா இருக்கார் ” என்று வேகமாக படபடவென்று பேசினாள்.

பேச பேச பொங்கி வரும் அழுகையை அடக்கி கொண்டு.. “அவர் பாக்கிற மாப்பிள்ளைகள் எல்லாம் நிறைய வரதட்சணை எதிர்பார்க்கிறாங்க. அம்மா இருந்த வரைக்கும், என் பொண்ணு கல்யாணத்திற்கு நான் ஒரு பைசா கூட வரதட்சிணை கொடுக்க மாட்டேன்னு சொல்லிக்கொண்டிருந்தவர், இப்போ தன் தகுதிக்கு மீறி கடன் வாங்கியாவது கல்யாணம் செய்து வைக்கிறேன்னு சொல்லிட்டு இருக்கார்.”

“நீயே சொல்லு காவ்யா .. கடன வாங்கி கல்யாணம் செய்து வைத்து, என்னை புருஷன் வீட்டுக்கு அனுப்பிட்டு .. இவரு இங்கே கஷ்டபட்டு கடனை கட்டிக்கிட்டு இருப்பாராம். நானும் இல்லையின்னா…இவருக்கு ஒரு வேளை சாப்பாடு போடக்கூட யாருமில்லை. இவரை விட்டுட்டு போய் ..என்னால சந்தோசமா இருக்க முடியுமா?! “

ஆத்திரமாக பேசிவிட்டு .. பின் மெல்ல தன்னை அசுவாசப்படுத்தி கொண்டு மீண்டும் பேசினாள்.

“அதான் அவர் கூட்டிகிட்டு வர மாப்பிள்ளைகளை, நான் பிடிக்கலைன்னு சொல்லிகிட்டே இருக்கேன். இது தான் இப்ப இங்க பிரச்னை. ஆனா அவர் பேச்சை நான் கேட்காமல் பிடிவாதம் பிடிக்கிறேன்னு என்கிட்ட கோவிச்சிட்டு இருக்கிறார்.”

அர்ச்சனா தன் மனதில் இருந்ததை சொல்ல .. அவளின் எண்ணத்தை புரிந்து கொண்ட காவ்யா .. வருத்தத்தோடு பேசினாள்.

“நீ உன் மனசுல இருக்கிறத சொல்லிட்டே . அதே மாதிரி அவரோட இடத்திலே இருந்து அவர் விருப்பத்தையும் பாரு . உன் மேல அவர் எவ்வளவு பாசம் வெச்சிருக்காருன்னு உனக்கு தெரியாதா … உன் அம்மா இருக்கும் போது, அவர் வரதட்சணை தராம தான் கல்யாணம் செய்து கொடுப்பேன்னு சொன்னது எனக்கும் தெரியும். அவருக்கு இன்னும் உன்னை மேல படிக்க வெச்சு…பெரிய லெவல்ல வேலையில சேர்க்கணுமின்னு ஆசை கூட இருந்தது. இப்போ அவரோட சூழ்நிலை மாறி இருக்கு. உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டா அவருடைய கடமை முடிஞ்சிருன்னு அவர் நெனச்சிருக்கலாம். எல்லாருடைய பேமிலில இப்படித்தான் நடக்குது . இதை நாம பேசிதான் சரி பண்ணனும். பேசாம கோவிச்சிட்டு இருந்தா மட்டும் எதுவும் சரி ஆகாது.” என்றாள்.

ஒரு பெரிய மனுசி மாதிரி காவ்யா பேச.. அர்ச்சனா வியப்பும் குழப்பமுமாக அவளை பார்த்தாள். அந்த நேரத்தில் அர்ச்சனாவின் அப்பா, தொண்டையை செருமியபடி உள்ளே வந்தார்.

அவர் கையில் இரண்டு ஐஸ்கிரீம் இருந்தது . காவ்யாவுக்கும் அர்ச்சனாவுக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று வெளியே போய் வாங்கி கொண்டு வந்திருக்கிறார்.

“தேங்க்ஸ் அங்கிள் …” என்றபடி காவ்யா , இரண்டு ஐஸ்கிரீமையும் கையில் எடுத்துக் கொண்டு…ஒன்றை அர்ச்சனாவிடம் கொடுத்தாள். அவளோ வேண்டாம் என்பது போல தலையை திருப்பி நகர்ந்து கண்களை துடைத்து கொண்டாள்.

“அங்கிள்..அர்ச்சனா என்ன சொல்றான்னா … ” என்று காவ்யா ஆரம்பிக்கும் போதே ..குறுக்கே காளமேகம் பேசினார்.

“பரவாயில்லம்மா.. இந்த வயதில் மற்றவர்களை புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் உனக்கு இருக்கு. நான் உள்ள வரும் போதே.. நீங்க பேசிகிட்டு இருந்தத கேட்டேன். எனக்கு என் பொண்ணப்பத்தி தெரியாதா?! அவளுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு, என்னை பிரிந்து போக விருப்பமில்ல.

அதனால எந்த மாப்பிள்ளைய காட்டினாலும் பிடிக்கலைனு சொல்றா. அதே மாதிரி, நான் நல்லா இருக்கும் போதே அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கணுமேன்னு எனக்கு கவலை.

அதனால கோபமா இருக்கிற மாதிரி.. நான் பேசாம இருந்தாவாவது, அவளுக்கு என் மேல வெறுப்பு வரும். அப்ப இந்த அப்பாவை விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு போலாமின்னு அர்ச்சனா முடிவு எடுப்பான்னு நான் நினைத்தேன்.” என்றார்.

கண்களில் கண்ணீர் பெருக.. சங்கடத்தோடு அவர் பேச .. அர்ச்சனா ஓடிப்போய் அவர் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

“ஏம்ப்பா …இப்படி செய்திங்க ?!.. உங்க கிட்ட கோவிச்சிட்டு நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடுவேன்னு நினைச்சீங்களாப்பா ..?!” அழுகையும் ஆத்திரமுமாக அவர் முதுகில் மாறி மாறி குத்தினாள். காவ்யாவுக்கு, அப்பா மகள் பாசம் நெஞ்சத்தை தொட்டது. அவள் கண்களும் கலங்கியது.

காளமேகம் , அர்ச்சனாவின் தோளை தட்டிக்கொடுத்து .. அவள் முகத்தை நிமிர்த்தி .. கண்களை துடைத்து விட்டு .. அவளை ஆழமாக பார்த்தார் .

அவள் இன்னும் குழந்தை மாதிரிதான் அவருக்கு தெரிந்தாள்.

‘காவ்யா சொன்ன மாதிரி ..பிரச்சனைகளை பேசித்தான் சரி செய்யணும் . பேசாமல் இருந்தால் எதுவும் சரியாகாது.’ என்று நினைத்தார். “சரிம்மா .. வரதட்சணை கேட்காத மாப்பிள்ளை கிடைக்கிறவரைக்கும் பொறுத்திருந்து கல்யாணம் பண்ணலாம். அப்பாவையும் கூட வெச்சு பாத்துகிற மாதிரி ஒரு மாப்பிளையை தேடலாம். சரியா !”என்று அர்ச்சனாவிடம் சமாதானமாக சொன்னார்.

அர்ச்சனாவுக்கும் காவ்யாவுக்கும் .. முகத்தில் சிரிப்பும்.. சந்தோசமும் வர ஆரம்பித்தது.

“சரி சரி ..ஐஸ்கிரீம் உருகுது .சாப்பிடுங்கள் ” என்றார்.

“அதான் ஏற்கனவே உருக்கமாக உருகி விட்டதே..” என்று சொல்லி காவ்யா அர்ச்சனாவை பார்த்து சிரிக்க .. அர்ச்சனா அப்பாவை பார்த்து சிரித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *