ஒருவர் மனது ஒன்பதடா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 1,953 
 
 

‘ஏன் இந்தக் குழந்தை வேலைக்காரியை இப்படி வெறுக்கிறது?!’ புரியாமல் குழம்பினாள் பூமா.

வேலைக்காரிக்கு எப்போதும் பரிந்து கொண்டுதான் பேசுகிறார் மாமியார் மரகதம்.

ஏன்… ஏன்… ஏன்…???

வேண்டுமென்றே வேலைக்காரி,  குழந்தையைக் கிள்ளிவிட்டு அழ வைப்பதைத் தற்செயலாகப் பார்த்துவிட்ட பூமா, வேலைக்காரியை வேலையிலிருந்து நிறுத்திவிட முடிவெடுத்தாள்.

‘நாளைல இருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்!’ என்று சொன்னதும், அவள் தடாலென மாமியார் மரகதம் கால்களில் போய்விழுந்து அழுது புரண்டாள்.

‘வடிவை வேலைக்கு வரவேண்டாம்னுட்டயாமே…???’ மாமியாரின்  விசாரணை தொடங்கியது.

‘ஆமாம் அவள் சரியில்லை…! அதான் வேண்டாம்னு சொல்லீட்டேன்!’ என்றாள் பூமா.

‘நீ பாட்டுக்குச் சொல்லீட்டே, அவ கஷ்டம் உனக்குத் தெரியுமா?!’ மாமியார் அவளுக்காகப் பரிந்துபேச, பற்றிக் கொண்டு வந்தது பூமாவுக்கு.

‘அவளுக்கு என்ன கஷ்டமா இருந்தா எனக்கென்ன?’ பூமா கேட்க, 

‘அப்படிச்சொல்லாதே… !அவள் கணவன் ஒரு குடிகாரன்… வெல்டர் வேலை. குடிச்சுட்டு வந்து தெனம் தெனம் அவளுக்கு அடி உதைதான்!’

‘ஓ! பரிவுக்கு இதான் காரணமா?’ புரிந்தது பூமாவுக்கு.

‘மன்னித்தால்,  மந்தி மறுபடியும் மலையேறுமே…?!!’ 

குழந்தையை அடிப்பதைச் சொன்னால்.. ‘அவள் அப்படியெல்லாம் செய்யமாட்டாள்!’ என்று அவளுக்குப் பரிந்து சப்பைக்கட்டு கட்டும். 

‘என்ன பண்ணலாம்?!’ யோசித்தாள்.

ஒன்று புரிந்தது.

வேலைக்காரி தான் வீட்டில் வாங்கும் அடிதடிகளுக்கு என் குழந்தையா பலிகடா ஆகக் கூடாது! நிறுத்திவிட வேண்டியதுதான். 

‘வேண்டாம்!’ என்று மறுபடியும் சொன்னதும், 

‘நான் தற்கொலை பண்ணிக்குவேன்’. மிரட்டினாள். வேலைக்காரி வடிவு. 

இதென்ன புது குழப்பம்?!

இவள் தற்கொலை பண்ணிக் கொண்டால், அது போலீஸ் கேஸ், விசாரணை,  நீதிமன்றம் என  நிம்மதி போகும். என்ன செய்ய..? யோசிக்க யோசிக்க.. சிக்கல் இடியாப்பச் சிக்கலாகத் தொடங்கியது.

விடுவிக்கையில்…  ஓரிழையிலேயே ஒன்பது சிக்கல்.!!

மாமியார், மகன் சம்பாதித்துக் கொடுப்பதில் கொஞ்சத்தை வடிவின் கணவனிடம் வட்டிக்கு விட்டிருக்கிறார். அதை கேட்கப்போக குடிகாரன் ஒருமுறை மாமியார் தனியாய் இருக்கையில் அத்துமீறி,  அதைப் படம்பிடித்து வைத்துக் கொண்டு கொடுத்த பணத்தைக் கேட்கும்போதெல்லாம் அவன் மாமியாரையே  மிரட்டுகிறான்.

இருவருக்குமான அத்துமீறல் அம்பலமானதால் மாமனார் ஓடிப்போய்விட்டார்.

ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குருவாயிருந்தால்கூட பரவாயில்லை! ஒன்பதும் அல்லவாகுரு? அவர் திரும்பவே இல்லை.

இடியாப்ப சிக்கல்கள்எல்லை மீறியதால் வேலைக்காரியின் தொல்லை நீள்கிறது.

என்ன செய்வது? எப்படி மீள்வது ?!

ஒரே வழிதான் தெரிந்தது. எல்லா பிரச்சனைக்கும் மார்கம் ஒன்றுண்டு.

‘இத பாரு வடிவு…,  வாழ்க்கை ஒரு சிறைச்சாலை.. ஏதோ தப்பு பண்ணி இதில் நாம் மாட்டீட்டோம். சிறையிலிருந்து மீள நினைப்பது தப்பு. தண்டனைக்காலம் கடவுளால்  முடிக்கப்படும் வரை பொறுத்துப் போவதே நல்லது. மீறி தப்பிச்சு வெளியேற நினைச்சா,  தற்கொலை பண்ணினா, ஏற்கெனவே விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தோட சிறையிலிருந்து தப்பிச்சப்போய் மறுபடியும் பிடிபட்டதற்கான தண்டனையும் சேர்த்து குற்றவாளிகள் அனுபவிப்பதுபோல்,  ரெட்டை ஆயுள் அனுபவிக்க வேண்டி வரும்!’ என்று குருட்டாம்போக்கில் எதையோ சொல்லி பயமுறுத்த   அரண்டுபோன வடிவு  குழந்தையை அடிப்பதையும் தற்கொலை என மிரட்டுவதையும் நிறுத்த நிம்மதி கிடைத்தது பூமாவுக்கு.

ஒருவர் மனதில் ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *