கிராதார்ஜுனீயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 4,136 
 
 

பாகம் இரண்டு | பாகம் மூன்று | பாகம் நான்கு

யக்ஷனின் உதவியுடன் அர்ஜுனன் இந்திரகீல பர்வதத்தில் தவம் செய்வதற்காக வந்து அடைந்தான். வாடைக் காலம் நெருங்கியது. பூமிதேவி தான்யங்களைப் பரிபூரணமாக வர்ஷித்துக் கொண்டிருந்தாள். குளங்கள் நதிகள் போன்ற நீர்நிலைகள் சுத்தமாக தெளிவாக இருந்தன. ஆகாயத்தில் பறவைகள் கிரீச்சிட்டப்படி இனியகானம் பாடின. மென்மையாக மலைய மாருதம் சுகமாக வீசின. எல்லா திசைகளும் காண்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் படி மிக வளமையாக , செழிப்பாக இருந்தன.

இந்திரகீலபர்வதத்தை அடைந்த அர்ஜுனனிடம் யக்ஷன் கூறினான்.

“அர்ஜுனா! நீ தவம் செய்யும் பொழுது உனது ஆயுதங்களைப் பூரணமாக தரித்துக் கொள். ஏனென்றால் தவத்தின் இடையே ஒரு வேளை உனக்கு தடைகள் வந்தாலும் வரலாம். ஆனால் அதற்காக குழப்பம் கொள்ள வேண்டாம். தவம் இறுதியில் நல்ல விதமாக முடிந்து மங்களங்கள் ஏற்படும்.

முதலில் இந்திரனை ஆராதனம் செய்வாயாக. சிவபிரானும் உனது கவலைகள் வேதனைகளைக் களைவான். சிரத்தையாக தவம் செய்து வெற்றி பெறுவாயாக “என்று ஆசீர்வாதம் செய்து விட்டு யக்ஷன் தன்னுடைய ஸ்தானத்திற்கு சென்று விட்டான்.

அர்ஜுனன் இந்திரகீல பர்வதத்தில் வசிக்கலானான். மலையின் சமீபம் கங்காநதி பிரவாகமாக ஓடியது. அந்தப் பிரதேசமே வெகு அழகாக, பார்ப்பவர் மனம் கவரும் படி இருந்தது. மரங்களில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தன. பறவைகளின் மதுரநாதம் ஒலித்தன. அவை அர்ஜுனன் நிச்சயமாக வெற்றியடைவான் என ஜயகோஷம் போட்டது போல இருந்தன. கங்கையில் அன்னப் பறவைகள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. இவைகள் எல்லாம் பார்ப்பதற்கு மனோகரமாக இருந்தன. இவ்வாறான மிக ரம்யமான காட்சிகளை அர்ஜுனன் அங்கு கண்டான்.

மலையின் சுற்றுச்சூழல் மிகவும் இனிமையாக இருந்தது.அர்ஜுனன் தனது தவத்தை ஆரம்பித்தான். உறக்கம் இன்றி தவம். மிக கடினமான தவத்தை அனுசரித்தான். இருந்த போதும் வலியோ வருத்தமோ இன்றி அவனது தவ அனுஷ்டானங்கள் இருந்தது. தவ வலிமையினால் அவனது தேஜஸ் கூடியது. தவத்தின் மஹிமையின்ல் அவனது தேக காந்தி அதிகரித்தது.

இந்திரகீல மலையில் அர்ஜீனன் தவம் செய்வது எல்லோருக்கும் தெரிய வந்தது. மிக குரூர மிருகங்கள் கூட தனது கொடிய குணங்களை விட்டொழித்தன. மரங்கள் பசுந்துளிர்கள் விட ஆரம்பித்தன. வானம் தெளிந்து காணப்பட்டது. பூமியிலும் தூசிகள் இன்றி சுத்தமாக காணப்பட்டது.

அர்ஜுனன் கடும் தவம் செய்வது பற்றி வனத்தில் உள்ளவர்கள் வருத்தமடைந்தனர். அன்ன ஆகாரமின்றி தவம் செய்வது பார்த்து மனக்கவலை கொண்டனர் பயத்தினால் இந்திரனிடம் சென்று அர்ஜுனனுடைய கடும் தவம் பற்றி முறையிட்டனர். அதனைக் கேட்ட இந்திரன் மனதிற்குள் மிகுந்த சந்தோஷம் அடைந்தான். ஆனால் அவனது சந்தோஷத்தை அவர்கள் முன் வெளிக்காட்டவில்லை. அர்ஜுனன் தவத்தில் சிரத்தை உடையவனாக இருக்கிறானா? என்பதனை பரிட்சை செய்து பார்க்க ஆவலுடையவன் ஆனான்.

அர்ஜுனனுடைய தவத்தை சோதனை செய்ய, தவத்தினைக் கலைத்துப் பார்க்க விரும்பியதால் அப்ஸரஸ் பெண்களை அழைத்தான். அவர்களிடம் உங்கள் கடைக்கண் பார்வையால் அர்ஜுனனை வசீகரம் செய்யுங்கள். இதனால் உங்களுக்கு சாபம் ஒன்றும் ஏற்படாது. அதனால் சாபபயம் வேண்டாம்”. என்று சொல்லி அனுப்பினான். அவர்களும் இந்திரகீலமலையை அடைந்தனர். விதவிதமான ஆடைகள் , ஆபரணங்கள் அணிந்து அலங்காரமாக, அர்ஜுனனின் தவத்தைக் கலைப்பதற்காக பலவிதமாகப் பிரயத்தனம் செய்தனர்.

ஆனால் அர்ஜுனன் கொஞ்சம் கூட சஞ்சலம் அடையவில்லை. அவன் இநுதிரியங்களை வென்றவனாக கருமமே கண்ணாக இருந்தான். அவனை வெல்ல இயலாத அப்ஸரஸ் பெண்கள் மீண்டும் இந்திர லோகம் சென்றடைந்தனர். இவ்விதமாக அர்ஜுனனின் தவத்தைக் கலைக்க செய்த பிரயத்தனங்கள் வீண் விரயமானது.

இத்துடன் கிராதார்ஜுனீயம் மூன்றாம் பாகம் முடிவுற்றது.

கிராதார்ஜுனீயம் நான்காம் பாகம் தொடரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *