கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 4,949 
 

என் பெயர் அருண். வயது இருபது.

மானேஜ்மென்ட் படிக்கிறேன். இரண்டு தங்கைகள். அடையாறில் வீடு.

அப்பா சென்னையில் ஒரு பெரிய கம்பெனியின் மானேஜிங் டைரக்டர்.

நான் மிகவும் மென்மையானவன். என் அப்பாதான் எனக்கு ஆதர்ஷ புருஷர். அப்பா எனக்கு நல்ல நண்பர். என் முதுகில் அன்பாகத் தட்டிக் கொடுப்பார். யாரும் யாருக்கும் எதற்காகவும் பயப்படவே கூடாது என்பார். மனிதர்களுக்கு உள்ளும் புறமும் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்பார். தனி மனித சுதந்திரத்தை மிகவும் மதிப்பார். எதையும் தீர்மானம் செய்யும் பொறுப்பு என்னுடையது. அதில் அப்பா ஒருநாளும் குறுக்கிட்டதில்லை. அதனாலேயே அப்பா மேல் எனக்கு அபிமானம் அதிகம்.

அப்பா ரொம்ப handsome. பெண்கள் பற்றி அப்பாவின் க்ளாரிட்டி வித்தியாசமானது. .

எந்தப் பெண்ணுமே ஒரு ஆடவனுக்கு நல்ல சிநேகிதியாகிறவள்தான், சிநேகிதியாகவே பெண்களைப் பார் என்பார். ஆண்-பெண் உறவு மேன்மையான நட்பை அடிப்படையாகக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம் என்பார். பெண்ணுக்கு ஆணோ, ஆணுக்கு பெண்ணோ பாலுணர்வு வடிவமாக மட்டும் தெரிதலே அத்தனை விதமான கசடுகளுக்கும் விதை போன்றது. பாலுறவு, உறவின் ஒரு பகுதி மட்டுமே… என்றெல்லாம கல்மிஷமே இல்லாமல் எடுத்துச் சொல்வார்.

இவ்விஷயத்தில் அப்பாவிடம் எனக்குக் கொஞ்சம் குற்ற உணர்வு இருந்ததா? அப்படித்தான் நான் நினைக்கிறேன்.

எனக்குப் பெண் என்பவள் பாலுணர்வு வடிவமாகத்தான் தெரிந்தாள். பெண்கள் என்னைப்போன்ற ஆடவனுக்காக பாலுணர்வு தேவதையாகப் படைக்கப் பட்டவள் என்று நான் நினைத்தேன். அதிலும் குறிப்பாக என்னைவிட வயதில் மூத்தபெண் எனக்கு ஒரு காமதேனுவாக அல்லது ஒரு புஷ்டியான சிந்திப் பசு மாதிரியாகத் தெரிந்தாள்.

என் வயதையுடைய இளைஞர்கள் எல்லாம் அவர்கள் வயதுக்கு ஒப்பான பெண்களின் பின் தொடர்ந்து கொண்டிருக்க, நான் மட்டும் அழகான கல்லூரி ஆசிரியைகளால் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தேன்! அவர்கள்தான் பரிபூர்ணமான பெண்களாக எனக்குத் தெரிந்தார்கள். அவர்களை நான் என் மனதிற்குள் ஏக்கத்துடன் காதலித்து வந்தேன்.

தமன்னா, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் என்று இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்க; நான் மட்டும் வித்யாபாலன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன் என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.

இன்னும் பாலுறவு எனக்குப் பரிச்சயமில்லை. ஆயினும், என்னைக் கவர்ந்த, என்னைக் காட்டிலும் வயதில் மூத்த பெண்களுடன் மானசீகமாக அந்த உறவை நான் ஏற்படுத்திக் கொண்டேன். பாலுறவு என்பதை என்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவா எனக்குள் மிக மிக ஆழத்தில் ஒரு விநோத விதையாக ஊன்றிப் போயிருந்தது. அந்த விதை காமத்தால் என்னுள் முளைத்து தழைத்து வளர்ந்தது.

பாலுறவு சம்பந்தமான என் அந்தரங்கமான இந்த உணர்வுகளை யாரிடமும் நான் மனம் திறந்து சொன்னது கிடையாது. என் அப்பாவிடம் இதையெல்லாம் கூச்சப்படாமல் சொல்லலாம். அந்த அளவிற்கு அப்பா விசாலமானவர்தான். ஆனாலும் என்னால் இதையெல்லாம் அவரிடம் பேச முடியவில்லை.

யாரிடமாவது இதயெல்லாம் டிஸ்கஸ் பண்ண வேண்டும் என்கிற ஆசை மட்டும் நிறைய. என் நண்பர்களிடம் எதைப் பற்றியுமே நான் பேசுவது கிடையாது. பேசினால் என் மென்மையான மனதை வெறும் கேலிச் சொற்களால் அவர்கள் புண்ணாக்கி விடுவார்கள். அப்படித்தான் ஒருமுறை அவர்களிடம், ‘பெண் என்பவள் அழகிய காமதேனு போல் இருக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான் என்னை பயங்கரமாக கிண்டல் செய்தனர். ஏனோ எனக்கு காமதேனு மிகவும் பிடிக்கும். ஏன்? தெரியாது. பிடிக்கும். அதேபோல எனக்குப் பிடித்த இன்னொன்று தண்ணீர். ஆறு, அருவி, குளம், ஏரி, கடல் இவையெல்லாம் நான் சலிக்காமல் பார்த்துப் பார்த்து சந்தோஷப் படுபவை. எனக்கு வெகு இஷ்டமான தண்ணீரை மனதில் வைத்துக்கொண்டு ‘எனக்குப் பெண் குளிர்ந்த தண்ணீர் போல இருக்க வேண்டும்’ என்று ஒருமுறை சொல்லிவிட்டேன். சிரித்துச் சிரித்து அவர்களுக்கெல்லாம் வயிற்று வலி வந்துவிட்டது. அதிலிருந்து பெண்களைப்பற்றி நெருக்கமான நண்பர்களிடம்கூடப் பேசக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன்.

இதெல்லாம் நான் வலிய கற்பனை செய்து பார்த்துச் சொல்கிற விஷயங்கள் இல்லை. என்னைவிடக் கொஞ்சம் வயதில் மூத்த அழகான பெண்களைப் பார்க்கும்போது சட்டென அந்தப்பெண் எனக்கு ஒரு கடல் அலை போலத் தெரிவாள். அல்லது அமைதியான ஏரித் தண்ணீர் போல் இருப்பாள்! நிஜமாகவேதான் நான் அப்படி உணர்ந்தேன்.

என் அப்பாவின் செகரட்டரி மிஸ்.சம்யுக்தாவை நான் முதன் முதலாகப் பார்த்தபோது அவளை அப்படித்தான் உணர்ந்தேன். தண்ணீர் வெட்கப் படுவதில்லை. சம்யுக்தாவும் அதேபோலத்தான் இருந்தாள். ஆண் என்ற ரீதியில் என்னிடம் அவளுக்குத் தயக்கமே இல்லை.

அப்பா, “தற்போது கல்லூரி விடுமுறைதானே… தினமும் முற்பகல் மூன்று மணிநேரம் நம் கம்பெனிக்கு வாயேன், நீதானே அடுத்த எம்டி…” என்றார்.

எதிர்காலத்தில் எம்டியாகப் போகும் எங்கள் கம்பெனிக்கு அன்று நானும் அப்பாவும் அவருடைய பென்ஸ் காரில் கிளம்பிச் சென்றோம்.

நான் அப்பாவின் ஏசி அறையில் அவருடன் இருந்தேன். அப்போது சம்யுக்தா உள்ளே வந்தாள். அப்பாவுக்கு ‘குட் மார்னிங்’ சொன்னாள். சம்யுக்தாவைப் பார்த்து நான் திகைத்துப் போனேன். ஒரு அருவியைப் போல எத்தனை திண்மையான பெண். ஆற்றோட்டம் போல என்ன இயல்பான தங்கு தடையற்ற பெண். கடல் அலை போல எவ்வளவு ஒயிலான பெண். அவளுடைய பாதத்தில் இருந்து உச்சந்தலைவரை ஏதோ ஒரு திரவம் பிரகாசிப்பது போலிருந்தது.

“சம்யுக்தா, மீட் மை சன் அருண்…”

“ஷி இஸ் சம்யுக்தா…”

சம்யுக்தா அவளுடைய கையை என்னை நோக்கி நீட்டினாள். அவளின் கையில் தயக்கமே இல்லை. கொஞ்சம் வியர்த்துப்போன என் உள்ளங் கையை நான் சங்கோஜத்துடன் நீட்டினேன். வலிய என் கையைப் பற்றி, மிக மிக சிநேகிதத்துடன் சம்யுக்தா குலுக்கினாள். மெத்தென்று இருந்தது அவளது உள்ளங் கை. வெட்கம் கலந்த ஆசையுடன் அவளை நன்றாக ஏறிட்டுப் பார்த்தேன். பெண் என்பவள் நல்ல சிநேகிதியாகிறவள்தான் என்ற அப்பாவின் சொல் ஞாபகம் வந்தது. அந்த முதல் சந்திப்பிலேயே சம்யுக்தாவின் தோற்றத்தில் எனக்கு ஒரு சிநேகிதி தெரிந்தாள்.

“அருண் உன்னுடைய நாளைய எம்டி. இரண்டு மாத விடுமுறையில் தினமும் இங்கு வருவான். எல்லாவற்றையும் அவனுக்குக் கற்றுக்கொடு…”

“ஓயெஸ்…. மகிழ்ச்சியுடன் கற்றுத் தருகிறேன்.”

சம்யுக்தாவின் அந்த பதிலைக் கேட்டதும், எனக்குள் இன்னொரு அருண் குளிர்ந்த நீரின் உள்பரப்பில் சப்தமில்லாமல் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான். எனக்கு அவள் கற்றுத் தரப் போகிறாளாம். எதைக் கற்றுக் கொண்டாலும் அவளிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அதற்கு அவள் பொருத்தமானவள்தான்.

அதற்குக் காரணங்கள் இருந்தன. நிச்சயமாக அவள் என்னைக் காட்டிலும் வயதில் மூத்தவள். என்னைவிட நல்ல பலசாலி. குளிர்ந்த நீரை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற நேர்த்தியான ‘வாட்டர் கூலர்’ போல இருந்தாள்! இவைகள் எனக்கு மிக விருப்பமானவை… அதனால் அப்பா அறிமுகம் செய்து வைத்த நிமிஷமே சம்யுக்தா எனக்கு சிநேகிதியாகி விட்டாள்.

சம்யுக்தா ஜஸ்ட் ஏ ப்ரெட்டி வுமன்…

முதல் சில தினங்கள்தான் பத்தரை மணிக்கு நான் அப்பாவுடன் காரில் சென்றேன். அதன்பிறகு, சம்யுக்தாவுடன் அதிக நேரம் இருப்பதற்காக, அலுவலக நேரமான ஒன்பது மணிக்கே தினமும் பைக்கில் வர ஆரம்பித்தேன். அப்பா அப்பாவியாக “நாளைய சிறந்த முதலாளி – இன்றைய சிறந்த தொழிலாளிதான்…” என்று என்னை வாழ்த்தினார்.

ஆரம்பத்தில் சம்யுக்தாவின் திண்மையான முகமும், கழுத்தும், கைகளும் எப்போதும் மெலிதாக வியர்த்தாற் போலவே தெரிந்தன. ஆனால் அவளை அருகில் பார்த்தபோது அப்படி வியர்வை எதையும் அவள் உடம்பில் என்னால் பார்க்க முடியவில்லை. இது எனக்கு ஒரு இனிய மர்மமாகவே இருந்தது.

“என்ன அருண், ஒன்பது மணிக்கே வந்து விட்டாய்?”

“உங்களுடன் பேசிக் கொண்டிருக்கலாமே!”

“என்னுடன் பேசிக் கொண்டிருப்பதில் உனக்கு அவ்வளவு விருப்பமா?”

“சந்தேகமா உங்களுக்கு? கடற்கரையில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாலும் அலுக்காது தெரியுமா?”

“நானென்ன கடற்கரையா உனக்கு?”

“கடற்கரை இந்த ஆபீஸ்…”

“அப்படியானால் நான்?”

“எனக்கு நீங்கள் கனத்த கடல்.”

இதை நான் சொன்னபோது சம்யுக்தாவின் திரவ உடல் மிக நுட்பமாகச் சிலிர்த்தது. இயல்பாகவே உயர்ந்த அவளின் மார்பு கடல் அலை போல் எழும்பித் தணிந்தது.

அப்பா வரும்வரை தினமும் நான் சம்யுக்தாவின் அறையில் இருந்தேன். சம்யுக்தாவிற்கு தெரியாத விஷயங்களே இல்லை. காற்று வருவது போல அனைத்தும் அவளிடம் இலகுவாக வந்து சேர்ந்திருந்தன.

சம்யுக்தாவின் பரந்த எந்த அபிப்பிராயத்திலும், விமர்சனத்திலும் prejudice இல்லை. அந்தக் குணம்தான் என்னைக் கவர்ந்தது. அவளுக்கு ego இல்லவே இல்லை. அது இருந்தால் எனக்கு அவளிடம் இத்தனை இலகுவான நட்பு சாத்தியமே இல்லாமல் போயிருக்கும். சம்யுக்தா என்ற பெயருக்கே ‘சிநேகிதி’ என்று பொருள் கொள்ளலாம்.

ஆனால் எனக்கு மட்டும்தான் தெரியும், எனக்குள் வேறொரு அருண் இருந்தான். ஆம்… அவளுடன் நான் கற்பனையில் முயங்கினேன். அவள் எனக்கு காமதேனு.

தினமும் ஆறு மணிக்கு நானும் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அதில் எனக்கு வருத்தமில்லை. ஏனென்றால் சம்யுக்தாவும், அதாவது காமதேனுவும் ஆறு மணிக்கு எழுந்து சென்று விடுகிறதே… காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு வரை நான் எந்த உலகத்தில் சஞ்சரித்தேனோ, அதே உலகத்தில்தான் ஆறு மணிக்கு அப்புறமும் நான் அவளுடன் சஞ்சரித்தேன். ஆறு மணிக்கு மேல் சம்யுக்தா எப்படி இருப்பாள் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

அன்று ஒருநாள் என்னுடைய ஹோண்டா பைக்கில் ஆறு மணிக்கு மேல் அவளுடன் வீட்டிற்கு கிளம்பினேன். திருப்பங்களில் ஒரு பாதுகாப்புக்காக சம்யுக்தாவின் கை என் தோளைப் பற்றியது. என் வாழ்க்கையில் சிநேகிதியின் முதல் தொடல் அது. சென்னையின் சாலைகளில் எனக்கு பிடித்தமான வயதில், ஏராளமான மார்பகங்களுடன் நெருக்கமாக ஒரு புஷ்டியான சிந்திப் பசு…

மாம்பலம். அவள் வீட்டில் இறக்கிவிட்டேன். என்னை வீட்டிற்குள் அழைத்தாள். படிகளில் ஏறி குறுகிய நீள வராந்தாவில் நடந்து வீட்டையடைந்தோம். கதவில் பூட்டு தொங்கியது.

“என்ன இது பூட்டு தொங்குகிறது? வீட்டில் வேறு யாரும் இல்லையா?”

“இன்றைக்கு யாரும் இல்லை. என் அம்மா, அண்ணா வீட்டுக்குப் போயிருக்கிறாள்.”

உள்ளே சென்றோம்.

“வீடு எப்படி இருக்கிறது அருண்?”

“உங்களைப் போலவே இருக்கிறது.”

“சமயம் கிடைத்தால் என் அழகைப் புகழ்ந்து விடுவாய் நீ…”

“ஏன் உண்மையைச் சொல்லக் கூடாதா?”

“எத்தனை தடவைதான் சொல்வாயாம்?”

இப்ப கிளம்பி விடலாம், இதோ கிளம்பி விடலாம் என ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக்கொண்டே நாற்பது நிமிஷங்கள் சம்யுக்தா வீட்டில் இருந்து விட்டேன்.

“போகவே இஷ்டமில்லை.” – எழுந்துகொண்டேன்.

“நீ என் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் அருண்.”

இரவில் தூக்கமே வரவில்லை. ஆசைப்பட்டது மாதிரியே ஆறு மணிக்கு மேல் சம்யுக்தா எப்படி இருப்பாள் என்பதைக் கொஞ்சம் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். இப்போது அதுவும் போதவில்லை. இரவில் தூங்கும்போது எப்படி இருப்பாள்? காலையில் தூக்கம் கலையும்போது எப்படி இருப்பாள்? அதயெல்லாம் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் பார்க்க முடியாது. அதற்கு நண்பன் என்ற உறவுமுறை போதாது. ஆனால் மனதிற்குள் அந்த முறையை நான் எப்போதோ தாண்டியாகி விட்டது.

மறுநாள் அவளிடம், “எனக்கு எப்போதும் உங்களுடனே இருக்கவேண்டும் போலிருக்கிறது சம்யுக்தா… ஒன்று கேட்டால் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களே?”

“நான் உன் அப்பாவின் மாணவி அருண். எதையும் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டேன். தயங்காமல் கேள்…”

“எனக்கு உங்களுடைய வயதைச் சொல்வீர்களா?”

“எதற்குக் கேட்கிறாய்?”

“என்னைவிட வயதில் மூத்த பெண்களைத்தான் எனக்குப் பிடிக்கும். உதாரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் என்னைக் கவர்ந்ததில்லை. ஆனால் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன், வித்யாபாலன் என்றால் உருகுவேன்.”

“புரிகிறது அருண். இந்த மனநிலை பற்றி உன்னுடன் இன்னொரு நாள் பேசுகிறேன்.”

“சம்யுக்தா, நான் உங்களுக்கு வெறும் நண்பன் மட்டும்தானா?”

“ஆமாம். அதைவிட மேன்மையான தளம் கிடையாது அருண்.”

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. நண்பன் என்ற தளத்திலேயே நின்று கொண்டிருப்பது எனக்கு போதுமானதாக இல்லை. ஆனால் வேறொரு தளத்திற்கு ஆசைப்பட்டு இருக்கும் இந்தத் தளத்தையும் இழந்து விடக்கூடாதே என்றும் தோன்றியது. அதே சமயத்தில் இதே தளத்தில் தொடர்வது பெரிய விசனமாகவும் இருந்தது. நிறைய யோசித்து, புதிய தளத்திற்கு உயர்வது, அது முடியாமல் போனால் இருக்கும் இந்தத் தளத்தையும் அழித்து விடுவது என்ற தீர்மானத்திற்கு கடைசியில் வந்தேன்.

அதை செயல்படுத்த சம்யுக்தாவின் பிறந்த நாள்தான் பொருத்தமானது. நவம்பர் 17, சனிக்கிழமை. வீட்டில்தான் இருப்பாள். அன்று அவளை நெருங்கி விடுவது என்று முடிவு செய்தேன்.

இரண்டாயிரம் ரூபாயில் ஒரு அழகிய மலர்க்கொத்தை வாங்கிக் கொண்டேன். அதில் ‘பிரியமான என் சம்யுக்தாவிற்கு’ என்று எழுதி கையெழுத்திட்டு அதை ஒரு குழந்தையைத் தூக்குவது போல் கவனமாக எடுத்துக் கொண்டேன்.

அவள் வீட்டுத் தெருவிற்குள் நுழைந்தபோது, தெருமுனையில் என் அப்பாவின் பென்ஸ் நின்று கொண்டிருந்தது. மனதில் ஓர் அச்சம் படர்ந்தது. அப்பாவின் கார் ஏன் இங்கு நிற்கிறது? அப்பாவும் சம்யுக்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வந்தாரா? அப்படியானால் ஏன் தெருமுனையில் இவ்வளவு தூரம் தள்ளி காரை நிறுத்த வேண்டும்? என்னவோ என் மனதை நெருடியது. திரும்பிப் போய்விடலாமா? ஆனால் மனம் ஏனோ அதற்குச் சம்மதிக்க மறுத்தது. மலர்க்கொத்தை அவளிடம் கொடுக்காமல் திரும்பிப்போக எனக்கு விருப்பம் இல்லை. வீட்டிற்குப் போகவும் தயக்கமாக இருந்தது. யோசித்தேன். மனதில் ஒருவிதமான மூர்க்கத்தனம் கிளம்பியது. சம்யுக்தாவிற்கு நான் நண்பன். எனக்கு அவள் சினேகிதிக்கும் மேலானவள். அப்பாவிற்கு எத்தனை உரிமை உண்டோ அத்தனை உரிமை எனக்கும் அவளிடம் உண்டு.

மிக மிக மெதுவாக மாடிப்படிகளில் ஏறினேன். நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. உடம்பெல்லாம் வியர்வை ஊறியது. குறுகிய வராந்தாவில் சப்தம் எழுப்பாமல் நடந்தேன். சம்யுக்தாவின் வீட்டுக் கதவுகள் சாத்தியிருந்தன. சாத்திய கதவுகளைப் பார்த்துக்கொண்டே நின்றேன். கதவுகள் சாத்தப் பட்டிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. கதவைத் தட்டவும் எனக்கு இஷ்டமில்லை.

உள்ளே அப்பாவின் குரல் தெளிவாகக் கேட்டது. கதவுகளைத் திறக்காமலே எனக்குச் சில உண்மைகள் புரிந்தன. உதடுகளைக் கடித்துக் கொண்டேன். நிமர்ந்து பார்த்தேன். சற்றுத் தள்ளி மேலே கதவுகள் இல்லாத வென்டிலேட்டர் தெரிந்தது. குட்டைச் சுவரில் ஏறி நின்றேன். சரிந்து சுவரைப் பிடித்தபடி மெதுவாக வென்டிலேட்டர் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன்.

என் அப்பா சம்யுக்தாவின் மடியில் படுத்திருந்தார்; சம்யுக்தா அப்பாவின் தலைமுடியை கோதிவிட்டுக் கொண்டிருந்தாள். அப்பா நிமர்ந்து அவள் கன்னத்தில் முததமிட்டார். பின் அவளும் குனிந்து அப்பாவின் உதட்டில் முத்தம் தந்தாள். இவள் என் சம்யுக்தாவா? இவரென்ன என் அப்பாவா? அந்தக் காட்சியைப் பார்க்க பார்க்க எனக்கு அவமானமாக இருந்தது. கீழே இறங்கினேன்.

இந்த மலர்க்கொத்தை எவ்வளவு ஆவலுடன் சுமந்து வந்தேன்? கோபம் கோபமாக வந்தது. சாத்தியிருந்த கதவுகளை எட்டி உதைக்க கால்கள் துடித்தன. அவ்வளவு பெரிய மலர்க்கொத்தை திரும்ப எடுத்துச் செல்வது முடியாத விஷயம். கதவின் வெளிப்புறம் பூட்டுப் போடுவதற்கான இரும்பு வளைவில் அதைச் செருகிவிட்டு சிறிது நேரம் மெளனமாக நின்றேன்.

உள்ளே சிரிப்புச் சத்தம் பலமாகக் கேட்டது. ஒரு எம்டியும், அவரின் பெண் செயலாளரும் உள்ளே பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்… நான் மெதுவாக கீழே இறங்கி நடந்தேன்.

தெருமுனையில் அப்பாவின் பென்ஸ் காரில் சில சிறுவர்கள் பெரிய ஆணியால் கோடு போட்டுக் கொண்டிருந்தது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

வீடு வந்து சேர்ந்த பின்புதான் நான் உணர்ந்தேன். சம்யுக்தா வீட்டுக் கதவில் நான் விட்டுவந்த மலர்க்கொத்தில் என் கையொப்பம் இருக்கிறது. விட்டுச் சென்றது நான்தான் என்பது அப்பாவிற்குத் தெரிந்துவிடும். இதை நான் நினைத்தே பார்க்கவில்லை.

வெளி உலகில் தங்க உரை நிகழ்த்திக் கொண்டு, அந்தரங்க உலகில் சல்லாபங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அப்பாவை நான் எதிர்நோக்கியாக வேண்டும். என்னை என் அப்பா எதிர்நோக்கியாக வேண்டும். அவரை எதிர்நோக்க எனக்குப் பயமில்லை. நான் தயாராகி விட்டேன். அப்பா பயந்துதான் ஆகவேண்டும். ஊருக்கெல்லாம் சொல்கிறதுபோல உள்ளும் புறமும் ஒன்றாக அவர் இல்லையே? வரட்டும் அப்பா… பார்க்கிறேன்.

வந்தார் அப்பா. என்னைப் பார்த்ததும் தலை குனிவார்; என்னுடன் பேசவே வெட்கப் படுவார் என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்த எதுவுமே நடக்கவில்லை. எப்போதும் போலவே “ஹலோ அருண்…” என்றபடியே வந்தார். என்னால்தான் எப்போதும்போல ஹலோ டேடி என்று சொல்ல முடியவில்லை. அவரை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. அவரைவிட்டு விலகி விலகியே நின்றேன். தீவிரமாகப் படிப்பது போல் பாசாங்கு காட்டினேன். தனியாகவே சாப்பிட்டேன். அம்மாவுடன் கூடச் சகஜமாகப் பேச முடியவில்லை.

சம்யுக்தாவின் மீது வெறுப்புதான் மேலோங்கியது. அவளைப் பற்றி எனக்குள் இருந்த ரம்மியமான ஓவியம் கலைந்தது. நினைக்க நினைக்க மனம் வலித்தது. தூரத்தில்தான் அவள் அழகிய அலை. அருகில் கானல். கோடீஸ்வரன் என்பதற்காக ஐம்பது வயதாகிவிட்ட எம்டியுடன் சல்லாபம் செய்யும் கேவலமானவள்தான் அவள்.

நான் எவ்வளவு இளைஞன். எத்தனை அன்புடன் அவளுக்கு கீழ்ப்படிபவன்!

என் மாருதியை எடுத்துக்கொண்டு பாலவாக்கம் பீச்சில் போய் தனியாக நின்றேன். ஆள் அரவம் இல்லாத தனிமை இதமாக இருந்தது.

அப்போது என் தோளை ஒரு கை மென்மையாகத் தொட்டது. திரும்பிப் பார்த்தால் அன்புடன் சிரித்தபடி அப்பா.

“வா, அப்படித் தள்ளிப்போய் உட்கார்ந்து பேசுவோம்.”

அவருடன் ஒரு யந்திரம் போல நடந்தேன். தாழ்வான நீண்ட பெஞ்சில் அமர்ந்தோம். இரண்டுபேருமே சற்றுநேரம் மெளனமாக இருந்தோம்.

“அருண் நீ ஏன் என்னவோ போல் இருக்கிறாய்? நான் தெரிந்து கொள்ளலாமா?”

அப்பாவை நிமிர்ந்து பார்த்தேன். என் பதிலுக்காக புன்னகையுடன் காத்துக் கொண்டிருந்தார்.

“எதுவாக இருந்தாலும் நீ பயப்படாமல் சொல்லலாம்…”

“ஒன்றும் தெரியாதது போலக் கேட்காதீர்கள். உங்களைப் போல் எல்லா உணர்வுகளும் உள்ள மனிதன்தான் நான்.”

“தெரியாமல்தான் கேட்கிறேன். சம்யுக்தாவின் பிறந்த நாளுக்கு மலர்க்கொத்து தர வந்தவன் கதவைத் தட்டிக் கூப்பிட்டு இருக்கலாமே?”

“நீங்கள் உள்ளே இருக்கும் போதா?”

“ஏன்… அலுவலகத்தில் நானும் அவளும் என் அறையில் எத்தனையோ மணி நேரங்கள் தனியாக இருக்கவில்லையா?”

“அப்படியானால் அன்று சம்யுக்தாவின் வீட்டில் நீங்கள் இருவரும் இருந்ததைப் போலத்தான் அலுவலகத்திலும் இருப்பீர்களா?”

சரியான சவுக்கடி. சட்டென அப்பாவின் முகம் மாறியது.

“ஓ… அப்படியானால் நீ கண்ணியக் குறைவான முறையில், உள்ளே இருந்த எங்களைக் கவனித்திருக்கிறாய்…”

“நான் கவனித்தது கண்ணியக் குறைவானது என்றால், நீங்கள் செய்த காரியம் அதைவிடக் கண்ணியக் குறைவானது.”

“நான் மணந்து கொள்ளப் போகிறவளுடன் அம்மாதிரி இருப்பது கண்ணியக் குறைவான செயல் அல்ல அருண்.”

பதிலுக்கு எனக்குக் கிடைத்த சவுக்கடி. அதிர்ந்து போய்விட்டேன். திகைத்துப் போய் அப்பாவைப் பார்த்தேன். அப்பா இரக்கத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மேல் கோபம் கோபமாக வந்தது.

“அப்படியானால் அது மேலும் கண்ணியக் குறைவான செயல் டேடி. மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ள நீங்கள் இந்த ஐம்பது வயதில் இன்னொரு பெண்ணை மணப்பது அநாகரீகமானது.”

“உனக்குப் புரியாது ஸன்… நான் நினைத்தால் சம்யுக்தாவை வெறும் ஆசை நாயகியாக மட்டும் என்னால் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் உண்மையில் அதுதான் அநாகரீகம். அம்மாதிரி காரியத்தை நான் செய்ய மாட்டேன்.”

“இதை என் அம்மாவிடம் சொல்லிப் பாருங்கள்.”

“உன் அம்மாவிற்கு இது தெரியும்…”

எனக்குள் தலை தூக்கிய பாம்பு பின் வாங்கியது.

“உன்னிடமும் சொல்வதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர் பாராமல் சில விஷயங்கள் நடந்து விட்டன…”

“ஒரு மனைவி இருக்கும்போது இன்னொரு பெண்ணை மணப்பது சட்டப்படி தவறு இல்லையா டேடி?”

“இல்லை. முதல் மனைவி ஆட்சேபித்தால்தான் தவறு.”

“அம்மா இதற்கு எப்படிச் சம்மதித்தார்கள்?”

“சரியாகப் புரிந்து கொள்ளும்போது எதையும் மறுக்க அவசியம் வராது மகனே.”

அப்பாவின் இந்த வார்த்தைகளுக்குப் பின் எனக்குப் பேச்சே வரவில்லை. தலை குனிந்தபடி இருந்தேன்.

அப்பா கனிவுடன் என் தோளைத் தொட்டு, “என் மேல் கோபமாக இருக்கிறதா அருண்?”

எனக்கு அழுகை வந்து விடும்போல் இருந்தது. அடக்கிக் கொண்டேன். அப்பா என்னையே கவனித்துக் கொண்டிருந்தார்.

“நான் ஒன்று கேட்பேன். பதில் சொல்வாயா?”

“…………………….”

“உனக்கு ஏன் சம்யுக்தாவிடம் இத்தனை உணர்வுச் சிக்கல்? ஏன் இப்படியெல்லாம் தவித்துப் போயிருக்கிறாய்?

இதற்குமேல் அப்பா எதுவும் என்னைக் கேட்டுவிட வேண்டாமே என்று தோன்றியது.

“டு யு லவ் ஹர்?”

என் கண்கள் கலங்கின. அப்பா என் கையை அன்புடன் பற்றிக் கொண்டார். பெருமூச்சு விட்டார்.

“ஸாரி மை டியர் ஸன்… அப்பாவை மன்னித்து விடு. சம்யுக்தாவையும் மன்னித்து விடு. உன் காதலுக்கு உதவுகிற நிலையில் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இருவருமே இல்லை. ஏன் தெரியுமா? எங்கள் இருவரின் உறவும் முழுமை அடைந்து விட்டது… இன் ஆல் ரெஸ்பெக்ட்ஸ். புரிகிறது இல்லையா, நான் என்ன சொல்கிறேனென்று…”

அவமானத்துடன் நான் தலை குனிந்திருந்தேன். கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

“நானும் சம்யுக்தாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்பதற்காக சம்யுக்தா இனி உனக்கு அம்மா மாதிரி என்றெல்லாம் சொல்ல மாட்டேன்… என்றைக்கும் அவள் உனக்கு ஒரு நல்ல சிநேகிதியாகவே இருப்பாள்…”

“……………………………”

“சரிதானே அருண் நான் சொன்னது. சம்யுக்தா உனக்கு மிக நல்ல தோழிதானே?”

“இல்லை இல்லை. நோ மோர் ப்ரண்ட்ஷிப் வித் ஹர்…”

அப்பா இதை எதிர் பார்க்கவில்லை.

உள்ளுக்குள் பகைமை புகைய நான் எரிந்து கொண்டிருந்தேன்.

“ஓகே தென். ஸி யு…” அப்பா எழுந்து என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் வேகமாக நடக்கலானார்.

கடைசியில், சுட்டெரிக்கும் உண்மை என்னவென்றால், என் அப்பா என் அம்மாவிற்கு ஒரு ஆதர்ஷ புருஷனாக இல்லை; எனக்குமே ஒரு ஆதர்ஷ அப்பாவாக இல்லை. எல்லாம் வெளி வேஷம். பெண் என்பவள் நல்ல சிநேகிதியாகிறவள்தான் என்று அடிக்கடி அப்பா சொன்னதும் வேஷம். பெண் என்றால் எல்லா ஆண்களுக்குமே அவளின் உடம்புதான் பிரதானம். அதுதான் நிதர்சனம்…

முற்றிலுமாக நான் உடைந்து விட்டேன். தாங்கிக் கொள்ள முடியாத துக்கத்தில் தனியாக வெகு நேரத்திற்கு அழுது கொண்டிருந்தேன்.

எனக்கு மிகவும் பிடித்தமான கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு அன்று எனக்கு ரசிக்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *