கிராதார்ஜுனீயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 5,276 
 

பாகம் மூன்று | பாகம் நான்கு | பாகம் ஐந்து

இந்திரியங்களை வென்று தவம் செய்யும் அர்ஜுனனை அப்ஸரஸ் பெண்களால் வசீகரம் செய்ய இயலவில்லை. இந்திரனிடம் சென்று இந்த முயற்சியில் தாங்கள் தோல்வி அடைந்ததாக கூறினர். இச்செய்தியைக் கேட்ட இந்திரன் அளவில்லா ஆனந்தம் அடைந்தான். ஆனாலும் மீண்டும் ஒருமுறை அர்ஜுனனை சோதனை செய்து பார்க்க விரும்பினான். அதனால் ஒரு முனிவரைப் போன்று வேஷமிட்டு தபோவனத்திற்கு சென்றான்.

முனிவரைக் கண்ட அர்ஜுனன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பூஜைகள் பல செய்து வரவேற்றான். ஆசனம் அளித்து அமரச் செய்தான்.முனிவரும் அர்ஜுனனுடன் சம்பாஷணம் செய்யலானார்.

“ நீ இப்போது வாலிப வயது இளைஞனாக இருக்கிறாய். இருந்தாலும் கடுமையான தவத்தினை மேற் கொண்டுள்ளாய். இது சந்தோஷமான விஷயமே. சம்சாரம் துக்கமயமாக இருக்கிறது. அதனால் விவேகமுடையவர்கள் சம்சாரத்தில் இருந்து விடுதலைப் பெற்று மோக்ஷம் அடையவே விரும்புகிறார்கள்.

ஆனால் நீயோ மோக்ஷம் அடைவதை விரும்பவில்லை. சத்ருக்களை நாசம் செய்து வெற்றி வாகை சூடுவதையே விரும்புகிறாய். சத்ருக்களை நாசமடையச் செய்வதினால் பெரும் பீடையே கிடைக்கும். மேலும் பாபமே வந்து சேரும். அதனால் நீ வெற்றிவாகை சூடும் எண்ணங்களை தவிர்த்து விடு. மோக்ஷம் பெற முயற்சியினை மேற்கொள்.

இந்த இந்திரகீலபர்வதம் புண்ணியமான இடமாகும் இங்கு பவித்திரமான கங்கை நதி ஓடுகின்றது. இங்கு மோக்ஷம் வேண்டி தவம் செய்தால் அதனை சுலபமாக நீ அடையலாம். “ என்று ஜிதேந்திரியனாகிய அர்ஜுனனுக்கு சோதனை செய்யும் நோக்கத்துடன் பலவிதமாக உபதேசம் செய்கிறார்

முனிவரின் உபதேசங்களைக் கேட்ட அர்ஜுனன் கூறினான், “நீங்கள் மிகவும் உசிதமாகவே கூறுகிறீர்கள். ஆயினும் நான் மோக்ஷம் பெற விரும்பவில்லை. நான் பாண்டுவின் மகன் அர்ஜுனன் ஆவேன். துரியோதனன் எங்களது எல்லா உடமைகளையும் அபஹரித்துக் கொண்டான். அதனால் எனது சகோதரர் யுதிஷ்டிரர் வெகு துக்கம் உடையவராக இருக்கிறார். நான் அவருடைய கட்டளைக்கு அடிபணிந்து கடுமையான தவத்தினை மேற்கொண்டிருக்கிறேன். தேவ இந்திரன் க்ஷத்திரியக் குலத்துக்கு தேவன். அவரை ஆராதனை செய்வதற்கு நான் இங்கு வந்திருக்கிறேன். திரௌபதி எனது பத்தினி. துரியோதனன் அவனது ராஜசபையில் அவளது வஸ்திர அபஹரணம் செய்ய செய்வித்தான்.

இப்போதும் கூட எங்கள் மீது வெகு துவேக்ஷம் கொண்டு இருக்கிறான். அதனால் எங்கள் சத்ருக்களை நாங்கள் நாசம் செய்து வெற்றிக் கனியினை அடைய வேண்டும். எங்களது உரிமைகளை நாங்கள் மீட்டு எடுக்க வேண்டும் என்பதே எனது அபிலாஷை ஆகும். அதனால் மோக்ஷம் பற்றி எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. நான் எங்கள் குல தேவனாகிய இந்திரனிடம் இருந்து அனுகிரகத்தைப் பெற வேண்டும். அவ்வாறு இயலவில்லையானால் எனது உயிரை இந்த இந்திரகீல மலையிலேயே முடித்துக் கொள்வேன். “

அர்ஜுனனுடையப் பேச்சுக்களைக் கேட்ட இந்திரன் மிகுந்த சந்தோஷம் அடைந்தான். அதனால் சிவபிரானை நோக்கி தவம் செய்யும் படி அறிவுறுத்தினான். அதன்பின்னர் கண் பார்வையில் இருந்து மறைந்து போனான்.

அர்ஜுனனும் சிவ பெருமானை நோக்கி கடீமையான தவம் செய்ய ஆரம்பித்தான். உண்ணா நோன்பு இருந்தான். ஒரு காலில் நின்று தவம் செய்தான் நீர் கூட அருந்தாமல் மிகக் கடுமையான தவம் செய்தான். அவன் செய்த கடுமையான தவத்தினால் கடும் வெப்பமும் ஏற்பட்டது. அதனை தாங்க இயலாத முனிவர்கள் சிவனை அணுகி வெப்பத்தில் இருந்து தங்களைக் காக்கும் படி முறையிட்டனர். சிவபிரானும் அவர்களுக்கு அபயம் அளித்தார்.

மூகன் என்ற பெயருடைய ஒரு அரக்கன் காட்டுப் பன்றியின் உருவம் எடுத்து அர்ஜுனனின் தவத்தைக் கலைக்க வந்தான். அதனால் மிகுந்த கோபம் அடைந்த அர்ஜுனன் அந்த பன்றியின் மீது தனது பாணத்தை எய்கிறான். அதேசமயத்தில் சிவபெருமானும் தனது பாணத்தை பன்றியின் மீது செலுத்துகிறார். ஒரே நேரத்தில் இருவரது பாணங்களும் பன்றியின் மீது தைத்தன. பன்றியும் மரணித்தது. அர்ஜுனன் தனது பாணத்தை எடுத்துக் கொள்ள பன்றியின் அருகில் வருகிறான்.

இத்துடன் கிராதார்ஜுனீயம் பாகம் நான்கு நிறைவடைந்தது.

கிராதார்ஜுனீயம் பாகம் ஐந்து தொடரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *