கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: March 26, 2022
பார்வையிட்டோர்: 8,436 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1. பட்டணம் போகிறான் | 2. பட்டணத்தில்

“டேய், அதோ வராண்டா ஜக்கு!” என்று மணி கூச்சல் போட்டான். “ஆமாண்டா, ஜக்கு தாண்டா!” என்றான் சீதா ராமன். உடனே அங்கிருந்த ஐந்தாறு பையன்களும், ‘ஹோஹ்ஹோ!’ என்று கைதட்டிச் சிரித்தார்கள்.

ஜக்கு தேரடித் தெருவைத் தாண்டி இந்த முடுக்குத் தெருவுக்கு வராமலே போய்விடத்தான் நினைத்தான், அங்கே தெருவில் ரோடுக்குக் கப்பி போட்டுக்கொண்டிருந்தார்கள். பெரிய ரோலர் எஞ்சின் ஒன்று குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண் டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே யிருந்த ஜக்கு வக்கு அந்த எஞ்சின் டிரைவரைப் போகச் சொல்லிவிட்டு தான் ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும்போல் இருந்தது. ஆனால் அது எப்படி முடியும்? இதைப் பார்த்துக்கொண்டே முடுக்குத் தெருவுக்குள் வந்துவிட்டான் அவன். பள்ளிக்கூடப் பையன்கள் கண்ணிலும் பட்டுவிட்டான். இனிமேல் எப்படி அவர்களைப் பார்க்காமல் போவது என்று அவர்கள் இருக்குமிடத்துக்குத் தைரியமாய் வந்துவிட்டான்.

“டேய், ஜக்கு! உன்னை இன்னிக்குப் பட்டணத்திலே பார்த்தேனே!” என்றான் மணி கிண்டலாக.

“எக்ஸிபிஷன் வாசல்லே டிக்கட்டுக்கூட வாங்கினியே!” என்றான் சீதாராமன்.

எல்லாப் பையன்களும் கொல்லென்று சிரித்தார்கள். ஜக்கு அவர்களிடமெல்லாம் முதல் நாள் காலையில் ஜம்பமடித்து வத்திருந்தான். “அடேய், பாருங்கடா! இன்னி ராத்திரி எங்கப்பாவோடே மெட்ராஸ் போகப் போகிறேன். இந்த லீவு உழுக்க அங்கேதான் இருக்கப் போகிறேன்” என்று புருடா பட்டிருந்தான்.

ஆனால் அன்றிரவு அவனுடைய அப்பா பட்டணம் கிளம்பும் பாது ஜக்குவைப் பார்த்து, “சீச்சீ! இன்னும் இரண்டு வாரத்லே பள்ளிக்கூடம் திறக்கப்போறா! நீ எதுக்கடா அங்கே? போ-போ!” என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் புறப்பட்டுப் போய்விட்டார். ஜக்குவுக்கு ஆத்திரம் ஒரு பக்கம்; அவமானம் ஒரு பக்கம். நாளைக்குப் போது விடிந்தால் மற்றப் பையன்கள் கண்ணில் பட்டால் அதைவிட அவமானம் வேறென்ன வேண்டும்? அதனால் காலை முதல் வீட்டை விட்டு வெளியில் கிளம்பாமலே இருந்தான். ஆனால் அம்மா சும்மா இருக்கப்படாதா? தேரடிக் கடைக்குப் போய் இரண்டு தேங்காய் வாங்கிக்கொண்டு வரச் சொல்லி, கையில் அரை ரூபாயைக் கொடுத்து அனுப்பினாள்.

ஜக்கு இப்படி வேறு வழி இல்லாமல் வந்து இவர்களிடம் மாட்டிக்கொண்டு விட்டான். இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, ‘வாயை மூடுங்கடா! என்னை மட்டும் இன்னிக்கு ராத்திரி தனியா வரச் சொல்லிட்டு அப்பா போயிருக்கார். தெரியுமாடா, பட்டிக் காடுகளா?” என்று வீறாப்பாகக் கூறினான்.

“இருந்தாலும் இருக்கும்” என்றான் சுப்புணி, அவனுக்கு ஜக்குவிடம் பயம். தனியாக ஆற்றங்கரைக்குப் போனால் அவன் கண்ணில் படாமல் இருக்க முடியாது, சுப்புணி சொன்னதைக் கேட்டதும் மற்றப் பையன்களும் அதை ஒப்புக்கொண்டார்கள்.

“உனக்கு என்னடாப்பா! பட்டணமெல்லாம் போய், சுத்திப் பார்க்கப் போறே!” என்றான் சீதாராமன்.

“எங்கேடா, எல்லாத்தையும் போய்ச் சுத்திப் பார்க்க போறேன்? எக்ஸிபிஷன் போவேன், பார்க் பேர் போவேன். பீச்சுக்குப் போவேன். ஜூவுக்குப் போவேன். ஹார்பருக்கும். போய் எங்கப்பாவோடே ‘ஜல உஷா’ கப்பல்லே ஏறிப் பார்ப்பேன். அந்தக் கப்பல் காப்டன் எங்கப்பாவோடே படிச்சவராம். சும்மா – ஒரு மைல், இரண்டு மைல் சமுத்திரத்திலே போகச் சொல்லிப் போயிட்டு வருவேன். அங்கே மோட்டார்ப் படகு இருக்காமே! அதிலே ஏறி ஹார்பரை ஒரு சுத்துச் சுத்துவேன். அவ்வளவுதான்!” என்று ஜக்கு அடுக்கடுக்காய்ச் சரடு விட்டுக் கொண்டு போனான்.

பிறகு, “அட, நேரமாயிடுத்தே. நான் போயிட்டு ஏழு மன வண்டிக்குக் கிளம்பணுமே!” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு ஜக்கு மெதுவாக நழுவினான்.

“டேய், உன்னை ஸ்டேஷன்லே வந்து பார்க்கறேன் டோய்” என்று அவன் காதில் விழும்படிக் கூவினான் மணி.

“ரைட்!” என்றான் ஜக்கு.

இப்படிச் சொல்லிவிட்டுப் போனானேயொழிய ஜக்குவுக்குப் பிறகு தான் பெரிய யோசனையாகப் போய்விட்டது. ‘என்னடா செய்வது? இப்படிச் சொல்லிவிட்டோமே!’ என்று மண்டையைக் கலக்கிக் கொண்டான்.

ஜக்கு தேங்காய் வாங்குவதையே மறந்து விட்டான். தெருக் கோடியில் அடுத்த வீட்டு அம்புலு நின்று கொண் டிருந்தாள். திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு அவளைக் கூப்பிட்டு, “அடி அம்புலு! சட்டுனு ஓடிப்போய் ஒரு பேப்பரும் பென்சிலும் எடுத்துண்டு வா! சட்டுனு வரலை, அப்புறம் பார்த்துக்கோ!” என்று மிரட்டினான்.

“என்னடா, ரொம்பத்தான் அதிகாரம் பண்றியோ! மூஞ்சியைப் பாரு!” என்று சொல்லிவிட்டு அம்புலு தன் வீட்டுக்குள் ஓடினாள். ஆனால் சற்றைக்கெல்லாம் அவனிடம் வந்து, ”அம்புலுன்னு கூப்பிட்டாப் போறாதோ? ‘அடி’ன்னு வேறே கூப்பிடணுமோ? போனாப் போறது. பாவம்னு கொண்டு வந்தேன், தெரியுமா!” என்று காகிதத்தையும் பென்சிலையும் அவனிடம் கொடுத்தாள்.

ஜக்கு ஒரு மூலையாகச் சென்று என்னவோ அவசர அவசரமாக அதில் எழுதினான். பிறகு அதை நன்றாக மடித்தான். “அடி அம்புலு! இந்தா, இன்னும் அரை மணி கழிச்சு இந்தக் கடுதாசைக் கொண்டு போய் எங்கம்மாவிடம் கொடுக்கணும். தெரியுமா? நான் ஒளிஞ்சிண்டு பார்ப்பேன். நீ அதைப் பிரிச்சுக் கிரிச்சுப் படிச்சயோ, அப்புறம் பார்த்துக்கோ!” என்று அதைக் கொடுத்துவிட்டுக் கையில் இருந்த எட்டணாவுடன் அந்தத் தெருவை விட்டு மறைந்தான்.

அவன் தலை மறைந்ததும் அம்புலு அதை மெதுவாகப் பிரித்து எழுத்துக் கூட்டி வாசித்தாள்; ”அம்மா! என்னைத் தேடாதே. நான் திரும்பி வர நாலு நாள் ஆகும் – ஜக்கு.” அம்புலு விழித்தாள். ‘பாரேன் இவனுடைய தைரியத்தை நாலு நாள் ஆகுமாமே திரும்பி வர!” என்று எண்ணிக்கொண்டே ஜக்குவின் அம்மாவிடம் கொடுக்க ஓட்டமாய் ஓடினாள்.

ஜக்கு ஓட்டமும் நடையுமாக ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஓடினான். அவன் எண்ணம், அடுத்த ஊரில் இருக்கும் அத்தை வீட்டுக்காவது போய் நாலு நாள் கண் மறைவாக இருந்துவிட்டு வந்துவிடுவது என்பது தான். அங்கே போக இருபது காசு டிக்கட்டுச் சார்ஜ். அது போனால் பாக்கி கையில் முப்பது காசு இருக்கும், பசி எடுத்தால் பார்த்துக்கொள்ளலாம். இரண்டு இட்டிலி ஒரு வடை வாங்கித் தின்றால் கூடப் போதும். அதற்கு மேல் ஒரு டம்ளர் ஜலம்! அடேயப்பா! வயிறு நிறைந்து விடுமே!

ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்த பிறகு அங்கே அவனுக்கு ஒரு புது யோசனை தோன்றியது. வண்டி வர இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. எட்டு மைல் தானே! நடந்தே போய் விடலாமே!

“உம்; அது தான் சரி!” என்று ரெயில்வே லயனோடு நடக்க ஆரபித்தான். நடக்க நடக்க வழி நீண்டு போய்க் கொண்டே யிருந்தது. அடுத்த ஸ்டேஷன் வந்தது. அப்பொழுதும் அங்கே வண்டி வர ஒரு மணி ஆகும். அதற்குள் ஊரிலிருந்து யாராவது தேடிக்கொண்டு வந்துவிட்டால்? அது ஆபத்து தானே என்று மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். இன்னொரு ஸ்டேஷனும் வந்தது. அதற்கு அடுத்தது தான் அத்தை ஊர். இதற்குள் இருட்டி வெகு நேரமாகிவிட்டது. அத்தை ஊருக்கருகில் ஒரு பெரிய ஆற்றுப்பாலம் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும். வர வர மனசில் பயம் முண்ட ஆரம்பித்தது. இருட்டில், தூரத்தில் குத்துக் குத்தாய் நின்ற கருக மரமெல்லாம் குட்டிப் பிசாசு உட்கார்ந்திருப்பதுபோல இருந்தன. திரும்பிப் பார்த்தால் திக், திக்கென்றது! தூரத்தில் ரெயில்வே லயனில் சிவப்பாய் ஒரு விளக்குத் தெரியவே அதையே பார்த்துக்கொண்டு ஜக்கு நடந்தான். உடம்பெல்லாம் குப்பென்று வேர்த்துப் போயிற்று. நடந்து நடந்து கால் வலி வேறே. தனியாய் மொட்டு மொட்டு என்று நடக்கவே பயம். அதனால், ‘என்னை யாரென்று எண்ணினாய், பயலே!’ என்ற ஒரு பாட்டின் அடியை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டே சிவப்பு விளக்கைப் பார்த்தபடி நடந்தான். பக்கத்து வயல்களில் தவளைகள் ‘கொடாக் கொடாக்’ என்று கத்தின. ஏதோ பட்சிகள் சல சலத்தன. ஜக்கு நடையைக் கூடியமட்டும் வேகமாகவே போட்டு நடந்து கொண் டிருந்தான்.

சிவப்பு விளக்கு இருந்த இடம் கிட்டே வந்த பிறகுதான் தெரிந்தது. அது தான் ஆற்றுப் பாலம் ! ஒரு பர்லாங் அகலம் அந்த ஆறு. ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. இல்லாவிட்டால் இறங்கிப் போகலாம். ரெயிலில் வராமல் போனோமே என்று இருந்தது அவனுக்கு. வரும் வழியில் வடைகூட வாங்கிக் கொள்ளாமல் வந்துவிட்டான். நல்ல பசி வேறே. என்ன செய்வது? நல்ல வேளையாக அந்தப் பாலத்தில் மனிதர்கள் நடக்க இரண்டு தண்டவாளத்துக்கு நடுவில் ஓரடி அகலத்தில் பலகை போட்டிருந்தது. அதன் வழியாக நடக்க ஆரம்பித்தான், பாதித் தூரங்கூட வரவில்லை. அப்போதுதான் அவன் நன்றாகக் கவனித்தான். பின்னாலிருந்து அவனைத் தாண்டிப் பளிச்சென்று வெளிச்சம் அடித்துக்கொண் டிருந்தது. ‘கடகட’ என்ற சத்தம்! ‘வீல், வீல்’ என்று ஊதல் ரெயில் வந்துகொண்டிருக்கிறது!

ஜக்கு அவனுக்கு இருந்த பிரமையில் அவன் ஆற்றில் விழாமல் இருந்ததே நல்ல காலந்தான்! பேசாமல், ஒன்றும் தோன்றாமல் ஆணி அடித்தது போல் நின்றுவிட்டான். வெகுநேரம் வரையில் என்ன நடந்தது என்றே அவனுக்குத் தெரியாது. கடைசியாக யாரோ அவனைத் தொட்டுக் கூப்பிட்டது தெரிந்தது. பார்த்தால் பாலத்துக்கு அருகில் ரெயில் நின்றிருந்தது. எஞ்சினிலிருந்த ஒருவன் கரித்துணியோடு இறங்கி வந்து, அவனைப் பிடித்து உலுக்கி, “தம்பி, யார் நீ?” என்று அதட்டினான்.

“நான் தான், சார் ! எம் பேரு வந்து, சார்! ஜக்கு சார், எம் பள்ளிக்கூடத்துப் பேரு. ஜகந்நா தன் சார்?” என்றான் ஜக்கு.

“அது சரி; இப்படித்தான் ரெயில் வர சமயத்துலே பாலத்துலே நிக்கறதோ?”

“வந்து சார்… வந்து…”

“பயப்படாதே. சொல்லு. நானே உன்னை ரெயில்லே கொண்டுபோய் விடறேன், சொல்லு!”

ஜக்குவுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. எப்படியோ ஒரு தைரியமும் உண்டாயிற்று. அதனால் யோசனையும் தோன்றியது.

“நான் பட்டணத்துக்குப் போகணும், சார். எங்கப்பா வோடே வந்தேன், சார். இறங்கி ஒரு ஸ்டேஷன்லே தண்ணி சாப்பிடறத்துக்குள்ளே எங்க அப்பா இருந்த வண்டி முன்னால் போயிடுத்து, சார். நான் ஓடி வரதைப் பார்த்துட்டு எங்கப்பா, ‘அடே அடுத்த வண்டியிலே வாடா! நான் போய் எக்மோர் ஸ்டேஷன்லே இருக்கேன்’னு இரைஞ்சு சொன்னார், சார், அதான் சார்!…” என்றான். அந்த எஞ்சின் ஆளுக்குப் பரிதாப மாகப் போய்விட்டது. ஜக்கு சொன்னதை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. பார்த்தால் பத்துப் பன்னிரண்டு வயசு தான் இருக்கும். ‘இவன் இப்படியெல்லாம் ஜோடித்துப் பொய் சொல்லப்போகிறானா. என்ன?’ என்று பரிதாபப்பட்டு அவனை எஞ்சினிலேயே ஏற்றிக்கொண்டான்.

‘போயும் போயும் அந்த ரோடு ரோலர் எஞ்சினிலே போகணும்னு ஆசைப்பட்டேனே! இப்போ நிஜ ரெயில் எஞ்சினிலேயே போகிறேனே! என்று ஜக்கு ரொம்ப சந்தோஷப் பட்டுக்கொண்டான். மனசிலிருந்த பயம், கவலை எல்லாம் மறந்துவிட்டது அவனுக்கு! பசிகூட மறந்துவிட்டது, ஆனால் எஞ்சின் டிரைவருக்குப் பையன்கள் என்றால் உயிராம்! அவனுக்கு மூன்றும் பெண் குழந்தைகளாம். அதனால் ஜக்கு விடம் அலாதி அன்பு காட்டி அவனுக்குத் தன்னிடமிருந்த ரொட்டியும் டீயும் கொடுத்தான். அடுத்த ஜங்ஷன் வந்ததும் டிரைவர் அவனை அழைத்துக்கொண்டு போய், கார்டு வண்டியில் படுத்துத் தூங்கும்படி சொல்லிவிட்டான். “எக்மோர் வந்தால் எழுந்திருக்கலாம்; பேசாமல் தூங்கு!” என்று டிரைவர் சொன்ன போது ஜக்குவுக்கு ரொம்ப ஏமாற்றமாய் இருந்தது. நிஜ ரெயில் ஓட்ட அன்றைக்குள் கற்றுக்கொண்டு விடலாம் என்ற ஆசை வீணாகிவிட்டது. ‘அட, அந்த ஊ தலைத்தான் நாலைந்து தரம் அழுத்தி ஊதச் செய்தோமா?’ என்று ஏக்கப்பட்டுக்கொண்டே தூங்கிப் போனான்.

“தம்பி, எழுந்திரு!” என்று யாரோ எழுப்பியதும் ஜக்கு வாரியடித்துக்கொண்டு தூக்கத்திலிருந்து விழித்தான். பொழுது விடிந்திருந்தது.ஜே, ஜே என்று கூட்டமும் சத்தமுமாய் இருந்தன. எழும்பூர் ஸடேஷன் இது என்று அவனுக்கு உடனே தெரிந்துவிட்டது. முதல் நாள் இரவில் தோன்றிய பயமெல்லாம் ஒரு நொடிக்குள் மறுபடியும் வந்து விட்டது.

“வா. உங்க அப்பா எங்கிருக்கிறார் காட்டு! உன்னைக் கொண்டு விட்டுவிடுகிறேன்!” என்றான் எஞ்சின் ஆள்.

ஜக்கு பேந்தப் பேந்த விழித்துக்கொண்டே அவனுடன் இறங்கிச் சென்றான். ஓரிடத்திலாவது அப்பாவைக் காணவில்லை. அவன் சொன்னது உண்மையாய் இருந்தாலல்லவா அப்பா அவனுக்காகக் காத்துக்கொண் டிருப்பார்!

“ஒருவேளை நடுவிலேயே இறங்கி உனக்காகக் காத்திருப்பாரோ?” என்றான் எஞ்சின் ஆள்.

“ஆமாம், ஆமாம்; அப்படித்தான் இருக்கும்!” என்றான் ஜக்கு.

அப்படிச் சொல்லி முடிக்கவில்லை! அதோ, எதிரே அவனைப் பார்த்துக்கொண்டே வேகமாய், கண்களில் கோபத்தீ பறக்க வருவது யார்? ஐயையோ, ஜக்குவின் அப்பாவேதான்

ஜக்குவுக்குக் கால்கள் வெட வெடுத்தன. “அப்பா, தெரியாமல்… இனிமே இப்படிச் செய்யலே அப்பா!” என்று ‘ஹோ’ என்று அழுதான் ஜக்கு.

ஜக்கு “பிள்ளை தெரியாமல் செய்திடுச்சி. அடிக்காமே கூட்டிக் கிட்டுப் போங்க” என்று அனுப்பினான் எஞ்சின் ஆள்.

‘நிஜமாகவே அப்பா எப்படி ஸ்டேஷனுக்கு வந்தார்?’ என்று ஜக்கு ஆச்சரியப்பட்டான். அம்புலு அவனுடைய அம்மாவிடம் கடிதத்தைக் கொடுத்தாள். கூடவே மணி வந்து, ‘ஜக்கு ஏழு மணி வண்டிக்குப் பட்டணம் போயிட்டானா?” என்று கேட்டான். அவனுடைய அம்மா பயந்து உடனே பட்டணத்திலிருந்த ஜக்குவின் அப்பாவுக்கு விவரமாய் அவசரத் தந்தி கொடுத்துவிட்டாள். அதனால் வண்டி வருகிற சமயத்துக்கு ஜக்குவின் அப்பா ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார். இதெல்லாம் ஜக்குவுக்குத் தெரியவே தெரியாது. எஞ்சின் டிரைவருக்கும் தெரியாது. எப்படித் தெரியும், நீங்கள் தான் சொல்லுங்களேன்?

– தொடரும்…

– ஜக்கு, முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1952, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *