கிராதார்ஜுனீயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 4,127 
 

முதல் பாகம் | பாகம் இரண்டு

முனிவர்களுக்குத்தான் சாந்தம் மிக அவசியம். அரசர்களுக்கு சாந்தம், பொறுமை அவசியமல்ல. அதனால் சத்ருக்கள் மீது போர் தொடுத்து நாசம் செய்ய வேண்டும், என்று யுதிஷ்டிரருக்கு திரௌபதி உபதேசித்து விட்டு அமைதியாகி விட்டாள்.

அதன் பின்பு பீமனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடுவே சம்பாஷணம் ஆரம்பித்தது. பீமசேனனுக்கு திரௌபதியின் கூற்று சத்தியமானதும், வெகு சிரேஷ்டமாகவும் தோன்றியது. தர்மராஜரைப் பார்த்து , அண்ணா! திரௌபதியினுடைய வசனம் மிக அற்புதம். பிரகஸ்பதியால் கூட இவ்விதம் பேச இயலாது. அவளின் வசனங்கள் மிகவும் அர்த்தங்கள் பொதிந்தது. அவளுடைய கருத்துக்களை நாம் ஆமோதிக்க வேண்டும். நீங்கள் சிறந்த , உயர்ந்த அறிவுடையவர் ஆவீர்கள். அவள் கௌரவர்களினால் அடைந்த அவமானங்கள் எவ்வளவு ?முன்னொரு காலத்தில் நமது வீர தீரங்களைப் பார்த்த தேவர்கள் மிக்க மகிழ்ச்சி உடையவர்களாக இருந்தார்கள். ஆனால் தற்போது அவகாசம் செய்கிறார்கள். நமக்கு வீரம் மிக முக்கியம். நீங்கள் பன்னிரெண்டு வருஷ கால முடிவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் அது வியர்த்தமே ஆகும் …

செல்வத்தை அனுபவித்த யாராலும் அதனை உரியவர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் எண்ணம் வருமா ?அதனை நாம் திரும்ப பெற இயலுமா? நமக்கு இது அவமானம் அன்றோ ? அதனால் நாம் இன்னும் அமைதி காக்க வேண்டாம். பொறுமையைக் கை விடுங்கள். வீரத்தினைக் கடை பிடியுங்கள். யுத்தம் செய்து சத்ருக்களை நாசம் செய்வோம். “என்றான் பீமன்

பீமனுடைய ஆவேசப் பேச்சுக்களைக் கேட்ட யுதிஷ்டிரர் உபதேசிக்க ஆரம்பித்தார். “பீமா ! உனது பேச்சுகள் அர்த்தங்கள் பொதிந்தவை. இருந்தாலும் நாம் இன்னும் சிறிது இது குறித்து சிந்திக்க வேண்டும். எல்லா கார்யங்களையும் அவசர அவசரமாக செய்தல் கூடாது. நிதானம் அவசியம். சாந்தமே முக்கிய சாதனம். துஷ்டர்கள் இப்போது சுகம் அனுபவிக்கிறார்கள் என்றாலும் இறுதியில் அவர்கள் சர்வ நாசம் அடைவார்கள்.” என்று கூறினார்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது வியாச பகவான் ஆகிய முனி சிரேஷ்டர் அங்கு வருகை தந்து அருளினார் வியாச பகவானைக் கண்ட யுதிஷ்டிரருக்கு மகா ஆனந்தம் ஏற்பட்டது.

வியாசமுனிவருக்கு செய்ய வேண்டிய விதிமுறைகளுடன் பூஜைகளைச் செய்கிறார். மிகவும் வணக்கத்துடன் வரவேற்று அமரச் செய்தார். “முனிவரில் சிறந்தவரே! நீங்கள் இங்கு வந்து அருள்புரிந்ததால் எங்கள் ஜன்மம் சாபல்யம் அடைந்தது. நீங்கள் ஆசையை எல்லாம் கடந்தவர்கள் ஆவீர்கள். எங்களிடம் கேட்பதற்கு என்ன உள்ளது! அதனால் தாங்கள் இங்கு வந்தது என்ன பிரயோசனம் ? இருந்தாலும் உங்களுடைய வசனங்களைக் கேட்பதற்கு மிகவும் ஆவல் உடையவனாக இருக்கிறேன்” என்றார்.

யுதிஷ்டிரர் கூறியதைக் கேட்ட வியாச பகவான் சொல்கிறார்.

“அரசர்களில் சிறந்தவனே ! எல்லா மக்களிடமும் சமமான பிரியம் உடையவன். உன்னுடைய குண ஸ்வபாவங்களைக் கண்டு ஆனந்தப்படுகிறேன். முனிவர்கள் போன்ற இந்த ஸ்வபாவம் போற்றத் தக்கது. உனது சத்குணங்களினால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் மோக்ஷம் சித்திப்பதற்காக பிரயத்தனம் செய்கிறோம். அதனைத் தவிர வேறு விசேஷ பிரியம் இல்லை. இருந்தாலும் சத்ஜனங்கள் மீது விசேஷமான பிரியம் உள்ளது

அதனால் சில உபதேஷங்களைச் சொல்கிறேன். துரியோதனன் ஆயுதப் பயிற்சியில் சிறந்து விளங்குகிறான். உங்களில் சூரனாகிய அர்ஜுனன் ஆயுதப் பயிற்சியை இன்னும் மேம்படுத்த வேண்டும். அதனால் அர்ஜுனன் பசுபதியாகிய சிவனை நோக்கி தவம் செய்தல் வேண்டும். தவத்தின் மஹிமையால் சிவபிரானிடம் இருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெற வேண்டும்.

நான் ஒரு மந்திரத்தைச் சொல்கிறேன். அந்த மந்திரத்தின் மஹிமையால் தவத்தை மேற்கொள்ள வேண்டிய சக்தி கிடைக்கும். முதன்மையாக இந்திரனை நோக்கி தவம் செய்தல் வேண்டும். இவ்வாறு ஆராதிப்பதனால் இந்திரனுடைய அனுகிரகத்தால் வெற்றி நிச்சயம் கிட்டும். நான் ஒரு யக்ஷனையும் அனுப்பி வைக்கிறேன். அந்த யக்ஷன் அர்ஜுனனை தபோவனம் கொண்டு செல்வான். “என்று கூறிய வியாச பகவான் கண்களில் இருந்து மறைந்து போனார்.

வியாச பகஹானால் அனுப்பி வைக்கப் பட்ட யக்ஷன் அங்கு வந்தான். அவனுடன் தபோவனம் செல்ல அர்ஜீனனும் சித்தமானான் திரௌபதி கூறினாள் , “தபம் நன்கு முடிவடைந்து பலன் தரும் வரை ஆசரிக்க வேண்டும். தவத்தின் பலனால் நமது சத்ருக்களை நாம் வெற்றியடைய வேண்டும். அதற்கு ஏற்ப தவத்தை மிக சாமர்த்தியமாக கைக் கொள்ளல் வேண்டும்.

வியாசபகவானின் வசனங்களை நாம் சிரத்தையாக கடைபிடித்து நமது மனோரதத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். “என்று அர்ஜுனனை வாழ்த்தி அனுப்புகிறாள். அர்ஜுனனும் துரியோதனன் முதலிய சத்ருக்களை நினைவு கூர்கிறான். தனது கவசங்களை அணிந்து கொள்கிறான். யக்ஷனுடன் செல்ல தயாராகிறான். இவ்வாறு இந்திரகீல பர்வதத்திற்கு அர்ஜுனனுடைய பிரயாணம் ஆரம்பித்தது.

தேவர்கள் அனைவரும் அர்ஜுனனை வாழ்த்திப் பூமாரிப் பொழிந்தனர்.

இத்துடன் கிராதார்ஜுனீயம் இரண்டாம் பாகம் முடிவடைந்தது.

மூன்றாம் பாகம் தொடரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *