அமாரு சோனாரு ஆஷா

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 4,990 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அது ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம். ஆனால் அது ஒன்றும் திருவிழா ஊர்வலம் அல்ல. 

வெள்ளைக்காரன் செய்த வேலை – தேசப் பிரிவினையின் கொடுமை – கிழக்கு வங்காளத்திலிருந்து அகதிகள் வருகை. மேலாடை கிழிக்கப்பட்ட நிலையில் சிலர். ஓராடையில் உடம்பை மறைத்தபடி, அதிலும் ரத்தக் கறையோடு சிலர். கற்பை இழந்தும் உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு, கைக்கு அடக்கமான பாத்திரங்களோடு கால் நடையாகவே இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். 

அந்தக் கூட்டத்தில், அதோ அந்தச் சாலையின் ஓரத்தில் ஓர் எண்பது வயது மூதாட்டி. தலையிலே ஒரு கூடை; கையிலே மூடி போட்ட ஒரு கூடை; தோளிலே ஒரு துணி மூட்டை. 

வயதான பிறகும் வறுமையோ கஷ்டமோ வந்து உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதைவிட வேறு கொடுமை கிடையாது. 

அந்த மூதாட்டியின் அருகே பதினெட்டு வயது இளம்பெண். பெயர் ஆஷா எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் சந்திரனைப் பார்ப்பது போலிருக்கும் அவள் அழகு. வங்காள பாணியில் ஆடை உடுத்தினால் இந்தியாவின் எந்த இனத்து ஆடவனும் திருணத்திற்கு முந்துவான். அவள் இப்போது உடுத்தியிருந்த ஆடை எப்படி இருந்தது என்பதை அறிய முடியாமல் அவள போர்த்தி இருந்த ஆடை தடுத்தது. அந்தப் போர்வையை விலக்கிக் கொண்டு பார்க்க முடியுமானால் அந்த உடம்பு ஒரு கதையையே சொல்லி விடும். 

மார்பக ஆடை கிழிககப்பட்டு, மார்பகத்தின் மீது நாசக் குறிகளும் ரத்தக் காயங்களும் இருந்தன. ஒரு வேங்கை மட்டுமே கடித்த உடம்பாக அது இல்லை. ஏழெட்டு வேங்கைகள் பசியெடுத்து விழுந்தது போல் தோன்றிற்று. 

ஆம். டாக்கா நகரத்துத் தெருக்களிலே வானுலகத்து மாது போல் வலம் வந்து கொண்டிருந்த ஆஷா, பலவந்தமாகக் கெடுக்கப்பட்டாள். 

அவளது தந்தை ஜோதிகுமார் பானர்ஜி டாக்காவில் பிரபலமான மூக்குக் கண்ணாடி வியாபாரி. நேர்மையான வியாபாரி என்று பெயர் பெற்றவர். ஆஷாவின் தாய் சுசித்ராவே கூடப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பாள். 

தாயும் மகளும் பக்கம் பக்கமாக நின்றால், யார் தாய், யார் மகள் என்று தெரியாது. 

சில உடம்புகளும் உள்ளங்களும் எவ்வளவு வயதானாலும் வாலிபத்தை இழப்பதில்லை.

சுசித்ராவுக்குத் திருமணம் ஆன மூன்றாவது ஆண்டு, ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போய்விட்டது. ரெண்டாவது பிறந்ததுதான் ஆஷா. அதற்குப் பிறகு குழந்தையே பிறக்கவில்லை. 

‘பெண்ணின் தலையெழுத்து அவளது அழகில் இருக்கிறது’ என்பார்கள். ஆஷா பிறந்த போதும், வளர்ந்த போதும் அவளது விதி இவ்வளவு மோசமாக இருக்கும் என்று சுசித்ராவோ பானர்ஜியோ எண்ணியதில்லை. 

பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பலரிடையே பானர்ஜியின் குடும்பம் முக்கியமானது. 

பானர்ஜியைத் தூணில் கட்டி வைத்து அவர் கண்ணெதிரிலேயே தாயையும், மகளையும் கற்பழித்தார்கள் சில முரடர்கள். 

கணவனோடு முதலிரவு என்றாலே அந்த வேதனைக்குக் கொஞ்சம் பயப்படும் இளம் பெண்கள். கன்னி கழியாத நிலையிலேயே இரண்டு மூன்று பேரால் கெடுக்கப்பட்டால் எந்த நிலையில் இருப்பார்கள்? 

சுசித்ராவும், பானர்ஜியும் கலவரத்தில் கொல்லப் பட்டார்கள். வயது முதிர்ந்த பாட்டியோடும் வழிந்தோடும் கண்ணீரோடும் அகதிகள் கூட்டத்தில் சேர்ந்து கொண்டாள் ஆஷா. 

அழகான மாடப் புறா ஒன்று சிறகு முறித்துப் போடப்பட்டது போல், தள்ளாடித் தள்ளாடி அவள் நடந்து வந்தாள். அவளே அவ்வளவு தள்ளாடினால், வயது முதிர்ந்த பாட்டியின் நிலை என்ன? 

வழியில் எங்கேயும் சாப்பாடு கிடைக்கவில்லை. கூடையில் வைத்திருந்த காயந்து போன ரொட்டித் துண்டை அவ்வப்போது எடுத்துக் கடித்தவாறு பாட்டி உயிரைச் சுமந்து வந்தாள். அது கூட இல்லாமல் நடந்து வந்தாள் ஆஷா.

கல்கத்தா எல்லையை அவர்கள் கால் மிதித்த போதுதான்,  உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டது என்ற உணர்வே அவர்களுக்கு வந்தது. 

பெருகி வந்த அகதிகளின் வெள்ளத்தினால் கல்கத்தா நகரமும் அப்போது திக்குமுக்காடிக் கொண்டிருந்தது. உணவும் கிடைக்கவில்லை. சாலைகளில் கூடப் படுத்துறங்க இடம் கிடைக்கவில்லை. எதிலுமே அதிகமாகப் பாதிக்கப்படும் கல்கத்தா நகரம், இதிலும் பெருமளவு பாதிக்கப்பட்டது. 

ஆயிரம்தான் தங்களுக்குக் கஷ்டம் இருந்தாலும் அவமானத்தோடும் துயரத்தேடும் வந்து விட்ட தங்கள் சகோதர சகோதரிகளுக்குக் கல்கத்தா நகரம் கருணை காட்டிற்று. 

கையிலே பணமிருந்தால் காப்பாற்றலாம். இல்லாத போது கண்ணீர் சிந்துவதுதானே கடைசிப்பட்ச ஆசை.

கல்கத்தா தொழிலாளிகள் தங்களிடம் எவ்வளவு உடைமைகள் இருந்தனவோ அவ்வளவையும்  மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள். வங்காளத்து இரவு பகல் தூக்கமில்லாமல் அகதிகளைப் பராமரிப்பதற்காக அலைந்தார். அதோடு அவர் கல்கத்தா பணக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்தார். 

‘உங்களால் எவ்வளவு பேருக்கு உங்கள் வீட்டில் இடம் கொடுக்க முடியுமோ, அவ்வளவு பேருக்குக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். 

வேறு எந்த இனத்தவரையும் விட வங்காளிகளுக்கு இன உணர்வு அதிகம். ஒவ்வொருவரும் பத்துப் பேர் எட்டுப் பேர் என்று தங்கள் வீடுகளில் வைத்துக் கொள்ள முன்வந்தார்கள். 

உடல் நோயுற்றவர்களுக்கும் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கும் அதில் முதலிடம் தரப்பட்டது. 

அந்தப் பணக்காரர்களில் அந்தி பகல் பாராமல் அகதிகளுக்காக அலைந்தவர் ஒரு டாக்டர். அவர் பெயர், ஆர்.வி.பாஸூ. கூட்டமாக வந்த அகதிகளை அவர் பார்வையிட்டுக் கொணடு வந்தபோது ஆஷாவின் பாட்டியின் மீதுதான் அவருக்கு முதல் அனுதாபம் பிறந்தது. 

‘இந்த வயதில் இவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கும்படி மகாகாளி செய்து விட்டாளே,’ என்று கண் கலங்கினார், அவர். 

‘மற்ற வீடுகளுக்குப் போனால் இந்த மூதாட்டியும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டியிருக்கும்.. ஆகவே நம் வீட்டுக்கு அழைத்துப் போவோம்,’ என்று அவர் முடிவு கட்டினார். 

சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி அவளை விசாரித்துச் கொண்டிருந்த போது, ஆஷா அருகில் இல்லை.

சற்றுக் தூரத்தில் சுவரில் சாய்ந்து கிடந்த தன் பேத்தியை டாக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். 

“எங்கள் வீட்டிற்கு வாருங்கள்,” என்று அவர் அழைத்ததும் ஏதோ காளிதேவியே தூதனுடன் இருப்பது போல் தோன்றியது. 

கையில் கொண்டு வந்திருந்த சாமான்களை எடுத்துக் கொண்டு அவரது காரில் ஏறிவிட்டார்கள் அவர்கள். 

அவர்கள் கூட வந்தவர்கள் அதை அசூயையோடு பார்க்கவில்லை; ஆனந்தக் கண்ணீரோடு பார்த்தார்கள். 

ஆஷாவும் பாட்டியும் ஒரு வீட்டுக்குக் குடிபோவதை அவர்கள் அன்போடு கவனித்து வழியனுப்பினர்கள். 

டாக்டர் பாஸுவின் இல்லமும் ஒதுக்குப்புறமாகத்தான் இருந்தது. டம்டம் பகுதியையொட்டிய வளர்ச்சிப் பகுதி அது. 

அந்த வீட்டுக்குள்ளே நுழைந்தபோது தன் தாய்-தந்தையர் உயிரோடிருப்பது போன்ற பிரமை எழுந்தது. கிட்டத்தட்ட ஆஷாவுக்கு டாக்காவிலிருந்த அவர்களது வீடு போலவே அந்த வீடும் இருந்தது. 

டாக்டர் பாஸு கூட்டத்தோடு கூட்டமாக அவர்களைக் குடியிருக்கச் சொல்லவில்லை. மாளிகையின் கீழ்க் கட்டில் ஓர் வசதியான அறையையே அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார். அதற்கொரு வராந்தாவும் இருந்தது. நல்ல வேளை.. அறையில் தங்கிக் கொள்ளலாம்; வராந்தாவில் சமைத்துக் கொள்ளலாம். இருநூறு ரூபாய் பணமும் கையில் கொடுத்தார் பாஸு. 

பாணி மஜும்தார், டாக்டர் பாஸு வீட்டில் ஒரு நாணயமான வேலையாள். டாக்டர் பாஸூ கல்யாணமாகி மனைவியை இழந்தவர். குழந்தை குட்டிகள் கிடையாது. ஆகவே வீட்டுச் சாவியிலிருந்து பெட்டிச் சாவி உட்பட பாணி மஜும்தாரின் கையிலேதான் இருக்கும். மஜும்தார் யாரையும் மிரட்டுவதில் விரட்டுவதில்லை. அப்படியொரு வேலைக்காரன் அமைந்ததனால் தானோ… என்னவோ டாக்டர் பாஸு இரண்டாவது விவாகமே செய்து கொள்ளவில்லை. 

தலைவர் திருமணம் செய்து கொள்ளாததால், அவரது சகாக்கள் சிலரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தது போல, முதலாளிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மஜும்தாரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 

வந்த இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே அந்த வீட்டின் நிலைமையை உணர்ந்து கொண்டு விட்டாள் ஆஷா. ஓடி ஓடி வேலை செய்வது, கடைத் தெருவுக்குப் போய் காயகறி, கோழி வாங்கி வருவது, தானே சமையல் செய்வது எனத் தன் திறமையைக் காட்டத் தொடங்கினாள். 

ஆஷா வந்த பிறகு சாப்பாடு நன்றாக இருப்பதாக, பாஸு சுவைத்து சாப்பிட ஆரம்பித்தார். 

“தெரியுமா ஆஷா? உன் சமையல் எஜமானுக்கு ரொம்பப் பிடித்து விட்டது!” என்றான் மஜும்தார். 

“பன்னிரண்டு வயதிலிருந்தே எங்கள் வீட்டில் நான்தான் சமைப்பேன். வீட்டு வேலை பார்ப்பதற்காக என் அம்மா என் படிப்பைக் கூடக் கெடுத்து விட்டாள்” என்று நாணிக் கோணியபடி சொன்னாள் ஆஷா. 

“சரி, சரி. எஜமானுக்குச் சேவை செய்வது, மகாகாளிக்குப் பூஜை செய்வது போல. இனிமேல் நீதான் அவரை கவனிக்க வேண்டும்”, என்றான் மஜும்தார். 

“அதைவிடச் சந்தோஷம் வேறு எனக்கு என்ன இருக்கிறது?” துள்ளிக் குதித்தாள் ஆஷா. 

ஆஷாவின் அழகிலே அப்படியொன்றும் பாஸூ மயங்கி விடவில்லை. அந்தக் கட்டத்தை அவர் தாண்டி வெகு நாட்களாகி விட்டது. ஆனாலும் தனிமையின் நெடிய துயரம் இனம் தெரியாத துயரமா அவருக்குள்ளிருந்தது. அதுவும் இரவு நேரம் மட்டும்தான் அவருக்குப் புரிய, மற்ற நேரங்களில் அகதிகள் நோயாளிகள் கவனம் என்று கவனத்தை மாற்றிக் கொண்டு விடுவார். இப்போதெல்லாம் அவரது படுக்கைை தட்டிப் போடுவது. ஆடைகளை மடித்து போடுவது எல்லாமே ஆஷாதான். அவள் வேடிக்கையாகவே செய்தாலும் அதற்கொரு உள் நோக்கமுமில்லை. 

அப்படியொரு உள்நோக்கம் இருப்பதாக டாக்டர் பாஸூ நினைக்கவில்லை. வெகுளித்தனமான பெண் என்றேதான் அவர் கருதினார். 

ஆஷா அவ்வளவு பழகியும் டாக்டர் பாஸுவின் மனத்தில் தப்பான நினைவுகள் எழவில்லை. நன்கு பக்குவப்பட்ட மனம். அவ்வளவு சீக்கிரம் கரைந்து விடாது. ஆனால், நாளாக நாளாக டாக்டர் பாஸுவுக்குத் தானும் மனிதன்தான் என்பது புரியத் தொடங்கியது. 

எவ்வளவோ மாற்று முயற்சிகள் செய்தும் ஆஷா அவர் மனத்தில் இடம் பெறுவதை அவரால் தடுக்க முடியவில்லை. 

இரவு நேரங்களில் மருத்துவப் புத்தகம் படிப்பதற்குப் பதிலாக அவர் சில நாவல்களைப் படிக்க ஆரம்பித்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், புத்தகங்களை எடுத்து வைப்பதே ஆஷாதான். 

தினசரி அவர் கேட்கும் புத்தகங்களுக்கும், பின்னாலே கேட்கும் புத்தகங்களுக்கும் சம்பந்தமே இல்லையே என்று கூட ஆஷா நினைப்பாள். அவர் எதைப் படித்தாலென்ன என்று விட்டு விடுவாள். 

நாளாக ஆக, சமையலுக்குக் கூடப் பட்டியல் கொடுக்க ஆரம்பித்தார் பாஸு. ஒரு கட்டத்தில் அவர் அவளிடம் முழுக்க ஐக்கியப்பட்டவராகவே ஆகி விட்டார். 

‘பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில்’ என்பார்களே. அப்படித்தான் ஆகிவிட்டது கதை. 

கல்கத்தாவில் காளி பூஜை தொடங்கிற்று. மஜும்தார் மெதுவாக வந்து எஜமானிடம் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான். 

“வேண்டிய பணத்தை எடுத்துக் கொள்ளேன்,” என்றார் பாஸு. 

“அதில்லே, எஜமான். நானும் ஆஷாவும் காளி பூஜைக்குப் போகிறோம்,” என்றான் மஜும்தார். 

“ஓ! போய் வாருங்களேன்” என்று அனுப்பி வைத்தார் பாஸு.

அப்போது கூட அவர் மனத்தில் எந்த விதமான சலனமும் தோன்றவில்லை. நாமும் கூடப் போயிருக்கலாமே என்ற எண்ணம் தலை தூக்கி அமுங்கி விட்டது. 


இரவு டாக்டர் பாஸூ தூங்கவில்லை.

சுமார் ஒரு மணிக்கு மஜும்தார் வந்து கதவு திறப்பது போல அவருக்குத் தோன்றிற்று. அதில் ஏன் அவர் அக்கறை செலுத்த வேண்டும்? ஏனோ அவருக்கு அப்படித் தோன்றிற்று. 

பெரிய மனிதர்கள் சில நேரங்களில் சிறிய நினைவுகளுக்கு அடிமையாகி விடுவார்கள். தாங்கள் பெரிய மனிதர் என்ற நினைப்பைத் திரும்ப வரவழைத்துக் கொள்ள வெகு நேரம் பிடிககும். சூழ்நிலைகள் முழுக்க மாறினாலொழிய அந்தச் சூழ்நிலையிலிருந்து அவர்கள் வாபஸாக மாட்டார்கள். 

அன்றிரவும் பாஸூ அப்படித்தான் இருந்தார். ஆனால் அந்த ஊசலாட்டத்துக்கு அதிக வயதாகி விடவில்லை. 

எனன நடக்கிறது. எப்படி நடக்கிறது என்பது தெரியாத டாக்டர் பாஸு, ஆஷாவுக்கு ஒரு கடிதத்தை எழுதி, அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் பூனை போல் எழுந்து நடந்து, அவள் வைத்திருந்த கூடைக்குள் போட்டு விட்டார். 

மறுநாள் காலையில் மறுபடியும் தலையைச் சொறிந்து நின்றான் மஜும்தார். இப்போதும், “வேண்டியதை எடுத்துக் கொள்ளேன்”, என்றுதான் அவர் சொன்னார். 

“அதற்கில்லை எஜமான். ஏழு நாள் லீவு வேண்டும்,” என்றான் அவன். 

“ஏழு நாளா! எதற்கு?” என்று அவர் சந்தேகமாகக் கேட்டார். 

தயங்கித் தயங்கிப் பதில் சொல்ல முடியாத ஊமையாக நின்ற அவன். திரும்பி ஜாடை காட்டினாள், ஆஷா. திடீரென்று ஒடி வந்து பாஸுவின் கால்களில் விழுந்தாள். 

பாஸுவுக்குப் புரிந்து விட்டது. ஆனால் வேலைக்காரன் முன்னால் கண்ணீர்விட அவர் விரும்பவில்லை. அவர்களை ஆசிர்வதித்தார். 

நெஞ்சுக்குள்ளே அந்தக் கூடை, அந்தக் கடிதம் என்று இரண்டு சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. ஆனால் அதைத் திரும்ப எடுக்க அவர் முயற்சிப்பதற்குள், அவர்கள் கூடையோடு காளி கோவிலுக்குச் சென்று விட்டார்கள். 

காளி சந்நிதியில் திருமண முடித்து குங்குமமிட்டுக் கொண்டு மஜும்தாரின் வீட்டுக்குத் திரும்பினாள் ஆஷா. 

“இனிமேல் கூடையெல்லா எதற்கு? தூக்கியெறி!” என்றபடி கூடையைத் தூக்கிப் போட்டான் மஜும்தார். 

தான் பத்திரமாகச் சுமந்து வந்த கூடையல்லவா! அதைப் பத்திரமாக எடுத்துத் திறந்தாள் ஆஷா. 

மேலாக ஒரு கடிதம் இருந்தது. ஆஷா திகைப்போடு படித்துப் பார்த்தாள். திகைப்பு அதிர்ச்சியாயிற்று. ஓடிப் போய் அப்படியே மஜும்தாரிடம் காட்டினாள். 

கடிதத்தைப் படிக்கப் படிக்க மஜும்தாரின் தலை சுற்றிற்று; மயக்கமுற்று விழுந்தான். 


“சரியாக ஏழு நாட்கள் ஆகிவிட்டன மஜும்தார் விடை பெற்று போய். அவளில்லாமல் வீடு எப்படியோ ஆகிவிட்டது. நானே போய் அழைத்து வருகிறேன்”, என்று நண்பனிடம் சொன்ன டாக்டர் பாஸு, காரை எடுத்துக் கொண்டு மஜும்தார் வீட்டுக்குச் சென்றார். 

கடிதத்தைப் பற்றிய பயத்துடனேயே காரை நிறுத்தினார். ஆனால் அங்கே வீடு ரணகளமாகிக் கொண்டிருந்தது. 

போலீஸார் ஆஷாவைக் கைது செய்து கொண்டிருந்தார்கள். “ஏன், என்ன?” என்று உள்ளே நுழைந்தார் பாஸூ.

“இறந்து போன கணவனின் சடலத்தை ஏழு நாட்கள் உள்ளேயே வைத்திருந்து இந்தப் பெண்மணி பூஜை செய்திருக்கிறாள். அது நாற்றமெடுத்த பிறகுதான் தெரிய வந்தது. ஆகவே இவளைக் கைது செய்கிறோம்,” என்றார்கள் போலீஸார். 

போலீஸாருக்கு டாக்டர் பாஸுவிடம் மரியாதையும் பக்தியும் உண்டு.. 

உடனே டாக்டர் பாஸு பிணத்தைச் சோதிப்பது போல், சோதித்து விடடு, “யார் சொன்னது, இது நோயின் நாற்றம். நேற்றிரவுதான் இறந்திருக்கிறான்,” என்றார். 

போலீஸார் உடனே சல்யூட் அடித்து விட்டு வெளியேறினார்கள். 

கண்ணீரோடு மஜும்தாரின் சடலத்தை நெருங்கிய பாஸு, அந்தச் சடலத்தின் கைகளில் இருந்த ஒரு கடிதத்தைப் பிடுங்க முயன்றார். 

கஷ்டப்பட்டு அதைப் பறித்தபோது. அவர் காலடியில் விழுந்தது கடிதம் மட்டுமல்ல ஆஷாவும் கூடத்தான். 

– 1951ம் ஆண்டு மே மாதம், கல்கத்தாவில் ரத்தினதீபம் படத்திற்குக் கதை எழுதிக் கொண்டிருந்த போது. நான் கேள்விப்பட்ட ஒரு செய்தியின் அடிப்படையில் எழுந்தது இந்தக் கதை. – கண்ணதாசன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *