இவ்வளவு இருக்கா கொரோனாவுல?!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 4,086 
 
 

ஐயோ சாமி! இனிமே இந்த மாதிரி நெலம எனக்கு வரக்கூடாதுதான். ஆனா ஏன் வந்தது? எப்படி வந்தது? எதுக்காக வந்தது? நக்கீரன் கேள்வி கேட்டால் எந்தத் தருமியும் பதில் சொல்ல முடியாதுதான்!

இன்னும் எனக்கு வியப்பு அடங்கல. நெசமாவே கொரோனா வந்துச்சா.. இல்லாங்காட்டியும் நம்பள போட்டுப் பாத்துட்டாங்களா?

நான் பாட்டுல நான் உண்டு, என்ற வீடு உண்டுன்னு இருந்தப்ப, சில நாட்கள்ல ஹரே ராமா சேவைக்காகப் போய்க்கொண்டுதான் இருந்தேன்.

ஒரு மாசம் முன்னால திடீர்னு ஒரு நாள், அசாத்திய காய்ச்சல்! உடம்பு வலி! தலை வலி! சுகர் வேறு கூடிடுச்சு! வீட்டுல எனக்கு உதவின்னு சொல்லிக் கொள்ள நான் மட்டும்தான்.

ஒரே பையன், அவன் குடும்பம் லண்டன் போனது 2017 ல. பின்னால அவங்க வரவே முடியல. மாசம் எனக்கு அவன் அனுப்பும் ரூ.5000 என் சாப்பாட்டு செலவுக்காகவும் மருந்து வாங்கவும் பட்ஜெட் போட வேண்டும். சில சமயம், ரேஷன் அரிசியை வித்து காசு பார்க்க வேண்டும். ஹரே ராமா கோவிலுக்குப் போனால் சாப்பாட்டுக்குக் கவலை இல்லை!

வீடு சொந்தவீடானதால் வாடகை இல்லை. கரென்ட் பில், தண்ணி வரி எல்லாம் கட்டித்தான் ஆகணும். ஆம்பள இல்லாத வீடு! அடக்கித்தான் வாசிக்கணும்.

சாதா ஜுரம்னு நம்ப மார்க்கெட் டாக்டர் சந்தானம் கிட்ட போனேன். அந்த ஆளு 500 ரூபா பீஸ் வாங்கி விட்டு, ஊசி, சாப்பிட மருந்து கொடுத்து அனுப்பவே, கொஞ்சம் குறைந்த மாதிரித் தோன்றியது. மறா நாள் திரும்ப ஜுரம்! இப்ப இன்னும் ஜாஸ்திதான்!

மீண்டும் சந்தானம்!

‘அம்மா கொஞ்சம் வீக்கா இருக்கறதுனால குளுக்கோஸ் ஏத்திவிடறேன்’ என்று ஆரம்பித்த வைத்தியம் 2500 ரூபாயில் கொண்டு விட்டது. ஏழைகளின் ஏரியாவில் இருக்கும் இந்த சந்தானம் பணம் பறிக்கும் அழகே அழகு! கேட்டால் கொடுத்துத்தானே ஆகவேண்டும். வேற வழி? இவனிடம் வந்ததே தப்புத்தான் – மனசு சொன்னது.

மீண்டும் ஜுரம்!

தெரிந்தவர் ஒருவர் சொல்லி கொரோனா டெஸ்ட் செய்தேன். முதல்லே இல்லைன்னு சொன்னாங்க. பிறகு, இருக்குன்னாங்க.

எங்கே போவது?

போகணும்னா பணத்துக்கு எங்கே போவது? யார் நம்மை நம்பி கொடுப்பார்கள்?

அலைந்து திரிந்து பணம் கடன் வாங்கி (3000 ரூபாய்) ஒரு வழியாக, இ எஸ் ஐ ஆசுபத்திரிக்கு போக்கு வண்டியில் போனால், அங்கே இறங்கி நிற்க முடியவில்லை! அவ்வளவு தளர்ச்சி!

இங்க பெட் இல்லையாமா! வேற பிரைவேட்டுக்குதான் போகோணும்னு யாரோ சொன்னார்கள்.

இதற்கே காசில்லை. இன்னும் ப்ரைவேட் எப்படிடா முருகா?

பிறகு, பையனிடம் பேசினேன். விட்டு விட்டுப் பேசினான். ‘பணம் போடறேன் அம்மா’ என்று கூறி முடித்தான்.

அடுத்தது ஆசுபத்திரியில் பெட் கிடைக்கணுமே?- என் கவலை எனக்குத்தான்!

ஆண்டவா! என்று வேண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். இத பாரும்மா! பெட் எதுவும் கிடையாது! வேணும்னா தரையில பாய் போட்டுப் படு. நாங்க பாக்கறோம். நாளைக்கு வெளியில போய் புகார் அது இதுன்னு வரக்கூடாது! சமூக இடைவெளி விட்டுப் பாய் போடணும். வேற வழியில்லை.

பலிகடாவாக நின்ற நான் தலையை மட்டும் ஆட்டியது அவர்களுக்குப் புரிந்தது.

இடம் ஒதுக்கப் பட்டது!.

பக்கத்திலிருந்த ஒரு உதவி ஆள், “ அம்மா! உங்களுக்கு பக்கெட், சொம்பு, பிளேட், துண்டு, பாய், தலைகாணி வாங்க வேண்டாமா?” என்று முனகினான். எனக்குத் தலை இரண்டு காரணங்களுக்காக சுற்றியது: ஒன்று செலவுக்குப் பணம் பத்தாதே என்று; இன்னொன்று உடல் நிலை மேலும் மோசமானதால்.

தாங்குமோ தாங்காதோ என்ற பயம் வேறு! கூட யாரும் தெரிந்தமுகங்களே கிடையாது! .

அந்த ஆளிடம் 1000 ரூபாய் கொடுத்து விட்டு “சரிப்பா வாங்கியா!” என்று அனுப்பும் போதே தரையில் அசந்து படுத்தும் விட்டேன். திடீரென்று ‘அக்கா! இந்தா நீ கேட்ட பக்கிட் எல்லாம்! இது இன்னொரு புது முகம்!

அந்த நோயிலும், ‘ தம்பி! பாக்கி சில்லரை எங்கே?’ என்றதற்கு, அக்கா! அவரு, நீ குடுத்த பணத்துலே எல்லாம் அட்ஜஸ்ட் ஆயிடிச்சுன்னு சொல்லச் சொன்னார்.

அன்று முதல், நாள் கணக்கும் கூடத் தெரியவில்லை. கையில் இருந்த பணக் கணக்கும் தெரியவில்லை. மொபைல் சார்ஜும் போட வில்லை! என் உடல் நிலை ஓரளவு சரியானதாகத்தான் தோன்றியது.

ஆனால், நேற்று நன்றாகப் பேசி வந்த சிலரை இன்று பொட்டலம் கட்டி அனுப்பி வைத்ததையும் பார்க்க நேரிட்டது. என் நம்பர் என்று வரும் என்று எல்லோரும் மனக்கணக்கு போட்ட மாதிரி இறுக்கமான முகங்களுடன் அவ்வப்போது காட்சி கொடுத்தனர்.

உடன் இருந்த மற்ற நோயாளிகளும், அந்த வார்டில், தள்ளித் தள்ளிப் படுக்க வைத்திருந்த எல்லோரும் அவரவர் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம் என்பது நினைவில் அவ்வப்போது தோன்றுகிறது. அதுதான் ஒரு நிரந்தரமான பொழுது போக்கு- ஆசுபத்திரியில். இடையில் புதிதாக எத்தனை பேர் வந்தார்கள்? எத்தனை டிஸ்சார்ஜ்? எத்தனை போயிடிச்சு? என்ற விபரங்கள் சுற்றுலா வரும்.

எல்லாரையும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள் இஎஸ்ஐ யில்.

‘பரவாயில்ல அம்மா! உனுக்கு நோய் எதிர்ப்பு வந்து விட்டது. இங்கே இன்னும் கொஞ்சம் நாள்தான்; பெறகு, வீட்டுக்குப் போலாம்’.

என் கண்களில் நீர்! ‘இங்கே பரவாயில்லை! வீட்டில் போனா யார் பாப்பாங்க?’ வெளியில் சொல்லவில்லை. அந்தக் கவலை மனசில் தலை காட்டிப் பயமுறுத்தியது.

இப்போது எனக்குக் கட்டில் கிடைத்து விட்டபடியால் கொஞ்சம் சந்தோஷம், தைரியம். வாழ்க்கை இனிமையாக மீண்டுகொண்டிருந்தது போலத் தோன்றியது! கொரோனாவிடமிருந்து விடுதலை கிடைக்கும் ஒரு முழு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது! மரணபயம் நீங்கத் துவங்கியது.

பக்கத்தில், ஒரு பெரியவரும் அவர் மனைவியும் அடுத்த அடுத்த பெட்டில் தங்களுடைய கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் குறித்து நிறைய விஷயங்களை அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். நம்மிடையேயும் நன்றாகப் பேசினர்.

மனிதனுக்குத் தன்னைப் பற்றி சிந்திக்க இந்த மாதிரி நோய் வந்தால்தான் வாய்ப்பு ஏற்படுமோ? புருசன், பெண்சாதி கூட, ஒருவருக்கொருவர் நயமாகப் பேச அப்போதுதான் நா எழுமோ?

நாளை நாம் இருக்கப்போகும் நிச்சயம் நமது கைகளில் இல்லை என்பது நமக்குப் புரிபடத்தொடங்கினாலே நமது நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக மாறிவிடும் என்பதுதான் சித்தாந்தமோ?.

திடீரென்று சில நாட்களில், அந்தப் பெரியவர் இறந்து விட்டார்! என் எதிரிலேயே! அவர் பேச்சு காதில் ஒலித்த அதே அறையில், அவர் அமைதியானார். அந்த அம்மையாரைப் பார்க்கவோ ஆறுதல் கூறவோ எனக்கு தோன்றவேயில்லை. மனசில் இன்னும் பயம் சேர்ந்து கொண்டது.

பக்கத்து ஹாலில் நன்கு பேசிப் பழகிய ஒரு சகோதரி, என் கண் எதிரிலேயே உயிரை விட்டது மேலும் பயம் தோன்றியது. ‘ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் யாரும் இல்லாத அநாதையாகப் போக வேண்டியதுதான்’ – என்ற திடமான எண்ணம் மனசில் உறைந்தது. காலன் தான் விடை கூறவேண்டும்.

பக்கத்தில் வந்து நின்ற நர்ஸம்மா சிரித்துக் கொண்டே, “நல்லாயிட்ட அம்மா! இன்னிக்கு ஊட்டுக்குப் போலாம்!”

ஆஹா! அடுத்தது – வீட்டுக்கு எப்படி போவது? பணம் முழுக்க செலவு ஆயிடிச்சு.

எண்ணிப் பார்த்தேன்! நூறு ரூபாயாக ஒரு 6 நோட்டு இருந்தது. மூவாயிரம் கொண்டு வந்தேன். சின்னச் சின்னதாக செலவுகள், அன்பளிப்புக்கள், இத்யாதி இத்யாதி!

வெளியில் வந்ததும், உதவி செய்தவர் செய்யாதவர் என்ற பேதமின்றி அனைத்துப் பணியாளர்களும் வரிசையில்! அம்மா! எங்களுக்கு ஏதாவது கொடுத்து விட்டு சந்தோஷமா போ!

கொடுக்க ஆசைதான். அத்தனை பணிவிடைகள் அவர்கள் செய்தது நினைவில் தோன்றியது.

முதலில் நூறு ரூபாயைத் திணித்தேன்.

‘நிறைய பேர் இருக்கோமில்ல?’ என்றாள் ஒரு பணிப்பெண்.

கையில் வெறும் நூறு ரூபாயை வைத்துக் கொண்டு மிச்சத்தை அவர்களுக்கு மனசாரக் கொடுத்தேன்.

அங்கேயே உட்கார்ந்து யோசனை செய்தேன். எப்படிப் போவது? யாரை அழைப்பது? சந்திரசேகர் சாரு கும்பகோணத்தில் இருப்பாரு! அவர் மனைவிக்கு போன் டவர் கிடைக்காது. அவரால வரவும் முடியாது. யாரை அழைப்பேன்?

அம்மா! நான் கால் டாக்ஸி அழைத்து வருகிறேன் என்றான் ஒரு இளைஞன். அவனைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, அப்பா! கொடுக்க கையில் காசு இல்லை. என் பையன் பணம் போட்டிருந்தால் ஏடிஎம்மில்தான் போய்ப் பார்க்க வேண்டும். எவ்வளவு கேட்பார்களோ? வேறு வாகன வசதியும் இல்லை- ஊரடங்கில்.

அப்போது என்னுடன் டிஸ்சார்ஜ் ஆன ஒரு நடுத்தர வயது மனிதர், அம்மா! முதல்ல வீடு போய் சேருங்க! இங்க அதிக நேரம் இருக்க வேண்டாம்! நானும் சூலூர் போகத்தான் டாக்ஸிக்கு நிற்கிறேன்.

கால் டாக்ஸி வரட்டும்!. நான் பேசுகிறேன். என்றார். அவர் பெயர் முனியாண்டி என்று பின்னர் தெரிந்து கொண்டேன்.

கால் டாக்ஸி டிரைவரிடம் அவர் பேசினார். நான் கிளம்பும்போது திடீரென 3000 ருபாயை என் கைகளில் வைத்தார். இந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். இப்போ ஏடிஎம் போக வேண்டாம். நேரா வீட்டில போய் இறங்குங்க.

உங்களால எப்போ திருப்ப முடியுமோ அப்போ குடுங்க போதும். நான் மொபைலில் அக்கவுண்ட் நம்பர் அனுப்புகிறேன்.

உலகத்தில் நல்ல மனிதர்களே அதிகம் இருக்கிறார்கள். நம் கண்களில் படுவதில்லை! ஆனால் நாம் குறைவான அவகாசங்களில் சந்திக்க நேரிடும் மனிதர்கள் குறைந்த அளவே உள்ள நயவஞ்சகர்கள் மட்டும்தான்.

வீட்டில் இறங்கினால் டாக்ஸிக்காரன் சர்வ சாதாரணமாக 800 குடுங்க போதும். வழக்கமா நான் கொரோனா சவாரி ஏத்துறது கிடையாது. அதுவும் இவ்வளவு தூரம், திப்பனூர் வரை.

பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டில் நுழைந்தேன். அந்த முனியாண்டியை வாயார, மனதார வாழ்த்த மொபைலில் அழைத்தேன். நல்லது அம்மா! இப்ப சாப்புட்டு ரெஸ்ட் எடுங்க! வெளியே எங்கேயும் போகாதீங்க. பையனுக்கு போன் போட்டு சொல்லுங்க. ரொம்ப சந்தோசப் படுவான்.

இது ஒரு புது அனுபவம். மரணத்தின் வாயிலை மிதித்துவிட்டு வீடு திரும்பிய என்னை நானே முதல் முறையாகக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன். “கோரோனா திருப்பி அனுப்பிய சுபத்ரா ஆகிய நான்….” என்று பிரமாணம் பேசிப் பார்த்தேன். இரசித்தது. இனித்தது.

வாழ்க்கையின் கசப்பு மறைந்து, வாழ்வின் இனிப்பு மீண்டும் மனசில் குடி கொள்ள ஆரம்பித்தது.

இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்து விட்டு, பையனைக் கூப்பிட்டேன். லண்டனில் வேறுபட்ட நேரம்! அம்மா! காலைல பேசலாம். நல்லாயிட்டே இல்ல? என்று மகன் தூக்கத்தில் சொல்ல, நான் ‘பை’ சொல்லிக் கண்ணயர்ந்தேன்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “இவ்வளவு இருக்கா கொரோனாவுல?!

  1. கடைசி வரை விறு விறுப்பு, யதார்த்தம், டாபிகல் சாப்ஜெக்ட் வேறு… நன்றாக இருந்தது.
    எஸ்.கண்ணன், பெங்களூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *