கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,353 
 

வாசலில், பால்காரனின் சைக்கிள் மணி சப்தம் கேட்க, “விடிந்து விட்டதா?’ என்று, அருகில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அது ஐந்து என காட்டியது. அருகில், ரேணுவின் படுக்கை காலியாக இருந்தது.
“எழுந்து விட்டாள் போலிருக்கிறது. பாவம் ராத்திரியெல்லாம் தூங்காமல், மனவேதனையுடன் புலம்பிக் கொண்டிருந்தாள்…’
சமையல் அறையிலிருந்து வரும் காபி பொடியின் நறுமணம், பில்டரில் டிகாஷன் போடுகிறாள் என்பதைச் சொல்லியது. அவரிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.
நாட்கள் எவ்வளவு வேகமாக, இறக்கை கட்டி பறக்கின்றன. இதோ, அவரின் வயது, எழுபதை தொடப் போகிறது. வழுக்கை விழுந்த தலையை தடவிக் கொண்டார்.
“”அம்மா பால்…”
காலியான கூடு!“”வெச்சுட்டு போ,” உள்ளிருந்து ரேணுவின் குரல்.
படுக்கையில் இருந்து எழுந்து, பால் பாக்கெட்டை சமையலறையில் கொண்டு போய் வைத்தவர், “”ரேணு… கதவை தாழ் போட்டுக்க… பரசுவோடு ஆத்தங்கரை வரைக்கும் போய்ட்டு வர்றேன்.”
வெளியில் வந்தார். விடிந்தும், விடியாத பொழுது. வானத்தில், பறவைகள் கூட்டம் கூட்டமாக இரை தேட புறப்பட்டுச் செல்லும் காட்சி தெரிந்தது. மனதில், ஒரு இதமான வருடலை ஏற்படுத்தியது.
எதிரில் பரசுராம் வந்தார். இருவரும் சேர்ந்து நடக்கத் துவங்கினர். இருவர் மனதிலும், ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், மவுனமாகவே நடந்தனர். பரசுவே மவுனத்தைக் கலைத்தார்.
“”மாதவா… உன் சம்சாரம் என்ன சொல்றாங்க… என்ன முடிவு செய்திருக்கீங்க?”
“”இதில நானோ, அவளோ முடிவு எடுக்க ஒண்ணுமில்லைப்பா. புள்ளையும், பொண்ணும் எடுத்த முடிவு. அதுக்கு நாங்க கட்டுப்பட்டு தானே ஆகணும்?”
“”மனசுக்கு கஷ்டமா இருக்கு… இந்த தஞ்சாவூரில் சீரும், சிறப்புமாக வாழ்ந்தவன். அந்தத் தெருவிலேயே உன் வீடுதானே பெரிசா, அம்சமா இருக்கும். அதை இடிக்கணுங்கிறதை நினைச்சா, எனக்கே மனசு பதைக்குது…
“”உன் புள்ளை, உன் காலம் வரைக்குமாவது பேசாம இருக்கலாம். பார்த்து, பார்த்து கட்டின வீடு. கண் முன்னே இடிக்கப்படறதை யாரால தாங்க முடியும்!”
தஞ்சாவூர் மேட்டுப் பிள்ளையார் கோவில் தெருவில், மாதவன் வீடுதான் பெரியது. அந்த காலத்து வீடு மாதிரி அமைப்புடன் கட்டினார். இரண்டு புறமும் விசாலமான அறைகள், நடுவில் முற்றம், பின்புறம் பெரிய தாழ்வாரம், அதையடுத்து இரண்டு படி இறங்கி, இறக்கத்தில் அடுப்படி. வாசலுக்கும், பின் கட்டுக்கும் நடந்தாலே போதும்… அவ்வளவு பெரிய வீடு!
“மாதவா… நீ தலையெடுத்து, எப்படியும் வீடு கட்டுவேங்கற நம்பிக்கையில் வாங்கி போட்ட இடம்பா… எங்க மனசு போலவே, நல்லவிதமா கட்டிட்டே…’ என்று மாதவனின் தந்தை, மனம் நிறைந்து சொன்னார்.
அந்தப் பெரிய வீட்டிற்கு ஈடுகட்டுவது போல, மாதவனின் அம்மா, அப்பா, ரேணுவின் ஆதரவில்லாத பாட்டி, மகன், மகள் என, கூட்டுக் குடும்பமாக, அந்த, வீட்டில் சந்தோஷம் ததும்ப வாழ்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.
ரேணுவிற்கு நல்ல குணம். மாமனார், மாமியாரிடம் மரியாதை கலந்த அன்புடன் பழகினாள். ஒண்டு குடித்தனம் வீட்டில் பிறந்து, வளர்ந்தவளுக்கு கணவன் கட்டிய வீடு, கோவிலாக காட்சியளித்தது. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யும் மனைவியைப் பார்த்து,
“ரேணு… உன்னை மனைவியா அடைய, நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன். <உன்னால எப்படி, யார் மேலயும் கோபப்படாம, அனுசரனையா நடக்க முடியுது?’
புன்னகை மாறாமல் கணவனைப் பார்த்து, “இது என் வீடுங்க… என் குடும்பம். அன்பைக் கொடுத்து, அன்பை வாங்கறேன்… அத்தையும், மாமாவும் என் மேலே அளவு கடந்த பிரியம் வச்சிருக்காங்க… வயசானவங்களை, அருகில் வச்சு பராமரிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைச்சிருக்கு…’
குடும்பத்தைக் கோவிலாகப் போற்றி வாழ்ந்தவள் ரேணு.
பிள்ளைகள் வளர, பெரியவர்கள் ஒவ்வொருவராக உலகை விட்டுச் செல்ல, மகளுக்கு சிங்கப்பூர் வரன் அமைய, நல்லவிதமாக திருமணம் முடித்தனர்.
மகனும், மேற்படிப்புக்கு அமெரிக்கா செல்ல, சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தனர். காலங்கள் ஓட, அவனும் திருமணமாகி, அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டான்.
இப்போது மாதவனும், ரேணுவும் மட்டுமே அந்த வீட்டில் இருக்கின்றனர்.
“என்னங்க… நான் சுற்றிச் சுற்றி ஓடி வந்த வீடு. இப்ப வீட்டுக்குள்ளே நடக்கவே கால் வலிக்குதுங்க. வயசாயிடுச்சு. இருந்தாலும், இந்த வீட்டை உயிரற்றதாக நான் நினைக்கலை. என் சந்தோஷத்தில் பங்கு கொண்ட வீடு. இந்த வீட்டில் தான் என் உசுரு பிரியணும். தயவு செய்து உடம்பு முடியாம போனாலும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிடாதீங்க…’
அந்த அளவுக்கு வீட்டை ஆழமாக நேசித்தாள் ரேணு.
“அப்பா… நானும், வித்யாவும் கலந்துபேசி யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்திருக்கோம். உங்களுக்கும், அம்மாவுக்கும் அவ்வளவு பெரிய வீடு தேவையில்லப்பா… என் ப்ரெண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியராக இருப்பவன், நம்ம வீட்டை விலைக்கு எடுத்துக்கிறதாகச் சொல்றான்…
“வீட்டை இடிச்சு, அதில் அபார்ட்மென்ட் கட்டி, அதில், நமக்கு ஒரு வீடு தருவதாகச் சொல்றான்… நாம் எதிர்பார்க்கிறதை விட, நல்ல தொகையும் கொடுக்கிறதாகச் சொல்றான்…
“நீங்களும், அம்மாவும் கொஞ்ச நாள் வீட்டை காலி செய்துட்டு, வாடகை வீட்டில் இருங்க… எப்படியும் கட்டட வேலை, ஒரு வருஷத்தில் முடிஞ்சிடும். பின், நமக்கு கொடுக்கிற வீட்டில் வந்து இருக்கலாம்…
“பணத்தை பிள்ளைங்க பேர்ல டெபாசிட் பண்ணலாம். யாருக்கும் பிரயோஜனமில்லாமல், அவ்வளவு பெரிய வீடு எதுக்குப்பா… என்னப்பா சொல்றீங்க?’
“அம்மாவை கலந்துக்கிட்டு ஒரு வாரத்தில் பேசறேன்பா…’
“”என்ன மாதவா யோசிக்கிறே… நாங்க குழந்தை, குட்டி இல்லாதவங்க, கடைசி காலத்தில் முதியோர் இல்லத்துக்குப் போறதுன்னு முடிவு செய்து, சென்னைக்கு கிளம்பறோம். நீயும் வர்றேன்னு சொன்னா எப்படி… உன் பிள்ளைங்க இதுக்கு ஒத்துப்பாங்களா… உன் சம்சாரத்துக்கு இதுக்கு சம்மதம் இருக்குமா… வேண்டாம்பா…”
“”இல்லை பரசு… நான் முடிவு செய்திட்டேன். இனி, தனியா வாழ்ந்து பிரயோசனமில்லை. நான் கட்டின வீடு, என் கண் முன்னால் இடிக்கப்பட்டு… நான் இந்த ஊரில் வாடகை வீட்டில் இருக்கிறது சாத்தியமில்லைப்பா… ரேணு, அதைப் பார்த்து உடைஞ்சு போயிடுவா…” நண்பனிடம் சொன்னார் மாதவன்.
கண்களில் கண்ணீர் குளம் கட்ட, கணவனைப் பார்த்தாள் ரேணு.
“”போதுங்க… வாழ்ந்தது போதும். நம்ப கண்முன்னே கட்டிய வீட்டை இடிக்கிறதை பார்த்துட்டு, என்னால நிச்சயம் இருக்க முடியாதுங்க… போயிடுவோம். நேரத்துக்கு சாப்பாடு; தங்கறதுக்கு ஒரு இடம், அதுக்கு மேலே இனி என்ன வேணும்?
“”பிள்ளைங்க பக்கத்தில் இருக்கிற கொடுப்பினை மட்டும் தான் இல்லைன்னு நினைச்சேன்… நான் உயிராக நினைச்சு வாழ்ந்த இந்த வீட்டில், கடைசி வரை இருக்கிற கொடுப்பினையும், எனக்கு இல்லாம போயிடுச்சி.”
மகனிடம், மாதவன் போனில் விவரத்தைச் சொன்னபோது, “”சரிப்பா… நீங்க எடுத்து இருக்கிற முடிவு, எனக்கும் சரின்னு படுது. நாங்க இப்போதைக்கு இந்தியா வரப்போறதில்லை. நீங்களும், அம்மாவும் தனியா இருக்கிறதுக்கு, உங்க வயசையொத்த மனுஷங்களோடு, முதியோர் இல்லத்தில் இருக்கிறது நல்லதுன்னு தோணுது.”
“எவ்வளவு சுலபமாக ஒரு வார்த்தையில் சரியென்று சொல்லி விட்டான். அப்பா, அம்மாவை, அருகில் வச்சு பராமரித்த எங்களுக்கு இப்படியொரு மகன்…’
பத்து நாட்களாக ஆட்களை வைத்து, வீட்டைக் காலி செய்து கொண்டிருந்தனர். தேவையானதை எடுத்துக்கொண்டு, மற்றவைற்றை கடையில் போட்டது, சாதாரண வேலையாகத் தெரியவில்லை. தோட்ட வேலை செய்யும் வேலனும், அவர்களுக்கு உதவியாக இருந்தான்.
“”ஐயா… அம்மா கொல்லையிலே மாமரத்தில் இருக்கிற காய்களை பறிக்கச் சொன்னாங்க… மரத்தில் ஏறி எல்லாத்தையும் பறிக்கவா, இன்னும் பத்து நாள் கழிச்சு பறிச்சா பெருக்கும்ன்னு தோணுது.”
“”இல்ல வே<லு… போறதுக்கு முன்னால காய்களை பறிச்சு, நாலு பேருக்குக் கொடுக்கணும்ன்னு நினைக்கிறா போலிருக்கு… பறிச்சுடுப்பா. நாங்க அடுத்த வாரத்தில் கிளம்பறோம்.”
மரத்தில் ஏறி, வலைக்கட்டிய தொரட்டி கம்பால் மாங்காய்களை பறித்தான். வீடு கட்டும் முன்பே, ஆசையாக அந்த மரத்தை நட்டாள் ரேணு. அதுவும் வெட்டப்படும் போது, மாதவனுக்கு மனசு வலித்தது.
“”ஐயா… அந்த பெரிய கிளையிலே, பறவை கூடு, பெரிசா கூடை மாதிரி இருக்கு… தேங்காய் நார், பஞ்சுகளை வச்சுக் கட்டியிருக்கு… உள்ளே முட்டையோ, பறவை குஞ்சுகளோ எதுவும் இல்லை. தட்டி விட்டுடவா?”
“”வேண்டாம்பா… அப்படி செஞ்சுடாதே…” பதற்றத்துடன் அங்கு வந்தாள் ரேணு.
“”இருந்துட்டுப் போகட்டும்… ஏதோ ஒரு பறவை, கூட்டைக் கட்டி முட்டையிட்டு, தன் குஞ்சுகளை அதில் பராமரிச்சு வளர்த்திருக்கு. இப்ப குஞ்சுகளுக்கு இறக்கை முளைச்சு பறந்து போயிருக்கும். அதான் கூடு காலியாக இருக்கு. அந்த ஞாபகமாக அது அப்படியே இருக்கட்டும். தயவுசெய்து, என் கண் முன்னே அதைக் கலைச்சுடாதே.”
துக்கம் தொண்டையை அடைக்க, கண்களில் கண்ணீர் பெருக, புடவை முந்தானையால் முகத்தை மூடியபடி உள்ளே செல்<லும் மனைவியை, கண்களில் நீர் திரையிட அனுதாபத்துடன் பார்த்தார் மாதவன்.

– ஏப்ரல் 2012j

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *