பிரவீணாவின் மாணவி!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,950 
 

அலுவலக அறை நோக்கி, வேகமாக ஓடி வந்தாள் பிரவீணா. அட்டென்டெண்சில் கையெழுத்துப் போட்டு, மணியைப் பார்த்தாள்; 8:38.”அப்பாடா…’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
கண்களை ஒருமுறை மூடித் திறந்து, புன்னகையுடன் சக ஆசிரியர்களைப் பார்த்து, “குட் மார்னிங்…’ சொன்னாள்.
அனைத்து ஆசிரியர்களும், 8:40க்குள், கையெழுத்துப் போட வேண்டும். ஒரு நிமிடம் லேட் ஆனாலும், லேட் அட்டென்டெண்சில் தான் கையெழுத்துப் போட வேண்டும். பிறகு, பள்ளி தாளாளரைப் பார்த்துவிட்டு வந்தால் தான், மெயின் அட்டென்டெண்சில் கையெழுத்துப் போட முடியும்.
பிரவீணாவின் மாணவி!கரஸ்பான்டெண்ட் மேடம், “ஏம்மா லேட்?’ என்று கேட்கும் விதம், சுரீர் என்று இருக்கும். இதுவரை, இப்படி லேட்டாக வந்ததற்காக, பல தடவை போய் நின்றாகி விட்டது. மூன்று நாள் லேட் என்றால், அரை நாள் சம்பளம் கட்.
“சம்பளம், 2,700 ரூபாய். பி.எஸ்.சி., பி.எட்., படிப்புக்கு, இந்தச் சம்பளம் குறைவு தான் என்றாலும், சுற்று வட்டாரப் பள்ளிகளை ஒப்பிடும் போது, இந்தப் பள்ளி எவ்வளவோ மேல்…’ என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.
வேறு வேலை கிடைக்காதவர்கள் தான், ஆசிரியர் பணிக்கு வருவதாக, இன்று நிறைய பேர் பேசும் போதும், அதையே செய்தித் தாள்களும், பத்திரிகைகளும் எழுதும் போதும், பிரவீணாவிற்கு ஆதங்கமாக இருக்கும்.
“நான் என்ன, வேறு வேலை கிடைக்காமலா ஆசிரியப் பணிக்கு வந்தேன்… என் லட்சியமே ஆசிரியப் பணி தானே!’ என்று அடிக்கடி, மணிமாலா டீச்சரிடம் சொல்லிக் கொண்டிருப்பாள்.
ஆசிரியப் பணியில் இவ்வளவு ஆர்வத்துடன் இருந்த இவள், இந்த பள்ளிக்கு வந்து வேலை கேட்ட போது, “எல்.கே.ஜி., தான் எடுக்க வேண்டும்; முடியுமா?’ என்று கேட்டனர்; அவள், அதை எதிர்பார்க்கவில்லை.
பி.எஸ்.சி., பி.எட்., முடித்து, சின்னக் குழந்தைகளிடம் போய் நின்று, “ஏ, பி, சி, டி… ஜானி, ஜானி எஸ் பாப்பா…’ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா என்று யோசித்தாள்; கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது.
இயற்பியலில் ஆர்வமும், அதில் புதியன காணும் ஆசையும் அவளிடம் அதிகமாக இருந்தது. இந்த ஆர்வத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு நிறையக் கற்றுத் தர வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தாள்.
எல்.கே.ஜி., என்ற போதே, அவள் முகம் வாடிப் போனது. ஆனாலும், “சரி…’ என்று ஒத்துக் கொண்ட போது, ஒரு வருடத்திற்கு ஒப்பந்தப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டனர். எந்தக் காரணத்தை முன்னிட்டும், ஒரு வருடத்திற்கு, வேலையை விட்டு விலகக் கூடாது; திருமணமும் செய்து கொள்ளக் கூடாது.
அப்படியே திருமணம் செய்து கொண்டாலும், கர்ப்பம் தரித்து, “மெட்டர்னிட்டி’ லீவ் கேட்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் எல்லாம், இவளை பதை, பதைக்கச் செய்தன. ஆனாலும், இந்த ஒரு வருடத்திற்குள், இதில் எதற்குமே வாய்ப்பில்லை என்பதால், எல்லாவற்றுக்கும் ஒத்துக் கொண்டாள்.
பிறகு, பட்டச் சான்றிதழ்களின் ஒரிஜினல்களை பள்ளியில் வாங்கி வைத்துக் கொண்டது, அவளுக்கு அடுத்த அதிர்ச்சியைத் தந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால், பள்ளியை விட்டு விலக நேர்ந்தால், மூன்று மாத சம்பளத்தை திருப்பிக் கொடுத்தால் தான், சான்றிதழ்களை திரும்ப வாங்கிக் கொள்ள முடியும் என்ற ஒப்பந்தத்திலும் அவள் கையெழுத்திட்டிருந்தாள்.
பள்ளியில், காலை வழிபாட்டுக் கூட்டம். அவளுக்கு இன்னும் ஆர்வமூட்டுவதாக இருக்கும். மாணவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது, இவள் எல்.கே.ஜி., குழந்தைகளின் பின்னால் நின்று, “சிங் டு கெதர்…’ என்று சொல்லிக் கொண்டிருப்பாள். பிறகு, ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் போது, கையை முன்னால் நீட்டச் சொல்லி, தன் கையை காட்டி காண்பிப்பாள்.
சில குழந்தைகள், ஒரு சில விநாடிகள் கையை நீட்டிவிட்டு, தலையையோ, காலையோ சொறிந்து கொண்டு நிற்கும். அது கூட பார்ப்பதற்கு அழகாகவே தோன்றும். புன்னகையோடு அதை எதிர்கொள்வாள்; ஆனால், கரஸ்பான்டெண்ட் மேடம் தான், “காச் மூச்…’ என்று கத்துவார்.
“என்ன பிரவீணா… உங்க ஸ்டூடண்ட்ஸ் வரிசையிலேயே நிக்கல… என்ன பண்றீங்க?’ என்று.
எல்லா ஆசிரியர்களுக்கும் மத்தியில் இப்படிக் கத்துவது, பிரவீணாவுக்கு என்னவோ போல் இருக்கும். முகம் வெளிறிப் போய், அழுகையே வந்து விடும். இதுமாதிரி, பல முறை அழுதிருக்கிறாள்.
தினந்தோறும், யாரோ ஒரு ஆசிரியை, மேடத்திடம் திட்டு வாங்குவதும், அழுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது; இதை, பிரவீணாவும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
“ஆசிரியர்கள் எவ்வளவு கனிவாக இருக்க வேண்டும்? ஏன் இந்த மேடம் மட்டும் இவ்வளவு கடுகடுவென முகத்தை வைத்து, கத்திக் கொண்டே இருக்கிறார்?’ என்று நினைப்பாள்.
மேடம் ரவுண்ட்ஸ் வருகிறார் என்றாலே, பரபரப்பாக இருக்கும். அந்நேரம் மட்டும், எல்லா வகுப்புகளிலும், பாடம் நடத்தும் சப்தம் சற்று <உரக்க கேட்கும். மேடம் ரவுண்ட்ஸ் வரும் போது, எல்லா ஆசிரியர்களும், கண்டிப்பாக பாடம் நடத்திக் கொண்டிருக்க வேண்டும். யாராவது நோட்டுப் புத்தகம் திருத்திக் கொண்டிருந்தால் போச்சு… வகுப்பிலேயே, மாணவர்கள் முன்னாலேயே திட்டு விழும்.
தன் எல்.கே.ஜி., வகுப்பிற்குள் நுழைந்ததும், குழந்தைகளிடம் இருந்து, முதலில் ஹோம் ஒர்க் நோட்டுகளை எல்லாம் வாங்கி அடுக்கி வைத்தாள். “டோன்ட் டாக் சில்ட்ரன்… கீப் சைலன்ஸ்…’ என்று உரக்க கத்தி, அவர்களை முறைத்து பார்த்தாள். மிரட்டலுக்கு பயந்து, கொஞ்சம் அமைதியாய் இருந்தனர்.
தான் கல்லூரி படிக்கும் காலத்தில், நன்றாக படிக்கும் மாணவர்களின் முகத்தை மட்டுமே பார்த்து, பேராசிரியர்கள் பாடம் நடத்துவர். அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவள் பிரவீணா. அப்படியொரு பாதிப்பு, தன்னிடம் படிக்கும் குழந்தைகளுக்கு வரக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தாள்.
எல்லா குழந்தைகளிடமும் ஒரே மாதிரியாக பேசுவாள்; ஒரே மாதிரியாக, “ட்ரீட்’ பண்ணுவாள். பணக்கார குழந்தைகள், ஏழைக் குழந்தைகள் என்ற வேறுபாடு காட்டுவது பாவம் என்று, அவள் மனமே அவளுக்கு சாட்சியாய் நின்று, அவ்வப்போது பாடம் நடத்திக் கொண்டிருக்கும்.
அன்று குழந்தைகளுக்கு, “அ’ போட, சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தாள் பிரவீணா. “முதலில், எல்லாரும் இப்படி ஒரு சிறிய வட்டம் போடுங்கள்…’ என்று சொல்லி, கரும்பலகையில் ஒரு சிறிய வட்டம் வரைந்தாள். “வட்டத்திற்கு நடுவில் ஒரு கோடு போடுங்கள். அந்த கோடு, வட்டத்திற்கு வெளியே கொஞ்ச தூரம் வர வேண்டும். வட்டத்திற்கு வெளியே உள்ள முனையில், மேலேயிருந்து ஒரு சிறிய கோடு போடுங்கள். ஹையா… இப்போ எல்லாரும், “அ’ எழுதியாச்சு…
“ஓ… வெரிகுட்! எல்லாரும், “அ’ போட்டுட்டீங்களா… இப்ப மறுபடியும் எழுதுங்க… முதல்ல ஒரு வட்டம் போடுங்க. இப்போ நடுவுல ஒரு கோடு போடுங்க. வட்டத்துக்கு வெளியே உள்ள முனையில, மேலே இருந்து ஒரு கோடு போடுங்க… வெரிகுட்! எல்லாரும் கரெக்டா எழுதிட்டீங்களா?’ – அவள் சந்தோஷமாக கேட்டாள்.
குழந்தைகள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி, சந்தோஷம், சிரிப்பு. எல்லாரும் சிலேட்டை தூக்கி காண்பித்தனர். “மிஸ்… நான் எழுதிட்டேன் மிஸ்… நான் அழகா எழுதிருக்கேன் மிஸ்… இங்க பாருங்க மிஸ்!’
கரும்பலகைக்கு திரும்பி, ஏதோ எழுதச் சென்ற சில விநாடிகளுக்குள், குழந்தைகள் அங்கும், இங்கும் திரும்பி பேச ஆரம்பித்து விட்டனர். பொதுவாகவே இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பர். “மிஸ் கிள்றான், மிஸ்… திஸ் பாய் பீட்டிங்…’ என்று, வகுப்பில் ஏதோ ஒரு இரைச்சல் கேட்டுக் கொண்டே இருக்கும்.
கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல், கூலாக விழிகளை விரித்து, நாக்கை மடித்து, “சைலன்ஸ்…’ என்று விளையாட்டாய் மிரட்டுவாள். ஆனால், சில சமயங்களில், டென்ஷன் பண்ணி விடுவர். மேடம் ரவுண்ட்ஸ் வரும் நேரம் பார்த்து சப்தம் போட்டுக் கொண்டிருப்பர். “என்னம்மா கிளாஸ் இது? இது ஸ்கூலா, இல்ல வேற ஏதுமா?’ என்று மேடம் திட்டுவார்.
இன்றும் அப்படித்தான் நடந்தது. இவள் போர்டில் எழுதிக் கொண்டிருந்த சில நிமிடங்களில், குட்டி நாற்காலியை தனியாக இழுத்துக் கொண்டு போய், தனியாக ஆடிக் கொண்டிருந்தான் அபிஷேக். கிருபாகரன் அடித்து விட்டதாக சொல்லி, அக்ஷயா அழுது கொண்டிருந்தாள்.
ரம்யா வைத்திருந்த பிஸ்கெட்டை, தர்ஷன் பிடுங்கி சாப்பிட, “ஓ…’வென அழுது கொண்டிருந்தாள் ரம்யா. வகுப்பறையே களேபரமாகி விட்டது. ஆனாலும், கூல் கேப்டன் தோனி மாதிரி, “குட்டீஸ்… டோன்ட் ஷவுட்…’ என்றாள் பிரவீணா.
களேபர காட்சிகள் அடங்குவதற்குள் மேடம் வர, “என்னம்மா க்ளாஸ் இது… இவ்ளோ வொர்ஸ்ட்டா இருக்கு? இவங்களை கன்ட்ரோல் பண்ணத் தெரியாதா?’ என்று கத்த, பிரவீணாவுக்கு முகம் வாடிப் போனது.
“இன்டர்வெல் பீரியட்ல, என் கேபினுக்கு வந்துட்டு போம்மா…’ என்று கூறிவிட்டுப் போனார் மேடம்.
கூப்பிட்டு திட்டப் போகிறார் மேடம் என்று பயந்து கொண்டிருந்தாள் பிரவீணா. இவ்ளோ நேரம், பிள்ளைங்க அமைதியாக இருந்தாங்க… அப்போதெல்லாம் வரல… கரெக்டா சத்தம் போடறப்ப வந்துட்டாங்க. உடனே, எப்போதும் என் கிளாஸ் இப்படித்தான் இருக்கும்ன்னு முடிவு பண்ணிடறாங்க. என்ன நியாயம் இது?
அவள் தனக்குத் தானே கேள்விகளை கோபமாக கேட்டுக் கொண்டாள். மேடம் என்ன சொல்லி திட்டுவாரோ என்ற பயம் அவளை பீடித்திருந்தது.
இடைவேளையில் மேடத்தைப் போய் பார்த்தாள்.
“ஏம்மா பிரவீணா… நீ, உஷா, ஜெயந்தி, கிருஷ்ணவேணி நாலு பேரும், கமிங் சண்டே ஸ்கூலுக்கு வரணும்… கன்சாலிடேட் அட்டென்டெண்ஸ் முடிக்காம இருக்கு. பீஸ் ரிஜிஸ்டர் செக் பண்ணணும். பீஸ் கட்டாதவர்களுக்கு, போன் பண்ணி ஞாபகப்படுத்தணும். தட்ஸ் ஆல்… யூ கேன் கோ…’ என்று மேடம் சொன்ன போது, கோபம் பொத்துக் கொண்டது பிரவீணாவுக்கு.
கிடைப்பதே, சண்டே ஒருநாள் தான்… அந்த ஒருநாள் வீட்டில் இருந்தால் கூட, வீட்டு வேலைகளை பார்க்க முடியாது; நோட்ஸ் ஆப் தி லெசன்ஸ் எழுத வேண்டும்; டெஸ்ட் நோட் திருத்த வேண்டும்; மார்க் ரிஜிஸ்டர் எழுத வேண்டும்.
அடுத்த வாரம் பாடம் நடத்துவதற்காக, சார்ட் தயாரிக்க வேண்டும். கிடைக்கும் இடைவெளியில் மட்டுமே துவைத்து, அயர்ன் பண்ண வேண்டும். அன்றைக்குக் கூட வேலைக்கு வர வேண்டும் என்பது கொடுமையாக இருந்தது.
இவ்வளவு படித்து, ஏன் இப்படி அடிமையாக வாழ வேண்டும்? “என்னால், சண்டே வர முடியாது…’ என்று கூட சொல்ல முடியவில்லையே. அப்படியென்றால், நான் அடிமையல்லாமல், வேறு என்ன?
வழக்கம் போல், அவளுக்கு கண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. போதும்… டியூஷன் மட்டுமே நடத்தி, சம்பாதித்துக் கொள்ளலாம். ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்குப் போனால் கூட, 4,000 ரூபாய் சம்பளம் தருகின்றனர். இப்படி ஒரு பிழைப்பு நமக்கு தேவையில்லை. இன்றோடு வேலையை விட்டு நின்று விடலாம்.
அவள் கோபமாக வகுப்பறைக்கு வந்தாள். மறுபடியும் குழந்தைகளுக்கு, “அ’ போடச் சொல்லிக் கொடுத்தாள்.
அன்று வீட்டுக்கு புறப்படும் முன், ஒரு தீர்க்கமான முடிவோடு இருந்தாள். நாளை காலை, ராஜினாமா கடிதத்தை கொடுத்து விடுவது என்றும், கரஸ்பான்டெண்ட் என்ன திட்டினாலும் பரவாயில்லை. ஒரிஜினல் சர்டிபிகேட் தர முடியாது என்று சொன்னாலும் பரவாயில்லை. இனி, இங்கு வேலை பார்க்க முடியாது என்று, மனதுக்குள் பேசிக் கொண்டாள். அன்று மாலை கூட, எந்த டீச்சரிடமும் அவள் சொல்லிக் கொள்ளவில்லை. அவசரமாக வெளியேறி விட்டாள்.
மறுநாள், ராஜினாமா கடிதத்தோடு, பள்ளி வளாகத்தில் நுழைந்த போது, படபடப்பாக இருந்தாள்.
அலுவலகத்திற்குள் நுழையும் முன், இவளை ஆவலோடு எதிர்கொண்டாள், ஒரு சுடிதார் அணிந்த பெண். நிறைய படித்தவள் போல் தோன்றியது. அப்போது தான் குளித்துவிட்டு, அவசர, அவசரமாக புறப்பட்டு வந்தவள் போல் தோன்றியது. பின்னப்படாத கூந்தலில் இருந்து, நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஓடி வந்து, பிரவீணாவின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டாள் அவள்.
“”மிஸ்… நான் பூரணி மதர் ரேணுகா,” அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“”ஓ… நைஸ் டூ மீட் யூ…”
பூரணி, இவளுடைய எல்.கே.ஜி., வகுப்பில் படிக்கும் மாணவி. திடீரென்று, பூரணியின் அம்மா கண்களில் இருந்து, நீர் கடகடவென கொட்டியது.
“”அச்சோ… மேடம் ஏன் அழறீங்க? ப்ளீஸ் எமோஷன் ஆகாதீங்க… என்னன்னு சொல்லுங்க…” பிரவீணா பதறினாள்.
“”சாரி மிஸ்… இது, ஆனந்தக் கண்ணீர். என் பொண்ணு பூரணி, நேற்று, “அ – ஆ’ இரண்டு எழுத்தையும் எழுதிக் காட்டினாள். அவ்ளோ அழகா இருந்தது. நாங்க ரொம்ப நாளா அவளை, “அ – ஆ’ எழுத வைக்க டிரை பண்ணினோம்; ஆனா முடியல. அவளுக்கு எழுத்து வராதோன்னு கூட பயந்துட்டோம். ஆனா நேத்து, எங்க மிஸ் சொல்லிக் கொடுத்தாங்கன்னு சொல்லி, திரும்ப, திரும்ப எழுதிக்கிட்டே இருந்தாள். வீடு முழுக்க, சாக்பீஸ் வச்சு, தூங்கற வரைக்கும் எழுதிக்கிட்டே இருந்தாள்…” அவள் உணர்ச்சி வசப்பட்டு, பிரவீணா மிஸ்சின் இரண்டு கைளையும் பிடித்து, கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
“”மிஸ்… நீங்க தான் என் குழந்தைக்கு கடவுள்; எங்களுக்கும் கூட. என் வயசு தான் உங்களுக்கும் இருக்கும். பட், உங்க பணி தெய்வீகம். தேங்க் யூ மிஸ்… உங்களுக்காக சின்னதா ஒரு கிப்ட் கொண்டு வந்திருக்கேன்; மறுக்காம வாங்கிக்கணும்,” என்று சொல்லி, பையிலிருந்து அழகான பேனா ஒன்றை எடுத்து, பிரவீணாவிடம் நீட்டினாள்.
பிரவீணா திகைத்துப் போய் நின்றாள். அவளுடைய அன்பிலும், பாராட்டிலும் திக்குமுக்காடி போனாள்.
இது எத்தனை மகிழ்ச்சி? அந்தப் பேனாவை வாங்கி முத்தமிட்டு வைத்துக் கொண்டாள். நான் இவர்களுக்கு கடவுளா? தன் முகத்தை ஒருமுறை, கற்பனையால் நினைத்துப் பார்த்தாள். அந்தப் பேனா, அவளுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பரிசாகத் தெரிந்தது. அந்தப் பேனாவில், அன்பும், மரியாதையும் மையாக ஊற்றி இருப்பதை அவளால் உணர முடிந்தது.
எந்த பணியிலும், எந்த வேலையிலும் பெற முடியாத பரிசல்லவா இது? அவள் உடம்பெங்கும் சிலிர்த்தது.
“”ரொம்ப தேங்க்ஸ் மேடம்… இதை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக்கிட்டு, எனக்கு கிப்ட் எல்லாம் கொண்டு வந்திருக்கீங்களே… எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு… இதை நான் எதிர்பார்க்கல… பாடம் சொல்லித் தர்றது என்னோட கடமை…” என்றாள்.
“”உங்க கடமையில தான், என் குழந்தையின் எதிர்காலம் இருக்குது மிஸ்…” அவள் விடைபெற்றுக் கொண்டாள்.
பிரவீணா வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், எல்லா குழந்தைகளும் சிலேட்டை எடுத்து, “அ – ஆ’ எழுதிக் காட்டியபடி, “மிஸ்… நான் எழுதிட்டேன்… நான் எழுதிட்டேன்…’ என்று கத்திக் கொண்டே ஓடி வந்தனர்.
தன்னால் இத்தனை குழந்தைகள் சந்தோஷமாக இருக்கின்றனரே… இதுதானே ஆசிரியர் பணியின் மகத்துவம்… இது தானே உண்மையான ஊதியம்!
யார் என்ன சொன்னால் என்ன… இந்தப் பணியை நான் ஏன் தவற விட வேண்டும்?
எல்லாருடைய சிலேட்டையும் வாங்கி, எல்லாருக்கும், “ஸ்டார்… வெரிகுட்…’ போட்டுக் கொடுத்தாள். தன் ஹேண்ட் பேக்கிலிருந்த ராஜினாமா கடிதத்தை அவசர, அவசரமாக எடுத்து, கிழித்து குப்பைத் தொட்டிக்குள் போட்டாள்.
இப்போது அவளுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது.

– ஆதலையூர் சூரியகுமார் (அக்டோபர் 2011)

கல்வி : எம்.ஏ., எம்.பில்., பி.எச்டி., (வரலாறு மற்றும் தமிழ்)
சொந்த ஊர்: நாகப்பட்டினம் மாவட்டம், ஆதலையூர் கிராமம்.
பணி: மதுரை, நேரு வித்யாசாலை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர், மதுரை மற்றும் திருப்பூரில் உள்ள சில தனியார் கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி வேலை வாய்ப்பு மற்றும் மாணவர்களின் மனநல ஆலோசகர்.
இதுவரை பயண நூல், கவிதை, சிறுகதை தொகுப்பு என்று, ஐந்து நூல்களை எழுதி உள்ளார்.
ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கியதற்காக பல விருதுகள் பெற்றுள்ளார். அது தவிர, பல்வேறு தமிழ் வார, மாத இதழ்கள் நடத்திய சிறுகதை போட்டியில், பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *