கட்டுச் சேவல் மனிதர்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2012
பார்வையிட்டோர்: 11,439 
 

எட்டாம் நாள் நிலா. முருங்கைத் தடியின் மேல், இரண்டு புறமும் காட்டிக் காட்டி மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் விளிம்பு காட்டியவாறு பயணித்துக்கொண்டு இருந்தது ஆறுமுகத்தின் பாளைக் கத்தி. லாகவமாகத் தீட்டிக் கொண்டு இருந்தார். கூர்மையை அதிகரிப்பதற்கு வேண்டி வெங்கச்சாங்கல் பொடியைத் தடியில் தூவி விட்டுக்கொண்டார்.

எனக்கு அருகில் தண்ட பாணி நின்றுகொண்டு இருந்தான். நானும் அவனும் அந்த விடுமுறை நாளை வேட்டை நாள் என முடிவு செய்து காடு கரை எல்லாம் சுற்றினோம். ஏரிக் காட்டில் நான்கடி நீளக் கட்டுவிரியன் ஒன்றைப் பார்த்தபோது ஓட்டம் விட்டோம். 12 வயதுடைய நான்கு பாதங்கள். எங்கள் வேட்டை கடைசியில் நீர் வேட்கையாக முடிவுற்றது. தாகம் தவித்து, ஆறு முகத்தின் சாலையில் நின்றோம்.

‘‘என்ன அப்புனு… இந்தப் பக்கம் காத்து அடிச்சுருக்குது!’’ என்றவாறு எங்கள் இருவரையும் பார்த்தார் ஆறுமுகம்.

‘‘வேட்டைக்குப் போயிருந்தோம்!’’

‘‘அடங்கொண்ணியா! எலிவேட்டயா புலிவேட்டயா? எத்தன சிக்குச்சு?”

‘‘ஒண்ணுஞ் சிக்கல!’’

‘‘பரவாயில்ல… தெய்வா, இவங்க ரண்டு பேருக்கும் தண்ணி குடு!’’

சாலைக்கு முன்னிருந்த ஓலைப் பந்தலுக்குள் இருந்து தெய்வானை எழுந்து தண்ணீர் முகக்கச் சென்றார். பந்தலில் குழிவித்த அடுப்பின் மேல் கொப்பரையில் பதநீர் காய்ந்து, வேப்பங்கோந்தின் நிறத்தில் அலை ததும்பி கொப்புளிக்கும் இடங்களில் தோன்றும் நுரை ஓரங்களில் வந்து மோதிக்கொண்டு இருந்தது. பந்தலின் மேற்குப் பக்கமாக பல்லாங்குழி ஆடுவதற்குப் பறிக்கப்பட்டது போல இரு வரிசைக் குழிகள் இருந்தன. பித்தளைச் செம்பில் கொண்டுவந்த நீர் பனிக்கட்டியையே விழுங்குவது போலக் குளிர்ச்சியாக இருந்தது.

‘‘அப்படியே கருப்பட்டிச் சில்லு இருந்தா கொண்டா..!’’

நானும் தண்டபாணியும் தின்று முடித்தபோது அந்தப் பகல் கருப்பட்டி நிறத்துக்கு வந்துவிட்டது. மழைக்குப் பந்தலுக்குள் நுழைந்தபோது, ‘‘இந்தப் பல்லாங்குழி எதுக்கு… வெளயாடுவீங்களா’’ என்று ஆறுமுகத்தைக் கேட்டேன்.

‘‘ஆமா! பனை ஏறீட்டு வந்ததுக்கு அப்பறம் என்ன வேல? நானும் தெய்வாளும் வெளயாட வேண்டியதுதா! நீ வேற ஏனப்புனு… இதுல பாகக் காச்சி ஊத்தித்தான் கருப்பட்டி ஆக்கறது!’’

‘‘இப்பிடியே ஊத்துனா கருப்பட்டி மண் ஆயிராதா?’’

‘‘இடைல வெள்ளத் துணி விரிச்சுடுவம்!’’

மழை ஓய்ந்ததும் குழிகளின்மீது தெய்வானை வெள்ளைத் துணியை விரித்தார். விரிந்த துணியை மடக்கிய வலக்கையின் புற விரல்கள் கொண்டு குழிவித்தார். அந்தக் குழிகள் ஒவ்வொன்றிலும் எனக்கும் ஆறுமுகத்துக்குமான முந்தைய பிந்தைய நாட்கள் அவ்வளவும் வட்டு வட்டாக உருவம் திரளுகின்றன. ஒரு முறுகல் வாசனை காற்றெங்கும் வியாபிக்கிறது.

அவரது பாளைக் கத்தியிலிருந்து சீவப்பட்ட பனை நுங்கின் கண்களில் மேடு தட்டி நின்றது, இதற்கு முந்தைய பால்யம். ஆறுமுகத்தை முதலில் காதின் மூலம்தான் உணர்ந்திருக்க வாய்ப்பிருந்தது. அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு தோட்டத்துக்குப் போகும்போது வரப்புகளில் குன்றி மணியோ கோபாலஞ்சங்கோ தேடிக்கொண்டு இருக்கையில்,

‘‘இன்னிக்கு அப்புனும் வந்தாச்சாட்ட இருக்குது’’ என்று ஆகாச வெளியிலிருந்து சத்தம் கேட்டு மேலே பார்த்தேன். பாதிப் பனையில் காலிரண்டையும் வளைத்து ஊன்றி, இடைக்கயிற்றில் பின்தோள் கொடுத்துத் தொங்கிய நிலையில் தங்கியிருந்தார் ஆறுமுகம். இடுப்பின் பின்னே பாளைக் கத்தியும் பதநீருக்காக முட்டியில் தடவும் சுண்ணாம்பும் கடகத்தில் இருந்தன. பின்னாளில் அம்பறாத் தூணி பற்றிப் படிக்கும்போதும் பார்க்கும்போதும் அந்தரத்தில் தொங்கிய அந்தப் பெட்டியே நினைவுக்கு வந்தது.

பதநீரை ஊரிலுள்ளோர் அழைக்கும் பெயர் தெலுவு என்பதாகும். ஒரு பொருளுக்கு இரு பெயர்கள் என்பது ஏற்கக் கூடியதே! ரமேஷாகிய என்னை ஆறுமுகம் அப்புனு என்ற ழைப்பது போல! கிருஷ்ணன் நாடார் மட்டும் பதநீரைத் தெளிவாகவே ‘தெளிவு’ என்று கூறுவார். பொன்னுசாமி பனை நீர் என்பார். நான் ஆறுமுகத்திடம் வெகுநாட்கள் சொம்பில் பதநீர் வாங்கிச் சென்று குடிக்கிறவனாக வளர்ந்து வந்தேன். சொம்பை மறந்து சென்றுவிட்ட ஒரு நாளில் பனை ஓலையில் கோட்டை கட்டி பன்னாடைச் சல்லடையால் வடித்து ஊற்றிக் குடிக்க வைத்தார். மர உச்சியிலிருந்து கீறிப்போட்ட ஓலைச் சிறகொன்று மரகத எரிகல்லைப் போல உழவுபோட்ட விலாவில் வந்து விழுந்தது. கீழிறங்கி அதை எடுத்தவர், புறங்கைகொண்டு ஓலையின் குறுக்கு ஈர்க்குகளை முறித்தார். ஓலையைக் குழிவாக்கி, வால் நீட்டிய ஓலைத் தகடொன்றை மடித்து முடி போட்டபின், அதுவே பானத்தின் பாத்திரமானது. அன்றைக் குப் பதநீர் பச்சை ஓலையின் மணத்தையும் கூடுதலாகப் பெற்றிருந்தது.

ஒருமுறை அவரைச் சந்திக்கும்போது அந்த நேரம் வழக்கமான நேரத்தைவிட மாறி யிருந்தது.

‘’அப்புனு… கள் சாப்பிடறயா?’’ என்றார்.

‘‘அய்யய்யோ… கள்ளா?’’

‘‘அய்யய்யோ கள் இல்ல… பனங்கள்ளு!’’

‘‘தப்பல்லவா?’’

‘‘தப்புன்னா உங்க அப்பாறய்யனெல்லாங் குடிப்பாங்களா?’’

‘‘அப்பிடியா… அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?’’

‘‘அப்பிடிக் கேளு… இதுதான் படிச்ச புள்ளைக்கு அடையாளம். தெலுவுன்னா முட்டியில சுண்ணாம்பைத் தடவி வெச்சிருவோம். கள்ளுன்னா அதுக்குச் சுண்ணாம்பு கிடையாது. சுத்தமான பனம் பால். பின்னயும் உடம்புக்கு நல்லது அப்புனு! அதுலயும் ஒரு மரத்துக் கள்ளுன்னா ரொம்ப விசேஷம். சோத்தாங்காட்டய்யனப் பாத்திருக்கியா… எப்பிடி ஜம்முனு அம்சமா இருக்காங்க. எல்லாம் ஒரு மரத்துக் கள்ளுதேன்!’’

நான் பனை மரத்தின் அடியில் நின்று அன்றைக்குக் கள்ளையே குடித்தேன். இரண்டாம் மிடறு பருகும்போதே, ‘‘ஆமா… இதுக்குள்ள ஈ, எறும்பு, தேன் பூச்சின்னு இத்தனை செத்துக் கிடக்குதே… ஒண்ணும் பண்ணாதா?’’ என்றேன். ஆறுமுகத்தின் முகம் மலர்ந்தது. மடியிலிருந்து அவிழ்த்துச் சில கருப்பட்டிச் சில்லுகளையும் கொஞ்சம் பொட்டுக்கடலையையும் கொடுத்தார்.

‘‘பாத்தியா அப்புனு, இத்தன நாள் தெலுவு குடிச்ச. இந்தக் கேள்விய ஒரு நாளாவது கேட்டயா? இப்பக் கேக்கறே பாரு, இதான் கள்ளும்பட மகத்துவம். இப்பிடி ஈ, தேனியோட கொஞ்ச நாள் குடிச்சமுன்னு வையி, அப்பற இதுகளே கடிச்சாலும் நம்மள ஒண்ணும் பண் ணாது. கள்ளும் சாராயமும் கலந்து குடிச்சிட்டா கலெக்டர எந்த ஊருன்னு கேக்கலாம்!’’

எனக்கு கலெக்டரை அப்போதே அப்படிக் கேட்க வேண்டும் போலத் தோன்றியது. கலெக்டர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் அந்தப் பனைமரமும், ஆறுமுகமும் இருந்த இடம் கூடத் தெரியவில்லை. வீடு பார்க்க நடைச்சவாரி விட ஆரம்பித் திருந்தேன். பொங்கிப் பொங்கி வந்த ஏப்பம் மட்டும் எனக்குப் பிடிக்க வில்லை. அதைத் தவிர அனைத்துமே பிடித் திருந்தது. சத்தங்கள் யாவும் காதுக்கு வெளியே நின்றுகொண்டு ரீங்கார இரைச்சல் மட்டும் நேரடியாக இதயத்துக்கே கேட்டுக்கொண்டு இருந்தது. அம்மாவைப் பார்த்து மிகப் பேரன்போடு இளித்ததாக இப்போதைய ஞாபகம். அம்மாவும் ஏதேதோ ரீங்கரித்தாள். பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று கூறியது மட்டும் விளங்கியது. நன்றி உணர்ச்சியுடன் மயங்கி விழுந்தேன்.

அடுத்த நாள், ‘‘நீ தெலுவுகூடக் குடிக்கக் கூடாது. தோட்டத்துப் பக்கம் போனீன்னா காலத் தரிச்சிடுவேன்’’ என்றார் அப்பா.

சைக்கிள் கேரியரின் பக்கவாட்டில் உயிர்க் கோழி ஒன்றைக் கட்டிக் கொண்டு ஒரு சனிக்கிழமை எங்கள் வீட்டுக்கு ஆறுமுகம் வந்தார். நேராக அப்பாவிடம் சென்று, ‘‘இன்னிக்கு மாம்பறை முனியப்பன் கோயிலுக்கு அடசப் போடப் போறம். அப்புனு வையும் கூட்டிக்கிட்டுப் போவலாம்னு வந்தேன்’’ என்றார்.

‘‘கூட்டிட்டுப் போ! ஆனா, கண்ட தையும் அவனுக்கு ஊத்தி உட்றாதீங்க!’’ என்றார் அப்பா.

சைக்கிள் பார் கம்பியில் உட்கார்ந்து சென்ற கடைசிப் பயணம் அதுதான். பின்னர் கம்பியில் உட்கார்ந்து செல்ல வேண்டியிராதபடி வளர்ந்துவிட்டேன்.

எல்லாம் முடிந்து, திரும்பவும் சைக்கிளில் வைத்து மிதித்து வந்து என்னை வீட்டில் இறக்கிவிட்டு விட்டு, ‘‘கோழி என்ன கோழி… ஒரு நா கோச்சக் கறி திம்பம்’’ எனக் கூறிவிட்டுப் போனார் ஆறுமுகம்.

கோச்சைக் கறி புறநானூற்று வீரச் சுவை பொருந்தியது என்பதில் சந்தேகம் இல்லை. சேவற் சண்டையில் எறியப் பெறும் தோல்விச் சேவலுக்கு கோச்சை என்று பெயர். வெல்வதோ தோற்பதோ, அப்படியான கட்டுச் சேவல்கள் குப்பை கிளறித் தின்று உயிர் வாழ்வதில்லை. ராகி, அரிசி, சோளம், கம்பு என கிடைத்த தானிய வகைகளையெல்லாம் அவற்றுக்குப் போட்டு -அணையவும் விடாமல் அவற்றை வளர்த்துவார்கள்.நல்ல கட்டாளிகள் எனப் பெயர் பெற்ற வர்கள் சிலரது குழந்தைகள் ஈழநோவு பிடித்தவர்கள் போலக் கிடக்க, சேவல்கள் இறுகிக் கொழுத்திருக்கும்.

நான் ஆறுமுகத்துடன் முதன் முதலாக ஒரு தீபாவளி தினத்தில் பூலாம்வலசு கட்டுக்குப் போனேன். பூலாம்வலசில் போய் சைக்கிளை நிறுத்திவிட்டு மடியை அவிழ்த்தார். நான் பொட்டுக்கடலையை எதிர்பார்த்தேன். அவர் சேவற் கத்திகள் பொதிந்த துணிச்சரத்தை விரித்தார். அவரைச் சுற்றிலும் செப்பிடு வித்தைக் காரனுக்குச் சேர்வது போலக் கூட்டம் சேர்ந்தது.

சேவல் வளர்க்கிற எல்லோரும் களத்தில் இறங்கி, சேவல்களை நடவோ, நடப்பட்ட சேவல்கள் மீது மேற்சேவலாக பறவை விடவோ முடியாது. நெய்ப் பளபளப்புள்ள பருப்புக் கண்களில் கனலேந்தி வெறிகொண்டு பறக்கும் பறவையை இறக்கையையும் அடிவயிற்றையும் ஒருசேரக் கவ்விப் பிடித்து வளை கோட்டில் பின்னிழுக்கத் தெரிகிற லாவண்யம் வாய்க்காவிட்டால் எதிர்ச் சேவலுக்கு விழுகிற அடப் பூசை ஆட்கள்மீது விழுந்துவிடும்.ஊமத்தை போன்ற விஷங்களில் தோய்க்கப்பட்ட கத்திகளும் ஆட்டத்துக்கு வருவதுண்டு. கவனமுள்ள ஜாக்கிகள் மதிக்கப்படுவார்கள். பட்சி சாஸ்திரமும் தெரிந்தவர்கள் போற்றப்படுவார்கள். ஆறுமுகம் இரண்டாம் வகை.

பட்சி பேசுதல் அல்லது பட்சி ஒடுக்கம் என்ற பெயர்களில் அவர்கள் வெற்றி தோல்விகளைத் தீர்ப்பார்கள்.பட்சி ஒடுக்கம் பற்றிய தகவல்களில் நான் கேட்டதிலேயே வியப்பான செய்தி இதுதான்… மயில் எப்போ தாவது ஒரு பச்சோந்தியைப் பார்த்து விட்டால் போதும்… நிறம் மாறும் அந்த ஓணானின் பிளந்த வாய்க்குள் தனது பொன்னீலம் மினுக்கும் தொண்டைப் பகுதியைக் கொடுத்துக் கடிவாங்கிச் செத்துவிடும். இதில் மாற்றமேதுமில்லை என்றார் ஆறுமுகம். அவரது இந்தச் செய்தி உண்மையா என நிரூபித்தறிய எனக்கு வாய்க்கவில்லை.

சேவல் கட்டுங்களத்தில், பட்சி எடுபடாது… பேசாது எனத் தெரிந்தால் எவ்வளவு வற்புறுத்தினாலும் அதை நடவோ, மேற்சேவல் விடவோ ஒப்புக்கொள்ள மாட்டார் ஆறுமுகம். கொய்து விடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டால், எப்பேர்க்கொண்ட சேவல்கள் மீதும் சொத்தைகளைக்கூட இறக்கிவிட்டுவிடு வார். ஆயிரக்கணக்கில் விலை பேசப்பட்ட சேவல்களுக்கு 200, 300 ரூபாய் சேவல்களைக்கொண்டு கதிமோட்சம் அளித்திருக்கிறார். கணக்குத்தெற்றி விடுகிற களங்களில் அவரது விளக்கம் பிரமாதமாக இருக்கும். ‘‘இல்லப்புனு… நாம மேசேவல் உட்ட நேரமெல்லாம் கரெக்டுதே! ரண்டும் மோதிக்கிட் டிருக்கீலயே பொழுது சாய்ஞ்சிட்டுதுல்ல.. பச்சி மாறிப் போயிட்டுது’’ என்பார்.

அரசாங்கம் கள்ளுக்குத் தடை கொண்டு வந்த வருடம், ஆறுமுகம் சேவல்கட்டுக்கு வேறொரு வடிவத்தில் விஜயம் செய்துகொண்டு இருந்தார். பேரிக்காய், திராட்சை முதலிய ஆவணங்களைக்கொண்டு கமகமக்கிற சாராயம் காய்ச்சும் தொழில்நுட்பம் அவருக்கு வாய்த்திருந்தது.

‘‘சாராயங் காய்ச்சறது தப்பில்லயா?’’

‘‘தப்புத்தே அப்புனு! பவுடரு கலக்கி கலர்ச் சாராயமுன்னு மாளாத காசுக்கு விக்கலாம். நம்ம தோட்டத்துல, நம்ம பனையில பாளையில வர்ற கள்ளக் குடிக்கக் கூடாதுன்னு கவருமண்டு சொல்றது மட்டும் நாயமா? ஏழ பாழைக நாசமாப் போகோணும், வலுத்தவங்க… சரி விடு, நம்ம பொன்னா கல்யாணம் முடிஞ்சதீமு இதத் தூக்கித் தூரப் போட்டுர்றேன்!’’

ஆனால், சாராயம் காய்ச்சுவதை மகளின் திருமணத்துக்கு முன்பே விட்டுவிட்டார். பதநீருக்காக மட்டும் பனை ஏறுவது கட்டுப்படியாகாத வேலை என்பதால், அதையும் விட்டார். கொப்பரை எரிக்கப் பறித்த குழியும் கருப்பட்டிக் குழிகளும் காற்றின் வருடலில் மேவியது.

ஆறுமுகத்தை சின்ன தாராபுரத்தில், மூலனூரில், அரவக்குறிச்சியில், வெள்ளக்கோவிலில், பள்ளப்பட்டியில் இப்படி எங்கு வேண்டுமானாலும் பார்ப்பேன். அவரது சைக்கிளில் என்ன இருக்கும் என்பது யூகங்களுக்கு அப்பாற்பட்டது. கோழிகள், இளநீர், நாவல் பழங்கள், சிப்ஸ் பாக்கெட்டுகள், ஐஸ், அன்னாசிப் பழங்கள்…

அன்றைக்கு இருவரும் சைக்கிளில் சாந்தப்பாடியை நெருங்கியிருந்தோம். நான் ஓரமாகவும் எனக்குப் பக்க வாட்டில், ஆனால் சாலை மையம் என்று கொள்ளத்தக்க நிலையில் ஆறு முகமும் சென்றோம். பின்னாலிருந்து ஹாரனும் பெரு வெளிச்சமும் ஒருசேர… சட்டென பிரேக் அழுத்தி இடப்புறம் ஒதுங்கி எனக்குப் பின்னால் வரும் யத்தனத்தில் ஆறுமுகம் இருக்கும்போதே கார் பெருங்காற்று உராய்வையும் மரணபீதியூட்டும் அண்மையையும் தந்துவிட்டுச் சென்றது.

‘‘ஏய்..! ஊடு போய்ச் சேர்ற எண்ண மில்லையா?’’ & ஆறுமுகம் கத்தினார்.

கார் மெதுவாகியது. பின் சீட்டி லிருந்து எட்டிப் பார்த்த தலையை எனக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. எம்.கே.எல். வட்டாரத்தின் பெரிய தலைகளில் ஒருவர். ஆறுமுகம் சைக் கிளின் ஸ்டேண்டைப் போட்டுவிட்டு காரைப் பார்க்க நடந்தார். எம்.கே.எல் தலையை உள்ளே இழுத்துக்கொண்டு டிரைவரிடம் ஏதோ சொன்ன மாதிரி இருந்தது. கார் மறுபடியும் வேக மெடுத்தது.

‘‘யார்… தெரிஞ்சுதா?’’

‘‘பாத்த அப்புனு… எம்.கே.எல்லு தான?’’ ‘‘ஆமா! எறங்கீர்ந்தார்னா..?’’

‘‘அவந் தலயக் கழட்டி மண்ணாங் காட்டுப்பதிக்குக் கொண்டுபோயிருப்பேன்…’’

‘‘பணங்கொண்ட கையி..!’’

‘‘இருக்கட்டு! எட்டு லாரி, மூணு பஸ்ஸ§ ஓடுது. அதுக்குனு? தப்பா வந்தா தப்பு தப்புத்தான? தட்டி எறிஞ்சிட்டுப் போயிட்டா, எம் பொண்டாட்டி புள்ளைல தெருவுல நிக்கணும்? ஆண் டிச்சியாத்தா புண்ணியத்துல தப்பிச்சன். ஏனப்புனு, நீயே சொல்லு… அவருட்ட இருக்கற காசுக்கு ஏ ஊட்டுல ஏதாச்சு செலவிருக்குதா..? இல்லைல்ல? பின்ன இப்பிடித்தே..!’’

ஸ்டேண்டை விடுவித்து சைக்கிளை விட ஆரம்பித்தார் ஆறுமுகம்.

மனிதர்களிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கலாம் என்பதையும், எதையும் எதிர்பார்க்கவும் வேண்டியதில்லை என்பதையும் ஒரே புள்ளியில் கண்டு கொண்டேன். என்றைக்கேனும் பட்சி சாஸ்திரம் கற்றுக்கொள்ளலாம் என வைத்திருந்த சொற்ப நம்பிக்கையும் அதே கணத்தில் இத்து விழுந்தது. பக்கக் காட்டில் எங்கோ தொக் என்று ஒரு சத்தம் கேட்டது. அது ஒரு பனங் காயைத் தவிர வேறு எதுவாக இருக்கவும் சாத்தியமே இல்லை.

– ஜனவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *