காதல் முடிச்சு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 19, 2018
பார்வையிட்டோர்: 8,815 
 

வீட்டு முன் உள்ள தோட்டத்து மரத்தடியில் நாற்காலி போட்டு அமர்ந்து, தினசரியை விரித்துப் படித்துக்கொண்டிருந்த தணிகாசலம் முன் உள்ள நாற்காலியில் வாட்டமாக வந்து அமர்ந்தான் அவரின் பெரிய மகன்.

பெயர் சேகர். வயசு 27. ‘எம்.பி.ஏ. படிப்பு. நல்ல உத்தியோகம். கை நிறைய சம்பளம்.

ஆனால்…

‘திருமணம் முடிந்து ஆறு மாதம்கூட முழுதாக ஆகவில்லை. எதற்கு வாட்டம்?’- நிமிர்ந்து பார்த்த தணிகாசலத்துக்குள் கேள்வி எழுந்தது. கேட்கவில்லை!

“நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசμம்ப்பா…”- கீழ் ஸ்தாதியில் தொடங்கினான் சேகர்.

“என்னப்பா?”- தினசரியைக் கீழே வைத்தார்.

“சொல்ல சங்கடமாவும்… கூச்சமாவும் இருக்கு. இருந்தாலும் சொல்றேன்.”

“…………….”

“சொல்ல வேண்டிய கட்டாயம்! நா…நான்… சந்தோஷமா இல்லேப்பா…”- தயங்கியபடி… தட்டுத் தடுமாறி… சொன்னான்.

“என்னப்பா சொல்றே…?”

தணிகாசலத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது. மகனைப் பதற்றத்துடன் பார்த்தார்.

“என்னை என் வழியில போகவிடாம தடுத்து… உங்க வழியில திருப்பி… இப்போ எனக்கும் சந்தோஷமில்லே! உங்களுக்கும் தர்மசங்கடம்!”

“புரியலை…!”- குழப்பமாக ஏறிட்டார்.

“ஆமாப்பா… நானும், மைதிலியும் இணக்கமா இல்லே! தாலி கட்டிய நாளையிலேருந்து இதுவரை நாங்க சேர்ந்து படுக்கல. கணவன் மனைவியா வாழல.”

“சேகர்…!”- தந்தைக்குஅதிர்ச்சி. உடல் ‘குப்’பென்று வியர்த்தது.

“நான் சொல்றதைக் கொஞ்சம் நிதானமா கேளுங்கப்பா. எங்க கல்யாணத்துல அவளுக்கு விருப்பம் இல்ல! மணமேடைக்கு வரும்போதே முகத்துல வாட்டம். ‘புதுப்பெண்… இந்தக் கல்யாணம், சடங்கு சம்பிரதாயம், முதலிரவை நினைச்சி மிரள்றா போல இருக்கு!’ன்னு நெனைச்சேன். முதலிரவு அறைக்குள் நுழைஞ்சவ முகத்திலும் மலர்ச்சி இல்லே!
அவளைச் சரிப்படுத்த நினைச்சேன்.

‘பயப்படாதே! ஏன் இப்படி? தைரியமா இரு’ன்னு சமாதானப்படுத்தினேன். அதுக்கு அவ, ‘நான் ஒருத்தரைக் காதலிச்சேன். எங்களை அப்பா-அம்மா பிரிச்சி… உங்களுக்குக் கட்டாயத் தாலி கட்டி வைச்சிட்டாங்க’ன்னு பெரிய குண்டைப் போட்டாள். நானும் பொய் சொல்றா போலன்னு சகஜமா எடுத்துக்கிட்டு, ‘வெறுப்பேத்தாதே! இப்படி இல்லாததைச் சொல்லி… எம் மனசுல எப்படின்னு ஆழம் பார்க்காதே! உண்மையான காரணம் என்ன?’ன்னு கேட்டேன்.

அதுக்கு… ‘இது சத்தியம்! நான் சொல்றது உண்மை!!’ன்னு அடிச்சி சொன்னா. எனக்கு அப்போதான்… ‘அது பொய்யில்ல; உண்மை’ன்னு உறைச்சுது. அப்புறம் நானும் மனசுல ஏறின பாரத்தை அவிழ்த்து விட்டுட்டு, ‘நாம ரெண்டு பேரையும் ஒரே படகுல விதி சேர்த்துடுச்சு. பழசை மறந்தா… புதுசா வாழலாம்’ன்னேன்.

அதுக்கு மைதிலி, ‘முடியாது… என்னால முடியாது’ன்னு ஒரேயடியாக மறுத்துட்டா! ‘ஊர் உலகத்துக்கு நாம கணவன்-மனைவி. ஆனா, உள்ளுக்குள் தனித் தனியாதான் இருக்கμம். அத்துமீறி நடந்தா… நான் தற்கொலை செய்துக்குவேன்”னு அழுதா! அதான்…அப்படியே இருக்கோம்” நிறுத்தினான்.

தணிகாசலத்தால் நம்ப முடியவில்லை…நம்பாமலும் இருக்க முடியவில்லை!

“இதுவரைக்கும் ஏன் நீ சொல்லலை?”

“காதல் முறிவு… அந்த ஆதங்கத்தின் தாக்கத்துல அப்படிப் பேசறா! போகப் போக துக்கம் வடியும். நிலைமை சுமூகமாகும். அவசரப்பட வேணாம்ன்னு ‘கம்’முன்னு இருந்தேன்ப்பா. அதையெல்லாம்விட முக்கியக் காரணம்… தாம்பத்திய விவகாரம். உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு எனக்குள்ள சின்ன தயக்கம்.”

தணிகாசலத்துக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கொஞ்ச நேர யோசனைக்குப் பின்…

“சரி. அவ நம்ம வழிக்கு வரல! நாமாவது அவ வழிக்குப் போவோம்ன்னு நெனைச்சி கவலையை விடு. ‘காதலிச்சவனையே உனக்கு முடிச்சி வைக்கிறேன்’னு சொல்ல வேண்டியதுதானே….?” கேட்டார்.

“சொன்னேன்ப்பா! அதுக்கு… ‘நீங்க கட்டிய தாலிக்கு என்ன மதிப்பு?’ன்னு கேட்கிறா. ‘இதுக்கு மதிப்பு இல்ல. நாம விவாகரத்து பண்ணிக்கலாம்னேன். ‘அதுக்கு நாம ஏன் விவாகரத்து வரை போகனும்? இப்பவே அறுத்துடலாம்’ன்னு தாலிக்கயித்து மேல கையை வைச்சா. எனக்கு ஒரு கணம் உடல் ஆடி, முகம் வெளிறிப் போச்சு. அதைக் கவனிச்சவ… ‘இந்தக் கலாச்சார பயம்தான்! நான் கழட்ட முடியாம தவிக்கிறேன்… கழுத்துல சுமக்கிறேன். நீங்க என்னை விட்டுப் பிரிஞ்சு, உங்க காதலியைக் கட்டிக்கிட்டு குடும்பம் நடத்துங்க’ன்னு சொன்னாப்பா.”

“அதுக்கு நீ என்ன சொன்னே?”

“எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை. பேச வாய் வரல!”

“அவ சொல்றதைப் பார்த்தா இங்கேயே தனிமரமா வாழப்போறாளா?”

“ஆமா!”

“பெரிய சிக்கலா இருக்கே!”- ஜீரணிக்க முடியாதவராக கைகளால் தலையைப் பிடித்துக்கொண்டார் தணிகாசலம்.

சேகர் தொடர்ந்தான்: “அவளுக்கு வாழ்க்கை இல்லேங்குறபோது, எனக்கு மட்டும் ஏன்ப்பா காதலிச்ச பொண்ணோடு வாழ்க்கை? தேவை இல்லே! நானும் இப்படியே இருக்க முடிவு பண்ணிட்டேன்” என்றான்.

விநாடியில் தணிகாசலம் வயிற்றில் எவரோ ‘சடக்’கென்று ஈட்டியைச் சொருகி பிடுங்கியது போல இருந்தது. பொறுக்க முடியாத வலி. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே நாற்காலியில் தலையைச் சாய்த்து கண்களை மூடினார்.

சேகர், பட்டம் படிக்கும்போதே தன்னுடன் படித்த ஒரு பெண்ணைக் காதலித்தான். இருவருள் ஒருவருக்கு வேலை கிடைத்ததும் திருமணம் முடித்துக்கொள்வதாக தீர்மானம். காதல் விவகாரம் கசிந்து-தணிகாசலம் காதுக்கு வர… பையனிடம் கொதித்து, பணிந்து, தழைந்து… குழைந்து… மடக்கி, பெண் பார்த்து மைதிலியை முடித்துவிட்டார்.

இப்போது… சிக்கல்!

“முட்டாக்கழுதை… கல்யாணத்துக்கு முன்னாடியே விஷயத்தை உடைச்சிருந்தா நாம கழண்டிருக்கலாம். இல்லே…காதலனுடன் அவளைச் சேர்த்து வச்சிருக்காலம்!” முணுமுணுத்தார்.

“முன்னது முடியும்! பின்னது முடியாதுப்பா…” என்றான் மகன்.

“ஏன்ப்பா?”- கலக்கமாக ஏறிட்டார்.

“அவ அப்பா சம்மதிக்கμமே? அது முடியாமத்தானே அவளை எனக்குக் கட்டி வைச்சார். அடுத்து… கல்யாணம் நின்னு போனா நமக்கும், அந்தக் குடும்பத்துக்கும் சம்பந்தம் இல்ல! எப்படி அவளைக் காதலனுக்குக் கட்டி வைக்க முடியும்?”

தணிகாசலத்துக்கு அதைப் பற்றி மேற்கொண்டு பேச விருப்பமில்லை. “வாழ்க்கையில இணைஞ்ச நீங்க ஒரே வீட்டுக்குள்ள எதிர் எதிர் துருவங்களா இருந்தா தாம்பத்தியம் ருசிக்குமா?” என்றார்.

“பெத்தவங்க காதலை ஏத்துக்காத குத்தம்… நாங்க பலியாடுங்கப்பா…”- மகன் சொல்ல…

தணிகாசலத்துக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல ஆனது. மவுனமாக வலியைத் தாங்கி மறுபடி யோசனையில் ஆழ்ந்தார். வெகுநேரத்துக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்து, நீளமாக ஒரு பெருமூச்சு விட்டு…

“பொறு… அவசரப்படாதே! அவளைச் சரி பண்றேன்” எழுந்தார்.

“எப்படிப்பா?” இவனும் எழுந்தான்.

“இப்படி இல்லே… அப்படி” என்றவர், “ஆனா… நீ என் பின்னால வீட்டுக்குள்ளே வராதே! நீயும், நானும் ஒண்ணா இருந்தா… மனம் திறந்து பேச மாட்டா. தயங்குவா. ஒண்ணு பண்ணலாம்… முன்னால போக அறைக்குள் நுழைஞ்சி கதவைச் சாத்திக்கோ. நான் பின்னால வர்றேன்”- அமர்ந்தார்.

சேகர் அப்படியே செய்தான்.

அடுத்து தணிகாசலம் எழுந்து சென்று ‘ஹாலில்’ அமர்ந்து, “மைதிலி… மைதிலி!” என உள் நோக்கி அழைத்தார்.

“இதோ வர்றேன் மாமா!”- குரல் கொடுத்தவள், அடுப்படியில் இருந்து கையைத் துடைத்துக்கொண்டு எதிரில் வந்தாள்.

“உட்காரும்மா…”- தணிகாசலம்

வாஞ்சையுடன் எதிர் இருக்கையைக் காட்டினார்.

“இருக்கட்டும் மாமா”- அவள்… மரியாதை நிமித்தம் மறுத்தாள்.

“மரியாதை மனசுல இருந்தா போதும்மா. நான் உன்கிட்ட அதிக நேரம் பேசμம். கால் வலிக்கும்… உட்காரு.”

நாற்காலி முனையில் அமர்ந்தாள்.

கூர்ந்துப் பார்த்தார்.

“நாம முக்கியமா பேசப் போறதால ஒளிமறைவு இல்லாம உள்ளதை உள்ளபடி பேசணும்… என்ன?”

“சரி மாமா”- தலையசைத்தாள்.

“நேரடியா விஷயத்துக்கு வாறேன். சேகரும் நீயும் தாலி கட்டின நாள்லேருந்து இன்னி வரை சந்தோஷமா இல்லேங்கறாங்களே?”

“யாரு மாமா சொன்னா?”

“உன் புருஷன்தான்!”

தலை கவிழ்ந்து… தரையைப் பார்த்தாள்.

“ஏம்மா… இப்படி?”

“அவர்கிட்ட விளக்கமா சொல்லி இருக்கேன் மாமா”- நிமிரவில்லை!

“சேகர் சொன்னான். உன் முடிவுல மாத்தம் இல்லையா?”

“இல்லே!”

“சரி… அந்தப் பையனைச் சொல்லு. உங்களைச் சேர்த்து வைக்கிறேன்.”

“சேச்சே… வேணாம் மாமா!”

“ஏன்?”

“அது முடியாது.”

“காரணம்?”

“அவரும் கல்யாணம் முடிச்சாச்சு!”

“அப்புறம் ஏன் அவனை நினைக்கிறே?”

“என்னை மாதிரிதான் மாமா அவரும்! பெத்தவங்களுக்கு காதல் பிடிக்காம பிரிச்சி, என்னை உங்க புள்ளையோடு முடிச்சி வச்சாங்க. இதைக் காரணம் காட்டி அவர் அம்மா-அப்பா… ‘அவளே உன்னை நிராகரிச்சு திருமணம் முடிச்சு சந்தோஷமா இருக்கும்போது… ஆம்பளை நீ எதுக்கு இப்படியே இருக்கணும்?’ன்னு வற்புறுத்தி வேற பொண்ணை கட்டி வச்சிட்டாங்க!”

“புள்ளை மேல அக்கறை! பெத்தவங்க செஞ்சது நியாயம்!! இப்போ மனைவியோடு சந்தோஷமா இருக்கானா? இல்லே… உன்னையே நெனைச்சி… குடித்தனம் நடத்தாம இருக்கானா?”

“சந்தோசமாதான் இருக்காரு மாமா. வீட்டுக்காரி மூணு மாசம் முழுகாம இருக்கா!”

“அப்படி இருக்கும்போது நீ மட்டும் காதலை நெனைச்சி உருகிறது என்ன நியாயம்?”

“எப்படி முயற்சி பண்ணியும் என் மனசு அந்த காதலில் இருந்து மாறல மாமா. மறக்க முடியல!”

“இந்த உறுதி-பிடிவாதம் உனக்குப் பெத்தவங்களுக்கு முன் இருந்திருக்கணும்! கல்யாணத்தை நிறுத்தி இருக்கணும்.”

“மனசுல உறுதி இருந்துச்சு மாமா. அவுங்களும் உங்களைப் போல மிரட்டி, உருட்டி, அடிச்சி, கெஞ்சி… மாத்திட்டாங்க!”

எப்படித் திரும்பினாலும் தங்கள் மேல் அடி விழுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! காதல் முன் பெற்றவர்கள் தூசு! அவருக்கே தன்னை நினைக்க அருவருப்பாக இருந்தது.

“சரிம்மா… நடந்தது நடந்துப் போச்சு. இனி சேகரும், நீயும் சந்தோஷமா குடும்பம் நடத்தணும். அதுதான் சரி!”

“அது முடியாது மாமா! -‘கணக்கு’ சரி இல்லே”

“கணக்கா… புரியல?”

“ஒருத்தி தனியா நிக்கிறா…”

“யாரு?”

“மலர்! உங்க மகனோட காதலி. அவ இன்னும் கல்யாணம் முடிக்கல…”

தணிகாசலத்துக்குத் தலை சுழன்றது. அதே நேரம் கொஞ்சம் எரிச்சலும் தலை தூக்கியது.

“வாழ்க்கையில் எல்லா கணக்குமே சரியா வரணும்ன்னு எதிர்பார்க்கிறது முட்டாள்தனம்மா!”

“இல்ல… சரியா வரணும் மாமா. அப்போதான் உறுத்தல் இல்லாம மனம் இணைஞ்சு வாழலாம்.”

தணிகாசலத்துக்கு இதுவும் சரியாகவே தெரிந்தது!

“சரி… அவளுக்கும் ஒரு மாப்பிள்ளை பார்த்து முடிக்கலாம்” என்றார்.

“முடியாது மாமா.”

“ஏன்?”

“அவ என்னைப் போல கெட்டி.”

“எப்படிச் சொல்றே?”

“நானும், உங்க புள்ளையும் இந்த முடிவுக்கு வந்து… அவகிட்ட கேட்டோம். அதுக்கு, ‘என் காதல் புனிதமானது… தெய்வீகமானது. அதை நான் யாருக்காகவும், எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்!’னு உறுதியா சொல்லி எங்களைத் திருப்பி அனுப்பிட்டா.”

“அவ விதி அது! உங்க முடிவை நீங்க மாத்திக்க வேண்டியதுதானே?”

“அவளோட உறுதியைப் பார்த்தப் பிறகுதான் எங்களுக்கும் செருப்படி! எங்க காதல்ல கெட்டியானோம். அவங்க காதல் உறுதின்னா… எங்க காதல் மட்டமா மாமா? எல்லாருக்கும் ஒரே மனசுதானே!

பெண்ணோட சம்மதம் இல்லாம பலவந்தமா ஒருத்தியைச் சுவைத்தவன் அவளையே கல்யாணம் பண்ணிக்கிறது… பார்க்கிறதுக்கு நியாயமான தீர்ப்பா தோணலாம். ஆனா, அது சரி இல்லாத முடிவு. அப்படித்தான் மாமா… விருப்பம் இல்லாம தாலி கட்டினவனோடு சேர்ந்து வாழ்றதும் சரி இல்லாதது.”

“சரிம்மா… இது எல்லாத்துக்கும் தீர்வு?”

“கலாச்சாரம் பாழ்படாம… பெத்தவங்க வேதனைப்படாம இருக்கணும்ன்னா யாரையும் தொந்தரவு பண்ணாம இருக்கிற இடத்திலேயே வாழ்றது நல்ல முடிவு. ஆனா, இது காதல் மனசுகளைக் குழி தோண்டி புதைச்ச தீர்ப்பு. நாங்க அப்படி வாழ விரும்பல!

செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கμங்கறதுக்காக… எங்களையே நாங்க தண்டிச்சிக்கிட்டு, அவுங்கவுங்க கூட்டுக்குள்ளே காதல் தீவுகளாக தனித்து வாழ்றதுதான் மாமா எங்க முடிவு!”

தணிகாசலத்துக்கு ரொம்பவே வலித்தது!

“விவாதம் சரியாவே இருக்கட்டும். இது ஆரோக்கியமான தீர்வா மைதிலி?” என்றார் சங்கடமாக!

“ஆரோக்கியம் இல்லாம இருக்கலாம். ஆனா, ஓடிப் போறது… தற்கொலைன்னு காதலர்கள் எத்தனை அடி அடிச்சாலும் பெத்தவங்கிட்டேயும், மத்தவங்கிட்டேயும் எதிர்ப்பு இருந்துக்கிட்டே இருக்கே மாமா… காதல் அத்தனைக் கசப்பானதா?”

“இல்லேம்மா! பையனோ… பொண்ணோ வயசு கோளாறு-உடல் கவர்ச்சியால காதல் பண்ணி… வாழ்க்கையில தோத்து, பெத்தவங்களுக்குக் கஷ்டமாவோ…பாரமாவோ ஆகிடக் கூடாதுங்கற எச்சரிக்கை உணர்வு அவுங்களை அப்படி எதிர்க்கச் சொல்லுதும்மா! இதுக்கு இதுதான் அடிப்படைச் சுழி. மானம்-மரியாதை, பணம்- அந்தஸ்து எல்லாம் அடுத்து…”

“காதலுக்கு எத்தனை எதிர்ப்பு மாமா? பெத்தவங்க அக்கறைன்னா… சம்பந்தப்பட்டவங்கிட்ட அதட்டாம- உருட்டாம நல்லவிதமா எடுத்துச் சொல்லμம். அவங்க கேட்கலைன்னா… ‘இதுக்கு மேல எங்க இஷ்டம். விருப்பப்படி செய்துக்கங்க! நாளைக்கு கஷ்டம்னா எங்கிட்ட வராதீங்க. உங்க வாழ்க்கை உங்களோட…’ன்னு சொல்லி ஒதுங்கிடலாம். ஒதுக்கிடலாம்.
அப்படி இல்லாம… மானம், மரியாதை, வாழ்க்கையே போன மாதிரி பிரிக்கிறீங்க? இதயத்து இழப்பை எந்த ஜீவனால சகிச்சிக்க முடியும்? அதான்… அங்கேதான் எல்லாருமே இடர்றாங்க… சரியுறாங்க.

சரி மாமா… விவாதம் நீண்டுகிட்டே போகும். காதல்ல தோத்த பல பேர் பழசை மறந்து வாழ்றாங்க… மறைச்சி வாழ்றாங்க இல்லே? அது போல நாங்களும் இப்படியே இருந்துட்டுப் போறோம்… விடுங்க” என்றாள்.

விழிகள் அருவியாக கொட்டின.

தணிகாசலத்துக்கு மனம் ஒப்பவில்லை!

“எப்படியும் இருந்துட்டுப் போகட்டும்ன்னு விடுறதுக்கு இது என்ன இலவசமாம்மா… தாம்பத்தியமாச்சே?”

தழைவாகக் கேட்டு… வலியாகப் பார்த்தார்.

“இல்ல மாமா… உங்களைப் போல காதல் எதிர்ப்பாளர்களுக்குப் பாடம்!” என்று சொல்லிவிட்டு அழுகையுடனே உள்ளே சென்றாள்.

அப்படியே சிலையானார் தணிகாசலம்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *