ரூல்ஸ் சந்திரசேகர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 6,785 
 
 

ஊர் சுற்றுவது சம்மந்தமாக ஏதேனும் படிப்பிருந்தால் அதில் பி.ஹெச்.டி வாங்கியிருப்பான் சரவணன். இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவெனில், தான் எதற்காக அவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை. நோக்கமற்ற செயல் அப்படி ஒன்றும் சாதாரண விஷயமல்ல. புதிய பதிய இடங்களையும், தெருக்களையும் வீடுகளையும், மரங்களையும் சுற்றிப் பார்த்தபடி சென்று கொண்டேயிருப்பான். அவ்வாறு செல்வதில் அப்படி ஒரு அலாதி விருப்பம்.

சுரவணின் தந்தை திரு. சந்திரசேகர் ஆர்மி ரிடையர்டு ஹவுல்தார். விறைப்பான மனிதர். தூங்கும் பொழுது கூட அட்டென்ஷனில்தான் தூங்குவார். காலை 5 மணிக்கு எழுவதால் அப்படி என்ன நன்மை இருக்கிறது என்று கேட்டால் உருப்படியாக எந்த பதிலும் சொல்லத் தெரியாது. ஆனால் கடந்த 5 வருடமாக திரு. சுந்திரசேகரின் மனைவி காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறார். 5 மணியிலிருந்து 8 மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அதன் பின் உத்தரத்தைப் பார்த்து கொண்டு உட்கார்ந்திருப்பார். திரு. சுந்திரசேகர் 8 மணிக்கு மேல் தேய்த்து வைக்கப்பட்ட உடைகளை போட்டுக் கொண்டு கலெக்டரைப் பார்த்து உரையாடிவிட்டு வருவார் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவருக்கும் அதே உத்திரம் தான். தன் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது என்பது அவருக்கு பெருமையான விஷயம். இந்த நாடே தொலைக்காட்சி பார்த்துதான் நேரத்தை வீணடிக்கின்றது என்பது அவரது எண்ணம். தன் மனைவி சீரியல் பார்ப்பதில்லை என்று பல பேரிடம் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார். திருமதி. பார்வதி அம்மாளை பற்றி ஒருவரியில் கூறுவதென்றால், அவர் திரு. சந்திரசேகரிடம் மாட்டிக் கொண்ட ஒரு நீக்ரோ அடிமை. அவரது எண்ணங்களை பிரதிபலிப்பவர்.

திரு. சந்திரசேகர் வீட்டில் தீபாவளியும், பொங்கலும் கொண்டாடப்படுவதில்லை. சுதந்திர தினமும், குடியரசுதினமும் தான் வெகுவிமரிiசாக கொண்டாடப்படும். அன்றுதான் தன் குடும்பத்திற்கு புதுத்துணி எடுத்துக் கொடுப்பார். தான் சுதந்திரதினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுவதை ஊர் முழுவதிற்கும் தெரியும்படி காட்டிக்கொள்வார். அன்றைய தினத்தில் பார்வதி அம்மாளுக்கு முக்கிய பங்குண்டு. அவர் சுதந்திரதினத்தை கொண்டாடியே ஆக வேண்டும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். அது கட்டாயமாக்கப்பட்ட விஷயம்.

ஒருமுறை பாரதியின் கவிதைப் புத்தகத்தை படித்துவிட்டு அதில் மயங்கிப் போன திரு. சந்திரசேகர் தனது நண்பரிடம் பெண்ணடிமைத்தனத்தைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தார். கையில் காபி டம்ளரோடு வந்து நின்ற பார்வதியம்மாளின் காதில் அந்த பேச்சு விழ, பார்வதி அம்மாளின் வாழ்வில் அன்றுமட்டும் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆம் அவர் சிரித்தது அன்று மட்டும் தான். திரு. சந்திரசேகர் தனக்கும் நகைச்சுவை உணர்வு இருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டார்.

சில சமயங்களில் ஆண்டவன் இருக்கிறான் என்று நம்பத்தான் தோன்றுகிறது. நாத்திகர்கள் கூட இது போன்ற சமயங்களில் வாயடைத்துப் போக வேண்டும். அதர்மம் தலை தூக்கும்பொழுதெல்லாம், தர்மத்தை நிலைநாட்ட ஆண்டவனுடைய எதிர்செயல் நடந்தே தீரும் என்பார்கள். ஆம் திரு. சந்திரசேகரின் ஒழுக்க அதர்மத்தை ஒழிப்பதற்காக அவதாரமெடுத்தவன் சரவணன். விதியின் விளையாட்டு விநோதமானது. எல்லையில் நின்று எதிரிகளை சமாளிக்க முடிந்தவரால் தன் வீட்டில் தன் மகனை சமாளிக்க முடியவில்லை. அவனை தன் வழிக்கு கொண்டு வர பல பிரோயகங்களை உபயோகித்தார். அதிகாலையில் நீராகாரம் குடிப்பதன் மூலம் 100 வருடங்களுக்கு மேல் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை அதிகாரப்பூர்வமாக திரு. சந்திரசேகர் நம்பிய காரணத்தால், காபியின் சுவை எப்படி இருக்கும் என்பதே மறந்து போய்விட்டது சரவணனுக்கு. மிகுந்த சிந்தனைக்குப் பின் பார்வதியம்மாள் தான் கண்டுபிடித்த இந்த விஷயத்தை தயங்கி தயங்கி கூறினார் திரு. சந்திரசேகரிடம்.

‘காபிதான சாப்பிடக் கூடாது பால் சாப்பிடலாம்ல. பால் உடம்புக்கு நல்லதுதான’

திரு. சந்திரசேகரின் பெருமூளையை, பார்வதியம்மாளின் இந்த வார்த்தைகள் கடுமையாகத் தாக்க சிந்தனை வயப்பட்டார். ஒரு வாரத்திற்குப்பின் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார். கறந்த பாலை அப்படியே சாப்பிடுவது என்ற முடிவு. மிரண்டு போனார் பார்வதி அம்மாள். நீராகாரத்தின் அருமை பெருமைகளை தற்பொழுதுதான் உணர ஆரம்பித்திருக்கிறார்.

சரவணன் தன் அதிபுத்திசாலித்தனமான அறிவைப் பயன்படுத்தி 12 ஆம் வகுப்பு வரை முடித்துவிட்டான். அதற்கு மேல் படிக்க மூளை இடம் தராததால் அது தன்னைத்தானே நிறுத்திக்கொண்டது. சரவணன் மேல் எந்த தவறும் இல்லை. அவன் என்ன செய்வான். இயற்கையை ரசிக்க ஆரம்பித்துவிட்டான்.

திரு. சந்திரசேகர் முதன் முறையாக தோற்றது தன் தமையனிடம் தான். 5 வருடங்களுக்கு முன்னர்தான் ஆர்மியிலிருந்து ரிடையர்டு ஆகியிருந்தார். அங்கிருந்து அவரை விரட்ட வேண்டியதாயிருந்தது. தான் அங்கு இல்லாவிட்டால் நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்று சீரியசாக நம்பினார். கணவனின் வருகை வருத்தத்திற்குரியதாக அமைந்தது பார்வதியம்மாளுக்கு மட்டும்தான்.

அன்று சரவணன் அந்த வார்த்தையை கேட்டிருக்கக் கூடாது தான். ஆனால் அவனால் கேட்காமல் இருக்க முடியவில்லை. எப்படி கேட்காமல் இருக்க முடியம்? எத்தனை தமிழ் படங்களில் பார்த்தாயிற்று. நேரில் சிக்கியது சந்திரசேகர்தானே.

‘அது ஏம்ப்பா ஆர்மில இருந்து வர்ற எல்லோரும் அந்த டிரெஸ்ஸ கழட்டாம அப்படியே வர்றிங்க. இந்த வெயிலுக்குப் புழுக்கமா இல்ல’

திரு. சந்திரசேகர் பாகிஸ்தான்காரனைக் கூட அப்படி முறைத்துக் பார்தது இல்லை. அப்படி ஒரு கடுமையான முறைப்பு. சரவணனுக்கு அன்று ஆரம்பித்தது சனி. கிருஸ்தவர்களின் 10 கட்டளைகள் போல சரவணனுக்கும் விதிக்கப்பட்டது 10 கட்டளைகள்.

அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். இது ஒரு மிகக்கொடூரமான தண்டனை சரவணனை பொறுத்த வரை. அவனை அதிகாலையில் எழுப்புவதற்குத்தான் எத்தனைவிதமான பிரயத்தனங்கள். என்னதான் ரூல்ஸ் சந்திரசேகராக இருந்தாலும் தொடைகள் சிவக்க பிரம்பாள் அடித்து எழுப்புவது எந்தவொரு தந்தையும் செய்யத் தயங்கும் விஷயம் தான். ஆனால் சரவணனுக்கு எங்கே போயிற்று புத்தி. குடம் தண்ணீரை முகத்தில் ஊற்றிய பொழுதே எழுந்து இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த சின்ன பிரம்படிக்கு திரு. சந்திரசேகரை நரகத்தில் எண்ணெய் சட்டியில் வறுபடுமாறு சபித்தது சற்று அதிகம் தான். சரவணன் தந்தையென்றும் பாராமல் சபித்துவிடுவான். தந்தை-மகன் இருவருக்கும் இடையே உறவுப்பாலம் அமைக்கும் பணியில் அடிக்கடி மூக்கறுபடுவது பார்வதியம்மாள் வாங்கி வந்த சாபங்களுள் ஒன்று

‘என்னங்க பிள்ளைய இப்படியா பிரம்பால அடிக்கிறது. பாவங்க’

‘இவனுக்கு இப்படி செல்லங்கொடுத்து கெடுத்து வச்சிருக்கிறதே நீதாண்டி’

‘பளார்’

‘இனிமே இவனுக்கு பரிஞ்சு பேசுன’

‘பளார்’

‘தோலை உறிச்சிடுவேன்’

‘பளார்’

பார்வதியம்மாள் மீதும் தவறு இருக்கத்தான் செய்தது. அடிப்பதற்கு வாகாக இப்படியா கண்ணங்களை காட்டிக்கொண்டு நிற்பது. அதுவம் திரு. சந்திரசேகரிடம். ஒரு 234 பளார்களுக்குப் பிறகு பார்வதியம்மாள் தன் கன்னங்களை காத்துக் கொள்ளும் தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டார். அதன் பின் எதுவாக இருந்தாலும் 5 அடி தள்ளி நின்றுதான்.

அடுத்ததாக வேப்பங்குச்சி.

‘வடக்கே வேப்பங்குச்சிக்கு எங்கே போனார் இந்த அப்பா. காஷ்மீரில் கூடவா வேப்பமரம் இருக்கும். ஆச்சரியமாக இருக்கிறதே.’

சரவணனின் கசப்பான் சிந்தனைகளை அவ்வப்பொழுது ரூல்ஸ் சந்திரசேகரின் குரல் கலைத்துக் கொண்டே இருக்கும்.

‘வேப்பங்குச்சில பல் விலக்குனா எவ்வளவு நல்லது தெரியுமா? வயித்துல் ஒரு புழு பூச்சி இருக்காது. எல்லாம் செத்துடும்’

ஆனால் தான் சாகாமால் இருக்க வேண்டுமே. கோல்கெட் பேஸ்டை குச்சியின் முனையில் தடவிக் கொண்டு, கசப்பும் இனிப்புமாக, அது என்ன விதமான சுவை. வயிற்றை பரட்டிக் கொண்டு வருகிறது. வாந்தியெடுப்பதை விட கொடுமையானது ரூல்ஸ் சந்திர சேகரின் இந்த வார்த்தைகள்தான்.

‘பாத்தியா வேப்பங்குச்சியோட மகிமைய. உடம்புல இருக்குற பித்தமெல்லாம் வெளிய வந்திடுச்சு’

பித்தம் மட்டும் இல்லை. மொத்தமும் வெளியே வந்த பின்னும் நிதானிக்க விட மாட்டார் ரூல்ஸ். தலை ரங்கராட்டினம் சுற்றுவது போல சுற்றிக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த வாளி நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து குளிக்க சொல்லுவார். சரவணன் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததேயில்லை. அதிகாலை 5.15க்கு அதுவும் கிணற்று தண்ணீர், அந்த குளிருக்கு ரத்தம் உறைந்து விடும். தண்ணீருக்குள தனது சுண்டுவிரலை விட்டுப்பார்த்தான். ஷாக் அடித்தது போல் வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டான். தந்தையை பரிதாபமாகப் பார்த்தான்.

‘அப்பா ரொம்ப குளிரா இருக்குப்பா’

பஸ்கி எடுத்து கொண்டே ரூல்ஸ் இவ்வாறு கூறுவார்.

‘இதெல்லாம் என்னடா குளிரு. காஷ்மீர்ல பனிக்கட்டிமேல நின்னுகிட்டு குளிப்போம்டா நாங்கல்லாம். சரி சரி பேசிகிட்டு இருக்காம சீக்கிரம் குளிச்சிட்டு வா’

தூரத்திலிருந்து பார்வதியம்மாள் தனது மகன் படும் அவஸ்தைகளை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருப்பார். சரவணன் தனது சரித்திர சாதனையை தொடங்குவதற்கு முன் தன் தாயை சோகமாகப் பார்த்தவாறு மானசீகமாக இவ்வாறு கூறுவான்.

‘அம்மா. குளிச்சிட்டு உயிரோட இருந்தா வர்றேன். நாலு இட்லிய எடுத்து வையி’

அந்த இட்லியை விழுங்கக் கூட முடியவில்லை. அவ்வளவு சக்தியையும் உறிஞ்சிவிட்டார் ரூல்ஸ். இனிமேல் பள்ளிக்குச் சென்று எப்படி படிப்பது. சரவணன் அப்பொழுது 9 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இது போன்ற கொடுமைகள் எல்லாம் நடக்கும் பொழுது அவன் பாலகன். தந்தையை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் இன்று 5 வருடங்கள் கடந்துவிட்டன. சரவணனுக்கு மீசை வேறு முளைத்துவிட்டது. சரவணனால் சகித்துக்கொள்ளப்பட முடியாத அந்த விஷயம் தான் அன்று ஒரு நாள் அவனை எதிர்செயல் செய்ய வைத்தது. ரஜினிக்காந்தின் தீவிர ரசிகனான சரவணனின் சிலுப்பிக்கொண்டு நிற்கும் முடிக்கற்றைகளை (வெகுநாட்களாக பிடிவாதமாக தற்காத்து வைத்திருந்தான்.) அன்றிரவு அவன் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது மெஷின் கட்டிங் செய்து விடாமல் இருந்திருந்தால், சரவணன் இன்றும் ஒரு அடிமைதான். ஆனால் ரூல்ஸ்ஸின் போதாத காலம் இப்படியா கரையான் புற்று மாதிரி கந்தர கோலமாக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து எடை குறைந்த அவன் தலையை கண்ணாடியில் பார்த்தபின் மூளை குழம்பாமல் இன்றுவரை இருக்கிறான் என்றால் அது ஆச்சரியம் தான். உள்ளுக்குள் இருந்து பொங்கி எழுந்த கோபத்தில், வேறு சில விஷயங்களும் பொங்கி வந்து விட்டது. தைரியம், அசட்டுத் துணிச்சல், அடங்காத தன்மை, எதிர்த்து பேசும் திறன் போன்ற அனைத்தும் அபரிமிதமாக பொங்கி வந்துவிட்டது. பார்வதியம்மாள் அன்று அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தன் மகனை ஈன்றதன் பலனை அன்று அடைந்து விட்ட மகிழ்ச்சியை திருட்டுத்தனமாக ப்ரூ காபி குடித்துக் கொண்டாடினார்.

அன்று ஒட்டு மொத்தமாக 2000 வோல்ட் கரண்ட் உள்ளே இறங்கியதைப் போல நொந்து போய் உட்கார்ந்திருந்தார் ரூல்ஸ். காதுகளில் இருந்து புகை வராத குறை. அவ்வளவு நாராசமாக பேசி விட்டான். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வதே இல்லை.

இரு எதிரிகள் ஒரே சிறைக்குள் அடைக்கப்பட்டது போல. ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு. இப்படியொரு சங்கோஜமான சூழ்நிலையில் இருவரும் 2 வருடங்களை கடத்திவிட்டார்கள். சரவணன் தனது நல்ல பழக்க வழக்கங்களை மீட்டு கொண்டுவர கடுமையாக போராட ஆரம்பித்துவிட்டான். காலை வெகு நேரம் கழித்து எழுவது, பல் துலக்காமல் காபி அருந்துவது, மதிய வெயிலில் வெந்நீரில் குளிப்பது. இருப்பது ஒரு லைப் எதற்காக சிரமப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் தினசரி காலை ப்ரூ காபிதான். முன்னரே இது போல் நடந்து கொண்டிருக்கலாமோ? என்று தோன்றியது. தேவையில்லாமல் 5 வருட வனவாசம். சமீபகாலமாக காபி குடிக்கும் பொழுது விநோதமான சத்தம் கொடுக்க ஆரம்பித்திருந்தான். அது ரூல்சை வெறுப்பேற்றுவதற்கான யுக்தி. அன்று ஒரு அதிகாலை வீட்டிற்கு வந்த சந்திரசேகரின் நண்பர் ஒருவர்

‘என்ன நீங்களும் எருமை மாடு வளர்க்கிறீர்கள் போல’

இல்லையென்று கூறினால், நம்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். வீட்டைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தார்.

‘நான்தான் கேட்டேனே. அந்த எருமை கழனி தண்ணி குடிக்கும் சத்தத்தை’

திரு. சந்திரசேகர் எப்படி பெருமையாக சொல்லிக் கொள்ள முடியும். அது தன் பையன் ப்ரூ காபி குடிக்கும் சப்தம் என்று. அப்படியே கூறி அவனை அவமானப்படுத்தினாலும் அவன் என்ன திருந்தவா போகிறான். மேலும் வெறுப்பேற்றுவதாக நினைத்துக் கொண்டு டி.டி.எஸ். எபெக்டில் சத்தத்தை ஏற்றுவான்.

எத்தனை முறை மண்டையில் அடி வாங்கியிருக்கிறான். சாப்பிடும்பொழுது சத்தம் வரக்கூடாது. தண்ணீர் குடிக்கும் பொழுது வாய் வைத்து குடிக்கக் கூடாது. தும்மல் வந்தால் கூட சத்தம் வரக்கூடாது. சைலன்சர் மாட்டிய துப்பாக்கியை போலத்தான் தும்ம வேண்டும். மடார்……. மடார்…… என அவன் மண்டையில் வாங்கிய அடிகள். மண்டைக்குள் அதிகம் பயன்படுத்தப்படாமல் மேலும் துருப்பிடித்து விடாமலும் இருந்த மூளையின் நியூரான் செல்களுக்குள் பழிவாங்கும் உணர்ச்சியுடன் பதிய வைக்கப்பட்டு கிடந்தது உண்மைதான். இல்லையென்றால் ஒரு அடிமைக்கு வீரம் வர அடிப்படை ஆதாரம் வேறு எதுவாக இருக்க முடியும்.

பின் ஒரு நாள் கல்லூரியில் படிக்கும் ஆர்வம் சரவணனை பிடித்து ஆட்டியது. இதை ஏதோ கடமை உணர்ச்சி என்று நம்பி ஏமாறுவது. அனைத்து தந்தைமார்களின் இயல்பான குணம் தான் என்றாலும், திரு. சந்திரசேகர் சற்று நிதானித்திருக்கலாம். இன்று ஜீசஸ் உயிரோடு இருந்திருந்தால் ரூல்சுக்கு இவ்வாறு போதித்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது.

‘நீ உன் நண்பனை நேசிப்பதில் என்ன இருக்கிறது. உன் எதிரியை அல்லவா நேசிக்க வேண்டும்’ என்று

திரு. சந்திரசேகர் தனது சேமிப்பிலிருந்து 50.000 ரூபாயை எடுத்து சரவணனை கல்லூரியில் சேர்த்துவிட்டார். சரவணனுக்கு கூட லேசாக சந்தேகம் வந்தது. தந்தை பாசம் என்பது உண்மையோ? என்று. சந்தேகத்திற்கு காரணமுண்டு.

சில வருடங்களுக்கு முன், என்னதான் ஆண்சிங்கம் போன்று அழகாக சிலுப்பிக் கொண்டு நிற்கும் தலைமுடியை பெற்றிருந்தாலும், எண்ணெய் வைக்காத செம்பட்டைத் தலை சற்று அசிங்கமாக இருந்தது என்று நினைத்தானோ என்னவோ கேசத்தை கருமையாக்கும் முயற்சியில் இறங்கினான். அதிகமில்லை 10 ரூபாய் தான் கேட்டான் ரூல்சிடம். அவரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டது. சற்று அடம் பிடித்து பார்க்கலாம் என்று நினைத்து. கண்ணில் நீர் வரும் அளவிற்கு லேசாக முயற்சித்தான். சிறுவர்களை முதுகில் குத்தும் இந்திய தந்தையாக மட்டும் இருந்துவிட்டு போயிருக்கலாம் திரு. ரூல்ஸ். இப்படியா? அடுத்த நாள் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவன் தலையை மிஷின் கட்டிங் செய்து விடுவது. அந்த சரித்திர நிகழ்ச்சி அன்றுதான் நடந்தது.

10 ரூபாய் கோத்ரேஜ் டைக்காக தலையில் கைவைத்த கயவர் அல்லவா இந்த ரூல்ஸ். இன்று தனியார் கல்லூரியில் 50 ஆயிரம் ரூபாய்……. இது சற்று அதிகமாகத்தான் தோன்றுகிறது. இருப்பினும் இந்த முக்கயமான 50 ஆயிரம் ரூபாய் நிகழ்வு சற்று நடுக்கத்தை கொடுத்தது சரவணனுக்கு. தான் ஏதேனும் தவறு செய்கிறோமோ? எதற்கும் கலங்காத நெப்போலிய மனம் கொண்ட (கடந்த சில ஆண்டுகளாக மட்டும்) சரவணனின் மனம் கூட சற்று நடுங்குகிறது என்றால் காரணமில்லாமல் இல்லை.

சரவணனும் வயதிற்கு வந்து 7. 8 வருடங்களை கடந்திருப்பான் என்றுதான் தோன்றுகிறது. எவ்வளவு நாள் நல்லபிள்ளை பேர் வாங்குவதற்காக சும்மாவே இருக்கமுடியும். இந்த இந்திய மடையர்களுக்கு இது புரிவதேயில்லை. இவர்கள் எல்லாம் எப்படி 110 கோடியை பெற்றுத் தள்ளினார்கள். நிச்சயமாக சுயநலவாதிகளாகத்தான் இருக்க வேண்டும். தான் நிறைந்தால் போதுமென்று. கருணையேயில்லாதவர்கள்.

அந்த அழகான இளம் பெண்ணுக்கு சரவணன் என்றென்றும் கடமைபட்டவனாக இருக்கத்தான் வேண்டும். அவள் மட்டும் இல்லையென்றால் தான் ஒரு பட்டதாரி ஆக வேண்டும் என்ற நினைப்பே எழுந்துவிடாமல் அல்லவா போயிருக்கும். அவள் பின்னே அந்த கல்லூரிக்கும், அவள் வீட்டுக்குமாக 365 நாட்களை கழித்தபின் கால் வலித்ததோ என்னவோ, அவளை அருகிலிருந்தே பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறந்ததோ என்னவோ, அடுத்த ஆண்டே கல்லூரியில் சேர்ந்துவிட்டான். இன்றும் அவன் அவள் பின்னேதான். முன்னோர்கள் சும்மாவா கூறினார்கள். ஒவ்வொரு ஆணின் பின்னேயும் ஒரு பெண் இருக்கிறாள் என்று. ஆனால் ஏன் தலைகீழாக சொல்லி வைத்தார்கள் என்றுதான் புரியவில்லை.

யாரோ கூறினார்கள் ஐன்ஸ்டினின் சார்பு விதியைப் பற்றி இப்படி. ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தாள். நேரம் போவதே தெரிவதில்லை ஆனால் நேரம் போவது தெரிகிறதென்றால் அவள் 50 வயதைக் கடந்து விட்டாள் என்பது உறுதி. சரவணனுக்கு 2 வருடங்கள் போனதே தெரியவில்லை. அவளுக்கு வேறு 21 வயதுதான். ரூல்ஸ் சந்தோஷப்பட்டார். காரணம் சரவணன் ஒரு நாள் கூட கல்லூரிக்கு விடுப்பு எடுத்ததில்லை. இவ்வளவு நேர்மையை இத்தனை நாள் எங்கு ஒளித்து வைத்திருந்தான். அனைத்துக்கும் நேரம் வர வேண்டும் என்பது எவ்வளவு பெரிய உண்மை.

அவன் 3 ஆண்டுகள் கல்லூரியை முடித்துவிட்டு வெளியே வந்தபொழுது ரூல்சால் நம்பமுடியாமல் போன விஷயம் அந்த ஒன்றுதான். அவன் ஏன் 14 அரியர்களை வைத்திருக்கிறான் என்பது. வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் என 3 வருடத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய். பின் கோபம் வரவில்லை என்றால் எப்படி. அன்று நடந்த சண்டையில்தான் ரூல்சுக்கு முதல் ஹாட் அட்டாக் வந்தது. தமையனும். மனைவியும் பதறிய பதறலில் உள்ள அன்பை, ரூல்சின் வலித்துக் கொண்டிருந்த இதயம் சற்று நிதானித்து லேசாக உணர்ந்தது. உணர்வதற்கெல்லாம் ஒரு நேரங்காலம் வேண்டாமா?

பின் மருத்துவரின் அறிவுரைபடி ரூல்ஸ் தனது விறைப்பை குறைத்துக் கொண்டார். இப்பொழுதெல்லாம் நன்றாக தூங்கினார். காலை வேளையில் பால் அருந்தினார். மனைவியை அதிகமாக கடிந்து கொள்வதில்லை. சரவணனுடன் மீண்டும் பேசுவதில்லை. சரவணனும் ரூல்சின் இத்தகைய மன மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களை கண்டு இவ்வாறு தன் மனதிற்குள் கூறிக் கொண்டான்.

‘யார், யார்க்கு, எங்க எங்க, எப்ப எப்ப, எப்படி எப்படி எல்லாம் ஆப்பு வைக்கனும்னு கடவுளுக்கு நன்றாகவே தெரிஞ்சிருக்கு’

ஆனால் கடவுள் ஒன்றும் ஒன் சைடு வக்கீல் அல்லவே. அவர் ஒரு நடுநிலை தவறாத நீதிபதி அல்லவா? சரவணனை மட்டும் சும்மாவா விட்டுவிடுவார். ரூல்சிற்கு கொடுத்த அதே ஹாட் அட்டாக்கை சரவணனுக்கும் கொடுத்தார். இது சற்று அதிகம் தான். 26 வயதில் ஹாட் அட்டாக். ஆம் அந்த அழகான இளம் பெண்ணுக்கு இன்னொருவனுக்கும் அன்று திருமணம். வாழை மரத்துக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து ப்ரூ காபி குடிப்பது போல் மடக் மடக்கென்று குடித்து விட்டால் உயிர் போய் விடுமா என்ன? அதில் மேட் இன் இந்தியா என்று போட்டிருப்பதை ஒரு முறையாவது படித்திருக்க வேண்டும். நல்ல வேளை கலப்பட மருந்து என்பதால், போன வருடம் ரூல்ஸ் படுத்து கிடந்த அதே பெட்டில் தொங்கவிடப்பட்ட குளுகோஸ் பாட்டில் மற்றும் வாய்க்குள் தொப்புள் வரை இறக்கப்பட்ட ட்யூப் என பரிதாபமாகக் கிடந்தான். கடவுள் எவ்வளவு நேர்மையானவர்.

உறவுகளுக்கிடையே காணப்படும் அசாதாரணமான இந்த பண்பு ஆச்சரியமான விஷயம். பல வருட வெறுப்பு. ஒரே ஒரு நிகழ்வின் மூலம் அன்பாக மாறிப் போவது. ரூல்சின் இந்த செயல் நம்ப முடியாதது. அவர் மயக்கத்திலிருந்த தனது மைந்தனின் அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் மூக்கிலிருந்து வழியும் சளியை தனது வேஷ்டியால் துடைத்து விட்டுக் கொண்டிருந்தார்.

உண்மையான அன்பு உணரப்படுவதே இல்லை. சரவணன் ரூல்சின் அன்பை புரிந்து கொள்ளாததை போல, அந்த அழகான இளம்பெண் சரவணனின் அன்பை புரிந்து கொள்ளாததை போல. வாழ்க்கையின் விருப்பு வெறுப்புகளுக்கு நடுவே அழுத்தமாக உணரப்படும் அன்பு ஒவ்வொரு முறையும் சில விஷயங்களை உணர்த்த காத்து கொண்டிருக்கிறது. சளியை துடைத்துகொண்டிருப்பவர் தனது தந்தைதான் என்பதை அரை மயக்கத்திலிருக்கும் சரவணன். ஏதேனும் ஒரு உந்துதலின் பெயரில் லேசாக உணரப்படும் பட்சத்தில், அவனுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு கிடைத்தற்கரிய அழகான வாய்ப்பு. அழுத்தமான அன்பை உணர்வதற்கு கிடைக்கும். ஒரு வேளை இந்த மலர்தல் நடக்குமானால் சரவணன் துரதிஷ்டசாலி அல்ல என்பதை முழுமையாக நம்பலாம். கடவுள் நேர்மையானவர் தானே.?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *