கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 818 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விமலன் வேலை விட்டு வீடு வந்து சேர்ந்தான். சமையலறையிலே சங்கரப்பிள்ளை அண்ணன் சமைத்துக் கொண்டிருக்கும் நேரமது. எனவே சமையலறையை எட்டிப் பார்த்தான். ஊசாட்டத்தைக் காணோம். 

வழக்கத்திற்கு மாறாக அவனுடைய மனம் பதட்ட நிலையில் இருந்தது. காரணங்களிலே தொங்காத ஓர் ஊமைச் சோகம் உள்ளத்திலே ஊர்வதைப் போலவும். அதற்குச் சரணாகதியடையாத ஒருவிதத் தீர்மானத்துடன், தன் அறைக்குள் சென்று, உடைமாற்றிக் கொண்டு ஹோலுக்கு வந்தான். 

அவனுடைபெயருக்கு வந்த இரண்டு கடிதங்கள் கிடந்தன. வழக்கமான கடிதங்கள் ஒன்று டெலிபோன் பில்’ மற்றையது ‘பாங் ஸ்டேற்மன்ட்’, அவற்றைப் பிரித்துக் கணக்கு விபரங்களையும் மனசிலே பதித்துக் கொண்டான். 

உடல்கூட அசதியாக இருந்தது. ‘பணம் உழைக்கும் மெஷ’னாக வாழ்ந்தால் இப்படித்தான்’ என்று மனஞ் சலித்துக் கொண்டது. இரண்டு வேலைகள். ஒரு வேலை காலை ஐந்து மணி தொடக்கம் மாலை மூன்று மணி வரை. ஒரு மணித்தியாலத்திற்கு வீடு வந்து, மீண்டும் தயாராகி நாலு மணிக்குத் துவங்கும் வேலைக்கு ஓடுவான். அந்த வேல இரவு பதினொரு மணிக்குத்தான் முடியும். ‘உடம்பில தென்பிருக்கிற நேரம் உழைக்க வேணும்’ என்கிற உற்சாகத்திலே வேலை செய்கின்றான். 

ஆனால் கடந்த இரண்டு தினங்களாக உடல் ‘ஆத்தாது’ என்று கெஞ்சுவதுபோல அவனுக்குத் தோன்றியது. இன்று ‘சிக்’ லீவ் எடுத்துக் கொண்டு நேரத்துடன் வந்துவிட்டான். 

அப்பாவுக்கு எப்படி இருக்கு…’ என்கிற ஏக்கமே இந்த அசதிகளுக்கும், பதட்டங்களுக்கும் காரணம் என்பதை அவன் உள்மனம் ஏற்றக் கொண்டாலும், ஒன்றுமே நடக்காததுபோலவே அவன் வாழ விரும்பினான். 

‘அப்பாவின் அருளுக்கும் ஆண்மைக்கும் முன்னல், எமன் வருவதற்குச் சரியாக யோசிப்பான்’ என்று அவன் தன் மனசிலே ஏற்படுத்திக் கொண்ட கற்பிதம் குழந்தைத்தனமானது. பரவாயில்லை, விமலன் எப்பொழுதும் ‘அப்பாவின் குழந்தை’யாக இருப்பதையே விரும்பினான். 

‘சோறுடைத்துச் சோழவள நாடு’ என்று ஒரு காலத்திலே பேசினார்கள். ஆனால், அவர்கள் மட்டக்களப்பு மாநிலத்தின் தென்சீமையை அறியாத காலத்திலேதான் அவ்வகையான ஒரு சொலவடையை ஏற்படுத்தியிருப்பார்கள். 

‘மீன் பாடும் தேனாடு’ என்று அழைக்கப்படும் மட்டக்களப்புத் தமிழகத்தின் அனைத்து வளங்களின் திரட்சித் திருக்கோவிலாக விளங்குவதினாலேதான், அந்தக் கிராமத்தைத் திருக்கோவில் என அழைப்பதாகச் சிறுவயசிலே விமலன் மிரட்சி கொண்டிருக்கிறான். அப்பா அவனுக்குத் திருக்கோவில் பற்றிய தலவரலாறு சொல்வதற்கு என்றுமே சலித்தது கிடையாது. 

சூரபத்மனை வதம் செய்தபோது ஸ்ரீமுருகன் வீசிய வேல் வாகூரக் கல்லைப் பிளந்து, ஒரு வெள்ளை நாவல் மரத்தில் வந்து தங்கியது அந்த இடத்தில் எழுந்தருளியிருப்பது தான் ஸ்ரீசித்திர வேலாயுத ஸ்வாமி கோயில் என்று சொன்னார். ஆரம்பத்திலே இந்தக் கோவில் மேற்கு நோக்கி இருந்ததாகவும் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தைப் போன்று இதுவும் கிழக்கு நோக்கிய கோவிலாக இருப்பதுதான் சிறப்பானதாக இருக்கும் என்று குருக்களும் பக்தர்கள் பேசிக் கொண்டார்களாம். மறுநாள் அவர்கள் வந்து பார்த்த பொழுது பக்தர்களுடைய பிரேரிப்பினை ஏற்றுக் கொண்டது போல, இப்பொழுதுள்ளது போல, வாயில் கிழக்கு நோக்கி மாறி இருந்ததாக அப்பா சொன்ன கதையைக் கேட்டு, அது எப்படிச் சாத்தியமாயிற்று என்று பல இரவுகள் தூக்கத்தைக் கெடுத்து யோசித்திருக்கிறான். 

திரும்பிய கோவில் என்பதுதான் காலப்போக்கில் திருக்கோவிலென வழங்கலாயிற்று என்கிற அப்பாவின் விளக்கத்தினை அவனால் ஏற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. கடலையே தீர்த்தக்கரையாகக் கொண்டு திகழ்வதினால், ஈழத்துத் திருச்செந்தூர் என்கிற புகழ் முற்றிலும் நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டான். இந்தத் தலபுராணப் பெருமைகளுக்கு அப்பாலான ஓர் ஈடுபாடு அந்தப் பிறந்தமண் மீது விமலனுக்கு எப்பொழுதும் உண்டு உதய சூரியன் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஸ்வாமியைக் கும்பிட்டு எழும் காட்சி அவனைப் பரவசப்படுத்தும். கடற்கரையிலே அடர்ந்து கிடைக்கும் தாழை, இராவணமீசை, அடம்பன் ஆகியன கடற்கரையின் சுகத்தினை அநுபவிப்பதற்கு விமலனுக்கு என்றும் தடையாக இருந்ததில்லை. 

சின்ன வயசிலே கடற்கரையின் ஒவ்வொரு குறுணி மணலையும் அவன் அடியளந்திருக்கிறான். திருக்கோவிலின் கிழக்குப் பகுதி நெய்தல் அழகு சிந்த, மேற்குப் பகுதியில் காடு! அதன் காவல் கோபுரங்கள்போல சங்கமாங் கண்டி, உகந்தமலை, மொட்டையாகல் மலை ஆகியன ரம்மியமாகத் தெரியும். அந்தக் காட்டுக்கு இப்ப ஏதோ புதுப் பெயர். ஆனால், அப்பா அதனைப் பூமுனைக்காடு என்றுதான் அழைப்பார். கடற்கரை சார்ந்த பகுதியிலே எத்தனை ஆயிரம் தென்னை மரங்கள்! அளகபாத்தினை உலர்த்தும் இளம் பெண்களின் கோலத்திலே, வங்கக் கடலின் சீதளத்தை அள்ளிவரும் தென்றலிலே சுகிக்கும் அழகே அழகு! திருக்கோவிலுக்குச் சொந்தமான நன்செய் வயல்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணத்திலே பரந்து கிடக்கின்றது. 

மண்ணின் மைந்தரின் உழைப்புக்கு அவை போதவில்லை. காடுகளை அழித்துச் சேனைகளாக்கினார்கள். அக்கினி நாளிலே நெருப்பு வைக்கும் நிகழ்ச்சியை விமலன் சிறு வயசில் ஆவலுடன் ரசிப்பான். சேனையாகத் திருந்தாத அந்தக் காட்டிலே நாட்டுக் கட்டைகள் குத்தபட்டு நிற்கும். அந்த நிலையில் அந்த நிலத்திலே சோளன் நன்றாக வளரும். பின்னர் கச்சானுக்கும், ஏனைய சேனைப் பயிர்களுக்கும் வாகான பூமியாக அவர்கள் உழைப்பு அதனை மாற்றிவிடும். மண்ணின் மைந்தருடைய உழைப்புகளின் ஓர்மை மிகுந்த ஓர் உந்நத உருவமாக எப்பொழுதும் விமலனுடைய அப்பா அவன் நெஞ்சிலே குடியிருக்கிறார். 

திருக்கோவில் வீடுகளிலே உள்ள உணவுத் தட்டுகளிலேதான் எத்தனை சுவையான உணவுகள் கொலுவிருக்கும்? கடலிலே கிடைக்கும் மச்சம். கோரைக்களப்பு வாவியிலே கிடைக்கும் நண்டுக்கும் றாலுக்கும் தனிச்சுவையுண்டு என்று இன்றும் விமலனின் நாக்குப் பொச்சடிக்கும்! பற்களின் ஊத்தை கழற்ற இறைச்சி தின்ன விரும்பிக் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற யாரும், இன்றுவரை வெறும் கையுடன் திரும்பயதில்லை. பாலும் தேனும் அவர்களுடைய உணவுத் தட்டுகளிலே வழியும்! யாரே ஓர் எழுத்தாளன் தான் பிறந்த கிராமத்தை நினைவு கூர்ந்தபொழுது, ‘சொர்க்கத்திலிருந்து ஒழுகி விழுந்த ஒரு துளி”யாகப் பாராட்டி அதிசயித்திருக்கிறார். 

இத்தகைய ஒரு கற்பிதத்திலே தான் பிறந்த ஊரின் வனப்பு எப்பொழுதும் விமலனின் நனவுகளிலே பவனி வரும் அதன் எழிலுக்கும் வளத்துக்கும் ஆண்மை சேர்க்க அவதரித்த ஒரு மாமனிதர் என்கிற வியப்புக் கலந்த பக்தி எப்பொழுதும் அவனுக்கு அவன் அப்பாமீது உண்டு. 

அந்த அப்பா இப்பொழுது முடங்கிக்கிடக்கிறார் என்பதை அவனாலே நம்ப முடியவில்லை. உண்மையை ஆசைகள் விழுங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிச்சயமற்ற நிலையிலே விமலனின் மனசு தளும்பியது. அப்பாவுக்கு ஐந்து பிள்ளைகள்; மூன்றுமகன்கள். இரண்டு மகள்கள் அவன் அநேகமாக சின்னம்மாவுடன் தங்கிவிடுவான். சின்னம்மாவின் அன்பும், ஆதரவும், காருண்யமும் அவனுடைய பிஞ்சு மனசிலே ஆழமான பதிவுகளை விட்டிருந்தன. அந்த சின்னம்மாவின் செல்வாக்கின் காரணமாகவே தான் கலை-இலக்கியத் துறைகளிலே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வளர்த்துக் கொண்டதாக ஒருவகை நன்றியறிதல் உணர்ச்சியுடன் நினைவு கூருவான். மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சிகளிலே பங்கு கொண்டு பெயர் பிரபலமானமை, கலையையும் இலக்கிய ஆர்வங்களையும் வளர்த்தெடுக்கூடிய விதத்திலே கொழும்பில் உத்தியோகம் கிடைத்தபொழுது விமலன் மனம்கொள்ளாச் சந்தோஷத்திலே மூழ்கினான். சின்னம்மாவின் கலாரீதியான செல்வாக்கினாலேதான் இது சாத்தியமாயிற்று என விமலன் நினைத்துக் கொள்ளுவான். 

1983 ஆம் ஆண்டில், இலங்கையில், சிங்களப் பேரின வாதிகளினால், அரங்கேற்றப்பட்ட இனப் படுகொலை ஈழத்திலே வாழ்ந்த அத்தனை தமிழர்களுடைய வாழ்க்கையிலும் ஏதோ வகையில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. விமலனின் வாழ்க்கையிலும் அத்தகைய மாற்றம் ஏற்பட்டது. கொழும்பு உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, ஊர் வந்து சேர்ந்தான். 

அந்தக் காலத்திலேதான் அவனுக்குத் திருமணம் நடந்தேறியது. வீட்டார் பேசிக் செய்த கல்யாணந்தான். மனைவி படித்தவளாகவும் உத்தியோகம் பார்ப்பவளாகவும் இருந்தாள். குடும்ப வாழ்க்கையின் நிறைவுக்கும், மகிழ்ச்சிக்கும் சான்றாக, ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாக இரண்டு குழந்தைகள் கிடைத்தார்கள். அப்பா எப்படித் தன் பிள்ளைகளை உருவாக்கி ஆளாக்கி வைத்தாரோ, அதே போன்று தானும் தன் பிள்ளைகளை உருவாக்கி வளர்க்க வேண்டும் என்கிற ஆசை ஒரு வெறியாகவே மாறலாயிற்று. 

நாட்டிலே ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கும் அவலத்திலே, விமலனின் தம்பி வெளிநாடு சென்று, அலைந்து திரிந்து, ஈற்றில் நோர்வே நாட்டிலே வாழத் தலைப்பட்டான் அவனுடைய உதவியாலும், அவன் எடுத்த சாதுர்யமான நடவடிக்கைகளினாலும், விமலன் நோர்வே நாட்டிற்கு வந்து வாழத் தலைப்பட்டான். 

நாடு புதிது. அதற்குரிய பருவ காலங்கள் புதிது. அவர்கள் பேணிய விழுமியங்களும் நாகரிகங்களும் புதிது. இந்த நிலையிலே குடும்பத்தை அழைத்து, இந்நாட்டிலே ஒரு குடும்ப வாழ்க்கையை நிரந்தரமாக அமைத்துக் கொள்வதிலுள்ள சாதக பாதகங்களை நீண்ட காலமாகச் சிந்தித்தான். ஈற்றில் தன் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் தமிழ் நாட்டுச் சூழலிலே வாழ ஏற்பாடு செய்தான். 

மூன்று கேந்திரங்களுக்கிடையில் அவனது மனசு ஊசலாடியது. அவனுடைய இளம் குடும்பம் தமிழ் நாட்டில். 

அவனுடைய அப்பா-அம்மா-வளர்த்து ஆளாக்கிய சின்னம்மா ஆகியோர் திருக்கோவிலில். 

அவன் மட்டும், ஒரு வகையில் பணம் உழைக்கும் எந்திரமாக நோர்வே நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிறான். 

இரண்டு வாரங்களுக்கு முன்பு அவன் அப்பா நோய்வாய்ப்பட்டு, கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டார் என்கிற செய்தி கிடைத்தது. 

‘அப்பாவுக்கு ஒப்பரேஷன் ஒண்டு செய்யனுமாம் மனே’ என்று அம்மா தொலைபேசியிலே சொன்ன பொழுது ஆடிப் போனான். 

அவன் அறிவறிந்த பருவத்திலிருந்து அப்பா ஒரு தடுமன், காய்ச்சல் என்றுகூட வைத்தியசாலைக்குச் சென்றதில்லை. 

அவருக்கு ஆப்பரேஷன் செய்யக் கூடியதாக என்ன நோய்? அடுத்த நாள் மீண்டும் ஒரு செய்தி தொலைபேசியிலே கிடைத்தது. ஒப்பரேஷன் செய்வதற்கு அப்பாவின் உடல் நிலை ஏற்றதாக இல்லை என்று டாக்டர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். எனவே, ஊருக்கே திரும்பிக் கொண்டு போறம். இனி நாட்டு வைத்தியம் ஏதாவது செய்து பார்க்கலாம்.’ 

விஞ்ஞான ரீதியான மேலைநாட்டு வைத்திய முறையினால் குணப்படுத்த இயலாத வியாதியை, நாட்டு வைத்தியன் மாந்திரீகத்தின் மூலமா குணப்படுத்தப் போகின்றான்? 

எந்த நேரமும் ஏதாவது செய்தி வரும் என்று மனம் பயந்தது. அந்தச் செய்தியைத் தாங்க மிகந்த பிரயாசைப்பட்டு மனசைப் பக்குவப்படுத்த வேண்டும் என்கிற நினைவே ஆக்கினை நிறைந்ததாக இருந்தது. 

டைக்காலத்தில் இரண்டாவது வேலையை விட்டுவிடலாமோ என்றும் விமலன் யோசித்தான். இரவில் தூங்க முடியவில்லை. இளமைக் காலத்திலே அப்பாவுடன் செலவு செய்த அந்த இனிய நிகழ்ச்சிகள் மனசிலே குமைந்து குமைந்து எழுந்தன. அவை கனவா நனவா என்று நிதானிக்கவும் முடியவில்லை. 

அப்பா தன்னுடைய மனசிலும் இரத்த ஓட்டத்திலும் இவ்வாறு பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவன் முன்னரெப்போதும் உணர்ந்ததும் இல்லை. 

நண்பர்களும், வேலையிடத்தின் சகாக்களும் ‘என்ன சுகமில்லையா? என்று கேட்கவும் செய்தார்கள்? ஏன் இப்படி எல்லாம்? 

மனம் குழம்பிப் போய்க் கிடந்தது. உடம்பிலே அவனாலே நிதானிக்க இயலாத ஒடுக்கமும் – உறக்கமும்! 

வெளிக் கதவு திறக்கப்படுவது போன்ற சத்தம். 

‘யாரு? அண்ணனா?’ என்று குரல் கொடுத்தான். 

‘ஓமோம்…’ என்று சொல்லிக் கொண்டே சங்கரப்பிள்ளை அண்ணன் நுழைந்து கொண்டிருந்தார். 

‘அது’ முடிஞ்சு போச்சு. அதுதான் ‘வீன்மொன போ’லுக்கு போய் வாங்கி வந்தனான்…’ என்று சொல்லி, ‘தெரியாதே?’ என்கிற குழு ஊக்குறிக்குள் சொல்ல விரும்பாத விஷயங்களை மூடினார். 

சங்கரப்பிள்ளை அண்ணன் பாவம். வயசு ஐம்பதாகிறது. வீட்டைக் காப்பாற்றும் கடமையிலே, நோர்வேக்கு வந்து, இந்த வயசில் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்குக் கொழுவியுள்ளதோ இரவு வேலை. கணகணப்புக்குக் கொஞ்சம் ‘விஸ்கி’ வயிற்றுக்கள் போட்டுக் கொண்டால்தான் இயக்கங்கள் நேர்சீராக இருக்கும் என்கிற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சாவகாசமாகத் தன்னுடைய அலுவல்களை முடிப்பதற்கு இடமளித்து, விமலன் ரி.வி. ஸ்ராண்டின் கீழ்த்தட்டிலே இருந்த ஈழநாடு பத்திரிகையை எடுத்து மேயத் துவங்கினான். அந்தப் பத்திரிகையை ஏற்கெனவே நாலஞ்சு தடவைகள் விமலன் வாசித்து விட்டான். இருந்தாலும்… 

சங்கரப்பிள்ளை அண்ணன் தான் வாங்கி வந்த ‘அப்ப ரென்’ விஸ்கியை, அதற்குரிய சடங்கு முறைகளை மிகவும் பவ்வியமாக அநுசரித்து ஒரு ‘பெக்’ குடித்து முடித்து, ஏதோ அவஸ்தையிலிருந்து விடுபடுபவரைப் போல செருமினார். 

அந்த ஈழ நாட்டின் தலைப்புச் செய்தி ‘கொழும்பில் எண்ணெய்க் குதங்கள் தீப்பிடித்து எரிந்தன. எனப் பளிச்சிட்டது! அப்பாவைக் கொழும்புக்குக் கொண்டு வந்த அன்றோ, அல்லது மறநாளோ அது நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கொழும்பில் நிலவிய பதட்ட நிலையினால் அப்பாவை ஊருக்கக் கொண்டு போக அவசரப்பட்டார்களோ? அல்லது நாட்டு வைத்தியமே சர்வ பரிகாரம் என்று முடிவெடுத்தார்களோ? உண்மைத் தகவல்கள் மறுமுனையிலிருந்து கிடைப்பது அரிதாக இருப்பதாகவே விமலனுக்குத் தோன்றியது. 

சட்டென்று அவன் மனசிலே அப்பாவுடன் சம்பந்தப்பட்ட இளவயசு நினைவுகள் ஊர்கோலம் வந்தன. 

அறுவடை காலத்திலே அடம் பிடித்து, அப்பாவுடன் வயற்காட்டுக்குப் போய்விடுவான். பள்ளிக் கூடம் இல்லாத நாட்கள் என்றால், நீர்ப் பாய்ச்சும் காலங்களிலும், உரம் போடும் காலங்களிலும் விமலன் அப்பாவின் வயலுக்குச் செல்வான். அப்பாவின் வயலிலே வேலை செய்யும் அனைவருக்கும் விமலன் மகா செல்லம். விமலனை ‘பள்ளியான்… பள்ளியான்…’ என்று செல்லமான பட்டப் பெயர் சூட்டி அழைப்பார்கள். 

‘நீங்க போய் நிழலில் இருங்க தம்பி’ என்று அவர்கள் சொல்லுவார்கள். ஆனால் அப்பா, அப்படி அல்ல. வயல் முழுதும் வரப்புகளில் எல்லாம் மகனை அழைத்துச் செல்வார். அவனுடைய குஞ்சுக்கால்கள் அந்த வயலிலே படுவதை அவர் விரும்பினார். அது ஏன் என்று விமலனுக்குப் புரிவதில்லை. 

நெல் செய்கையை ஒரு தொழிலாக, பொருளீட்டும் உபாயமாக அப்பா நோக்கவில்லை என்பதை விமலன் இலகுவாகப் புரிந்து கொண்டான். 

அதனை அவர் பக்தி பூர்வமாக மேற்கொண்டார் வளர்ந்த பின்னர், கிருஷகப் பகுதியினர் நெறிப்படுத்திய புதிய முறைகளையும் யுக்திகளையும் பிரயோகிக்கவேண்டும் என்று விமலன் ஆர்வம் காட்டினான். அவனுடைய ஆர்வங்களை அப்பா வேளாண்மைச் செய்கையிலே புகுத்துவதில் மகிழ்ந்தார். 

விளைச்சல் அமோகமான பொழுது, அப்பா வார்த்தை கண்டுபிடிக்கத் திணறி, மனசும் முகமும் மாபெரும் சிரிப்பாக மாறும் அந்தக் காட்சியை விமலன் என்றுமே மறந்ததில்லை. 

யானைக்காவல், பன்றிக்காவல் என்று அப்பா செல்வதுண்டு. 

அவற்றிற்கும் வரப்போவதாக விமலன் அடம் பிடிப்பான் கடைசியிலே விமலனின் பிடிவாதங்களுக்கு மசிந்து கொடுப்பதுதான் அப்பாவின் சுபாவமாக மாறியது. 

காட்டோரம் பரண் அமைத்து, அதிலே படுக்கையும் அமைத்து, யானை வரும் வழியில் தீ மூட்டி ‘ஹாய்…கூய்…’ என்று காவல் காப்பதை விமலன் எப்பொழுதுமே வீர சாகஸம் நிறைந்த விளையாட்டாக கற்பனை செய்து கொள்ளுவான்.காவல் இருக்கும் பொழுது, பெரிய புரையிலிருந்து,’தப்பி, மகன்…கவனம்…’ என்று அவர் சொல்லிக் கொண்டே இருப்பார் அவர் எப்பொழுதும் விமலனைக் குழந்தையாகவே தரிசிக்கிறார் என்பதை விமலன் நினைத்துச் சிரித்துக் கொள்ளுவான். 

காலையிலே விமலன் சற்று கண்ணயர்ந்து போவதுண்டு. அவனை எழுப்பாது, காட்டுக்குள் சென்று கணபதியின் சேனையில் பிஞ்சு சோளக் கதிரும், அவித்த கச்சானும் எடுத்து வந்து சூடாகத் தேநீரும் தயாரித்த பிறகே விமலனை எழுப்புவார். அப்பாவின் கரிசனையிலே விமலன் பூரித்துப் போனாலும், காவலுக்கு வந்த இடத்தில் தூங்கி விட்டோமே என்று விமலன் வெட்கப்படுவதும் உண்டு. 

இந்த நினைவுகளிலிருந்து சற்றே விடுபடுவது போல,’சரியண்ணே, சமையல் ஒன்றும் செய்யலியா?’ என்று விமலன் கேட்டான். ‘இண்டைக்கு அடுப்பு மூட்டிச் சமையல் செய்ய வேண்டாம் எண்டு யோசிச்சன ‘பிச்சா’வுக்கு ஓடர் கொடுத்துச் சாப்பிடுவம். ஒரு மாற்றத்துக்கு நல்லது’ என்று சொல்லிக் கொண்டே அவர் இரண்டாவது ‘ரவுண்ட்’ விஸ்கி எடுப்பதற்கு அடுக்குப் பார்க்கலானார். 

சங்கரப்பிள்ளை அண்ணர் வழக்கத்திற்கு மாறாக நடப்பது போல விமலனுக்குத் தோன்றியது அதைப் பற்றி யோசிப்பதற்கிடையில், அவனுடைய மனசிலே அப்பா பற்றிய வேறு நினைவுகள் மொய்த்துக் கொண்டன. 

கொழும்பில் உத்தியோகம் பார்த்த காலங்களில் மாதமொரு முறையாவது வீட்டுக்கு வந்து விடுவான். அப்பா தன்னுடைய மகிழ்ச்சியை மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என்கிற எச்சரிக்கையுடன், துள்ளல் நடைபோடுவது அவனை மகிழ்விக்கும். இரண்டு நாட்கள்தான் ஊரிலே நிற்பான். புறப்படுவதற்கு முன்னர் அப்பா விமலனைத் தன்னுடைய காய்கறித் தோட்டத்துக்குள் அழைத்துச் செல்வார். திறமான காய்கறிகளை ஆய்ந்து ஒரு பையிலே போடுவார். மரவள்ளித் தோட்டத்தில், மரங்களைப் பிடிங்கி, ‘ஒத்த வேர் கிழங்குகளை மட்டும் சீர்செய்து கொண்டே, ‘நல்ல மாக்கிழங்கு மகன். ஒரு அவியலுடன் அவிந்துவிடும்’ என்று சொல்லும் பொழுதே, விமலனுக்கு நாக்கில் நீர் ஊறும். 

எப்பொழுதும் உற்சாகமாக வயல், வரப்பு, கடை, கண்ணி என்று இருந்தவருக்கு, எங்குமே சென்று எதுவுமே செய்ய முடியாத நிலையை நாட்டுப் பிரச்சினைகள் ஏற்படுத்திய பொழுது, வீட்டிலேயே அடைபட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இளைய மகன் பிய்ச்சுக் கொண்டு வெளிநாடு போய்ச் சேர்ந்தான். அவருக்கு அது சந்தோஷம் தந்தது. ஆனால், விமலன் வெளிநாடு செல்வதை அவர் விரும்பவில்லை. நாட்டின் இனப்பிரச்சனை நாளாக நாளாக முற்றி, மோசமடையலாயிற்று எத்தனையோ இழப்புகளை அப்பா அடுக்கடுக்காகச் சந்திக்க நேர்ந்தது. இவற்றின் மத்தியிலே விமலன் வெளிநாடு செல்வதை அவர் தடுக்க விரும்பவில்லை. விரும்பம் வேறு, நிர்ப்பந்தம் வேறு என்பதை அவர் அறிந்து கொண்டார். அரசு ஆதரவுடன் வளர்க்கப்பட்ட வன்முறைத் தொடரில் அப்பா மூத்த மகனையும் இரண்டாவது மகளையும் பறிகொடுத்தார். அந்த இரண்டு இழப்புகளும் அவரைப் பாதி மனிதனாக மாற்றியது. 

நோர்வே நாட்டில் வாழ்ந்த விமலன், குடும்ப ஒன்று கூடல் போல, தன் தம்பிக்கு தமிழ்நாட்டில் கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்தான். ‘படித்த குடும்பம். பையன்கள் வெளிநாட்டிலே வேலை செய்கிறார்கள். கலை- இலக்கியங்களிலே மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். மகளுக்கு வெளிநாட்டிலே வரன் தேடுகிறார்கள். கல்யாணச் செலவுகளையும் தாராளமாக ஏற்கக் கூடிய வசதியும் உள்ளவர்கள்’ என்கிற அறிமுகத்துடன் வந்த திருமணப் பேச்சு விமலனுக்குப் பிடித்ததாக இருந்தது. ‘அண்ணா நீங்கள் பார்த்துச் செய்தால் எனக்கு எல்லாம் சம்மதம்’ என்று தம்பி சொல்லி விட்டான். 

திருமணத்தின்போது எத்தனை எதிர்பார்ப்புகளும், எத்தனை ஏமாற்றங்களும்! பணத்திற்காக மனிதனுடைய பண்புகள் இவ்வளவு அதல பாதாளத்துக்கு இறங்கிவிடுமா? இதனைச் சம்பந்தி வீட்டார் ‘சாமர்த்தியம்’ கெட்டிக்காரத்தனம்’ என்று பாராட்டி மகிழ்ந்தது அவன் மனசை கூனிக் குறுகச் செய்தது ஏமாந்தது அல்ல. அந்த ஏமாற்றத்தின் எக்காளங்களால் அப்பா அடைந்த வேதனைகளைத் தான் விமலனால் ஜீரணிக்க முடியவுமில்லை; தாங்கிக் கொள்ள முடியவுமில்லை. 

சென்னையிலே விமலனின் மனைவியும் குழந்தைகளும் வசித்து வந்த வீட்டின் மொட்டை மாடியிலே அப்பா விமலனைச் சந்தித்தார்.அவனுடைய கைகளைப் பாசமுடன் கட்டிக் கொண்டார். அவர் குரல் அடைத்திருந்தது. நா தழுதழுத்தது . ‘மகனே, நீ எவ்வளவு மனக் கஷ்டப்படுகிறாய் என்பது எனக்குத் தெரியும் யாரை மகன் நோவது? சிறிசுகளை வாழவிட்ட பெரிய மனசு மகன் உன்னுடையது எல்லாம் அவரவர் தலைவிதி…’ என்றார். யார் யாரைத் தேற்றுவது? அப்பாவுக்கு எப்பவும் மிகப் பெரிய மனசு. 

இன்னொரு சந்தர்ப்பத்திலே அப்பாவுக்கும் அவனுக்கும் இடையில் நடந்த சம்பாஷனை விமலனின் மனசிலே விஸ்வரூபம் எடுத்தது. 

தாய்நாடுக்குச் செல்வதற்கு மட்டும் மிகப் பெரிய சிரமங்கள். அகதி நிலை பெற்றுவிட்டால் மற்ற நாடுகள் எல்லாவற்றுக்கும் போகலாம், சொந்த நாட்டினைத் தவிர! இதன் நியாய அநியாயங்களைப் பட்டி மன்றம் வைத்துப் பேசுவதிலும் பயனில்லை. நியாங்கள் எப்பொழுதும் தர்மங்களாய் அமைவதும் இல்லை. பெரும் பணம் செலவு செய்து, பல ஆபத்துக்களை ஏற்றுக்கொள்ளும் துணிச்சலுடன் தாய்நாடு சென்று, அப்பா முன் விமலன் தோன்றினான். 

‘எனக்குத் தெரியும் என் மகன் என்னைப் பார்க்க வருவார்’ என்று ஓராயிரம் தடவைகள் சொல்லியும் அவர் மனசிலே புரண்டோடிய மகிழ்ச்சியை அவராலே வெளியிட முடியாது தவித்தார். 

பிரியும்பொழுது மட்டும் அப்பாவினால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏதோ உள்ளுணர்வுகள் அவர் மனசிலே குமைந்து கொண்டிருந்திருக்க வேண்டும். 

‘மகன் திரும்பவும் போகப் போறியா? ஊரோட குடும்பத்தோட இருந்திடன். நான் கண்மூடினால், கொள்ளி வைக்கவோ அல்லது ஒருபிடி மண்போடவோ ஆர் இருக்கினம்?’ 

‘அப்பா,உங்களுக்கு இப்ப என்ன வந்திட்டுது? இன்னும் இரண்டு மூண்டு வருஷம், உழைச்சுக் கொண்டு ஊரோட வந்திடுறன். பிறகு உங்கள் கண் பார்வை எட்டும் இடத்திலதான் வாழுவன்’ என்று கணணீர் மல்க விமலன் கூறினான். 

அப்பாவின் நெடிய உருவம்; விபூதிக்கு அழகு சேர்க்கும் அகன்ற நெற்றி; கலகலப்பான பேச்சு; உலகின் வஞ்சகமற்ற அன்பு முழுவதையும் குழைத்து வைத்தது போன்ற சிரிப்பு… 

நாட்டு வைத்தியர், அப்பாவை, விமலன் நாடு திரும்பு மட்டும் காப்பாற்றி வைப்பாரா? 

விஸ்கியின் அநுசரணையிலே சங்கரபிள்ளை அண்ணன் சமநிலை அடைந்தார். 

‘விமலன், நான் வெளியால போறதுக்கு முந்தி உனக்கு ஊரில இருந்து ஒரு ‘ரெலிபோன் கோல்’ வந்தது…’ 

‘என்னவாம்? யார் பேசினது? அப்பாவுக்கு ஏதும்? என்று விமலன் பரபரத்தான். 

‘உன்ரை மைத்துனர்தான் எடுத்துப் பேசினவர். விஷயம் எதுவும் அவர் சொல்லேல்லை…விமலன் எப்ப வருவான் எண்டு கேட்டவர்…’

‘நீங்கள் என்ன சொன்னனீங்கள்?” 

‘தம்பி இன்னும் ஒன்றரை மணி நேரத்திலை வீட்டிலை நிற்பான் எண்டு சொன்னன்…’அப்ப அந்த நேரம் எடுக்கிறம். ஆளை வீட்டிலை நிக்கச் சொல்லுங்கள். அவசியம் பேச வேணும் எண்டு சொன்னார்…இப்ப அவை எடுக்கக்கூடிய நேரத்தான்…’ 

‘நீங்கள் வேலைக்குப் போகேல்லையே…கூடக்குறைய எடுக்கிறியள்…’

‘நான் இண்டைக்கு வேலைக்குப் போகேல்லை. ‘சிக்’ போட்டுத்தான் வெளியிலை போனனான்.’ 

விமலன் அவரை உற்றப் பார்த்தான். 

‘மூப்பு, பிணி, சாக்காடு ஆரைத்தான் விட்டது?’ 

‘என்னண்ணை, தத்துவம்…’ 

‘தத்துவமோ? புத்தர் போதித்த போதனைகள்… விஸ்கி உள்ளே போக ஞானம் புறப்படுகிறது….’

விமலன் ஏதோ சொல்ல வாய் உன்னியபொழுது டெலிபோன் மணி சிணுசிணுத்தது. எடுத்து பேசினான். 

“ஹல்லோ ..யாரு” 

‘விமலனா நான் குணா பேசுறன்.. இன்று மாமா தவரிப்போயிட்டர், அதை சொல்லத்தான் அப்போது எடுத்தனான்.நீ வீட்டில இல்லை.’

‘விமலனால் பேசமுடியவில்லை. குரல் அடைத்து தொண்டையோடு நின்றது.. விம்மல் மட்டும் வெளியில் வந்தது.கண்களில் நீர் சுரந்தது. ‘இஞ்ச விமலன், நீ ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறன் 

‘அத்தான்,நான் ஊரில் இருந்தால், அப்பாவுக்கு என்னனென்ன செய்வனோ, அத்தனையும் செய்யுங்கள்.’ நா தழுதழுக்க பேசினான் விமலன். 

‘எங்களுக்கும் கடமைகள் இருக்கு அவர் என்னை சொந்தப் பிள்ளை போலதான் நேசித்து நடத்தியவர். நாங்கள் எந்தக் குறையும் விடமாட்டம். ஒண்டுக்கும் யோசிக்காதேயுங்கோ… விஷயங்கள் முடிஞ்ச பிறகு, விரிவாக பேசுறம்.”. 

‘சரி.. அப்பா.. ஐயோ அப்பா . எங்களை விட்டிட்டு போயிட்டீங்களா” விமலன் வாய்விட்டு கத்திவிட்டன். 

நீ எதுக்கும் யோசிக்காத… எனக்கு தெரியும் உனக்கும் மாமாவுக்கும் இடையில் இருந்த அன்புபாசம் என்ன செய்வது, அவர் நல்லபடி போய் சேர்ந்திட்டார். நீ போய் தனிமையில் இருந்து நல்லா அழுது தீர்த்திடு. சரி வைக்கிறன் நிறைய வேலை இருக்கு,” 

விமலனும் போனை வைத்தான்.

சங்கரப்பிள்ளை அண்ணன் ஏன் புத்தரின் தத்துவம் பேசினார் என்பது இப்பொழுது விளங்கியது. 

மற்றைய இரு நண்பர்களும் வீடு வந்து சேர்ந்தார்கள். சங்கரப்பிள்ளை அண்ணர் அறிவித்ததின் பேரிலே அவர்கள் லீவு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்… 

சங்கரப்பிள்ளை அண்ணர் ‘யாருக்கும் வேணுமோ?’ என்று கேட்பதுபோல, ‘அப்பர் ரென்’ விஸ்கிப் போத்தலை மேஜையிலே எடுத்து வைத்தார். 

விமலனுக்கு அழுகை பொத்துக்கொன்டுவர, தன் அறைக்குள் ஓடிசென்று கதைவை பூட்டிக்கொண்டான்.

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *