கணவனை பயமுறுத்தும் மனைவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 1,754 
 

ஒரு ஊரில், கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். கணவன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வருமானம் மிகவும் குறைவாகவே கிடைத்துக் கொண்டிருந்தது.

அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் அந்தப் பொருள் வாங்கியுள்ளனர்’, நாம் இப்படி எந்தப் பொருளும் வாங்காமல் ஏழ்மை நிலையில் இருக்கிறோமே, நமக்கு எப்போதுதான் நல்ல காலம் வரப்போகிறதோ என்று மனைவி சதா புலம்பிக் கொண்டிருந்தாள்.

இப்போது நாம் பட்டினி கிடக்காமல், ஏதோ வயிறாரச் சாப்பிடுகிறோம் அல்லவா? அதை நினைத்து, மகிழ்ச்சியாக இருப்பதே நல்லது என்று கணவன் ஆறுதலாகக் கூறுவான்.

மனைவி அதை ஏற்காமல், அவனை நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.

அவன் ஒருநாள் பொறுமை இழந்து, “உன் தாய் வீட்டுக்குப் போய், சில நாட்கள் தங்கியிருந்து வந்தால் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. மாற்றம் மகிழ்ச்சியைத் தரும்” என்றான்.

அதைக் கேட்டதும், அவள் பெரிய கூச்சல் போடலானாள், ”என்னை , என் தாய் வீட்டுக்கு ஓட்டிவிட்டு, எவளையாவது ஒருத்தியைக் கூட்டி வந்து கும்மாளம் அடிக்கப் பார்க்கிறாயா?” என்று கத்தினாள். அத்துடன் “இதோ கிணற்றில் போய் விழுகிறேன்” என்று கூவிக் கொண்டு கொல்லையில் இருக்கும் கிணற்றுக்கு விரைந்தாள்.

வேகமாய்ப் போனவள் அப்படியே கிணற்றடியில் நின்று, கணவன் வருகிறானா? என்று சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு திரும்பி விட்டாள்.

கணவனுக்கும் உள்ளூறச் சிறிது பயம் இருந்தது, அவள் கிணற்றில் விழுந்து இறந்து விட்டால், தான் தள்ளிவிட்டதாக ஊரார் அவதூறு கூறினால் என்ன செய்வது? என்ற அச்சம்

அவனைவிட்டு அகலவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு , “எதிர் வீட்டில் உள்ள அம்மா வெளியூரில் இருந்து புடவைகள் வாங்கி வந்து விற்கிறாள். மாதா மாதம் இருபது ரூபாய் கொடுத்தால் போதும்” என்றாள் மனைவி.

இப்போது நமக்கு வரும் வருமானத்தைக் கொண்டு வாழவேண்டிய சிரமமான நிலைமை உள்ளது. இன்னும் புடவைக் கடன் வேறு மாதம் இருபது ரூபாய்க்கு எங்கே போவது? பிறகு பார்க்கலாம்” என்றான் கணவன்.

“ஒரு புடவை வாங்கித் தருவதற்கு வக்கில்லை, என்ன வாழ்க்கை இது? நான் கிணற்றில் விழுந்து செத்துப் போகிறேன் ” என்று கிணற்றடிக்கு ஓடினாள் மனைவி.

கணவன் பேசாமல் உட்கார்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்து விட்டாள்.

மறு நாள், தனக்கு சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டித் தரும்படி முதலாளியிடம் கேட்டுக் கொண்டான் அவன். மேலும், தன் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியவில்லை . அடிக்கடி என் மனைவி, “கிணற்றில் விழுந்து விடுவேன்” என்று கிணற்றடிக்கு ஓடுகிறாள். எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கறிது”. என்று கூறி வருந்தினான்.

“கிணற்றில் விழுவேன் என்று அவள் சொல்வதற்காக, நீ பயப்படாதே, இனிமேல், அவள் அப்படிச் சொன்னால், தைரியமாக, “நீ கிணற்றில் நன்றாக விழு. எனக்குத் தொல்லை ஒழியும் என்று கூறு.” என்று தைரியம் கூறினான் முதலாளி.

“அவள் விழுந்துவிட்டால், என்ன செய்வது? எனக்கு அவமானம் ஏற்படுமே” என்றான்.

“அப்படி சொல்லிக் கெண்டிருக்கிறவள், ஒரு நாளும் விழவே மாட்டாள்; தைரியமாக இரு” என்றான் முதலாளி.

சில நாட்களுக்குப் பிறகு, “இப்படியே வறுமையில் போராடிக் கொண்டிருக்க முடியாது. கிணற்றில் விழுந்து சாகிறேன் என்று சொல்லிவிட்டு, கிணற்றுக்குச் சென்று கொண்டிருந்தாள் ”என்னை தொல்லைப் படுத்தாதே, நீ கிணற்றில் விழுவதற்காக நான் பயப்படவில்லை. எல்லோரும் ஒரு நாள் சாக வேண்டியவர்கள் தானே. யாருடைய உயிரை யார் தடுக்க முடியும்?” என்றான். ”என்னை சாகவா சொல்கிறாய்? என்று கூறி, அழ ஆரம்பித்தாள். பிறகு, அவள், “கிணற்றில் விழுவேன்” என்று சொல்வதே இல்லை.

இவ்வாறு கணவனைத் தொல்லைப்படுத்துகிறவர்களும் இருக்கின்றனர்.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *