ஆந்தை விழிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 2,975 
 

(1973ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 36-40 | அத்தியாயம் 41-45

அத்தியாயம்-41 

தேநீர் வந்தது. 

சங்கர்லால் ஏதோ சிந்தனையுள் இருந்தார். அவர் ஏதோ ஒரு கனவு உலகத்தில் இருப்பதைப் போல் இருந்தது. கமிஷ்னர் சொன்னார்: “வேண்மகள் வந்துவிட்டாள். அவளை டாக்டர் குப்தாவில் மருத்துவ விடுதியில் சேர்த்து விட்டு வருகிறேன்!” 

“வேண்மகள் எப்படி இருக்கிறாள்?” 

“எகையோ இழந்துவிட்டு வெறி பிடித்தவளைப்போல் இருக்கிறாள். டாக்டர் அவளைச் சோதித்துவிட்டு, முழு விவரங்களையும் நாளை உங்களிடம் நேரில் சொல்லுவதாகச் சொன்னார்!” என்றார் கமிஷனர். 

“வேண்மகள் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள். அவளைப்பற்றி இனித் துன்பம் கொள்ளத் தேவை இல்லை” என்றார் சங்கர்லால். பிறகு “வேலப்பனைக் கண்டேன்” என்றார். 

கமிஷனர் நிமிர்ந்து உட்கார்ந்தார். 

“உண்மையாகவா? எங்கே?” என்றார் கமிஷனர்.

“வேலப்பனை உயிருடன் பார்க்க முடியவில்லை! புகைவண்டியில் சிக்கி இறந்துவிட்டார்”. 

“நம்பமுடியவில்லையே!” என்றார் கமிஷனர். சங்கர்லால் நடந்ததையும், தேன்மொழி சொன்னதையும் அப்படியே சொன்னார். 

கமிஷனர் கேட்டார்: “வேலப்பன் இனி தப்ப முடியாது என்று எண்ணித் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ?”

“இல்லை” என்றார் சங்கர்லால். 

“அப்படியானால், நீங்கள் தேன்மொழி சொன்னதை நம்புகிறீர்களா?” 

“ஆமாம். ஆகையால் தேன்மொழி உங்களுக்கு எழுதிக் கொடுப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் சங்கர்லால்.

கமிஷனர் தேநீர் பருகிவிட்டு எழுந்துகொண்டார். அப்போது, உலகையா தங்கியிருந்த அறையைப் பார்த்துக் கொண்டிருந்த கான்ஸ்டபில் ஓடிவந்து சல்யூட் அடித்து விட்டு நின்றான். 

“என்ன நடந்தது?” என்றார் சங்கர்லால். “தேன்மொழியும் உலகையாவும் ஓட்டலுக்குள் சிற்றுண்டி சாப்பிடப் போனார்கள். வருவார்கள் என்று எண்ணினேன். மீண்டும் அவர்கள் திரும்பி வரவே இல்லை. சிற்றுண்டிச் சாலையிலிருந்து எங்கேயோ சென்று விட்டார்கள்! புதிய மனிதன் ஒருவன் காரில் வந்து, அவர்கள் அறையில் இருந்த பெட்டிகளை ஏற்றிச் சென்று விட்டான்!” என்றாள் அந்த கான்ஸ்டபிள். 

“அவர்கள் எங்கே போளார்கள் என்று அவனிடம் கேட்டாயா?” என்றார். 

“கேட்டேன், உலகையானின் மகள் தேன்மொழி மனம் உடைந்திருப்பதாலும், உலகையாவுக்கு இந்தச் செய்தி துன்பத்தை உண்டாக்கியிருப்பதாலும், இருவரும் சில நாட்களுக்குத் தனியாக ஏதோ ஒரு மலைப்பங்களாவுக்குச் செல்லுவதாகவும், அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்றும் சொன்னான் ” 

“அந்தக் கார்?” என்றார் கமிஷனர்.

“அதுவும் விரைந்து சென்றுவிட்டது!”

சங்கர்லால் வியப்படையவில்லை! 

அதே நேரத்தில், ஓட்டல் பையன் ஒருவன் இரண்டு கடிதங்களைக் கொண்டுவந்து, தேன்மொழி கொடுத்து விட்டுச் சென்றதாகச் சொல்லிச் சங்கர்லாலிடம் கொடுத்தான். அவைகளில் ஒன்று கமிஷனருக்குத் தேன்மொழி எழுதியிருந்த கடிதம், மற்றொன்று, சங்கர்லாலுக்கு அவள் எழுதியிருந்த கடிதம். 

கமிஷனருக்கு எழுதியிருந்த கடிதத்தில், விபத்து நடந்த விவரங்களை மட்டும் அவள் தெளிவாக எழுதி இருந்தாள். 

சங்காலாலுக்கு எழுதியிருந்த கடிதத்தில், வேலப்பன் இறந்து விட்ட தாக்குதலைத் தாங்கமுடியாமல் வெளியூருகும் போவதாகவும், அவளும் அவள் தந்தையும் இருக்குமிடத்தை இரகசியமாக வைத்திருப்பதாகவும், மீண்டும் அவள் சங்கர்லாலுடன் தொடர்பு கொள்வதாகவும் எழுதியிருந்தாள். 

சங்கர்லால் சிரித்துக்கொண்டே அந்தக் கடிதத்தை மடித்துத் தன் குறிப்புப் புத்தகத்திற்குள் வைத்துக் கொண்டார். 

“ஏன் சிரிக்கிறீர்கள்” என்று கேட்டார் கமிஷனர்

“துன்பம் நடந்துவிட்டால், மற்றவர்களுடன் பேசிச் சிரித்துப் பழகினால்தான் துன்பம் மறையும், அதை விட்டு விட்டு. தனிமையில் உட்கார்ந்துகொண்டு அதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது மேலும் துன்பத்தைத் தான் தரும் என்பதைத் தேன்மொழி உணரவில்லை! அதை நினைத்தேன், சிரித்தேன்!” என்றார் சங்கர்லால். 

கமிஷனர் கேட்டார்: “இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்.” 

சங்கர்லால் சொன்னார்; “முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் மெய்நம்பிக்கு வேலப்பன் விபத்தில் இறந்துவிட்ட செய்தியை உடனே சொல்லுங்கள்!” 

“பிறகு?” 

“போலீஸ் பாதுகாப்பு இனித் தமக்குத் தேலையில்லை என்பார். ஆகையால், பாதுகாப்பை எடுத்து விடலாம்!”

“உண்மையாகவா?” 

“ஆமாம். மற்றொன்று… “

“என்ன அது?”

“இந்த உலகையாவும் அவர் மகளும் கல்கத்தா நகரிலிருந்து எப்படிப்போய், எங்கே தங்குகிறார்கள் என்பது எனக்குத் தெரியவேண்டும். அவர்கள் இன்னும் கல்கத்தா நகரின் எல்லையை விட்டுப் போயிருக்க முடியாது!” என்றார் சங்கர்வால்.

உடனே கமிஷனர் தொலைபேசியை எடுத்து, கல்கத்தாவின் எல்லைகளில் நடமாடும் போலீஸ்படையின் கார். களுக்கு ரேடியோ செய்தி கொடுக்கும்படி தமது இலாகா வுக்குக் கட்டளை இட்டார். உலகையாவையும், மகள் தேன்மொழியையும் ஏற்றிச் செல்லும் கார் எந்தப் பக்கம் போகிறதென்பதைக் கண்டுபிடிக்கும்படி சொல்லி விட்டு, தொலைபேசியை அவர் வைத்தார். 

சங்கர்லால் மேசையின் அடியில் இருந்த அட்டைப் பெட்டியை எடுத்தார். அதிலிருந்த கரடிப் பொம்மையை எடுத்துக் கமிஷனரிடம் கொடுத்து, “இந்த பொம்மையைத் தேன்மொழி வாங்கினாள். வேறொரு பொம்மையை நான் வாங்கி, அதைத் தேன்மொழியின் அறையில் வைத்துவிட்டு இதைக் கொண்டுவரும்படி கான்ஸ்டபிள் ஒருவனிடம் சொன்னேன்!” என்றார். 

“ஏன்?” என்றார் கமிஷனர். 

“இந்தப் பொம்மையை உடைத்துப் பாருங்கள்!” என்றார் சங்கர்லால். 

கமிஷனர் அந்தப் பொம்மையை உடைத்தார். அதன் வயிற்றிலிருந்து-

விலை உயர்ந்த வைரங்கள், கண்களைப் பறிக்கக் கீழே விழுந்து சிதறின! 

கமிஷனர் ஒன்றும் புரியாமல் விழித்தார். 

சங்கர்லால் சிரித்தபடி அந்த வைரங்களைப் பார்த்தார்! 

அத்தியாயம்-42 

கமிஷனர் வைரங்களைப் பொறுக்கியபடி, “இந்தப் பொம்மையில் எப்படி இந்த வைரங்கள் வந்தன?” என்று கேட்டார். 

சங்கர்லால், கீழே சிதறிவிழுந்த வைரங்களைப் பொறுக்கி மேசைமீது வைத்துவிட்டுச் சொன்னார்: “வைரங்களை வெளிநாட்டிலிருந்து பொம்மைகளில் வைத்து அனுப்ப வேலப்பன் ஏற்பாடு செய்திருக்கிறார்!தேன்மொழி வேலப்பனுக்கு உதவியாக வேலைசெய்து வந்திருக்கிறாள்! வேலப்பனுக்குப் பதில் அவள் வைரங்கள் நிறைந்த இந்தப் பொம்மையைக் கடையிலிருந்து வாங்கி வந்திருக்கிறாள்! எந்த விதக் குறையும் இல்லாத கரடிப் பொம்மையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு வேறு பொம்மையைக் கேட்டதும், கடைக்காரர் அவள் வேலப்பனுடைய கூட்டத்துடன் தொடர்பு கொண்டவள் என்பதைப் புரிந்துகொண்டு, உள்ளேயிருந்த இந்தப் பொம்மையைக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார்!” 

“அப்படியானால், இந்தத் தேன்மொழியை நாம் இப்போதே கைது செய்யலாம் அல்லவா?” என்றார் கமிஷனர்.

“தேன்மொழி தெரிந்து வேலப்பனுக்கு உதவி செய்தாளா, தெரியாமல் உதவி செய்தாளா என்பது இன்னும் எனக்குத் தெரியவில்லை! குறிப்பிட்ட கடைக்குப் போய், ஜப்பானிலிருந்து வந்திருக்கும் கரடிப்பொம்மையை வாங்கிவா. ஆனால், கண்ணாடிக்கேஸில் இருக்கும் பொம்மை வேண்டாம். உள்ளே இருந்து புதிதாகக் கொண்டு வரச் சொல் என்று வேலப்பன் சொல்லி அனுப்பியிருந்தால் அவளுடன் வேலப்பனுடைய ஆட்களில் ஒருவன்தான் கடைக்குச் சென்றிருப்பான் என்பது என் கருத்து!” என்றார் சங்கர்லால்.

கமிஷனருக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தது.சங்கர்லால் சொன்னதிலிருந்து தேன்மொழி குற்றவாளியா இல்லையா என்பதை அவரால் முடிவுசெய்ய முடியவில்லை!

“அடுத்தபடியாக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார் கமிஷனர்.

“நான் மருத்துவ விடுதிக்குச் சென்று வேண்மகளைப் பார்க்கப் போகிறேன். பிறகு, வீனஸ் ஓட்டலிலேயே தங்கியிருப்பேன். நீங்கள் இந்தத் தேன்மொழி போகும் இடத்தைக் கண்டுபிடித்து எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தால் போதும்! மீண்டும் அவளை நான் கண்டு பேச வேண்டும்!” 

“அவ்வளவுதானே?” என்றார் கமிஷனர்.

“ஆமாம்” என்றார் சங்கர்லால்.

கமிஷனர் மெய்நம்பியைக் கண்டு, அவரிடம் வேலப்பன் இறந்துவிட்ட செய்தியைச் சொல்லப் புறப்பட்டார். அவர் புறப்பட்டபோது, வைரங்கள் நிறைந்திருந்த கரடி பொம்மையை அவரிடம் கொடுத்தார் சங்கர்லால்.

கமிஷனர் அதை வாங்கிக்கொண்டு, “இந்த வேலப்பன் மெய்நம்பியிடம் வேலை பார்த்து வந்தார்! மெய்நம்பிதானே இந்தக் கடத்தல் வேலைகளுக்கு ஏற்பாடு செய்திருப்பார்!” என்று கேட்டார். 

சங்கர்லால் சிரித்தார். “வைரங்களைப்பற்றி மெய்நம்பியிடம் எதுவும் நீங்கள் சொல்லவேண்டாம்! அவர் குற்றமற்றவர் என்பதைப்போல் பேசாமல் விட்டுவிடுங்கள்! மற்றவைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்றார். 

கமிஷனர் சிரித்துக்கொண்டே காரில் ஏறிப் புறப்பட்டார். அவருடைய கார் மெய்நம்பியின் பங்களாவை நோக்கிப் பறந்தது. வழியில் அவர் மனம் எண்ணியது: ‘பூமிக் குள்ளே தங்கம் மறைந்திருக்கிறது. ஆழமான பகுதியில் ஒளிந்திருக்கும் தங்கத்தைக்கூட மனிதன் எப்படியோ கண்டு பிடித்து எடுத்துவிடுகிறான்! சங்கர்லாலின் மனத்தில் உள்ள உண்மைகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. தங்கச் சுரங்கத்தைவிட ஆழமானது சங்கர்லாலின் மனம்!’ 

அத்தியாயம்-43 

சங்கர்லால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டுவிட்டுக் காரில் புறப்பட்டார். காரை அவரே செலுத்தினார். முதலில் டாக்டர் குப்தாவின் மருத்துவ விடுதிக்குச் சென்றார். 

டாக்டர் குப்தா சங்கர்லாலைக் கண்டதும் சிரித்தபடி வரவேற்றார். 

“வேண்மகள் எங்கே?” என்றார் சங்கர்லால். 

“வேண்மகள் மயக்கத்துடன் தூங்குகிறாள். அவளுக்கு எவரையும் அடையாளம் தெரியவில்லை. அவள் நிலையில் ஒன்றும் மாறுதல் இல்லை. நான் புதிய மருந்து ஒன்றை அவள் உடலில் ஊசியின் வழியாகச் செலுத்தியிருக்கிறேன்! இந்தப் புது மருந்து அவளுக்குச் சுயநினைவை அளிக்கும் என்று நான் எண்ணுகிறேன்!” என்றார் டாக்டர் குப்தா. 

“எப்படி அவ்வளவு நம்பிக்கையுடன் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டார் சங்கர்லால். 

“நீங்கள் என்னிடம் அனுப்ப ஏற்பாடு செய்த காலிச் சீசாவை என்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தில் நன்கு சோதனை செய்தேன். அஸ்ஸாம் காடுகளில் காணப்படும். ஒரு வகைப் பூண்டிலிருந்து எடுக்கப்பட்ட நஞ்சு என்பது என் கருத்து!” 

“என்ன பூண்டு அது?” 

“காடுகளில் சில பூணடுகள் இருக்கின்றன. அவைகளை ஒருவர் மிதித்துவிட்டால், வெறிபிடித்து வழி தெரியாமல் நினைவு சரியாகத் தெரியாமல், ஒரே இடத்தைச் சுற்றிச் சுற்றி அவர்கள் வருவார்கள். இதைப்பற்றி ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது என் நினைவுக்கு வந்தது. அந்த மாதிரி பூண்டுகளில் இதுவும் ஒன்று! இதை மிதித்தால் ஒன்றும் ஆகாது. உண்டால்தான் எல்லாவற்றையும் மறந்து மயக்கமுடன் விழுந்து விடுவார்கள்! ஒரு சில மணி நேரத்திற்குப்பின் மீண்டும் விழித்துக்கொண்டாலும் அவர்களுக்கு நாம் யார். நாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் எதுவும்தெரியாது. அடிமைகளைப் போல் அவர்கள் நடந்துகொள்வார்கள்!” என்றார் குப்தா. 

சங்கர்லால் சொன்னார்: “ஆப்பிரிக்காவில்தான் இப்படி மருந்துகளால் மனிதர்களைக்கட்டுப்படுத்துவது மிகவும் – எளிய நிகழ்ச்சி என்று படித்திருக்கிறேன்! அது இங்கேயும் பரவிவிட்டது என்பது மிகத் தெளிவாகிவிட்டது. இந்த மருந்தைச் சாப்பிட்டதும். இறந்தவர்களைப்போல் முதலில் இவர்கள் ஆகிவிடுவார்கள்!” 

“ஆமாம். அப்போது உண்மையில் அவர்களுக்கு உயிர் இல்லை என்றே எண்ணத் தோன்றும், எந்த டாக்டராலும் உயிர் இருப்பதை உறுதிப்படுத்த முடியாது!” என்றார் டாக்டர். 

“இப்போது வேண்மகளுக்கு நீங்கள் கொடுத்த மாற்று மருந்து பலன் அளித்துவிட்டால், இன்னும் பல பேர்களை நீங்கள் விடுவிக்கவேண்டும்! இவளைப்போல் சுயநினைவை இழந்து நூற்றுக்கணக்கானவர்கள் மெய்நம்பியின் எஸ்டேட்டில் அடிமைகளாக வேலை செய்து வருகிறார்கள்!” என்றார் சங்கர்லால். 

“மெய்நம்பியின் எஸ்டேட்டிலா? நம்ப முடியவில்லையே?” என்றார் டாக்டர் குப்தா. 

‘ஆமாம்’ என்றார் சங்கர்லால். பிறகு சொன்னார்: “வேண்மகளுக்கு குணமானதும், என்னுடன் நீங்கள் மெய்நம்பியின் எஸ்டேட்டுக்குப் புறப்பட முன்னேற்பாட்டுடன் இருங்கள். உங்களால் இதுவரை இறந்துவிட்டதாக எண்ணப்பட்டவர் பல உயிர்பெறப் போகிறார்கள்” 

“இந்த இருபதாம் நூற்றாண்டில் இப்படி கொடுமை நடந்துவருகிறதே! இப்படி இந்த மருந்தை உட் கொண்டவர்கள், இந்த மருந்தை யார் கொடுத்தார்களோ, அவர்களைத் தான் தங்களுடைய தலைவர்கள் என்று கருதுவார்கள்! யாருக்குக் கட்டுப்பட்டு நடக்கச் அவர்கள் சொல்லுகிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருப்பார்கள்!” என்றார் டாக்டர். 

“எல்லாரும் வேலப்பனுக்குத்தான் கட்டுப்பட்டு நடந்து வந்தார்கள்! வேலப்பன் இந்த அடிமைகளை வைத்து அவர்களுக்குக் கூலி கொடுக்காமல், சரியான உணவு போடாமல், எஸ்டேட்டில் எல்லா வேலைகளையும் வாங்கி வந்திருக்கிறார்!” என்றார் சங்கர்லால். 

“மெய்நம்பியின் எஸ்டேட்டில் பொறுப்பாளராக இருக்கும் வேலப்பனா?” என்றார் டாக்டர். 

“அதே வேலப்பன்தான்! இன்று அந்த வேலப்பன் புகைவண்டியில் சிக்கி இறந்துவிட்டார்.” 

டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை 

சங்கர்லால் சொன்னார்: “எல்லாவற்றையும் பிறகு தெளிவாகச் சொல்லுகிறேன், இப்போது நான் வேண்மகளைப் பார்க்கவேண்டும்.” 

டாக்டர் சங்காலாலை வேண்மகள் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறைக்கு வெளியே கான்ஸ்டபிள் ஒருவன் எளிய உடையில் காவல் காத்து நின்று கொணடிருந்தான். 

சங்கர்லால் அறைக்குள் சென்று பார்த்தார். வேன்மகள் சிறுபிள்ளையைப்போல் தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் விழித்துக்கொண்டதும், சுயநினைவு வந்தால் என்ன எண்ணுவாள் என்று எண்ணியபடி சங்கர்லால் டாக்டரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டார். 

சங்கர்லால் கார் அரசாங்க மருத்துவ விடுதியின் பிணச் சோதனைச் சாலையின் எதிரே அரைமணி நேரம் நின்று கொண்டிருந்தது, பிறகு, அது புறப்பட்டு வீனஸ் ஓட்டலை நோக்கிச் சென்றது. 

வீனஸ் ஓட்டலுக்கு வந்ததும் களைப்புடன் படுக்கச் சென்றார் சங்கர்வால். ஆனால் அவர் மனம் களைப்படைய வில்லை! 

அத்தியாயம்-44 

மாலை நான்கு மணிக்குச் சங்கர்லால் தங்கியிருந்த அறையின் தொலைபேசி அலறியது: சங்கர்லால் தொலைபேசியை எடுத்தார். கமிஷனர் பேசினார்: தேன்மொழியும் உலகையாவும் சென்ற கார், கல்கத்தாவிலிருந்து பிற்பகல் இரண்டு மணிக்கு மேல்தான் நகரின் எல்லையைக் கடந்து கல்கத்தாவுக்கு மேற்கே விரைந்து சென்றிருக்கிறது!” 

“எவ்வளவு தொலைவு?” என்றார் சங்கர்லால். “பதினைந்து கல் தொலைவுக்கு அப்பால் விரைந்து சென்றது. பிறகு கார் எப்படியோ மறைந்துவிட்டது”

“நன்றி” என்றார் சங்கர்லால்.

தொலைபேசியை வைத்துவிட்டு, சங்கர்லால் எழுந்து சென்று குளித்தார், உடைகளை மாற்றிக்கொண்டு ஓட்டலிலிருந்து பலகாரம் கொண்டுவரும்படி சொல்லிச் சாப்பிட்டார். 

மணி ஐந்து அடித்தது. 

ஓட்டலிலிருந்து காரில் அவர் தனியாகப் புறப்பட்டார் கல்கத்தாவின் கூட்டம் மிகுந்த தெருக்களைக் கடந்து, கல்கத்தா நகரின் எல்லையைக் கடப்பதற்குள் இருள் வந்துலிட் டது. பனி வேறு மெல்லத் திரை விரித்தது. 

சங்கர்லால் தன்னந்தனியராக அந்தத் தனி வழிப்பாதையில் சென்றார். அவர் சென்ற பக்கம் வண்டிகளின் போக்குவரத்தோ, மக்கள் நடமாட்டமோ இல்லை. 

அவர் மெல்லச் செலுத்தினார். ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையைப் போலிருந்தது. 

பதினைந்து கல் தொலைவைக் கடந்ததும், சங்கர்லால் காரை ஒரு பக்கமாக நிறுத்தினார். 

சங்கர்லால் காரிலிருந்து இறங்கினார். மெல்ல அதன் கதவைச் சாத்திவிட்டு, கையில் இருந்த மின்பொறி விளக்குடன் நடந்தார். 

சருகுகளின்மீது அவர் நடந்தபோது எழுந்த ஓசையைத் தவிர, வேறு எந்தவித ஓசையும் இல்லை! அக்கம் பக்கத்தில் எங்கேயாவது வீடு இருக்கிறதா என்று பார்த்தார் சங்கர்லால். 

இருளில் எதுவுமே தெரியவில்லை! 

சங்கர்லால் மின்பொறி விளக்கை அடித்துப்பார்த்தார். பனித்திரை விழுந்திருந்ததால், நீண்ட தொலைவு எதையும் பார்க்க முடியவில்லை. 

சங்கர்லால், முடித்தவரையில் விளக்கை அடிக்காமலே நடந்தார். குளிர் அவர் உடலை ஊடுருவியது. எப்படியாவது உலகையாவும் தேன்மொழியும் தங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று எண்ணியபடி நடந்தார். 

சங்கர்லால் ஒரு மலையடிவாரத்தில் நடந்துகொண்டிருந்தார். ஓர் இடத்தில், கொடிகள் படர்ந்து, ஒரு பாறையிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தன. அந்தக் கொடிகளில் ஒன்றைப் பறித்தபோது, அவைகளின் மறைவில் ஏதோ பளபளத்தது! கார். 

சங்கர்லால் சிறிது நேரம் சிந்தித்தபடி நின்றார். பிறகு மலைச்சரிவில் ஏறி மறுபக்கம் வந்தார். மலையின் அந்தப் பக்கத்தில் மேலும் சில மலைகள் சூழ்ந்திருந்தன. அவைகளுக்கு நடுவிலே ஒரு சிறிய வீடு தெரிந்தது! 

அந்த வீட்டில் விளக்கு எரியவில்லை. அதில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை! 

சங்கர்வால் மெல்ல நடந்தார். அப்போது. இருளில் அவருடைய தலைக்குமேல் இரு கண்கள் மரக் கிளைகளின் நடுவில் பளபளத்தன. அந்தக் கண்கள்- 

அதே ஆந்தையின் விழிகள்! 

டார்ஜீலிங் பக்கம், எங்கேயோ காட்டில் இருந்த அதே ஆந்தையா அது? 

ஏன் இருக்கக்கூடாது? 

ஆபத்து நடக்கும் இடங்களுக்கெல்லாம் அந்த ஆந்தை, முன்கூட்டியே இரகசியத்தைத் தெரிந்து வைத்துக்கொண்டு பறந்து வருவதைப் போலிருந்தது! 

சங்கர்லாலுக்கு, ‘உள்ளே சென்றால் ஆபத்து’ என்று அந்த ஆந்தை அச்சுறுத்துவதைப் போலிருந்தது! அவர் கையை உயர்த்தி அதைத் துரத்தினார். 

ஆந்தை அலறியது! ஆனால், அது எழுந்து பறந்து செல்லவில்லை! 

சங்கர்லால் மீண்டும் துரத்தினார். 

ஆந்தை பறந்து சென்றுவிட்டது இப்போது!. 

சங்கர்லால், துணிந்து அந்த வீட்டிற்குள் செல்லப் புறப்பட்டார். அங்கேதான் உலகையாவும் தேன்மொழியும் இருக்கிறார்கள்: என்று எண்ணிய சங்கர்லாலுக்கு அங்கே எப்படிப்பட்ட ஆபத்து காத்திருக்கிறது என்று அந்த ஆந்தைக்குத் தெரியுமோ எண்ணமோ! அதனால்தான் அது கத்தியதா? 

இப்போது அந்த ஆந்தையும் கத்திவிட்டு ஓடிவிட்டது. சங்கர்வாலை இப்போது யார் தடுத்து நிறுத்தப்போகிறார்கள்? 

எவரும் இல்லை! 

சங்கர்லால் இருளில் சென்று அந்த வீட்டின்முன் நின்று தட தடவென்று கதவைத் தட்டினார். 

இருளில் அவர் கதவைத் தட்டும் ஓசை அந்த மலைக் காட்டில் எதிர் ஒலித்தது. 

சிறிது நேரம் கழித்து, உள்ளே விளக்கு எரிந்தது. யாரோ நடந்துவந்து கதவைத் திறந்தார்கள். கதவைத் திறந்ததும், சங்கர்லால் உள்ளே பார்த்தார். 

உலகையா அச்சந்தரும் பார்வையுடன் நின்றிருந்தார்!

“நீங்களா?” என்றார் உலகையா! 

“ஆமாம்” என்றபடி என்றபடி சங்கர்லால் உள்ளே நுழைந்தார்.

“இந்த இடத்தை நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” 

“இந்த இடம் எனக்குக் கனவில் தோன்றியது! அதனால்தான் இதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது! இந்தத் தனிமையான இடத்தில் இருக்க உங்களுக்கு அச்சமாக இல்லையா?” என்றார் சங்காலால். 

உலகையா சிரித்தார்: “தனிமையை நாடி வருபவர்களுக்கு அச்சம் ஏது சங்கர்லால்? வேலப்பன் இறந்துவிட்ட செய்தி எனக்கும் ஒரு வகையில் தாக்குதலைத் தந்து விட்டது!” என்றார். பிறகு, கூடத்தில் சங்கர்லாலை உட்காரும்படி சொன்னார். 

தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்தாள் தேன்மொழி. அவள் முகத்தில் வியப்பு தோன்றி மறைந்தது. 

“அதற்குள் தூங்கிவிட்டாயா? மணி எட்டுக்கூட ஆகவில்லையே!” என்றார் சங்கர்லால்.

“இந்த இடத்தில் ஆறு மணிக்கெல்லாம் தூக்கம் வந்து விடுகிறது!” என்றாள் தேன்மொழி. 

சங்கர்லாலுக்கு எதிரே தேன்மொழி உட்கார்ந்தாள். அவளுக்குப் பக்கத்தில் உலகையா உட்கார்ந்தார். 

சங்கர்லால் சொன்னார்: “இந்த வேலப்பன் இறந்து விட்ட செய்தி உண்மையிலேயே உங்களுக்கு தாக்குதலை அளித்துவிட்டதா? என்னால் நம்ப முடியவில்லையே!” 

உலகையாவைப் பார்த்து இப்படிச் சொன்னார் அவர்.

“நம்ப முடியவில்லையா? வேலப்பனுக்கு என் மகளைக் கொடுத்துவிட வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தேன், அவள் பிடிவாதம் தான் அதற்குக் காரணம்! வேலப்பன் இறந்துவிட்டதும், அவர் இரு கொலைகளைச் செய்தவர் என்று தெரிந்தது! அதனால் ஏற்பட்ட தாக்குதல் அது! உண்மை தெரியாமல் நான் வேலப்பனுக்கு என் மகளை மணம் செய்து கொடுத்துவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்றார் உலகையா. 

சங்கர்லால் சொன்னார்: “இந்த வேலப்பன் கொலைகளுடன் நிற்கவில்லை! இதைத் தவிர, வேறு பல வேலைகளையும் செய்திருக்கிறார்!” 

”என்ன அது?” என்று தேன்மொழியும் உலகையாவும் கேட்டார்கள். 

சங்கர்லால் சொன்னார்: “மெய்நம்பி வேலப்பனை முழுக்க முழுக்க நம்பி எஸ்டேட்டை அவரிடம் ஒப்படைத்தார். மெய்நம்பிக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் சிறு வயதில் காணாமல் போய்விட்டாள். அதனால் மெய்நம்பியின் மனைவிக்கு வெறிபிடித்துவிட்டது. மெய்நம்பிக்குத் தாங்க முடியாத துன்பம்! அந்தத் துன்பங்களை மறக்க மூளையில் ஓர் ஆப்பரேஷனைச் செய்துகொண்டார். பழைய நினைவுகள் எதுவும் இல்லாதபடி மூளையில் ஓர் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. இதனால் மெய்நம்பிக்குத் தன் மகளை மறக்க முடிந்துவிட்டது. வெறிபிடித்த மனைவியை, ஒரு தனி மாளிகையில் அடைத்து வைத்தார். மெய்நம்பியின் முளையை ஆப்பரேஷன் செய்யும்படி ஏற்பாடு செய்தவர் இந்த வேலப்பன்தான்” 

“வேலப்பன் சொன்னால். மெய்தம்பி எதையும் எடுத்துக் கொள்வாரா?” என்று கேட்டாள் நேன்மொழி.

“மெய்நம்பி தமது சுயநினைவுடன் இருந்திருந்தால் லேவப்பன் சொல்வதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். ஆனால், வேலப்பன் மெய்நம்பியைத் தன் வசப்படுத்தி தான் சொல்வதை அவர் கேட்கும்படி செய்தார். இதைத் தான் மெஸ்மரிஸம் என்கிறார்கள்.” என்றார் சங்கர்லால்.

“மெஸ்மரிஸமா? வேலப்பனுக்கு அது தெரியுமா?” என்றார் உலகையா. 

“ஆமாம்” என்றார் சங்கர்லால், பிறகு சொன்னார்: “எஸ்டேட்டில் இருந்துகொண்டு, மெய்நம்பியின்பெயரால் வைரங்களையும் தங்கப் பாளங்களையும் கடத்தி வந்து, மெய்நம்பியின் பங்களாவிலேயே, தேயிலை மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த இடத்தில் வேலப்பன் அவைகளைச் சேர்க்கத் தொடங்கினார். எஸ்டேட்டில் வேலைசெய்ய, ஒருவித மயக்க மருந்தைக் கொடுத்து ஏகப்பட்ட பேர்களை அடிமைகளாக்கினார். அவர்கள் கூலி பெறாமல் வேலை செய்து வந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய ஊதியத்தை வேலப்பன் தனது செலவுகளுக்காக எடுத்துக் கொண்டார்!” 

“எத்தனை நாட்களுக்கு மெய்நம்பியிடமிருந்து இவைகளை மறைக்கமுடியும்?” என்று கேட்டாள் தேன்மொழி. 

“மெய்நம்பி வேலப்பனை முழுக்க முழுக்க நம்பியதால் அவருக்கு விவரம் தெரியாது. மெஸ்மரிஸத்தில் என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியாது. உண்மையில் மெய்நம்பியின் காணாமற்போன மகள், பக்கத்து எஸ்டேட்டில், வேண்மகள் என்னும் பெயரில் பணிப்பெண்ணாக வளர்ந்து வந்தாள். வேலப்பன் எப்படியாவது ஒரு நாள் மெய்நம்பியைக் கொன்றுவிட்டு, இந்த வேண்மகளை மணந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினார். அவர் திட்டப்படி வேண்மகளை முதலில் மணந்துகொள்ள எண்ணினார். ஆனால், வேண்மகள் வேலப்பனை விரும்பவில்லை! அவள் இருந்த எஸ்டேட்டின் உரிமையாளர் நல்லநாயகத்துக்கும் வேலைப்பனைப் பிடிக்கவில்லை!” 

“பிறகு?” என்றார் உலகையா. 

“வேலப்பன் வேண்மகளை மணந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தபோது, நல்லநாயகத்தின் எஸ்டேட்டுக்குத் தமிழ்ச்செல்வம் என்பவர் வந்தார்! அவர் ஒரு பின்னணிப் பாடகர்! இந்தத் தமிழ்ச்செல்வம் வேண்மகளிடம் காட்டிய அன்பைக் கண்டு, வேலப்பன் அவரை வழியில், காட்டில் பார்த்து, தன் வயப்படுத்தி மயக்க மருந்தைப் புகட்டியிருக்கிறார்! தமிழ்ச்செல்வம் அந்த மருந்தைச் சாப்பிட்டுவிட்டுத் தன் இருப்பிடத்துக்கே வந்து விழுந்துவிட்டார்! மருந்தைச் சாப்பிட்டதும். நினைவு இருக்கும்போதே அவர் நடந்ததை எழுதி வைத்திருப்பாரோ என்று நம்பிய வேலப்பன், சான்றுகள் எதுவும் டைக்காமல் இருக்க அவர் இருப்பிடத்தைக் கொளுத்தி விட்டார்! தமிழ்ச்செல்வம் இறந்துவிட்டதாக எண்ணிப் புதைக்கப்பட்டார். ஆனால், அவரைத் தோண்டி எடுத்து, அடிமையாக வேலைவாங்க எஸ்டேட்டில் சேர்த்துவிட்டார் வேலப்பன்?”
 
“தமிழ்ச்செல்வத்தை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கேட்டார் தேன்மொழி. 

“பார்த்தேன். சுயநினைவு அவருக்கில்லை!”

“பிறகு?” என்றார் உலகையா. 

“வேலைப்பனை நான் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோது. அவருக்காகக் கடத்தல் செய்து கொண்டிருந்த செல்லையாவைக் கொலை செய்து விட்டார். அதன்பிறகு வேண்மகளுக்கும் அந்த மயக்க மருந்தைக் கொடுத்து அடிமையாக்கி, மணந்துகொள்ள முயற்சி செய்தார்! நல்லவேளையாக வேண்மகள் என்னிடம் அகப்பட்டுவிட்டாள். வேலப்பன் தன்னுடன் இருந்த விமானியை, எங்கே அந்த விமானி வேலப்பனைக் கொலையாளி என்று பிடித்துக் கொடுத்து விடுவாரோ என்று அஞ்சிப் புகைவண்டியில் தீர்த்துக் கட்டிவிட்டார்.” 

இந்த நேரத்தில் தேன்மொழி சொன்னாள்: “இவ்வளவு கொடிய வேவப்பனை நான் மணந்துகொள்ள இருத்தேனே.” 

”ஒருவழியாக வேலப்பன் இறந்துவிட்டார். இப்போது அவரைப்பற்றி மேலும் பேசிப் பயன் என்ன” என்றார் உலகையா. 

“உண்மையைச் சொன்னால் தேன்மொழிக்கு வேலப்பன் இறந்ததனால் ஏற்பட்ட தாக்குதல் நீங்கும் அல்லவா?” என்றார் சங்கர்லால். 

“உண்மைதான். அதற்காகவா இவ்வளவு தொலைவு எங்களைக்காண நீங்கள் வந்தீர்கள்?” என்றார் உலகையா.

“அதற்காகத்தான் வந்தேன். மற்றொரு உண்மையைச் சொல்லவும் வந்தேன்.” என்றார் சங்கர்லால். 

“என்ன அது?” என்றாள் தேன்மொழி. 

“நீ வாங்கி வந்த கரடிப் பொம்மையை நான் மாற்றி விட்டேன். அதில் வைரங்கள் இருந்தன. அந்தப் பொம்மையில் வைரங்கள் இருந்தது உனக்குத் தெரியுமா?” என்றார் சங்கர்லால். 

அவள் இடிவிழுந்தவளைப்போல் உட்கார்ந்தாள். பிறகு சொன்னாள்: “வேலப்பனும் நானும் முதல் நாள் அந்தப் பொம்மையைப் பார்த்தோம். அதை வாங்க வேண்டும் என்று அவர் துடித்தார், கையில் அப்போது போதிய பணம் இல்லை அதனால் அவருக்காக நான் அன்று அதை வாங்கினேன்” 

உலகையா தேன்மொழியைப் பார்த்து, “சங்கர்லாலுக்கு தேநீர் போட்டுக்கொடு.” என்றார். 

உடனே தேன்மொழி எழுந்து சென்றுவிட்டாள்.

“உண்மையில் என் மகள் குற்றமற்றவள். இந்த வேலப்பன் அவனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். அவளை நம்புங்கள்” என்றார். 

சங்கர்லால் சிரித்தார். 

சிறிது நேரத்தில் தேநீர் வந்தது. அதை வாங்கிச் சங்கர்லால் பருகப்போனபோது, திடீரென்று கதவு திறந்தது.

உள்ளே நுழைந்த மெய்நம்பி, சங்கர்லால் கையிலிருந்த கோப்பையைத் தள்ளி உடைத்துவிட்டு, “சங்கர்லால். அது நஞ்சு. உங்களையும் அடிமையாக்க இந்த வேலப்பன் அதைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லியபடி விரைந்துசென்று எதிரே உட்கார்ந்திருந்த உலகையாவின் முகததைப் பிய்த்தார். பிளாஸ்டிக்கினால் ஆன முகம் தனியாக வந்து விட்டது. 

உலகையாவுக்குப் பதில் வேலப்பன் நின்றிருந்தார், இப்போது. 

சங்கர்லால் எழுந்து நின்றுகொண்டு மெய்நம்பியையும் வேலப்பனையும் பார்த்தார். அவர் வியப்படையவில்லை. அவர் சொன்னார்: “நல்லவேளையில் வந்தீர்கள். உலகையா தான் வேலப்பன் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் நீங்கள் உண்மையில் குற்றமற்றவர்தானா என்பதைக் கண்டுபிடிக்கவே வந்தேன். நீங்கள் குற்றமற்றவர் என்பதால்தான் என்னைக் காப்பாற்ற வந்தீர்கள். ஆனால் என்னைப்பற்றித் துன்பம் கொள்ள வேண்டாம். எனக்கு வேலப்பனால் மயக்க மருந்தைத் தரமுடியாது”. 

“ஏன்?” என்றார் மெய்நம்பி. 

“அதோ பாருங்கள். நீங்கள் என்னைத் தடுக்காவிட்டால், அத்தனை பேர்களும் ஓடி வந்திருப்பார்கள்,” என்றார் சங்கர்லால். 

அந்த வீட்டின் சன்னல்களைச் சுற்றி ஏகப்பட்ட போலீசார் துப்பாக்கிகளைச் சன்னல்களில் நீட்டியபடி நின்றிருந்தார்கள். கமிஷனர் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். 

சங்கர்லால் சொன்னார்: “என்னைத் தொடர்ந்து கமிஷனர் மட்டுமல்ல மெய்நம்பியும் வருவது எனக்குத் தெரியும். வேலப்பன் இறந்துவிட்டதாக நான் நம்பியதை உலகையாவிடம் சொல்லி, கடைசி நிமிஷத்தில் பிடிக்கத் திட்டம் போட்டிருந்தேன். அந்தத் திட்டபடி முதலில் எனக்கு எவ்வளவு உண்மைகள் தெரியும் என்பதைச் சொன்னேன். உண்மையில் புகைவண்டியில் சிக்கி இறந்த மனிதர் வேலப்பன் அல்லர். மருத்துவ விடுதியில் அனாதையாக இறந்துவிட்ட ஒரு மனிதனின் பிணம் அது. பிணச்சோதனையில் அந்த மனிதர் புகைவண்டியில் அகப்படும்முன்பே இறந்துவிட்டதாகத் தெரிந்தது. பிறகு மருத்துவ விடுதியில் கேட்டபோதுதான், ஓர் இளைஞன் வந்து அனாதையாகக் கிடந்த அந்த மனிதரின் பிணத்தைத் தனது உறவினர் என்று வாங்கிச் சென்றதாகத் தெரிந்தது. அப்போதே எனக்கு உலகையாவின் மீது ஏற்பட்ட ஐயம் உறுதியாகிவிட்டது. வேலப்பன் தேன்மொழியை நன்றாக நடிக்க வைத்திருக்கிறார்”. 

கமிஷனரும், கான்ஸ்டபிள்களும் வேலப்பனைச் சுற்றி வளைத்தார்கள். 

அத்தியாயம்-45 

சங்கர்லால் மீண்டும் டார்ஜீலிங்கில் விமானத்தில் வந்து இறங்கியதும், அவருக்காக விமான நிலையத்தில் இந்திரா காத்திருந்தான், குழந்தையைக் காரில் வைத்துக் கொண்டு உட்கார்த்திருந்தாள் அவள். 

சங்கர்லால் வந்து காரில் ஏறியதும் அவளுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 

“ஒரு வழியாக வந்து சேர்ந்தீர்களா? எனக்கு மிகவும் அச்சமாக இருந்தது!” என்றாள் இந்திரா. 

கார் புறப்பட்டது 

சங்கர்லால் சொன்னார்: “கண்ணன் துணையிருக்கும் போது அச்சம் எதற்கு” 

இந்திரா சிரித்தாள். “வழக்கைப்பற்றிப் பத்திரிகைகளில் படித்தேன். ஆனால், சில உண்மைகள் பத்திரிகைகளில் வரவில்லையே!” என்று கேட்டாள் இந்திரா. 

”என்ன அது? வேண்மகளைப்பற்றியா?” என்றார் சங்கர்லால், 

“ஆமாம்!” 

“வேண்மகளுக்கு நினைவு திரும்பிவிட்டது மெய்நம்பியின்  மகள் தான் அவள்! மெய்நம்பியின் மனைவியை அழைத்து வந்து வேண்மகள் முன் நிறுத்தும்படி சொன்னார் டாக்டர் குப்தா, விமானத்தில் மெய்நம்பியின் மனைவி கொண்டுவரப்பட்டாள். வேண்மகளைக் கண்டதும், அவளுக்குப் பழைய நினைவுகள் வந்துவிட்டன! வெறி இப்போது சரியாகி விட்டது.”

“மெய்நம்பி இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா?” என்று கேட்டாள் இந்திரா.

“மெய்நம்பி வேலப்பனின் மெஸ்மெரிஸத்துக்கு ஆளாகியவர். அவர் உண்மைகளை உணர்ந்தபோதிலும் கூட அவரால் வெளியே வேலப்பனின் செயல்களைச் சொல்ல முடியவில்லை. நீதிமன்றத்தில் அவர் குற்றவாளியா இல்லையா என்பது தெளிவாகத் தெரியும். ஆனால், உண்மையில் அவர் குற்றம் எதுவும் செய்யவில்லை”. 

கார் விரைந்து சென்றது பங்களாவை நோக்கி. 

பங்களாவின் வெளியே கான்ஸ்டபிள் ஒருவன் துப்பாக்கியுடன் நின்றிருந்தான். அவன் சங்கர்லாலைப் பார்த்தவுடன் சல்யூட் அடித்து நின்றான். 

“வந்துவிட்டாயா தம்பி!” என்று அன்புடன் கேட்டபடி கதவைத் திறக்க ஓடி வந்தான் மாது. 

-முற்றியது- 

– சங்கர்லால் துப்பறியும் ஆந்தை விழிகள் (நாவல்), ஐந்தாம் பதிப்பு: 1973, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *