மைதானத்தில் மெய்ஞானம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 4,100 
 
 

இன்று எனக்கு முதல் இரவாம்.

தூங்கப்போகும் இடத்திற்கு எதற்கு இவ்வளவு அலங்காரம்! உடல் களைப்பும் தூக்கக் கலக்கமும் ஒருசேர, எரிச்சல்தான் எழுந்தது.

புதிய மெத்தைமேல் சிவப்பு ரோஜா இதழ்களைத் தூவியிருந்தார்கள். சரம் சரமாக மல்லிகை மாலைகள் அறை முழுவதும்.

அம்மலர்கள் வீசிய மணம் வேண்டாத உணர்ச்சிகளைக் கிளறிவிட, அப்பா என்றோ சொன்னதன் அர்த்தம் புரிகிறாற்போல் இருந்தது.

எல்லாருமாகச் சேர்ந்து, நான் பாபம் செய்ய எனக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்!

எங்காவது ஓடிவிடலாமா என்று மனம் துடித்தது.

வீடு முழுவதும் உறவினர்கள் கோணல்மாணலாகப் படுத்திருப்பார்களே!

எங்கு ஓடுவது?

அந்த விளையாட்டு மைதானம்தான் நினைவில் எழுந்தது. தினம் தவறாது போயிருக்கிறேனே! புத்தருக்கு ஒரு போதி மரம்போல், எனக்கு ஞானம் அளித்த இடம் அது.

என்னை விளையாட்டு வீரன் என்று நினைத்துவிட்டீர்கா? நல்ல வேடிக்கை! பத்தடி ஓடுவதற்குள் கீழே விழுந்துவிடும் ஜாதி நான்.

அதனாலேயே, பள்ளி நண்பர்கள், “டேய், வஸ்தாது!” என்று ஏளனமாக அழைக்க சௌகரியமாகப் போயிற்று.

என் காரணப்பெயர் `புல் தடுக்கி வஸ்தாது’ என்பதன் சுருக்கம்! ஒரு பயில்வானைத்தான் வஸ்தாது என்பார்களாம். `பிரஹஸ்பதி’ என்று தேவகுருவின் பெயரால் ஒரு முட்டாளை அழைப்பதில்லையா, அதுபோல்தான்.

முதலில் கோபமாக, பிறகு ரோஷமாக, இறுதியில் வருத்தமாக இருந்தாலும், அந்த அழைப்பே பழகிப்போய், “என்னடா?” என்று அலுப்புடன் மறுகுரல் கொடுக்கப் பழகிக்கொண்டேன்.

பழகினால்தானே கேலிப்பொருளாகிறோம் என்று தோன்றிவிட, என் வயதொத்தவர்களுடன் கழிக்கும் பொழுதைக் குறைத்துக்கொண்டேன்.

பக்கத்து வீட்டு கோமதி மட்டும் என் வீட்டுக்கே வந்து கணக்கில் வீட்டுப்பாடத்தைக் காப்பியடித்துக்கொண்டு போவாள்.

அதற்கும் முடிவு வந்தது.

`சும்மாச் சும்மா அவனோட ஒனக்கென்னடி பேச்சு? தாவணி போட்டுக்க ஆரம்பிச்சாச்சு,’ என்று அவளுடைய அம்மா திட்டினாளாம் ஒரு நாள். சொன்னாள்.

எனக்கு வருத்தமாக இருந்தது. “பின்னே எதுக்கு தாவணி கட்டிக்கறே? சூடிதார் போட்டுக்கறதுதானே!” என்று ஐடியா கொடுத்தேன்.

அவள் சிரித்தாள். “போடா மக்கு!” என்றாள் செல்லமாக. அவள் ஒருத்திதான் என்னை மதித்துப் பேசினாள். அவளுக்கும் நான் இளக்காரமாகிவிட்டேனா! அந்தப் பன்னிரண்டு வயதில் எனக்குப் புரியத்தான் இல்லை.

அடுத்த வருடம், எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கூச்சம் கூச்சமாக ஆயிற்று.

ஒரு வயதுகூட ஆகாத தங்கையை இடுப்பில் சுமந்துகொண்டு, `இவனைத் தொடு!’ என்று என்னை வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓட வைத்த காஞ்சனா – என் அத்தை பெண் அந்தச் சனியன் — எனக்குச் செய்த கொடுமையை மறக்கவே முடியாது. எங்கே அந்தக் குழந்தையின் கை என்மேல் பட்டுவிடுமோ என்று நான் பயந்தது எனக்குத்தானே தெரியும்! குழந்தையாக இருந்தால் என்ன! பெண் பெண்தானே!

அந்தக் கேலிக்கூத்தைப் பார்த்துக்கொண்டிருந்த கோமதியும் சிரித்ததுதான் வேதனையை அளித்தது.

அந்தச் சம்பவத்திற்குப்பின் இன்னும் ஒடுங்கிப்போனேன். உடலில் ஏதேதோ மாறுதல்கள். (முகத்தில் அரும்பிக்கொண்டிருந்த மீசையைச் சொல்லவில்லை). யாரிடமும் வாய்விட்டுக் கேட்கமுடியாத அவமானகரமான, நினைக்கவும் கூசவைத்த சமாசாரம் அது.

பகலில் அந்தமாதிரி கெட்ட எண்ணங்கள் எழும்போதெல்லாம் என் முகமே என்னைக் காட்டிக்கொடுத்துவிடுமோ என்று பயந்து வலுக்கட்டாயமாக அவற்றை ஒதுக்கியிருந்தேன். ஆனால், இரவில் கனவாக வந்து அலைக்கழைப்பதை என்ன செய்வது! இந்த அசிங்கத்தை யாரிடம் வெளிப்படையாக கேட்கமுடியும்!

மன உளைச்சலை வெளிக்கொணர எனக்கு ஒரு வழிதான் தெரிந்தது. நேரம் கிடைத்தபோதெல்லாம் வரைந்து தள்ளினேன். கிறுக்கலாகத்தான் வந்தது. அதனால் என்ன!

ஒரு நாள், “என்னடா அசிங்கம் இது! எப்போ பாத்தாலும் பொண்கள் மார்பையே வரையறே?” என்று கத்தினார் அப்பா. கூடவே, “ஏண்டி! ஒன் பிள்ளை இந்த வயசிலேயே கெட்டுப்போயிண்டு இருக்கான். நீ இதையெல்லாம் கவனிக்கிறதே இல்லியா?” என்று அம்மாவுக்கும் அர்ச்சனை விழுந்தது.

தப்பு செய்வதாகத் தோன்றினால், `உன் பிள்ளை’. பள்ளியில் பரிசு வாங்கினால் பெருமையாக, `என் பிள்ளை!’ என்றிருப்பாரோ? இந்த ஆண்களே இப்படித்தான்!

நினைக்கும்போதே சிரிப்பு வந்தது.

ஆமாம், அது ஏன், `இந்த வயசிலேயே’? சற்று பெரியவன் ஆனதும் கெட்டுப்போனால் சரியா?

எனக்கு உரக்கச் சிரிக்க வேண்டும்போல் இருந்தது.

என் முகமே என்னைக் காட்டிக்கொடுக்க, “ஒடம்பிலே கொஞ்சமாவது பயமிருந்தா இப்படிச் சிரிப்பியா?” என்று இரைந்துவிட்டு, அப்பால் நகர்ந்தார் அப்பா.

இடுப்புக்குமேல், பெண்களுடைய முகத்தையும் சேர்த்துத்தானே வரைந்தேன்! அப்பாவின் கண்களுக்குத் தெரியவில்லை?

கேட்டால் தன் பெல்டுக்கு வேலை கொடுப்பார்.

அது ஏன், நான் எது செய்தாலும் தப்பாகவே தெரிகிறது இந்த அப்பாவுக்கு?

அப்பாவின் கண்பட வரைந்தால்தானே திட்டு விழும் என்று யோசித்தபோது, மூளை ஒரு வழி காட்டியது: அம்மாவின் புடவைகள் அடுக்கியிருந்த பீரோவின் பின்னால் ஒளிந்து வரைய ஆரம்பித்தேன். `அப்பா வரார்டா,’ என்று அம்மா அபாயச்சங்கு ஊதுகிறவரை நிறுத்தமாட்டேன். பற்களை நறநறவென்று கடித்துக்கொள்வேன்.

`இருட்டிலே ஒக்காந்து இப்படி ஓரு உருப்படாத வேலை செஞ்சு, ரெண்டு கண்ணையும் கெடுத்துக்கறியேடா!’ என்ற அம்மாவின் அரற்றல் என்னைப் பாதிக்கவில்லை.

தடிமனான என் மூக்குக்கண்ணாடியின் புண்ணியத்தால் புதிய புனைப்பெயர் கிடைத்தது: `சோடா புட்டி!’

கல்லூரியில் சேர்ந்தபின், அநேகமாக எல்லாருமே கண்ணாடி அணிந்திருந்ததைப் பார்த்தபோது திருப்தி எழுந்தது. கணினியின் உபயம்! `டெக்னாலஜி வாழ்க!’ என்று மனதுக்குள் கூவிக்கொண்டேன்.

என் பல புனைப்பெயர்களை அறியாததால், சகமாணவர்கள் அப்பா-அம்மா வைத்த பெயராலேயே அழைத்தார்கள். சில சமயம், என்னைத்தான் கூப்பிடுகிறார்கள் என்ற பிரக்ஞைகூட எழவில்லை!

“படிப்பு முடிஞ்சு, வேலையும் கிடைச்சாச்சு. இனிமே கல்யாணம்தான்!” என்று அம்மா ஆரம்பித்தாள். “இப்பவே முன்நெத்தியிலே வழுக்கை!” குரலில் பச்சாதாபமா, ஏளனமா என்று எனக்குப் புரியவில்லை.

“கல்யாணமானா ஒரு பொண்டாட்டி வருவா,” என்றேன் பெருமூச்சுடன்.

“பெரிசா கண்டுபிடிச்சுட்டான்!” என்று முணுப்புடன் வந்த அம்மாவின் குறுக்கீட்டை அலட்சியம் செய்தபடி தொடர்ந்தேன். “அவ தினமும் சினிமா, கடைகண்ணின்னு செலவு வைப்பா. தாலி கட்டினவன் மசியாட்டா, மூஞ்சியைத் தூக்குவா. இல்லாட்டா, கத்துவா. எதுக்கு வீண்வம்பு!”

அம்மாவுக்குச் சிரிப்பு பொங்கியது. இளமைக்காலம் நினைவு வந்திருக்கும்.

நான் அவ்வளவு பேசியதே அதிகம். வாய்க்கு வந்ததைச் சொல்லி அப்போதைக்குத் தப்பித்துக் கொண்டாலும் எனக்குள் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது.

தெருக்களின் இருபுறமும், `பெண்களின் கவர்ச்சி மார்பகத்தில்தான்!’ என்று வெளிச்சம்போட்டுக் காட்டும் சினிமா போஸ்டர்களைப் பார்த்து நான் கண்களைத் திருப்பிக்கொள்வதைப் பார்த்து சிரிப்பார்கள் என் வயதொத்த வாலிபர்கள். அதனால் புதிய புனைப்பெயர் ஒன்று கிடைத்தது: சாமியார்!

கேலிப்பேச்சை எத்தனை காலம்தான் பொறுத்துப்போவது! எதிர்க்க நினைத்து, “நீங்க எல்லாம் பிஞ்சிலேயே பழுத்தவங்க!” என்றேன். ஆனால், குரல் என்னவோ அழுகைபோல்தான் வந்தது.

“நீதாண்டா வெம்பிப் போயிட்டே! நீ சரியான ஆம்பளையா, இல்லே, பாதிப்பொம்பளையான்னு ஒனக்கே புரியல”.

அதிலிருந்து, சங்கர் என்று அப்பா-அம்மா வைத்த என் பெயர் அவர்கள் மத்தியில் `சங்கரி’ ஆயிற்று.

இவர்கள் ஏன் பெண் பெயரிட்டு என்னை அழைக்கிறார்கள்? நான் பெண்மாதிரியா இருக்கிறேன்?

மீண்டும் தனிமையை நாடினேன்.

`காத்தாட நடந்துட்டு வாடா. கண் ரொம்பக் கெடாது!’ என்றோ அம்மா சொன்னது நினைவு வந்தது. கையில் கிடைத்த பத்திரிகையை எடுத்துக்கொண்டு, மைதானத்திற்குப் போக ஆரம்பித்தேன், சாயந்திர வேளைகளில்.

புல்தரை வேண்டாம், ராத்திரி மழை பெய்ததே என்று தோன்ற, பெற்றோருக்காகப் போட்டிருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்தேன், ஒரு நாள்.

குழந்தைகளின் காச்சுமூச்சு சத்தத்தில் படிப்பதில் மனம் லயிக்கவில்லை. அந்த வயதில், ஏன், எந்த வயதிலுமே நான் அவ்வளவு சந்தோஷமாக இருந்ததாக நினைவில்லை. அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

மூன்று சிறுமிகள் ஓட்டப்பந்தயத்திற்குத் தயாராக நின்றிருந்தார்கள். `ஒன், டூ’ என்று ஆரம்பித்த ஒருத்தி அடுத்த எண்ணைச் சொல்வதற்குள் ஓட ஆரம்பித்தாள். இரண்டாவதாக வந்த பெண் சண்டைபிடித்தாள்: “நான்தான் ஃபர்ஸ்டு!”

மற்ற இருவரும் மறுக்க, அவள் பெரிதாகக் கத்துவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ நாடகம் பார்ப்பதுபோல் சுவாரசியமாக இருந்தது.

அப்போதுதான் ஒன்று தோன்றியது: பிறர் மனதைப் புண்படுத்துவதற்காகவே `நண்பர்கள்’ என்று ஒருவகை இருக்கிறார்கள்.

என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் பேத்திக்குத் துணையாக வந்திருந்த மிஸஸ் ஆங். “பாவம் அந்தப் பொண்ணு!” என்று பரிதாபப்பட்டாள், மலாய் மொழியில்.

நான் எதுவும் புரியாது, அவளைப் பார்த்தேன்.

“ஆயிஷா தத்து எடுத்த பொண்ணு,” என்றுவிட்டு, என் முகத்தையே உற்றுப்பார்த்தாள். பிறகு, பேசிக்கொண்டே போனாள், அவ்வப்போது பொய்ப்பற்களின் அடியில் நாக்கைத் தூழாவியபடி. “அவளோட அப்பா அம்மா அவளைக் கவனிக்கிறதே கிடையாது. இந்த மெய்ட் மெலாத்திதான் சகலமும். அது சின்ன வயசு வேற – இருபதுகூட இருக்காது. இந்த ஏழு வயசுக் குழந்தையைப்போட்டு அடிச்சுக்கொல்றதைப் பாக்கணுமே!” என்று அந்த நினைப்பிலேயே முகத்தில் ஆழ்ந்த வருத்தத்தைக் காட்டினாள்.

அந்தச் சிறுமியைப்பற்றி என் சிந்தனை திரும்பியது. எப்போதும்போல் என்னைப்பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல் இருந்தது சற்று நிம்மதியை அளித்தது.

`எங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது!’ என்று ஊராருக்கு அறிவிப்பதைப்போல் ஒரு காரியம் செய்துவிட்டு, பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறார்கள் அவளுடைய பெற்றோர்!

“நான்தான் ஃபர்ஸ்டு!” என்றபோது ஆயிஷாவின் தொனிதான் எவ்வளவு உயர்ந்திருந்தது! கோபத்தை வெளிப்படுத்தி, `நான் அப்படி ஒன்றும் மட்டம் கிடையாது!’ என்று தனக்கே உணர்த்திக்கொள்கிறாள்!

மெலாத்தி வயதில் பெரியவள். அவளை எதிர்க்க முடியாது. எதிர்த்தால் சோறு கிடைக்காது. பந்தயத்தில் மூன்றாவதாக வந்தும், வீட்டுக்கு வெளியிலாவது ஜெயிக்கவேண்டும் என்று, `நான்தான் முதல்!’ என்று சாதிக்கிறாளோ?

எனக்கில்லாத தைரியம் அந்தச் சிறுபெண்ணுக்கு!

அவளை உடனே பிடித்துப்போயிற்று.

ஆயிஷா படும் பாட்டிற்கு எப்படி முடிவு கட்டுவது?

சந்தர்ப்பம் விரைவிலேயே வந்தது.

ஆயிஷா சிரித்து விளையாடுவது கண்டு பொறுக்கவில்லைபோலும்! “போகலாம்!” என்று மெலாத்தி அவள் கையைப் பிடித்து இழுக்க, சிறுமி முரண்டு பண்ணினாள்.

`என்னை நீ எதிர்ப்பதாவது!’ என்று மூத்தவள் ஆத்திரம் அடைந்திருக்கவேண்டும். கன்னத்தில், முதுகில், கையில் என்று மாறி, மாறி அவளை அறைந்தாள். ஆயிஷாவின் முடிக் கத்தை அவள் கரங்களில்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அழ ஆரம்பித்தான்.

`இனிமேலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் நமக்குத்தான் கேவலம்,’ என்று எழுந்தேன்.

என்னைப் பிறர் வதைத்தபோது, ஒருவரும் எனக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று கசப்பான எண்ணம் உதிக்க, “அவளை விடு!” என்றேன் அதிகாரமாக.

சற்று நிறுத்திவிட்டு, என்பக்கம் திரும்பினாள். “ஒங்களுக்குத் தெரியாது, ஸார். இவ ரொம்ப நாட்டி!” என்றபடி அந்த இடத்திலிருந்து விரைந்தாள்.

பலியாடுபோல், சிறுமி அவளைப் பின்தொடர்ந்தாள்.

உடனடியாக வீடு திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டேன். அந்த இரு பெண்களையும் தொடர்ந்தேன். எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருதான்.

சற்று பொறுத்துவிட்டு, அழைப்புமணியை அழுத்தினேன்.

“எஸ்?”

இவரா அந்தச் சிறு பெண்ணின் அப்பா?!

தாத்தா என்று சொல்லும்படி தளர்ந்த உடலுடன் இருந்தார்.

மகளைப் பார்த்துக்கொள்ளவென அவர் வைத்திருந்த கேடுகெட்ட பெண்ணின் செயலைக் கூறினேன் படபடப்புடன். ரகசியக்குரலில்.

அவர் உடல் விறைத்தது. “சரி, நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்றபடி என்னிடமிருந்து தப்பித்து உள்ளே நகரப்பார்த்தார்.

அதற்குள் அங்கு வந்த அவருடைய மனைவி, “யாருங்க?” என்று விசாரித்தாள்.

“ஒண்ணுமில்லே. என் நண்பர். சும்மா பாத்துட்டுப்போக வந்தார்,” என்று சமாளித்தார்.

“உள்ளே வாங்க தம்பி! தேத்தண்ணி குடிச்சுட்டுப் போவீங்களாம்,” என்ற அவளுடைய உபசரிப்பை மரியாதையுடன் மறுத்துவிட்டு, ஒரு நல்ல காரியத்தை முடித்துவிட்ட நிம்மதியுடன் நகர்ந்தேன்.

வழக்கம்போல் இரவில் தூக்கம் பிடிக்காது புரளும்போது யோசிக்க விஷயம் கிடைத்தது.

மகள் விஷயத்தில் தான் கொண்ட அசிரத்தை ஊராருக்குத் தெரிந்துவிட்டதே என்ற அவமானமோ அவருக்கு?

ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டிக்கொடுத்தும் அந்த இந்தோனீசிய பணிப்பெண் நன்றியுடன் நடந்துகொள்ளவில்லையே என்ற ஆத்திரமாகவும் இருக்கலாம்.

அடுத்த சில வாரங்கள் என் கண்கள் ஆயிஷாவைத் தேடின. அவளுடைய குரல் கேட்கவில்லை. மற்ற குழந்தைகள் சிரித்து விளையாடிய ஒலி கேட்டாலும், எனக்கென்னவோ மைதானமே வெறிச்சிட்டுக்கிடந்தாற்போல் தோன்றியது.

ஒரு நாள், குனிந்த தலை நிமிராது, ஆயிஷா மெள்ள நடந்துவந்தாள். அவள்முன்னால் அவளுடைய தந்தை, இறுகிய முகத்துடன்.

என்னால் ஆவலை அடக்க முடியவில்லை. வேகமாக எழுந்துபோய் அவரை நெருங்கி, “மெலாத்தி எங்கே?” என்று கேட்டேவிட்டேன்.

அதிகப்பிரசங்கித்தனம்தான். என்ன செய்வது! என் தலையீடு எந்த அளவுக்குப் பலன் அளித்தது என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?

முகம் சுருங்கிப்போக, “போய்விட்டாள்!” என்றார், கையை வீசியபடி. சற்று பொறுத்து, “அவளுக்குக் கல்யாணம்!” என்று சேர்த்துக்கொண்டார். நான் மேலே ஏதும் கேட்டுவிடப்போகிறேனோ என்று பயந்தவர்போல், நடையை எட்டிப்போட்டார் மனிதர்.

ஆயிஷா மற்ற சிறுமிகளுடன் கலந்து விளையாட ஆரம்பித்தாள். சண்டை போடவில்லை.

எனக்குப் பெருமையாக இருந்தது. ஒரு ஜீவனை வதையிலிருந்து காப்பாற்றிவிட்டோம்! என்னாலும் ஆக்ககரமாக ஒரு காரியம் செய்யமுடியும்.

அன்றிரவு முழுவதும் ஏதேதோ எண்ணங்கள் சுற்றிச் சுற்றி எழுந்தவண்ணம் இருந்தன.

என் பொறுமையை, அமைதியான சுபாவத்தை, ஏமாளித்தனம் என்று தப்புக்கணக்குப்போட்டு, என்னைக் கேலிசெய்தவர்கள்தாம் அறிவிலிகள்.

`நீ ஆம்பளைதானா!’ என்று கேலி செய்தவர்களுக்குப் புத்திபுகட்டும் நேரம் வந்துவிட்டது. புத்துணர்ச்சி பிறந்தது போலிருந்தது.

எப்போது விடியும் என்று காத்திருந்தேன்.

மறுநாள் காலை எழுந்தபோது, நேரே சமையலறைக்குச் சென்றேன்.

“அம்மா! `கல்யாணம் பண்ணிக்கடா’ன்னு நச்சரிப்பியே! இப்போ நான் தயார்!”

அம்மா சந்தேகத்துடன் என்னைப் பார்த்தாள். “பல்கூடத் தேய்க்காம வந்து என்னமோ ஒளர்றே! ராத்திரி ஏதானும் போட்டுட்டியா?”

நான் போதையில் உளறுவதாக எண்ணிவிட்டாள்!

“சேச்சே! ஆனா, ஒண்ணு. நான் சொல்ற பொண்ணுதான்!”

அம்மாவுக்குப் புதிய கவலை எழுந்தது. “என்னடா, புதுசு புதுசா குண்டைத் தூக்கிப்போடறே? சீனச்சியா? சர்ச்சுக்கு போறவளா இருப்பாளே! மலாய்க்காரியா இருந்தா மதம் மாறணும். அப்புறம் என்னோட சாவுக்குக்கூட நீ வந்து ஒரு மண்ணும் (சடங்கும்) பண்ணமுடியாது!”

சிரித்தேன். “கொஞ்சம் மூச்சு விட்டுக்கோம்மா. நான் சொல்ல வந்தது – யாராவது அனாதைப்பொண்ணாப் பாக்கணும். அவ்வளவுதான்”.

“குலம், கோத்திரம் பாக்கணுமேடா?”

“வேண்டாம். நான் சொல்றமாதிரிப் பொண்ணுதான் அன்புக்கு ஏங்கி..,” சொல்லி முடிப்பதற்குள் கழிப்பறை அவசரமாக அழைக்க, ஓடினேன்.

என் வருங்கால மனைவியைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஆயிஷாவுக்காவது பெயருக்கு அப்பாவும் அம்மாவும் இருந்தார்கள். அதுகூடக் கிடைக்கக் கொடுத்துவைக்காதவள்! உறவினர்களிடம் வளர்ந்தபோது என்னென்ன துன்பங்களை அனுபவித்திருப்பாளோ!

அவளை எப்படியெல்லாம் தேற்றுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். புதிய உற்சாகம் எழுந்தது.

என் முகம் விகசித்திருப்பதைக் கண்டு அப்பாவுக்கு என்ன தோன்றியதோ! என்றுமில்லாத வழக்கமாக என்னுடன் உலவ வந்தார்.

அனுதினமும் சாயந்திர வேளைகளில் கோயிலுக்குப்போய் கதாகாலட்சேபம் கேட்காவிட்டால் அப்பாவுக்குத் தூக்கம் பிடிக்காதே! அன்று என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அவர் என் பக்கத்தில் நடந்தது மகிழ்ச்சியை அளித்தது. இந்த அப்பா நான் அறியாதவர்.

உதிர்ந்திருந்த சருகுகளைத் தள்ளிவிட்டு, ஒரு மரத்தினடியில் இருந்த சிமெண்டு பெஞ்சின்மேல் அமர்ந்தோம். சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு, தன் போதனையை ஆரம்பித்தார்.

எனக்கு ஞானம் பிறந்தது அங்குதான். `மெய்’ என்னும் உடலைப்பற்றிய தெளிவு.

“நான் ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ. எல்லா ஆண்களும் காமவெறி பிடிச்ச நாய்கள்!” என்றபோது எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், என் பதிலுக்காக அப்பா காத்திருக்கவில்லை. “சந்தர்ப்பம் கிடைச்சா நானும்தான்!”

புரியாது, நான் விழித்தேன்.

“`காமம், குரோதம், லோபம்’னு கெட்ட குணங்களிலே காமத்தைதான் மொதல்லே வெச்சிருக்கா. ஞானிகள் காமத்தை ஜெயிச்சதாலதான் அவா சொன்னது இன்னிவரைக்கும் நிலைச்சிருக்கு. ஒனக்குப் புரிஞ்சா சரி,” என்றவர், பண்டைக்காலத்துக்குப் போவானேன் என்று நினைத்தவர்போல், “மகாத்மா காந்தி கதை தெரியும் இல்லியா?”

திருமணமாகி இரண்டு குழந்தைகளும் பிறந்தபின்னர் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தாராமே, அவர்தானே? தலையாட்டிவைத்தேன்.

`பெண்களைத் தீண்டுவதே பாபம்’ என்று சுற்றிவளைத்து அப்பா சொன்னது எனக்குப் புரிந்தது.

“இந்தக் கொசுக்கடியில் எப்படித்தான் நீ தினமும் இங்க வந்து ஒக்காருவியோ! கோயிலுக்கு வந்தாலாவது

புண்ணியம்!” என்னை மட்டம் தட்டாவிட்டால் அவர் அப்பா இல்லை. பற்களை இறுகக் கடித்துக்கொண்டேன்.

தனியாக வீடு திரும்புகையில், அப்பாவுடன் சேர்ந்து நடந்தபோது கொண்ட பெருமிதம் வடிந்துபோயிற்று. அந்த இடத்தைக் குழப்பம் பிடித்துக்கொண்டது.

தன்னால் காமத்தை வெல்ல முடியவில்லையே என்று காலங்கடந்து வருந்துகிறாரோ?

அப்படியானால், என்னை அவருடைய பாபச்சின்னமாகப் பார்க்கிறாரா? அழுகை வரும்போல இருந்தது.

கூடவே ஒரு நப்பாசை. அப்பா சொன்னபடி நடந்தால் என்னைப் பிடித்துப்போகாதா!

மணவறையில் என் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் சௌம்யா. மெல்ல, கண்களைப் பக்கவாட்டில் திருப்பினேன்.

ஏற்கெனவே சோடாபுட்டி. எதைப் பார்த்தாலும் இப்போது இன்னும் மங்கலாகத் தெரிந்தது.

எங்கள் எதிரே எரிந்துகொண்டிருந்த ஹோமத்தின்மேல் கோபம் எழுந்தது. ஒரே புகைமூட்டம்!

“அதுக்குள்ளே இவனோட அவசரத்தைப் பாரு!” என்று ஒரு கேலிக்குரல் எழுந்தது.

“சைட் அடிக்காதேடா, மண்டு. ஒனக்குச் சொந்தமானவதான்!” இன்னொரு குரல். திரும்பிப் பார்த்தேன். கைக்குழந்தையுடன் நின்றிருந்தது கோமதியா! இன்னும் குண்டாகி இருந்தாள்.

என் மனைவி என்னை முழுதாகத் திரும்பிப் பார்த்து, புன்னகைத்தாள். அந்த முகத்தில் எந்தவித ஏக்கமோ, கலக்கமோ இருப்பதாக என் கண்களுக்குத் தெரியவில்லை. அப்படியானால், நான் எதற்கு அவளுக்கு?

நலங்கு, ரிசப்ஷன் என்று ஏதேதோ சடங்குகள், அன்று பகல்பொழுது முழுவதும்.

இரவில், அவள் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டதாகப் பெயர் பண்ணினேன். அப்போதும் ஏதேதோ கேலிக்குரல்கள். எரிச்சலாக இருந்தது. எப்போது தூங்க விடுவார்கள் என்று காத்திருந்தேன்.

அழகாக அலங்கரிக்கப்பட்டவளாக படுக்கையறைக்குள் வந்தாள் புதுமணப்பெண்.

என் காலில் விழுந்து ஆசி வாங்க முயன்றவளைத் தடுத்தேன்.

“ஏய்! இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்குத் தூங்கணும்”.

போர்வையைத் தரையில் விரித்தேன்.

“ஏன்?” அவள் குரல் பிசிறடித்தது.

மெத்தையில் படுத்தால், அவள் கை, கால் மேலே பட்டுவிடுமே! வெளிப்படையாக எப்படி அதைச் சொல்வது?

கீழே படுத்தவுடன் வேறு பக்கம் திரும்பி, உடனே தூங்குவதுபோல் பாவனை செய்தேன்.

சௌம்யா என்னை எதுவும் கேட்கவில்லை. கணவன் மனம் கோணாமல் நடப்பதுதான் உத்தமமான பெண்களுக்கு லட்சணம் என்ற பண்டைக்கால கதைகளைக் கேட்டிருப்பாள்.

சில தினங்கள் கழித்து கோமதி எங்கள் வீட்டுக்கு வந்தாள், மறுபடியும்.

“பொண்கள் கிட்டே வந்தாலே அலறி அடிச்சுண்டு ஓடுவான்!” என்று என் மனைவியிடம் என்னைப்பற்றிச் சொல்லிச் சிரித்தாள். “இப்போ அவனுக்கே ஒரு பொண்குழந்தை பிறந்தா, தொட்டுத் தூக்கமாட்டானோ?”

“சின்னப் பையனுமில்லாம, மீசையும் முளைக்காத ரெண்டுங்கெட்டான் வயசு, இல்லியா? அப்போ எல்லாப்

பையன்களும் அப்படித்தான் அக்கா!” என்றாள் சௌம்யா, என்னை விட்டுக்கொடுக்காது.

`சபாஷ்!’ எனக்கு அவளைத் தட்டிக்கொடுக்கவேண்டும்போல இருந்தது. எத்தனைபேர் இப்படி எனக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார்கள்!

“மீசை முளைச்சா, கூச்சம் போயிடுமா?” என்று கோமதி கேட்டாள், விடாப்பிடியாக.

என் மனைவி அதற்குப் பதில் சொல்லவில்லை. கடைக்கண்ணால் என்னைப் பார்த்தாள். முகத்தில் சிரிப்பில்லை.

`நீங்கள் மாறவே இல்லையே!’ என்று சொல்லாமல் சொல்கிறாளோ?

`என்றாவது மாறுவீர்களா?’ என்ற ஏக்கமோ?

இந்தப் பெண்களையே புரிந்துகொள்ள முடிவதில்லை.

வழக்கம்போல், நான் தரையில் பாயை விரித்தேன். தினமும் தரையில் படுத்து இடுப்பு, முதுகெல்லாம் ஒரே வலி.

என் முகச்சுளிப்பு சௌம்யாவின் கண்களுக்குத் தப்பவில்லை. “நீங்க கட்டில்லே படுத்துக்கோங்கோ. நான் கீழே படுத்துக்கறேன்,” என்றாள் வலிய.

“வேண்டாம். நான் மாடிக்குப் போறேன்”. என்னைக் கேள்வி கேட்க யாருமில்லை என்ற நினைப்பே தைரியத்தைக் கொடுத்தது.

மகன் கல்யாணத்தை நல்லபடியாக முடித்துவிட்ட சந்தோஷத்தில் அம்மா யாத்திரை போயிருந்தாள் அப்பாவுடன். மகனுக்குப் புத்தி வரச்செய்த கடவுள்களுக்கு நன்றி செலுத்தவாம்!

நான் தனியாகப் படுப்பது அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன சொல்வார் என்ற வேண்டாத யோசனை எழுந்தது. `நல்ல காரியம் செய்யறே!’ என்று தட்டித்தான் கொடுப்பார்.

அந்த நினைப்பில் மகிழ்ச்சி ஏற்படவில்லை. குற்ற உணர்ச்சிதான் எழுந்தது.

சௌம்யா இன்னும் அனாதைபோல்தான் இருக்கிறாள். அவளை நான் எங்கும் அழைத்துப்போவது கிடையாது. அவளும் வாய்திறந்து, `ஏன் இப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டதில்லை, இந்த நாலைந்து மாதங்களில்.

சமைத்ததை மேசைமேல் வைத்துவிட்டுப் போய்விடுவாள். அருகில் வந்து, அவள் பரிமாறுவதை நான் அனுமதித்தது கிடையாது. பெண்வாசனையே கூடாது என்றிருந்தால்தானே மனதை அடக்க முடியும் என்று தீர்மானம் செய்ததன் விளைவு!

அப்போதுதான் வேலை முடிந்து வீடு திரும்பியிருந்தேன். உடை மாற்றிக்கொள்கையில் கதவு தட்டப்படும் ஒலி கேட்டது.

எரிச்சலாக இருந்தது. இந்த கோமதிக்கு வேறு வேலையே கிடையாதா! என்னைப்பற்றி வம்பு வளர்க்க வந்துவிடுகிறாள் தினமும்! சே!

கதவைத் திறந்தவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது: அப்பா!

“என்னால அலைய முடியல. அதனால, ரெண்டு மூணு கோயிலை மட்டும் பாத்துட்டு வந்துட்டேன்”. மூச்சிறைக்கப் பேசினார் அப்பா.

குரல் கேட்டு விரைந்து வந்த சௌம்யா, “வாங்கோப்பா. என்ன சாப்பிடறேள்?” என்று விசாரித்தாள். உண்மையான அன்பு ஒலித்தது அவள் குரலில்.

“அரை டம்ளர் பால் குடும்மா, போறும்”.

“கொஞ்சம் இருங்கோப்பா. இனிமேதான் பால் குக்கரை அடுப்பிலே வைக்கணும்,” என்று மன்னிப்பு கேட்கும் விதத்தில் சொன்னபடி உள்ளே விரைந்தாள்.

வார்த்தைக்கு வார்த்தை `அப்பா’ என்கிறாள்! நான் அப்பாவை அப்படி அழைத்து எத்தனை காலமாயிற்றோ!

மாமனார் ஆயிற்று, மாட்டுப்பெண் ஆயிற்று என்று நான் மாடிக்கு நடையைக் கட்டினேன்.

அந்தச் சிறிய அறையில், தலைகூட வெளியில் தெரியாதபடி உடல் முழுவதும் போர்த்துக்கொண்டு படுத்தேன். `இந்த உலகம் என்னை என்ன செய்துவிட முடியும்!’ என்று தைரியமாக உணரவைக்கும் பொழுது. பயமாக இருந்தால், பூனைகள் இருண்ட அலமாரிக்குள் ஒளிவதுபோல்தான் நானும்.

ஆண்குரல் கனைத்துக்கொண்ட ஒலி. `நான் வந்திருக்கிறேன்,’ என்று அறிவிக்கிறாராம்! நான் அசையவில்லை.

அப்பாவை யார் என் சரணாலயத்திற்கு வரச்சொன்னது? என் பற்கள் நெறிபட்டன.

“சங்கரா!” தயங்கித் தயங்கி வந்தது குரல்.

தவிர்க்கமுடியாது போக, போர்வையை விலக்கிவிட்டு எழுந்து நின்றேன். மெனக்கெட்டு ஏறி வந்தவரே முதலில் பேசட்டும் என்ற வீம்பு எழுந்தது.

அப்பாவின் பார்வையோ ஒருவர் மட்டுமே படுக்கும் அந்தக் குறுகிய மெத்தையில் நிலைத்திருந்தது.

என்னை வேவு பார்க்க வந்திருக்கிறார்!

பள்ளி நண்பர்கள் கேலி செய்தபோது எழுந்த ஆத்திரத்தைவிட அதிக மடங்கு அப்போது எழுந்தது.

“நான் ஒன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்,” என்றார் ஈனஸ்வரத்தில்.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு, வருத்தம் வேறா!

உபசாரத்திற்குக்கூட, `அதெல்லாம் இல்லைப்பா,’ என்று சொல்ல எனக்கு வாய்வரவில்லை. சுடச்சுட ஏதேதோ கேட்கத்தான் தோன்றியது.

என் நினைவு தெரிந்து, என்னை எங்காவது வெளியே அழைத்துப் போயிருக்கிறீர்களா?

நண்பனாக நடத்தியிருக்கிறீர்களா?

`அறிவுரை’ என்று நினைத்து நீங்கள் உளறியதைக் கேட்டு நடந்தேனே! என்னைச் சொல்லவேண்டும்!

நான் ஏதாவது சொல்வேன் என்று எதிர்பார்த்தபடி சிறிது நேரம் காத்திருந்துவிட்டு, பிறகு தளர்ச்சியுடன் கீழே போக யத்தனித்தார்.

என் மனம் குமுறிக்கொண்டே இருக்கையில், பெரிய சப்தம் கேட்டது.

மாடிப்படிகளின்கீழ் ஏடாகூடமாக விழுந்துகிடந்தார் அப்பா.

தடுமாறி விழப்போக, அதைத் தடுக்க நான் அப்பாவின் தோளிலோ, முதுகிலோ இரு கைகளையும் பதித்தேனா?

இல்லை, பிடித்துத் தள்ளினேனா?

தெரியாது. தள்ளினாலும் தள்ளியிருப்பேன்.

உள்ளேயிருந்து ஓடிவந்த என் மனைவி தலையில் அடித்துக்கொண்டு, பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். இடையிடையே, சுயபச்சாதாபத்துடன் புலம்பல்: “நான் இனிமே யாரை அப்பான்னு கூப்பிடுவேன்!”

எனக்கு அழுகை வரவில்லை.

ஒருவரது இறப்பைக் கண்கூடாகப் பார்க்கும்போது, `நான் இன்னும் உயிருடன்தான் இருக்கிறேன்!’ என்று உறுதிப்படுத்திக்கொள்ளத் தோன்றுமோ!

‘நான் சாமியார் இல்லை!’ மனம் இன்பமாகக் கூவியது.

“ஷ்..!” என்று அப்பெண்ணை அடக்கியபோது தைரியமாக உணர்ந்தேன்.

என்னை நோக்கித் திரும்பியவளின் கண்கள் என் இடுப்புக்குக் கீழே சென்று, பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்துவிட்டதுபோல் விரைவுடன் வேறு பக்கம் திரும்பின.

என் வேஷ்டியால் விறைத்த உறுப்பை ஒளிக்க முடியவில்லை.

“வா, சௌமி!” என்று என் மனைவியின் இடுப்பில் கைபோட்டு வளைத்தேன்.

அவள் பார்வை தரையிலிருந்த ரத்தவெள்ளத்தின்மேல் போயிற்று.

“ஒண்ணும் சொல்லமாட்டார்!” அவளுக்குச் சொல்வதுபோல் எனக்கே தைரியம் அளித்துக்கொண்டேன்.

பால் குக்கர் தன்பாட்டில் விசில் அடித்துக்கொண்டிருந்தது – பல நிமிடங்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “மைதானத்தில் மெய்ஞானம்

  1. கதையின் தலைப்பே கதையை உணர்த்துகிறது. அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *