சொக்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 7,557 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கவிஞனை மட்டுமல்ல; கர்த்தபத்தைக்கூட மயக்கிக் கத்தச் செய்யும் அழகு வாய்ந்த அந்தி நேரம். பொன்னிறமான நெற்கதிர்கள் “சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு!” என்று பாடாமல் பாடிய வண்ணம் பூங்காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தன. அந்த அழகைக் கண்களால் பருகியவண்ணம் களத்துமேட்டு வேலியின் அருகே உட்கார்ந்திருந்தான் முருகேசன். அறுவடை வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சொக்கியின் சுழலும் விழிகள் எப்படியோ அவனைக் கவனித்துவிட்டன. உடனே ஒவ்வொரு அங்க அசைவிலும் அழகு தோன்ற அவள் மெல்ல நடந்து வந்து அவனை நெருங்கி, “என்ன மச்சான்! யோசனை பலமாயிருக்குதே?” என்றாள்.

“உனக்குத் தெரியாதா! – அடுத்த மாசம் எனக்குக் கல்யாணமாச்சே!” என்றான் அவன்.

“நிசமாவா?”

“ஆமாம்.”

“பெண்ணு எங்கே?”

“பெரிய இடத்திலே!”

“பெரிய இடம்னா…”

“அப்படித்தான் எங்க அப்பா சொன்னாரு!”

“அப்படீன்னா..?”

“நீ இல்லேன்னு அர்த்தம்!”

“அப்போ நான் சின்ன இடத்துப் பெண்ணா?”

“ஆமாம்.”

“நல்ல வேடிக்கை தான்…!”.

“என்ன வேடிக்கை?”

“பாடுபடுகிறவன் வீட்டுப் பெண்ணு சின்ன இடத்துப் பெண்ணு; அவன் பட்டபாட்டிலே வயித்தை வளர்க்கிறவன் வீட்டுப் பெண்ணு பெரிய இடத்துப் பெண்ணு – அப்படித்தானே?”

“அப்படித்தான் இருக்குது, நியாயம்! அதுக்குத்தான் இப்போ நான் உனக்கு ஒரு யோசனை சொல்லப் போறேன்; நீ கேட்பயா ?”

“சொல்லேன்; நான் கேட்காப்பிட்டாலும் என் காது கேட்டுப்பிட்டுப் போகுது!”

“விளையாடாதே, சொக்கி! இப்போ எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்குது.”

“என்னாத்துக்கு வருத்தம்?”

“வேறே என்னாத்துக்கு வருத்தம்? உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியலையேன்னுதான் வருத்தம்!”

“அதுக்கு நீ என்ன செய்யப் போறே?”

“என்னா செய்யறது?”

“நீ தான் சொல்லேன்!”

“அதைத்தான் சொல்ல வந்தேன்.இன்னிக்கு ராத்திரி நம்ம ரெண்டு பேரும் ஒருத்தருக்கும் தெரியாம எங்கேயாச்சும் ஓடிப் போயிடணும்”

“ஐயையோ! எனக்கோசரம் உங்க அப்பா, அம்மா, அவுங்க சொத்து, கித்து எல்லாத்தையும் விட்டுப்பிட்டா நீ என்னோடு ஓடி வந்திடுவே?”

“அதுக்குப் பார்த்தா நீயும் நானும் ஒருத்தரைவிட்டு ஒருத்தர் பிரிஞ்சிச் சாகிறவரையிலே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கணுமே!”

“ஏன் கஷ்டப்படணும்? ரெண்டு பேரும் சேர்ந்தாப் போல மேலோகத்துக்குப் போயிடுவோம்!”

“அது பட்டணத்துப் பயலுங்க செய்யற வேலை யில்லே? நாம்கூடவா அப்படிச் செய்யறது?”

“அப்போ…?”

“நீ என்னோட ஓடி வந்துடு!”

“சரி!”

“ஆமாம்; என்னைக் கேட்டயே, நீ மாத்திரம் இப்போ எப்படி அப்பா, அம்மாவை விட்டுப்பிட்டு என்னோடு ஓடி வந்துட்றேன்னு சொல்றே?’

“நானுன்னா பொம்மனாட்டி! என்னிக்காச்சும் ஒருநாள் எங்க அப்பா, அம்மாவை விட்டுப் பிரிஞ்சி, எவனோடாச்சும் போக வேண்டியவதானே?” என்றாள் சொக்கி.

“நீ எம்மட்டுப் புத்திசாலியா யிருக்கே!” என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய கன்னத்தை லேசாகக் கிள்ளினான் முருகேசன்.

***

மறுநாள் சொக்கியின் வீட்டில் ஏக ரகளை.”வெளியே தலை காட்ட முடியலையே, நான் என்னா பண்ணுவேன்?” என்று சொக்கியின் தந்தையான தங்கமுத்து, தன் மனைவி பாக்கியத்தின்மீது எரிந்து விழுந்தான்.

“என்மேலே கோவிச்சுக்கிட்டா நான் என்னா பண்றது?”

“என்னா பண்றதுன்னா என்னைக் கேட்கிறே? எல்லாம் உன்னாலே வந்தது தானே…!”

“என்னாலே என்ன வந்தது?”

“என்னா வந்ததா? எதிர்த்த வீட்டிலே இருக்கிற பயலைக் கூப்பிட்டு, நல்லதங்காக் கதையைப் படி, ராஜா தேசிங்குக் கதையைப் படி, அதைப் படி இதைப் படின்னு படிக்கவச்சிப் பெண்ணை வீணாக் கெடுத்தவ நீதானே?”

“நான்தான் படிக்கச் சொன்னேன்; நீயுந்தானே அதைக் கேட்டுக்கிட்டிருந்தே?”

“என்னமோ, நல்ல பிள்ளைன்னு பார்த்தேன்; இப்படிச் செய்வான்னு எனக்குத் தெரியுமா? இப்போ மானம் போகுது!”

இந்தச் சமயத்தில் அங்கே வந்த முருகேசனின் தந்தையான தர்மலிங்கம், “மானமாடா போகுது? மரியாதையா என் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு வரயா, இல்லையா? இல்லேன்னா, வீட்டைக் கீட்டை யெல்லாம் கொளுத்தி உன்னை ஊரை விட்டே விரட்டிப்பிடுவேன்!” என்று இரைந்தான்.

“நான் எங்கே போய் உங்கப் பிள்ளையைக் கூட்டிக் கிட்டு வருவேன் ?” என்றான் தங்கமுத்து.

“ஏண்டா, என்னிடமா நீ கத்த வித்தையைக் காட்டப் பார்க்கிறே? பெரிய பண்ணைக்காரன் மவன் வாட்ட சாட்டமா இருக்கான்னு பெண்ணைச் சேர்த்து வச்சுட்டியா?”

“ஐயய்யோ! என்னதான் ஏழையாயிருந்தாலும் எங்க மேலே இப்படியா பழியைப் போட்றது?” என்றாள் பாக்கியம்.

“பழியா போட்றேன், பழி! இன்னிக்குச் சாயங்காலத்துக்குள்ளே என் மவனைக் கூட்டிக்கிட்டு வந்தாலாச்சு; இல்லாட்டா அப்புறம் என்ன நடக்கிறதுன்னு பாரு!” என்று தோளின் மீதிருந்த துண்டை விறைப்புடன் எடுத்துக் கக்கத்தில் வைத்துக்கொண்டு நடந்தான் தர்மலிங்கம்.

தன்னுடைய பெண் தனக்குத் தேடிவைத்த அவமானத்தை நினைத்து ஏற்கெனவே வருந்திக் கொண்டிருந்த தங்கமுத்துவுக்குத் தருமலிங்கத்தின் வார்த்தைகள் தாங்க முடியாத ஆத்திரத்தைக் கொடுத்தன. ”உனக்குப் பிள்ளையாடா வேணும், பிள்ளை? என் குலத்தைக் கெடுத்த அவனை உசிரோடு வைக்கிறேனா, பார்!” என்று தன் மனத்திற்குள் கருவிக்கொண்டான்.

அதற்கேற்றாற்போல் மறுநாள் சொக்கியும் முருகேசனும் ஆட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் இருப்பதாகத் தங்கமுத்துவுக்குத் தகவல் கிடைத்தது. உடனே, அவன் கத்தியும் கையுமாக ஆட்டுப்பட்டியை நோக்கி நடந்தான்.

***

“அடேய், முருகேசா! அகப்படமாட்டோம்னு நினைச்சுக்கிட்டியா? கதவைத் திறடா!” என்று கத்தினான் தங்கமுத்து.

தமிழ்நாட்டுப் பெண்களுக்கென்றே இயற்கையா யமைந்த குணத்தினால் முருகேசனைப் பின்னால் தள்ளிவிட்டு, சொக்கி முன்னால் வந்து நின்று கதவைத் திறந்தாள். தந்தையின் கையிலிருந்த கத்தி அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது; “ஐயோ!” என்று அலறினாள்.

“‘ஐயோ!’ன்னா சொல்றே? எத்தனை நாளாக காத்துக்கிட்டு இருந்தே, எனக்கு இப்படி அவமானத்தைத் தேடி வைக்க?”

“நான்தானே அப்பா, உங்களுக்கு அவமானத்தைத் தேடி வச்சேன்? என்னை வேணும்னா கொன்னுப்பிடுங்க!”

“உன்னைக் கொன்னுப்பிட்றதா! என் குலத்தைக் கெடுத்தவன் அவன்தானே? எங்கே அவன்?” என்று கேட்டுக்கொண்டே, உள்ளே நுழைந்தான் தங்கமுத்து.

சொக்கி ஓடோடியும் சென்று அவனைப் பிடித்துக் கொண்டு, “அப்பா! நான் சொல்றதைக் கேளுங்கப்பா! நீங்க என்னதான் பண்ணினாலும் இனிமே கெட்ட பால் நல்ல பாலா ஆகப்போறதில்லே! அவரைக் கொன்னுட்டா யாருக்குக் கஷ்டம்? எனக்குத்தானே? நான் கஷ்டப்பட்டா உங்களுக்குக் கஷ்டமாயிராதா, அப்பா?” என்று உருக்கமுடன் கேட்டாள்.

தங்கமுத்துவின் மனம் இளகிவிட்டது ; கையிலிருந்த கத்தியும் நழுவிக் கீழே விழுந்துவிட்டது. ஒன்றும் புரியாமல் இரு கரங்களாலும் தலைமயிரைப் பிய்ப்பதுபோல் பிடித்துக்கொண்டு வெளியே வந்தான். அப்பொழுது எதிர்பாராதவிதமாக அவனுக்கு எதிரே வந்த தருமலிங்கம்,”எங்கேடா, என் பிள்ளை?” என்று இரைந்து கேட்டான்.

குரல் ஒலியிலிருந்து தன்னுடைய தந்தை என்பதை உள்ளேயிருந்தபடியே ஊகித்துக்கொண்ட முருகேசன், “இதோ இருக்கிறேன், அப்பா!” என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான். அவனைக் கண்டதும், “ஏண்டா, என்னை இப்படி ஊர் சிரிக்க வைக்கணும்னு எத்தனை நாளா நினைச்சுக்கிட்டு இருந்தே?” என்று கேட்டான் தருமலிங்கம்.

“நானா அப்பா சிரிக்க வச்சேன்?” என்று திருப்பிக் கேட்டான் முருகேசன்.

“பின்னே யாருடா?”

“நீ தானே அப்பா, சிரிக்க வச்சுக்கிட்டே? நான் வேணாம், வேணாம்னு சொன்னாக்கூடப் பெரிய இடத்திலே பெண்ணைப் பார்த்தே…!”

“சீ, கழுதை! அதிகப்பிரசங்கித்தனமாப் பேசாதே!” என்று அவன் வாயை அடக்கிவிட்டு, “இப்போ மானம் போகுதே, அதுக்கு என்னா பண்றது?” என்று முணு முணுத்தான் தருமலிங்கம்.

“வேறே என்னா செய்யறது, அப்பா? எங்க ரெண்டு பேருக்கும் பேசாம கல்யாணத்தைப் பண்ணி வச்சுட வேண்டியது தான்!” என்று புன்னகையுடன் சொல்லிய வண்ணம் தன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சொக்கியைச் சுட்டிக் காட்டினான் முருகேசன்.

தருமலிங்கத்துக்கு இது சரியென்று பட்டது; அவன் சிரித்துவிட்டான். அதுதான் சமயமென்று அவன் காலில் வந்து விழுந்தாள் சொக்கி.

உடனே தருமலிங்கம் தங்கமுத்துவின் தோளின் மேல் கையைப் போட்டுக்கொண்டு, “நடந்ததையெல்லாம் மறந்துடு, தங்கமுத்து! ஏதாச்சும் ஒரு வண்டியைப் பாரு; ஊருக்குப் போகலாம். நாளைக்கு ஒரு முகூர்த்தம் இருக்குதாம். அந்த முகூர்த்தத்திலேயே நாலு பேருக்கு முன்னாலே நம்ம குழந்தைகளுக்குக் கல்யாணத்தைப் பண்ணிக் கண்ணாலே பார்க்கலாம். அப்படிச் சேஞ்சாத்தான் ஊரிலே ஒரு கழுதையும் நம்மைப் பார்த்து ஒண்ணும் சொல்லாது!” என்றான்.

“அப்படியே சேஞ்சுட்டாப் போச்சு!” என்றான் தங்கமுத்து.

அவ்வளவு தான்; “ஐயோ, என்னைக் கிள்ளாதே !” என்றாள் சொக்கி, அவனைக் கிள்ளிக்கொண்டே.

“உஸ்…” என்று அவள் வாயைப் பொத்தினான் முருகேசன்.

– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *