கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 19,107 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1.அதியமானுடன் நட்பு

வடக்கில் வேங்கட மலையையும் தெற்கே குமரியையும் எல்லையாக உடையது நம் தமிழ் நாடு. இதன்கண் ஒருபகுதி சேரநாடு. அந்நாட் டில் ஔவையார் என்ற அம்மையார் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தார்.

அக்காலத்தில் ஆண்களும் பெண்களும் ஒரு சேரப் படித்திருந்தனர். இருசாராரும் சிறந்த அறிஞர்களாக விளங்கினர். குறவர்குடி மறவர் குடி முதலிய குடிகளெல்லாம் கல்வி சிறந்த பெண்பாற் புலவர்கள் வாழ்ந்தார்கள். குறமகள் இள எயினி என்பவர் மறவர் குடியினர். குயவர் மரபில் பிறந்தவர் வெண்ணிக் குயத்தியார். ஆதிமந்தி யார் அரசகுலத்தினர். ஆகவே, எக்குடியிலும், நல்லறிவு பெற்றுப் பாடும் வன்மையும் கொண்ட பெண்கள் வாழ்ந்தனர். அவ்வாறே ஒளவையார் என்ற அம்மையாரும் தமிழ் கற்றுப் புலமை எய்தினார். ஆடலைக் குறிக்கும் தமிழ், நாடகத் தமிழாகும். பாடலைக் குறிப்பது இசைத் தமிழ் எனப்படும். இந்த இரண்டிற்கும் இன்றியமையாது இருப்பது இயற்றமிழ் ஆகும். இம் முத்தமிழினையும் அம்மையார் அழகுறக் கற்றார்.

நம் அம்மையார் விறல் (சாமர்த்தியம்) தோன்ற ஆடியும் பாடியும் விளங்கினார் ; ஆதலால் விறலி என்று அழைக்கப்பட்டார் என்பர் சிலர் ; இவர் முடியரசர்களையும் சிற்றரசர் களையும் பாடிப் பரிசில் பெறுவர்.

சேர நாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது தகடூர். தகடூரையும் அதனைச் சார்ந்த இடங் களையும் தகடூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்ட வன், அதியமான் நெடுமானஞ்சி என்பவன். இவன் நாட்டில் குதிரைமலை சிறந்து விளங்கியது. இவன் சிறந்த வள்ளல். போரிலும் சிறந்த வீரன். மழவர்கள் எனும் ஒருவகை வீரர் களுக்குத் தலைவன். சேர அரசனுக்கு உறவினன். பனை மாலையை அடையாள மாலையாகச் சூடுபவன். இவன் முன்னோர் விண்ணுலகி லிருந்து கரும்பைக் கொண்டு வந்தனர் என்று கூறப்படுகிறது. இம் மன்னன் தாய் மொழியாம் தமிழில் மிக்க விருப்பமுடையவன். இவன் சிறப்புக்களை எல்லாம் ஒளவையார் அறிந்தார். இவனைக் காண விரும்பிய மூதாட்டி யார் தகடூரை அடைந்தார்.

அம்மையை எதிர்கொண்டனன் அரசன். தக்க இடத்தில் இருக்குமாறு செய்தனன்: புலமை நிறைந்த அம்மையுடன் கலந்து உரையாடி மன்னன் மகிழ்ந்தான். பின், ‘நும் நாட்டில் சண்டை இடும் வீரர் இருக்கிறாரோ?’ என்று அதியமான் வினவினன். அதற்கு அம்மையார் * அடிக்கும் கோலுக்கும் அஞ்சாது பாம்பு எதிர் மண்டும். அவ்வாறு, பகைவர் அம்புக்குச் சிறிதும் அஞ்சாது முன்னேறிப் போர் செய்யும் வீரர் இருக்கின்றனர். அவரே அன்றி எம் தலைவனும் இருக்கின்றான். அவனியல்பினைக் கூறுவேன். மன்றங்களிலே கட்டப்பட்டிருக்கும் முழவு, காற்றடிக்கும் போது ஓசையை உண் டாக்கும். அவ்வொலியைப் பகைவர் போர் முரசு ஒலி என்று தவறாக எண்ணி உடனே போருக்கு எழும் இயல்புடையவன்’ என்று கூறினார்.

இவ்வாறு இருவரும் உரையாடி மகிழ்ந் தனர். நாள் பல கடந்தன. பன்னாள் பழக் கத்தால் அதியமானின் வீரச் சிறப்பை அம்மையார் அறிந்தார். தாம் அறிந்தவாறே அரசனைப் புகழ்ந்தார். பகைவர்களை அறிவுறுத்துபவராக, “பகைவர்களே! நான் கூறுவதை எண்ணுங்கள். எளிமையாக வென்று விடலாம் என்ற எண்ணத்துடன் என் தலைவனாகிய அதியமானுடன் போர்க்களம் புகாதீர்கள். – என் தலைவன் வன்மையைக் கூறுகின்றேன். ஒரு நாளைக்கு எட்டுத் தேர்களைச் செய்யும் ஆற்றல் ஒரு தச்சனுக்குண்டு. அத்தகையவன் ஒரு மாதம் முழுவதும் உழைத்துத் தேர்க்கால் ஒன்றைச் செய்தான். ஆகவே 240 தேர்களைச் செய்து முடிக்கும் காலத்தில் ஒரு சக்கரத்தின் ஒரு சிறு பகுதி ஆகிய தேர்க்காலினைச் செய்தான் என்றால், அத்தேர்க்காலின் வன்மையைப் பற்றிக் கூறல் வேண்டுமோ. அவ்வாறே ஒரு தலைவனாகிய அதியமான் இருக்கின்றான்” என்றார்.

மற்றொரு முறை, “காந்தள், குளவி முதலிய மலர்கள் கமழும் இடம் மலைச்சாரல். அங்குள்ள குகைகளில் புலிகள் வாழ்கின்றன. அப்புலிகள் வெகுண்டால் எதிர் நிற்கும் மான் கூட்டம் உண்டோ ? அலரவன் இல்லா இராக்காலத்தில் இருள் நிறைந்து நிற்கின்றது. ஞாயிறு எழுந்தால் இவ்விருட் கூட்டம் எதிர் நிற்குமோ? வண்டியில் பண்டம் நிரம்பிக் கிடக்கின்றது. அதனால், பார் அச்சுமரத்தோடு தாக்குகின்றது. இந்த நிலைமையில், சுமையைச் சிறிதும் மதியாது சாலையில் நிறைந்துள்ள மணல் பரக்கவும் இடையில் அகப்படும் கற்கள் பிளக்கவும் பகடுகள் செல்லுகின்றன; இப் பகடுகளால் போதற்கரிய துறையுமுண்டோ ? இல்லை. அவ்வாறே, அதிய மானே! நீ போர்க்களம் புகுந்தால் நின்னோடு நிற்கும் ஆற்றல் வாய்ந்த அரசர் யாரும் இல்லை” என்று அதியமானின் உண்மை வீரத்தை எடுத் தியம்பினார்.

தம்மைப் புகழ்ந்து பாடும் புலவர்க்குத் தக்க பரிசைத் தருதல் அதியமானின் வழக்கம். அம்மையாரின் அரும் புகழ்ச் செய்யுள்களைக் கேட்டான். வழக்கம்போல் அவருக்குப் பரிசு அளிக்க வேண்டியது முறை. அங்ஙனம் பரிசு அளித்தால் ‘ இச் செந்நாப் புலவர் நம்மை விட்டு நீங்கி விடுவார்’ என்று அதியமான் அஞ்சினான். அவரைத் தன் பக்கத்திலேயே எப்பொழுதும் இருக்கும் வண்ணம் செய்ய வேண்டும் என்பது அஞ்சியின் நோக்கம்; அவரது இன்சுவைச் செய்யுள்கள் ஈடும் எடுப்பும் அற்றன. அவற்றைக் கேட்டுக் கொண்டிருத்தல் அமிழ்தத்தை ஒக்கும் ஆதலால், அரசன் எவ்வாற்றானும் ஒளவை யாரைத் தகடூரிலேயே இருத்திக்கொள்ள விரும்பிப் பரிசில் கொடுக்காது இருந்தான்.

பரிசில், அவன் அடுத்த நாள் தருவன் ; அதற்கடுத்த நாள் தருவன் என்று ஒளவையார் எதிர்பார்த்தார். பகல் வந்தது; இரவு வந்தது ; மீண்டும் பகல் வந்து கழிந்தது ; அவ்வாறே இரவும். ஆனால் பரிசில் வந்தபாடில்லை. இனித் தங்குதல் நன்றன்று’ என்று ஒளவையார் கருதினார். இக்கருத்தை அதியமானிடத்தில் கூற அவர் விரும்பவில்லை. ஆதலின் வாயில் காப் போனை நெருங்கிப் பின் வருமாறு கூறினார்.

“வாயில் காப்பவனே! வருகின்ற சிறந்த புலவர்களுக்கெல்லாம் வேண்டும் பரிசைத் தரும் அதியமானின் வாயில் காப்பாளனே! நும் தலைவனாகிய அஞ்சி தன் தரம் அறியாதவனோ? அன்றி, எம் தரம் அறியாதவனோ? பரிசில் தராமல் ஏன் காலம் நீட்டித்தான்? உலகத்தில் தமிழை அறிந்த அறிவினையும் புகழையும் உடையோர் பலர், இவனைப்போல் இருக்கின்றார்கள். எம் யாழைக் கைக்கொண்டோம். மற்றைய இசைக் கருவிகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டோம். இனி, தச்சுத் தொழிலில் சிறந் தவர், காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எல்லாம் அவர் தொழிலுக்குப் பயன்படும். அவ்வாறே, தமிழறிவு சான்ற யாங்கள் எங்குச் சென்றாலும் வரவேற்கப்படுவோம்” என்றியம்பிச் சென்றார்.

வாயிலோன் விரைந்து அரசனைச் சார்ந்து இந் நிகழ்ச்சியை உரைத்தனன் . அஞ்சி, அஞ்சினான். புலவர்தம் சொல் கூரிய அம்பினும் வன்மை உடையது. அவர் உள்ளம் வருந்தின் அது பெருந் துன்பத்தைப் பயந்தே தீரும். ‘குணம் என்னும் குன்று ஏறி நின்றவர்’ ஒளவை யார். ஆதலின் அவர் மனம் வருந்தலாகாது. இவற்றை உணர்ந்தவன் அஞ்சி ; ஆதலின் முன் சென்று அம்மையாரைக் கண்டு வணங்கினான். பரிசில் நீட்டித்தற்குரிய காரணத்தைக் கூறினான். அம்மையின் அகம் மலர்ந்தது. அஞ்சியின் உண்மை அன்பை அறிந்து கண்ணீர் சொரிந் தார். அவ் வுணர்ச்சி மேலீட்டால் பின்வருமாறு கூறினார்.

“ஒருநாள் அல்ல ; பலநாள் அல்ல; எத்துணை நாள் அடுத்தடுத்துச் சென்றாலும், ‘முன்னர் இவருக்குப் பரிசு தந்துள்ளோம், இப்போதும் தரவேண்டியதில்லை’ என்று அஞ்சி எண்ணமாட்டான். முதல் முதலில் கண்ட – காலத்தில் அவன் அன்பு இருந்தபடியே எப்போதும் இருக்கின்றது. அவ்வன்பு என்றும் மாறுவது இல்லை. பரிசு அளிப்பதிலும் அவன் தவறமாட்டான். காலம் நீட்டித்தாலும் பரிசில் – தருவதில் ஐயமில்லை. யானையின் கொம்பில் வைக்கப்பட்ட கவளம் யானையால் உண்ணப் படும். அவ்வாறே பரிசில் தவறின்றி நம்மைச் சாரும். ஆதலின், நெஞ்சமே ! வருந்தவேண்டாம். அஞ்சி, நன்றாக வாழ்வானாக!”

புலவர், தகடூரில் பல்லாண்டு வாழ்ந்தார். பெருமலையில் அரியதோர் நெல்லிக்கனியை அஞ்சி அடைந்தான். அதனை உண்டோர் நீண்ட நாள் வாழ்வர். பெற்ற கனியைத் தானுண்டு நீண்ட காலம் வாழ அரசன் விரும்பவில்லை. ஒளவையார் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என எண்ணினான் ; ஆதலினால் , அக் கனியை அவருக்குக் கொடுத்து உண்ணச் செய்தான். உண்மையை அறிந்த அம்மையார், சிவபெருமானைப் போல் என்றும் அஞ்சி வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

2.தொண்டைமான் செருக்கடக்கல்

தகடூரில் அதியமான் ஆட்சிபுரிந்த காலத்தில் காஞ்சி நகரத்தைத் தொண்டைமான் என்பவன் ஆண்டான். தொண்டைமான், அஞ்சியை வெல்ல வேண்டும் என்று எண்ணினான். அதற்காக ஒரு படையைத் திரட்டி ஆயுதங்களை யெல்லாம் ஒழுங்காகச் செய்தான். இந் நிகழ்ச்சியை அதியமான் எவ்வாறோ அறிந்தான் ‘தொண்டைமானோடு போர் செய்ய நேர்ந்தால் தோல்வி ஐயமின்றித் தொண்டைமானுடையதே. ஆனால் வீணில் வீரர் பலர் இறக்க நேரும். ஆகவே, போர் நடவாது தடுக்க வேண்டும். அதற்கு வழி என் வலியைத் தொண்டைமா னுக்குச் சீராக அறிவித்தல் வேண்டும்; அவ்வாறு செய்யின் அவன் தன் எண்ணத்தை மாற்றினும் – மாற்றிக் கொள்ளலாம். அங்ஙனம் சென்று கூறி அவன் மனத்ததாகிய தீய எண்ணத்தை மாற்று வோர் யார் ? யாரை அனுப்பினால் இச்செயலைச் சீர்பெறச் செய்வார்?’ என்று நினைத்தான்.

இத்தகைய காலங்களில் அரசன் ஏவலால் செல்வோர் தூதுவர் எனப்படுவார். அவர் இரண்டு வகைப்படுவார். ஒரு வகையார், தங்கள் அறிவால் பேசுவோர். மற்றொரு சாரார், அரசன் சொல்லியனுப்பிதைச் சொல்லுவோர். இவர், முன்னவரின் தாழ்ந்தவர்.

சங்க_இலக்கியக்_கதைகள்38தூதருக்குச் சிறந்த குணங்கள் மூன்று. அவை, அன்பு, அறிவுடைமை, ஆராய்ந்த சொல்வன்மை என்பவை . தம் அரசன் மாட்டு அன்புடையவராய் இருக்கவேண்டும். வேற்றரசர் பால் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லும் வன் மையைப் பெற்றிருக்க வேண்டும். தம் அரசனுக்கு ஆவன அறியும் அறிவையும் பெற்றிருத்தல் வேண்டும். தாம் கூறும் சொற்களால், தம் உயி ருக்கு வேற்றரசன் தீங்கு செய்தாலும் அஞ்சலா காது. அஞ்சாமல் தம் தலைவனுக்கு உறுதி பயக்கும் சொற்களைக் கூறுபவனே தூதுவனாதற் குரிய முழுத் தகுதியை உடையவனாவான். இத் தகுதிகள் உடையவரைத் தொண்டைமானிடம் அனுப்பல் வேண்டும். அப்போதுதான் அஞ்சி யின் எண்ணம் நிறைவேறும். ஆகவே, இங் ஙனம் சிறந்தார் யார் என அவன் எண்ணினான். தன் அமைச்சர் பலரினும் இக்குணங்களை ஒருங்கே பெற்று விளங்குபவர் ஒளவையாரே என்று துணிந்தான். ஆதலால் தொண்டை மானிடம் தூது சென்று அவனைத் திருத்த வேண்டும் என்று அவரை வேண்டினன்.

ஒளவையார் காஞ்சிபுரத்தை அடைந்தார். தமிழறிஞராகிய அம்மையைத் தொண்டைமான் எதிர்கொண்டனன். தன் பகைவன் எனத் தான் கருதும் அதியமானிடமிருந்து அம்மையார் வருகின்றார் என்பதைக் காஞ்சி மன்னன் அறிந் தவனே. இருந்தும், அவர்களை அன்போடு எதிர்கொள்கின்றனன். காரணம் என்ன? அவனுக்குத் தமிழ்ப் புலவர்பால் இருந்த நன் மதிப்பும் அன்பும் தூதுவரிடத்துக் காட்ட வேண்டும் நல்லெண்ணமும் காரணங்களாகும்.

தன் நகரடைந்த தமிழ்ப் புலவருக்குத் தன் படைக்கலப் பெருமையை அறிவிக்க வேண்டும் எனத் தொண்டைமான் எண்ணினான். ஒளவை யார் அறிந்தால் அதனை அஞ்சிக்கும் அறிவிப் பார் என்பது அவன் கருத்து. ஆதலின், தன் அரண்மனையைக் காட்டுகின்றவனைப்போல அம் மையை அழைத்துச் சென்று படைக்கலம் வைக் கப்பட்டிருக்கும் இடத்தை அடைந்து அதனை அம்மையாருக்குக் காட்டினான். அங்கே, பல வகைப் படைகளும் பள பளவென ஒளிவிட்டு விளங்கின. அவை நெய் பூசப்பட்டிருந்தன. மயிற்பீலி அணியப்பட்டிருந்தன. மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. இவற்றைக் கண்டவுடன் தொண்டைமானின் போர்த்திறத்தைப் புலவர் நன்றாக உணர்ந்தார். தொண்டைமானின் எண்ணத்தைக் கண்டித்து நல்லறிவு விளக்கம் உண்டாக்க அதுவே தக்க நேரம் அல்லவா? ஆகவே, அவனை நோக்கி, “காஞ்சி மன்னனே! நின் படைக்கலக் கொட்டிலைக் காண்கின்றேன்; மாலை யும் பீலியும் அணியப்பட்டு நெய் பூசப்பட்டு நாடோறும் தேய்க்கப்படுவதால் ஒளியுடன் இவை விளங்குகின்றன. ஆ! இவற்றின் ஒளியின் பெருமையை என்னென்பது!” என்று சொல்லிக் கொண்டே வந்தார். அக்காலத்தில், தொண்டை மான் கண்கள் மகிழ்வால் பூத்தன. அவன் முகம் அலர்ந்த செந்தாமரை போன்றிருந்தது. அவன் கண்கள், அவன் அதியமானின் படைக் கலக் கொட்டிலை அறிய ஆவல் கொண்டவன் என்பதைக் காண்பித்தன. கண்களே எவற்றை யும் எடுத்துக்கூறும் ஆற்றலுடையன. ஒளவை யார் தம் பேச்சைத் தொடர்ந்து, ‘அதியமான் அஞ்சியின் படைக்கலக் கொட்டிலில் படைகளே இல்லை…’ என்றனர். அப்படியாயின், வெற்றி – முற்றும் தம்மைச் சாரும் – என்ற எண்ணம் தொண்டமைானுக்கு எழுகின்றது. இந்த நற் செய்தியைத் தனக்கு அறிவித்த அம்மைக்குத் தன் செய்ந்நன்றியை அறிவிக்க முற்படும் காலத் தில், தொடர்ந்து ஒளவையார், “அஞ்சியின் ஆயு: தங்கள் யாவும் கொல்லனிடத் திருக்கின்றன. அவை போரில் பகைஞரைக் குத்தியும் கொன்றும் தம் நுனியும் கங்கும் முறிந்து கிடக்கின்றன” என்றுரைத்து முடித்தார்.

தொண்டைமானுக்குப் பெரிய ஐயம் உண் டாயிற்று. அவன் அஞ்சியும் போருக்கு முற்படு கின்றான் என்று முடிவிற்கு வந்தான். அன்றி யும், போரிடைப் பட்டுத் தேர்ந்த சிறப்பு அஞ்சி யின் படைக்கலங்களுக்கே உண்டெனின் , அவன் நாட்டு வீரர்களைப்பற்றிக் கூறுவானேன்? அவர் களுக்குத் தலைவனாகிய அஞ்சி போரில் தலைமை தாங்கி நடத்தும் பெருமையும் கூறாமலே அறியக் கிடக்கின்றது. ‘நாம் வெல்வோம்’ என்ற அறி யாமையால் எழுந்த எண்ணம் அழிந்தது. மேலும், அம்மையுடன் உரையாடலால் அமைந்த மனமுடையவனானான்.

“இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.”

எனும் பொய்யாமொழிக்கு இலக்கியமாகத் தமிழ் மூதாட்டியார் விளங்கினார்.

3.முடிவுரை

திறமை நிறைந்த அதியமானுக்கும், காரிக் கும் போர் மூண்டது. காரி என்பவன் திரு முடிக்காரி எனப்படுவன். இவன் திருக்கோவ லூரை ஆண்ட சிற்றரசன். இருவருக்கும் போர் நடந்த களத்தை ஒளவையார் அடைந்தார். திருமுடிக்காரிக்கும், அவன் படை வீரருக்கும் அஞ்சியின் போர் செய்யும் திறனை ஒளவையார் எடுத்துக் கூறினார். அவர்கள் அந் நல்லறிவைக் கேட்டு ஒருவரோடொருவர் அமைதி செய்து கொண்டிருக்கலாம். அவ்வாறு செய்யாமல், மேலும் போர் செய்தனர். தோல்வியுற்று அழிந்தனர். வெற்றி அஞ்சிக்கு ஆயிற்று.

திருமுடிக்காரி இழந்த தன் கோவலூரை அடைவதற்கு உதவி செய்யும்படி சேர மன்னனை வேண்டிக்கொண்டனன். சேர நாட்டை அக் காலத்தில் ஆண்டவன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன். இச் சேரல், கொல்லி மலையை ஆண்ட வல்வில் ஓரி என்பவனை வெல்ல வேண்டும் என்று காலம் கருதி இருந்தான். ஆகவே, முதற்கண் ஒரியை வென்று, பின் அஞ்சியை அடக்கலாம் என்று சேரன் கூறினன். சிதைந்த தன் படையுடன், திருமுடிக்காரி சேரனைச் சேர்ந்தான். இருவர் படைகளும் ஓரியை எதிர்த்தன. அஞ்சியைத் தனக்குத் துணையாக ஓரி அழைத்தான். ஓரியுடன் கூடிப் பகைவரைத் தொலைத்துவிட்டால் தனக்கிடையூறு இல்லாதொழியும் என்றெண்ணி அஞ்சியும் ஓரியுடன் கலந்தான்.

போர் நடந்தது ; ஓரி தோற்றனன் ; அஞ்சி, தகடூரினுள் சென்றிருந்தான். பகைவர் படை முற்றுகை இட்டது. இனியும் உள்ளிருத்தல் தக்கதன்று என்று எண்ணி வெளிவந்து போரிட் டான். பகைவர் படைக்கலங்கள் மார்பு முதலிய இடங்களில் பாய்ந்து பல புண்களை உண்டாக்கின. உடனிருந்த ஔவையார், மேலும் போரிட்டுப் புகழ் அடையுமாறு வலியுறுத்தினார்! அந்தோ ! சேரல் விடுத்த வேல் அஞ்சியின் மார்பில் பாய்ந் தது. உயிர் ஓய்ந்தது ; உடல் சாய்ந்தது.

இக் காட்சியைக் கண்டார் மூதாட்டியார் மனம் கசிந்தார்; உள்ளம் உடைந்தார் : வாய் விட்டலறினார்.

“அஞ்சி மாய்ந்தனனே! கிடைத்தவற்றைப் பிறர்க்களிப்பான் ; அவருண்பதைக் கண்டு தான் மகிழ்வான். தனித்தென்றும் உண்ணமாட்டான். பிறர்க் கெனவே வாழ்பவன் இவன். மணம் நிறைந்து நிற்கும் தன் கையால் வறியார்க்குப் பொருளை வாரி வழங்குவான். இவை எல்லாம் கழிந்தனவே! இன்று இவன் மார்பில் வேல்தைத் – தது; ஆதலின் இறந்தனன். இனிப் பாணருக்கு ஒன்று கொடுப்போர் யார்? இவன் சுற்றத்தாரது துன்பத்தைப் போக்குவோர் எவர்? நுண்ணிய ஆராய்ச்சியாளருடைய அறிவினைமதித்து அவருக்கு ஆவன செய்வோரும் உளரோ? காட்டில் மலர்ந்த அலர் சூடப்படாது ஒழியும். அவ்வாறே, உயிர்களுக்குத் தருதல் என்ற கொடைக்குண முடையோர் இல்லாது இனி உலகம் வருந்தும்” என்று புலம்பினார்.

அதியமானின் மகன், பொகுட்டெழினி, அஞ்சிக்குப்பின் முடி சூடினான். அவன், வென் றிச் சிறப்பு, இன்பச் சிறப்பு முதலியவற்றைத் தமிழ்ப் பாட்டியார் புகழ்ந்து பாடினார். அரசியல் அறிவை அவனுக்கு நன்றாக விளக்கி அறிவுறுத்தினார். இவ்வாறு சில ஆண்டுகள் அவனுடன் தங்கி இருந்தார்.

தமிழ்நாடு முழுவதையும் காணும் அவா ஒளவையாருக்கு உண்டாயிற்று. நாஞ்சில் மலைக் குத் தலைவன் நாஞ்சில் வள்ளுவன் என்பவன். அவனைப் புகழ்ந்து மிக்க பரிசில் பெற்றார். மாரி வெண்கோ என்ற சேர அரசன், கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி என்ற பாண்டிய மன் னன், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழன் ஆகிய மூவரும் ஒருங்கிருந்தனர். இவர்களைக் கண்ட மூதாட்டியார், என்றும் இவ்வாறு தமிழரசர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். பின் மதுரையை அடைந் தார். சங்கப் புலவரைக் கண்டவராகி மகிழ்ந்தார். பாண்டிய மன்னனால் நன்கு மதிக்கப்பட்டார். ‘நின்னாடு, நல்ல தமிழ் உடைத்து’ என்றார்.

இங்ஙனம், தமிழகம் புகழ வீற்றிருந்த ஒளவையார், நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார். தமிழ்மொழி, இவர் போன்ற பெரும் புலவர்களால் சிறந்தது; தமிழ்நாடு மேலோங்கி வாழ்ந்தது.

– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *