நித்திய பாலன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 2,082 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டில்லி வரைக்கும் தடம் புரளாமல் ஒடுமா என்ற நியாயமான சந்தேகங்கூடத் தோன்றாமல், முதல் வகுப்புப் பெட்டியில், எனக்குள்ளேயே நான் மூழ்கியிருந்தேன். வெளியே குட்கோட் போட்ட ‘பிளாட்பார ஆசாமிகள், சம்பந்தப் பட்டவர்களுக்குப் பிரிவுபசார உணர்வுகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்க, சிலர், பல்லவ பஸ்ஸை விடப் படுவேகமாகப் பறந்து கொண்டிருந்தனர். பேரத்தை மீறிய போர்ட்டர்கள், பேரம் பேசாமல் பெட்டியில் சாமான்களை ஏற்றிவிட்டு போர்ட்டரை டபாய்க்கும் பிரயாணிகள், பிரயாணிகளை டபாய்க்கும் போர்ட்டர்கள், விசில் சத்தங்கள், ‘யுவர் அட்டன்ஷன் பிளிஸ்கள் – ஆகிய எந்த அமர்க்களமும், என் காதில் மோதியிருக்கலாம். ஆனால் மூளையில் மோதவில்லை; இதனால், எனக்கு மூளை இல்லை என்பதல்ல. என் மூளையிலும், அதிலிருந்து புறப்பட்ட, முதுகுத் தண்டிலும், ‘உட்செல்’, ‘வெளிச்செல்’ நரம்புகளிலும் இதயத்தின் ‘ஆரிக்களிலும்’ வென்டிரிக்களிலும், ஒரே ஒரு பையன் மட்டுமே விசுவரூபமாக வியாபித்திருந்தான். மறுநாள் டெல்லிக்குச் சென்றதும், பத்தாண்டு வரை பார்க்கத் துடித்தும், பார்க்க முடியாமல் போன, என் மருமான் ரமேஷைப் பார்க்க வேண்டும். பார்க்காமல், எப்படி இன்னும் ஒன்றரை நாட்கள் இருக்க முடியும் என்ற இயலாமையால் நான் இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

நான் டில்லிக்கு, ஜி.டி.யிலேயே போயிருக்கலாம். திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் கான்பரன்ஸ~க்கு, வெள்ளிக்கிழமையே தமிழ் நாட்டில் போக வேண்டியதில்லை. இருந்தாலும், டில்லியில் ஒய்வு கிடைக்கும் ஒவ்வொரு வினாடியையும், சுரேஷ”டன் கழித்து, களிக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, செகரடேரியட் ஆசாமிகளைப் பார்த்து, கோட்டாவில் டிக்கெட் வாங்கிப் புறப்பட்டேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பத்தாண்டு காலம், அவனைப் பார்க்க வேண்டும் என்று, இப்படிப்பட்ட வேகம், இதுநாள் வரையில் வந்ததில்லை. ரயில் பெட்டியில் ஏறிய பிறகுதான், ரயில் புறப்படாத ஒவ்வொரு விநாடியும், நாடியில்லாத வீண் விநாடியாக எனக்குத் தோன்றியது.

ரயில் புறப்பட்டு விட்டது. ‘ஜிக்கு புக்கு சத்தம் போடாமல், அருமையான ஓசையுடன், பிரயாணிகளைக் குலுக்காமல், அதே சமயம் தன் பாட்டுக்குக் குலுங்கிய வண்ணம் புறப்பட்ட ரயிலை நினைத்ததும், டில்லி ரயில் நிலையத்திலிருந்து பத்தாண்டுகளுக்கு, முன்பு நான் புறப்பட்ட நிகழ்ச்சி, டெலிவிஷன் போல் கிளியராக வந்தது.

பத்தாண்டுகளுக்கு முன்பு –

பாரதத்தின் தலை விதியை நிர்ணயிப்பதாலே என்னவோ, தலைவிரிகோலமாக இருந்த டில்லி நகரில் இருந்து, சென்னைக்கு மாற்றப்பட்ட என்னை, வழியனுப்ப ரமேஷ், அவன் பெற்றோர். வயது வந்த அவன் அக்காள், என் நண்பர்கள்- முதலியோர், ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். என் நண்பர்கள் என்னைப் பார்க்காமல், இதர பெண்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘பயல்கள் என்னை வழியனுப்ப வந்தார்களா அல்லது அந்தச் சாக்கில் முன்பின் அறிமுகமில்லாத பெண்களை வழியனுப்ப வந்தாாகளா என்ற சந்தேகம் எனக்கு வரவில்லை. ரயில் நிலையம் வரைக்கும் எனக்காக வந்திருக்கலாம். இப்போது என்னை அந்நியன் போலவும், அந்நியமான பெண்களைப் பிரிய மனமில்லாத பிரான சிநேகிதகள் போலவும் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆராய்ச்சி மாணவியான ரமேஷின் அக்காள், வந்தவர்களில் எவனும் தனக்கு மேட்ச் இல்லை என்பதுபோல், முகத்தைச் சுழித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பெற்றுவிட்டு, அதற்காக இப்போது பிராணனைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதுபோல், தோன்றிய பெற்றோர், சென்னையில் அவர்களின் சொந்தக்காரர்களிடம் நான் கொடுக்க வேண்டிய மோடாக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, என்னைப் பார்க்கவில்லை.

ஆனால், ரமேஷ் மட்டும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். பத்து வயதுப் பையனான அவனுக்குப் புரிந்ததுபோல் அழுதான். அதே சமயம் புரியாதது போல் தன் மடி மீது உட்கார்ந்திருந்தான். ‘எப்போ மாமா வருவீங்க?” என்று கேட்டான். நான் வாயைத் திறக்காமல், கண்களைத் துடைப்பதைப் பார்த்துவிட்டு, “எப்பவுமே வர மாட்டேளா” என்று அழுவான். “ஆக்ராவுக்குத்தான் போறேன்…. நாளைக்கு வந்துடுவேன்’ என்று நான் சொன்னதும் அவன் இலேசாகச் சிரிப்பான். சொல்லப் போனால், மடியில் இருந்த அவனைப் பார்க்கப் பார்க்க, காய்ச்சாத பால்போல, பூக்காத மொட்டுப் போல, தேயாத சந்தனம் போல, அறியாத புன்னகையின் ஏகபோக வாரிசு போல் தோன்றிய அவனை இன்னம் சில நிமிடங்களில் பிரியப் போகிறோமே என்கிற ஏக்கத்தில் எனக்கே, “ஆக்ராவுக்கே” போகவேண்டியிருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. (சென்னைக்குக் கீழ்ப்பாக்கம் எப்படியோ, அப்படி, டில்லிக்கு ஆக்ரா) ரயிலுக்குப் பச்சை கொடி காட்டியாகிவிட்டது.

அந்தப் பச்சை மதலையை வாங்கிக் கொள்வதற்காக, தந்தைக்காரர் உள்ளே வந்து கைகளை விரித்தார். ஆனால், ரமேஷ், பதிலுக்குக் கைவிரிக்கவில்லை. மாறாக, தன் பஞ்சுக் கைகளை என் கழுத்தைச் சுற்றிக் கொண்டு, “மாட்டேன், மாட்டேன். மாமாவோடத்தான் போவேன். போவேன்.” என்று அடம் பிடித்து அழுதபோது, அடம் பிடிக்காமல் அழுத என் கண்ணிர், அவன் முதுகை நனைத்து, அவன் தந்தையின் புறங்கைகளிலும், சிதறியது.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கோ”, “ஒரு வருஷத்துக்கு ஒரு தடவையாவது வாங்கோ”, “தடியா மாமி சொன்னாபோல கல்யாணத்துக்கு ஆசைப்பட்டு, ரயிலி லேயே காதலிச்சுடாதே….”, “மெட்ராஸ் வரும்போது கடிதாசு போடுறேன். ஸ்டேஷனுக்கு வா” என்பன போன்ற வார்த்தைகள், அந்தச் சிறுவனுக்கு சந்தேகத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

ரயில் லேசாக நகரத் தொடங்கியது. ரமேஷின் தந்தை வெங்கட்ராமன் பதற்றப் கேட்டார். நானோ, அவனைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உயிரோடு செத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சினந்த அவன் தந்தை, இடியட். எபில்லி’ என்று திட்டிக் கொண்டே, அந்தத் திட்டுக்கு தாளம் போடுவதுபோல், அவன் முதுகில் மொத்து மொத்தென்று மொத்தி, அவனை-என் பிரிய ரமேஷை-பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டு கீழே இறங்கினார்.

நகரத் தொடங்கிய ரயில், ஒடத் தொடங்கியது. தந்தையின் மார்புக்குள் ஒடுங்கிய ரமேஷ், அவரது கைகளைச் சிறைக் கம்பிகளாக நினைத்து அவற்றை ஒடிக்க நினைத்து, அது முடியாமல் போக, வளைக்க நினைத்தவன் போல், “மாமா மாமா” என்று கத்திக்கொண்டே, இதுவரை யாராலும் அடிபடாத அப்பாவின் தலையை அடித்தான். திமிறினான். துள்ளினான்; துவண்டான்; மருண்டான். மீண்டும் ‘மாமா! மாமா’ என்று மார்பெல்லாம் கண்ணிராகச் கத்தினான். கதறினான்.

ரயில் போகப் போக, அவன் குரல், எனக்குக் குறைவாகக் கேட்டாலும், அவன் கைகால்களை ஆட்டி, நெட்டி, நீட்டிய அன்பின் வெளிப்பாடுகள் மங்கலாக பழங்கலாகத் தெரிந்தாலும், ரயில் விலக, விலக, நான் அவனிடம் நெருங்கி, நெருங்கி, பின்பு நெருங்க இடமில்லாமல், அவனுடன் ஐக்கியமாகி விட்டேன். அவன் தந்தை, அவனை அடிப்பதுபோல், தோன்றியது. அடித்தார். அப்போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. இப்போது நினைத்துப் பார்க்கையில், காத்திருக்கும் தந்தையைவிட, நேத்து வந்த அந்நியன் அவனுக்குப் பெரிசாகப் போன பொறாமையில் அவர் அடித்திருக்கலாம். அப்படி இருந்தாலும் அதில் தப்பில்லை. அந்தப் பையன், எனக்கு அறிமுகமான விதமே அலாதியானது –

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரியை முடித்த கையோடு, எனக்கு டில்லியில் வேலை கிடைத்தது. ‘டில்லிக்கா? டில்லிக்கா?” என்று தாலுகா பரப்பைத் தாண்டாத என் அம்மா, “அய்யோ அம்மா” என்று அழ, அப்பாக்காரர் “மாதா மாதம் பணம் அனுப்பு” என்று உபதேசம் செய்ய, நான் டில்லிக்கு வந்தேன். கரோல் பாக்கில் பார்த்த தமிழர்களை, சிநேகித பாவத்துடன் பார்த்தபோது, அவர்கள் எனக்குக் முகம் கொடுக்க முடியாத அளவுக்கு ‘பிஸியாக இருந்தார்கள். எப்படியோ ஒரு மெஸ்ஸில் இடம் கிடைத்தது. நான், இளிச்சவாயன் என்பதை நான் சொல்லாமலே புரிந்து கொண்ட அந்தத் தென்னிந்திய மெஸ்மேன் என்னை பர்ஸாத்தியில் போட்டார். வறுத்தெடுக்கும் வெயிலில், நான் வாடி வதங்கினேன். அப்போது வாரத்துக்கு இரண்டு நாட்கள் “ரைஸ் லெஸ் டேஸ்’ அதாவது அரிசி பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட நாட்கள். வேகாத சப்பாத்தி, அழுகிப் போன பூசணிக்காய் சப்ஜியோடு உண்டு உலர்ந்து போன் நான், யாராவது வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட மாட்டார்களா என்று ஏங்கினேன். அந்தச் சமயத்தில், அலுவலகத்தில் அறிமுகமான ஒரு தமிழர், ஆர்.கே புரம் வரும்போது, வீட்டுக்கு வாங்கோ என்றார். அதாவது, அவர் வீட்டுக்கு விசேஷமாக வரவேண்டாமாம்.

அழுகிய பூசணிக்காயால், என் குடல் அழுகும் நிலைக்கு வந்து விட்டதால், வெட்கத்தை விரட்டி விட்டு, தற்செயலாகப் போவது போல், ஆர்.கே. புரத்து நண்பர் வீட்டைக் குறி வைத்து, பஸ் ஏறினேன். முன் எச்சரிக்கையாக, அவரிடம் பலவந்தமாக வாங்கப்பட்ட முகவரியை வைத்துக் கொண்டு தேடினேன். வீடு கிடைத்தது. வீட்டுக்காரர்கள் கிடைக்கவில்லை. ‘புத்தா பார்க் போய் விட்டார்களாம். யாரும் வந்தால், வர நாழியாகும் என்று சொல்லும் படி, சொல்லி விட்டார்களாம்.

என்ன செய்வதென்று புரியாமல், கால் போன போக்கில் நடந்தேன். டில்லி தமிழ்ச் சங்கம் போர்டைப் பார்த்துவிட்டு, படியேறினேன். அங்கு பத்து பதினைந்து பேருக்கு, ஒரு பேச்சாளர், செவிக்குத்தான் உணவளித்துக் கொண்டிருந்தார். என்னை இலக்கிய அபிமானியாக நினைத்து, பதினைந்து வாடிக்கைக்காரர்களும், விழிகளில் நட்பு பாவத்தை ஏற்றியபோது, நான் ஏறிய படிகள் வழியாக இறங்கினேன்.

மீண்டும் கால் போன போக்கில் நடந்தேன். செத்தாலும் சும்மா சாகலாமே தவிர, நம்மால், மெஸ்காரரின் சப்பாத்தியைச் சாப்பிட்டுவிட்டுச் சாக முடியாது. தொந்தவர்கள் தென்படுகிறார்களா என்று நிமிர்ந்து பார்த்தேன் தென்பட்டார்கள். ஆனால் அவர்கள் சாப்பிட்டாச்சா என்று கேட்கவில்லை. அரிசிச் சோறு பற்றிப் பேசவில்லை. நானும் ‘சப்பாத்தி ஒத்துக்கல. பூசணிக்காய் அழுகின பிறகுதான் சமைப்பாங்களோ என்று ஜாடை மாடையாக கேட்டேன் போகச் போகச்’ சரியாகிவிடும்! என்றுதான் போக்கு காட்டினார்களே தவிர, நிஜம் சொன்ன வாய்க்கு, அரிசிச்சோறு கிடைக்கவில்லை. இந்த அளவுக்குக் கீழே பிச்சைக் காரனாக மாற, நானும் தயாராக இல்லை.

பழையபடியும் கால்கள், தானாக என்னை இழுத்துக் கொண்டு சென்றன. கால் முன்நோக்க, வயிறு பின்நோக்க, அசிரிச் சோறு ஒன்றை மட்டும் குறியாகக் கொண்ட லட்சிய உந்தலில் நடந்தபோது, ராமகிருஷ்ண புரத்தில் உள்ள, உத்திர சுவாமிமலைக் கோவில், நான் பார்க்காமலே என் கண்ணில் முட்டியது. அப்போது நான் முருக பக்தன் அல்ல; அதேசமயம் முருகனை நினைக்காமலும் இருந்ததில்லை. டில்லியில் மண்டிக் கிடந்த பாகவதர் கிராப், ஹிப்பிகளைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு முருகனின் நினைவு வரத்தான் செய்தது.

உத்திரசுவாமி மலையின் அடிவாரத்துக்கு வந்தேன். 45ம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து, கரோல்பாக் போக நினைத்த எனக்கு, மலையேறி, கோவிலுக்குப் போக வேண்டும் போலி ருந்து. பக்தி மட்டும் காரணமல்ல. பிரசாதம் கிடைக்கலாம். அதாவது அரிசிப் பிரசாதம், தண்ணிரைக் குடித்து வயிற்றைப் பூசணிக்காய் ஆக்கி விட்டால், அன்று அழுகிய பூசணிக்காயை அண்ட வேண்டியதில்லையல்லவா?

முட்டிகளைப் பிடித்துக் கொண்டே, படி ஏறினேன்.

“அப்பனே ஆறுமுகா!
அரிசிச்சோறு கிட்டாதா?
சப்பாத்தி தட்டிவிட்டு
சாம்பார் சாதம் தந்தாக்கால்
சுப்பனே! குப்பனே! – இந்த
சுப்பிரமணியன் உன்னடிமை”

என்று பாதி தமாஷாகவும், பாதி ஸ்பீரியஸாகவும், மனத்துக்குள்ளேயே, நானே கவிதையெழுதி, நானே மொட்டையடித்து, நானே மனத்துக்குள் பாடி, காதுக்குள் கேட்டு, கர்ப்பக் கிரஹத்துக்குள் வந்து, மூலஸ் தானத்துக்குப் போனேன். அங்கேதான், பிரசாதம் கிடைக்கும்! அன்று வெள்ளிக்கிழமை, நல்ல கூட்டம். இன்கிரிமென்டுக்காக வந்தவர்கள், எபிஷியன்ஸி பாரைத் தாண்ட முடியாமல் தடுக்கியவர்கள், பிரமோஷன் காரர்கள், பிரமோஷனுக்காக, சிபார்சுக்கு வந்தவர்கள் என்ற வகையில் ‘பக்த குழாமின் வேல் வேல். வெற்றிவேல்’ (அதாவது புரபேஷன் முடியட்டும்; பிரமோஷன் வரட்டும்) என்ற முழக்கம். அதனிடையே ஒருசிலர், பற்றற்ற, நிஷ்காமிகளாக, அக்கம் பக்கம் பார்க்காமல் நின்றனர். வேலும் மயிலும் விளங்க, குன்றேறி நின்ற குமரனை, ஊனக் கண்ணை மூடி, ஞானக் கண்ணைத் திறந்தவர்களாய், தன்னை மறந்து, ‘தானை மறந்து தரிசித்தனர். இதை ‘என்னை மறக்காத நான், புரிந்து கொண்டேன். பசி கிள்ளவே, அந்த வேகத்தில், இப்போது நிஜமாகவே, அந்தப் பிச்சாண்டியிடம் (சாம்பார், ரசம் சாதம்) பிச்சை கேட்டு, கைகளைப் பண்டாரம் போல் நீட்டிக் குவித்தேன். திடீரென்று, ஒரு பையன் சிரிப்பது கேட்டு, திரும்பிப் பார்த்தேன். அவன் கழுத்துக்கு உத்திராட்ச மாலையைப் போட்டு, கையில் ஒரு வேலைக் கொடுத்துவிட்டால், அவனையே முருகன் என்று சொல்லலாம். அப்படி ஒரு தோரணை நெருப்பு ஜ்வாலையின் நிறம், சந்தனக் குளுமையான கண்கள், சரவணனைப் போன்ற உடல்வாகு. பார்ப்போரைப் பற்றிலாழ்த்தும் பற்றற்ற கண்கள்.

அந்தப் பையனையே, சிறிது நேரம் கண் கொட்டப் பார்த்துவிட்டு, பிரசாதம் விநியோகிக்கப் படவில்லை என்பது உறுதியானதும், வெறுப்போடு வெளியே வந்தேன். சாதம் கொடுக்காத சண்முகத்தைச் சதமாக நினைக்கக் கூடாது என்ற உணர்வோடு, நடந்த களைப் புத் தீருவதற்காக, வெளியே வந்து உட்கார்ந்த சிறிது நேரத்தில், அதே பையனும், தந்தையும், தாயும், தமக்கையும் புடைசூழ வந்தான். அவர்களைப் பார்த்து ஏதோ சொல்லிவிட்டு, பிறகு என்னைப் பார்த்துவிட்டுச் சிரித்தான். உடனே, அவன் தந்தை “பெரியவங்கள. அப்படி சொல்லப்படாது” என்று சொல்லிக்கொண்டே, என்னைச் சிநேகித பாவத்துடன் பார்த்துச் சிரித்தார். அதில் அரிசிச்சோற்றின் மணம் வீசியது. அந்த அம்மா வீசிய புன்னகையில், நெய் வாடை நெருடியது. எழுந்து அவர்களை நெருங்கினேன். பையன் ஏதோ சொல்லப்போனான். அப்பாக்காரர், அவன் வாயைப் பொத்தினார். பின்னர் அவன் வாயிலிருந்து கைகளை விலக்கியபோது அந்தப் பொடியன், என்னைப் பார்த்து நேரடியாகவே கேட்டான்.

“மாமா. நீங்க. ஒரே கறுப்பா இருக்கேளே. ஏன்?”

அப்பா இடைமறித்தார்.

“அடிச்சிடுவேன் படுவா. மாமாவ… அப்படில்லாம் பேசப்படாது. இவன் கிறுக்கு பய ஸார். எக்ஸ்கியூஸ் மீ. தப்பா எடுத்துக்காதீங்கோ. டேய் மாமாவுக்கு ஸாரி கொடு.”

பையன், எனக்கு ‘ஸாரி கொடுக்கு முன்னதாகவே, ஒரு வேளை கொடுத்தாலும் கொடுத்து விடுவான் என்று பயந்து “பரவாயில்ல. ஸார். உண்மையைத்தான் சொல்றான். நான் நல்ல நிறமாத்தான் ஸார் வந்தேன். சப்பாத்தி பூசணிக்காய் சாப்பிட்டுச் சாப்பிட்டும் இந்த சம்மர் தாங்க முடியாமயும். கறுப்பாய் போயிட்டேன்.” என்றேன்.

பொடியன் விடவில்லை.

“இதுக்கு மேலே. நீங்க.. கறுப்பாக முடியாது. ஏன்னா…”

தந்தைக்காரர் அதட்ட, தமக்கை, அவன் காதைப் பிடித்துத் திருக, பத்து மாதம் சுமந்த மாமி, சிரித்துக் கொண்டே, பையனின் சமர்த்தில் பெருமிதப்பட, கறுப்பனான நான், வெள்ளை வெளேரென்ற தும்பைப்பூ நிறத்தாலான அரிசிச் சாதத்தை நினைத்து, சிரிப்பதுபோல, பாவனை செய்ய, அறிமுகங்கள் தொடங்கின. அவரும்- அதுதான் மிஸ்டர் வேங்கடராமனும், என் சித்தப்பாவும் கிளாஸ் மேட்டாம்! இந்தச் சங்கதி தெரிந்ததும், அவர் நீ நான்னு பேசத் தொடங்கி விட்டார். ஒரு சமயம் டா கூடப் போட்டதாக ஞாபகம். நான் கோபப்படவில்லை. அன்று வத்தல் குழம்போடு, நெய்யரிசிச் சோறும், உருளைக்கிழங்கு பொரியலும், தந்த அந்த உத்தமர், என்னை அட.. அற்பா என்றிருந்தாலும், செஞ்சோற்றுக் கடனுக்காக, செவிகளைக் கல்லாக்கி கொண்டிருப்பேன்.

கரோலபாக்கிலிருந்து அரிசிச் சோற்றுக்காக ஆர்.கே.புரம் அடிக்கடி போன தான், பின்னர் அந்தப் பையன், ரமேஷைப் பார்ப்பதற்காக மட்டுமே போனேன். அவனும், என்னுடன் ஒட்டிக் கொண்டான். ஒரிரு தடவை, கரோல்பாக்கிற்கு அவனை அழைத்து வந்தேன். “டாடி. மாமா.மெஸ்ல. சப்பாத்தியத் தின்னுட்டு. துப்பினேன்” என்று, அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு , மிஸ்ஸஸ் வேங்கடராமனிடம், என் சித்தப்பாவின் ‘கிளாஸ் மேட் காதைக் கடித்தார். இதற்கிடையே, எனது கடிதத் தூண்டலி ல் என்னுடைய சித்தப்பாவும், அவருக்கு வாழ்நாளிலே முதன் முதலாகக் கடிதம் போட்டார். நானும், என் பங்குக்கு பர்ஸாத்தி வெயிலின் வெங்கொடுமை சாக்காட்டைப் பற்றி, எவ்வளவு கொடுரமாகச் சொல்ல முடியுமோ, அவ்வளவு கொடுரமாகச் சொல்லி விட்டேன்.

நினைத்தது நடந்தது.

நான், கரோல் பாக்கிலிருந்து, ஆர்.கே.புரத்துக்கு அவர்கள் குவார்ட்டர்ஸ்-க்கே போய் விட்டேன். பிரத்தியோகமாக இருந்த ஒர் அறையைத் தந்தார்கள். வாடகையை அவர்கள் கேட்கவில்லை என்றாலும், நானாகக் கொடுத்தேன். எனக்கு வயிறோடு மானமும் இருந்ததால், நிரந்தரமாகச் சாப்பிட மறுத்து விட்டேன். விசேஷமான நாட்களில் மட்டும், அங்கே சாப்பாடு. வெங்கட்ராமத் தம்பதி ஆச்சாரமான இந்துக்கள். ஆகையால், ஒவ்வொரு மாதத்திலும், விசேஷ நாட்களின் எண்ணிக்கை, விசேஷமில்லாத நாட்களின் எண்ணிக்கையை விட அதிகம். மெஸ் பில் குறைந்தது. என்றாலும் நான் ரமேஷ-க்கு அன்பினாலும், நாட்களை கணக்கில் வைத்துக் கொண்டும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்தேன். இறுதியில் சாப்பாட்டுக் கணக்கு மறந்து, அன்புக் கணக்கு மட்டுமே எஞ்சி நின்றது.

ரமேஷ் பள்ளிக்கூடம் செல்லும் நேரம் தவிர, மீதி நேரம் என்னிடமே இருந்தான். என்னிடமே தூங்கினான். நான் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன். அவனை அறிமுகப்படுத்திய உத்திரசுவாமி கோயிலுக்கு அழைத்தப் போவேன். அங்கே, நானும் ஒரு குழந்தையாகி, அந்தக் குழந்தையோடு விளையாடுவேன். அந்தச் சின்னப் பையனின் பெரிய கேள்விகளுக்கு விடை கொடுக்க முடியாமல் திண்டாடிய நாட்களும் உண்டு. குழந்தைகளின் கேள்விகளுக்கு, விடை காண்போர் ஞானியாக மாறலாம் என்பது எவ்வளவு உண்மை! “முருகனுக்கு ஏன் வேல் இருக்கு? முருகனப். பாக்காட்டா வாழ முடியாதா மாமா? முருகனைக் கும்பிடாமல்….. இயேசு கிறிஸ்துவ…. நினைக்கிறவங்களும் நல்லா இருக்காங்களே. ஏன் மாமா? முருகன். உலகம் வரதுக்கு முன்பே. இருக்கான்னு சொல்றேளே அப்படின்னா. அவன். ஏன் பெரியவனா மாறாம. அப்படியே இருக்கான் மாமா? சின்னப் பையனா இருக்கிற முருகனப் போய் ஏன். அப்பா. அப்பான்னு கூப்பிடறேள் மாமா?”

ரமேஷின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே, நான் கந்த புராணத்தையும், அருணகிரி நாதரையும் படித்தேன். எனக்கு முருகனைத் தேடுவதை விட ரமேஷின் கேள்விகளுக்கு பதிலளித்து, அந்தப் பதிலில் அவன் திருப்தியுடன் சிரிப்பதைப் பார்ப்பதில் ஒர் திருப்தி.

ஆன்மிகம் போகட்டும். மெட்டிரியலினியத்திலும் இதே திருப்திதான். இந்த பூட்ஸ் வாணாம். என்று அம்மாவிடம் அடம் பிடிக்கும் ரமேஷ், இந்த மாமா. டோண் பி சில்லி. இந்த பூட்ஸ் இன்னும ஒரு மாதம் வரைக்கும் போடணும் என்றால், அவன் இரண்டு மாதம் வரைக்கும் போடுவான். பஸ்ஸில் போக மாட்டேன். டாடி ஸ்கூட்டர் லிப்ட் கொடுக்கணும் என்று அடம் பிடிப்பான். ரமேஷ்! என்னோட. நீ நடந்து வரணும். ஸ்கூல்ல விடறேன்’ என்றால் எத்தனை தடவையும் எத்தனை நாட்களும் நடப்பான். சாதம் வாணாம் போ’ என்பவனிடம், இந்த மாமா போனால், சாதம் அவன் வாய்க்குள் தானாகப் போகும்.

இதனால் அந்தக் குடும்பத்துக்கும், எனக்கும் பிரச்சினைகள் ஏற்படாமல் இல்லை.

ஒரு நாள் ரமேஷ் என்னிடம் அழுது கொண்டே வந்தான். “மம்மி. நீங்க. சாப்பிட்ட தட்டைக் கழுவலேன்னு டாடிக்கிட்ட திட்டறாங்க என்று, நான் கேட்காமலே சொன்னான். நான் திடுக்கிட்டேன். இருந்தாலும் அவனை, என்னால் பிரிய முடியாது என்பதால், அவன் அம்மாவின் அந்நியபாவத்தைத் தாங்கிக் கொண்டதோடு, சாப்பிட்ட தட்டையும், ஒரு தடவைக்கு இரு தடவையாவது கழுவினேன். என் செல்ல ரமேஷின், எச்சில் வாயையும், எந்தவிதப் பலனையும் எதிர்பார்க்காமல் கழுவுவேன்.

இன்னொரு நாளும், ரமேஷ் ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்தான். என் அறைக்குள் வந்து “மாமா. இந்த புக்க அக்காகிட்ட கொடுக்கப் போனேனா. மம்மி. இதை நன்னாப் பிரிச்சுப் பார்த்துட்டு. அதுகிட்ட கொடுக்குது” என்று நிர்மலமாகச் சொன்னான்.

நானும், மாமியின் செயலைப் பிரித்து பார்த்தேன். அவள், சந்தேகப்படுகிறாள். ஒரு தாய் என்ற முறையில், அதைக் குறை கூற நான் விரும்பவில்லை. அதே சமயத்தில், நான் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ரமேஷின் தமக்கை, பி.ஏ. ஹானர்ஸை முடித்துவிட்டு, ஐ.சி.ஆர்.ஐ.யில் ரிசர்ச் செய்கிறாள். என்றாலும், அவள் முகத்தில் தோன்றும் மாற்றங்களை ரிசர்ச் செய்துகூட கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு உணர்ச்சியே இல்லாதவளான அவளோடு, ஒரிரு முறையேதான் பேசியிருக்கிறேன். ஆனால், அடிக்கடி, தமிழ் வார பத்திரிகைகளை அவளிடம், அவளாகக் கேட்காமல், ரமேஷ் மூலம் கொடுப்பேன். இந்தக் கொடுக்கல் வாங்கல் தவிர, வேறு எந்தவித ‘வில்லங்கமும் இல்லை. நான் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யத் தெரியாதவன் என்பதோடு, எனக்கும் அவளைவிட அழகான ஓர் அத்தை மகள் காத்திருந்தாள். நான் யோக்கியன். ‘டெம்ப்ரரி காதலில் கூட இறங்கவில்லை. இருந்தாலும், மாமி சந்தேகப்படுகிறாள் என்றால் அது பெரிய விஷயம்.

எனக்கு, அந்த வீடு முள் வீடாகியது. எனினும் அந்த முட்களிடையே இருந்த என் ரமேஷ் ரோஜாவிற்காக, பொறுத்துக் கொண்டேன். ஒரு நாள் அவனிடமே, ‘அக்கா கிட்ட….. ஏதாவது மாமா. … சொல்லச் சொன்னானாடா… சமத்துக்கண்ணு. சொல்லுடா ரமேஷ்”என்றே மாமி கேட்டுவிட்டாளாம். ரமேஷ், இதை என்னிடம் சொன்னான்.

இதற்கு மேல் இருப்பதும் அநாகரிகம். இதுவரை, சென்னைக்கு மாற்றலாவதற்கு ரமேஷ் பொருட்டு, நான் இதுவரை எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது, நம்மால் பிரச்சினை வேண்டாம் என்று நினைத்து, ஒரு எம்.பி.யிடம் போய் எம்பினேன். சென்னைக்கு டிரான்ஸ்பர் கிடைத்தது. என்னைவிட மாமிதான் அதிக மகிழ்ச்சி அடைந்ததுபோல் தெரிந்தது. “வீட்டில் இருந்தவன் திடீரென்று போகிறானே” என்கிற ஆச்சரிய உணர்வைக் கூட காட்டாத ஆராய்ச்சி மகளின் முகபாவத்தை, விரக்தியாக என்னை பிரியப்போகிற அம்மாக்காரி நினைத்துக் கொண்டாள் போலும்!

சென்னைக்கு வந்த பிறகு, முதல் கடிதம் போட்டேன். இரண்டாவது கடிதம் போட்டேன். பதில் வரவில்லை. ‘கலங்காதே ரமேஷ்! மாமா ஒன்னை வந்து பார்ப்பேன்’ என்கிற என் கடித வாசகத்தில், ரமேஷ் என்ற வார்த்தையைச் சந்திரா என்கிற பரிபாஷை அர்த்தத்தில் எழுதியிருப்பதாக, மாமி அனர்த்தப்படுத்தியிருக்கலாம்: ஆகையால் நானும் கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

என்றாலும், இந்தப் பத்தாண்டு காலத்திலும், என் ரமேசை நான், எந்த நாளும் மறந்ததில்லை. என் மூத்த மகன், அப்பா. ஒங்களுக்கு. ரமேஷ்தான் ஒசத்தி. நான் ஒன்கு வேணாம்’ என்று அம்மா அடிக்கடி சொல்வதை ஒப்பிக்கும் போது நான் பெருமிதப்படுவேன்.

ரயில் ஆக்ராவுக்கு வந்துவிட்டது. ரமேஷைப் பார்க்கப் போகிறோம், என்ற எதிர்பார்ப்பு ஒரு பைத்தியமாகி, என்னை அங்கேயே உள்ள கீழ்ப்பாக்கம் டைப் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய அளவுக்கு ஆவல் தாங்காமல் ஆடினேன். “ரமேஷ் இன்னைக்கு. ஸ்கூலுக்கு போகாதடா. மாமா. மாமா வாரேண்டா என் வாடாத பூவே. வற்றாத. அருவியே. இருடா. இருடா. இதோ.. இதோ வர்ரேண்டா…”

டில்லிக்கு வந்ததும், அவசரமாக ரயிலிருந்து இறங்கி, ஒரு ஸ்கூட்டரை (தில்லியில் ஸ்கூட்டர் என்றால் ஆட்டோ ரிக்ஷா) பிடித்துக் கொண்டு, கனாட்பிளேஸில் ஓர் ஒட்டலி ல் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு, முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு, வெயிட்டிங்கில் நின்ற அதே ஸ்கூட்டரில் ஏறி, ஆர்.கே.புரம் போனேன். பழைய குவார்ட்டர்சில் அவர்களுக்குப் பதிலாக ஒரு சர்தார்ஜி! துடித்துப் போன என்னிடம் சர்தார்ஜி, அவர்களின் முகவரியைக் கொடுத்தார். அதே ஆர்.கே.புரத்தில் தான் இருக்கிறார்கள். ஸ்கூட்டரை அறுபது கிலோ மீட்டருக்குக் கொண்டு போன டிரைவரை மேலும் விரட்டினான்.

மிஸ்டர். வேங்கடராமன், ஆபிஸ் போய் விட்டார். மாமி மட்டும் இருந்தாள். சொந்த மகனைப் போல், என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். “எங்கள. மறக்கலிய. மறக்கலிய” என்று குரல் தழுதழுக்கச் சொன்னாள். பின்பு அன்போடு பேசினாள். அவள் மகளான ஆராய்ச்சிக் காரிக்கு, நான் எதிர்பார்த்தது போல், திருமணமாகி, குழந்தைகளும் உற்பத்தியாகி விட்டதாம். ஆகையால் இப்போது, மாமியால், என் மீது வைத்திருக்கும் அன்பை, பயமில்லாமல் காட்ட முடிந்தது.

ஆனால் என் கண்கள் மாமியிடம் இல்லை. காதுகள், அவள் பேசுவதைக் கேட்கவில்லை. ரமேஷ். என் ரமேஷ். எங்கே. எங்கே..?

“மாமி. ரமேஷ். நல்லா இருக்கானா? எங்க போயிருக்கான்? எப்ப வருவான்?”

“டென்னிஸ் ஆடப் போயிருக்கான். இப்போ வர்ர நேரந்தான்.”

ஒவ்வொரு வினாடியும் இனிய எதிர்பார்ப்புடன் கழிய, நான் வாசலிலேயே விழிகளை விட்டு வைத்தேன்.

ரமேஷ் வந்தான். சைட் பர்ன். பாகவதர் கிராப். தொளதொள பேண்ட். லூஸ் சட்டை. கையில் ஒரு சர்தார் ஜி காப்பு. ஆஜானுபாகுவான தோற்றம்: குறுந்தாடி. தொங்கு மீசை…

ரமேஷ் பெரியவனாயிருப்பான் என்பதை நான் எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் இவன், என் ரமேஷ் மாதிரி தோன்றவில்லை. என் பத்து வயது ரமேஷ், என்னைப் பார்த்ததும் முகம் மலர் வானே, அந்த மலர்ச்சியை, ரோமங்களும் தாடி மீசைகளுக்குமிடையே இருந்த இந்த ரமேஷின் முகத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. என் ரோஜா ரமேஷின் உதடுகளில் தவழுமே புன்னகை, அதை, சிகரெட் குடிப்பதாலோ என்னவோ கறுத்துப் போயிருந்த இந்த உதடுகளில் காண முடியவில்லை.

இருந்தாலும், என்னைப் பாசம் விடவில்லை. ரமேஷ்’ என்று சொல்லிக் கொண்டே, அவனைப் பழைய ரமேஷாகப் பாவித்துக் கொண்டே கண்ணiர் மல்க, கட்டியணைக்க எழுந்தேன். அப்போது எதேச்சையாக நகர்ந்த ரமேஷ், “இது யாரு மம்மி?” என்றான்.

மம்மியான மாமி விளக்கினாள்:

“நான் அடிக்கடி சொல்வேனே….. அங்கிள்… சுப்ரமணியன். அது இவர்தாண்டா. ஒன்னை எடுத்து வளர்த்தவருடா. ஒனக்கு. அவருன்னா. உயிருடா. அடையாளம் தெரியலையா?”

ரமேஷ், சிறிது யோசித்தான். பின்னர், “யெஸ். ஐ. குட் ரிகலெக்ட். ஷேடோ மாதிரி தெரியுது. ஹெள டுயூடு அங்கிள்” என்று சொல்லிக் கொண்டே என் கையைப் பிடித்துக் குலுக்கினான். பிறகு, “மம்மி. நான் லைப்ரரி வரைக்கும் போயிட்டு வரேன். ஒரு சேஸ் நாவல் வாங்கிட்டு வரணும். ஓ.கே. அங்கிள். பை. பை” என்று சொல்லிக் கொண்டே போய்விட்டான்.

நான், அவன் போவதையே வெறித்துப் பார்த்தேன். அமங்கலமாகச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். என் ரமேஷ், என் பத்து வயது இனிய ரமேஷ் – காணாமல் போய்விட்டான். நிஜமாகவே நிழலாகி விட்டான். அந்தக், குழந்தை பெரியவனாகி விட்டது நியாயம். பெரியவனான நான், குழந்தையானதுதான் தப்பு. மகாத்தப்பு!

மாமி காப்பியுடன் வந்தாள்.

“இந்த குவார்ட்டர்ஸ் நல்லா இருக்கா தம்பி? நீ இருக்கையில. சின்ன குவார்ட்டர்ஸ். இது பியூட்டிஃபுள். இஸ் இட் நாட்?”

நான் அர்த்தத்தோடு சொன்னேன்.

“ஆமாம் மாமி. முன்னே இருந்ததைவிட. இது பெரிய குவார்ட்டர்ஸ். ஆனால் எனக்கென்னமோ.. அதான் பிடிக்குது. குவார்ட்டர்ஸ் பெரிசானதால. எனக்குத் தலையும் புரியல… வாலும் புரியல… உங்களுக்குத் தெரியாதா, “ஸ்மால் இஸ் பியூட்டிபுள்.”

அன்று முழுக்க, அங்கேயே இருக்க நினைத்த நான், மாமியின் அன்பான வற்புறுத்தலையும் பொருட்படுத்தாது, ஏதோ சாக்கு போக்குச் சொல்லி, வெளியே வந்தேன். முன்பு அரிசிச் சோற்றுக்காக, எந்த வேகத்தில் எந்த ஆற்றாமையில் நடந்தேனோ, அதே வேகத்தில் அதே ஆற்றாமையில் நடந்தேன். ஆனால் இப்போது ஏமாற்றம் என் கால்களுக்கு நங்கூரம் பாய்ச்சுவது போலிருந்தது.

இந்த ஏமாற்றம் தாளமுடியாமல் முறையிடுவதற்கோ அல்லது முட்டிக்கொள்வதற்கோ, உத்திரசுவாமி மலைக்கு வேகமாகப் போனேன். ஒருவித உரிமைக் கோபத்தோடு படியேறினேன். பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அதர விரிப்புடன், அந்தச் சிரிப்பின் சக்தியுடன், சித்தி காட்டும் முக்தியுடன், முத்தி காட்டும் மோனத்துடன் முருகன் சிலை காட்சி தருகிறது.

“முருகன். உலகம் வரதுக்கு முன்னேயே. இருக்கான்னு சொல்றேளே, அப்படின்னா…. அவன் ஏன் பெரியவனாகாமல் அப்படியே இருக்கான் மாமா?” என்று அன்று ஒர் ஊனக்குழந்தை கேட்ட கேள்விக்கு, இன்று விடை கிடைத்த ஞானப்பரவசத்தால், கும்பிடக்கூட மறந்தவனாய், நிற்கிறேன்.

– தீபாவளி மலர் கல்கி1978

– ஆகாயமும் பூமியுமாய் (சிறுகதைத் தொகுப்பு), முதல் பதிப்பு: டிசம்பர் 1999, ஏகலைவன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *