வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 3,637 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம்-4

நீண்ட நேரம் கண்களை மூடியவனாய்க் கிடந்த பாரதி எப்போது உறக்கம் கொண்டாளோ, அவளுக்கே தெரியாது. டில்லியில் முதன் முதலாக நாராயணனைப் பார்த்த சம்பவத்திலிருந்து கல்யாணம் முடிந்து பாலக்காட்டுக்கு வந்த நிகழ்ச்சி வரை எல்லாமே அவளுடைய மார்பைத் தாக்கின. திருமணம் ஆவதற்கு முன் அவள் தன் எதிர்காலம் பற்றி எந்தக் கனவையும் கண்டவள் அல்ல. தானும் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அம்மாவைப்போல, பாட்டியைப் போல, அவளுக்கும் முன்னால் தோன்றியவர்களைப் போல தாம்பத்திய வாழ்க்கையில் இறங்கப் போகிறவள் தான் என்ற எண்ணம் எப்போதாவது லேசாக மனத்தல் இழை ஓடும். ஆனால் திடீரென்று ஒரு அதிதீவிர வேகத்துடன் எதிர்பாரா விபத்து நிகழ்வது போல தாம்பத்திய வாழ்க்கை தொடங்கி விட்டது. இந்தப் பாதை ஆரம்பித்தது. ஆரம்பித்ததுதான் திரும்பிச் செல்லவோ, வேறு திசையில் செல்லவோ வழி இல்லை. அத்தை தங்கம்மா, தான் ஒரு முன் உதாரணம் என்று சொல்லி அவளைத் தேற்றப் பார்க்கிறாள். புகுந்த இடத்தில் அனுசரித்துக் கொண்டு போகும் மனப்பக்குவம் இருந்து விட்டால் தன்னைப் போல பாரதியும் நாளடைவில் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று உபதேசமும் செய்கிறாள். மகிழ்ச்சி என்றால் என்ன? கலகலப்பாகச் சிரித்துப் பேசி, உறங்கினால், மகிழ்ச்சியாகிவிடுமா? கணவனுடைய உள்ளார்ந்த அன்பிலும், அரவணைப்பிலும் இருந்து விட்டால் அது தாம்பத்திய சுகமாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்று சொல்ல முடியுமா? அவளுக்குக் கிராமம் சுற்றுப்புறம் எல்லாமே மனத்துக்கு ஒவ்வாததாக இருக்கிறது. பேச்சின் பாணியும் ஓசையும் சிற்சில வார்த்தைகளும் நாராசமாக ஒலிக்கின்றன. டில்லியில் அவளுடைய உணவு வகைகளே வேறு விதமாக அமைந்திருந்தன. சின்னஞ்சிறு வயதிலிருந்தே தண்டூரி, பரோட்டா, நான், பேல்பூரி, புல்கா போன்றவைகளுக்குப் பழக்கப்பட்டவள். அங்கே ருசி பார்த்த சப்ஜி, தைத்தா, ஸாலடுகளுக்கும் இங்கே அனுபவிக்கப் போகிற தோரன், அவியல் பச்சடிகளுக்கும்தான் எத்தனை வேற்றுமைகள்! அவளுடைய அம்மா தயார் செய்யும் மோர்க் குழம்பு மற்றும் சாம்பாரையே அவள் விரும்ப மாட்டாள். 

அவள் இப்போது, இதுவரை சுற்பனையிலும் பார்த்து அறியாததோர் புது உலகினுன் பிரவேசித்திருக்கிறாளா அல்லது புகுந்தவீடு எனும் மாபெரும் சிறைக்குள் தள்ளப் பட்டிருக்கிறாளா? சங்கிலித் தொடர்ச்சிந்தனையில் மனம் வலிக்க உடலும் சோர்வுற்றது. அவளுடைய கண்கள் தாமாக நித்திரைக்கு அழைத்துச் சென்றன. 

பாரதி தீடீரென்று கண் விழித்தாள். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. ஜூன் முதல் கேரல மழை வாரத்தில்தான் தென்மேற்குப் பருவக் காற்றின் போது துவங்கும் என்று படித்திருந்தாள். ஏப்ரல் முதல் வாரத்தில் எப்படி மழை பெய்ய முடியும்? 

மெல்ல எழுந்தாள். படுக்கை அறை விளக்கின் வெளிச்சத்தில் ஒரே ஓர் உண்மைதான் புரிந்தது, கணவன் நாராயணன் அறையில் இல்லை. விளக்கைப் போட்டாள். மெத்தையும் தலையணையும் உபயோகப்படுத்தப்படாமல் இருப்பதைக் கண்டாள், நாராயணன் இரவு முழுதுமாத தூங்காமல் இருந்திருக்கிறான்? மேஜை மீது ஒரு அலாரம் இருந்தது. அது மணி ஐந்தேகால் என்று அறிவிந்தது. எட்டு மணிக்கு முன்னால் எழுந்து அறியாதவள் எப்படி இப்போதே விழித்துக்கொண்டுவிட்டாள்? 

இப்போது என்ன செய்ய? கீழே நிசப்தமாக இருந்தது. எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்களோ? அவளுக்குத் தூங்கி எழுந்ததும் பல்துலக்கின் கையோடு காப்பி குடித்தாக வேண்டும். புகுந்த வீட்டுச் சமையல் அறைக்குள் புகுந்த மறுநாளே எப்படிச் சுதந்திரமாய் புக முடியும்? 

உடனடியாகக் காப்பி கிடைக்கிறதோ இல்லையோ பல்லாவது தேய்க்கலாம் என்ற எண்ணத்துடன் மெல்ல ஒலி எழுப்பக்கூடாது என்ற அச்சத்துடன் மாடிப் படிகளில் இறங்கினாள். படிகள் மரத்தில் செய்யப்பட்ட அகலமில்லாத பலகைகள். ஊன்றிக் கொள்ள இருபுறமும் வயதானவர்களுக்குச் சிரமமில்லாயல் இருக்க, ஒரு பக்கத்தில் நீண்ட கனமான கயிறு ஓடியது. கடைசிப் படியில் அவள் கால் வைக்கவும் வலப்புற ரேழியிலிருந்து ஈசுவரன் கூடத்துக்குள் பிரவேசிக்கவும் சரியாக இருந்தது. 

ஒரு சில கணங்கள் பாரதி திடுக்கிட்டு நின்றாள். 

“பொண்ணே. நந்நாத் தூங்கினியா…? போய்ப் பல்லைத் தேய்ச்சுட்டு வா… தங்கம் காப்பி தருவள்… தங்கம், தங்கம்… பாரதி எழுந்திருந்தாச்சு. காப்பி கலந்து கொடு”. 

பாரதி மெளனமாய் நடநதாள். 

ஊஞ்சலில் அமர்ந்தபடி மாமனாரின் தந்தை நாணுப்பாட்டா நாமம் மின்னும் நெற்றியுடன் இருகைகளையும் கட்டி, விஷ்ணு சகஸ்ர நாமத்தை மெல்லிய கு குரலில் அவளுக்கு விநோதமாகப் பட்ட ராகத்தில் உச்சரித்துக் கொண்டிருந்தார். ஊஞ்சலைத் தாண்டி நடந்தபோது இடப் பக்க முற்றத்துத் தூண் ஒன்றில் சாய்ந்தவளாய்ப் பாட்டி ஒரு புத்தகத்தில் மூழ்கி இருந்தாள். வட்ட வடிவமான முக்குக் கண்ணாடி மூக்குப் பள்ளக் தாக்கிலிருந்து வழுவியிருந்தது. 

குளியல் அறையில் பல் தேய்க்கையில் ஒரு பசுவின் தாபம் ஒலிக்கும் குரல் கேட்டது. மறுகணமே சமையலறை யிலிருந்து தங்கம்மா, “எந்தா தாட்சாயணி! தொழுத்துப் பெரையிலே, இனியும் பருத்திக் கொட்டை அரச்சுக் கொடுத்தில்லே! மாடு கரையுன்னு. வேகம் தீனி இடு!” என்று கத்தினாள். 

பாரதி இன்னும் தொழுவம் பக்கம் போனதில்லை. சமயம் கிடைக்கும்போது வீட்டின் எல்லாப் பகுதிகளையும் அவள் பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். பல் தேய்த்து விட்டு வெளியே வருகையில் ஒரு கேள்வி திடீரென்று எழுந்தது. சமையல் வேலையை யார் செய்கிறார்கள்? தங்கம்மா தனித்துச் செய்கிறாளா?. அல்லது சமையற்காரி உண்டா? இவ்வளவு பெரிய பணக்கார வீட்டில் ஒரு சமையற்காரி இல்லை என்றால் வீட்டின் மதிப்புக்குக் குறையாக இருக்குமே? 

தயங்கித் தயங்கி பாரதி சமையலறை வாயிலில் நின்றாள். 

“வா பாரதி…நன்னாத் தூங்கினாயா?” 

“தூங்கினேன் அத்தே”

“நாராயணன் ஐலண்ட்ல போறதாச் சொல்லிட்டு, இன்னும் முன்னாலேயே கொச்சி எக்ஸ்பிரஸைப் பிடிக்கறேன்னு போனான்” 

பாரதி கேட்டுக் கொண்டாள். 

“உனக்கு காப்பி எப்படி இருக்கணும்? பஸ்ட் டிகாக்ஷன்ல ஸ்ட்ராங்காவா. இல்லே ரெண்டாவது டிகாக்ஷனும் கலந்து லைட்டாவா? பஞ்சாரை… அதான் சர்க்கரை-அதிசுமா இல்லே குறைச்சலா?” 

“நீங்க சிரமப்படாதீங்க அத்தை . நானே கலந்து கொள்றேன்” 

“இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்கோ பாரதி, நாளையிலிருந்து நாம ரெண்டு பேரும் நானே இந்தக் கிச்சன்ல சாம்ராஜ்யம் நடத்தப் போறோம்!” 

‘”எனக்கு ஸ்டராங்கா, சர்க்கரை குறைச்சலா சூடா இருக்கணும், அத்தே!” 

“அப்படிச் சொல்து. நாராயணன் பாதி நாள் சாயை அதான் டீ குடிப்பன். காப்பியில அதிக இஷ்டமில்லை.”

பாரதி ஒன்றும் கூறவில்லை. 

“சுசிலா உனக்குச் சமையல் எல்லாம் கத்துக் கொடுக்கலே, இல்லியா?” 

“நான் கத்துக்கலே அத்தே.”

“அதுக்கு இப்ப ஏன் வருத்தப்படறே, பாரதி? நான் செய்யறப்ப கூடமாட மெல்ல மெல்ல நீயே கத்தப்பே. முன்னொரு காலத்தில நானும் உன்னை மாதிரித் திருதிகுன்னு முழிச்சுண்டு நின்னவதானே? என் மாமியாருக்கு ஒத்தாசையா மொதல்ல இருந்தேன். அப்புறம் ஒவ்வொண்ணாக் கத்துண்டேன். குழந்தையும் தவழும்…இந்தா காப்பி… தவழற குழந்தையு முட்டுக் கொந்தத் தொடங்கும்.. சூடா இருக்கா… அப்புறம் களத்தைப் பிடிச்சுண்டு விழுந்து. எழுத்து நடக்கும்.. சர்க்கரை சரியா இருக்கா பாரு… அப்புறம் என்ன? குழந்தை நம்ப கைக்கும் அடங்காம ஓட ஆரம்பிக்கும்” 

“காப்பி நன்னாயிருக்கு” 

“மாமனாருக்குக் கோபமே வராது. ஆனா அவரோட காப்பி மட்டும் சரியா இல்லைன்னா எரிஞ்சு விழுவார். சின்ன வயசிலே காப்பியை முற்றத்திலே கொட்டவும் கொட்டியிருக்காராம். மாமியார் சொல்லுவா”

“உங்க பிள்ளைக்கும் கோபம் வராது போலிருக்கு”

“வராது, வந்துட்டா தாங்க முடியாது. சில இடங்கள்ளே பகையே உண்டாயிருக்கு.” 

“அத்தே!” 

“என்ன சொல்லு” 

“அம்மாவும் அப்பாவும் இன்னிக்கு ஊர் திரும்பறா அதனாலே….” 

“அதனாலே? உனக்கும் அவர்கூடப் போய்க் கொஞ்ச நாள் இருக்கணுமா?” 

“அது இல்லே அத்தே” 

“பின்னே என்ன சொல்லேன்.”

“அம்மா அப்பா போகிற வரைக்கும் நான் அவா கூட இருக்கலாமா?” 

“இதை எண்ட பாரதி இப்படித் தயங்கித் தயங்கிப் பயந்து பயந்து கேட்கிறே? குளிச்சு சுவாமி படங்களுக்கு. நமஸ்காரம் பண்ணிட்டுப் போ. இன்னிக்கு எல்லாருக்கும். சகஸ்ரம் வீட்ல்தான் சாப்பாடு மலையாளச்சிக்கு அதான் வேலைக்காரி, தாட்சாயணிக்கு மாத்திரம்தான் சாதம் வடிக்கப் போறேன்.”

“ரொம்ப தாங்க்ஸ். அத்தே”. 

தங்கம்மா என்னதாள் அப்பாவின் தங்கை என்றாலும் அவள் மீது தாளமுடியாத எரிச்சலும், ஆத்திரமும் உண்டாயின. தன்னுடைய இந்தத் திடீர்த் தாம்பத்தியப் பிரவேசத்துக்கு அவள்தான் மூல காரணம். பிறந்த அன்றே அவளைத் தன் மருமகளா வரித்து விட்டாளாம்! அவளுடைய குறுக்கீடு மட்டும் இல்லாமலிருந்தால் அவள் இந்த நாலாந்தர ஊருக்கு வந்திருக்கவே மாட்டாள். அப்பாவிடம் பிடிவாதம் பிடித்து, புரண்டு அழுது: டில்லியிலேயே தன் படிப்பைத் தொடர்ந்திருப்பாள். திடீரென்று தானும் ஒரு வகையில் இந்தப் பொறியில் மாட்டிக் கொள்ளக் காரணம் என்று மனம் உறுத்தியது. அப்பா மீது சிறுவயதிலிருந்தே உள்ள அன்பும் மதிப்பும் ஒரு காரணம். நாராயணனின் தாராள மனப்பான்மை றந்த பேச்சு. தன்னைத் திருமணம் செய்து கொண் டால்’ பாரதி சுகப்படமாட்டாள் என்று சொன்ன பண்பு இவையெல்லாம் அவளுடைய மனத்தைத் திடீரென மா ற்றியது. யானை தன் தலையில் தானே வாரிப் போட்டுக் கொண்டு விட்டதா? 

இந்தச் சிறிய நகரத்தில் ஒரு சிறியதோர் அக்ரஹாரக் கும்பலில் அவளால் நீண்ட நாள் தள்ள முடியாது எப்படி விடுதலை பெறுவது? பி.எச்.டி. படிக்கக் கேரளத்தில் இருக்கும் இரு சர்வகலாசாலைகளைப் பற்றி ஈசுவரன் குறிப்பிட்டார். கொச்சி பெரிய நகரம். கோழிக்கோடும். அப்படித்தான் இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முதலில் விடுதலை கிடைத்தாற் போதும், அதன் பிறகு வாழ்க்கையின் திசையை எப்படி மாற்றிக் கொள்வது என்று தீர்மானிப்பாள். 

அவளுடைய மேற்படிப்புக்கு மாமனாரும் அத்தையும் அங்கீகாரம் கொடுத்தால் போதுமா? நாராயணன் என்ன சொல்லுவான்? அவனுடைய முடிவு எத்தகையதாக இருக்கும? அனுமதி மறுத்தால்? எதிர்ப்பதா? எதிர்த்தால், விளைவுகள்? சிந்தனையினூடே அவள் சகஸ்ரம் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் கொஞ்ச நாட்களுக்குத் தன் சுயரூபத்தை மறைத்துக் கொள்ளவேண்டும். விட்டெறிந்து பேசும் சுபாவத்தை அடக்கிக் கொள்ள வேண்டும். தன் மனத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பிறர் அறியாமலிருக்க அவள் நடித்தே ஆகவேண்டும். இனிமேல் நடிப்பு, நடிப்பு நடிப்புதான். 

ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி! டில்லி வாழ்க்கை இவைதான் இனி அவளுடைய குறிக்கோள்கள்! 

சாஸ்ரத்தின் வீட்டிலுள் அவள் பிரவேசித்தபோது மணி ஏழு. 

சகஸ்ரம் ஊஞ்சலில் உட்கார்ந்து ஒரு கையால் சங்கிலியைப் பிடித்தவனாய் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி ராஜியும், அம்மாவும் ஒரு சோபாவில் உட்கார்ந்திருக்க, இன்னொன்றில் அப்பா அமர்ந்திருந்தார். 

பாரதியின் உருவம் தெரிந்த உடனேயே உரை சட்டென்று நின்றது. 

“வாம்மா பாரதி!” என்ற என்ற ராஜி, “ஒன் சின்ன மாமனார் இந்த பாலக்காட்டோடு ஹிஸ்டரியைச் சொல்லிக் கொண்டிருந்தார், இரு காப்பி கொண்டு வரேன்” என்றாள். 

“வேண்டாம் சித்தி. காப்பி குடிச்சாச்சு” 

”உன் சித்தப்பா கார்த்தாலே ஒன்பது மணிக்குள்ளே அரை அரைக் கிளாஸா நாலு பிராவசியம் காப்பி குடிப்பார்”. 

“இன்னம் ரெண்டாம் காப்பி வரலை ஓறமை இருக்கா ராஜி? உட்காரு.. பாரதி! ஒறமைன்னா ஞாபகம்னு அர்த்தம்”

“எல்லார்க்குமே கொண்டு வரேன்” 

ராஜி உள்ளே சென்றாள். 

“பாலக்காட்டைப் பத்தி நான் என்னென்னமோ நெனைச்சுப் பயந்து போயிகுந்தேன். பாரதி இவர் இப்ப சொன்ன சரித்திரத்திலிருந்து ஒரு பெரிய உண்மை இன்னிக்குத்தான் தெரிஞ்சுது” என்றாள் சுசீலா. 

“இன்னொரு வாட்டி சொல்லு சகஸ்ரம்… என் பொண்ணுக்கும் பயம் தெளியட்டும்…” என்றார் மௌலி.

“மின்னால காப்பி வரட்டும்” என்றான் சகஸ்ரம்.

காப்பி வந்தது. சகஸ்ரம் சொட்டுச் சொட்டாக ருசித்தான்.

மில்டன், ஷென்லி, கீட்ஸ்களில் ஈடுபாடு உள்ள பாரதிக்குச் சரித்திரத்தின் இடிந்து போனகோட்டைகளில் அக்கறை இல்லை. இருப்பினும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து காது கொடுத்தாள். 

“ஐந்நூறு அறநூறு வர்ஷத்துக்கு மேல இருக்கும்” என்று துவங்கிய சகஸ்ரம், எல்லோரையும் ஒரு முறை கண் சுழற்றிப் பார்த்தான். பாரதியின் கணகளில் ஆர்வம் மின்னுவதாகத் தோன்றியது அவனுக்கு.

‘”அப்ப ஒரு ராஜா, சேகரவர்மன்னு பேரு அவன் சும்மா காட்ல வேட்ட ஆடிக்கொண்டிருக்கப்படாதா? அவனோட கண்ணுக்கு ரூப சுந்தரியாகத் தெரித்து ஒரு மலைஜாதிப் பெண்ணை மோகிச்சான். அவளுக்கும் மோகம், கல்யாணம் கழிச்சுக்கணுமே? நம்பூதிரிப் பண்டிதம்மார் சரின்னு சொல்லணுமே? அவா ஒத்தைக் கால்ல நின்று படாதுன்னா. ராஜபரம்பரை நாகமாகப் படாதுன்னா.. ஆனா ஆனா ராஜா சேக்கலை. அவனைக் கழிச் சுண்டான். அவள் ராணியா வந்ததும் மொதக் காரியமா தன்னை ஏசிப் பேசின நம்பூதிரிகளையெல்லாம் துரத்தி அடிச்சா. இப்பவும் பாருங்கோ நம்பூதிரிகளோட இல்லங்கள் பாலக்காட்ல இல்லே. 

“நம்பூதிரிகள போயிட்டா. என்ன சேயறது? ராணிக்கு பக்தி அதிகம். பூஜை புனஸ்காரமெல்லாம் உண்டு. ராஜாவுக்கும் வேத சாஸ்திர பண்டிதர்கள் இருந்தாகணும்னு நோணித்து என்ன சேதான் தெரியுமா? கும்பகோணம், மாயவரம் மாதிரி உள்ள ஊர்கள்ளேந்து வேதம் படிச்ச பிராமணர்களை வரவழைச்சான். நிலம் கொடுத்தான். வீடு கொடுத்தான். வந்தவா ஒரு அக்ரஹாரத்தை உண்டாக்கினா.ராஜா சேகரவர்மா பேர்ல மின்னு மின்னால் மொளைச்ச அக்ரஹாரம், அதான் சேகரிபுரம் அப்புறம் என்ன? மெள்ள மெள்ள திருச்சி, தஞ்சாவூர்வ இருந்து ஷீணிச்சுப் போனவாளும் வியாபாரம் செய்ஞ்சு நாலு காசு சம்பாதிச்சுப் பொழைக்கவாங்கற ஆசை உள்ளவாளும், குடும்பம் குடும்பமா முட்டை முடிச்சோட வரத் தொடங்கினா. 

கோயமுத்தூர் வழியா வர சாத்தியமில்லை. வாளையார்க்காடு தடுத்தது. பயங்கரமானகாடு.அதனால் திண்டுக்கல், பழனி,பொள்ளாச்சி,வழியா வந்தா. கூடவே செட்டிமார்களும் சட்டிபானை உண்டாக்கிற குசவன் மார்களும் வரத் தொடங்கினா, வர்ற குடும்பங்கள் வழியியிலே சின்னச் சின்ன அக்ரஹாரங்களை அமைச்சுண்டுது. அதாவது சித்தூர், நெம்மாளை, அய்யலூர் ஆலத்தூர், பெருங்குளம்னு நிறைய கிராமங்கள். ஹிஸ்டரியைப் படிச்சா இன்னும் ஒன்ணு தெரியும்- விஜயநகர சாம்ராஜ்யம் அழிஞ்சு பாமினி சுல்தான்கள் வந்தப்ப வட ஆர்க்காடு, காஞ்சிபுரம் போல உள்ள ஊர்கள்ளேந்தும் பிராமணாள் வரத் தொடங்கினா. 

“பாலக்காட்ல மின்னால தொண்ணூத்தாறுபிராமண கிராமங்கள் இருந்தது. கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன மாதிரி இப்ப பதினெட்டுத்தான் இருக்கு. எல்லா கிராமங்களையும் நீங்கச் சுத்திப் பார்த்தா ஒரு விசேஷம் தெரியும். தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை ஜில்லாக்கள்ளே தங்களோட கிராமங்கள்ள இருந்தப்ப என்ன இஷ்ட தெய்வம் இருக்கிறதோ அதே தெய்வத்தைத்தான் இங்கேயும் பிரதிஷ்டை பண்ணிக் கோயில் கட்டினர். வைத்தீஸ்வரன் கோயில்லேந்து வந்தவா இப்ப இருக்கிற கிராமம் தாய் வைத்தியநர்கள் குமரபுரத்தில்…ன்பதியான் சொக்கநாதபுரத்தில் மீனாகிரி வந்தரேசுவரர், ப்ரத்தி நூரணி திருநல்லாய், வட்சுளின்தூசு, கோலித்து ராஜபுரம், எங்க ஊகு பள்ளிபுரம் எல்லாமே பதினெட்ல அடங்கும். தமிழ் நாட்ல இல்லாத இன்னொரு மகாப் பெரிய விாேஷம் என்ன தெரியுமா? இங்கே ஊாரியும் ஹரனும் ஒண்ணுதான். தாங்க நாமம் போடறவர். இது மாதிரி எத்தனையோ கிராமதுகள்ளே நாமம் போடறலா உண்டு. சேகரிபுரத்தில் சந்தனக் அல்பாத்தி சந்தனக் கீத்து. குமரபுரம் சாத்தப்புரத்தில லியூதி. ஆனாஎங்களுக்குள்பே அய்யர் அய்யங்காரங்சுற வித்தியாசம் இல்லை. என்ன சொல்றாய் மெளலி? நீ நங்கபுரம், விபூதி, ஒன் தங்கை அதான் என் மன்னி தங்கம்மாவும் இதோ என் பொண் பாரதியும் இந்த ஊர்ப் பொண்களா வத்திருக்கா. 

“ஒரு சரித்திர ஆராய்ச்சிக்காரன் எழுதியிருக்கான், இருநூறு வர்ஷத்துக்கு மின்னாவே பேருக்குப் பின்னாலே அய்யர்.அய்யங்கார்ஞு போட்டுக்கலையாம். இன்னைக்கும் ஸ்ரீனிவாச சர்மா, ஸ்ரீனிவாச தீக்ஷித் அப்படின்னெல் லாம் வைஷ்ணவாளோட பேர் இருக்கு. வேனும்னா ஸ்ரீரங்கம் போய்ப்பாடு. 

மௌலி சிரித்தார். 

“வேதம் சொல்றதுக்குன்னு சொல்றதுக்குன்னு வந்தவங்க எப்படியெல்லாம் ஆயிட்டாங்க சகஸ்ரம்” 

“ஆரு சொன்னா இப்ப வேத கோஷம் இல்லைன்னு? கல்பாத்திக்குப் போய்ப் பாரு அங்கே வேத பாராய ணத்தை மாசக்கணக்கா நடத்திப்புட்டு கிராமம் கிராமமா வேதம் சொல்றலா போவா.” 

“நிறையப் பேர் வியாபாரம் செய்யறாங்க:” 

“என்ன தப்புர் தஞ்சாவூர்லேந்து எல்லா தரப்பட்ட மனுஷாளும் வந்தா. அவா அவா தங்களுக்கு ஏத்தபடி நடந்து கொண்டா. ஏன் கொண்டா. ஏன் மத்ததை மறந்துட்டாய்? சகஸ்ரம்? பெரிய பெரிய வக்கீல்கள், ஜட்ஜுகள், சங்கீத வித்வான்களெல்லாம் இந்தப் பாலக்காட்ல பொறந் திருக்கா. ஒரு செம்பையையும் ஒரு மணியையும் ஆர் தந்தா? இன்னும் சொல்றதானா, தஞ்சாவூருக்கும் பாலக் காட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் ஒண்ணும் இல்லை, இங்கே நிலைச்சுப் போனதால நாங்க பேசற தமிழ் மலையாள வாசனையோட ஒலிக்கிறது. முக்காலே மூணு வீசம் பேருக்குத் தமிழ் எழுதவும் பேசவும் தெரியும். இந்த ஊருக்கு வராத தமிழ்ப் பத்திரிகை இல்லை. 

“பாலக்காடு மகாத்மியம் கேட்க நன்னாத்தான் இருக்கு. ஆனா இப்பவும் பெண்கள் வீட்டோடயே அடைஞ்சு கிடக்கறதாப் படறது” என்றாள் சுசீலா. 

“தப்பு. இப்பவெல்லாம் பொண்கள் கோலேஜுக்குப் போதா. கிட்டக்கேயே மெர்ஸி கோலேஜ் இருக்கு.”

ராஜி, “வா பாரதி! நாம உள்ளே போவோம். உன் சித்தப்பாவுக்கு ஆரம்பிக்கத் தெரியும். முடிக்கத் தெரியாது!” என்றாள். 

எல்லாரும் சிரித்தார்கள். சகஸ்ரமும் சிரிப்பில் கலந்து கொண்டு, ‘மூணாம் காப்பியின் வேளை தாண்டியாச்சு” என்றான். 

மாடியில் அம்மாவுடன் தனியாக இருக்கும் வாய்ப்பு பிறந்தது. பெண்ணின் கண்கள் கனத்துக் கிடப்பதைக் கண்டாள் சுசிலா. 

“என்னம்மா, பாரதி… என்னாச்சு?” 

பாரதி மெல்லக் கேவலானாள். 

“மாப்பிள்ளை ஏதானும் சொன்னாரா?” 

இல்லை என்று பாரதி தலையாட்டினாள்.

“தங்கம்மா?” 

மீண்டும் தலையாட்டல்,

“நேத்து ராத்திரி.” 

“அதான் அழறியா?” 

முதன் முதலாக அம்மா மீது பாரதிக்குக் கோபம் உண்டாயிற்று. 

“ஏம்மா என்னை இவ்வளவு இவ்வளவு மட்ட போட்டுட்டியே?” என்றாள் அழுகையினூடே,

“அப்ப விஷயத்தைச் சொல்லு”. 

”எனக்கு ஒண்ணுமே பிடிக்கலேம்மா.”

“டில்லியில் பொறந்து வளர்ந்துட்டே, அதான். உனக்கு”. 

“இடம். சுத்துப்புறம் எல்லாமே மனசுக்குக் கசப்பா இருக்கு அம்மா”. 

“எல்லாம் போகப் போசச் சரியாயிடும் பாரதி…உன் அத்தையைப் பாரேன்”. 

“அது வேற யுகம் அம்மா”. 

“யுகம் மாறினாலும் மனுஷாளோட மனசுகள் மார்றதில்லை பாரதி. நாகரிகம் மாத்திரம்தான் மார்றது. ஆனா அது மட்டும் வாழ்க்கை இல்லை. ஈசுவரனும், நாராயணனும் நல்லவா, இந்த சகஸ்ரத்தைப் பாரேன். நம்மை வேத்து மனுஷாளாவே பாவிக்கறதில்லை”. 

“நான் என் இஷ்டப்படி இருக்க முடியாது போலிருக்கு”. 

“உன் இஷ்டப்படின்னா?” 

“நெனச்சப்ப தூங்கி எழுந்து, நெனைச்சப்ப குளிச்சுச் சாப்பிட்டு நெனைச்சப்ப…”

“போதும் பாரதி…” என்று கோபமாய் ஆரம்பித்த சுசீலா சாந்தமாக மாறி, “ஓரளவுக்கு உனக்கு எல்லா சுதந்திரமும் புகுந்த வீட்ல நிச்சயம் கிடைக்கும். ஆனா பிறந்த வீட்ல ஆடின மாதிரி ஆடமுடியாது. ஆட ஆசைப் படவும் கூடாது. உன்னை அவா தங்க வீட்டு பொண்ணாத்தான் மதிப்பா. ஓர் அடிமை மாதிரி இல்லை” என்றாள்.

“நான் டில்லிக்கே..” 

மீண்டும் கோபம். அது காந்தமாக மாறவில்லை. 

“மூடு வாயை நீ எம்ஏயும், எம்ஃபில்லும் படிச்சு என்ன புண்ணியம்? இது என்ன சிலேட்ல எழுதி அழிக்கற கதையா? பழசில மனசை ஊறப் போடாம, கிடைச்சிருக்கற வாழ்க்கையை எப்படி சௌகரியமா அமைச்சுக்கறதுங்கறதில கவனம் செலுத்து. இங்கே உனக்கு ஒரு குறையும் இல்லே. பொல்லாத மாமியாரோ எரிஞ்சு விழற புருஷனோ உனக்கு இல்லை” என்றாள் சுசீலா. 

இப்போது பாரதிக்குத் தன்னுடைய பிரச்சினையே என்ன என்று புரியாமற் போயிற்று. மேலும் அம்மாவிடம் பேசுவதில் அர்த்தமில்லை என்று நினைத்தாள், 

அன்று மாலை அம்மாவும், அப்பாவும் நங்கவரம் செல்ல ரயில் ஏறினார்கள். 

“நீ வேணும்னா ஸ்டேஷனுக்குப் போயிட்டுவா, பொண்ணே” என்றார் ஈச்சா, 

“நான் போகலே, மாமா” 

“நீ வண்டி பொறப்படறப்ப கண்ல வெள்ளம் வரும். அதை நாலு பேர் பார்த்துச் சிரிப்பான்னு பயப் படறியோ?” என்று ஈசுவரன் சொல்லிச் சிரித்தார். 

கோயிலில் தீபாராதனை ஆரம்பமாகப் போவதை அறிவிக்க மேளம் ஒலித்தது, 

“வாடீ பாரதி. கோயிலுக்குப்  போவோம்!” என்றாள் தங்கம்மா. 

மௌனமாய்ப் பின் தொடர்ந்தாள். 

“நாம இருக்கிறது ரெட்டைத் தெரு, கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கலெல்லாம் ஒத்தைத் தெரு. இடப் பக்கமா நேராப்போனாகுளம் இருக்கு. அதுக்கு முன்னால அரசமரம்.அதள்கீழே பிள்ளையார் குளத்தைச் சுத்திட்டுப் போனா ஒரு சின்ன சிவன் கோயில், குளத்தில் பெண்கள் குளிக்கறதுக்குன்னு தனியா ஒரு துறை உண்டு. நான் வந்த புதுசில என் மாமியார் என்னை அழைச்சுண்டு போவா. இங்கே எல்லாப் பெண்களுக்குமே நீச்சல் தெரியும். நீயும் நீந்தப் பழகணும்னு மாமியார் சொல்லி என்னை ருக்மணிட்டேவிட்டா. நாலு நாள்ளே நான் நீஞ்சத் தெரிஞ்சுண்டேன… அதோ தீபாராதனை ஆரம்பிச்சாச்சு பாரு,”

பாரதி பார்த்தாள். 

பெரிய சரதீபம், சிறிய சரதீபம் சங்கு தீபம் என்று ஆராதனை. டில்லியில் பாரதி ஹனுமான் மந்திர் போயிருக்கிறாள். பிர்லா மந்திர் போயிருக்கிறாள். பக்தி உனர்ச்சி ஏற்பட்டதே இல்லை. இங்கே எல்லோரும் கண்களை மூடி, எக கூப்பி ‘நாராயணா’ என்று வணங்குகிறார்கள். மாமியாரும் அவர்களைப் போல், பாரதியின் கரங்கள் தாமாக வந்து சேர்த்தன. என்ன வேண்டிக் கொள்ளுவது என்றுதான் புரியவில்லை. 

“இங்கே லட்சுமி நாராயணன் பள்ளி கொண்டிருக்கிறார் ஒரு பக்கம் ஸ்ரீதேவி இன்னொரு பக்கம் பூதேவி அதோ ஒரு நடை தெரியறதே…அங்கே சாஸ்தாவைப் பிரதிஷ்டை பண்ணியிருக்கு…” 

தங்கம்மா பயணிகளின் வழிகாட்டி போலப் பேசிக் கொண்டே போனாள். 

திரும்பி வருகையில் இரு புறமும் பார்த்துக்கொண்டே பாரதி நடந்தாள். ஒன்றை ஒன்று தொட்டு முத்தமிட்டுக் காட்சி அளித்த வீடுகள். சிலவற்றின் திண்ணைகளுக்குக் கம்பி அழிகள் இருந்தன. சில மூளியாகக் கிடந்தன. 

“நான் வந்த புதுசில் கிராமமே ஜேஜேன்னு இருக்கும். முக்கால்வாசிப் பேர்களும் ஞாதிகள் ஆண்களோட பிறந்த நாள் வந்துட்டாப் போதும் ஆயுஷ்ஹோமம் தடபுடலா நடக்கும். விருந்தை ஸத்தின்னு சொல்லுவா. அதில் பால் பாயசம் இருந்தாகணும். பால் பாயசத்துக்குச் செல்லமா சொல்ற பெயர் என்ன தெரியுமா, பாரதி? ராஜா! ஒரு வீடு பாக்கி இல்லாம அழைப்பா. இலை போட்டதும் ரெண்டாம் தடவை அழைப்பு. யார் வீட்டிலேயும் அடுப்பு எரியாது. எல்லாரும் போவோம்…இப்ப? எல்லாம் பெருங் காயம் வைச்ச சொப்பு, ஏதோ தெய்வத்தோட கருனையில் நம்ப குடும்பம் கஷ்டமில்லாம ஓடறது…” 

மௌனமாகக் கேட்டுக்கொண்டே வந்து பாரதிக்கு அலுத்தது. இருந்தும் புன்னகையை விட்டுக் கொடுக்காமல் காதில் வாங்கிக் கொண்டாள், 

வீட்டுக்குள் கால் வைத்ததுமே நாயாணணுடைய குரல் கேட்டது. 

அத்தியாயம்-5

கிராமத்து வீடுகளில் திண்ணையைத் தொடர்ந்து ரேழியும், ரேழிக்கு அப்பால் முன் தாழ்வாரமும் இருக்கும். முன தாழ்வாரத்தின் ஆரம்பத்தில் ஐந்து அல்லது ஆறு அடி சதுரத்தில் ஒரு மேடை கட்டப்பட்டிருக்கும். சாதாரணமாக இந்த மேடை மீதுதான் அலமாரிகள் வைக்கப்பட்டிருக்கும். மீதமுள்ள இடத்தில் காலைக் குறுக்கிப் படுத்துக்கொள்ளலாம். தூண்மீது சாய்ந்து செளகரியமாக உட்காரவும் செய்யலாம். 

பாலக்காட்டுப் பாஷையில் சொல்லுவது என்றால் இந்த மேடையின் பெயர் தரை மேல்தரை. 

இதன்மீது தூணில் சாய்ந்து கண்களை மூடியவனாய் நாராயணன் காலை நீட்டி உட்கார்ந்து ஊஞ்சலில் அமர்ந்திருந்த பாட்டியின் கேன்விகளுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தான். 

“கோந்தே, நம்பளோட தொடியில மாங்காய் நந்நாக் காய்ச்சிருக்கோடா?” 

“தோஷமில்லை பாட்டீம்மா.” 

“இந்தைக்கு கார்த்தால எர்ணாகுளம் தானே போனாய்?” 

“ஆமாம்.'” 

“செல்லப்பா ஆத்துக்குப் போனாயோ?”

“சமயம் தெடக்கலை.”

“கெடைச்சாலும் போகண்டாம். என்கூடப் பொறந்த தம்பின்னு பேரு. மாசத்துக்கு ஒரு பிராவசியம் பொண்ணைக் காண கல்பாத்திக்கு வரான். ஒருக்காக்கூட என்னையும் ஒன்பாட்டாப்பாலையும் காண வர்றதில்லை. அதா ஒன் அம்மையும், பாரதியும் வர்றா”. 

“எப்ப வந்தாய்?” என்று கேட்டாள் தங்கம் 

“காமணிக் கூறாச்சு”. 

“இப்ப ஏது வண்டி?” 

“மாதவன் நாயரோட கார்ல வந்தேன்?” 

“பாரதி! நாணாவுக்கு சாயைப் போட்டுக்குடு” என்றாள் பாட்டி. 

“வேண்டாம். நான் குளிச்சுச் சாப்பிடப் போறேன். அம்மா பப்படாம் காய்ச்சறயா?” 

“நீ மின்னால் குளிச்சுட்டு வா” என்ற தங்கம் சமையலறையை நோக்கி நடந்தாள். 

நாராயணனும் எழுந்தான். 

ஓரிரு நிமிடங்கள் நாராயணன், தங்கம்மா மற்றும் பாட்டியை மௌனமாகப் பார்த்து நின்ற பாரதிக்கு அவனிடம் ஏதாவது பேச வேண்டும் என்று தோன்றியது, பொய்மையான உபசார வார்த்தைகள் பேச அவளுக்குப் பிடிக்கவில்லை. இப்போது பேச என்ன இருக்கிறது? இந்தக் கேள்வியும் பிறந்தது. அவளுடைய உள்ளத்தில் மேலோங்கிக் கிடக்கும் பிஎச்.டி ஆசையை வெளியிட இது நேரமில்லை. அவள் மௌனமாக நிற்க, நாராயணன் அவளைப் பார்த்துப் புன்முறுவலித்து விட்டுக் குளியலறையை நோக்கி நடந்தான். 

கூடத்தில் ஒரு சாப்பாட்டு மேஜை இருந்தாலும், சமையலறையில் உட்கார்ந்து, சாப்பிடுவது என்ற வழக்கத்தைப் ஆண்டுகளாகக் கொண்டிருந்த நாராயணன் கீழே உட்கார்ந்தான் 

“பாரதி! நீ பரிமாறு” என்றாள் தங்கம்மா.

“வேண்டாம்மா… நீயே போடு… எதெது எங்கங்கே இருக்குன்னு அவளுக்கு இன்னம் மனசிலாயிருக்காது” 

பாரதிக்குச் சீற்றம் வந்தது. தன்னை நாராயணன் அலட்சியப்படுத்துகிறான் என்ற எண்ணம் பிறந்தது. 

“அவளுக்கு நீ எல்லாம் நந்நா சொல்லிக் கொடு. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளே மொளகூட்டல், பச்சடி கிச்சடி, தோரன், எல்லாம் அவளே செய்யும்படியா டியூஷன் கொடு” 

“நீ இப்ப சாப்பிடுடா, கோந்தே.” 

சாப்பிட்டப் பிறகு நாராயணனே தட்டை எடுத்துக் கொண்டுபோய்த் தேய்த்துக் கழுவினான். 

“சின்ன வயசிலிருந்தே அவன் இப்படித்தான். என்னை எடுக்க விடமாட்டான்…” என்றாள் தங்கம்மா.

பாரதி பதில் கூறவில்லை. 

“ஆனா இனிமேல் நீ அவன் சாப்பிட்ட தட்டை அலம்பி வைக்கணும்.” 

பாரதி மௌனமாய் மாமியாரைப் பார்த்தாள் “உன் மாமனார் சாப்பிட்டத் தட்டில்தான் நான் சாப்பிடற வழக்கம்.” 

“எச்சில் தட்டிலேயா?” 

“என்ன தப்பு” 

“தப்பு ரைட்டுன்னு சொல்லலே அத்தே.. என்னதான் கட்டின புருஷன்னாலும் எச்சில் எச்சில் தானே?”

“நீ டில்லியிலே ஓட்டல்லே சாப்பிட்டிருக்கே! டீ காப்பி குடிச்சிருக்கே, இல்லையா?” 

“அதுக்கென்ன அத்தே?” 

“ஆயிரக்கணக்கான பேர் சாப்பிட்டத் தட்டுகள்ளேயும் டம்ளர்களளேயும் தானே நீயும் சாப்பிட்டிருக்கே, பாரதி?” 

“க்ளீனா அலம்பித்தானே வைக்கிறா?” 

“ஓட்டல் தட்டு எவ்வளவு க்ளினா இருக்கும்னு எனக்குத் தெரியும்… ஆம்படையானும், பொண்டாட்டி உதட்டை அழுத்தி முத்தம் கொடுத்துக்கறப்ப ரெண்டு பேருடைய எச்சிலும் சங்கமம் ஆகலாம்னா ஆப்படையான் சாப்பிட்ட தட்லே பொண்டாட்டி சாப்பிடறது தப்பு இல்லை. ரெண்டு பேரும் ஒண்ணுன்னு காட்டத் தான் அநாதிகாலமா இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கு” 

“முதல்ல பெண்டாட்டி சாப்பிட்டுட்டா அந்தத் தட்லேயே புருஷன் சாப்பிடுவானா, அத்தே?” 

“இது குதர்க்கம் பாரதி, இந்தப் பரம்பரையிலே ஆம்படையானுக்கு மின்னால பெண்டாட்டிசாப்பிட்டதா  சரித்திரம் இல்லை.’ 

“நீங்க சொல்றது, எனக்கு நியாயமாப் படலே அத்தே…. பசி, வயிறோட சம்பந்தப்பட்ட விஷயம். அதுக்கும் இன்னொருத்தரோட வயித்துப் பசிக்கும் சம்பந்தமில்லை”. 

தங்கம்மா பதில் பேசவில்லை, பாரதியும் தன் பிடியை விட்டுக் கொடுக்கவில்லை. 

அன்று இரவு அவள் மாடி அறைக்குள் பிரவேர்த்த போது மணி ஒன்பதரை. கட்டிலை விட்டுச் சற்றுத் தள்ளி தரையில் ஒரு பாயின்மீது நாராயணன் வலது காலை இடது காலின் மீது போட்டுப்படுத்து, ஒரு ஃபைலைப் படித்துக் கொண்டிருந்தான். அவளுடைய வருகையை உணர்ந்த அவன், 

“நீ கட்டில்லே படுத்துத் தூங்கு பாரதி” என்றான்.

“ரெட்டைக் கட்டில்லே ரெண்டு பேர் படுத்துக்கத் தலையணை இருக்கு போலிருக்கு” 

“என்னால கொசு வலைக்குள்ளே அடங்கிக் கிடக்கக் கழியாது, பாரதி.” 

”உங்க இஷ்டம்.”

“நமக்கு ஃபர்ஸ்ட் நைட் இன்னும் பொறக்கலே… என் மண்டைக்குள்ளே ஆயிரம் பிரச்னை இருக்கு.”

“நான் ஆயிரத்தோராவது பிரச்னை”

“என்ன சொல்றாய் பாரதி?” 

கையிலிருந்த ஃபைலை அருகே வைத்து விட்டு நாராயணன் நிமிர்ந்து உட்கார்ந்தான், அவளை ஊடுருவிப் பார்த்தான். 

“இந்த ஆயிரத்தோராவது பிரச்சினைக்கு ஒரு சின்ன ஆசை”. 

“சொல்லு. ஹனிமுன்னா அது எனக்குப் பிடிக்காது. கோவா பீச்ல ஓடறதும் சாடறதும் கட்டிப்பிடிச்சுக்கறதும் தான் ஹனிமூன்னா அது நேக்கு ஆவசியம் இல்லை”. 

“நான் ஹனிமூனைப் பத்தி நினைக்கவேயில்லை”

“பின்னே என்ன வேணம், சொல்லு?”

“நீங்க அடுத்த தடவை எப்ப எர்ணாகுளம்போவீங்க, கோழிக்கோடு போகிற சான்ஸ் உண்டா?” 

“என்ன வேணம்? அதைச் சொல்லு”.

“யூனிவர்சிட்டியிலிருந்து அப்ளிகேஷன் பார்ம்ஸ்“

“பிஎச்.டியா?” 

“யெஸ்” 

“மேலே படிக்கணும்னு உனக்கு நம்ப கல்யாணத்துக்கு மின்னாலேயே உத்தேசம் இருந்தது. இல்லையா?”

“அது…அது…” 

“இதப்பாரு பாரதி, நான் ரெண்டு மூணு பிராவசியம் உங்கிட்டேச் சொன்னேன், நந்தா ஆலோசிச்சு டிஸைட் பண்ணுன்னு… நான் ஒனக்கு ஏத்த ஆம்படையான் இல்லைன்னு ஒன் அம்மா அப்பா மின்னாலேயே சொன்னேன். நீயும் ஒன் அப்பா அம்மாகூட உள்ளே போய் என்னமோ பேசிண்டேள், அதுக்கு அப்றம்தான் நீ வந்து என் அம்மைட்ட சம்மதம்னு சொன்னாய்…” 

“இதையெல்லாம் நான் மறுக்கலே நாராயணன்”. 

“ஆம்படையானைப் பேர் சொல்லிக் கூப்பிடறது சில இடங்கள்லே நாகரிகமாக இருக்கலாம். நாம ரெண்டு பேரும் சமம்ங்கறதை நான் ஏத்துக்கறேன். ஆனா இந்த நாகரிகம் நேக்குப் பிடிக்கல்லே…” 

“பின்னே எப்படிக் கூப்பிடறது?”

“என் பாட்டீம்மா பாட்டப்பாவை எப்படிக் கூப்பிடறான்று பாரு, என் அம்மை அப்பாவை எப்படிக் கூப்பிடறான்னு கவனி.” 

“நீங்க அமெரிக்கா போய் வந்தவர், முற்போக்கா இருப்பீங்கன்னு நினைச்சேன்.” 

“நான் படிக்கத்தான் அங்கே போனேன்! ஃபேஷனைக் கத்துக்க இல்லை. மனுஷன் எங்கே போயிருந்தாலும் மனுஷனாகத்தான் திரும்பி வரணும். நான் ஒரு மனுஷன் இந்த பாரதத்திலே, கேரள பூமியிலே ஜனிச்ச மனுஷன். இந்த மண்ணோட மணம்தான் என் சோரியில – அதான் ரத்தத்தில் இருக்கும்”. 

“சில சமயங்கள்லே-மணத்துக்கு பதிலா நாத்தமும் வர்றது”. 

“மணமும், நாத்தமும் மோந்து பாக்கற மூக்கைப் பொறுத்திருக்கு”. 

“நமக்குள்ள ஆரம்பத்திலேயே தகராறு,  இது அவசியம்தானா?” 

“சபாஷ்! நந்நாப் பேசறாயே? ஆரம்பிச்சது நீ…நான் உத்தரம்தான் சொன்னேன்,” 

“உங்க அப்பா சொன்னார். பாலக்காட்லேந்து ரெயில் ஏறினா முணு மணி நேரத்தில் கோழிக்கோடு. இல்லா விட்டால் எர்ணாகுளம் போய்ச் சேரலாம்னு, அங்கேதான் யூனிவர்சிட்டி இருக்குன்னும் சொன்னார்!” 

“கரெக்டாத்தான் சொல்லியிருக்கார்.” 

“எதை மனசிலே வைச்சுட்டு அதை அப்படிச் சொன்னார்? நான் மேலே படிக்க ஆசைப்பட்டா படிச்சுக்கலாம்னு தானே?” 

“நிச்சயமா மேலே படிக்க வைக்கிறோம்னு என் அப்பாவும் சொல்லளை, நானும் சொல்லலை”. 

“வெறும் எம்ஃபில், ஒரு ரெண்டுங்கெட்டான் பட்டம்,” 

“உன்னாலே ஏன் மின்னாலேயே பிஎச்டி சேர முடியலை? அதைச் சொல்லு”. 

“அம்மாவுக்கு இஷ்டமில்லை. அப்பாவோட நிதி நிலைமை சரியா இல்லை.” 

“உன்னாலே இப்ப எங்கிட்ட வார்த்தைக்கு வார்த்தை யுத்தம் செய்ய முடியறது. ஆனா உன் அம்மா அப்பாவை எதிர்த்து ஜெயிச்சு காரியத்தைச் சாதிச்சுக்கக் கழியலை, அல்லவா?” 

“எப்படி ஜெயிக்க முடியுமாம்?”. 

“ஏன் முடியாது? எம்ஃபில் படிச்சவள் ஒரு கோலேஜ்ல லெக்சரராச் சேர்றது. வேலையிலே இருந்துண்டே, பிஎச்டிக்கு தீஸிஸ் தயார் செய்யறது” 

“அப்படிச் செய்யத்தான் நெனைச்சு டில்லியிலேயே தொடர்ந்து இருக்கலாம்னு திட்டம் போட்டேன், ஆனா அப்பா அழாத தோஷமாகக் கெஞ்சினார். நங்கவரம் வந்ததும் அம்மா கண்டிப்பும் கறாருமா இருந்தா…” 

“நீ சொல்றதிலேந்து ஒண்ணு நந்நாத் தெரியறது.”

”என்ன அது?” 

“உனக்கு வாய்த் திமிர் இருக்கிற அளவுக்கு முதுகெலும்பு இல்லைன்னு” 

“நான் சென்ஸ்”. 

“நான் இப்பப் பேசறது உனக்கு நான்சென்சாத்தான் தெரியும். உண்மையான லட்சிய வெறியும், பிஎச்டி பாஸ் பண்ணி தம்பேருக்கு முன்னாலே ‘டாக்டர்’ னு போட்டுக்கணும்ங்கற தீவிரமும் இருந்திருந்தா நீ உன் கழுத்தை எனக்கு நீட்டியிருக்க மாட்டே… அப்பாகிட்டே நிதி வசதி இல்லை. ஆனாப் போற எடத்திலே நெறய இருக்கு. அது மூலமா பிஎச்டி வாங்கலாம்னு நீ பிளான் போட்டே…ஒண்ணு நீ கூழுக்கு ஆசைப்படு. இல்லாட்டா மீசைக்கு ஆசைப்படு. ரெண்டு ஆசையும் வைச்சுண்டா நீ தவிச்சுப் போவே” 

“அப்ப உங்க முடிவு?” 

“இந்த ஆத்துக் காசிலேந்து நீ எத்தனை  வேணும்னாலும் கேளு தரேன். புடைவை. நகை எது வேணம்னாலும் வாங்கிக்கோ… ஆனா செம்பாலடிச்ச காசு…ஒரு காசு. நான் உன்னோட பிஎச்.டி க்காகத் தரமாட்டேன்.” 

“அப்ப நான் இந்த கிராமத்திலேயேதான் ஜன்மம் பூராவும் சிறைப்பட்டுக் கிடக்கணுமா?” 

“இது ஒரு கிராமம், சின்ன ஊர்ல ஒரு சின்ன கிராமம், இதெல்லாம் தெரிஞ்சுதானே சம்மதம் சொன்னாய்? இங்க வந்தப்புறம் பிஎச்டிக்கு ஓடலாம்னு பிளான் பண்ணியிருக்காய்னு அப்ப நேக்கு ஸ்பஷ்டமாத் தெரியாது. உன் பிளான நடவாது”. 

“அப்ப நான் என்னதான் செய்யறதாம்?” 

“என் பாட்டிம்மா சேயறதைச் சேய். என் அம்மை சேய்றதைச் செய்” 

“சுத்தப் போர் ” 

“இந்தாத்துக்கு இந்தக் குடும்பத்துக்குப் புதுசா வந்திருச்கிற பொண்ணாத்தான் (ஊர்ல உள்ள அத்தன பேரும் நெனைக்கறா..ஆனா உனக்கு அப்படித் தோணலை. தப்பு உன் பேர்ல இல்லை. எல்லாம் இதுவரை பார்க்காததா இருக்கு. வீடுகள், மனுஷாள், சுத்துப்புறம் எல்லாமே புதுசு, நீ கொஞ்சம் கொஞ்சமா மனசு வைச்சா நோக்குப் பத்திப் போவிடும். கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்கவும் செய்யும். அப்றம் இந்த ஊர் மாதிரி உண்டான்னு நீயே நாலு பேர்ட்ட சொல்லுவே”

“அது இந்த யுகத்தில் நடக்காது” 

“நீ மனசு வைச்சா நடக்கும், பாரதி”. 

“அப்ப என் பிஎச்டி?” 

“நடக்காது. இந்தாத்திலே நீ என் ஒய்ஃபா இருக்கற வரைக்கும் என் அப்பா, அம்மைக்கும் மாட்டுப்பொண்ணா இருக்கற வரைக்கும் நடக்காது”. 

“நீங்க இவ்வளவு நேரமா, இவ்வளவு அழுத்தமாப் பேசினாலும், ஏன் உங்க குரல்லே கோபம் ஒலிக்கலே? உங்க பார்வையிலே கோபம் தெரியலே…” 

“நான் ஒரு மனுஷன். வார்த்தைகள் மூலமா கோபத்தைக் காட்டினா என்ன புண்ணியம், பாரதி? எதிராளியின் மனசிலே படும்படியாய் பேசிட்டாப் போதும். கோபம் மனுஷனோட வீக்னஸ்… ஓரளவுக்கு அதை இந்த பலவீனத்தைக் குறைச்சுக்சுப் பார்க்கறேன்..” 

“நீங்க சிறந்த மனுஷனா இருக்கலாம்.. ஏன் இருக்கீங்க… ஆனா நான் ஓரளவு மறைவு இல்லாமச் சொல்லிடறேன். நீங்க எனக்குச் சிறந்த புருஷனா இருக்க முடியாது…” 

நாராயணன் சிரித்தான்.

“உன்னை நான் ஒரு நல்ல சிறந்த மனைவியா மாத்திக் காட்டறேன், பாரதி. என்னை உனக்கேத்த புருஷனா மாத்த நீ ட்ரை பண்ணு”. 

“போகாத ஊருக்கு நான் எனனிக்குமே டிக்கெட் வாங்க மாட்டேன்.”

“ஆனா பிஎச்டி டிக்கெட் கவுண்ட்டர்ல ரொம்ப நேரமா நிக்கறாய்” 

“அது நான் நிச்சயமாய்ப் போகிற ஊர்.” 

“டிக்கெட் கொடுக்கத்தான் கவுண்டர் கிளார்க் வர மாட்டான்” 

“வரவழைக்கிறன்” 

“விஷ்யூ ஆல் தி பெஸ்ட், குட் நைட்” 

படுக்கை அறையில் விளக்கு அணைந்தது. மெலிதான குறட்டை ஒலி நிசப்தத்தில் பயங்கரமாகக் கேட்கிறது என்பதை உணராமல் நாராயணன் உறங்க, கட்டிலில் கிடந்த பாரதி தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். 

நாலா புறங்களிலிருந்தும் பிஎச்டி அவளைத் தாக்கியது. அவள் பொருமினாள். ஆவேசப்பட்டாள். உள்ளூற அம்மா, அப்பாவைச் சபித்தாள். தன்னுடைய தற்போதைய இயலாமையை நினைத்து வெகுண்டாள். தான் ஒரு கட்டிப் போடப்பட்ட மிருகமாகிவிட்டதாகக் கற்பனை செய்து கொண்டாள். 

மனத்தின் உணர்ச்சிச் சுமை அதிகமாக அதிகமாக உடல் தளர்ந்தது. கை கால்கள் சோர்ந்தன.கண் இமைகள் தாமாக மூடிக்கொண்டன. 

அவளுக்கு எப்போது உறக்கம் பிடித்தது என்பதை அறியாள். 

ஆனால் காலையில் கண் விழித்தபோது மணி என்ன என்று சுவர்க்கடிகாரம் உணர்த்தியது. 

ஒன்பது அடித்து இருபது நிமிடங்கள். வெட்கத்தில் கால்கள் தயக்கத்துடன் உடல் சற்றே கூனிக்குறுகிய தோற்றத்தில் மனம் குற்றம் செய்துவிட்ட தான உணர்வில் செயல்பட- 

பாரதி மாடிப் படிகளில் இறங்கினாள். 

முன் தாழ்வாரத்துக்குத் தரை மேல்தரையில் தாத்தா உட்கார்ந்திருக்க, முற்றத்தின் அருகே தூணில் சாய்ந்தவளாய்ப் பாட்டி அமர்ந்திருக்க, மாமனார் ஈஸ்வரன் ஊஞ்சலில் ஆடியிருக்க, அவள் எல்லோரையும் கடந்து குளியலறையை நோக்கி நடந்தாள். போகும் வழியில் மாமியாராகிவிட்ட அத்தை தங்கம்மா நின்றாள். 

யாரும் அவளுடன் எதுவும் பேசவில்லை. 

அவள் சமையலறைக்குள் பிரவேசிக்கக் கால் வைக்க இருக்கையில்.. 

“ஒரு நிமிஷம்!” 

“என்ன அத்தே?” 

“குளிக்கறதுக்கு முன்னாலே சமையலறைக்குள் வர்றது இந்த வீட்டு வழக்கமில்லே..உன பாஷையிலே சொல்றதானா எச்சில் உள்ளே வரப்படாது”. 

அத்தையின் வாயிலிருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகின்றன? 

மனத்தில் ரௌத்திரம் பொங்க பாரதி தங்கம்மாளின் கண்களைச் சந்திக்க நிமிர்ந்தாள். 

அதற்குள் தங்கம்மா உள்ளே போயவிட்டாள். 

ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு ஒரு தம்ளர் காப்பி வாயிற்படிக்கு வந்தது. 

எடுத்தாள். 

காப்பி கொதித்தது. 

பாரதிக்கு காப்பி மட்டும் கொதிக்கவில்லை. வீடே கொதித்தது. 

அத்தியாயம்-6

ஒன்று மட்டும் பாரதிக்கு நன்றாகப் புரிந்தது, அதிகாலையில் எழுந்திராமல் ஒன்பது மணிக்கு மேலேயும் அவள் தூங்கியதை யாரும் ரசிக்கவில்லை. மௌனமான கோபத்தில் எல்லோரும் தங்கள் அதிருப்தியைக் காட்டுகிறார்கள். அவர்களில் யாராவது ஒருவர் வாய் வார்த்தையால் கடிந்து கொண்டிருந்தால் அவளால் பதில் சொல்லியிருக்க முடியும். 

டில்லியில் அவள் சிறு வயதிலிருந்தே இரவு நீண்ட நேரம் கண் விழித்துவிட்டு, காலையில் எட்டு அல்லது எட்டரை மணிக்குத்தான் கண்விழிப்பாள். குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். சம்பளியிலும், ரஜாயிலும் ஒடுங்கிக் கொண்டு தூங்குவதில் ஒரு தனி சுகத்தை அனுபவித்த அவள், அப்பா மௌலியுடன் போட்டி போடுவாள். பத்து மணிப் பள்ளிக்கு அவசர அவசரமாகப் புறப்படும்போது ஏன் காலையில் இன்னும் முன்னதாக எழுந்திருக்கவில்லை என்ற எண்ணம்கூட வராது. அப்பா அவளை லோடி காலனியின் பள்ளிக்கு முன் இறக்கிவிட்டு, ஸ்கூட்டரிலோ, காரிலோ பறப்பார். கல்லூரி நாட்களில் கேட்கவே வேண்டாம். அவளுக்குச் சாயங்காலம் ஆரம்பிக்கும் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது. அம்மாவுக்கு இதில் ஓர் ஏமாற்றம் இருந்தாலும் அவளுக்கு ஒரு திருப்தி, காலைக் கல்லூரி எட்டுமணிக்குத் துவங்கும். தூக்கத்துக்கு அது ஒரு தடை அல்லவா? 

பல வருடப் பழக்கத்தை அவளால் சட்டென்று நிறுத்திக் கொள்ள முடியவில்லை. இவ்வளவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக அம்மா பலமுறை எச்சரித்திருக்கிறாள். பிறந்தவீட்டுச் சுகசௌகரியங்கள் புகுந்த வீட்டில் கிடைக்காது, அவள் தன்னைத்தானே மெல்ல மெல்ல மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அம்மா உபதேசம் செய்திருக்கிறாள். பாரதி காதிலேயே வாங்கிக் கொண்டதில்லை. எம்ஃபில் படிப்பைப் பற்றி அம்மாவுக்கு என்ன தெரியும்? இருபதாம் நூற்றாண்டு இலக்கிய கர்த்தா ஒருவர் எழுதிக் குவித்த நூல்களையெல்லாம் ஒரு முறைக்குப் பல முறையாக ஊன்றிப் படித்து, குறிப்புகள் எழுதி அவ்வப்போது பேராசிரியரிடம் காட்டவேண்டும். இருபத்து நாலு குடியிருப்புகளைக் கொண்ட ஒர் அடுக்கு மாளிகையில் தீப்பெட்டி போன்ற ஒரு வீட்டில் வாழ்க்கை. நாலா பக்கங்களிலிருந்தும் இரைச்சல், தமிழ், மராத்தி, ஹிந்தி, பஞ்சாபி என்று அரசியல் சட்டத்தில் இடம்பெற்ற எல்லா மொழிகளும், எல்லா வீடுகளிலிருந்தும் கிளம்பி வெடித்து ஓயும். இரவு பத்து மணிக்கு மேல்தான் ஓரளவு நிசப்தம் கிடைக்கும். டிஎச்.லாரென்ஸ் எழுதிய நூல்களை அவள் தன் ஆய்வுக்கும். ஆராய்ச்சிக்கும் எடுத்துக் கொண்டாள். எத்தகைய கடினமான இலக்கியம் என்று தெரிந்து கொள்ளப் பல நாட்கலாயின. லாரென்ஸ் பற்றி நன்றாக அறிந்து கொள்ள அவரைப் பற்றி வெளி வந்த பல நூல்களைச் சர்வகலாசாலை நூலகத்திலிருந்தும், பிரிட்டிஷ் கவுன்சிலிலிருந்தும் சிரமப்பட்டு வாங்கி, குறித்த நாளன்று திருப்பிக் கொடுத்தாக வேண்டும். கவனமாக சிரத்தையுடன் படித்துத் திருப்தியுடன் தீஸிஸ் எழுத பகல் நேரம் சரியாக அமையவில்லை. மேலும் தினசரி சர்வகலா சாலைக்குப் போக வேண்டும். நூலகங்கள் செல்ல வேண்டும். என்ன செய்ய முடியும்? இரவுதான் அவளுக்குப் பகல்.

இப்போது இந்தப் பாலக்காட்டில் ஒரு வீட்டுக்குள் புக வேண்டிய நிர்ப்பந்தம் அவளுடைய மதியீனத்தாலோ பெற்றோரின் பிடிவாதம் காரணமாகவோ அல்லது விதி வசத்தாலோ ஏற்பட்டு விட்டது. முதல் இரவு அன்று அகஸ்மாத்தாக அவள் கண் விழித்த போது அதிகாலையாக இருந்தது. அத்தை அதைப் பாராட்டியிருக்க வேண்டும். அதனால்தான் பாரதியின் நெஞ்சு நெகிழ தங்கம்மா பேசினாள். இரண்டாவது இரவு அவளாள் சிந்தனைச் சிச்கல்களிலிருந்து எளிதாக விடுபட முடிய வில்லை. நீண்ட நேரம் சிந்தனையில் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டிருந்தாள். யார் கண்டார்கள். விடிவதற்குச் சில நிமிடங்கள் முன் தான் அவளுடை இதழ்கள் மூடியிருக்கக்கூடும் என.

யாராவது ஒரு கேள்வி – ஒரே ஒரு கேள்வி கேட்டிருந்தால், கேட்டவர் மனம் சமாதானம் அடையும் வகையில் அவளால் பதில் கூறியிருக்க முடியும். யாரும் கேட்க வில்லையே? 

காப்பி ருசிக்க விட்டாலும் குடித்தாக வேண்டும் என்று தோன்றியது. குடித்தாள். தம்ளரைக் கழுவி. வைத்தாள். மீண்டும் முன் தாழ்வாரம் செல்ல மனம் தயங்கியது. தாத்தாவும், பாட்டியும் ஏதும் கேட்காமலிருக்கலாம். மாமனாராகிவிட்ட அத்திம்பேர் குசும்பாக. குதர்க்கமாக ஏதாவது பேசிவிட்டால்? அவளுக்குச் ‘சுருக்’ தென்று பட்டுவிடும். அப்படிப் பட்டு விட்டால் அவளால் வாயை அடக்கிக் கொள்ள முடியாது. பேசி விடுவாள். அப்புறம் என்ன? ‘மாமனாரை எதிர்த்துப் பேசும் மருமகள்’ என்ற பட்டம் இந்த கிராமத்து வீடுகளிலெல்லாம் முழங்கும். 

உடனேயே குளித்துவிட்டு மாற்றுப்புடைவை கட்டி சமையலறையினுள் செல்ல அவள் விரும்பவில்லை. அவள் அத்தை தங்கம்மாவை உச்சாணிக் கொம்பில் வைத்திருந்தாள். ஆனால் அவள் சில சாதாரண யதார்த்த வார்த்தைகளைப் பேசிய விதம், அப்போது இருந்த அவளுடைய முகபாவம் இதெல்லாம் அத்தையை உச்சாணிக் கொம்பிலிருந்து வீழ்த்திவிட்டன. நேற்றுவரை அன்பும், கனிவுமாக இருந்தவள், புத்தம் புதிதாக வந்திருக்கும் மருமகளிடம் அவளுடைய மனத்துக்கு இசைந்தாற்போலப் பேசவேண்டும் என்பதை உணர்த்தியவள், திடீரென்று மாறிவிட்டாள்! ஏன்? பாரதி அதிகாலையில் எழுந்து பல் தேய்த்து, குளித்துச் சமையலறைக் காரியங்களில் முனையவில்லை என்றா? உண்மையாகவே அத்தையிடம் அன்பும், கனிவும் இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? காரணம் கேட்டிருக்க வேண்டும். அவளுடைய பதிலில் திருப்தி அடைந்து ஒன்றுமே நடந்திராதது போல நடந்து கொண்டிருக்க வேண்டும். 

பாரதி தொழுவத்தை நோக்கி நடந்தாள். முதன் முறையாக அவள் தொழுவத்தைப் பார்க்கிறாள்.

பிரவேசித்தாள் 

ஆச்சரியப்பட்டு போனாள். 

பிரமாண்ட கொட்டக்கை போலக் காட்சி அளித்தது. வலப் புறத்தில் ஒரு ஜெர்சி பசு. அது உடலை மடித்து உட்கார்ந்திருக்க, கன்று அதைச் சுற்றித் துள்ளித் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. பசு வெளியே வராமல் இருக்க மரச்சட்டம், பசுவின் தலை நன்றாக நுழைந்து தீனியை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு இடைவெளிவிட்டு மர அழிகள் போட்டிருந்தார்கள். தரை வழ வழப்பாக இல்லை, என்றாலும் பாதங்கள் உரசலில் வலிக்கவில்லை. தொழுவத்தின் இடப்புறத்தில் விட்டு விட்டு நான்கு குழிகள். மூலையில் நான்கைந்து உலக்கைகள். சுவரை ஒட்டினாற்போவ ஐந்தாறு முட்டைகள். அருகே போய்ப் பார்த்தாள். ஒரு மூட்டை திறந்திருந்தது. நெல், குழி, உலக்கை. நெல்! புரிந்து கொண்டாள். இவை தவிர, தரையில் குழி வெட்டி அமைத்து அடுப்புகள், அருகே பிரும்மாண்டமான பித்தளை மற்றும் வெண்கலஉருளிகள் கடாக்கள் அண்டாக்கள்.

நெல்லை வேக வைக்க, பெரிய அவள் இதுவரை கண்டிராத அளவில் பித்தளைப் பானைகள். 

தொழுவத்தைத் தாண்டிச் சென்றாள். 

குதூகலமான ஆனால் நீளமான ரேழி போன்ற அமைப்பில் வெராந்தா. வெராந்தாவிலிருந்து இறங்கிய போது மா, வாழை மரங்கள் தெரித்தன. மிளகாய்ச் செடியில் பிஞ்சு மிளகாய்கள் தொங்கின. ஒரு பக்கம் சேப்பங்கிழங்கு இலைகள் யானைக் காதுகள் போல படர் இன்னொரு பக்கத்தில் மல்லிகைப் பந்தல். கத்திரி, வெண்டைச் செடிகளைப் பார்க்க பாரதி தவறினாள். நீண்டு பரந்து விரிந்த கொல்லையின் எல்லையில் ஓர் எட்டு அடி அகல வாயில் தெரிந்தது. வாயிலை மூடியிருந்தார்கள். ஒரு பழைய அம்பாஸிடர் கார் மௌனமாக நின்று கொண்டிருந்தது. 

மீண்டும் தொழுவத்துக்கு அவள் வந்தபோதுதான் மின விசிறியைக் கவனித்தாள், தொழுவத்தில் மின் விசிறியா? பார்த்துக் கொண்டே நகர்ந்த பாரதி, தங்கம்மாவின் குரலைக்கேட்டு ஒரு கணம் நடுங்கினாள். 

“கிட்ட வராதே”. 

பாரதி பார்த்தாள். 

“சகஸ்ரம் பெண்டாட்டி ராஜி-என் ஓர்ப்படி-வீட்டில் தான் எல்லோருக்கும் முணு நாளுக்குச் சாப்பாடு.” 

பாரதி பதில் சொல்லவில்லை. புரிந்து கொண்டாள். டில்லியில் அம்மாவோ அவளோ என்றுமே ஒதுங்கி உட்கார்ந்ததில்லை. கடவுளே, அவள் என்ன செய்வாள். இனிமேல்? எப்படி அவள் தொழுவத்தில் மாதா மாதம் மூன்று நாட்கள் தள்ளுவாள்? 

“மூணு மணிக்கு எல்லாருக்கும் டீ போட்டுக்கொடு…. தெரியுமில்லையா?” 

“தெரியும்.” 

“தோசை வார்க்கத் தெரியுமா?”

“வார்த்தது இல்லை. ஆனா ட்ரை பண்றேன்”. 

“தெரியலைன்னா இன்னொரு ஓர்ப்படி இருக்காளே கமலம், அவளை நான் வரச் சொன்னேன்னு சொல்லிக் கூப்பிடு” 

“சரி”

“சட்னி  இல்லைன்னா உன் மாமனாரும், என் மாமனாரும் தோசையைத் தொடமாட்டா.”

அவள் மெல்ல நகர்ந்தாள். 

“இன்னொரு விஷயம்.” 

“நீ மத்தியானம் ஒன்று ரெண்டு மணி நேரம் தூங்கறதில் தப்பு இல்லே…” 

“புரியறது”. 

“மாமியாரும் மாமனாரும் கார்த்தாவே நாலு நாலரைக்கு எழுந்திருப்பா. உன் மாமனாரும் அப்படித் தான். ராத்திரி ரெண்டுமணிக்கு தூங்கப் போனாக்கூட நாராயணன் அஞ்சு மணிக்குக் கண் முழிச்சுப்பான்.”

பாரதி மெளனமாக எங்கேயோ பார்த்தவளாய் நின்றாள். 

“இன்னிக்குப் போனாப் போறது”. 

பதில் சொல்லாமல் பாரதி நகர, தங்கம்மா, “உனக்கு உள்ளுற ஆத்திரமும், கோபமும் இருக்குன்னு நேக்குத் தெரியும். அதைப் பத்தி நான் கவலைப்படலை. கடமை கண்ணியம், கட்டுப்பாடுன்னு மூணு வார்த்தைகள் மேடை மேலே ஏறிச் சொல்றதுக்கு மின்னாலேயே நம்ப நாட்டிலே இருந்திருக்கு. ரொம்பப் பேர் உதாசீனப் படுத்தின தாலேதான் அண்ணாதுரை ஞாபகப்படுத்தும் படியாச்சு” என்றாள். 

பாரதி வாய் திறக்க வில்லை. 

“ஏன் உன்னாலே பதிலே சொல்ல முடியலையா?” 

“முடியறது. ஆனா வேண்டாம்னு பார்த்தேன்” 

“முடியறதுன்னா சொல்லு.” 

“காலா காலத்திலே எழுந்து குனிஞ்சு நிமிர்ந்து செய்ய வேண்டிய வேலைகளை யெல்லாம் ஒழுங்காச் செய்யறது கடமை. நெஞ்சில் பொய்ம்மை இருந்தாலும் அதை வெளிக்காட்டாம உபசார வார்த்தைகளைப் பேசி, மரியாதையா நடந்து கொள்றது கண்ணியம். இந்த வீட்டுக்குன்று சில சட்ட திட்டங்கள் இருக்கு. அதை ஒரு வட்டத்துக்குள்ளே வளைய வளைய வர்றது கட்டுப்பாடு. இதெல்லாம் தானே இந்த வீட்டு அகராதிப்படி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு? அண்ணாதுரை யார்னு எனக்கு அவ்வளவாத் தெரியாது. ஒரு லீடர்னுதான் தெரியும். அவருடைய அறிவுரை, சமூகத்துக்குத்தான். வீட்டுக்கு இல்லேன்னு நான் நினைக்கறேன்”. 

“பல வீடுகள் சேர்ந்தால்தான் சமூகம் இருக்கும். இந்த சமூகம் நல்லபடியா இருக்கணும்னா அது ஒவ்வொரு வீட்லேந்து தான் ஆரம்பிக்கணும், இந்த அடிப்படைத் தத்துவம் புரியலேன்னா நேக்கு கோபம் வராது. முட்டாள்தனத்தைக் கண்டு ஏளனம்தான் வரும்.” 

”நானும் உங்களைப்போல, உங்க மாமியாரைப் போல இந்த வீட்டுக்கு வந்த மருமகள் தானே?”

“ஏன் கேட்கிறே?”

“பாட்டி ரொம்ப சீனியர் அப்புறம் நீங்க… உங்களுக்கு ஜூனியர் நான். மத்தபடி நம்ப மூணு பேருக்குள்ளே என்ன வித்தியாசம்? என்ன தாரதம்யம் இருக்குன்னு எனக்குப் புரியலே…. தெரிஞ்சா ஒருநாள் சாவகாசமா சொல்லுங்க, நான் இப்பக் குளிக்கப் போறேன்” 

தங்கம்மா ஓரிரு நிமிடங்கள் அயர்ந்து போன நிலையில் உறைந்து போனாள். 

தன் அண்ணாவைப் போலத்தான் அவனுடைய பெண்ணும் இருப்பாள் என்று எடை போட்டது எவ்வளவு பெரிய தவறு? 

மருமகளை எளிதில் சீண்ட முடியாது என்பதை அவள் உணர்ந்த போதிலும், இப்போது முதலே அவளை அடக்கி, வைச்சு வேண்டிய இடத்தில் வைத்தாக வேண்டும் என்ற சீற்றம் பிறந்தது. அந்த நாட்களில் தன்னுடைய மாமியார் குறி வைத்து எய்த சொல்லம்புகளும் அவ்வப்போது குற்றம் சாட்டியதும் நினைவுக்கு வந்தன. ஆனால் தங்கம்மா என்ன செய்தாள்? மாமியாரை எதிர்த்துப் பேசவில்லை! வார்த்தைக்கு வார்த்தை வாயாடவில்லை. அதீதமான பொறுமையைக் கடைப்பிடித்தாள். மெல்ல மெல்ல மாமியாரின் மனதில் நல்லதோர் பீடத்தில் அமர்ந்தாள். 

இந்த பாரதி அந்தக் காலத்து தங்கம்மா அல்லள். வீட்டில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணமும் பாரதிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சீனியர், ஜூனியர் என்று கோஷிக்கிறாள். அவள் மூலமாக குடும்பத்துக்கு அவப்பெயர் வராமலிருக்க வேண்டுமென்றால், பாரதியை அடக்க வேண்டிய முறையில் அடக்க வேண்டும். சர்க்கஸில் புலி, சிங்கங்களையே அடக்க முடியுமென்றால் பாரதியையா வழிக்குக் கொண்டுவர முடியாது? 

திடீரென்று பிள்ளை நாராயணனுடைய நினைவு வந்தது. டில்லியில் பார்த்த பாரதி தனக்கு ஏற்றவள் இல்லை என்று சொல்லியிருந்தான். பலமுறை அவளிடமும் மாமாவின் பெண் மனைவியாக வரவேண்டா என்று கேட்டுக் கொண்டிருந்தான். அவள் செவி சாய்த்தாலும் ஈசுவரன் செவி சாய்க்கவில்லை. தமக்கும் தான் ஆரம்பத்தில் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் பிடிக்கவில்லை. ஆனால் கடைசியில் சம்மதித்தார். தாலி கட்டின நாளிலிருந்து அவர் எப்படி மாறி விட்டார்? தம் தாயார் அவளை எவ்வாறு நடத்துகிறாள் என்று அறிந்து கொண்ட அவர் எப்படி எப்படியெல்லாம் சமாதானப் படுத்தி அரவணைத்துக் கொண்டு போனார்? இதை மனத்தில் வைத்துக் கொண்டுதானே அவர் தன் பிள்ளையை வற்புறுத்தி இசைய வைத்தார்? 

பாரதி ஒரு பிரச்சனையாகி விடுவாளோ என்ற அச்சம் ஒரு பக்கம் தோன்றினாலும் பாரம்பரியத்தின் பெருமையும், குடும்பத்தின் செழிப்பும், கூடிய சீக்கிரம் பாரதி அவளைப் போல மாறிவிடுவாள் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தன. 

பாரதி திரும்பி நடந்தாள். தேனொழுகப் பேசி வந்த அத்தை எப்படி திடீரென்று மாறி விட்டாள்? ஒரு வேளை இப்போது காண்பதுதான் அத்தையின் இயல்பான குணமோ? இதுவரை நடந்து கொண்டதெல்லாம் நடிப்பா? நடிப்பைப் பற்றி நினைக்கும்போது தானும் நேற்றுவரை அதைத்தானே செய்தாள் என்ற எண்ணம் வந்தது. இனிமேல் அவளும் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசினால் தான் அவளால் தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும், மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிப் பழக்கம் உள்ளவள் அவள். இனிமேல் அவமரியாதைக்கு அவமரியாதைதான் பதிலாக அமையும். 

அவள் முன் தாழ்வாரத்துக்கு வந்தபோது ஊஞ்சலில் ஈசுவரன் இல்லை. ஊஞ்சல் சங்கிலியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஒரு காலை ஊஞ்சல் மீது போட்ட வண்ணம் லட்சுமிப் பாட்டி உட்கார்ந்திருந்தாள். 

“பாரதி” 

“என்ன பாட்டி?”

“நீ நேரத்திலே தூங்கி எழுந்திருக்காததுக்கு உன் மேலே தங்கம்மா தேஷ்யப் பட்டாளோ?” 

“தேஷ்யம்னா?” 

“கோபம்” 

“இல்லை”. 

“இல்லையா… நீ பொய் சொல்றாய்?” 

“இல்லே பாட்டி,”. 

“கார்த்தால ஏழு மணியிலிருந்து புறுபுறுத்துக் கொண்டிருந்தா… புறுபுறுத்தான்னா என்ன தெரியுமோ? கோபம், எரிச்சல், எல்லாம் கலந்த முணு முணுப்பு”

பாரதி பதில் சொல்லவில்லை. 

“நீ ஒந்தையும் மனசிலே வைச்சுக்காதே, கிட்டயா?”

“சரி”. 

”வந்த புதுசில அவ ஏழரைக்கு மின்னால் தூங்கி எழுந்து நான் கண்டதில்லை. அப்றம், அப்றம் நான் சொல்லிச் சொல்லி ஏழு, ஆறரை, ஆறுன்னு ஆச்சு. இப்ப அஞ்சு மணிக்கு மின்னால எழுந்திருக்கறா. நீயும் அவ மாதிரி சரியாயிடுவே”. 

“சரி பாட்டி” 

“இந்தாத்தில நீ நல்ல பேர் எடுக்கணம்னா நீ ஒரு காரியத்தை மனசிலாக்கிக்கணும்.” 

“என்ன பாட்டி அது?” 

“யார்ட்டேயும் உத்தரம் கொல்லப்படாது; வாயாடப்படாது; அடக்க ஒடுக்கமாக இருக்கணும். மத்தவா மின்னால ஆம்படையானட்டே சிரிச்சுப் பேசப்படாது. அப்புறம் எல்லாத்துக்கும் மேலா ஒண்ணு இருக்கு” 

“அது என்ன பாட்டி?” 

“தேரை ஒருத்தரா இழுக்கறதில்லை. அது சாத்தியமும் இல்லை. வீடுங்கறதும் தேர் மாதிரித்தான், இந்தத் காரியத்தை இவள் சேவான்னு பார்த்துண்டு நிக்கப்படாது. ஒன்னால முடிஞ்ச காரியத்தை நீயும் சேயணும்,” 

“சரி பாட்டி!” தன்னையும் மீறி பாரதி மீண்டும் நடித்தாள். 

“காரியம்னா வெறும் அடுக்களைக் காரியம் மாத்தரம் அல்லா. கிழிஞ்சதைத் தைச்சு வைக்கிறது. பூ பறிச்சுத் தொடுத்து வைக்கறது. பூஜை பாத்திரங்களை அலம்பிக் கோலம் போடறது… இது மாதிரி நான் சொல்லிண்டே போலாம். நீதான் பார்த்துப் பார்த்துச் சேயனும்” 

பாரதி பதில் சொல்வதற்குள், ரேழியைத் தாண்டி தாத்தா முன்னேறி வந்தார். 

“என்ன எச்சுமி, பொண்ணுகிட்ட பேசிண்டிருக்காய்?” 

“நீங்க அறியண்டாம்?” 

“பொண்ணே, பாட்டிம்மா என்ன சொல்றா?'”

“விசேஷமா ஒண்ணுமில்லே தாத்தா.” 

“ரெண்டு பேரும் சொல்ல மாட்டேள் அல்லவா? போகட்டும்… எனக்குத் தெரியண்டாம்.” 

தாத்தா தரைமேல் தரை மீது அமரவும் சகம்ரத்தின் மனைவி ராஜி வரவும் சரியாக இருந்தது. 

“என்னடி ராஜி!…என்ன வேணம்?”

“பாரதியை ஆத்துக்குக் கூட்டிண்டு போலாம்னு வந்தேன். இங்கதான் சமையல் இல்லையே…”

“நான் இனிமேதான் குளிக்கப்போறேன் சின்னம்மா”. 

“நாணா என்னை சித்தம்மைன்னு கூப்பிடுவான்….நீ உங்க ஊர் பாஷையில் சின்னம்மான்னு கூப்பிடறே… அதனால் என்ன, பரவாயில்லை…ஆமாம் அது எப்படி மணி பத்தே முக்காலாகப் போறது. இன்னம் குளிக்கலைங்கறாய்?” 

பாரதி பதில் சொல்லவில்லை. 

“சரி, நீ குளிச்சுட்டு வேகத்தின வா…சித்தப்பாவுக்கு உங்கிட்ட என்னவோ பேசணுமாம்”. 

“வரேன் சித்தி” 

“ஹாங்..இது கேக்க நந்நா இருக்கு; சித்தி இப்படியே கூப்பிடு…நான் போய்ட்டு வரேன் அம்மா”. 

”என்னடீ ராஜி சமைச்சிருக்காய்?”

“மன்னி ஒக்கார்ந்துட்டான்னு தெரிஞ்சப்புறம்தான் ஆலோசிச்சேன். அப்பாவுக்கு எவனும் சக்கைக் கொட்டையும் போட்ட மொளகூட்டல்னா பிடிக்குமே, பாரதி! பூசணிக்காய்க்கு எளவன்னு சொல்லுவோம், சக்கைன்னா பலா” 

“அவளுக்கு அப்றமா பாஷை சொல்லிக் கொடுக்கலாம்டீ ராஜி, தொட்டுக்க என்ன வைச்சிருக்காய்?”

“வெண்டைக்காய் வதக்கிப் பச்சடி. கடுகு மாங்காயும் இருக்கு” 

“கேட்டேளா ஒங்க மாட்டுப் பொண் ஒங்களுக்காக என்ன சேய்திருக்கான்னு. நாக்கை இப்பவே நந்நாத் தீட்டி வைச்சுக்குங்கோ…” என்றாள் லட்சுமிப் பாட்டி கணவரைப் பார்த்து. 

பாரதிக்குக்கூடச் சிரிப்பு வந்தது. 

பதினொன்றே கால் மணிக்கு அவள் ஈசுவரனுடைய தம்பி சகஸ்ரத்தின் வீட்டினுள் பிரவேசித்தாள்.

அங்கே அவளுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. 

– தொடரும்…

– வானமெல்லாம் ஆசைக் காற்றாடி (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1995, கங்கை புத்தகநிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *