மின்சார அடுப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 10,807 
 
 

‘ராசாத்தி ! காபி வச்சு எவ்வளவு நேரமாறது. குடிச்சுட்டு மற்ற வேலைகளைப் பாரு!”

‘சரிம்மா!”

‘எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா’

‘ஆச்சும்மா!”

ராசாத்தி, வாசலில் எடுத்து வைத்திருந்த அந்த இரண்டு ‘கட்டை‘ பைகளையும், ஒருமுறைப் பார்த்துக் கொண்டாள். சொன்னமாதிரியே காபி ஆறிப்போயிருந்தது. அவர்கள் கிளம்பும் அவசரத்தில் இருக்க, இந்த நேரம் போய் ‘சூடுபன்னிக்குடு’ன்னு தொந்தரவு பண்ணக் கூடாது. பச்சைத் தண்ணீர் போல, அண்ணாந்து கடகடவென வாயில் ஊத்திவிட்டு எழுந்தான்.

‘சாமான் வண்டி எத்தனை மணிக்கு வருதும்மா?”

‘நைட்டு ஒன்பது மணிக்கு, நீ ஞாபகமா, அந்தப் பையனை அனுப்பிச்சு வை என்ன?”

‘தோ! போனவொடனே, ஞாபகப்படுத்திடுறேன். கரெக்டா வந்துருவான்”.

‘சரி! இருட்டிடுச்சு. நீ கௌம்பு மத்தத நாங்கப் பாத்துக்கறோம். பிரியா குடுத்தத எல்லாம் எடுத்துக்கிட்டேல்ல?”

‘ஆங் ! இந்த ரெண்டு பைதான். பைய, சாமான் ஏத்த அந்தப் பையன் வருமில்ல அதுக்க்pட்ட குடுத்து உடறேன்!”

‘வேண்டாம் அது என்னதுக்கு? நீயே வச்சுக்க!”

‘பிரியாம்மா நாளைக்குக் காலைலதான் ஊரு போய் சேருவாங்கள்ல?”

‘ஆமா ராசாத்தி நீ, முடிஞ்சா நாளைக்கு காலைல வந்து வீட்டச் சுத்தி ஒரு எட்டு, ஏதாவது சாமான் விடுபட்டுருக்கான்னு பாத்துட்டுப் போ!”

‘சரிம்மா பாத்துக்கறேன். எதுன்னாலும் எங்க வீட்டுக்காரர் நம்பர் குடுத்துருக்கேன்ல அதுல பண்ணிச் சொல்லுங்க. பத்திரமா போயிட்டு வாங்க. நான் வர்றேம்மா”. சொல்லிவிட்டு அந்த இரண்டு பைகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள், ராசாத்தி.

‘அப்பாடி! நல்லாவே இருட்டிடுச்சு! எதிர்வீட்டுக்காரிக்குத் தெரியாம, பட்டுன்னு, இத உள்ளக்; கொண்டு போயி வச்சிரணும்’ நினைத்துக் கொண்டவள் வேகமாக நடையைப் போட்டாள். இது மாதிரி, வேலைப்பார்க்கிற வீட்டில் கொடுக்கற சாமான்களை இவள், வீட்டுக்கு எடுத்து வரும்போதெல்லாம் எதிர்வீட்டு சுகந்தி அப்படியே, அந்த சாமான்களையும், இவளையும் சேர்த்து முழுங்குவது மாதிரி ஒரு பார்வைப் பார்ப்பாள்! ராசாத்திக்கு எரிச்சலாக இருக்கும். சுகந்தி பார்ப்பதோடு நிற்பாளா?. அடுத்த நாள் காலையில் வாசல் தெளிக்க வெளியே வரும் போது, தயாராக நிற்பாள். ‘என்ன ராசாத்தி! நேத்து என்னமோ பெரிசா எடுத்துட்டு வந்தியே?” நேரடியாக கேட்டு விடுவாள்.

‘அந்த ஐயர் வூட்டுல குடுத்தாங்க. வேற ஒண்ணியுமில்ல. பிளாஸ்டிக் டப்பா! அடியில் வீறல் விழுந்து போச்சுன்னு பேப்பர்காரனுக்கு போடறதுக்கு எடுத்து வச்சிருந்தாங்க. நான் தான் வீட்டுல அரிசி, கிரிசி ஏதாவது போட்டு வச்சுக்க ஆகுமேன்னு கேட்டு வாங்கிட்டு வந்தேன்”

‘உனக்குன்னு வீடு மாட்டுது பாரு. நான் பாக்குற மூணு வீடும், ம்ஹீம் ! ஒண்ணுந் தேறாது.”

‘ஒரு பிளாஸ்டிக் டப்பாக்கே, அப்படி டயலாக்கு பேசி, டான்ஸ் ஆடிட்டுப் போவாளே! இப்ப இந்த பையில இருக்கறதெல்லாம் பாத்தா அவ்வளவுதான் வயிறு வீங்கி வெடிச்சுடுவா!’. வீடு வந்தது. எதிர் வீட்டைப் பார்த்தாள். வாசல் கதவு சாத்தியிருந்தது. உள்ளே லைட் எரியவில்லை. ‘எங்கயோ வெளில போயிட்டா போல! அப்பா நிம்மதி!’ வீட்டுக்குள் நுழைந்தவுடன் கதவைச் சாத்திக் கொண்டாள்.

‘என்ன ! வந்ததும் வராததுமா கதவத் தாப்பாப் போடுற?” தர்மன் கேட்டான்.

‘நீ சாயங்காலம் யாரையோப் பாக்க போணும்னு சொன்ன போவலியா? சுரேசு எங்க?”

‘எதிருல சுகந்தி வந்துக் கூட்டிட்டுப் போயிருக்குது. கோயிலுக்குன்னு சொன்னுச்சு”

‘அச்சச்சோ! அப்ப, புள்ளைய கொண்டு விடுற சாக்குல இப்ப இங்க வருவாளே!”

‘அவ வந்தா என்ன? எதுக்கு இப்பிடி பயப்படுற நீ? பெரிய பெரிய பையி வேற! என்னாது அது?

‘அங்கோரு வீடு சொல்லுவேன தீபாவளிக்குக்கூட நம்ம சுரேசுக்கு, பெரிய பட்டாசு டப்பா, குடுத்தனுப்பிச்சாங்களே அந்த வூட்டுக்காரங்க வெளிநாடு போறாங்க. அந்தப் பொண்ணு, போகும்போது கொஞ்சம் சாமான் குடுத்துட்டுப் போச்சு. ஏரோபிளேன்ல அம்புட்டு சாமானையும், ஏத்த மாட்டாங்களாமே அதான் பாதி சாமானப் போட்டுட்டு போயிடுச்சு. அவங்க அம்மா, அப்பா வந்து ஊருக்கு கொண்டுட்டுப் போறாங்க. அவங்களுக்குத் தேவையில்லைன்னு ரெண்டு, மூணு எனக்குக் குடுத்துட்டுப் போனாங்க. அதுதான் இந்தப் பைபி! சுகந்தி பாத்தாள்னு வையி, அவ்வளவுதான். அப்படியே பையோட இருக்கட்டும். விடிகாத்தால பிரிச்சுக்கலாம்!” ராசாத்தி சொன்னதைக் கேட்டதும், தர்மனுக்கு ஆர்வம் அதிகமானது.

‘அப்படியென்ன பொதையலு சொல்லவாவது செய்யி”

‘சொன்னா உனக்குப் புரியாது. எடுத்து காண்பிக்கறேன். இரு!”

ராசாத்தி ஒரு பையைப் பிரித்து, அதிலிருந்து ‘அந்தப் பொருளை’ எடுக்க முயற்சிக்கும் போது தடதடவென கதவு தட்டும் சத்தம். வேகவேகமாக, எடுத்ததை திரும்பவும் பையில் திணித்து. பையைக் கயித்துக் கட்டிலுக்கு அடியில் தள்ளி விட்டாள்.

‘சுரேச விட்டுட்டுப் போலான்னு வந்தேன். இன்னிக்கென்ன வேலையிலிருந்து லேட்டா வந்தியா? யாரோ, இன்னிக்குக் குடித்தனம் காலி பண்ணுதாங்கன்னு சொன்னேல்ல? பிரபுவ எத்தனை மணிக்கு போகச் சொல்லட்டும்? அவனுக்கு வீடு தெரியாதே!” சுகந்தி வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தாள். ‘உள்ளே வா!’ என்று ராசாத்தியும் கூப்பிடவில்லை.

‘அக்கா! ஒன்பது மணிக்கு அந்த வீட்டுக்கு சாமான் லாரி வருது. பிரபுவ ஞாவமா அனுப்பிச்சிடு. வீடு, அட்ரஸ் ஒன்னும் கஷ்டங் கிடையாது. என்னாத் தெரியுமா, நம்ம ஜான் டாக்டரு புள்ள, புதுசா ஒரு ஆஸ்பத்திரி கட்டியிருக்குது பாரு”

‘ஆங் ! சொல்லு!”

‘அதுக்கு பக்கத்து பில்டிங் தான் நான் சொன்ன வீடு. பு@ கலரு பெயிண்ட் அடிச்சிருக்கும்.”

‘அவங்கிட்ட சொல்லிடுறேன். காசு ஒழுங்கா கொடுப்பாங்கள்ல? போன தடவ இந்த மாதிரி ஒரு எடத்துக்குப் போயிட்டு கட்டிலு, பீரோன்னு அல்லாம் பெரிய பெரிய சாமானுங்க. ரெண்டு அவர் ஆயிருக்குது. புள்ள கையில வெறும் நூறு ரூவாக் குடுத்தனுப்பிப்சிட்டானுங்க. அதான் கேக்கறேன்”.

‘ச்சே! இவங்க அந்த மாதிரி இல்ல! வேலைக்கு மேலயே போட்டுக் குடுப்பாங்க. நீ அனுப்பி வை!”. சுகந்தி கிளம்பினாள். தர்மனுக்கு விஷயம் புரிந்தது. ராசாத்தியிடம் கேட்டான்.

‘ஏன் ! நானே போயிருப்பேன்ல? நீ சொல்லவேயில்ல”

‘கம்முன்னு இரு! வேலை செய்யற எடத்துல, வெயிட்டு தூக்கி, இடுப்பு புடிச்சிக்கினு, ஒரு வாரம் இன்னா அவஸ்தைப் பட்ட ஞாவமில்லையா? பிரபு வயசுப் பையன். சுகந்தி, புள்ளைக்கு கறியும், மீனும் ஆக்கிப் போட்டு. தெம்பா வளர்த்து விட்டிருக்கா. வேலை வெட்டி இல்லாம, வெட்டியா கத்திக்கிட்டு வீணாப் போறான். அதான் அவங் கையிலச் சொல்லச்சொன்னேன்”

‘சரி! இப்பயாச்சும் காட்டு! அந்தப் பையில அப்படி இன்னாதான்னு பாப்போம்”. தர்மன் விடாபிடியாகக் கேட்டான். புருஷன் காட்டிய ஆர்வத்தில் ராசாத்தி உற்சாகமானாள்.

‘டேய் சுரேசு! கதவ சாத்தி தாப்பாப் போட்டுட்டு வாடா!” சுரேசும், என்னவோ விஷயம்ருக்குது என்று, ஓடிப்போய் கதவைப் பூட்டிவிட்டு, அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்துக் கொண்டான்.

‘மொதல்லயே சொல்லிட்டேன். இந்தப் பொருளுங்க எல்லாம் உங்க ரெண்டுபேருக்கும் பயக்கமில்லாதது, அதனால கைய கிய்ய வச்சு ரிப்பேர் ஆக்கிடாதீங்க சரியா” தோரணையாக சொல்லிட்டு, பையிலிருந்து மெல்ல ‘அந்தச்’ சாமானை எடுத்தாள்.

‘அய்யோ! இன்னா இது பாட்டு கேக்கறதுதானே?” பிள்ளை, சுரேஷ் உற்சாகமாகக் கத்தினான்.

‘உஷ்! கத்தித் தொலைக்காதடா! எதிர்வூட்டுக்காரிக்கு காதுல வேத்துடப் போவுது!”

‘என்னா இது. மேடையாட்டம் இருக்குது வெயிட்டு பாக்குற மெஷினா?” தர்மன், கொஞ்சம் ஆர்வம் குறைந்தவனாக் கேட்டான்.

‘வெயிட்டு பாக்கறேன்னு இதுக்கு மேல, கீழ ஏறி கீறி நின்னுராதய்யா! இது கரண்டு அடுப்பு”.

‘கரண்டு அடுப்பா? இத வச்சிக்கட்டு சோறு ஆக்க மிடியுமா என்ன?” தர்மன் கேட்கவும் ராசாத்தி, அதன் செய்முறை விளக்கங்களை விவரித்தாள். அப்பாவும், பிள்ளையும் ‘ஆ’ வென்று வாய்பிளந்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘ஈர வெறகோட பேஜார் பட வேணாம். சீமெண்ணைக்கு, லோல்பட வேணாம். பிளக்க சொருவனோமா பாத்திரத்த வச்சோமா, உலையப் போட்டாமா, அஞ்சு நிமிஷத்துல சாப்பாடு ரெடி!. என்ன கண்ணைக் கட்டுதா? அந்த வூட்டுல நிமிஷமா இதுல சமையல முடிச்சிடுவாங்க! பாக்க, பாக்க ஆசையா இருக்கும். இப்படி சுளுவா சமையலு முடிஞ்சிடும்னா இன்னும் ரெண்டு வூட்டு வேலைக்கு போலாமேன்னு, எத்தினி நாளு நெனச்சிருப்பேன் தெரியுமா. கடைசில அது என் கைக்கே வந்துடுச்சு” இதைச் சொல்லும் போது, ராசாத்தி முகத்தில் அவ்வளவு பூரிப்பு!. ஆனால் தர்மன் முகத்தில், குழப்பம். ‘கரண்டு விஷயம் ! நீ பாட்டுக்கு ஏடாகூடமாக எதனா செய்யப் போயி, ஷாக் அடிச்சுப் போயிடப் போறடியம்மா!” என்றான்.

‘த்தோடா! நாட்டுப்புறம் எப்பிடியெல்லாம் யோசிக்குது பாரு. அத்தினி சீக்கிரம் உன்ன அம்போன்னு வுட்டுட்டு போயிட மாட்டேன். பிளக்க சொருவிட்டு, இது மேலயே கைய வச்சாக் கூட ஒன்னும் பண்ணாது. அவங்கள்லாம் படிச்சவங்க! பாத்து, பக்குவமாத்தான் சாமான் வாங்குவாங்க! உனக்கென்ன இப்போ? நம்ம வூட்டுல நாளைக்கு காலைல, நாஸ்டா இதுலதான். வேடிக்கை பாரு”. ராசாத்தி சொன்னதில் ஒரு வழியாகப் சமாதானப் பட்டுக் கொண்ட தர்மன், தூங்கப் போய்விட்டான்.

‘அம்மா இதில் சமைப்பதைப் பார்க்க வேண்டும்’ என்று சுரேசுக்கு ஆர்வமாக இருந்தது. ‘சரிம்மா! காலைல இதுல சமைக்கறப்போ, சுகந்தி அத்த உள்ள வந்துட்டாள்னா?” பையன் கேட்டதும்தான், ராசாத்திக்கு உறைத்தது. ‘சரிதான் ! எத்தனை நாளைக்குத்தான் இதை மறைக்க முடியும்.? சுகந்திக்குத் தெரிந்தால், என்னன்ன கேள்விக் கேட்பாள், எப்படி எப்படி தோள்பட்டையை வெட்டுவாள், எல்லாவற்றையும் கற்பனைச் செய்து பார்த்துக் கொண்டே ராசாத்தி தூங்கிப் போனாள்.

காலையில் எழுந்ததலிருந்து ராசாத்தி மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஏதாவது மர மேஜைலயோ, ஸ்டூல்லையோ வைக்கணும்னு சொல்லுச்சே, அந்தப் பொண்ணு! வீட்டுல இருக்கறது ஒரேயொரு மரபெஞ்சு தான். அதுலயும் தண்ணித் தவலை வச்சாச்சு. தவலைகளை கீழே இறக்கி வைத்தாள். அந்த வீட்டில் சரியாயிருக்கிற பிளக்கு ஒன்றே ஒன்றுதான். அந்த இடத்திற்கு மரபெஞ்சை இழுத்து, வந்தாள்.

‘காலங்காத்தால ‘சர்புர்ன்னு’ சத்தம் போட்டுக்கிட்டு! ச்சே!” தர்மன் தூக்கம் கலைந்து எழுந்தான். சத்தங் கேட்டு, சுரேசுக்கும் முழிப்பு வந்து விட்டது. ராசாத்தி எதையும் சட்டை செய்யாமல், ‘பச்சைப் புள்ளையை தூளியில் போடுவது’ போல மெல்ல அந்த அடுப்பை அந்த பெஞ்சின் மேல் கவனமாக, இறக்கி வைத்தாள். சாமி கும்பிடுவது போல கன்னத்தில் போட்டுக்கொண்டு பிளக்கைச் சொருகினாள். பிரியா சொல்லிக் கொடுத்தபடி, ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் தண்ணீர் கொஞ்சம் ஊற்றி, பட்டனை அழுத்தினான். ‘க்ளீங்’ என்ற சத்தத்தோடு அடுப்பு வேலை செய்ய ஆரம்பித்தது. டிஜிட்டலில், சிவப்பு நிற எண்கள், ஓளிர்ந்தன.

‘என்னம்மா! அப்படியேக்கீது?” சுரேசுக்குப் பொறுக்க முடியவில்லை. ‘இருடா! சைடில முட்டை முட்டையா வர்றது தெரியல? தண்ணி இப்பத்தான் சூடாவுது”. ராசாத்தி அமைதியாக பதில் சொன்னாள்.

‘சரிதான்! இது என்னிக்கு கொதிச்சு, என்னிக்கு நீ காபி கலந்து, சோறாக்கித் தர்றது? எனக்கு இன்னிக்கு சைட்டுல ஜல்லி கொட்டுற வேலை தெரியுமில்ல!. எட்டு மணிக்கு கரெக்டா அங்க இருக்கணும். இல்லைன்னா மேஸ்திரி கத்துவான்”. தர்மன் சொன்னது, எதுவும் அவள் காதில் விழவில்லை.

‘இந்தா பாரு எப்படி சலசலன்னு சொதிச்சிடுச்சு” ஆனையைக் கண்ட குழந்தை மாதிரி, அவள் குதூகலத்தோடு பேசினாள். காபிப் பொடியை போட்டு இறக்கினாள். ஸ்விட்சை அனைத்து விட்டு, நிதானமாக அதை வடிகட்டி, சக்கரை கலந்து, தர்மனுக்கும் சுரேசுக்கும் கொடுத்தாள். ‘நீ இந்த மாதிரி சமைக்கறதெல்லாம் இன்னிக்கு வேலைக்கு ஆகாது. எனக்கு இந்த காபி மட்டும் போதும். அங்கப் போயி பாத்துக்கறேன்” தருமன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாகக், கிளம்பிப் போய் விட்டான்.

‘அம்மா! இன்னிக்கு இஸ்கூலுக்கு லீவு போடட்டுமா? நேத்திலிருந்து கை காலு எல்லாங் குடையுது”. சுரேஷ் இப்படிக் கேட்டதும் ராசாத்திக்கு கோபம் வந்தது.

‘இந்த அடுப்ப வேடிக்கை பாக்கறதுக்குன்னு இஸ்கூல் மட்டம் போடுறியா? மருவாதியா ஓடிப்பூடு.”

‘இல்லம்மா! நெசமாவே உடம்பு சுடுது. நீ வேணாப்பாரு” சுரேஷ் அப்பாவியாகச் சொல்லவும், ராசாத்தி அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். நல்ல சூடு தெரிந்தது.

‘அய்யோ! நெசமாவே உடம்பு கொதிக்குதுடா! ஜூரந்தான் ! கம்முன்னு படு. தைலம் பூசி விடுறேன்”

‘பசிக்குதும்மா”

‘கரண்டு அடுப்புல அஞ்சு நிமிஷத்துல ரெடியாயிடும்டா! கொஞ்சம் பொறு”. என்றவள், வேகவேகமாக அரிசியை களைந்து வைத்தாள். சாதம் வடிக்கும் பானையில் தண்ணீர் சரித்து அடுப்பின் மேல் வைத்து சுவிட்சைப் போட்டாள். ‘க்ளிங்’ என்ற சத்தம் வந்தது. அடுப்பில், நம்பர்களுக்குப் பதிலாக ஏதோ எழுத்துக்கள் தெரிந்தது. இரண்டு நிமிஷத்தில், மீண்டும் ‘க்ளிங்’ என்ற சத்தத்தோடு அடுப்பு அனைந்து போனது. ‘என்னாச்சு?’ திரும்பவும் பொத்தனை அழுத்தினாள். இரண்டு நிமிடங்களில் மீண்டும் தானாகவே அணைந்துவிட்டது. ராசாத்திக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எதனா ரிப்பேரு ஆயிருக்குமோ? சொன்னா மாதிரி எல்லாம் கரெக்டாதானே வச்சேன்?’. குழம்பினாள். ஒரே வழிதான் இருக்குது. போன் பண்ணி கேட்டுட வேண்டியதுதான்.

தர்மன், வேலைக்குப் போகும் போது தன்னுடைய செல்போனைக் கொண்டு போய்விடுவான். ஆத்திர அவசரத்துக்கு, பக்கத்து பெட்டிக் கடைக்குப் போய் ‘ஒரு ரூபாய்’ போட்டுப் பேசுவாள். ‘பிரியாவுக்கு, இந்த நேரத்துல போன் பண்ண முடியாது. அவங்க அம்மாவுக்கு போன் பண்ணி கேட்க வேண்டியதுதான்’. போன் நம்பர் குறித்து வைத்திருந்த, அட்டையை தேடிப் பிடித்து எடுத்துக் கொண்டாள்.

‘சுரேசு, அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன். நீ படுத்துக்கோ என்ன?” என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி வேகமாக நடந்தாள்.

‘ஹலோ”

‘யாரு?”

‘நான் ராசாத்தி பேசுறேம்மா!”

‘என்னடி சொல்லு!”

‘நல்லபடியா ஊருபோய் சேர்ந்தீங்களா?. நான் அனுப்பிச்சப் பையன், ஒழுங்கா கிட்டேயிருந்து கவனிச்சுக்கிட்டானா?”.

‘ஆமாமா! ஒன்னும் பிரச்சனையில்ல! முழுசா முன்னூறு ரூபா எங்க வீட்டுக்காரர்கிட்ட கேட்டு வாங்கிட்டான். வேறென்ன விஷயம் சொல்லு!”

‘பிரியாம்மா, ஒரு அடுப்பு கொடுத்தாங்கள்ல, அது என்னவோ மிஸ்டேக்கு ஆகிப்போயிடுச்சு பட்டுன்னு அணைஞ்சுப் போயிடுது.“

‘நீ வேற! எனக்கு அதப்பத்தி ஒன்னுந் தெரியாது. கரெண்டு சமாச்சாரம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னுதான் பிரியாகிட்ட முதல்லயே அது எனக்கு வேணாம்னு சொல்லிட்டேன். அவளுக்குக்கூட செட் ஆகல. ரொம்பநாளா சும்மாதான் போட்டிருந்தா”

அந்தம்மாள் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தாள். ஒரு ரூபாய் கணக்கு முடிந்துவிட தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராசாத்திக்கு சப்பென்று ஆகிவிட்டது. அதுதான் அடுப்பைப் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டாளே! இன்னும் எதுக்கு ஒரு ரூபாயை வீணாக்க வேண்டும் என்று அப்படியே வீட்டுக்குத் திரும்பி விட்டாள். வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு ஒரே அதிர்ச்சி. அந்த அடுப்பைத் தொட்டுக்காட்டி, சுரேசிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாள் சுகந்தி.

‘வாக்கா!” ராசாத்தி முகத்தில் அசடு வழிந்தது.

‘என்னாது இது கரண்டு அடுப்பு தானே? ஆரு குடுத்தா?” சுகந்தி கேட்கவும், மென்று முழுங்கி ராசாத்தி விஷயத்தைச் சொன்னாள்.

‘எங்க நாத்தனாரு பொண்ண, கட்டிக் குடுத்துருக்கிறோம் பாரு. அவங்க வூட்டுல இது இருக்குது. அது சரி, அடுப்பு, வேலை செய்யலைன்னு சொன்னியாமே?” சுகந்தி கேட்கவும் ராசாத்தி சுரேசைப் முறைக்க அவன் வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டான்.

‘அடுப்ப வாங்கிட்டு வந்தவ, முதல்ல அதப்பத்தி கேட்டுத் தெரிஞ்சுகிட்டு வந்துருக்கணும். குடுத்த மகராசியாவது, எல்லாம் கரெக்டாக சொல்லியிருக்கணும் !” எல்லாம் தெரிந்தவளாக சுகந்தி நீட்டி முளக்கிப் பேசவும், ராசாத்தி கொஞ்சம் இறங்கி வந்துக் கேட்டாள்.

‘ஏங்க்கா! என்னாச்சு?”

‘என்னாச்சா? நீ பாட்டுக்கு இஸ்டவ்வுல ஏத்தற மாதிரி, அலுமினிய தேய்சாவ, ஏத்தி வச்சிருக்க? இந்த அடுப்புல எவர்சிலுவர் மட்டுந்தான் வைக்க முடியும். மத்ததெல்லாம் வச்சா அடுப்பு அணைஞ்சுதான் போகும்”.

அடுப்பைப் பற்றி இன்னும் பல கதைகள் சொல்லியிருப்பாள். அதற்குள், எதிரில் அவள் வீட்டிலிருந்து மகன் பிரபு கூப்பிடும் குரல் கேட்டது.

‘சரி எதுன்னா எல்ப் வேணும்னா அப்பால வூட்டுக்கு வா!” என்று சொல்லிட்டுப் போய்விட்டாள்.

ராசாத்திக்கு எரிச்சலாக இருந்தது. ‘இதென்னடா இம்சையா போச்சு! சாதம் வடிக்கிற சைசு, சிலுவர் பாத்திரத்துக்கு எங்கப் போறது?’. நான்கு டம்பளர்கள், சாப்பாட்டுத் தட்டுகள் மூன்று இதைத் தவிர, அவளிடம் இருக்கும் சாமான்கள் எல்லாமே அலுமினியம் தான். ‘அரிசி வேற ரொம்ப நேரமா ஊறிக்கிட்ட இருக்குது. சாதம் சல்லுன்;னு போயிடுமே என்ன செய்யறது?’ ராசாத்தி என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டிருந்தாள். ‘வேற வழியில்ல ஸ்டவைப் பத்த வைக்க வேண்டியதுதான்! பாவம் பசி பசின்னு புள்ள கத்திக்கிட்டிருக்குது’ என்று முடிவுக்கு வந்தவளாக நமுத்துப்; போயிருந்த வத்திக்குச்சிகள் ஒவ்வொன்றாக உரசத் தொடங்கினாள்.

‘அம்மா! ரொம்ப பசிக்குதும்மா, வயிறு நோவுது” சுரேஷ் பரிதாபமாகக் கேட்டான். சாப்பாடு ரெடியாக இன்னும் அரைமணி நேரமாவது ஆகும். ‘இருடா! நான் போயி ரொட்டி பாக்கெட் வாங்கிட்டுப் வந்துடுறேன்”. என்றபடி திரும்பவும் அதே கடைக்குச் சென்றாள்.

ரொட்டி வாங்கி வரும் போதுதான் அவளுக்கு ‘அது’ ஞாபகம் வந்தது. வீட்டிற்குள் வந்தவள், பிரியா கொடுத்த சாமான் பையலிருந்து ‘;அதை’ வெளியே எடுத்தாள்.

‘அம்மா, ரொட்டி வேண்டாம்மா? வாய்க்கு நல்லா இருக்காது”

‘இதோ பாருடா! இது என்னன்னு நெனைக்கற, இது ரொட்டி சுடுறது. இதுல போட்டு எடுத்தா ரொட்டி சாப்பிட மொறுமொறுன்னு ருசியா ஆயிடுது. அந்த வூட்டுல ஒரு தடவ இதுல போட்டு குடுத்தாங்க. நான் சாப்பிட்டிருக்கேன். இந்த மெஷினையும், நமக்கே நமக்குப் வச்சிக்கிடச் சொல்லி அந்தப் பிரியா பொண்ணு குடுத்திடுச்சு தெரியுமா?”

சுரேசுக்கு பசி, காதை அடைத்ததில் அம்மா சொன்னது எதுவும் காதில் விழவில்லை. சோர்ந்து படுத்துக் கொண்டான். ஸ்டவ் அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ரொட்டிச் சுடும் மிஷினின் ப்ளக்கை சொருகினாள். பிரியா சொல்லிக் கொடுத்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டவள், கவனமாக அதனுள் இரண்டு ரொட்டித் துண்டுகளைப் போட்டாள். இன்னும் ஒரு பொத்தானை அழுத்தினாள். ‘ரொட்டி’ பொரிய ஆரம்பித்தது.

பாக்கெட்டைப் பார்த்தாள். எட்டு துண்டுகள் இருந்தது. ‘ஆளுக்கு நாலு. இத வச்சே நாஸ்தாவ முடிச்சிட்டு சாப்பாடை மதியதுக்கு வச்சுக்க வேண்டியதுதான்!’ மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். ஒரு சத்தத்தோடு ரொட்டித் துண்டுகள் வெளியே எட்டிப் பார்த்தன. ஆர்வமாக அதை எடுத்துப் பார்த்தவள் ஏமாந்துப் போனாள். அந்த ரெண்டு துண்டுகளும் கருகருவென தீய்ந்துபோய் வெளியே வந்திருந்தன.

‘ச்சே! என்னா இது? அவுங்க வூட்டுல எல்லாமே கரெக்கிட்டாதானே வேலை பண்ணிச்சு. அந்த சுகந்தி கண்ணு, கொள்ளிக்கண்ணு ஒன்னும் செட்ஆவல! இந்தத் தடவ கொஞ்சம் சீக்கிரமே மிஷின அனைச்சுப் பார்க்கலாம்’ என்று திரும்பவும் இரண்டு துண்டுகளை உள்ளே வைத்தாள். அதற்குள் அங்கே உலைப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. ஸ்டவ் மஞ்சளாக எரிய ஆரம்பித்திருந்தது. அந்தப் பக்கம் வேகமாக ஓடிச் சென்று உலைத் தண்ணீரைக் கொஞ்சம் மொண்டு தனியாக வைத்துக், கிளறிக் கொடுத்தாள்.

‘அய்யோ! ரொட்டி மிஷினு?”, இந்தப் பக்கம் வேகமாக ஓடிவந்தவள் முகத்தில் ஈயாடவில்லை. முன்பை விட அதிகக் கருப்பாக இரண்டு ரொட்டித் துண்டுகளையும் மிஷின் வெளியே தள்ளியிருந்தது. ‘ச்சே! நாலு துண்டு வீணாப் போச்சே! பன்னென்டு ரூவால, ஆறு ரூவா அநியாயமா போச்சு! இத்தோட நிறுத்திக்கணும்.’ என்று மீதியிருந்த பாக்கெட்டை அப்படியே சுரேசிடம் கொடுத்தாள். கப்கப்; என்று முழு மூச்சில் பாக்கெட்டை காலி பண்ணிவிட்டு திரும்பவும் படுத்துக் கொண்டான்.

ராசாத்தி, கரிந்துபோன ரொட்டியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இந்நேரத்திக்கி சாப்பாடு ஆக்கி, கொளம்பும் ஆக்கியிருப்பேன்!. இந்த மிஷின்களோடப் போராடி, நேரம் வீணாப் போனதுதான் மிச்சம். அந்த மனுஷன்கூட சாப்பிடாது, கொள்ளாது போயிடுச்சு’ மனதில் சலிப்புத்தட்டியது. சாயங்காலம் வீட்டுக்குள் வந்ததும், வராததுமாக தருமன் கேட்டான்.

‘இன்னா! கரண்டு அடுப்புச் சமையலு என்னா சொல்லுது? கை, கால் கழுவிட்டு வரேன். சாப்பாடு எடுத்து வை பாப்போம்!”. சாப்பிட உட்கார்ந்தவனிடம் கரண்டு அடுப்பு, ரொட்டி மிஷின் எல்லாம் காலை வாரிவிட்டக் கதையை, சோகமாகச் சொல்லி முடித்தாள்.

‘இது வேறயா? சரி வுடு. உங்கப்பன் குடுத்தச் சீரு வம்பாப் போன மாதிரி கவலப்படறயே?. எல்லாஞ் சும்மாக் கெடச்சது தானே?”

‘அதுக்கில்ல, சட்டுபுட்டுன்னு சமைச்சிட்டு அடுத்த வேலைய பாக்கலாமேன்னு நெனைச்சுதான் வாங்கிட்டு வந்தேன்”

‘இதுல எல்லாம் எதனா வௌகாரம் இருக்கும் ராசாத்தி! இல்லன்னா ஏன், வூட்டுவேல செய்யற பொம்பளைக்கு இத்தனையும் சும்மா தூக்கிக் குடுக்கறாங்க சொல்லு?”

‘அதானே!”

‘ஒனக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சுன்னா, சுகந்தி சொல்றா மாதிரி சில்வரு குண்டான் வாங்சி வச்சுப் பாரு”

‘வாங்கறதா? காசுக்கு எங்கப்போறது? இருக்குற அஞ்சு பத்தையும் பாத்திரக்காரனுக்குக் குடுக்கச் சொல்றீயா?”

‘ உஞ்சௌரியம். பாத்துச் செய்! எனக்கு முட்டிக் காலெல்லாம் நோவுது. நான் படுக்கறேன்”

படுத்ததுமே தருமனும், சுரேசும் தூங்கி விட்டார்கள். ராசாத்திக்கு தூக்கம் வருவேனா என்றது. ‘ச்சே இந்த அடுப்பு வீட்டுக்குள்ள வந்தாலும் வந்துச்சு, தூக்கமே வராம பேஜாரா ஆயிடுச்சே!’ அவள் மனசு எவ்வளவு சலித்துக் கொண்டாலும் கரண்டு அடுப்பு கண்ணுக்குள்ளேயே நின்றது. ‘விறகு, சீமெண்ணை, ரேஷன்கடை தள்ளுமுள்ளு, புகை, கண்ணீர், திரி ஸ்டவ்வில் திரி போடுவது, வத்தி பெட்டியை தேடித் தவிக்கிறது இது எதுவும் இல்லாம சுவிச்ச போட்டா சோறு!, விலை எப்படியும் ஆயிரக் கணக்குல இருக்கும். நம்மால கனவுல கூட வாங்க முடியாது. ஏதோ வெளிநாட்டுக்குக் கிளம்பற அவசரத்துல அந்த பிரியா பொண்ணு, ப்ரீயா தூக்கி குடுத்துடுச்சு! நல்லபடியா இதை வச்சுப் படைக்கணும் !’ என்ன வழி என்று யோசித்தாள்.

டிரங்கு பெட்டியில் தாய் வீட்டு சீதனமாக பழைய குத்து விளக்கு, பித்தளை சொம்பு, செம்புக் கரண்டி என நாலைந்து சாமான்களை போட்டு வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. ‘டவுன்ல இருக்கற மங்களம் பாத்திர கடையில இதெல்லாம் கொண்டு எடைக்கு எடை குடுத்தா வேண்டிய சில்வர் பாத்திரங்கள வாங்கிட்டு வந்திடலாம்! இதயெல்லாம் பத்திரமா அடைக்காத்து, கல்யாணவரிசை குடுக்கறதுக்கு, பொம்பளப் புள்ளையா இருக்குது? ஆத்திர அவசரத்தக்கு உதவட்டுமே!” ராத்திரி தூங்காமல் யோசித்ததில் நடு சாமத்தில் ராசாத்திக்கு இந்த நல்லவழி பிறந்தது.

விடிந்ததும் விடியாததுமாக அந்த சாமான்களை ஒரு பையில் போட்டு எடுத்து வைத்தாள். எல்லாவற்றையும் தருமன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. வழக்கம் போல் எட்டு மணிக்கு வேலைக்கு கிளம்பிப் போய்விட்டான். சுரேசையும் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி விட்டு கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பினாள்.

‘என்ன ராசாத்தி பதினோரு மணிக்குத்தான் வேலைக்குப் போவ? இன்னிக்கு என்ன காலைலேயே கௌம்பிட்ட?” சுகந்தி இவளை நோக்கி நடந்து வந்தாள். ராசாதிக்குக் கோபமாக வந்தது. ‘இவளுக்கு வீட்டுல வேலைய இருக்காதா? சகுனமே சரியில்லையே!’அவள் மனதுக்குள் நினைத்ததை கண்டுபிடித்தவளாக சுகந்தி கேட்டாள்.

‘என்ன ஏதாவது முக்கியமான வேலையா கௌம்பறையோ? நான் உங்கிட்ட ஒன்னு சொல்லிட்டுப் போகலாமேன்னு வந்தேன்.”

‘சொல்லுக்கா” ராசாத்தி வேண்டா வெறுப்பாகக் கேட்டாள்.

‘இல்ல! நீ வாங்கிட்டு வந்திருக்கியே கரண்டு அடுப்பு, அதுக்கு கரண்டு பில்லு எக்குத் தப்பா, ஜாஸ்தியாவுமாம். நேத்து நைட்டு தற்செயலா எங்க நாத்தனாரு பொண்ணு போன் போட்டிருந்துச்சு. உனக்காக கரண்டு அடுப்பப் பத்தி வௌரம் கேட்டேன். அவுங்க வூட்டுக்காரரு ஷாப்புக் கடை வச்சிருக்காரு. அவுங்களுக்கே கரண்டு பில்லு கட்டி மாளலையாம். வேண்டாம்னு ஏறக் கட்டிட்டாங்களாம் !”

சுகந்தி என்ன நோக்கதில் அப்படிச் சொன்னாளோ தெரியாது. ஆனாலும் ராசாத்pக்கு கொஞ்சம் பயம் பிடித்து விட்டது. ‘அம்மாடி! இப்படி வேற பிரச்சனை இருக்குதா?’

‘அதுக்கெல்லாம் யோசிக்காத! வாங்கினது வாங்கிட்ட, ஒரு மாசம் வச்சுப்பாரு! சரி நான் வர்ரேன்”;

சுகந்தி தன் வீட்டுக்குப் போய் விட்டாள். ராசாத்தி, பூட்டிய வீட்டைத் திறந்து, உள்ளே வந்து கையிலிருந்த பையை ஓரமாக வைத்தாள். ஒரு சொம்பு நிறைய தண்ணீரை கடகடவென குடித்தாள். ஏதோ முடிவுக்கு வந்தவளாக திரும்பவும் வீட்டை பூட்டிக் கொண்டு கிளம்பினாள். கையில் ஒரு ‘கட்டைப் பை’.

அன்று சாயங்காலம் தருமன் கொஞ்சம் தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான்.

‘ராசாத்தி! சுரேசு எங்க?”

‘டியூசன்லயிருந்து இன்னும் வரல”

‘சாப்பாடு எடுத்து வை” என்று சொல்லியவன் கண்களால் அடுப்படியை ஆராய்ந்தான்.

‘பித்தளையப் போட்டு சில்வர் சாமான் வாங்கிட்ட என்ன?”

ராசாத்தி பதில் சொல்லாமல் சாப்பாட்டுத் தட்டை அவன் முன் வைத்தாள்.

‘பித்தள சாமானுங்க அருமை உனக்குத் தெரியல! ஆனைய வித்து அங்குசம் வாங்குன கதையா, பித்தளைய வித்து ஒண்ணுக்கும் உதவாத எவர்சிலுவர வாங்கிட்டுப் வந்திருக்க!”

ராசாத்தி மௌனமாக இருந்தாள்.

‘சரி எவ்ளோக்குப் போச்சு? என்னன்ன வாங்கின?”

ராசாத்தி பதில் சொல்லாமல் சோற்றின் மேல் மீன்குழம்பை ஊற்றினாள்.

‘ என்ன நீ ! நான் கேட்டுட்டே இருக்கேன். கம்முன்னு இருக்கிறியே. கடைக்கு போனியா இல்லையா?”

‘போனேன்”

‘சாமான எடைக்குப் போட்டியா இல்லையா?”

‘போட்டேன்”

‘எவ்ளோக்குப் போச்சு?”

‘ரெண்டுஞ் சேத்து ஐநூறு ரூவாக்கு”

‘சிலுவர் சாமான் வாங்கிட்டியா? எடுத்தா பாப்போம்!”

‘நான் சாமான் எதுவும் வாங்கல! திரி ஸ்டவ்வு மக்கர் பண்ணிக்கிட்டு இருந்துச்சுல, அதான் அந்த ரூவாய்க்கு மேல கொஞ்சம் காசு போட்டு பம்பு ஸ்டவ்வு வாங்கிட்டு வந்துட்டேன்”.

‘அப்ப கரண்டு அடுப்புக்கு சிலுவர் பாத்திரம்?”

‘கரண்டு அடுப்பே இல்ல! அப்புறம் இன்னாத்துக்கு எவர்சிலுவரு? நமக்கு அலுமினியமே போதும் !”

தருமன் குழப்பமாக அவளைப் பார்த்தான். அவன் பார்வை ஓரமாக இருந்த மரபெஞ்சின் மேல் சென்று நின்றது. அது காலியாக இருந்தது.

‘என்ன புள்ள?”

‘நான் ஐநூறு ரூவாக்கு போச்சுன்னு சொன்னது பித்தள சாமான இல்ல! அந்த கரண்டு அடுப்பையும், ரொட்டி மிஷினையும் தான்!”

பதிலுக்கு அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

தருமன் ராசாத்தியைப் பார்த்து பாசமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரிந்ததும், ராசாத்தி முகத்திலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு நிம்மதியாக ஒரு புன்னகை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *