துன்பங்கள் நம்மை புடம் போடுகின்றன

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 7,021 
 

விமலாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தலையை பிய்ச்சுக்க வேண்டும் போல் தோன்றியது. அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்றுக்கு ஐந்து வயது. மற்றதுக்கு மூன்று வயது. எதற்கெடுத்தாலும் கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவு. வீட்டைக் கொண்டு நடத்தும் அளவுக்கு கணவனின் வருமானம் போதவில்லை. அவளும் ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று பார்த்தால் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு எப்படி வேலைக்குப் போவது என்ற கேள்வி பெரிதாக எழுந்தது.

எல்லாவற்றையும் யோசித்துப்பார்க்கும் போது மனது மேலும் குழம்பிப்போக இரண்டு நாள் நிம்மதியாக இருந்து விட்டு வரலாம் என்று அவள் தன் அம்மாவைப் பார்க்கப் போனாள். அவளது அம்மாவின் முகத்தை பார்த்தாலே அவளுக்கு பாதிப்பிரச்சினைகள் தீர்ந்த மாதிரி நிம்மதியாக இருக்கும். அந்த ஊரார் கூட அம்மா மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்கள். ஊரில் உள்ள பெண்கள் தமக்கு ஏதும் பிரச்சினை என்றால் தொட்டது தொண்ணூறுக்கும் அம்மாவைத்தான் தேடி வருவார்கள். அவர்களது அத்தனை பிரச்சினைகளுக்கும் அம்மாவிடம் ஏதோ ஒரு தீர்வு இருக்கும்.

விமலா வீட்டில் நுழையும் போதே அவள் அம்மாவுக்கு அவள் ஏதோ பிரச்சினை ஒன்றை தலையில் சுமந்து கொண்டுதான் வருகிறாள் என்பது புரிந்து விட்டது. என்றாலும் அவளுக்கு என்ன பிரச்சினை என்று அம்மா ஒன்றுமே கேட்கவில்லை. அவள் பிரச்சினைகளை அவள் வாயாலேயே சொல்லட்டும் என்று விட்டு விட்டாள். பிரச்சினைகளால் அல்லல்படும்
ஒருவர் அந்த பிரச்சினையை யாரிடமாவது சொன்னாலேயே பாதிப்பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பதில் அவளுக்கு அசையாத நம்பிக்கை இருந்தது.

அவர்கள் காலைச்சாப்பாட்டை சேர்ந்தே சமைத்தனர். அதன் பின் காலை ஆகாரத்தை உண்ட பின் ஆறுதலாக அமர்ந்திருக்கும் போதே விமலா தன் பிரச்சினைகளை ”மடைதிறந்த வெள்ளம் போல்” கொட்டினாள். பின் தன் ஆதங்கத்தை அடக்க முடியாமல் விசும்பி அழுதாள். அம்மா அவள் கூறியவற்றை அமைதியாகக் கேட்டு விட்டு அவள் சிறிது நேரம் அழட்டும் என்று விட்டு விட்டாள். பின் அவள் கையைப்பிடித்து அவளை அணைத்தவாறே சமையல் கட்டுக்கு அழைத்துச்சென்றாள். அங்கே அவளை ஒரு நாற்காலியில் அமர வைத்து விட்டு மூன்று கொதிக்க வைக்கும் கொள்கலன்களை எடுத்தாள்.

அவற்றை மூன்று அடுப்புக்களில் வைத்து நீர் ஊற்றி கொதிக்க விட்டாள். பின் ஒன்றில் கரட் கிழங்கையும் மற்றதில் முட்டை ஒன்றையும் மூன்றாவதில் கொஞ்சம் கோப்பிக் கொட்டைகளையும் போட்டு அவிய விட்டாள்.

அவை நன்றாக அவியும் வரை அவர்கள் காத்திருந்தார்கள். தன் அம்மா என்ன செய்யப்போகிறாள் என்பது தொடர்பில் விமலாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

அம்மாவைப்பார்க்க ஒரு மாயாஜாலக்காரன் வித்தை காட்டுவதற்கு முன் மேற்கொள்ளும் முஸ்தீபுகள் போலவே இருந்தன.

இடையில் அவர்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.

விமலாவின் அம்மா அவை மூன்றும் நன்றாக அவிந்து வெந்து விட்டன. ஒன்று கருகியதும் முட்டையையும் கரட்டையும் ஒவ்வொரு பீங்கானில் வைத்தாள். கோப்பியை ஒரு கப்பில் ஊற்றி அதனையும் அவற்றுக்கருகிலேயே மேசை மீது வைத்தாள். கோப்பி ஆவி பறக்க கமகமத்துக்கொண்டிருந்தது. அதன் பின் அவையெல்லாம் என்ன என்று மகளைப் பார்த்துக்கேட்டாள்.

மகளும் கோமாளியைப் போல அம்மாவைப்பார்த்து சிரித்து விட்டு புதிதாக அவற்றைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு ”கரட், முட்டை, கோப்பி” என்றாள். பின் அம்மா விமலாவை தன்னருகில் அழைத்து அவற்றை தொட்டுப்பார்க்கும்படி பணித்தாள்.

கரட்டை எடுத்துப் பார்த்த விமலா கொதிக்க வைப்பதற்கு முன் கடினமாக இருந்த அது இப்போது மெதுவாகப்போய் விட்டதைக்கவனித்தாள். அதேபோல் முட்டையை எடுத்து அதன் ஓட்டைப்பிரித்தாள். உள்ளே முன்பு திரவமாக இருந்த முட்டை நீரில் வெந்து கதித்துப்போயிருப்பது தெரிந்தது. கோப்பியை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சினாள். அது கமகமத்துக் கொண்டு வெது வெதுப்பாக தொண்டைக்குள் இறங்கும் போது புத்துணர்ச்சி தானாகவே வருவது போல் தோன்றியது. அவள் புன்னகைத்துக்கொண்டே ”இதற்கெல்லாம் என்ன அர்த்தம்” என்று தன் அம்மாவைப்பார்த்துக் கேட்டாள்.

”இந்தப்பொருட்களும் மனித மனத்தைப் போன்றுதான் துன்பத்தை எதிர்கொள்வதில் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. கரட்டைப் பார்த்தாயா முன்பு கடின தோற்றத்தைக் கொண்டிருந்த அது கொதிநீரில் கொதித்துத் துன்பப்பட்டு மென்மையாகிப் போய்விட்டது. அது துன்பத்தின் முன் அடிபணிந்து போய்விட்டது”

”முட்டையும் அப்படித்தான். முட்டையின் உள்ளிருக்கும் உள்ளீட்டைப் பாதுகாப்பது அதன் ஓடுதான். ஆனால் அதனை கொதிக்கும் நீரில் இட்ட போது அந்த மேலோடு சிதிலமடையும் போது அதன் உள்ளீடு திண்மமடைந்து கெட்டியாகின்றது”.

”ஆனால் கோப்பிக்கொட்டைகள் வித்தியாசமான பிரதிபலனைத்தருகின்றன. அவை கொதிக்கும் நீரில் நிந்தி விளையாடி அந்தத்தண்ணீரையே சுவையுடையதாக மாற்றி விடுகின்றன”.

இதில் இருந்து மனிதர்கள் பாடங்கற்றுக்கொள்ள வேண்டும். ”நீ என்னவாக இருக்க ஆசைப்படுகிறாய் விமலா” விமலாவின் தாய் தன் மகளை பாசத்துடன் பார்த்தாள். தன் மகள் துன்பங்களைக்கண்டு துவண்டு போகக்கூடாது என்பதில் அவளுக்கு பெரும் அக்கறை இருந்தது.

எல்லாத்துன்பங்களும் மனிதர்களுக்குத்தான் வருகின்றன. எத்தனை பேர் அவற்றை எதிர்கொண்டு போராடி எதிர் நீச்சலடித்து வாழ்க்கையின் உச்சாணிக்கொம்பு நோக்கி முன்னேறுகிறார்கள். மிகச்சிலருக்கு மாத்திரமே அந்த திடசங்கற்பம் காணப்படுகின்றது. அதனால் தான் வள்ளுவர் கூறினார் ”இடுக்கண் வருங்கால் நகுக” என்று. கரட் பார்ப்பதற்கு பலமானதாகவும் உறுதியானதாகவும் இருந்தது. ஆனால் அதனை கொதிக்கும் நீரில் இட்ட போது அது துவண்டு மென்மையாக தன்னை இழந்து விட்டது.

முட்டைக்கு என்ன நடந்தது? அது ஓட்டுக்குள் தான் பாதுகாப்பாக இருப்பதாகக்கருதியது.

ஆனால் கொதிநீரில் போட்ட போது பயந்து நடுங்கி தன் பாதுகாப்பு உணர்வை துறந்து உள்ளுக்குள் தன் இதயத்தைக் கட்டியாக்கிக்கொண்டது. நாம் ஆரம்பத்தில் திரவத்தைப் போலிருந்து துன்பத்தைக்கண்டு கலங்கி நம் இதயத்தைக் கல்லாக்கிக்கொள்ள முடியாது.

உண்மையில் கோப்பிக்கொட்டை துன்பத்தின்போது தன்னை மாற்றிக்கொள்ளாது தன் சூழ்நிலையை மாற்றியது. தன்னை துன்பமடைய வைத்த கொதிநீரை சுவைக்கும் பானமாக மாற்றியது. நாம் எதிர்கொள்ளும் துன்பங்களை நம்மை புடம் போட வந்த நெருப்பாக நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப்பயப்படாமல் தீக்குளித்து மேலேவர வேண்டும். அவை நம்மை மேலே உயர வைக்கும் படிக்கட்டுக்களாகக் கருதவேண்டும்.

துன்பங்களே நம்மை புடம்போடுகின்றன.

தோல்விகளே நம்மை வெற்றி நோக்கி இட்டுச் செல்கின்றன. நம் வாழ்வில் நமக்குக் கிடைப்பவற்றை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வெற்றியடைந்த மனிதன் எப்போதும் தான் கடந்து வந்த துன்ப வரலாற்றுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

அம்மாவின் இந்த அனுபவ பூர்வமான விளக்கத்தின் பின் விமலா மிகத்தெளிவடைந்தவளாக இருந்தாள். தான் மூன்று நாள் இருந்து விட்டுப்போக வேண்டும் என்று வந்ததை மறந்து அடுத்தநாள் அதிகாலையிலேயே புறப்பட்டாள். அவளுக்கு உடனேயே தன் கணவனை பார்க்க வேண்டும் போலிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *