காற்று புகாத கண்ணாடி காகிதத்தினுள்ளும் கைநீட்டி குறும்பாக சிரித்தது அந்த வெள்ளை நிற டெடி பொம்மை. பொம்மைக்கு முற்றும் முரணாக கரடுமுரடான முகத்துடனும் கன்னத்தில் வெட்டுத்தழும்புடனுமான அந்த நடுத்தர வயது மனிதரின் மடியில் மூச்சு விடாமலும் மனதளவில் சிரித்துக்கொண்டேயிருந்தது அந்த டெடி. பத்திரமாக ஒரு கையால் பொம்மையை அணைத்தும் மறுகையால் முன்சீட்டுக் கம்பியை இறுக்கமாக பிடித்தபடியுமாக பேருந்தின் முன்சீட்டில் அமர்ந்திருந்தார். டிரைவர் சீட்டின் பின் இருக்கை என்பதால் முன்புறக் காட்சிகள் தெளிவாக இருக்க, ஏதோ தீவிர யோசனையுடன் மனதில் ஒட்டாத காட்சிகளை வண்டியின் ஓட்டத்தோடு தள்ளிக்கொண்டிருந்தார். ‘தீவிர’ யோசனை அவரது முகத்தை மேலும் கடுமையாகக் காட்டியது.
ஏதோ யோசனையில் இருந்தவரை திடீரென வந்த பெண்ணின் அதட்டல் குரல் திரும்பிப் பார்க்க வைத்தது. இடப்புறம் வெடுக்கென்று திரும்பியவனின் முகபாவத்தைப் பார்த்து திடுக்குற்ற பெண் பாதி வார்த்தைகளை விழுங்கியவளாய் குரலைத் தாழ்த்தி பேச்சை நிறுத்தியே விட்டாள். குரலெழுப்பிய பெண்ணின் மடியில் அடங்காது திமிறி நெளிந்து கொண்டிருந்தது நான்கைந்து வயதுடைய சிறுமி. எதேச்சையான ஒரு நிகழ்வு என உணர்ந்தவனாய் மீண்டும் பார்வையை வெளியேயும் நினைவுகளை உள்ளேயும் செலுத்தத் தொடங்கினார். ஆனாலும் அந்த நிகழ்வின் தொடர்ச்சி அனிச்சையாக அவனுள் சென்றுகொண்டிருந்தது.
“எனக்கு வேணும்….ம்ம்..வாங்கித்தா…” சிறுமி அழுதபடி அம்மாவை அடிக்கத்தொடங்கியிருந்தது.
“வீட்டுக்குப்போய் அப்பாவ வாங்கிதரச் சொல்றேண்டி.. ஏன் இப்டி பப்ளிக் ப்லேஸ்ல தொந்தரவு பண்ற…”
“எனக்கு இப்ப வேணும்…வாங்கிக் குடு..’’ என்று சப்பாணி ஆட்டம் ஆடத் தொடங்கியிருந்தது.
“ரொம்ப அழுதன்னா டிரைவர் அங்கிள் நம்ம வெளில இறக்கி விட்றுவாங்க..சொன்னா கேளுடி”
“இல்ல எனக்கு வேனும்”” என்றபடி இரண்டு கைகளையும் உதறியபடி மடியிலிருந்து இறங்க முயன்றது.
இருகைகளால் சிறுமியை அடக்கியபடி, “போன வாரம்தான பிங்க் கலர்ல வாங்கித் தந்தேன், அப்புறம் என்ன…”
“எனக்கு ஒயிட் கலர்தான் வேனும்…ம்ம்”
“இது கடையில்லடி …அங்கிள் அவங்க பாப்பாவுக்கு வாங்கிட்டுப் போறாங்க.. அவளும் உன்ன மாதிரி அப்புறம் அழுவால்ல..”
ம்ம்….என்றபடி அம்மாவை அடிக்கத்தொடங்கியது.
அதுவரை ஏனோவென்று இருந்தவருக்கு சட்டென்று ஏதோ மனதில் உரைக்க தன் கையிலிருந்த பொம்மையை தொட்டுத் தடவினார்.
“அடுத்த ஸ்டாப் கீழ்பாக். இறங்க வேண்டியவங்க ரெடியாய்க்கங்க.” என கண்டக்டர் முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தார்.
பொம்மையை கையில் தாங்கி எழுந்தவரைப் பார்த்ததும் சிறுமியின் அழுகை உச்சஸ்தாயியை அடைந்தது. அவளின் வாயை அடைக்க முயன்றவளாக அந்தப் பெண் தானும் எழ முயன்று கொண்டிருந்தாள்.
படிக்கட்டுக்கு அருகே நின்றுகொண்டிருந்தவர் ஏதோ யோசித்தவராக சட்டென்று சிறுமியிடம் திரும்பி , “இந்த பொம்மை உனக்கு வேனுமா?” என்றார் குனிந்தபடி.
அவரது செய்கையால் பேச்சடைத்த சிறுமியை கையால் பிடித்த பெண் அவரது முகத்தை மேலும் அருகில் பார்த்ததால் மிரண்டு போய், “இல்ல இருக்கட்டும் அவ சும்மா முரண்டு பண்றா..” என்று இழுத்து முடிப்பதற்குள், “ஆமா” என்று பொம்மையை நோக்கி கையை நீட்டினாள்.
“என்ன இது கெட்ட பழக்கம்” என்றபடி அம்மா சிறுமியின் கையைத் தட்டிவிட்டாள்.
“ஐயோ, குழந்தைக்கு என்ன தெரியும்? என் ஒய்புக்குதான் வாங்கினேன். அவளுக்கு இன்னைக்குப் பிறந்தநாள். அவளப் பாக்கதான் போயிட்டிருக்கேன். அவளுக்கு டெடி ரொம்பப் பிடிக்கும். ஆனா இவளுக்குக் கொடுத்துட்டேன்னு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா..” என்றபடி சிறுமியின் கன்னத்தை வருடினார்.
அதற்குள் பொம்மையின் அணைப்பு இடம்மாறியிருந்தது. பேருந்தும் நிறுத்தத்திற்கு வந்திருந்ததால் வேறேதும் நிகழ வாய்ப்பில்லாமல் அனைவரும் இறங்கியிருந்தனர். பொம்மையும் கூட.
பொம்மையையும் சிறுமியையும் தூக்கியபடி அவருக்கு நன்றியாவது சொல்ல நினைத்துத் திரும்பிய போது அவர் வேகவேகமாக கல்லறைக்குள் வெறும்கையுடன் சென்றுகொண்டிருந்தார்.
காற்றுப் புகாத கண்ணாடி காகிதத்தினுள்ளும் கைநீட்டி குறும்பாக சிரித்தது அந்த வெள்ளை நிற டெடி பொம்மை