பாதைகள் மாறினோம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 18, 2021
பார்வையிட்டோர்: 2,276 
 

வீட்டினுள்ளே இருக்கப் புழுங்கி அவிந்தது. கதி ரையை எடுத்து வெளியே முற்றத்திற் போட்டுவிட்டு அமர்ந்தேன். முற்றத்து வேப்பமரம் காற்றை அள்ளி வீசியது. அந்தச் சுகத்தில் அப்படியே நீட்டி நிமிர்ந்து கதிரையிற் சாய்ந்தேன். மூத்தமகன் ஓடிவந்தான்.

“என்ன ஜெயந்தன்?”

“கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போறனெண்டு சொன்னீங்களெல்லே?”

‘கொஞ்ச நேரம் நிம்மதியாய் இருக்க விடமாட்டுதுகள்’ என எரிச்சலேற்றட்டது.

அவன் தலையையும் கண்களையும் திருப்பித் திருப்பி ஒவ்வொரு சொல்லாக உச்சரித்துச் சொன்னவிதம் அந்த எரிச்சலைப் பறக்கடித்தது. அவனை அப்படியே கட்டியணைத்தேன். இப்படித்தான், சிலவேளைகளில் பிள்ளைகளுடன் எதற்காவது எரிந்து விழுந்துவிட்டு கொழும்புக்குச் சென்றபின்னர் கவலைப்படுவதுண்டு. அதனால் ஒவ்வொரு முறையும் லீவில் வரும்பொழுது பிள்ளைகளுடனோ மனைவியுடனோ கடிந்து கொள்வதில்லை என எண்ணிக்கொண்டுதான் வருவேன்.

பிள்ளைகள் என்றதும் பத்துப் பிள்ளை பெற்ற பின் னும் எட்டுமாதக் கதையல்ல. அளவான குடும்பத்தில் ஆனந்தம் அதிகமாம். அதனால் கட்டுப்பாடானவன் என்றும் அர்த்தமில்லை. அழகான மனைவியை வைத்துக் கொண்டு அதைப்பற்றி நினைக்கத் தைரியம் ஏது? கொழும்பிலிருந்து இரண்டொரு நாள் லீவு கிடைத் தால் ஓடிவந்துவிட்டுப் போவதுண்டு. இந்த விசித்தி ரத்தில் என்ன கட்டுப்பாடு வேண்டியிருக்கிறது?

மூத்தவனுக்கு வயது நாலு. அடுத்தது இரண்டும் பெட்டைகளாகவே பிறந்துவிட்டன. அது எனக்குப் பெரிய மனக்குறை – ஆனால் கவிதா அடிக்கடி சொல்லு வாள், ‘அதுக்கென்ன எனக்கு உதவியாயிருப்பாளவை தானே? என்று இந்த விஷயத்தில் சிலவேளை எங்களுக் குள் தகராறு ஏற்படுவதுமுண்டு. அப்பொழுதெல் லாம், “நீ இஞ்சை கொண்டுவந்து குவிச்சிருக்கிற தொகையிலை இன்னுமின்னும் பெட்டையளையே பெத் துப்போடு” என அவள் வாயை அடக்கிவிடுவேன்,

அவளுடைய முகம் ‘உம்’மென்று மாறிப்போகும் . சாலக்கண்ணீர் வரும். பிறகென்ன? அது சொல்ல வேண்டிய கதையில்லை; ”சரி… சரி… இப்ப என்ன வந் தது. இன்னும் ரெண்டு பெடியளைப் பெத்துப் போட் டால் போச்சு!… அவங்களே உழைச்சுக் குடுப்பாங் கள்…” என நானே மீண்டும் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். கவிதாவின் அழகைக் கண்டு, காத லித்து, சொத்துப்பத்து இல்லாவிட்டாலும் பரவா யில்லை, அவள் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று மணம் செய்து கொண்ட குற்றம் அவளுடைய தல்லவே?

“ஐயா கூட்டிக்கொண்டு போறீங்களே?” ஜெயந் தன் தனது பிஞ்சுக் கரத்தினால் எனது முகத்தைத் திருப்பிக் கேட்டான்.

“சரி!… போய் அம்மாவைக் கொண்டு கால், கை முகம் கழுவி வெளிக்கிடுங்கோ!”

“ஐயா, அம்மாவையும் கூட்டிக் கொண்டு போவமே?…”

*ஓம்! எல்லாரும்தான் வெளிக்கிடுங்கோ!”

ஜெயந்தன் துள்ளிக்கொண்டு ஓடினான். அம்மாவும் சேர்ந்து வரப்போவதில் இரட்டிப்பு சந்தோஷம்.

இன்றைக்கு வெள்ளிக்கிழமையானபடியால் வசதி யாகப் போய்விட்டது. புதுவருடப் பிறப்போடு வந்த தால் கூடிய நாட்கள் லீவு எடுத்தேன். கூடிய செலவும் ஏற்பட்டுவிட்டது.

நிதிநிலைமையைக் கருத்திற் கொண்டுதான் இன்று கோயிலுக்குப் போகலாம் எனப் பிரகடனப்படுத்தி னேன். அது தான் தற்போதைக்கு மலிவான பொழுது போக்கு!

‘அவனுக்கென்ன உத்தியோககாரன்’ என்று ஊருக் குள்ளே பெயர். உத்தியோக காறனுடைய பொட்டுக் கேடுகளை உடைத்தாற்தானே தெரியும்! ஒரு பெரு மூச்சு விட்டவாறு (அது என்னையறியாமலே வெளிப் பட்டுவிட்டது) நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

ஒழுங்கையில், தூரத்தில் யாரோ வருவது தெரிந் தது. வீதியிலிருந்து இறங்கும் ஒழுங்கை நேரடியாக எங்கள் வீட்டுக்குத்தான் வந்து முடிகிறது. இதனால் முற்றத்தில் நின்றால் ஒழுங்கையில் வருபவர்களைக் காண முடியும்.

வருவது யாராக இருக்கும் – ‘சிலவேளை என்னட் டைத்தான் ஆரேன் வருகினமோ?’ என எண்ணிய வாறே, ‘எட! மாஸ்டர் கிழவன் போலையிருக்குது!’ பார்த்துக்கொண்டிருந்தேன். தள்ளாடித் தள்ளாடி இப் படி ஒருபக்கம் கழுத்தையும் தலையையும் சரித்துக் கொண்டுதான் அவரும் நடப்பார் – ‘மாஸ்டர் கிழவன் தான்!’

‘கிழவன் மத்தியானம் வந்திட்டுப் போனது’ என்று கவிதா சொன்னது நினைவுக்கு வந்தது, ‘இப்ப என் னட்டைத்தான் வருகுது போலை!’

கிழவன் எங்களுக்குத் தூரத்து உறவுமுறை. ‘தூரத்து’ என்றால் அம்மாவின் அப்பாவுடைய தம்பி யின்… இப்படி பல சிக்கல்களை எடுக்கவேண்டும். முன்பு வர்த்தி உத்தியோகம் செய்தவர். அந்தத் திண்ணைப் பள்ளிக்கூடங்களைப் பற்றிக் கிழவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ‘ அந்தக் காலத்து எட் டாம் வகுப்பு’ப் படிச்ச மனுசன். அதற்குப் பின்னர் இந்த அரசாங்கச் சட்டங்கள் வந்துதான் தனக்கு உத்தியோகம் இல்லாமற் போனதென்று ‘வாய் வாயாக’ அடித்துக் கொள்ளும் கிழவன் மாஸ்டர் பட் டத்தைச் சுமப்பதற்கே இதுதான் காரணம்.

மாஸ்டருடைய சரித்திரம் சோகமானது. அதை அடிக்கடி புலம்பி அவர் அங்கலாய்க்கின்ற விதம் அதை விடச் சோகமானது, “பதைக்கப் பதைக்க என்ரை ராசாத்தியைத் தின்னக்குடுத்தன்….. அது இருந்தால்… இப்பிடி என்னை அலைக்கழிஞ்சு திரிய விடுமே… அவள் தான் கண்ணை மூடினாள்… மூத்தவன் ஆரோ ஒருத்தி யைக் கூட்டிக்கொண்டு ஓடினவன்… ஓடினவன் தான்…. பெத்த தேப்பன் கிடந்து சாகு தெண்டு கவனிக்கிறானே… கையிலை மடியிலை இருந்ததைப் போட்டு பெட்டையை ஒருத்தன்ரை கையிலை பிடிச்சுக் குடுத்தன்… ஒரு தகப்ப னெண்டு இருந்து இந்தக் கடமையாவது செய்யாட்டி ஊர் என்ன சொல்லும்?… நல்லாய் வைச்சிருக்கிறானாம்… எண்டாப்போலை கையேந்திக் கொண்டு போகே லுமே… ஏதோ அதுகளாவது நல்லாயிருக்கட்டும்.”

மாஸ்டர் கிழவன் என அழைக்கப்படும் இந்தக் கிழவன் முழுக் கிழமடைய முன்னரே எங்கள் வீட்ட டோடு வந்து விட்டார். தனிய இருந்து கஷ்டப்படுவா ரென ஐயாதான் தனது தோட்ட வேலைகளுக்கு ஒத் தாசையாக வைத்திருப்பதற்குக் கூட்டிவந்தார்.

கிழவனும் லேசுப்பட்ட ஆளில்லைத்தான் மரவள்ளிக் கட்டைகள், மிளகாய்க்கன்றுகளுக்கு நீர் ஊற்றுதல், புல்லுச் செருக்குதல், மிளகாய்ப்பழம் பிடுங்கி பதமா கக் காயவைத்துப் பக்குவப்படுத்தல் போன்ற வேலை களை அலுக்காமல் செய்யும். ‘அந்தக்காலத்துச் சாப் பாட்டிலை வளர்ந்த உடம்பெல்லோ தம்பி!’ என அடிக் கடி பெருமையுடன் சொல்லாவிட்டால் கிழவனுக்கு வேலையும் ஓடாது,

ஏழோ எட்டு வருடங்களுக்குப் பின்னர் கிழவ னுக்கு வேலை ஓடாமற்தான் போய்விட்டது. வேளைக்கு வேளை சாப்பிட்டுவிட்டு ஒரு மூலையில் ‘சிவனே’ என்று விழுந்து படுத்துவிடும்.

நான் மணமுடித்து வந்தபொழுது கிழவனையும் என்னோடு கூட்டி வந்துவிட்டேன், இதனால் பெற்றோ ருக்கு ஒரு பாரம் குறையும் என்பது மாத்திரமல்ல, கிழ வன் மேல் எனக்கு மாறாத பற்று ஏற்பட்டிருந்ததும் . தான் காரணம். இரண்டு வருடங்களுக்கு மேல் நான் கிழவனை ஆதரித்து வந்தேன். பின்னர் மெதுவாக என் தர்மபத்தினியின் நச்சரிப்புத் தொடங்கியது. தூரத்து முறையிலோ அல்லது நெருங்கிய விதமாகவோ என் மனைவியின் உறவுக்காரனாய் இல்லாமற் போய்விட்டது கிழவனின் துரதிர்ஷ்டம்.

என் சீவியம் முழுதும் அவளுடன் ஒத்து வாழ்வேன் என்று கையெழுத்துப் போட்டவன் நான். பத்தினி யின் சொல்லைக் கேட்காவிட்டால் பத்தினி பத்ரகாளி யாக மாறவும் கூடும். எந்தக் குடும்பத்திற்தான் இது நடக்கா த சங்கதி? என் குடும்பத்தில் ஆரம்பிக்கு முன் னரே நான் தந்திரமாக நடந்து கொள்ள வேண்டுமே? அப்படியொரு தந்திரத்தைக் கையாண்டு கிழவனிடம் ‘சிம்பிளாக’ விஷயத்தை அவிட்டேன்.

கிழவனுக்குப் புரிந்துவிட்டது. ரோசக்கார மனு சன், போய்விட்டது.

“தம்பி !…”

“ஓம்!… மாஸ்டரே… வாங்கோ … வாருங்கோ … இதிலை… இஞ்சாலை இருங்கோ” முகஸ்துதி.

கிழவன் நான் காட்டிய திண்ணைக் குந்தில் அமர்ந்து கொண்டது.

“என்ன மாஸ்டர்?… கனகாலத்துப் பிறகு இந்தப் பக்கம்?… சுகமாயிருக்கிறியளே?” சம்பிரதாயம்.

“ஓம் ராசா!… சுகத்துக்கு என்ன குறை?… கன காலமாய் தம்பியைக் காணயில்லை… பாத்திட்டுப் போகலாமெண்டு வந்தனான்…”

எனக்கு ‘திக்’கென்றது. அந்தப் பார்த்துவிட்டுப் போவது’ என்பதற்கு ஒரு தனி அர்த்தம் இருப்பதாக மனதிற்பட்டது. வருவாய் இல்லாத கிழவன். போகும் பொழுது சும்மா விடலாமா? கையில் ஏதாவது கொடுத்துத்தானே அனுப்ப வேண்டும்? கிழவனும் அந்த நோக்கத்தோடுதான் வந்திருக்கும். எனது நிலை மையோ படுமோசம்! ‘இந்தக் கிழவனும் இந்த நேர மாய் வந்து நிக்குதே!’

“மத்தியானம் வந்தனான்… தம்பி எங்கையோ போட்டுதெண்டு பிள்ளை சொன்னவள். இருந்து பாத் தன்… காணயில்லை. பிள்ளை சாப்பாடும் தந்து தான் அனுப்பினவள்.”

போன கிழவன் அப்பிடியே துலையவேண்டியது தானே? ஏன் திரும்ப வந்து கழுத்தை அறுக்குது? என் ளைப் பார்க்க வேண்டுமென்று அவ்வளவு கரிசனையோ?… ஏதாவது ‘சுருட்டிக்’ கொண்டு போகலாமென்றுதான் வந்திருக்கும்.

“ஒருக்கால் என்ரை மோளையும் பாக்கவேணு மெண்டு ஆசையாயிருந்திது… அது தான் தின்னவேலிப் பக்கம் போட்டுவாறன்… கடவுளேயெண்டு நல்லாயிருக் கிறாள்… ஒரு பிள்ளையும் பெத்து… அங்கை … அது நடக் கவும் தொடங்கியிட்டுது!”

கிழவனுக்கு நான் குடுக்காததாலை குறைவா? முன்பு என்னோடிருந்தபொழுது சாப்பாடும் போட்டு அவ்வப்போது கைச்சிலவுக்கும் கொடுத்திருக்கிறேன் .

கிழவன் சுருட்டுக் குடிக்கும், வெத்திலை பாக்கு – எப்படியாவது கொடுப்பதென்றால் ஒருபத்து ரூபாயா வது கொடுக்க வேண்டாமா? கன நாளைக்குப் பிறகு கண்டிருக்கிறேன்.

“…என்ன தம்பி ஏதோ யோசினையிலை இருக்கு மாப் போலையிருக்கு?…”

எனது பஞ்சப்பாட்டில், கிழவனோடு கதைப்பதற்கே மறந்து போயிருந்தவன் ஒரு சமாளிப்புச் சிரிப்புடன் கதைக்கிறேன்.

“ஓம் மாஸ்டர்!… தெரியாதே… உங்களைக் கண்ட வுடனை … பழைய ஞாபகங்கள் வந்திட்டுது… இப்ப எப்பிடி மாஸ்டர் உங்கடை பாடு?… மகனிட்டைப் போறனீங்களே…?”

“அவனிட்டை ஆர் தம்பி போறது?… உதவாக் கரை, அவையிவையளைப் பிடிச்சு இப்ப இந்த வயோதி பர் மடத்திலை சேர்ந்திருக்கிறேன்.”

என் மனதில் அரும்பும் அனுதாபம்.

“அங்கை … எப்பிடி வசதியே?”

கடவுளேயெண்டு ஒரு குறையுமில்லைத்தம்பி அந்தந்த நேரத்துக்குச் சாப்பாடு தருவினம்… இனி அயலட்டை யிலை உள்ள சனங்கள் இடியப்பம் கிடியப்பம் கொண்டு வந்து விக்குங்கள். வாய்க்கு வப்புத் தேவையெண்டால் அதிலை இடை தரம் வேண்டிச் சாப்பிடலாம்”

“அதுக்குக் கையிலை காசுமெல்லே இருக்க வேணும்…? -நானெரு சுத்த மடையன் கேட்கக் கூடாத கேள்வி யைக் கேட்டுவிட்டேன்.

“ஓம் தம்பி!… இப்பிடித்தான் எங்கினையாவது வெளிக் கிட்டால், தெரிஞ்ச சனம் ரெண்டொரு ரூபாயைத் தருங்கள்…” கிழவனும் சொல்ல வேண்டிய பதிலைச் சொல்லிவிட்டது.

சம்பள முற்பணம், பண்டிகைக்கால முற்பணம் எல் லாம் எடுத்து, ஏதாவது அவசரம் வந்தாலுமென்று அதற்கு மேலாகவும் ஒரு நூறு ரூபா ‘றோௗ’டித்துக் கொண்டுதான் வத்திருந்தேன். இந்த எட்டு நாட்களில் அது போனவழி தெரியாது. ‘பொக்கெற்’டில் இருப் பது இப்பொழுது இரண்டே இரண்டு ரூபாய்தான். அதை நம்பித்தான் கோவிலுக்குப் போகின்ற ‘பிளானை’ யே போட்டேன். பிள்ளைகளுடன் போவதால் இனிப் பைக் கடலையை வேண்டிக் கொடுக்காமல் வரமுடியாது.

கிழவனுக்குக் கொடுக்காமலும் விடலாம். எனது கௌர வம்? “உத்தியோககாறன் வந்து நிற்கிறான்?” என்ற எண்ணத்தில் கிழவன் வந்து நிற்கிறது. நான் கையை விரித்தால் நம்புமா? எப்படிச் சொல்லிப் புரியவைக் கலாம்? பேசாமல் அந்தக் கதையை எடுக்காமலே கடத்தி விடலாம் – கிழவன் என்னைப்பற்றி எவ்வளவு கேவலமாக நினைக்கும்?

“தம்பியின்ரை பாடு எப்பிடி?… இப்பவும் கொழும் பிலைதானே ராசா?… கொப்பரிட்டைப் போறனியே?…”

“அவனும் பாவம் இனி ஏலாது…. நீங்கள் தானே …. பிள்ளையள் கவனிக்க வேணும்?”

“பெரிய கஷ்டம்தான் மாஸ்டர் என்ன செய்கிறது? இது முந்தின காலமே? சாமான்கள் விக்கிறவிலையிலை… மனிசன் சீவிக்கேலுமே?”

“ஓமெண்டுறன்! ரெண்டு சதம் வித்த சீனி . இப்ப என்ன விலை விக்கிறாங்கள்!… முந்தியெண்டால் எங் கடை காலத்திலை … பத்து ரூபாவை வைச்சுக்கொண்டு ஒரு மாதத்துக்கு ஒரு குடும்பம் சீவிக்கலாம்.”

“பத்து ரூபாயென்றதும்தான் நினைவுக்கு வருகிறது. நாளைக்கு ஏதாவது ‘மச்சத்தைக் கிச்சத்தை’ வேண்டலாமென ஒரு பத்து ரூபாவை ‘பொத்திப் பொத்தி’ வைத்திருக்கிறேன். அதை எடுத்துக்கொடுத் தாலென்ன?”

அதற்கும் மனமிசையவில்லை. நாளை மறுதினம் நான் பயணமாவதால் நாளைக்கு இந்த ‘ஸ்பெசல்’. அதையும் கிழவனிடம் தாரை வார்த்துவிட்டு என்ன செய்வது? செல்வராசனிடம் இருபது ரூபாய் கைமாற் றுக் கேட்டிருந்தேன் – பயணச் செலவுக்கு அவனும் நாளைக்குப் பின்னேரம் தான் கொண்டுவந்து தருவதா கக் கூறினான். அல்லது அவனிடமாவது கொஞ்சம் கூடக் கேட்டுப் பார்க்கலாம்.

“தம்பி எப்ப பயணம்?”

“நாளையிண்டைக்கு மாஸ்டர்… அதுகும் இஞ்சை கொண்டு வந்த காசையெல்லாம் சிலவளிச்சுப் போட்டு வெறுங்கையோடை நிக்கிறன்… இனிப் போறதுக்கு ஆற்ரை கையை ஏந்திறதெண்டுதான் தெரியவில்லை….”

மெதுவாக எனது துடுப்பை இறக்குகிறேன் .

“வந்துவந்து போறது கஷ்டமெண்டால் பிள்ளையை யும் அங்கை கூட்டிக்கொண்டு போகலாம் தானே தம்பி?”

“எங்கை மாஸ்டர் வீடு கிடைக்குது? … அதுசரி… நீங் கள் விடியத்தானே போறியள்?… நான் உதிலையொருக் கால் கோயிலடிக்குப் போட்டு வரப்போறன்.”

“இல்லைத்தம்பி… என்ரை மகள் வந்து இண்டைக்கு தன்னோடை நிண்டிட்டுப் போகச் சொன்னவள்… நாளைக்கு நான் மடத்துக்குப் போயிடவேணும்…”

நாளைக்குக் காலைவரையாவது பிரச்சனையை ஒத் திப் போடலாமென்று பார்த்தேன். அந்த எண்ணமும் காலைவாரிவிட்டது.

“…அதுகும் பெரிய கஷ்டப்பட்டுத்தான் தம்பி சேர்ந்தது… அவங்கடை றூளின்படி நடக்கவுமெல்லே வேணும்?… கோப்பாயிலை ஒரு ஆளைப்பிடிச்சு… பிறகு ஒரு டாக்குத்தரிட்டைப் போய் .. ‘இவராலை இனி வேலை செய்யேலாது’ எண்டு சேர்டிபிக்கட் எடுத்துக் குடுத்துத்தான் சேர்ந்தது…”

‘பொக்கெற்’றில் இருக்கின்ற இரண்டு ரூபா வைக் குடுக்கலாம் ‘ என்னடா இவன் இதுதான் தாறன்” என்று கிழவன் நினைக்கக்கூடும். அதைவிட கோவிலுக்கு வருகின்ற பிள்ளைகளை ஏமாற்ற வேண்டிய சங்கடமும் இருக்கிறது. வயிற்றுக்கு வஞ்சகம் செய்து அந்தப் பத்து ரூபாவை எடுக்கலாம். நாளைக்கு கவிதாவின் முகத்தில் விழிக்க முடியாது.

சிலவேளை செலவுக்குக் கொடுத்த காசில் அவள் மிச்சம் பிடிச்சு வைச்சிருக்கக்கூடும், கேட்டுப் பார்க்க லாம்; “கவிதா!”

“… வயோதிபர் மடத்திலை சேரிறதெண்டால் போலை லேசுப்பட்ட காரியமில்லைத் தம்பி… என்ரை பழைய கட்டிலொண்டும் ஒரு கதிரையும் மேசையும் மகள் வீட்டிலை இருந்தது. அதையெல்லாம் நாப்பத் தைந்து ரூபாய்க்கு வித்துத்தான் அலுவல் பாத்தனான்…”

கிழவனுடைய நிலைமை பெரிய பரிதாபமாகத் தோன்றியது. நான் வீட்டைவிட்டு அனுப்பியபடியாற் தானே இவ்வளவு கஷ்டமும் பட்டிருக்கிறதென்ற கவலையின் அரிப்பு மனதில். அதற்குப் பிராயச்சித்தமாக: நிறைய ஏதாவது கொடுக்கலாமென்றாலும் முடியவில்லை. வருஷப்பிறப்போடு வந்த மனிசனை வெறுங் கையோடு அனுப்பலாமா?

“கூப்பிட்டனீங்களே?”… என்றவாறு கவிதா வந்தாள்.

“உன்னட்டை ஏதாவது காசு இருக்குதே கவிதா?…”

“என்ட்டை ஏது?… காலமை நாலுரூபா இருந்து நீங்கள் தானே வேண்டினனீங்கள்… இப்ப ஒரு அம்பே சம் இருக்குது… கற்பூரம் கொழுத்தலாமெண்டு வைச்சிருக்கிறன்”

கிழவன் எழுந்து போகவில்லை.

“எங்கை பிள்ளை… எங்கையோ வெளிக்கிடுமாட் போலை இருக்குது?”

“ஓமப்பு உதிலை நல்லூரடிக்குப் போட்டு வரப் போறம்.”

“ஐயா! கெதியிலை வாங்கோவன் போக!” இது ஜெயந்தன்.

“ஓம்!… இஞ்சை அப்புவோடை கதைச்சுப்போட்டுப் போவம்…”

“அதுகளுக்கென்ன தெரியும் மாஸ்டர்? இஞ்சை வா அங்கை வா… எண்டு கத்துங்கள்… எங்கடை கஷ்டம் விளங்கப் போகுதே…?”

“கவிதா!… மாஸ்டருக்குத் தேத்தண்ணி கொண்டு வாவன்!”

“ஏன் தம்பி இப்ப?… பிள்ளையின்ரை அவசரத்துக்குள்ளை …”

“வருஷத்தோடை மனிசியின்ரை ஆக்கள் வந்து நிண்டினம்… பின்னைத் தெரியாதே? வந்தவையளை ரெண்டு படமும் கூட்டிக் கொண்டு போய்க் காட்டி னது… சமையல் அது இதெண்டு பெரிய செலவுதான்”

“ஓ! பின்னை … இனசனமெண்டால் சிலவைப் பார்க்கேலுமே?… நான் தான் தனிக்கட்டையாய்ப் போய் ஒருத்தரும் வேண்டாமெண்டிட்டுக் கிடக்கிறன்…”

“போனமுறை வந்து நிக்கயிக்கை இவன் ஜெயந் தனுக்குச் சரியான காய்ச்சலாப் போச்சு, கடைக்காறக் கந்தசாமியிட்டை தான் அம்பது ரூபா மாறினன். இந்தமுறை வந்தவுடனை அதைக் குடுத்திட்டுத்தான் மற்றவேலை பார்த்தது.”

“ஓம் தம்பி! இல்லாட்டி. அயலட்டையிலை மரியாதையே?… வேண்டினதைக் குடுத்தாத்தான் பேந்தும் அந்தரமாபத்துக்கு வேண்டலாம்.”

“…மனிசிக்கும் இந்தமுறை வருஷப்பிறப்புக்குச் சீலை… எடுத்துத் தரயில்லையெண்டு மன்னை தான்… நான் என்ன மாஸ்டர் செய்யிறது?… எங்கையேன் கொள்ளைக் குத்தான் போகவேணும்.”

மாஸ்டர் வீசுகின்ற பந்தை நான் சாதுரியமாகத் தடுத்து விளையாடிக் கொண்டு நின்றேன்.

“… அதுக்காக?… பேசாமல் விடுறதே தம்பி?… இப்படியொரு நல்ல நாள் பெருநாளிலைதானே அதுக ளும் ஆசையோடை கேட்கிறது.” கிழவன் என் மனைவிக்காகப் பரிவு கொண்டது.

“இந்தாங்கோ அப்பு தேத்தண்ணி!”

“ஏன் பிள்ளை?… சீனி இந்த விலை விக்கயிக்கை சும்மா சும்மா தேத்தண்ணியைக் குடிப்பான்…”

“எங்கை சீனி கிடைக்குது!… பணங்கட்டியோடை தான் குடியுங்கோ !”

“ஐயா!… கெதியிலை வாங்கோவன்.” அடம்பிடிக் கும் குழந்தைகள்.

“ஓமடா! கத்தாமல் இரு! அப்பு போனாப் பிறகு போவம்!… நீ இப்ப கோயிலுக்குப் போற கரிசனையி லையே கத்துறாய்? ஏதேன் சொட்டைத் தீன் தின்ன வெல்லோ!… அதுக்கும் இஞ்சை என்னட்டை ஏது காசு?…” கிழவனுக்கும் கேட்கக் கூடியதாக சற்று உரக்கவே ஜெயந்தனை ஏசுகிறேன்.

கிழவன் தேனீரை உறிஞ்சத்தொடங்கியதும் கவிதா வைக் கண்ணாற் சாடைகாட்டி அறையினுள் அழைத்துச் சென்று,

“இப்ப மனுசனுக்கு ஏதாவது குடுத்துவிட வெல்லே வேணும்?… அந்தப் பத்து ரூபாவை எடுத்துக் குடுப்பமே?”

“உங்களுக்கென்ன விசரே?… ஒண்டையும் யோசிக் காமல் தூக்கி நீட்டுங்கோ ! பெரிய கை! பிறகு நாளைக் குக் கிடந்து வத்துங்கோ! போனாலும் நல்ல சாப்பாடு இல்லாமற் கிடந்து காயுறது… இஞ்கை நிக்கயிக்கை யெண்டாலும் ஏதும் நல்லதாய்ச் சாப்பிட வேண் டாமே? கிழவன் மத்தியானம் சோறு சாப்பிட்டது தானே? போதும்!… பேசாமல் விடுங்கோ!”

கட்டளை பிறந்து விட்டது. வெளியே வந்தேன். ஜெயந்தனுடன் கதைத்துக் கொண்டிருந்த கிழவன் என்னைக் கண்டதும்,

“அப்ப… பிள்ளையளுக்குக் கோயிலுக்கு நேரம் போயிடும்… வேளைக்குக் கூட்டிக்கொண்டு போ ராசா!…” என்றவாறே எழுந்தது.

“ஓம்! மாஸ்டர் போவம்!” நான் அலுத்துக் கொண்டேன்.

இதென்ன தர்மசங்கடம்? கிழவன் இன்னும் போகாமல்… நின்று வேட்டியை சரிசெய்து கட்டுவது போல, நேரத்தைக் கடத்துகிறதே!

இடுப்பினுள் செருகியிருந்த வேட்டித் தலைப்பை இழுத்து … மடியினுள் வைத்திருந்த எதையோ கசங் கிப் போயிருந்த இரு இரண்டு ரூபாத்தாள்களை எடுத்து மிகக் கவனமாகத் தன் நடுங்குகின்ற கரத்தினால் விரித்து அதை ஜெயந்தனுடைய கையினுட் திணித்த வாறே… என்னைப் பார்த்து.

“தம்பி… பிள்ளையளுக்கு ஏதாவது வேண்டிக்குடு ராசா!… அதுகளுக்கு எங்கடை கஷ்டம் தெரியுமே?”, என்ற பொழுது ஏனோ அவருடைய கண்கள் கலங்கின.

“மாஸ்டர்! இதென்ன?…” என்று மாத்திரம் கேட்டேன். எனது வாய் அடைத்துப் போய்விட்டது. ஆனால் எனது கண்ணீரை அடைக்க முடியவில்லை.

– வீரகேசரி: 9-4-78 – கொடுத்தல், சிரித்திரன் அச்சகம், முதற்பதிப்பு: 10-6-1983

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *