கோடுகளும் கோலங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 956 
 
 

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

ஆனால் மனம் அந்த நினைவுகளில் இருந்து அகலவில்லை. அப்பா கிளப்பி விட்டுவிட்டார்.

சின்னம்மாவை ஆசுபத்திரிக்கு எதற்கும் கூட்டிப் போகவில்லை. நர்சம்மா யாரும் வரவில்லை. வீட்டில் அந்த வாசல் திண்ணை அறையில் தான் பெற்றிருந்தாள். குழந்தையின் முட்டைக் கண், அந்தக் கூரில்லாத மூக்கு, சுருட்டை முடி எல்லாம் அதன் அப்பனையே கொண்டிருந்தது. ஆனால், குழந்தை கையிலெடுக்க முடியாத நோஞ்சானாக இருந்தது. பெண்…

“புருசன்தா போனா. ஆம்பிளப் புள்ளையைப் பெத்துக்கக் கூடாதா? பொட்டை? இது இன்னும் என்ன பேரக் கொண்டு வருமோ” என்று இடித்தார்கள்.

“அவ ஆளான நேரமே சரியில்ல. அதுதா புகுந்த எடம், புருசன் உருப்படல…”

குழந்தை எப்போதும் அழுதது. கைக்குழந்தைக்காரி என்று உட்கார்த்தி வைப்பார்களா?

பொட்டழிஞ்சி போனவ, வேல வெட்டி செய்யாம எப்படி?

வீட்டிலேயே அவளை வாட்டினாள். வயல் வெளிக்குப் போகத் தடை. ஏனெனில் அப்பாவும் அங்கே தானே வேலை செய்வார்? பிற ஆண்கள் இருப்பார்களே?

நடவு, களை பறிப்பு என்று கும்பலாகப் பெண்களுடன் கைக் குழந்தையுடன் போக வேண்டும். நோஞ்சான் பாலுக்கு அழும். தாய்ப்பால் இல்லை.

“ராசாத்தி, புள்ள அழுகுதும்மா. பாலு குடு புள்ளக்கி” என்று சமையல் அறையில் பானை சரித்துக் கொண்டிருந்த தாயிடம் அவர் கொண்டு போனதை அம்மா பார்த்து விட்டாள்.

“சமில் ரூம்புல உமக்கென்ன வேல? தாய்ப் பால் இல்லன்னா, இந்தச் சனியனுக்கு, ஊட்டுப் பால் குடுக்கணுமா? இது யார் குடியக் கெடுக்குமோ? ஒடஞ்ச நொய்யிருக்கு, கஞ்சிகாச்சி ஊத்தட்டும். ஆம்புளப்பைய, அவம் படிச்சிட்டு வாரான். அவனுக்கு நல்ல பாலில்லை.” என்று தொடுத்தாள்.

“ஏ மூதேவி வாய மூடுடி! உங்கூடப் பிறந்தவதான அவ! இந்த வூடு, காணி எல்லாத்திலும் அவளுக்கும் பாதி உண்டுடி! நீ இப்பிடி வஞ்சன பண்ணாதே. உன் வமுசமம் அழிஞ்சிடும்” என்று அப்பா கத்தினார்.

“இன்னாது? பாதி உண்டா. பாதி? அத்த அவ புருசன் வூட்ல போயிக் கேக்கச் சொல்லுங்க! ஓராம்புளப் புள்ளயப் பெத்துக்காதவ, புருசனும் போனப்புறம் எந்தப் பாதிய நினைச்சிட்டுப் பேசுறீய! பாதியாமே பாதி! பன்னாட…” என்று பேசுவாள்.

குழந்தைக்கும் கழுக்கட்டையில் சிரங்கு, மண்டையெல்லாம் கட்டி. அனல் காய்ந்தது. அம்மாவைப் பொருட்படுத்தவில்லை. அப்பாதான் அவளையும், குழந்தையையும் காஞ்சிபுரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார். நாலைந்து மாசம் வீட்டுக்கு வரவேயில்லை.

வேலூர் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போனதாகவும், குழந்தைக்கு ரொம்ப சீக்கென்றும் தெரியவந்தது.

அப்போதெல்லாம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எப்போதும் சண்டைதான். வீட்டில் வேலை செய்ய ஆளில்லை. அப்பாவின் அம்மா அந்தப் பாட்டி வேறு இங்கு வந்திருந்தாள். ஒரு மார்கழி மாதத்தில், பாட்டிக்குக் காலரா வந்தது. செத்துப் போனாள்.

சின்னம்மா குழந்தையுடன் ஒரு வருசம் கழித்துத் திரும்பி வந்தாள். அப்பாதான் கூட்டி வந்தார்.

செவந்திக்குச் சின்னம்மாவின் மீது அப்போதுதான் அதிகம் பிடிப்பும் பாசமும் வளர்ந்தது.

குழந்தை அழகாக இருந்தது. சுருட்டை முடி, பெரிய கண்கள். ஆனால் குச்சிக் கால்களும், கைகளுமாக இருந்தது. பிடித்துக் கொண்டு நிற்கும், நடக்க வரவில்லை.

“சீ. விடுடீ கீழ? சீக்குப் புடிச்சத இங்க கொண்டிட்டு வந்து குலாவுற. அது கண்ட எடத்திலும் பேண்டு வைக்குது. மூத்திரம் போவுது” என்பாள்.

சின்னம்மாள் பொறுத்தாள். எத்தனையோ பொறுத்தாள். ஒரு நாள் செவந்தி ஸ்கூல் விட்டு வந்த சமயம் சின்னம்மா இல்லை. அவளுக்கு யாருடனோ தொடிசாம். குழந்தையை ஆஸ்பத்திரியில் கொண்டு காட்டுகிறேன் என்று சொல்லி ஓடி விட்டாளாம். கொல்லை மேட்டில் மணிலாக் கொட்டை போட்டுக் கடலை பிடுங்கி இருந்தார்கள். கடலை வறுத்து உடைத்து, வெல்லம் போட்டு உருண்டை பிடித்துக் காலையில் பள்ளிக்கூடம் செல்லும் போது கொடுத்திருந்தாள்.

திரும்பி வந்தபோது அவள் இல்லை.

நடுவில் எத்தனையோ சம்பவங்கள். முருகன் படித்து முடிந்து, வேலை நிரந்தரம் என்று நிலைக்காமல் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை என்று அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தான். வீட்டோடு மருமகன் வந்த புதிது. கொஞ்ச நாட்கள் சீட்டுக் கம்பெனி வேலை செய்தான். இரண்டாவதாக இவள் கருவுற்றிருந்தாள். இப்போதும் வளையல் அடுக்கி இருந்தார்கள். திடுமென்று சின்னம்மா மகளை அழைத்துக் கொண்டு ஒரு நாள் பகலில் வந்தாள்.

முதலில் ஒன்றுமே புரியவில்லை. மகள் குச்சியாய் பாவாடை தாவணி போட்டுக் கொண்டிருந்தது. பம்மென்ற சுருட்டை முடியை ஒரு நாடா போட்டுக் கட்டியிருந்தது. அழுதழுது முகம் வீங்கி இருந்தது. சின்னம்மாவும் குச்சியாகத்தான் இருந்தாள்.

“வாங்க சின்னம்மா… வாங்க… என் கல்யாணத்துக்குக் கூட நீங்க வரவில்லை. இப்பவானும் வந்தீங்க…”

சுந்தரியின் அம்மா அப்போது அங்கு வந்திருந்தாள். அம்மா அங்கே பேசப் போயிருந்தாள். அடுப்பில் குழம்பு காய்ந்து கொண்டிருந்தது. “செவுந்தி, இத. இவ இங்க கொஞ்ச நா இருக்கட்டும்மா உன் தங்கச்சி. நா. ஒரு ஹோம்ல வேல் செய்யிற. இவள அங்க வச்சிக்க எடமில்ல. எடமும் சரியில்ல. இங்க உன்தங்க மாதிரி நினைச்சிக்க. வேல செய்யிவா. தோதா ஓரிடம் பாத்திட்டு வந்து கூட்டிப் போறேன்… உன் அம்மா எங்க?”

“அத்த வூட்டுக்குப் போயிருக்காங்க. அப்பா குழனிக்குப் போயிருக்காரு. கூப்பிட்டுட்டு வார சின்னம்மா… இருங்க…”

“பரவாயில்ல. அவ இருந்தா எதும் மனசு சங்கடப்படும்படி சொல்லுவா. பாடி, பரதேசின்னு நினைச்சிக்க. பொம்புளப் புள்ள. அதுக சரியில்ல. ஒரு நெருக்கடி அவுசரத்துல வுட்டுட்டுப் போற. ருக்கு… இங்க இருந்துக்கம்மா…” என்று பையை வைத்து விட்டு விரைந்தாள்.

“யம்மா… நானும் வாரேன், எனக்கு…”

அவள் படாரென்று வெளிக் கதவைச் சாத்திவிட்டுச் சிட்டாய்ப் போய் விட்டாள்.

செவந்திக்கு இது கனவா, நனவா என்று புரியவில்லை. அரை மணி நேரம் சென்ற பின் அம்மா பிள்ளைத்தாச்சிப் பெண்ணுக்கென்று இறைச்சிக் குழம்பு வாங்கிக் கொண்டு படியேறி வருகையில் கதவு சாத்தியிருந்தது.

“கதவ ஏன் சாத்தி வைக்கிற? ஏம்மா? அந்தக் குருசாமி கிராக்கு உன் தங்கச்சி வந்திருக்கா மகள அழைச்சிட்டு, போன்னுது. வந்தாளா?”

அவள் ஒலி தேயுமுன் பார்வை அந்தப் பையின் மீதும் தூணோடு தூணாக நிற்கும் ருக்குவின் மீதும் பட்டுவிட்டது.

“எங்கடீ வந்தாளுவ? பண்ணதெல்லாம் பத்தாதுன்னு மிச்ச சொச்சத்துக்கு வந்தீங்களா?”

“யம்மா, நீ எதும்பேசாத, உன் வாய்க்குப் பயந்து அர நிமிசம் தங்காம சின்னம்மா போயிட்டாங்க, எனக்கு ஆளான பொண்ண வச்சிக்க எடமில்ல. ஹோமுல இருக்கிற எடம் தோதா பாத்திட்டுக் கூட்டிப் போறன். ரெண்டு மாசம் இங்க பதனமா இருக்கட்டும். நெருக்கடி. பாடி, பரதேசின்னு நினைச்சிட்டுப் பாத்துக்கிங்கன்னு சொல்லிச்சம்மா. நீ வீணா கத்தாத…” என்றாள் செவந்தி.

“ஊஹூம்… பாடி பரதேசியா? ஏண்டி, நானும் தெரியாமதா கேக்குறேன். ஆளான பொண்ண இங்க எதுக்குடி கொண்டாந்து வுடுறா? அடி சக்களத்தி. இப்ப என் மவளுக்குச் சக்களத்தியாக் கொண்டாந்து வுடுறாளா? போடி, இந்த நிமிசமே இங்கேந்து போங்க! இந்த வூட்டு மனுசன் வந்திட்டா அது வேற புள்ளைய அணச்சிட்டுக் கொஞ்சும்!”

ருக்கு… ஓ… என்று அழத் தொடங்கி விட்டது, பிழியப் பிழிய…

“ம், பைய எடு, நட…!”

“யம்மா, உனக்கே நல்லா இருக்கா? உன் பொண்ணுக்கு, புள்ளக்கி ஒரு கட்ட நட்டம் வராதா? என்னம்மா இது…”

“அடி நாம் பெத்த மவளே! உனக்கு என்னடி தெரியும், இந்தச் சூதெல்லாம்! அப்பந் தெரியாத பொண்ண எவங் கெட்டுவா; அதாஇங்க கொண்டாந்து எளிசாவுட்டுப் போட்டு ஓடிருக்கா ஏய், நட… போ!”

அடித்து விரட்டாத குறையாகப் பிடித்துத் தள்ளி விட்டாள். அது அழுது கொண்டே போயிற்று.

செவந்தி கத்தினாள். அப்பா வந்ததும் அம்மாளின் அக்கிரமத்தைச் சொல்லி ஏற்கெனவே எரியும் நெருப்பில் நெய்யூற்றினாள்.

அப்பன் ஆத்திரத்தில் அன்று குடித்து விட்டு வந்தார். அம்மாவைப் போட்டு அடித்தார். தெருவே கூடிச் சின்னாத்தாளைப் பேசிற்று. நாவில் பல் படக் கூசாமல், சின்னம்மா வேலூருக்குச் சென்று வயிற்றுப் பிள்ளையைக் கரைத்தாள் என்றும், அவள் புருசனில்லாத வாழ்வில் வளர்ந்த பெண் தடையாக இருப்பதாக இங்கு கொண்டு தள்ளி இருப்பதாகவும் பேசினார்கள்.

அத்துடன் விஷயம் ஒயவில்லை.

செல்லி அம்மன் கோயில் பூசாரி அதிகாலையில் வந்து கதவிடித்தார். “அந்தப் பொண்ணு, ராசாத்தி மக, கெணத்துல வுழப் போச்சுங்க. நல்ல வேள, நாம் பாத்திட்டே. சின்னானக் காவல் வச்சிட்டு சேதி சொல்ல ஓடியாந்தே. பொண்ணு பாவம் பொல்லாதுங்க. ஒண்ணு நீங்க வச்சிக்கணும். இல்லாட்டி பத்திரமா அவாத்தா கிட்டக் கூட்டிப் போய் ஒப்படச்சிடுங்க…” என்றார்.

அப்பா கெஞ்சியும் அவள் வரவில்லை. அத்தை வீட்டில் கொண்டு வந்து வலுக்கட்டாயமாகக் கஞ்சி குடிக்கச் செய்தார்கள். சின்னம்மாளுக்குச் சேதி சொல்ல ஆள் போயிற்று. சின்னம்மா வந்தாள்.

அம்சுவின் மாமன்… அவன் என்ன உறவு?

சின்னம்மாவுக்கு எந்த உறவிலோ அத்தை மாப்பிள்ளையாம். நடுத்தெருவில் நிற்க வைத்து அவளை அநியாயம் பண்ணினான்.

“எங்க மானம் மரியாதையச் சந்தி சிரிக்க வச்சிட்டியே? பாவி, எங்களுக்குத் தலதுாக்க முடியாம, அறுத்தவ, ஊரு மேல போயி மகளையும் உன் வழிக்கு விட இங்க கொண்டாந்து விட்டிருக்க?”

அப்போது செவந்தி திண்ணையில் நிற்கிறாள். துடப்பத்தை எடுத்து வந்து அவளை அடித்தான் மாபாவி!

அவன் ஊர் – உறவுக்குப் பெரிய மனிதர். பெண்டாட்டி தவிர மேல வீதியில் தொடுப்பும் உண்டு. இவன் நியாயம் பேசினான்!

அப்பா… உள்ளே வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தார்.

ஓடினாள். “அப்பா, சின்னம்மாவை செங்கண்ணு மாமன் நடுத்தெருவில நிறுத்தித் துடப்பத்தால அடிக்கிறாரு அம்மா, இன்னும் அல்லாரும் பாத்திட்டிருக்காங்க!”

அப்பா ஓட்டமாக ஓடிவந்த போது, சின்னம்மா கண்ணீரும் கம்பலையுமாகத் தலைவிரி கோலமாக நின்றிருந்தாள்.

கண்ணகி சினிமாப் போல் இருந்தது. அடி மண்ணை வாரி எல்லாக் கூரைகளிலும் வீசினாள்.

“அபாண்டமா பழி சுமத்தும் நாக்குக்கு ஆண்டவன் கேக்கட்டும்? அந்த ஆத்தா கேக்கட்டும்!” என்று சொல்லிக் கொண்டு மகளை அழைத்துக் கொண்டு விசுக் விசுக்கென்று போனாள்.

“இவ பெரிய பத்தினி சாபம் வைக்கிறா?” என்று அம்மா நொடித்தாள்.

நாலைந்து மாசம் சென்றபின், ஒரு நாள்…

ஆவணி மாசம். சரவணன் பிறந்து முப்பது நாள். அத்தான் சேதி கொண்டு வந்தார்.

“உன் சின்னம்மா, மக, மருமகன் கூட வந்திருக்கா. வக்கீல் வரதராசர் வீட்டில வந்திருக்கா. ஸ்டாம்ப் வெண்டர் தரும ராசன் வந்துசொன்னான். உன் அப்பா போயிருக்காங்க…”

மனசு சுருசுருவென்று பொங்கி வந்தது.

“வக்கீலையாவை வச்சிட்டு, பாகம் கேக்கப் போறா. அந்தப் பையன் வெடவெடன்னு இருக்கிறான். எங்கியோ கம்பெனில வேலையாம். நம்ம சாதி இல்ல. வேற எனமாம். ரிஜிஸ்தர் கலியாணம் கட்டிருக்காம். அவ ஏற்கெனவே தொட்டுப்புட்டாம் போல…”

“அதைப்பத்திக் கேட்க நமக்கு என்ன மரியாதி இருக்கு? நாமதா வீட்ட விட்டுத்துரத்திட்டமே?” என்றாள் செவந்தி.

சின்னம்மா இந்தப் பக்கமே வரவில்லை.

அப்பா வக்கீல் வீட்டுக்குப் போனதும், “அவள் பங்குக்கு ஒரு கிரயம் போட்டுக் கொடுத்து விடு ஏகாம்பரம்… தகராறு எதுவும் வேண்டாம்” என்று சொன்னாராம்.

“அவங்களே அனுபவிச்சிக்கட்டும். இந்த ஊருமண்ணு எனக்கு நஞ்சாயிட்டுது… நானும் எங்கப்பன் ஆத்தாவுக்குப் பொறந்தவ. என் பங்குக்கு நாயமாக் கிரயம் கொடுத்திடனும்” என்றாளாம்.

அப்பா வீட்டுக்கு வந்து பேசினார். கொல்லை மேட்டுப் பூமி மட்டும்தான் அவளுடையது என்று அம்மா அப்போதும் விவாதம் செய்தாள். அதற்கு நாலாயிரம் என்று மதிப்புப் போட்டார்கள். உடனடியாகக் கொடுக்கப் பணம் இல்லை.

செவந்திக்குப் போட்டிருந்த இரட்டை வரிச் சங்கிலி இருந்தது.

“அவ சங்கிலிதாங் கேட்டா…” என்று அதை வாங்கிக் கொடுத்தார்கள். ரிஜிஸ்தரார் ஆபீசுக்குப் போய்ப் பத்திரம் எழுதினார்கள்.

செவந்தியின் புருசன் பேரில் அது எழுதப்பட்டது. ஏற்கெனவே அப்பாவின் பேரில் இருந்து மருமகன் பேருக்கு வந்தது. இந்த நிலங்களுக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் உரிமையும் இல்லை என்று சின்னம்மா, மகள், மருமகன் கையெழுத்தும் வாங்கிக் கொண்டார்களாம்!

அப்பனின் ரணம், இவளுக்கு நன்றாகப் புரிகிறது. இரவு முழுவதும் ஏதேதோ எண்ணங்கள். அந்தக் கொல்லை மேட்டில் கடலை பயிரிட்டு, மகசூல் எடுக்கவேண்டும்.

ஒரு படி போட்டு உருண்டை செய்து கொண்டு போய் அந்தச் சின்னம்மாளைப் பார்க்க வேண்டும். இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்றாள் நாகு பெரியம்மா… மனித வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் எப்படியெல்லாம் வருகின்றன! சுந்தரி… பூவிழந்து போனாள். அந்த உத்தமியை நடு வீதியில் வைத்து அவள் செய்யாத குற்றத்துக்கு அடித்தானே, பாவி! நாக்குப் புண்ணாகிப் புழுத்து ஒரு வருஷம் கிடந்தான். வலி வலி என்று துடித்தான். காஞ்சிவரம் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார்கள். நாக்கில் புற்று வந்து செத்தான்.

அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்?

அண்ணன் குடும்பத்தோடு ஒட்டவேயில்லை. அண்ணி குழந்தைகளுடன் இங்கு வருவதேயில்லை. கல்யாணமே அவன் விருப்பப்படி செய்து கொண்டான். மதுரையில் அவர்கள் குடும்பம் இருக்கிறது. பிறந்த வீட்டுச்செல்வாக்கு. தானும் பி.ஏ. பட்டம் பெற்றவள் என்ற பெருமையில் இந்தக் கிராமம் பிடிப்பதேயில்லை. அண்ணியின் தங்கை சென்னைப் பட்டணத்தில் இருக்கிறாள். அவளும் வேலை செய்கிறாள். பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பெரிய லீவுக்கு அங்கே செல்வார்கள். அப்போது அண்ணன் மட்டும் வந்து ஒப்புக்குத் தலை காட்டிவிட்டுப் போவான். இவன் எம்.எஸ்.சி. எம்.எட் படிக்க ஆதாரமாக இருந்த கிராமத்து மண் அவனுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகள் இங்கு வந்து ஒரு ராத் தங்கியதில்லை. காரில் காஞ்சிபுரம் போனார்கள் எல்லோரும். இங்கே வந்து அரை மணி தங்கினார்கள். எங்கிருந்தோ இளநீர் வெட்டி வந்து கொடுத்து, மைத்துனர் உபசாரம் செய்தார்.

மேலோட்டப் பெருமை. அம்மாவை அந்தக் காரில் கூட்டிச் சென்றுவிட்டு, செல்லும் வழியில் கடைப்பக்கம் இறக்கி விட்டுப் போனார்கள். நெருக்கியடித்துக் கொண்டு அந்த வண்டியில் போன பெருமை அம்மாவுக்குப் பட்டுப் பளபளப்பாக இருந்தது. அது நல்ல பட்டில்லை, வெறும் சாயம் குழம்பும் அற்பம் என்று யார் சொல்வது?

உறவும் மனிதச் சூடும் இல்லாமலே விலகிப் போகும் குடும்பத்தில் என்ன எதிர்பார்க்க முடியும்?

உள்ளே ரேடியோப் பாட்டுக் கேட்கிறது. விளக்கும் எரிகிறது.

“சரோசா நீ படிக்கிறியா பாட்டுக் கேக்குறியா? கரண்டு காச எவ கட்டுவது?”

“நீ செத்த சும்மா இரும்மா! நாங் கணக்குப் போடுறனில்ல? நீ வேற ஏன் தொந்தரவு பண்ணற?”

“அதுக்கு ரேடியோ இன்னாத்துக்கு?”

“அதும் வேணும். நான் பாட்டுக் கேட்டுட்டுக் கணக்குப் போடுவ…”

“ஏண்டி பாட்டுக் கேட்டுட்டே நீ என்னாடி படிக்கிறது? அத்த முதல்ல மூடு. படிக்க வேண்டிய பய்யன் ஊரு சுத்திட்டு வந்து சோறு ஒரு வாய் உள்ள போறப்பவே தூங்குறா. நீயானா…”

“யம்மா! நீ கொஞ்சம் வாய மூடிட்டு போக மாட்டியா?”

“நாவாய மூடுறேன். நீ ரேடியோவ மூடு!”

இதற்குள் அவளுக்கு ஆதரவாகத் தகப்பன் வந்து விடுகிறான்.

“என்ன இப்ப அதோடு உனக்கு வாக்குவாதம்?”

“ரேடியோவப் போட்டுக் கத்த வுட்டுட்டு என்ன படிப்பு வரும்?”

“எனக்கு ரேடியோவப் போட்டாத்தான் படிக்க ஓடுது. கணக்கு ஓடுது. இந்த வருசம் டென்த். நல்ல மார்க் எடுக்கணும். நா மேலே படிக்கணும்.”

“இதபாரு, உங்கப்பாரு தலையில தூக்கி வச்சிருக்காரு உன்ன. நீ சைக்கிள்ள அசால்ட்டா பள்ளிக்கூடத்துக்குப் போறதும் வாரதும், ஃப்ரண்ட் வீடு, டீச்சர் வீடுன்னு போவுறதும் சம்சாரி வூட்டுப் பொண்ணா லட்சணமா இல்ல. நீ வரவர தாய மதிக்கிறதில்ல. வூட்டு வேல, ஒண்ணு செய்யிறதில்ல. கழனிப்பக்கம் எட்டிப் பாக்குறதில்ல. உன் வயசுப் பொண்ணு, அத மேகலா, சம்பங்கி எல்லாம் நடவு, கள எடுப்புன்னு போவுதுங்க; காசு சம்பாதிக்கிதுங்க. நீ படிச்சி என்ன ஆகப்போவுது? எங்கண்ணி படிச்ச மேட்டிம, புருசனையே பெறந்த மண்ணுக்கு ஆகாம ஆக்கிட்டா. உனக்குப் படிச்ச இங்கென்ன பவிசு இருக்குது? ஆண்பாடு பெண்பாடுன்னு ஒரு பொம்பள லோலுப்படுற…”

கண்களில் தன்னிரக்கம் மேலிடுகிறது.

“போதுமா? நிறுத்தியாச்சா? ஆம்புள கையாலாகாதவன்னு வாய்க்கு வாய் சொல்லுறதுல உனக்கு ஒரு பவுரு. அட நாம படிக்கல. அதுன்னாலும் ஊக்கமாப் படிக்கிதேன்னு உனுக்கு ஏன் பெருமையா இல்ல? அதும் டீச்சர் என்னப் பாத்து, சரோஃபஸ்டா மார்க் எடுக்குதுங்க. இந்த ஸ்கூலுக்கு அவ ரேங்க் வாங்கிப் பெருமை சேப்பான்னு நம்பறோம். நல்லாப் படிக்க வையிங்கன்னு சொன்னாங்க. எனக்கு எவ்வளவு பெருமையா இந்திச்சி? உனக்கு நீதா உசத்தி. மத்தவங்க எல்லாம் மட்டம்…”

அவள் வாயடைத்துப் போகிறாள்.

சரோ ஊக்கமாகப் படிப்பது பெருமைதான். ஆனால் இவளால் புரிந்து கொள்ள முடியாத முரண்பாடு இருப்பதால் உள்ளூர ஓர் அச்சம் பற்றிக் கொள்கிறது.

இவள் படிப்பு, சாதி, குலம் இல்லாத ஒருவனுடன் இவள் போகும்படி சந்தர்ப்பம் நேர்ந்து விட்டால்? அன்று சின்னம்மாவுக்கு நேர்ந்த நியாயம் இங்கு நேராது என்பது என்ன நிச்சயம்? செங்கண்ணு மாமன் போய் விட்டான். ஆனால் இந்தக் கீழ் – மேல் தெருக்களில் பிறர் விவகாரங்களில் தலையிட்டு, கண் மூக்கு வைத்துப் பெரிதாக்கிரணங்களைக் குத்திக் கிளறப் பல செங்கண்ணு மாமன்கள் இருக்கிறார்கள். இவர்கள் பேச்சுக்குத் தாளம் போடும், பிறர் நோவறியாத பெண்களும் இருக்கிறார்கள்.

சுந்தரிக்குப் புருசன் செத்த போது, அவளுக்கு வளையலடுக்கிப் பூ வைத்துச் சிங்காரித்து, இலை போட்டுப் பரிமாறி, எரிய எரிய எல்லாவற்றையும் உடைத்துப் பொட்டழித்துக் குலைத்து, அவமானம் செய்தார்கள். இதெல்லாம் சாதி, சமூகக் கட்டுப்பாடுகள்.

இதை இந்த அநியாயக்கார ஆண்களும் அவர்களுக்குத் துணை நிற்கும் பெண்களும் இன்றும் நாளையும் அமுல்படுத்துவார்கள். இந்தக் கோடுகள், வரமுறைகளை யார் எப்படி அழிக்கப் போகிறார்கள்?

சுந்தரி சாதாரணமாக இருக்க வேண்டும் என்று தூண்டிப் பக்க பலமாக இருப்பவளே செவந்திதான். அதனால்தான் அவளுக்கு இவள் மீது தனியான பிரியம்.

அவளுடைய அம்மா முணுமுணுப்பதையோ எச்சரிப்பதையோ செவந்தி செவிகளில் வாங்கிக் கொண்டதில்லை.

புருசன் போனபின் ஒருத்தி, அடுப்படி ஊழியத்துக்கே உரியவள். கட்டுக்கிழத்தி, பூவும் நகையுமாக மேனி மினுக்கிக் கொண்டு நெளிவெடுக்க வேண்டும் என்ற கருத்துக்களே அவளுக்குப் பிடிப்பதில்லை. ஒரு சிறு மாறுதலையேனும் கொண்டுவர வேண்டும் என்று நினைப்புக்கே ஊக்கமில்லாத சூழலில் சரோ… என்ன செய்யப் போகிறாள்? கண்களை மூடிக் கொண்டு பழக்கமில்லாத பாதையில் அடி வைக்கிறாளா?

அத்தியாயம்-8

பயிர் கதிர் அடைத்து நெஞ்சை இதமாக வருடுகிறது. மழையில் செழித்து, ஒரே சீராக, நட்டபோது எப்படி அழகாக பாய் விரித்தாற் போன்று பத்தி நடவு என்று வயல் கொஞ்சியதோ, அப்படியே இப்போதும் முத்துச் சொரியக் கொஞ்சுகிறது.

கதிர்கள் குஞ்சம் குஞ்சமாக… ஏதோ முத்துக்கள் பிரிவந்தாற் போல், இளங் காற்றிலும், இள வெயிலிலும் அசைந்து பயிரின் சிறப்புக்குக் கட்டியம் கூறுகின்றன.

இதற்குள் ஒரு களை, இரண்டு களை என்று எடுத்திருப்பார்களே? அவ்வப்போது வந்து பார்த்து ஒன்றிரண்டு தலை நீட்டும் களை, புல்லைத் தவிர, ஆள் வைத்து எடுக்க மண்டவேயில்லை. சரியாகக் கணக்குப் பார்த்து, பதினைந்து, இருபத்தைந்து, முப்பத்தைந்து என்று மேலும் ஒரு முறையும் உரமிட்டிருக்கிறாள். பூக்கும் பருவம், முப்பத்தைந்துக்குள் சுவர்ண வாரிக்கு உரமிட்டு விட வேண்டும். சம்பாப் பயிரானதால், நாட்களை எட்டிப் போடலாம். கடைசி உரம் போட்டாயிற்று.

விடிந்தால் தீபம்.

இந்த வருசம், தை பிறப்பதற்கு முன்பே அறுப்பறுத்து விடலாம் என்று கணக்குப் போடுகிறாள். எப்போதும் தை பிறந்த பின்னரே, அறுப்பறுப்பார்கள். இந்தப் புதிய முறையில், பொங்கலுக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பே அறுப்பறுத்து, புதிய கதிர் உதிர்த்து, அந்த மணிகளில் பொங்கல் வைக்கலாம். சாமி புண்ணியத்தில், இந்த விளைச்சல் நன்றாக வந்து விட்டால், இவள் தேறி விடுவாள். அகலக்கால் வைக்கலாம்.

தீபத் திருநாள் சாமி கும்பிடும் நாள்தான். ஆனால், இந்த ஆண்டு போல் உற்சாகமாக இருந்ததில்லை. மழை பெய்யும்; பூச்சி அண்டியிருக்கும்; புகையான் பற்றி இருக்கும். இந்த ஆண்டு ஊக்கமாகச் சாமி கும்பிட, அதிகாலையிலேயே விழிப்பு வந்து விடுகிறது.

பரபரவென்று அன்றாட வேலைகளை முடித்து, வீடு மெழுகி துடைக்கிறாள். தலை முழுகி, வேறு சீலை மாற்றிக் கொள்கிறாள். சுவரில், சாமி கும்பிடும் இடத்தில், மஞ்சட் குங்குமம் கொண்டு வட்டமும் சதுரமுமாகச் சாமி சின்னம் வைக்கிறாள்.

அடுப்பில் இட்லிக்கு ஊற்றி வைத்துவிட்டு, அரியுமனையை எடுத்து வைத்துக் கொள்கிறாள். ரேடியோவில் உழவர்களுக்கு ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று நினைவு வருகிறது. சாந்திதான் இதை நினைவுபடுத்துவாள். ‘அக்கா, காலம சொல்லுவாங்க. இன்னிக்கு எப்படி வானிலை இருக்கு. இந்தப் பருவத்தில் என்ன போடலாம், எப்படிப் பயிர் பராமரிப்பு பண்ணலாம்னு சொல்லுவாங்க…ன்னு, கேளுங்க…’ என்பாள். ஆனால் செவந்திக்கு ஏனோ அந்த ரேடியோவே பிடிப்பதில்லை.

“சரோ… ஏ. சரோ…? அந்த ரேடியோவை எடுத்திட்டு வாங்கே?”

சரோ வரவில்லை. அம்மாதான் சாமான்களைத் துலக்கிக் குறட்டில் கொண்டு வந்து கவிழ்த்துகிறாள். முற்றம் நசநச வென்றிருக்கிறது.

“எதுக்கு இப்ப ரேடியோ? உனுக்குத்தாம் புடிக்காத?” என்று முணுமுணுத்தவாறே சரோ ரேடியோவை எடுத்துக் கொண்டு கண்களையும் கசக்கிக் கொண்டு வருகிறாள்.

“இந்தா…!”

“நீ வையி. உழவர்களுக்கு ஒரு வார்த்தை…”

அவள் திருப்புகிறாள். பாட்டு வருகிறது… அப்பள விளம்பரம் வருகிறது…

“எத்தினி மணிக்கு அது வரும்?”

“உனக்குத் தெரியாதா? சாந்தி சொல்லிச்சி, நிதம் கேளுங்கக்கா, அது நமக்கு உபயோகமாயிருக்கும்னு…”

அவள் அதைப் பக்கத்தில் வைத்துவிட்டுப் போகிறாள்.

காச நோயைக் கட்டுப்படுத்தச் சிகிச்சைப் பற்றி யாரோ பேசுகிறார். சாந்தியிடம்தான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஒரு பக்கம் வெட்கமாகவும் இருக்கிறது.

காலையில் ரங்கனும் குளித்துத் திருநீறு பூசிக் கொண்டு வருகிறான்.

“இட்டிலி வேவுது… தட்டிட்டு காபி தாரேன்…”

“இன்னிக்கித் தீபம் இல்லியா? நீ காபி குடு. நா மலைத்தீபத்துக்குப் போறன். இட்டிலிவானாம். விரதம்…”

“அட செத்த இருங்க; நா இங்க சாமி கும்புட இருக்கிற… நீங்க மலைத் தீபத்துக்குப் போறங்கறீங்க?”

அவளுக்கு உள்ளூரக் கோபம்.

காபித்துளைப் போட்டு, கொதி நீரை ஊற்றி வைத்திருக்கிறாள். நாலைந்து தம்ளருக்குக் கலக்குகிறாள். ஒரு தம்ளரில் ஊற்றி அவனிடம் கொடுக்கிறாள்.

“வூட்ட சாமி கும்பிடறப்ப, நீங்க போகனுமாங்க?”

“தா, நா முன்னமே தீர்மானிச்சாச்சி. நாலஞ்சி பேரு போறம். நீ இப்ப வந்து மறிக்காத. நீ சாமி கும்புடப் போறன்னு எனக்கெப்படித் தெரியும்? புரட்டாசி சனி, சாமி கும்புட்டியா? தீபாளி ஆதும் ஓடிப்போச்சி. ஒரு துணி கூட எடுக்கல. புள்ளங்களுக்குத்துணி எடுத்து, ஸ்வீட்டும் காரமும் நாவங்கிட்டு வந்தே. அமாசக் கூட்டம், சாந்தி போடுறான்னு காலனிக்கு ஓடுற. அன்னக்கெல்லாம் கும்புடாத நோம்பு இன்னக்கா?”

“ஏங்க கோச்சிக்கிறீங்க? நீங்க வந்து நூறு ரூபா நோட்டக் குடுத்து ந்தா செவுந்தி நாளக்கி நோம்பு கும்புடுன்னு சொன்னிங்களா? நானாக வயித்தக் கட்டி வாயக் கட்டி, வூட்ட எப்படியோ கவுரதியா நடத்திட்டுப் போற… நீங்க வந்து பாருங்க, கழனியில நல்லா கதிர் புடிச்சிருக்கு. சாமி கும்புடற…”

“சரி கும்புடு, ராவிக்கே வந்தாலும் வந்திடுவ!”

செவந்தி தனியாக வேலை செய்கிறாள். கன்னியப்பன் மாட்டை வண்டிக்கு அவிழ்த்துப் போகிறான். வண்டி இருக்கும்; மாடிருக்காது. இவன் பூட்டிக் கொண்டு செல்வான். மண்ணடிப்பான், எருவடிப்பான், மூட்டைகள் கொண்டு போவான். மாட்டுக்கு ஒரு நாளைக்கு இருபத்தைந்தேனும் கொடுப்பான். அது நேரத்தைப் பொறுத்தது.

சரோ, பள்ளிக்கூடத்தில் ஸ்பெசல் கிளாஸ் என்று போய் விட்டாள். சரவணனும் இட்டிலி சாப்பிட்டுவிட்டுப் போய் விட்டான். பகலுக்கு வந்து விடுவேன் என்று சரோ சொல்லி இருக்கிறாள். பருப்புப் போட்டு சாம்பார் வைத்து, வாழைக்காய் வாங்கிக் காரம் தடவி எண்ணெய் ஊற்றிப் பொரியல் செய்கிறாள். பச்சரிசியும் பாசிப் பருப்பும் கடலைப் பருப்பும் வேக வைத்துப் பாயாசம் வைக்கிறாள். வடைக்கு ஊறப் போட்டு உரலில் இட்டு அரைத்துக் கொண்டிருக்கையில் சரவணன் ஓடி வருகிறான்.

“அம்மா… அம்மா.. உன்னைத் தேடிக்கிட்டு ஜீப்புல மேடம் வந்திருக்காங்க. ஆபீசர் ரெண்டு மூணு பேரு… எல்லம் வந்திருக்காங்க!”

சாந்தி கூறினாள், அவர்கள் இடையில் பயிர் எப்படி வைத்திருக்கிறாள் என்று பார்க்க வருவார்களென்று.

அப்படியே உதறிவிட்டு எழுந்து வாசலில் ஒடுகிறாள்.

“அம்மா! வாங்க… ஐயா வாங்க… எங்கன… வாங்கம்மா” …உடலும் உள்ளமும் பரபரக்கிறது. அவர்கள் திண்ணையில் உட்காருகிறார்கள்.

“அம்மா… அம்மா…” என்று கத்துகிறாள்.

பின்புறம் இருக்கும் அவளிடம், “ஆபீசர் அம்மால்லாம் வந்திருக்காங்க. வடைக்குப் போட்டுட்டேன், ஆட்டித் தட்டி எடு…” என்று கூறுகிறாள். இதற்குள் அப்பன் சாவடிப் பக்கமிருந்து வருகிறார். கும்பிடுகிறார்.

“வாங்கையா! வாங்கம்மா பயிர் வச்சிருக்கு…”

செவந்தி வாசலுக்கு வருகிறாள். “உள்ளே வந்து உக்காராம, வெளியே உக்காந்துட்டீங்க! இன்னிக்கு தீபம். சாமி கும்புடுகிற நாள்…”

“ஓ, நாங்க வந்து தொந்தரவு குடுக்கிறமோ?” என்று பெரிய மேடம் சிரிக்கிறார்.

“அய்யோ அப்படி இல்ல. எனக்குச் சாமியே நேரில வந்தாப்பல இருக்கு. பயிரு நீங்க சொன்னபடி வச்சேங்க. நாத்து விடுறப்ப மண் பரிசோதனை, விதைத் தேர்வுதான் செய்யல. ஆனா, அஸோஸ்பைரில்லம் குழி போல தண்ணிய கரச்சி, நாத்து முடிய அரை மணி வச்சோம். நிலத்தில தொழு உரம், சாணி உரம் கலந்து போட்டோம். தழைச்சத்து, சாம்பல் சத்து, மணிச்சத்து, எல்லாம் நீங்க படிச்சிக் குடுத்தாப்புல நோட்ட வச்சிப் பாத்திட்டு வச்சோம். பூடாக்ளோர்… களைக் கொல்லி மணலில் கலந்து கையில் உரை போட்டுக்கிட்டு விசிறினேன். களையே இல்லம்மா. பதினஞ்சி, இருபத்தஞ்சு, முப்பத்தஞ்சு, அம்பதுன்னு உரம் போட்டோம். முதல்ல ரெண்டு வாட்டி வேப்பம் புண்ணாக்கு கலந்து வச்சே… நீங்க வந்து பாருங்க…” இதற்குள் சரவணன் சொல்லி வேணி வீட்டில் இருந்து செம்பில் காபியுடன் வருகிறாள்.

“காபி குடியுங்கம்மா… ஸார், காபி குடியுங்க…”

சிறு தம்ளர்களில் ஊற்றி வைக்கிறாள்.

“இப்ப எதுக்கம்மா காபி எல்லாம்? எவ்வளவு வச்சிருக்கே…?” வளர்மதி அம்மா, பத்மாவதி அம்மா, பெரிய மேடம், விரிவாக்க ஆபீசர்…

முதன் முதலில் இவர்கள் தாம் வீடுதேடி வந்தார்கள்.

வந்தவர்களை வாருங்கள் என்று அழைக்கவில்லை. செவந்தி உள்ளே சென்று மறைந்தாள்.

“நீங்கல்லாம் பயிர் வேலை செய்யிறவங்கதானே?” என்று பெரிய மேடம் என்று இப்போது அறியப்படும் அம்மாள் கேட்டார்.

“அதெல்லாம் ஆம்பிளங்கதா செய்வாங்க” என்றாள்.

“நீங்க, களையெடுப்பு, நடவு, அறுவடை எதற்கும் போக மாட்டீங்க? உங்களுக்குச் சொந்த நிலம் இருக்குன்னு தெரியாது?”

செவந்தி எட்டிப் பார்த்து, “அதெல்லாம் கூலிக்குப் போறதில்ல. எங்களுக்குள்ள நான் செய்வே… எங்கம்மா செய்யாது” என்றாள்.

“பின்னென்ன? ஏன் உள்ள போய் மற ஞ்சுக்கறீங்க? உங்க பேரென்ன? வயசு?… கலியாணமாயி எத்தன வருசம், வீட்டுக்காரரும் பயிர்த் தொழில் செய்கிறவரா… எல்லாம் சொல்லுங்க, வாங்க!”

“அய்யய்யோ! அதெல்லாம் ஆம்புளகளைக் கேக்காம எப்படிச் சொல்றது? நீங்க யாருன்னு எனக்கென்ன தெரியும்?”

“நாங்களா? நாங்கல்லாம், தமிழ்நாட்டுப் பண்ணை மகளிர் திட்டம்னு ஒரு திட்டத்தைச் செயல்படுத்துபவர்கள். இதை டென்மார்க் என்ற நாட்டின் உதவியுடன் நம் அரசே நடத்துகிறது. நீங்கள் நடவு நடுகிறீர்கள். களையெடுக்கிறீர்கள், ஏன் அண்டை வெட்டுவதில் இருந்து அறுவடை வரை செய்கிறீர்கள். ஆனால் மொத்தமாகப் பார்த்தால், பெண்கள் பாடுபடுவதன் பலன் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இப்போது, இந்த ஆபீசர் அம்மாக்கள், உங்களுக்குச் சிறு சிறு தொழில் நுணுக்கப் பயிற்சி வகுப்பு நடத்துவாங்க. பண்ணை வேலைசெய்யும் பெண்கள் சுயமாக நிற்க வேணும். வளமை கூடவேண்டும். நிறைய இடங்களில், தமிழ்நாடு முழுவதும், ஏன், இந்தியா முழுவதுமே மகளிருக்கு இந்தப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு நீங்கள் காசு ஒன்றும் கொடுக்க வேண்டாம். ஐந்து நாள் பயிற்சிக்கு வந்து போக நாங்களே ஓர் ஊக்கத் தொகை தருகிறோம். அஞ்சு மூட்டை எடுத்த வயலில் எட்டு மூட்டை காணலாம்…”என்று விரிவாகச் சொல்லிக் காகிதங்களைத் தந்தாள். ஊர், பேர், விவரம் எல்லாம் எழுதிக் கொண்டார். இவள் புருசன் கேட்டதும்,

“பயிற்சியும் வாணாம், ஒண்ணும் வாணாம். நீ வீட்ட விட்டு எங்க போவ?” என்று தீர்த்து விட்டான்.

ஆனால் அடுத்த நாளும் விரிவாக்க ஆபீசருடன், திட்ட ஆபீசர் அம்மாக்கள் இருவரும் வந்தார்கள். ஜனாபாய் என்ற பயனடைந்த பெண்மணியும் வந்தாள்.

“நீங்க சேருங்க செவந்தியம்மா… நான் பாருங்க, ஆடிப்பட்டம் முதலில் வெள்ளைக் கிச்சலி கால் காணி போட்டேன். எட்டு மூட்டை எடுத்தேன்” என்று ஜனா ஆசை காட்டினாள். ஜனாபாய், கிராமத்துப் பெண்மணிதான். ஆனால் பி.ஏ. படித்திருந்தாள். ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது.

இதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. நன்றியுணர்வில் கசிகிறாள்.

“செவந்திம்மா, வண்டில ஏறுங்க; உங்க வயலைப் பார்க்கிறோம்!”

“நா இப்படி நடந்து வந்திடுவே. சரவணா, வண்டில ஏறிட்டுப் போயி நம்ம வயலைக்காட்டு! நா அஞ்சுநிமிசத்தில் வர…”

சரவணனுக்குச் சந்தோசம்.

செவந்தி உள்ளே சென்று அம்மா வடை சுடுவதைப் பார்க்கிறாள். அப்பா இன்னமும் குளிக்கவில்லை. தன் வீட்டைத் தேடி ஆபீசர்கள் வந்தது பெருமைதான்.

“விருசா சாமி கும்பிட்டுட்டு வந்தவங்களுக்கு வடயும், பாவாசமும் குடும்மா…” என்று சொல்கிறாள்.

“அதுதா… நா இப்ப போகலன்னா நல்லாருக்காது. அம்மா, வட சுட்டதும் எல்லாம் எடுத்து வச்சி, கப்பூரம் காட்டிக் கும்பிட்டுக்க. நான் வாரப்ப கூட்டியாரேன்…” என்று சொல்கிறாள்.

விடுவிடென்று பின்பக்கம் வழியாக அவள் நடக்கிறாள். அப்பாவும் கிளம்புகிறார்.

“நீங்க வீட்ல இருங்களேன் அப்பா? சாமி கும் புடுது அம்மா. நா அவங்களக் கூட்டிட்டு வார. தவலயில வெந்நி இருக்கு. முழுகிட்டு நல்லதா வேட்டி எடுத்து உடுத்திட்டு இருங்க!”

இவள் செல்லும் போது அவர்கள் வரப்பில் நின்று இவள் கழனியைப் பார்க்கிறார்கள்.

“செவந்திம்மா? உங்களுக்கு நூத்துக்குத் தொண்ணுத் தெட்டு மார்க்” என்று சொல்கிறார் பெரிய மேடம். “பத்தி நடவு எவ்வளவு வசதியாக இருக்கு பாத்தீங்களா? வடத்துக்கு எவ்வளவு குத்து வச்சீங்க?”

“பத்தொம்பதுதா. ரெண்டு மூணுல இருபது இருக்கும்…”

“பரவாயில்ல… இல்லாட்டி கொச கொசன்னு அதுங்களுக்குக் காத்துப் போக வசதி இருக்காது… இது சம்பாப் பயிர் இல்ல?”

ஒரு சட்டியில் சுண்ணாம்படித்து கரும்புள்ளி வைத்துக் கவிழ்த்திருக்கிறாள். பக்கத்து மேல் வீதிப் பொன்னம்பலத்தாரின் வயல். அதில் கொச கொசவென்று அடர்ந்து இருக்கிறது. சிலவற்றில் பழுப்பாக இருக்கிறது. சொட்டை விழுந்த முடி போல் தெரிகிறது. சீராக இல்லை. களையும் இருக்கிறது. இன்னும் பூப்பிடிக்கவில்லை.

“அந்த நிலத்துல பூச்சி விழுந்திச்சின்னா நமக்கும் வந்திடுமோன்னு பயமா இருக்குங்க…”

“பயப்படாதீங்க. ஒரு தாம்பாளத்தில் தண்ணி ஊத்தி கிரசினும் ஊத்தி நடுவில ஒரு காடா விளக்கக் கொளுத்தி வச்சிடுங்க. நாலு பக்கமும் பூச்சி வந்தா செத்திடும்… அடுத்த முறை உங்களைப் பார்த்து எல்லாரும் இதே மாதிரி போடுறோம்பாங்க. நீங்க கத்துகிட்டத, பத்துப் பேருக்கு சொல்லிக் குடுக்கணும். அதுக்கு ஒரு புரோகிராம் இருக்கு…”

“காபி கொண்டாந்தாளே நீலவேனி, எங்க ஒப்படியா சுந்தரி, எல்லாரும் கொஞ்ச கொஞ்ச நிலம் வச்சிருக்காங்க. அத்தயும் வாரத்துக்கு உட்டிருக்காங்க. பொம்புள எப்படி விவசாயம் செய்றதுன்னு பயப்படுறாங்கம்மா. எனக்கு இப்படித்தானே பயமாயிருந்திச்சி. இப்பதா தயிரியம் வந்திருக்கு.”

“இனி வந்திடும்…” எல்லோரும் ஜீப்பில் ஏறிக் கொள்கிறார்கள். செவந்தியையும் உள்ளே அடைத்துக் கொள்கிறார்கள்.

வீட்டு வாசலில் வண்டி நிற்கிறது. அப்போது சைக்கிளில் சரோ வந்து இறங்குகிறாள்.

“அம்மா எல்லாம் உள்ள வாங்க! வாங்க சார்…!”

“இல்லம்மா, நேரமில்ல. இன்னும் நிறைய இடத்துக்குப் போகணும்… எறங்கிக் காபி குடிச்சமே…?”

“ஓ… அதெல்லாம் கூடாது. அம்மாசாமி கும்புட்டிருக்கு. எதாகிலும் எறங்கி வந்து சாப்புடனும்…”

“அதெல்லாம் வாணாம்மா…”

“இப்படி எறங்கி வந்து உக்காருங்க… நான் கொண்டாறேன்..” என்று பாயாசப் போணியை அப்பா எடுத்து வருகிறார். வலுக்கட்டாயமாகத் தம்ளரில் ஊற்றிக் கொடுக்கிறார். சரோசா இலையில் சுடச்சுட வடைகளைக் கொண்டு வருகிறாள். கன்னியப்பன் அப்போது ஓடி வருகிறான்.

“வணக்கம் ஸார்! வணக்கம்மா! சொன்னாங்க, ஆபிசர்லாம் வந்திருக்காங்கன்னு, வந்தேன்…”

“கன்னியப்பன்தான் எல்லா உதவியும். நல்ல உழைப்பாளி…”

“உனக்கு சொந்த நிலம் இருக்காப்பா?”

“இனி வாங்க வேணும். பாத்திட்டிருக்கேனுங்க…”

“கலியாணம் ஆயிருக்கா?”

“இல்லங்க…”

“காணி இருக்கிற பெண்ணப் பாத்துக் கட்டிக்க… சரியாப் போயிடும்” என்று சொல்கிறார் ஆபீசர் அம்மா.

மனசுக்கு மிக இதமாக இருக்கிறது.

சாமி கும்பிட்டதின் பலனை உடனேயே கண்டுவிட்டாற் போல் நினைக்கிறாள் செவந்தி.

ஜீப் போன பின்பும் தெருவில் இவளையும், வந்தவர்களையும் பற்றியே பேச்சு நடக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

ரங்கன் மறுநாட் காலையில் தான் வருகிறான். வரும் போதே செய்தி எட்டியிருக்கும் என்று தோன்றுகிறது.

இவள் உழவருக்கு ஒரு வார்த்தையைப் பற்றி விட்டாள்.

ஆடிப்பட்டம் விதைத்தவர்கள், பயிர் நேர்த்திக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். பூச்சிக்கு விளக்குப் பொறிதான் அன்றைய பேச்சு.

இனி நிதமும் கேட்க வேண்டும். ரேடியோவின் மீதிருந்த வெறுப்பு மாறி விட்டது. அது முடிந்து செய்திகள் வருகின்றன.

செவந்தி அதைக்கேட்டுக் கொண்டே, முதல் நாள் வைத்த எண்ணெய்ச் சட்டியில் இருந்த எண்ணெயை வடித்துச் சுத்தம் செய்கிறாள். ரேடியோ சமையலறைக்கு வெளியே வாயிற்படியில் இருந்து சிறிது எட்டி வைத்திருக்கிறது.

“காபி கூபி இருக்கா?” என்று கடுகடுப்பாக அவன் பார்க்கிறான்.

“அட…? நீங்க எந்த பஸ்ஸுக்கு வந்தீங்க? ராவே வந்துட்டீங்களா?”

“இப்பத்தா வாரேன். எனக்குத் தலை வலிக்கிது. காபி கொண்டா. மாத்திர சாப்பிடணும்…”

அப்போது அங்கு சரவணன் ஒடி வந்து அவளிடம் ஒரு சீட்டைக் கொடுக்கிறான். “ஓராளு வந்திருக்காரு. இதை உங்ககிட்டக் கொடுக்க சொன்னாரு..”

பாப்பாம்மாள் என்று எழுதி இருக்கிறது.

அவள் வாசலுக்கு விரைகிறாள்.

“பாப்பாம்மா சொல்லிச்சி. அமாவாசக் கூட்டம் காக்கனேரில. உங்களவரச் சொல்லிச்சி…”

“சரி, போங்க, அமாசிக்கு எத்தினி நாளிருக்கு?” அவள் உள்ளே வரும்போது ரங்கன் அந்த ரேடியோவைத் தூக்கி ஏறிகிறான். அது முற்றத்தில் போய் சத்தத்துடன் விழுகிறது. உடைகிறது.

அவள் விக்கித்து நிற்கிறாள்.

“நா ஒராளு தலவலி மண்ட உடய்க்கிதுன்னு வந்து உக்காந்திருக்க. நீ இத்த அலறவுட்டுப் போட்டு எவனையோ பாக்க ஓடுற! நானும் பாத்திட்டுதாணிருக்க. உனக்கு வர வரத் திமுரு ரொம்பப் போவுது. புருசன், வீடுன்னு மதிப்பு இல்ல. நினைச்ச நேரத்துக்கு வார, நினைச்ச நேரத்துக்குப் போற! மானம் மரியாதியுள்ளவ அர நேரம் தங்கமாட்டா…!”

எழுந்திருந்து முகம் கடுக்கப் போகிறான்.

அத்தியாயம்-9

மனசே சரியில்லை.

அவன் கோபித்துக் கொண்டு சென்ற போது இவளுக்கும் வீறாப்பாக இருந்தது. ரேடியோவைப் போட்டு உடைக்க வேண்டுமென்றால்… அதுவும் அவன் ஆசையாக மகளுக்கு வாங்கிக் கொடுத்தது. அதை இவள் உபயோகிக்கக் கூடாதென்றா?

இல்லை. பெண் பிள்ளை. சம்சாரம், தலை தூக்கக் கூடாது. அவளை மதித்து யாரும் வரக் கூடாது. இவனுக்குப் பிடிக்காதது, அவளுக்கும் பிடிக்கக்கூடாது. சரோவுக்குத்தான் இழப்பு.

“என்னம்மாது? ஒரு ரேடியோ இருந்திச்சி, அதையும் உடைக்கப் பண்ணிட்ட? அப்பா சமாசாரம் தெரியும். அவரை ஏன் கோவிக்கும்படி வைக்கிற?”

“என்னாடி அவரைக் கோபிக்கும்படி வச்சிட்டேன்? நான் என்ன பண்ணிட்டேன் சொல்லு? காபி கேட்டாங்க. இவன் சீட்டக் குடுத்தான். யாருன்னு பார்க்கப் போனேன். பொம்பிள்ளைனா அவ்வளவு கேவலமா? கோபிச்சிட்டுப் போனாப் போகட்டும்! நானும் மனுசிதா…” என்றாள். கண்ணிர் முத்துக்கள் சிதறின.

“நீ சரவணங்கிட்ட அந்தாள இருக்கச் சொல்லிட்டு முதல்ல அவரக் கவனிச்சிருக்கணும். அவருதா பஸ்ஸுல லோலுப்பட்டுட்டு வந்திருப்பாரு. கோவம், தலவலி…”

“அப்படி யாரு, நானா போகச் சொன்னே. நேத்து நாசாமி கும்புடனும் வூட்ல இருங்கன்னு சொன்ன. தீபத்துக்குப் போற, நீ தனியா கும்புட்டுக்கன்னாரு…”

“நீங்க சண்டை போட்டுக் கோவிச்சிக்குங்க! எனக்கு ரேடியோ இல்ல. இப்படி உடஞ்சிருக்கு. இத்தயாரு ரிப்பேர் பாப்பாங்க! சீ… எனக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்ல…” என்று முகத்தைத் தூக்கிக் கொள்கிறாள்.

“அது என் ரூமில இருந்திச்சி. அத்த ஏன் சமையல் ரூமுக்குக் கொண்டாற? உழவருக்கு ஒரு வார்த்தையோ என்ன புரோகிராமோ, அங்க வந்து நின்னு கேக்க வேண்டியது தான?”

“சரி. மன்னிப்பு. மாப்பு! அறுவடை ஆவட்டும். முதல்ல உனக்கு ரேடியோ வாங்கித் தாறேன். கோபிச்சுக்காதம்மா”

“அதுவரைக்கும்? எனக்குப்பரிட்சைம்மா, படிக்கணும்”

“சுந்தரி வூட்டுல ரேடியோ இருக்கு. சின்னம்மாதான, குடுப்பா, வச்சிக்க”

“ஆகா! அவங்க வாலுங்க வுடுமா? ரேவதிக்குட்டி அவங்க வூட்டுப் பொருளத் தொட்டாலே பிடாரி போல அழும். அந்தப் பய வரதன் வாசப்படில குறுக்க நின்னு மறிப்பா!”

அவன் பகல், இரவும் வரவில்லை. சரவணனை அனுப்பிக் கடையில் இருக்கிறானா, சாப்பாட்டுக்கு வரவில்லையா என்று அழைத்து வரச்சொன்னாள்.

“அப்பா கடையில் இல்லமா; முதலாளி டவுனுக்குப் போயிருக்காருன்னு சிவலிங்கம் சொன்னாரு…”

மாட்டுக்குப் புல்லறுத்து வருவோம் என்று கிளம்புகிறாள்.

மனசில் அமைதியே இல்லை.

வெற்றிலைக் கொடிக்காலில் இலை கிள்ளும் பழனியாண்டி, “திடீரென்று ஆயிசு முடிஞ்சிட்டவங்க போறாங்க…” என்று யாரிடமோ பேசுகிறான்.

யார்?

சின்னசாமி… அகத்திக்கீரைப் பறித்துக் கொண்டிருக்கிறான்.

“யாருக்கு என்ன?”

“பஸ் கவுந்து போச்சாம்!”

ஐயோ? என்று நெஞ்சு குலுங்குகிறது.

“எங்கே?”

“திருவள்ளுர் பஸ்ஸாம். பிரேக் புடிக்காம மரத்தில மோதி, ரெண்டு பேர் செத்திட்டாங்களாம். நாகசாமி வாத்தியார் வந்து சொன்னாரு. அவரு அந்த பஸ்ல போக இருந்தாராம். மக திருவள்ளுருல குளிகுளிச்சிருக்காம். பஸ் தவறிப் போச்சாம்.”

புல்லறுப்பை விட்டாள். குலுங்கக் குலுங்க வீடு வருகிறாள்.

இவளே கடைவீதிக்கு ஒடுகிறாள்.

எந்த பஸ்… எங்கே போனானோ? திருவள்ளூரில் அவனுக்கு ஒன்றுவிட்ட அக்கா இருக்கிறாள். அவள் மகள் படித்து விட்டு டீச்சராக வேலை செய்தாள். அவளைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததுண்டு. ஆனால் அவர்கள் இவருக்குப் பெண் கொடுக்க இஷடப்படவில்லை.

“ந்தா, எங்க போற?”

எதிரே சைக்கிள் வருவதும், அவன் இருப்பதும் கூடக் கண்களில் தைக்காமல் அப்படி ஒரு பதட்டம்.

“எதுக்கு இப்படி ஓடுற? வூட்டுக்கு வந்து சேதி சொன்னாங்களா?”

“வயலுக்குப் போயிருந்தேன். பழனியாண்டியும் சின்னசாமியும் பேசிட்டாங்க. கப்புன்னுது. ஓடி வர்றேன். ஏங்க, எதோ வீட்ல ஏறத்தாழப் பேசுறதுதா, அதுக்காக நேத்துக் காலம போனவங்க. நமக்கும் ஒரு பொம்புளபுள்ள இருக்கு. நாளைக்கி அதுக்கும் கலியாணம் காட்சி செய்யணும். ஆனா, ஆம்புள, பொறுப்பில்லாம..” சட்டென்று அவள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.

“ந்தா? என்ன பேசுற நீ.. ? பின்னால் வந்து உக்காரு. வூட்டப் பாக்கப் போகலாம். பெரியம்மா பய்யன் கண்ணன்ல? அவம் பூட்டான். இப்பத்தாசேதி வந்திச்சி. அந்தப் பொண்ணு உசா. சுந்தரிக்குத் தங்கச்சி முறையாகணும். நாம கூடத்தா போகணும்.”

செவந்தி வாயடைத்துப் போகிறாள்.

இருவரும் வீட்டில் வந்து இறங்குகிறார்கள்.

செய்தி தேன் கூட்டில் தீ வைத்தாற் போல் பரவுகிறது.

“எப்படிச் செத்துப் போனா? கலியாணம் பண்ணி அஞ்சு வருசம் ஆகல. வரவேற்பு குடுத்தானே. நடிகரெல்லாம் வந்தாங்க, கட்சித் தலவரெல்லா வந்தாங்க. அவ்வளவு உசரமும் தாட்டியுமா இருப்பா… சாவுற வயசா?”

“அவ்வளவு ஏத்தமா? வாரத உலவம் பொறுக்காத? எவ கொள்ளிக் கண்ணு வச்சாளோ? அந்தப் பொண்ணுக்கு ஒரு நெக்லசு போட்டிருக்கானாம். அதுவே அம்பதாயிரமா, அவெ மட்டும் என்ன, அஞ்சுவெரலும் மோதரம், சங்கிலி, அதுல புலி நகம் வயிரம் பதிச்சடாலர்…”

அம்சுவின் அத்தை குரலை இறக்கி அடுத்த வரிசையை விரிக்கிறாள்.

“அரைஞாண் ஒண்ணு மட்டும் முப்பது பவுனாம்!”

செவந்திக்கு எரிச்சல் பீரிட்டுக் கொண்டு வருகிறது.

“நீங்க பாத்தீங்களா?”

“இவ எதையும் நம்ப மாட்டா! பாத்தவங்க சொன்னாங்க. சினிமாக்கார ரசிகர் மன்றச் செயலாளர். இது பெரிய பவுருள்ள பதிவியில்லியா? அதா… யார் கொள்ளிக் கண்ணோ, அடிச்சிப் போட்டது.”

சுந்தரி குழந்தைகளைச் செவந்தியிடம் விட்டுவிட்டுச் சாவுக்குப் போவதாகத் தீர்மானமாகிறது. அம்மா கிளம்புகிறாள். சும்மாப் போக முடியுமா?

மேலவீதி ஆண்டாளம்மா வீட்டில், சரோவுக்குப் பண்ணி வைத்த தோடு குடை சிமிக்கியை வைத்து இருநூற்றைம்பது வாங்கி வருகிறாள்.

ஆண்டாளம்மாவுக்கு ஒரே பையன். பட்டணத்தில் முருகன் போல்தான் படித்தான். படிக்கும் போதே கலியாணமும் கட்டிக் கொண்டான். இரண்டு பேருமாக எங்கோ ஆப்பிரிக்க நாட்டில் டீச்சர் வேலை பண்ணுகிறார்கள். பத்துவயசுப் பேரனை வைத்துக் கொண்டு வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் – பொழுது போக்கில் ஈடுபட்டிருக்கிறாள். புருசன் ஒரு வேலையும் செய்ய மாட்டான். இரண்டு ஏக்ரா போல் காணி கரை உண்டு. அதில் பயிர் பண்ணிச் சம்பாதிப்பதை விட, இது சுவாரசியமாக இருக்கிறது. எத்தனை வங்கிகள் வந்தாலும் ஒரு முட்டுக்கு சேட் கடைக்குப் போவதைப் போல ஆண்டாளம்மா இவர்கள் தேவைகளுக்கு உதவுவாள். முழுகிப் போகும் பொட்டு பொடுக தங்க நகைகளை, வேண்டுமென்று சொல்லி வைத்திருந்தால், கிரயம் போட்டுத் தருவாள். கூலி, போன்ற தள்ளுபடியும் கிடைக்கும். மகன் மூலமாக, தங்கம் கொண்டு வந்து நகை விற்கிறாள் என்ற பேச்சும் கூட அடிபட்டதுண்டு.

அம்மாவுக்கு அழுது மூக்கைச் சிந்தப் பிடிக்கும்; போகிறாள்.

“யம்மா நா, ரீட்டா வீட்டில படிக்கப் போற. சோறு போடு…” என்று சரோ தட்டைப் போட்டுக் கொள்கிறாள், மாலை ஆறு மணிக்கே.

பசுவுக்குச் செவந்தி பருத்திக் கொட்டை ஆட்டிக் கொண்டிருக்கிறாள்.

“வெளக்கு வச்சிருக்கு. இப்பதா இங்கேந்து படிச்சாப் போதும்; விளக்கு வச்சு யார் வீட்டுக்கும் படிக்கப் போக வேணாம்.”

“போம்மா! இங்க ஒரு ரேடியோ கூட இல்ல. நான் ரீட்டா கூடச் சேந்து படிப்பேன்! எங்க சயின்சு டீச்சரு தங்கச்சி. என் கிளாஸ்ல தான் படிக்கிறாள்.”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன் அப்பா ஊரில் இல்ல. மேசரான பொண், யாரு வீட்டிலியோ, கிறித்தவங்க வீட்டில பொழுது போயி அனுப்ப மாட்டேன்!”

சரோ, கன்றுக்குட்டி திமிறுவது போல் குதிக்கிறாள்.

“யாரோ இல்ல… எங்க டீச்சர் வீடு! யம்மா, நான் படிக்கணும். டென்த்ல நிறைய மார்க் எடுக்கணும். பிளஸ் டூ படிச்சி என்ஜினியரிங் படிக்கணும்…”

“வெளக்கு மாத்துக்கட்ட. பொம்புளப் புள்ளக்கி இதுக்கு மேல ஒரு காசு செலவு பண்ணமாட்ட, தெரிஞ்சிக்க கழனிக் காரன் வீட்டில பெறந்தவ. சேத்துல எறங்கி நாத்து நடக் கத்துக்க. அதான் சோறு போடும்! பருத்திக் கொட்டயும் புண்ணாக்கும் கலக்கி மாட்டுக்கு வச்சிப் பராமரிக்கக் கத்துக்க! அதான் நமக்கு சோறு போடும். படிச்ச பய்யனே கிழிக்கல. நீ இன்னொருத்தன் வீட்டில போய் குப்ப கொட்டணும். ஒரு நா, அடுப்பாண்ட வாரதில்ல, ஒரு காபி வச்சிக் குடுக்கத் துப்பில்ல. என்னமோ ராசா வூட்டுப் புள்ள போல உக்காந்து, சோறெடுத்து வையின்னு அதிகாரம் பண்ணுற?”

“யம்மா என்ன நீ? நான் இப்ப படிக்கக் கூடாதுன்னா, அப்ப ஏன் படிக்க வச்சே? நீ சோறெடுத்துப் போட வேணாம். நானே போட்டுக்கறேன்…” அவள் அடுப்படிக்குச் சென்று கொஞ்சம் சோறும் குழம்பும் வைத்துக் கொள்கிறாள். பிசைந்து நின்றபடியே சாப்பிடுகிறாள். தட்டைக் கழுவி வைத்துவிட்டு, உள்ளே சென்று புத்தகப் பையை எடுத்துக் கொள்கிறாள். சைக்கிள் இல்லை… நடந்தே விடுவிடென்று போகிறாள்.

“ஏய் சரோ? அடி. சரோ?”

பருத்திக் கொட்டைக் கையை நீரில் கழுவியவாறு கூப்பிடுகிறாள். அவள் திரும்பியே பார்க்கவில்லை.

யார் மீதென்று சொல்ல முடியாமல் கோபம் வருகிறது.

கருகருவென்ற மேனியும் முண்டாசுமாகக் கன்னியப்பன் வருகிறான்.

“கன்னிப்பா, சரோவ பாத்தியா?”

“ஆமாம்… போகுது. விடுசாப் போகுது. புத்தகப் பையோட…”

“ஓடிப்போய், அம்மா உன்னக் கூப்பிடுதுன்னு கூட்டிவா, கையோட..”

அவன் இவள் ஆணையை சிரமேற் கொண்டவனாக ஓடுகிறான். இவள் விடுவிடுடென்று உரலைக் கழுவுகிறாள். மாட்டுக்குக் கலக்கி வைக்கிறாள்.

அவளை அழைத்து வந்து விடுவானா?

இவள் கூப்பிட்ட போதே வராதவள், இப்போது வருவாளா?

ரேடியோ இல்லை, வீட்டில் படிக்க முடியவில்லை என்று சாக்குச் சொல்கிறாள். இது நம்பும்படி இல்லை.

ஆறாவது வருமுன்பே படிப்பை நிறுத்தி இருக்க வேண்டும்.

இந்தத் தெருவில், எந்தப் பெண்ணும் பத்துக்கு வரவில்லை. ஆறு, ஏழு, எட்டு… வயசுக்கு வந்ததும் நிறுத்தி விடுவார்கள். மகாலட்சுமி, பூரணி, யாரும் படிக்கவில்லை. நடவு, களை எடுத்தல், அறுப்பு என்று போய்க் காசு சம்பாதிக்கிறார்கள். வருபவன் பத்து இருபது சவரன், வாட்ச், கட்டில், பீரோ, ரேடியோ, டி.வி. என்று கேட்கிறானே? சமர்த்தாக சீட்டுக் கட்டிப் பண்ட பாத்திரம் வாங்குகிறார்கள்.

இவளை இப்படி வளர்த்ததே தப்பு. கிறித்தவ ஸ்கூல், டீச்சர்கள்… என்ன சொக்குப் பொடி போடுவாங்களோ? அப்பாவும் இல்லை, பாட்டியும் இல்லை. இவளை ஓரம் கட்டிவிட்டுப் போகிறாள். அந்த டீச்சர் வீடு எந்தத் தெருவோ? கிறிஸ்தவ டீச்சர் வீடென்றால் காலனிக் குப்பத்தில் மாதா கோயில். அங்கே வீடுகள் இருக்கின்றன. சைக்கிளில் போகவில்லை. அங்கிருந்து ராத்திரி எட்டு மணிக்கோ ஒன்பது மணிக்கோ தனியாக வருவாளா?

இளங்கன்று பயமறியாது. இளம் பெண்… ஊர் கெட்டுக் கிடக்கையில் என்னதான் நேராது?

கன்னியப்பன் வருகிறானா என்று வாசலில் போய் நின்று பார்க்கிறாள். வருகிறான். அவன் மட்டுமே…

“ஏம்ப்பா? அவளக் கூட்டியான்னே, விட்டுப் போட்டு வந்திருக்க?”

“அது சொல்லிச்சி, ரொம்பப் படிக்கணுமாம். அம்மாக்கு நீ புரிய வை கன்னிப்பா. கணக்கு நாத்து நடுறாப்பல இல்ல. எல்லாரும், மாசம் நூறு நூத்தம்பது குடுத்து டூசன் வச்சிக்கிறாங்க. நான் அதெல்லாம் இல்லாம, கேட்டுப் படிக்கிறேன். டீச்சர்தா வரச் சொன்னாங்க. நேரமாயிடிச்சின்னா. அவங்க தங்கச்சியோட தங்கிட்டுக் காலம வருவேன். விசயம் புரியாம அம்மா ஓன்னு கத்துது… சொல்லுன்னு சொல்லிச்சி. அதும் நியாயந்தான்.”

“ஏ மடயா, என்ன நியாயத்தக் கண்ட? நீ கூப்புட்டு வருவேன்னு தானே உன்ன அனுப்பிச்சே? அன்னாட சம்சாரி வாழ்க்கைக்கு என்ன பெரிய படிப்பு வேண்டி இருக்கு? இவ படிச்சிட்டு உட்கார்ந்திருப்பா. இவளுக்கு மேல படிச்சவனுக்கு ரொக்கம் குடுக்க, கட்ட, எங்க போக?”

அவன் தலை குனிந்து கொண்டு நிற்கிறான். அவன் எதற்கு வந்தான் என்று கேட்கக் கூடத் தோன்றவில்லை.

“இத பாருங்க. நா இத்தச் சொல்லத்தா வந்தேன்க்கா. நா, நமக்கு முற, மடயத் துறந்து விட்டுப் போட்டு மேக்கால புல்லறுத்திட்டிருந்த. வேல்ச்சாமி அத்த அடச்சிப்பிட்டா. தண்ணி பாதிக் கூட பாயல. மூணு நாளா இப்படிச் செய்யிறா. தண்ணி காவாத்தண்ணி பொது. நம்ம முறையில, அரமணி கூட பாயலிங்க! நம்ம கதிர் நல்லா வருதுன்னு பொறாமை. நீங்க அவனக் கூப்பிட்டுக் கண்டிச்சி வையுங்க! நான் சொன்னா, உனக்கென்ன, அவ்வளவு அக்கறை? அவ வூட்டு மாப்பிள்ளையோன்னு கிண்டலா பேசுறா…” குழந்தை போல் அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க ஆற்றாமையாக இருக்கிறது.

கையில் வந்திருக்கும் கதிர்க்கட்டைக் கை நழுவ விட்டுவிட்டு, எங்கோ கருப்பங்கொல்லை இருக்கிறதென்று எதிர்பார்க்கிறாளா? கருப்பங்கொல்லை பணம் தரும். ஆனால் சோறு போடுமோ?

பாடுபட்டு மணிகள் கண்டு, உறவு கொண்டு மகிழும் கனவு அவளில் கனவாகவே நின்று விடுமோ?

அப்பா வருகிறார். நெஞ்சுக் கனைப்பு வாயிலிலேயே கட்டியம் கூறுகிறது. உள்ளே வந்து உட்காருகிறார். நூறு இருநூறு சரக்கு உள்ளே போயிருக்குமோ?

“செவந்தி, அந்தப்பய எப்படிச் செத்தானாம் தெரியுமா?” இவள் அவர் முகத்தையே பார்க்கிறாள்.

அவர் குரலை இறக்குகிறார். “அதா ரசிகர் மன்றம்ன்னு சொன்னான்னில்ல… ஏதோ தவராறாம்… யாரோ ஏதோ பண்ணிட்டாங்கன்னு சொல்லிக்கிறாங்க..”

“அப்படீன்னா…?”

“ராத்திரி நிறையக் குடிச்சிட்டு வந்து பொண்டாட்டியப் புடிச்சி அடிச்சானாம். அது கோவிச்சிட்டு மச்சாங்காரன் வூட்டுல போய் அழுதிச்சாம். விடியக் காலம வந்து பாத்தா வாசப்படில கெடக்கிறானாம், ரத்த வாந்தி எடுத்து…”

“இந்தக் கதையெல்லாம் நமக்கென்னத்துக்கப்பா! கேட்டுக்குங்க, அவங்க நமக்கு ஒட்டுமில்ல, ஒறவுமில்ல. சுந்தரிக்கும் ஏதோ உறவு. அவ புருசன் படு வெட்டியா செத்தப்ப, அவ வந்தாளா? இப்ப எதுக்கு இவங்க போவணும்? நா சொன்னா எடுபடாது. அவ பேச்சிலியே இவங்க மயங்கிட்டாங்க… உங்களுக்கும் நான் சொல்றேன். குடிக்கறத விட்டுப்போடுங்கன்னு…” என்று பேச்சோடு அவருக்கும் தைக்கும்படிச் சொல்லி வைக்கிறாள்.

“நான் குடிக்கல செவந்தி இன்னைக்கு? ஒங்கிட்ட நா ஏன் பொய் சொல்றே?”

சரவணன் சைக்கிளில் சுற்றி விட்டு வருகிறான். இருட்டி விட்டது. விளக்கைப் போட்டுக் கும்பிடுகிறாள்.

“ஏண்டா, ரீட்டா டீச்சராமே? உங்கக்காவுக்கு… அவ வீடு எங்கிருக்கு?”

“போஸ்ட் ஆபீசு பக்கத்துல இருக்கும் மா. தெரு திரும்பினதும் மேலத் தெருவுக்குப் போவமில்ல, நேராப் போனா, அண்ணா தெரு, மூணாம் வீடு…”

“அக்கா படிக்கப் போயிருக்கு. ஒம்பது மணிக்கு தாத்தாவக் கூட்டிட்டுப் போய் வுடு. அவ தாத்தாவக் கூட்டிட்டுத் திரும்பி வருவா!”

“நானே கூட்டிட்டு வாரம்மா”

“ஒம்பது மணிக்கெல்லாம் வந்திடணும்! தாத்தா போணாத்தா அவ வருவா? முன்னப் பின்ன ஆனாலும்…”

அவனுக்குச் சைக்கிளை விட்டு விட்டு வர விருப்பம் இல்லை.

இரவு அங்கு தங்கினால் தங்கி விட்டுப் போகட்டுமே என்று இருக்கவும் மனம் கொள்ளவில்லை. இது எப்படியும் வெளியே தெரிந்து விடும். ஏற்கனவே இவள் சைக்கிளில் பள்ளிக்கூடம் செல்வதும் பையன்களுடன் பேசுவதும் ஏற்கும் படியாக இல்லை. பிறகு ஒன்றுமில்லாததற்குக் கண் வைத்து மூக்கு வைத்துப் பேசுவார்கள்.

இரவு பத்து மணிக்குப் பாட்டனும் பேத்தியும் திரும்பி விடுகிறார்கள் என்றாலும் சரோ பற்றி கவலை தனியாக அழுத்துகிறது.

– தொடரும்…

– கோடுகளும் கோலங்களும் (சமூக நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *