நல்ல மனசுக்காரர்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 4,386 
 
 

அடுக்களைக்குள் இருந்து வெளிப்பட்ட செல்லம்மாள் தேகம் வியர்வைக் குளியலில் இருந்தது. எக்ஸாஸ்ட் ஃபேன் வேலை செய்யாததால்,  அனல் கலந்த காற்று 
கொஞ்சத்தில் வெளியேறாமல் உள்ளுக்குள்ளயே சுற்றிக் கொண்டிருந்தது. அதன் எரிச்சல் வேறு செல்லம்மாளை உண்டு இல்லை என்று ஆக்கியது!

எலக்ட்ரீஷியனிடம் எக்ஸாஸ்ட் ஃபேனை ரிப்பேர் செய்யச் சொல்லி இரண்டு  நாளாகிறது.  ஃபோனில் நியாபகப் படுத்தும் பொழுதெல்லாம் இதோ வரேன்னு சொல்கிறானே யொழிய இன்னும் வந்தபாடு இல்லை.

“செல்லம்…அடியே செல்லம்.”

அடுக்களைக்குள் இருந்து வெளிப்பட்ட செல்லம்மாள்,  ஈ.சி. சேரில் சாய்ந்தவாறு
குரல் கொடுத்த கணவர் கிருஷ்ணசாமியின் எதிரில் வந்து நின்றாள்.

ஏற்கனவே அடுக்களைக்குள் வேலை செய்த எரிச்சல். இப்போது கணவர் வேறு வேலை ஏதாவது வாங்கப் போகிறாரோ என்ற கடுப்பும் சேர்ந்து கொண்டது.

“செல்லத்துக்கு என்ன வெச்சிருக்கேள்?” என கேட்டாள் பிடரியை புடவைத்
தலைப்பால் துடைத்தபடி.

“வெற்றிலைப் பெட்டியைக் காணோம் செல்லம். இதோ இந்த ஸ்டூல் மேல்தான்
இருந்தது. எங்கப்  போச்சுன்னு தெரியல்ல. தேடிக் கண்டு பிடிச்சு கொடேன்.”

“ஆமா..அதுல வெற்றிலை, சீவல் எதுவும் இல்ல. அப்படி இருந்தாலும் வாயில போட்டு மெல்ல பல்லும் கிடையாது. அப்புறம் அதை எதுக்கு கட்டிண்டு அழறேள்?” தன் எரிச்சலையும் கோபத்தையும் பதிலில் காட்டினாள் செல்லம்மாள். 

“அதென்னடி அப்படி சொல்லிட்டே! ரெண்டு பல்தானேன்னு இளப்பமா பேசாதே. அது எவ்வளவு ஸ்டிராங் தெரியுமா? வேணும்னா ஒரு முழு கொட்டைப் பாக்கைக் கொடு. எப்படி கடிச்சு, மென்னு முழுங்கறேன்னு பார்.”

ரோஷத்துடன் சவால் விட்ட கணவரைப் பார்க்க சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது
செல்லம்மாளுக்கு. கிழவருக்கு ஆனாலும் அழிச்சாட்டியம் ஜாஸ்திதான் என்று நினைத்தாள்.

‘சரிதான். பாக்கு கடிக்கறபோது மிச்சமிருக்கற உங்களோட ரெண்டு பல்லும்
உடைஞ்சு வெளியே தெறித்து விழணுமா? எனக்கு எதுக்கு அந்தப் பாவம்!’ மனதில்
நினைத்துக் கொண்டாள்.

“சரி, அதை விடுங்கோ. நான் தெரியாமத்தான் கேட்கிறேன். ஒண்ணுமில்லாத அந்த
காலி டப்பாவை வச்சுக்கிட்டு என்னதான் செய்யப்போறேள்? பேசாமல் தூக்கிப் பரண்மேல போட்டுடுங்கோ!”

“என்னடி அப்படி கேட்டுட்டே! எங்கப்பா, தாத்தா,  கொள்ளுத் தாத்தா இவாள்ளாம் யூஸ் பண்ணினது.  அவாளோட ஸ்பரிஸம் எத்தனை தடவை அந்த வெற்றி  லைப் பெட்டியில் பட்டு இருக்கும்! அதை என் கையில வெச்சிருக்கறப்போ நான் ஆத்மார்த்தமா உணர்றேன். அவாளோட மானசீகமாகவும் பேசறேன்….”

“போதும். இதையே கேட்டு கேட்டு காது புளித்துவிட்டது நேக்கு. கொஞ்சம் விட்டால் உங்களோட பூர்வீகக் கதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடுவீங்க.  வெற்றிலைப் பெட்டிதானே வேணும். இருங்க, தேடித் தர்றேன்.” என்று சுற்றி பார்த்துவிட்டு,
தரையில் பார்த்தவள் கண்களில் தென்பட்டது கணவரின் வலப்பக்கம் கால்மாட்டில் தரையில் இருந்த பெட்டி. மெதுவாக குனிந்து அதை எடுத்து அவரிடம் நீட்டினாள் செல்லம்மாள்.

“இப்படி தரையில் வெச்சுட்டு காணோம்னா என்ன அர்த்தம்?” என்றவள், “சரி
தான்.  நான் வந்து என் கையால எடுத்துக்கொடுக்கணும்னு ஆசை. அப்படித்தானே ; இந்த வயசில இது தேவையா உங்களுக்கு?”

செல்லம்மாள் கடு கடுத்துப்போய்  முகத்தை அப்படி வைத்துக் கொண்டு கேட்டது ஏனோ பிடித்திருந்தது கிருஷ்ணசாமிக்கு. அவளின் முகம் கோபத்தில் சிவப்பதும்,  மூக்கு விடைத்துக் கொள்வதையும் பார்த்து ரசிப்பார். அதனால், அவளைச்  சீண்டிப் பார்ப்பதில் அலாதி இன்பம் அவருக்கு.

“ஆமா…அடி கள்ளி கண்டு பிடிச்சிட்டியே!” என்றவர், “ஆனால் நீ ரெண்டாவது சொன்னது நிஜம் இல்ல!” .என்றதும் கடுப்படைந்தாள் செல்லம். “என்ன இது? மொதல்ல ஆமான்னேள். அப்புறம் இல்லேங்குறேள். ஸ்திரமான பேச்சே உங்கள் கிட்ட   இல்லையே!”

“கோபிக்காதேடி.  பெட்டியைக் கண்டுபிடிச்சு கொடுப்பதற்காக உன்னை கூப்பிட்டேன் பாரு  அது நிஜம். ஆனால், அதை உன் கையால வாங்க நான் ஆசைப்பட்டேன்னு நீ சொல்றது அபாண்டம்! அதுல எள்ளளவும் உண்மை கிடையாது.”

“சரிதான்.  குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலேன்னு சொல்றேள்!”

“நான் குப்புறவும் விழல்லே.  மீசையில் மண்ணும் ஒட்டல்ல.  ஏன்னா எனக்கு மீசையே கிடையாது.  “

“சும்மா பேச்சுக்கு ஒரு பழமொழி சொன்னேன். அதுக்கு இப்படித்தான் விதண்டா
வாதம் பண்றதா?” 

இன்று ஏனோ பார்யாள் அதீத கோபத்தில் இருப்பது  போல் தெரிந்தது.  ஒரு
வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொடுத்ததற்கு இத்தனை பேச்சு பேசுகிறாள்.

“சரி அதை விடு.  தீபாவளி போயிடுத்து.  அடுத்தது பொங்கல். பொங்கலுக்கு என்ன ஸ்வீட் பண்ணப் போறே?  பேசாமபொரிவிளங்காய் உருண்டை பிடியேன். சாப்பிட்டு பல வருஷங்க ளாயிடுத்து.”

கணவர் பேச்சைக் கேட்டு சிரிப்பு வந்தது செல்லம்மாளுக்கு.  தீபாவளி பட்சணங்களை மென்னு முழுங்கவே மணிக் கணக்காயிடுத்து.  இந்த அழகில் பொரி விளங்காய் உருண்டையை எப்படி கடித்து தின்கப்போகிறார் என்ற சந்தேகம் வந்ததுசெல்லம்மாளுக்கு.

“பொரிவிளங்காய் உருண்டை கேட்கறேளே. பாக்கி இருக்கிறது ரெண்டு பல்லும் ஒழுங்கா இருக்கிறது உங்களு க்குப் பிடிக்கல்லையா?” கணவர் கொட்டைப்பாக்கைக் கேட்டபோது தன் மனதில் நினைத்ததை இப்பொழுது சொல்லிவிட்டாள்.

 அதே நேரம் கிருஷ்ணசாமியின் அலை பேசி ஒலித்தது.  ஸ்டூல் மேலிருந்ததை எடுத்து காதில் வைத்துக்கொண்டவர், “ஹலோ…” என்றதும் மறுமுனையில்  இருந்து வந்த செய்தியை வாங்கிக் கொண்டவர், “சரி.” எனக் கூறிவிட்டு ஆஃப் செய்து அலைபேசியை பழைய இடத்தில் வைத்தார்.

 “உன் பிள்ளையாண்டான் ரகுதான்  பேசினான்.”

 “என்னவாம்?”

“ரெண்டு நாள் முன்னால ரூபா ஒரு லட்சம் அர்ஜண்டா வேணும்னு கேட்டிருந்தானோல்லியோ?”

“ஆமா..எதிர்த்தாத்து சம்பத் மூலமா உங்க பேங்க் அக்கவுண்ட்லேர்ந்து நேத்து
பணம் எடுத்தேள். அந்தப் பணத்த உடனே வந்து வாங்கிக்கறேன்னு கூட சொன்னானே!”

“பணம் வேண்டாமாம். அவனே புரட்டிட்டானாம்!”

“ஓஹோ !  அது சரி.  நாளைக்கு பொங்கல். அவன் பெண்டாட்டி குழந்தைகளோடு இங்க வர்றதா ஏற்பாடு. அதைப் பத்தி ஒண்ணும் சொல்லல்லையா?”

“ம். வருவான்.”

அதே நேரம் எதிர் வீட்டு சம்பத்தின் மனைவி சுலோச்சனா கண்ணீரும் கம்பலையுமாக உள்ளே நுழைய, கிருஷ்ணசாமி தம்பதியர் கலக்கமுற்றனர்.

“ஏண்டியம்மா. என்னாச்சு? விடிஞ்சா பொங்கல். நல்லநாளுமா அதுவுமா ஏன் இப்படி அழுதுண்டிருக்கே?” செல்லம்மாள்  கனிவோடு விசாரித்தாள்.

“ஐயோ மாமி, நான் என்னத்தைச் சொல்வேன்…” என்றவள், ஓ வென்று பெருங்கு
ரல் எடுத்து அழுதாள்.

“இதோ பார்டி. சமாச்சாரம் என்னன்னு சொல்லாமல் நீ அழுதுண்டிருந்தா என்ன
அர்த்தம்? சொன்னால் தானே தெரியும்.” எரிச்சலுடன் கேட்டாள் செல்லம்மாள்.

“சொல்றேன்.” என்ற சுலோச்சனா, தன் முகத்தை புடவைத் தலைப்பால் அழுந்தத்
துடைத்தபடி தொடர்ந்தாள்.

“மாமி,  மாமா ரெண்டு பேரும் கேட்டுக்கோங்க .  என் ஆத்துக்காரருக்கு திடீர்னு
நெஞ்சு வலி வந்துடுத்து.  டாக்டர் கிட்ட கூட்டிண்டுபோய் காண்பிச்சேன்.  டாக்டர் உடனே ஈ.சி.ஜி., எக்கோ, பிளட் டெஸ்ட், பி.பி. இதெல்லாம் எடுக்கச் சொல்லிட்டார். கையில பத்து பைசா இல்ல. என்ன பண்றதுன்னு தெரியல்ல…” மீண்டும் அழுதாள்.

கிருஷ்ணசாமியும் செல்லம்மாளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
எதிர் வீட்டு சம்பத் நிறைய ஒத்தாசைகள் பண்ணியிருக்கிறான்.  என்னதான் பெற்றப் பிள்ளை உள்ளூரில் இருந்தாலும் அவசரத்துக்கு என்று அழைக்கும்பொழுது சம்பத், தான் ஃப்ரீயாக இருக்கும் பட்சத்தில்  உடனே வந்துவிடுவான்.  கிருஷ்ணசாமியோ அல்லது செல்லம்மாளோ என்ன வேலை கொடுத்தாலும் செய்வான்.

அதனால் அவனுக்கு உதவுவது என்று கண்களாலயே முடிவு எடுத்தனர்.  அறைக்குள் நுழைந்த செல்லம்மாள், பீரோவில் மகனுக்காக வைத்திருந்த பணத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு  வெளிப்பட்டாள்.

“இந்தாடி குழந்தே பத்தாயிரம் ரூபா. உன் ஆம்படையான் செலவுக்கு வச்சிக்கோ.  போறலேன்னா சொல்லு.  மேற்கொண்டு தரேன். “

நெகிழ்ச்சியில் வார்த்தைகள் சட்டென வராமல் அப்படியே இருவருக்கும் எதிரில்
சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தாள்.

“மாமா, மாமி,  இந்த உதவியை என்னிக்கும் நான் மறக்கமாட்டேன். ரொம்ப நன்றி”  என்று பணத்தை வாங்கிக்கொண்டு  பறந்தாள் சுலோச்சனா.

“செல்லம்,  நல்ல வேளையா நம்மப்  பையன் பணம் வேணாம்னுட்டான்.  இல்லேன்னா சுலோச்சனாவுக்கு உதவி செய்ய முடியாமல் போயிருக்கும். “

“ஆமான்னா.  நல்ல பசங்க.  அவாளுக்கு உதவறதுல தப்பே இல்ல. ” என்றவள், “சரி, நீங்க ஆசைப்பட்டமாதிரி பொங்கல்  பண்டிகைக்கு  பொரிவிளங்கா உருண்டை
பிடிச்சு விடறேன்.  ஆனா ஒரு கண்டிஷன்.”

“என்ன அது?”

“பொரிவிளங்காய் உருண்டையை மிக்ஸியில் அடிச்சு பொடியாக்கிதான் தருவேன் சம்மதமா?”

“ஓஹோ! நீ சாப்பிட வசதியா செய்யறேங்குற.  தாராளமா செஞ்சுக்கோ?”
என்றவர்,  மனைவியின் கோபப் பார்வையைத் தாங்கமுடியாமல் , சட்டென பேச்சைமாற்றி, “இவாளுக்கெல்லாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்  சொல்லலாமில்லையா?” என்றதும் பக்கென்று சிரித்துவிட்டாள் செல்லம்தாள். இருவரும் கோரஸாக, “எல்லார்க்கும் எங்களின் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்!” என்றனர். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *