இவள்தான் சாதனா..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 2,346 
 

“அம்மா. போய்ட்டு வரேன்.அம்மா போய்ட்டு வரேன்!”

இரட்டைப் பின்னல் பின்னி. டிபன் பாக்ஸை புத்தகத்துடன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு கல்யாணப் பரிசு சரோஜாதேவியை நினைவுபடுத்துவது போல வாசலில் நின்று இரண்டு தடவை கத்தினாள் சாதனா..

“ஏண்டி வாசல்லேர்ந்து கத்தற.. உள்ள வந்து சொல்லிட்டுப் போயேன்..”

“ஆமா.. உள்ள வந்தா , டிபன் பாக்ஸ் எடுத்திட்டியா..? சாம்பார் சாதமும் . உருளைக்கிழங்கு பொடிமாஸும் வச்சிருக்கேன்.மீதி வைக்காம சாப்பிடு,

இந்த வயசில வயத்த காயப்போடக்கூடாது , அப்பறம் பின்னாடி குழந்த பெத்துக்க உடம்பில தெம்பு வேண்டாமா.?”ன்னு குழந்தைக்கு கல்யாணமும் பண்ணி வச்சிட்டுத்தான் என்ன அனுப்புவ..!

என் பிரண்ட்ஸ் எல்லாரும் கேலி பணறாங்கம்மா..

என்னடி உங்கம்மா மொத்த கிளாஸுக்கும் கட்டிக் குடுத்திருங்காங்களான்னு டிபன் பாக்ஸ பிடுங்கிக்கறாங்க.!

நானு ஒருத்திதான் சாப்பாடு கொண்டு போறேன்.. எல்லாரும் கேன்டீன் தான்.”

“யாரு என்ன சொன்னாலும் என்னோட கண்ணம்மா நான் சொல்றத்தான் கேப்பா.!”

“சரி..சரி.நேரமாச்சு..பை.”

கல்யாணிக்கு சாதனாவை நினைத்தாலே பெருமையும் அதேசமயம் பயமும் சேர்ந்து வரும்.

இன்னும் பதினைந்து முடியவில்லை..என்ன வளர்த்தி..சாட்டை மாதிரி பின்னல். எந்த உடை போட்டாலும் எடுப்பாய் தெரியும் உடல்வாகு.

காலம் கெட்டுக் கிடக்கிறது. பத்திரமாய் ஸ்கூல் போய்த் திரும்பி வரவேண்டும்.

கல்யாணிக்கு இது ஒன்றுதான் பிரார்த்தனை..

பாவம்.அப்பா இல்லாத குழந்தை. எந்த வம்பிலும் மாட்டிக் கொள்வதற்கு முன்னால் கல்யாணம் பண்ணிவிட வேண்டும்..

மளமளவென்று தட்டில் மூன்று இட்லியை எடுத்து வைத்து முழுங்கி விட்டு. பர்ஸில் சில்லறை இருக்கிறதா என்று பார்த்துவிட்டு .கதவை மூடிக் கொண்டு வெளியே வந்தாள்..

மூன்று வீட்டில் சமைத்து வைத்துவிட்டு வீட்டிற்கு வருவதற்கும்.சாதனா பள்ளியிலிருந்து திரும்புவதற்கும் சரியாய் இருக்கும்..

சாதனாவிடம் ஒரு சாவி இருந்தாலும் பெண்ணைத் தனியே விட பயம். காலம் கெட்டுக் கிடக்கிறது.!

பத்தாயிரத்துக்கும் மேலாகவே சம்பாதிக்கிறாள். கணவன் நன்றாகத்தான் சேர்த்து வைத்துவிட்டு போயிருக்கிறான்.. ஆனாலும் கட்டி வைத்த சோறு எத்தனை நாளைக்கு.?

கல்யாணி வேலைக்குப்போவது சாதனாவுக்குபிடிக்கவில்லைதான்.

அவளுக்கென்ன சின்னக் குழந்தை.அவளை மேலே படிக்க வைத்து கல்யாணம் பண்ணிக்கொடுப்பது என்ன சுலபமான காரியமா.?

உடம்பில் தெம்பு இருக்கும்போதே சம்பாதித்து சேர்த்து வைக்க வேண்டும். உடல் ஓடாய்த் தேய்ந்தாலும் சரி..

இன்றைக்கு கொஞ்சம் லேட்டாகிவிட்டது. அவளுடைய பஸ் போயிருக்கும்.. பத்து நிமிடம் லேட்டானால்கூட கேட்டைப் பூட்டிவிடுவார்கள்.!

யோசித்துக் கொண்டு நிற்கும்போதே ஒரு புல்லட் அவள் பக்கத்தில் உரசுவது மாதிரி வந்து சடன் பிரேக் போட்டு நின்றது.

யாரிவன்.?

“உங்க பஸ் போயிரிச்சு.. ஸ்கூல் கதவ மூடிடுவாங்க. ஏறுங்க. அஞ்சு நிமிஷத்தில் கொண்டு விட்டிடமாட்டேன்?”

கறுப்பு நிற டீஷர்ட்டில் “YOU ARE MINE..”என்ற அர்த்தமில்லாத வாசகங்கள். கறுப்பு கண்ணாடி.. முகம் மறைக்கும் அளவுக்கு தாடி..மீசை.. பங்க் கட்டிங். ஒரு காதில் கடுக்கன்.

சுருக்கமாய் ஒரே வரியில் சொல்லியிருக்கலாம்.

நவயுக. பணக்கார. வேலை வெட்டியில்லாத பொம்பிளை பொறுக்கி!

இது ஒன்றும் அவளுக்கு முதல் அனுபவம் இல்லை. பள்ளி. கல்லூரிக்குச் செல்லும் யுவதிகள் பாடத்தைக் தவிர இதுமாதிரி தொல்லைகளை எதிர் கொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டி இருக்கிறதே!

அவனை அலட்சியமாய் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஏன்? நான் பார்க்க நல்லாத்தானே இருக்கேன். இப்படி மூஞ்சியத் திருப்பிக்கிற!”

இப்போது ஒருமையில் அழைத்தவன் இன்னும் நெருங்கி வந்தான்..

“உங்க வேலையைப் பாத்துட்டு போங்க!”

“இதுதானே என் வேலை!”

கண்ணாடியைக் கழட்டி அவளை உற்று நோக்கினான்.

“ஆட்டோ!”

வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டாள்.

பின்னாலேயே வருவான் என்று தெரியும்.

தினமும் தன்னை ஃபாலோ பண்ணியிருக்கிறான்.

இத்தனை விவரங்கள் தெரிந்து வைத்திருக்கிறான். ராஸ்கல்!

அன்றைக்கு முதல் இரண்டு பீரியட்ஸ் என்ன நடத்தினார்கள் என்றே தெரியவில்லை.

ஆயிஷாவுடன் பேசினப்புறம்தான் மனபாரம் குறைந்தது.

சாதனாவுக்கு அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள இன்றைக்கு நிறையவே இருக்கிறது. ஒன்று விடாமல் எல்லாமே அம்மாவிடம் சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும்..

ஆனாலும் அம்மா கவலைப்படும். அல்லது பயப்படும் விஷயங்களை மட்டும் சென்சார் பண்ணிவிடுவாள்..

இன்றைக்கு வீட்டில் நுழையும்போதே வாசலில் நிற்கும் அம்மாவைக் காணோம். ஆனால் வீடு திறந்திருந்தது.

வழக்கமில்லா வழக்கமாய் அம்மா கட்டிலில் படுத்திருந்தாள்..

பேக்பேக்கை மேசையில் வைத்துவிட்டு அம்மாவிடம் போனாள்.

“என்னடா.வந்திட்டயா. இன்னிக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்தி. படுத்திட்டேன் கண்ணா.இதோ ஒரே நிமிஷம்!”

“பேசாம படு. நான் இரண்டு காப்பி போட்டு எடுத்திட்டு வரேன்”

“அப்படியே டிபன்பாக்ஸில சூடா போண்டா இருக்கும் பாரு.ராஜி மாமி உனக்கு குடுத்தனுப்பிச்சா. பாவம்..நல்ல மனசு மாமிக்கு..”

ஒரு தட்டில் போண்டாவையும். இரண்டு கப் காப்பியையும் எடுத்துக் கொண்டு அம்மா பக்கத்தில் ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு அதில் வைத்துவிட்டு கட்டிலில் உட்கார்ந்தாள்..

“ஏம்மா. முடியலனா லீவ் போடறது தானே. இப்படி வருத்தி வருத்தி வேல பாக்கணுமா.? பெரிய கவர்மெண்ட் உத்தியோகம் பாரு.!!”

“ஆஃபீஸ் வேலைல கூட லீவ் போடலாம். நான் ஒரு நாள் லீவு போட்டா அங்க நடக்கிற களேபரத்த சொல்லி முடியாது. எல்லாம் பிரட் ஜாம்னு என் தல உருளும். பாவம்.ராஜி மாமி மட்டும்தான்”.

“அவளுக்கு முடியலயோ என்னமோ. அவளும் மனுஷி தானே. ஒரு நாளைக்கு கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா “ன்னு கேப்பா..

“சரி..சரி.. இன்னிக்கு என்ன news?”

“அம்மா.. இன்னிக்கு டெஸ்ட் பேப்பர்ஸ் எல்லாம் குடுத்தா. கணக்கு தவிர எல்லாத்திலேயும் நான்தான் முதல்.

நந்தினி இல்ல.

“குடுடி உன் பேப்பர்ஸ் எல்லாம். அதெப்படி எல்லாத்திலையும் நீயே முதல்!! மார்க்க சரியா கூட்டியிருக்காளான்னு செக் பண்ணப்போறேன்”னு சொல்றாம்மா.”

“சிலபேர் அப்படித்தான் கண்ணா.விடு. அப்பறம்.?”

“பி.டி.பீரியட்ல கீழ விழுந்துட்டேன்.”

“ஐயய்யோ.காட்டு முட்டிய..!”

கல்யாணி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து விட்டாள்..

“ஐய்யே. வெறும் சிராய்ப்பு தான்.டீச்சரே டிங்சர் அயோடின் போட்டுவிட்டா..பாரு..ஒண்ணுமே இல்ல.!!”

கண்பட்டுவிடும் அன்னியோன்யம்.

இன்றைக்கு பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போய்க் கொண்டிருக்கும்போதே ‘ஹல்லோ’ என்று மெலிதான குரலில் யாரோ அழைப்பது போல் இருந்தது.

திரும்பிப் பார்ப்பதற்குள் அவள் பக்கத்தில் அவன்..!!

சுத்தமாய் வேஷம் மாறியிருந்தான்..

க்ரீம் கலரில் பேன்ட்..அதே கலரில் நீல நிற கட்டம் போட்ட ஷர்ட்.காதிலிருந்த கடுக்கன் மைனஸ்.. தாடி. மீசையும் தான்.!! சுத்தமாய் முகச்சவரம் செய்திருந்தான்..!!

நன்றாகப் படிய வாரியிருந்தான்.

அவள் அவனை சிறிதும் லட்சியம் செய்யாமல் வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்..

“மிஸ்.ஸாரி. நான் உங்க கிட்ட நேத்து இன்டீஸன்டா பிகேவ் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்.. வீட்ல போய் ரொம்ப ஃபீல் பண்ணினேன்”

“எம் பேரு கிரி.. இன்ஜினியரிங் செகண்ட் இயர்..நல்லா படிப்பேங்க.. ப்ளீஸ்.என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க.!”

“மிஸ்டர்.!”

“கிரி.கிரிதர்..!!”

“உங்களைப் பத்தி மேற்கொண்டு எந்த தகவலும் தேவையில்லை..! என்ன பின் தொடர்ந்து வரத நிறுத்து..!”

“எதுக்கு இத்தனை கோபம்..? நான் ஒரு வார்த்தை கூட தப்பா பேசலயே.!!”

அதற்குள் பஸ்ஸ்டாப் வந்து விட்டதால் அவன் வாயை மூடிக்கொண்டான்.

அவளை பள்ளிக்கூடம் வரை பாதுகாப்பாக கொண்டு விட்டு விட்டுத் தான் நடையைக் கட்டினான்.

“ச்சே.! இது என்ன புது வம்பு.‌கோபமும் ஆத்திரமும் அவள் நிம்மதியைக் குலைந்தது..

ஒரு முன்பின் தெரியாத இளைஞன் தன்னிடம் இவ்வளவு
நடந்து கொண்டது இதுதான் முதல் முறை..

மறுபடியும் ஆயிஷாவிடம் பகிர்ந்து விருப்பமில்லை.!

அம்மாவிடம் சொன்னால் என்ன..?

பாவம் அம்மா. வேலைக்கு போய் அலுத்துதிரும்புவாள். பயப்படுவதைத் தவிர அவளால் என்ன செய்ய முடியும்.!!

போலீஸுக்குப் போலாமா? பார்க்கலாம்.. இன்னொரு தடவை வம்புக்கு வந்தால் அதைத்தான் பண்ண வேண்டும்.!!

சாதனாவுக்கு இன்றைக்கு மதியமே தலைவலி மண்டையைப் பிளக்க ஆரம்பித்து விட்டது. ஒற்றைத் தலைவலி. குறைந்தது மூன்று நாளைக்கு இருந்துவிட்டுத்தான் போகும்..

மதியம் அனுமதி கேட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள்.. அதிசயமாய் அம்மா வீட்டில் இருந்தாள்.

மகளைப் பார்த்து பதறிப் போனாள்.!!

“ஏண்டா. செல்லம். ஸ்கூல் இல்ல..?”

“ஒரே தலைவலி. பர்மிஷன் போட்டுட்டேன்..உங்கையால ஒரு காப்பி சாப்பிட்டு. போய்ப் படுக்கப் போறேன்..

ஆமா.நீ என்ன இந்த நேரத்தில..?

“இன்னிக்கு ராஜி மாமி வீட்ல எல்லாரும் ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கா. ஒரு பீரியட் ஃப்ரீ..!”

கல்யாணி சிரிப்பதே அபூர்வம்.!!

“ஏண்டி முகமே சரியில்லையே. எதானாலும் அம்மா கிட்ட மறைக்காதே..!”

“என்னம்மா நீ..ஏதாவது கற்பனை பண்ணி உடம்ப கெடுத்துக்காத.! என்ன கொஞ்சம் தனியா விடு ப்ளீஸ்..!

அம்மா தாடையைப் பிடித்து கொஞ்சிவிட்டு அறைக்குள் போய் கதவை சாத்திக் கொண்டு. ஒரு கர்சீப்பை தலையில் இறுக்கி கட்டிக் கொண்டு.ஒரு பெரிய போர்வையை தலையிலிருந்து கால் வரை போர்த்திக்கொண்டு தூங்க முயற்சித்தாள்.

ஏதோ மனசை உறுத்திக் கொண்டே இருந்தது..தலைவலி கூடிக் கொண்டே போனது.. மறுபடியும் எழுந்து ஒரு மாத்திரையைப் போட்டுக் கொண்டு படுத்தாள்.

ஒருவாரம் போயிருக்கும். அவன் பின்னால் தொடர்வது நிற்கவில்லை.. ஆனால் அவள் திரும்பியும் பார்க்கவில்லை.அசம்பாவிதம் ஏதும் நடக்காததால் விட்டு விட்டாள்.

ஆனால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாததால் எடுக்காமல் விட்ட காலில் தைத்த முள்ளைப்போல உறுத்திக் கொண்டே இருந்தது..

அம்மாவிடம் சொல்ல வாயெடுக்கும்போதேல்லாம் ‘ வம்..அம்மா பயப்படுவாள்’ என்று வார்த்தைகளை முழுங்கப் பழகிவிட்டாள்.

அன்றைக்கு புதன் கிழமை. வகுப்புகள் ஆரம்பித்து ஒரு மணிநேரம் இருக்கும்.

“உன்ன பிரின்ஸி ரூமுக்கு வரச் சொன்னாங்க.”

என்னவாயிருக்கும்..?அந்த பொறுக்கி ஏதாவது வம்பில் மாட்டி விட்டிருப்பானோ.?ச்சே.அது சரியாக தொடை நடுங்கி.அந்த தைரியமெல்லாம் வராது..!

பிரின்ஸிபல் முகத்தில் ஒரு பதட்டம்.

“உங்க அம்மா கீழ விழுந்துட்டாங்களாம். ஆஸ்பத்திரியில் சேத்திருக்காங்களாம். யாரோ பக்கத்து வீட்டு பையன் குமாராம்.பேசு.”

செய்தியைக் கேட்டதுமே உடலெல்லாம் பதறியது.

யார் இந்த குமார்.? மனோகரி அக்காவின் பையன் பேரு கூட குமார் தானே.!!

ஏதோ கரகரத்த குரல்.

“அக்கா.. உடனே வாங்க ..”என்பது மட்டுமே மனதில் பதிந்தது..

உடனே அழ ஆரம்பித்து விட்டாள்.

பிரின்ஸிபல் எழுந்து அவள் தோளைப் பிடித்து.

“ஒண்ணும் ஆகாது.
இரு.கூட யாரையாவது அனுப்பி வைக்கிறேன்..”

“வேண்டாம் மிஸ்.. தாங்யூ.நானே சமாளிச்சுக்கிறேன்..”

வெளியே வந்து பஸ் ஸ்டாப்புக்கு நடந்தாள்..

“இவன் எப்படி இங்க.?”

“ரொம்ப பயந்திட்ட போலயே. அம்மாவுக்கெல்லாம் ஒண்ணுமில்ல. எனக்கு உன்ன பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்திச்சு. அதான்..”

அவளுக்கு வந்த ஆத்திரத்தில் சுற்றி யார் இருக்கிறார்கள் என்றுகூட பார்க்க தோன்றவில்லை!

பளாரேன்று அவன் கன்னத்தில் அறைந்தாள். செருப்பைக் கழட்டினாள்..

“இதுதான் கடைசி எச்சரிக்கை. இனிமே எம்பின்னாடி சுத்தின. செருப்பு பிஞ்சிடும் ஜாக்கிரதை”

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத கிரி அவமானத்தால் முகம் சிவந்தான்.

கூட்டம் கூடி விட்டது..

“என்னடா. ராஸ்கல். பள்ளிக்கூட பொண்ணுகிட்ட தகராறு செய்யுற..பின்னி எடுத்திடுவோம். என்ன பாப்பா. போலீஸூக்கு போலாமா?”

“வேண்டாம்..விட்டிடுங்க ஸார்..!”

“டேய்..பிழச்சுப்போடா..!!இன்னோரு தடவ இந்த ஏரியால பாத்தேன். உசிரு உன்னுதில்ல..பெரிய ரோமியோன்னு நெனப்பா..?”

ஏதோ கருவிக் கொண்டே போனான்..

அன்றைக்கு போலீஸிடம் போகாதது எவ்வளவு பெரிய தவறு?

நடுராத்திரி மறுபடியும் தலைவலி மண்டையைப் பிளந்தது. அவளிடமிருந்த மாத்திரை எல்லாம் தீர்ந்திருந்தது.

பிரிட்ஜில் இருக்குமென்று சமையலறை விளக்கைப் போட்டாள்.

சத்தம் கேட்டு கல்யாணி முழித்துக் கொண்டாள்.

“என்னடா. ஏன் தூங்கல.?”

“மறுபடியும் தலவலிம்மா!”

“சும்மா சும்மா மாத்திரய முழுங்காத. வா. விக்ஸ் போட்டு தேச்சு விடறேன்”

அம்மா மடியில் படுத்துக்கொண்டு தலையில் மஸாஜ் செய்து கொள்வது எத்தனை சுகானுபாவம்!

“சாதனா. உனக்கு என்னத்துக்கு அடிக்கடி இப்படி தலவலி வருது. நீ முன்ன மாறி இல்ல. சதா ஏதோ யோசனைல இருக்க. அம்மா கிட்ட சொல்லக் கூடாதா?”

“இல்லம்மா. அப்படியெல்லாம் இல்ல! ஆனா உங்கிட்ட கொஞ்சம் பேசணும். என் பிரண்டு ஷப்னம் இல்ல. பாக்க சிவப்பா குண்டா அழகா இருப்பாளே. எல்லா பாய்ஸூமே அவளைப் பாத்து ஜொள்ளு விடுவாங்க. அதிலேயும் நந்தகுமார்னு ஒரு பையன் அவளைப் பாத்தா ஈன்னு பல்லக் காட்டுவான்! அவன் போனவாரம் அவளோட நோட்டுல ஒரு லவ் லெட்டர் எழுதி வச்சிட்டான்.அது ஹோம் வொர்க் நோட்டு. டீச்சர் திருத்த ஸடாஃப் ரூமுக்கு எடுத்திட்டு போய்ட்டாங்க! ரீஸஸ் முடிஞ்சதும் இரண்டு பேரையும் பிரின்ஸி ரூமுக்கு கூப்பிட்டு செம டோஸ். இரண்டு பேரோட பேரண்ட்ஸையும் மறுநாளே வந்து பார்க்கச் சொன்னாங்க!”

“இதென்ன அநியாயம்? ஷப்னம் என்ன தப்பு செஞ்சா”

“அதாம்மா. மொத்த வகுப்பும் பிரின்ஸி ரூமுக்கு போய் கேட்டோம். நீங்க இதில தலையிடாதீங்கன்னு அனுப்பிச்சிட்டாங்க”

“ஏம்மா அவன் செஞ்ச தப்புக்கு அவளுக்கு தண்டனயா?”

“எல்லா விஷயத்திலும் அப்படித்தானே நடக்குது. அதான் பெண் குழந்தைகள் இன்னும் ஜாக்கிரதையா இருக்கணும்”

“என்னம்மா பேசற. என்னால் அப்படியெல்லாம் இருக்கமுடியாது. எங்கிட்ட எவனாவது தப்பா நடந்தா செருப்பு பிஞ்சிடும்”

“வேண்டாம்.சாதனா! அப்படியெல்லாம் பேசாத. பொறுக்கிப் பசங்க கிட்ட ஒண்ணும் வச்சிக்கக் கூடாது. கொல பண்ணக் கூட தயங்க மாட்டாங்க. ஸ்கூலுக்கு போனோமா. வந்தோமான்னு இரு! நானே வயத்தில நெருப்பக் கட்டிட்டு நடமாடறேன்!”

“அம்மா. உங்க காலம் வேற. எங்ககிட்ட அதெல்லாம் நடக்காது! தாங்யூ அம்மா! தலவலி போயே போச்சு. போயிந்தி.குட் நைட்!”

உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்து நடந்து கல்யாணியின் கால்கள் கெஞ்சியது..

மணி ஏழாகப் போகுது. இன்னும் இந்தப் பொண்ணைக் காணுமே! ஆறுமணிக்கு மேல் லேட்டானதே இல்லை. அப்படி ஏதாவது இருந்தாலும் எங்கிருந்தாவது போன் பண்ணி விடுவாள்.

மணி ஒன்பதை நெருங்கி விட்டது. கல்யாணிக்கு வயிற்றைப் பிசைந்தது..

பக்கத்து வீட்டு பிரேமா ஓடிவந்தாள்.

“ஆன்ட்டி.. உங்களுக்கு போன். ஏதோ ஆஸ்பத்திரி பேர் சொல்றாங்க. அர்ஜென்டாம். சீக்கிரம் வாங்க!”

வீட்டை போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடினாள்.

“நீங்க சாதனா அம்மா தானே? B.K. ஹாஸ்பிடலுக்கு உடனே வாங்க. லேட் பண்ணாதீங்க!”

“சாதனா.சாதனாவுக்கு.?”

“நேர்ல வாங்க. சொல்றோம்!”

“கல்யாணி. என்னம்மா. என்னாச்சு?”

“தெரியல பிரேமாம்மா.நா உடனே போகணும்!”

“பிரேமாவ கூட்டிட்டுப் போங்கம்மா”

“இல்லம்மா. நானு இப்பவே கிளம்பிட்டேன்”

ஒரு ஆட்டோ பிடித்து பத்து நிமிடத்தில் BK ஆஸ்பத்திரி ரிசப்ஷனில் நின்றாள்.

“இங்க ஒரு சின்னப் பொண்ணு.சாதனா!”

“First floor.. Second left.ICU.!”

ICU வா..? கல்யாணிக்கு மயக்கம் வந்தது.

ICU வாசலில் காத்திருந்தாள். வெளியே வந்த நர்ஸிடம் விவரம் கேட்டாள்.

“இருங்க. டாக்டர் கிட்ட சொல்றேன்.”

உடனே டாக்டர் வெளியில் வந்தார்..

“நீங்கதான் அந்த ஸ்கூல் பொண்ணோட அம்மாவா..?

கொஞ்சம் க்ரிடிகல்தான்.கத்தி ஆழமா பின்னாடி எறங்கியிருக்கு.!!

அப்ஸர்வேஷன்ல வச்சிருக்கோம்.24 மணிநேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியும்.”

“ஐய்யோ.!! கத்தியா.?என் கண்ணே..கடசில நான் பயந்தபடியே நடந்திட்டுதே.”

“நர்ஸ்..அவங்களப் பிடிச்சுக்குங்க.. பாத்துட்டு நிக்கிறீங்களே.. என் ரூமுக்கு அழச்சிட்டு வாங்க..!!”

“உக்காருங்கம்மா.பதட்டப்படாதீங்க. பள்ளிக்கூடம் விட்டு வரும்போது யாரோ பின்னாடி கத்தியால குத்தியிருக்கான்.ஆழமா இறங்கினதால ரத்தம் நிறையப் போயிருக்கும்மா.. பாவம் பொண்ணு யாருன்னு அடையாளம் தெரியல..”

“சாதனா. எம்பொண்ணு சாதனா..!”

“என்னம்மா சொல்றீங்க. நீங்க சாதனாவோட அம்மாவா. உங்கள கையெடுத்து கும்பிடணும்மா. சாதனாதான் அந்தப் பொண்ண சரியான சமயத்தில் அட்மிட் பண்ணியிருக்கா. அவளுக்கும் லேசான காயம். ஊசி போட்டிருக்கு.வார்டில் தான் தூங்கிட்டு இருக்கா. அவள மகளா அடஞ்சதுக்கு நீங்க மிகவும் பெருமைப் படணும். இந்த மாதிரி தைரியசாலிய பாக்குறேன் அபூர்வம்!”

கல்யாணிக்கு தலையும் புரியல. வாலும் புரியல!

வார்டில் கண்ணை மூடிப் படுத்திருந்தாள் சாதனா. கையில் மட்டும் ஒரு சின்ன பேண்டேஜ்.குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள்..

“அம்மா”

குரல் கேட்டு உச்சியிலிருந்து பாதம் வரை சிலிர்த்தது..

“சாதனா. என்னடா நடந்தது.?”

“ஷ்ஷ்ஷ்..”

வாயில் விரலை வைத்த நர்ஸ்.

“அவுங்க தூங்கட்டும்.வெளிய வாங்க..” என்று சைகை செய்தாள்.

“அம்மா.உங்க பொண்ணு செஞ்ச உதவி ஒரு உயிரையே காப்பாத்தி இருக்கு..

ஒரு ஏழு மணி இருக்கும்.. ரத்தம் ஒழுக ஒழுக ஒரு பதினைஞ்சு வயசு ஸ்கூல் பொண்ண ஆட்டோல ஏத்திக்கிட்டு வந்தா இன்னோரு ஸ்கூல் பொண்ணு.. அவளுக்கும் கைல காயம்..

ஏதோ ஒரு பையன் அவள கத்தியால குத்தியிருக்கான்.
இப்பத்தான் அந்த பொண்ணோட ID எல்லாம் ஸ்கூல் பேகிலேர்ந்து கிடைச்சிருக்கு. வீட்டுக்கு ஆள் போயிருக்கு.

சாதனா இல்லைனா அந்த பொண்ணு எப்பவோ செத்திருக்கும்.

நாளைக்கு சாதனாவ டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. எல்லாம் விவரமா சொல்லுவா..!!

கையில் பேண்டேஜூடன் அம்மா மடியில் படுத்திருந்தாள் சாதனா..

கல்யாணி கிண்ணத்தில் பிசைந்து வைத்திருந்த சாதத்தை உருட்டி அவளுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள்.

“சாதனா. ஒரு நிமிஷம் கதி கலங்க வச்சிட்டியே.. என்னடா நடந்தது..?

“அம்மா . ஸ்கூல் விட்டு பஸ்ஸ்டாப்ல நின்னிட்டிருந்தேனா..!

இந்த பொண்ணும் நின்னிட்டிருந்தது.. நான் அவள பார்த்த ஞாபகம் இருக்கு..

பஸ் வந்தது.. எல்லாரும் முட்டி மோதி ஏறும் போது அந்தப் பொண்ணு பின்னாடி ஒருத்தன் கத்தில குத்திட்டு ஓடப்பாத்தான்.

நானு உடனே பேகில இருந்த பெப்பர் ஸ்ப்ரேய அவன் முகத்தில அடிச்சு.விஸில எடுத்து ஊதினேன்..

‘அவனைப் பிடிங்க. பிடிச்சு போலீஸில ஒப்படைங்க. விட்டிடாதிங்க.’ன்னு கத்திட்டு அங்க நின்ன ஒரு ஆட்டோகாரர கூப்பிட்டு அந்தப் பொண்ண ஆஸ்பத்திரில சேத்தேம்மா..பாவம்.அவ அம்மா..உன்ன மாதிரிதானே கவலைப் படுவா!”

“ஏண்டா. உனக்கும் அடிபட்டுதா. எங்கேந்து வந்தது இவ்வளவு தைரியம்.?”

“அம்மா.நீ சொல்ற மாதிரி பயந்து பயந்து வாழ்ந்தா பெண்களுக்கு விமோசனமே இல்ல. ஆணும் பெண்ணும் சமம்னு பேசிட்டே இருக்கிறதில அர்த்தமில்ல. செயல்ல காட்டணும்..அட்லீஸ்ட் தற்காப்புக்காவது பெண்கள் தைரியமா போராடணும்.. நான் உன் பெண்ணில்லையா?”

“அம்மா.நீ ஒரு வாரம் லீவு போடற! அந்தப் பொண்ணோட அம்மாவுக்கு தைரியம் சொல்ற..என்ன செய்வியா..? அவ பிழைப்பான்னு எனக்கு நிச்சயமா நம்பிக்கை இருக்கு! அவனுக்கு தண்டன வாங்கித் தர வரைக்கும் ஓயமாட்டேன்”

இவள்தான் சாதனா..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *