கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2023
பார்வையிட்டோர்: 2,650 
 
 

எப்படியாவது சுரேனிடம் சொல்லிவிட வேண்டும். முதலிரவன்றே இதைச் சொல்லவேண்டுமா என்று ராஜியின் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. இன்றேதான் சொல்லவேண்டும். அப்புறம் சொல்லி என்ன பயன்?

தன் புகுந்தவீட்டின் பால்கனியில் நின்று வெளியே பார்த்துக்கொண்டிருந்த ராஜியின் மனதில் நினைவுகள் பின்னோக்கி ஓடின. சுமார் ஒரு மாதம் முன்னர் தான் சுரேனின் வரன் வந்தது. பிறகு இரு குடும்பத்தாரும் பொது இடமான மலை மந்திரில் சந்தித்துக் கொண்டது, இவர்கள் இருவரும் பேசிக்கொண்டது என்று ஆரம்பித்து மடமடவென்று விஷயம் முன்னேறி இதோ இன்று காலையில் திருமணம் முடிந்து இன்றிரவு சாந்தி முஹுர்த்தம்.

“என்ன ராஜி இங்க நின்னுக்கிட்டு இருக்க? போய் குளிச்சு ரெடியாக வேண்டாமா? நீங்க போக வேண்டிய ஹோட்டல் இங்கிருந்து தூரம். கொஞ்சம் முன்னாடியே கிளம்பினாத்தான் சரியா இருக்கும்” என்று சொல்லியபடியே வந்தாள் சுதா. சுரேனின் அக்கா.

ராஜியின் வயிற்றில் ஒரு ஜிலீர். “இதோ அக்கா வர்றேன். ஒரு பத்து நிமிஷத்துல ரெடியாயிடறேன்” என்றவாறே ராஜி உள்ளே சென்றாள்

சரியாக எட்டுமணிக்கெல்லாம் அலங்கரிக்கப்பட்ட கார் வந்துவிட்டது. இவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டல் வசந்த் விஹாரில் இருந்தது. எட்டு மணிக்கெல்லாம் சுரேனும் ராஜியும் கிளம்பினார்கள். சுரேனின் கஸின்ஸ் அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தார்கள். அவன் முகம் வெட்கத்தில் குங்குமப்பூவாகச் சிவந்தது. ராஜிக்கு வெறுப்பாக வந்தது.

‘அதென்ன கல்யாணம் ஆகற வரை பசங்களைப் பார்க்காதே பேசாதே என்று போர்த்திப் போர்த்தி வளர்க்க வேண்டியது. கல்யாணம் ஆன அதே நாளில் முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் தாம்பத்ய உறவையே மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த வேண்டியது. அதற்கு இரண்டு பக்கமும் கேலி கிண்டல் ஜோக்கு! சே! என்ன மனிதர்கள்! எதுக்கும் ஒரு நியாயம் வேண்டாம்? இருக்கட்டும் இன்னும் சற்று நேரம்தானே? சுரேனிடம் சொல்லிவிடுகிறேன்’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.

அந்த ஹனிமூன் ஸ்வீட் மிகவும் ஆடம்பரமாகவும் அழகாவும் ரொமான்டிக்காகவும் இருந்தது. உள்ளே சென்று கதவை உள்புறமாக சார்த்திய சுரேன், ஒரு சிறிய பையுடன் அருகில் இருந்த பாத்ரூமுக்குச் சென்றான்.

உள்ளே அவன் பல்துலக்கும் சப்தம் கேட்டது. ஐந்து நிமிடத்தில் வெள்ளைக் குர்தா பைஜாமாவில் வெளியே வந்தான். மிகவும் அழகாக இருந்தான். இவளைப் பார்த்து அழகாகச் சிரித்தான். ” உனக்கு fresh ஆக வேண்டுமா ராஜி? பாத்ரூம் இஸ் யுவர்ஸ்” என்றான்.

ராஜியும் உள்ளே சென்று சில நிமிடங்களில் ஆடை மாற்றி வெளியே வந்தாள். அழகான நைட் ட்ரெஸ் . தேவதை போல இருந்தாள். சுரேனின் கண்கள் அவளை அளவெடுத்தன. மெதுவாக அவளை நெருங்கினான்.

“சுரேன் ஒரு நிமிஷம். எனக்கு உன் கிட்ட பேசணும்”

“பேசலாமே! இன்றிரவு முழுக்க” என்று மோகனமாக சிரித்தான்.

“விளையாடாதே! நான் சொல்ல வருவதைக் கேள்” என்று ஆரம்பித்து ராஜி திருமணமான முதல் நாளே சாந்தி முஹுர்த்தம் பற்றிய தன் எண்ணங்களை மூச்சிரைக்க சொல்லி முடித்தாள். முடிக்கையிலே அவள் கண்கள் கலங்கி சிவந்துவிட்டன. கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்தன.

சுரேன் சிலையாக நின்றான். சுமார் பத்து நிமிஷம் போன பின்னரே அவனிடம் ஒரு உயிர்ப்பு வந்தது.

அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான். “அதனாலென்ன ராஜி? நீ சொல்றதும் சரிதான். ஒருத்தர ஒருத்தர் மனசால முழுசாப் புரிந்து கொண்ட பிறகு ஏற்படும் உறவு இன்னும் இனிக்கும். நீ பயப்படாதே. நான் முதலில் உன் கணவன். உன்னை உடலால் மட்டுமல்ல மனதாலும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்குண்டு. காலம் கனியும் வரை நான் காத்திருப்பேன்” என்றான்.

பிறகு இருவரும் நெடுநேரம் வரையில் நண்பர்களைப் போலப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதிகாலை மூன்று மணிக்குத் தூங்கப்போனார்கள். பிறகு பத்து மணிக்கு எழுந்து breakfast சாப்பிட்டு வீட்டுக்குச் சென்றார்கள்.

பிறகு சென்ற ஒரு மாதமும் ராஜியின் வாழ்க்கையில் இன்பமான பொழுதுகள். சுரேன் மறந்தும் கூட தன் வார்த்தையை மீறவில்லை. ஆனால் அவர்கள் சுற்றாத இடமில்லை. பார்காத சினிமா இல்லை. போகாத மால் இல்லை.

திடீரென்று ஒரு நாள் அவள் அம்மாவிடம் இருந்து அழைப்பு. “ஒரு ரெண்டு நாள் வந்துட்டுப் போயேன்” அவர்கள் வீடு கரோல் பாக். சுரேன் போய் கொண்டு விட்டு வந்தான்.

அம்மா கை சாப்பாடு. திருப்தியாய் சாப்பிட்டு மதியம் நன்றாகத் தூங்கினாள்.

சாயந்திரம் நாலு மணிக்கு சுடச்சுட காப்பியுடன் அம்மா. கண்ணில் பல கேள்விகளுடன்.

காப்பியைக் குடித்தபடி “என்னம்மா?” என்றாள். “நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். சுரேன் இஸ் எ ஜெம்”

“அதுல எனக்குச் சந்தேகம் இல்லடி. ஆனா ஒரு மாசம் ஆறதே.. எதுனா விசேஷம்?”

ராஜிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “கல்யானம்னாலே குழந்தை பெத்துக்கறதுதானா? அப்புறமா பெத்துண்டா குழந்தை இல்லையா? ஏம்மா இப்படி டார்ச்சர் பண்றே? நான் அன்னிக்கே சுரேன் கிட்ட இது விஷயமா சொல்லிட்டேன். நாங்க ஒருத்தர ஒருத்தர் முழுசா புரிஞ்சுக்கற வரை ஒண்ணும் கிடையாது” என்றாள்.

அம்மா பேசாமல் எழுந்து போய்விட்டாள். அன்றிரவு அம்மாவும் அப்பாவும் பாட்டியும் பேசிக்கொண்டிருந்தது இவள் காதில் விழுந்தது. “இந்தக் காலத்து பசங்க இப்படித்தான்.. விட்டுப்பிடி” என்றார் அப்பா. இப்படிப் போய்கொண்டிருந்த பேச்சில் திடீரென்று பாட்டி “அவனுக்கு ஒண்ணும் கொறை இல்லையே” என்று கேட்டாள்.

ராஜி அதிர்ந்தாள். ஒரு நல்ல மனிதனை நல்லவனாகவே வாழ விடாதா இந்தச் சமூகம்? மறுநாள் காலை எழுந்து ஒரு ஊபர் அழைத்து அம்மா அழஅழ அவள் தன் புக்ககம் சென்றுவிட்டாள். அவள் முகத்தைப் பார்த்த சுரேன் அவளிடம் ஒன்றும் பேசவில்லை. ஆபீஸ் சென்றுவிட்டான்.

அன்றிரவு அவர்கள் அறைக்குள் சென்றபின் “என்ன ராஜி? டல்லா இருக்க.. என்ன விஷயம்?” என்றான்

ராஜி கரையுடைந்த நதியானாள். எல்லாவற்றையும் சொன்னாள். முக்கியமாக பாட்டி சொன்னதை.

அதைக்கேட்டு புன்னகைத்த சுரேன், சட்டென்று அவளை நெருங்கி அணைத்து அவள் காதோடு “நான் அப்படியெல்லாம் இல்லை” என்று கிசுகிசுத்தான்.

அவன் அணைப்பின் அதிர்ச்சியில் இருந்த ராஜி அவனை ஏறெடுத்துப் பார்த்தாள். ஒரு நிமிடம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு என்ன தோன்றியதோ..சுரேனை இறுக்க அணைத்து அவன் மேல் சாய்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *