நம்ம ஊர், நம்ம நாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 7,966 
 

பரசுராமருக்கு, வெளி நாட்டு வாழ்க்கை மீது மோகம் அதிகம்.அதுவும் இப்பொழுதெல்லாம் நம்மூரில் இருப்பதற்கே பிடிப்பதில்லை. எங்கு பார்த்தாலும், அழுக்கு, மக்கள் கூட்டம், வாகன நெரிசல், இது போக நட்பு, உறவு அப்படீன்னு யாராவது ஒருத்தர் வீட்டுக்கு வந்து தங்குவது.அதுவும் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னால் அடிக்கடி இந்த எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டது. பேசாமல் வெளி நாடு போய் செட்டிலாயிடணும், இப்படி அடிக்கடி பொண்டாட்டி மங்களத்திடமும், அருகில் இருப்பவர்களிடமும் புலம்புவார்.

மேலும் இதற்கு ஒரு காரணம் உண்டு அவருடைய மகன் ரகு இங்கு மருத்துவ படிப்பு முடித்து விட்டு மேல் படிப்புக்கு வெளி நாட்டுக்கு சென்றுள்ளான். அவன் அடிக்கடி அங்கு இருக்கும், சீதோஷ்ணம், அங்குள்ள மக்களின் நடவடிக்கை, இவைகளை எல்லாம் போனிலும், வலைதளத்திலும் அனுப்பி வைத்ததால், அவருக்கு நம்மூரை கண்டாலே ஒரு வித சலிப்பு வந்து விட்டது.இதுவும் ஒரு ஊரா?என்ற கேள்வியே அவர் மனதில் நின்றது

அம்மாவிடம், ரகு போனில் அடுத்த மாதம் அங்கு வருவதாக தெரிவித்ததிலிருந்து மங்களத்திற்கு மனசு பர பர வென இருந்தது. இரண்டு வருடங்கள்

ஓடி விட்டன. வைராக்கியமாய், மருத்துவ மேல் படிப்பை வெளி நாட்டில்தான் படிக்கவேண்டும் என்று கொள்கையோடு படித்து முடித்து விட்டு வருகிறான். இதற்காக அம்மாவையும், அப்பாவையும் விட்டு பிரிந்து இரண்டு வருடங்கள் அங்கேயே இருந்து தனது படிப்பை முடித்து அடுத்த மாதம் வருகிறான்.

இதை கேட்டதிலிருந்து பரசுராமருக்கும் மனசு முழுக்க பையனே கண்ணில் நின்று கொண்டிருக்கிறான். அவனை விட்டு பிரிய மங்களத்தை விட அவருக்குத்தான் மனசு இல்லாமல் இருந்தது. என்ன செய்வது? வெளி நாட்டுக்கு சென்று படிக்க விரும்பும் மகனின் எதிர்காலம், அவனது இலட்சியம், அது போக அவனை வைத்தாவது இவரும், மங்களமும் வெளி நாட்டு வாழ்க்கைக்கு அடிபோட முடியும். இவைகள், கருத்தில் கொண்டு அவனை அனுப்பி வைத்தார்.

ஓரளவுக்கு இவர்களுக்கு வசதி இருந்தது. பரசுராமரும் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.யாராவது நண்பர்கள், உறவினர்கள் இப்படி மாறி மாறி வீட்டுக்கு வருவது, இவருக்கு ஒரு வித சலிப்பை தந்திருந்தன. முன்னரும் நண்பர்கள், உறவுகள் வந்து சென்று கொண்டுதான் இருந்தனர். அப்பொழுது இவர் பணியில் இருந்ததால் மனைவி சொல்ல, காதில் கேட்பதோடு சரி, அவர்களை கவனிப்பது எல்லாம் மங்களம் பார்த்துக்கொள்வாள். இப்பொழுது வீட்டில் இருப்பதால் இவைகள் இவருக்கு வெறுப்பை தருகிறது.மற்றபடி இவர்கள் இருவருக்கும் ஒரே பொழுது போக்கு தங்களுடய மகன் ரகுவை கவனித்துக்கொள்வது மட்டுமே. அவனின் மகிழ்ச்சியே தங்களுடையதாய் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரகுவை பிரிந்த இரு வருடங்கள் ஏதோ ஒன்றை இழந்து விட்ட சோகத்தோடே இருந்தார்கள்.

விமானத்திலிருந்து இறங்கும்போதே அவர்கள் கண்களுக்கு தட்டுப்பட்டு விட்டான் ரகு,

ஆனால், அவனோடு பேசிக்கொண்டே வெள்ளை வெளேர் என்று நான்கைந்து பெண்களும், ஆண்களும் கூட இறங்கி வருவதை பார்த்த்தும், ஆச்சர்யப்பட்டனர்.

ரகு,வந்தவுடன் அப்பா, அம்மாவை கட்டியணைத்து, தன் கூட வந்தவர்களை இவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.

இவர்கள் என்னுடன் படித்தவர்கள். நம் இந்தியாவை பற்றியும், நம்மூரை பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தாங்க. எல்லோருக்கும் படிப்பு முடிந்தவுடன் என்னுடன் வந்து ஒரு வாரம் இருந்து இந்தியாவை பற்றி தெரிஞ்சுக்கவும், நம்மூரை சுற்றி பார்த்து விட்டு செலவதற்காகவும் வந்திருக்க்காங்க, என்று ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினான். பரசுராமர் ஏற்கனவே நல்ல பதிவியில் இருந்தவர் என்பதால் அவர்களோடு சரி சமமாய் உரையாடினார். மங்களத்துக்கு கூச்சமாய் இருந்தாலும் அனைவருக்கும் வணக்கம் வைத்தாள். அவள் வணக்கம் வைப்பதை கூட ஆச்சர்யமாய் பார்த்து ரகுவிடம் ஏதோ சொல்லி சிரித்தனர். மங்களத்துக்கு மேலும் கூச்சம் அதிகமானது.

அவர்களுக்கு ஹோட்டலில் ரூம் போட்டு விடலாமா? என்று கேட்டதற்கு அவர்கள் உங்களோடேயே தங்கப்போகிறோம் என்று சொல்லி விட்டார்கள்.

வீடு இப்பொழுது சத்தமும் சந்தோசமுமாய் இருந்தது.அவர்கள் ஆங்கிலத்தில் பேசி சிரித்து கொள்வது மங்களத்துக்கு அதிகமாக புரியாவிட்டாலும், மனதுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சில தமிழ் வார்த்தைகளை ரகுவிடம் கேட்டு தெரிந்து மங்களத்திடல் ஆசையோடு பேசுவார்கள்.மங்களத்துக்கு சிரிப்பு வந்தாலும், தவறிருந்தால் திருத்துவாள். என்ன அவளுக்கு தன்னுடைய மகனுடன் வந்ததில் இருந்து தனியாக பேச முடியவில்லையே என்ற குறை மட்டும் இருந்தது.

காலை எழுந்து டிபன் முடித்தவுடன் கிளம்பி விடுவார்கள். நம்மூர் டிபனேதான். அதிகமாக காரம் மட்டும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.மங்களம் தன் மகனுக்கு பிடித்த பலகாரங்களாவும், வந்தவர்களுக்கு எதுவெல்லாம் பிடிக்கும் என்று கேட்டு செய்தாள். வெரி நைஸ் வெரி நைஸ் என்று சொல்லி ருசித்து சாப்பிட்டு பாராட்டினார்கள்.

ஒரு நாள் மட்டுமே நகர்புறங்களை சுற்றி பார்த்தார்கள். மறு நாள் ஊரை சுற்றியுள்ள கிராமங்களை பார்க்கவேண்டும் என்று கிளம்பி விட்டார்கள். ரகுவும் தன் அருகில் உள்ள எல்லா ஊர்களையும் சுற்றி காண்பித்தான். சுற்று கிராமத்திலுள்ள அவர்கள் உறவுக்கார்ர்கள் வீட்டுக்கும் கூட்டி சென்றான்.அவர்களின் பழக்க வழக்கங்களையும் விளக்கமாக எடுத்து கூறினான். அவர்கள் நம்மூர்வாசிகளோடு செல்பி எடுத்துக்கொண்டனர்.

அவர்கள் அனைவரும் விடை பெற்று சென்று ஒரு வாரம் ஓடிய பின் வீடு இப்பொழுது அமைதியாய் இருந்தது. ரகு எங்கோ வெளியில் சென்று வருவதாக சொல்லி சென்றிருந்தான். மங்களம் தன் கணவனிடம் ரகுவுக்கு, ஒரு பெண் பார்த்து கல்யாணத்தை முடித்து விடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்த பொழுது ரகு உள்ளே வந்தான்.

அப்பா இப்ப கல்யாணத்தை பத்தி பேச்சு வேண்டாம், நான் பக்கத்திலயே ஒரு ஹாஸ்பிடல்ல டாக்டரா ஜாயிண்ட் பண்ணிட்டேன். மகன் சொன்னவுடன் பதறி போய் விட்டார். நீ வெளி நாடெல்லாம் போய் படிச்சு வந்திருக்கே, நம்முர்ருல உனக்கு சரிப்பட்டு வருமா? நீ வெளிநாட்டுல போய் வேலை பாப்பேன்னு எதிர்பார்த்தேன். குரலில் அவருடைய வெளிநாட்டு ஏக்கமும் வெளி வந்தது.

அப்பா படிக்கறதுக்குத்தான் நான் வெளி நாடு போகணும்னு ஆசைப்பட்டேன்.மத்தபடி உள்ளுரிலதான் வேலை பாக்கப்போறேன், இன்னும் கொஞ்ச நாள் கழித்து தனியா ஒரு ஹாஸ்பிடல் கட்டலாமுன்னு இருக்கேன்.

மகனின் இந்த முடிவு பரசுராமரின் வெளி நாட்டு கனவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்தது.சரி நீ விருப்பபட்டதை செய் முணங்கியவாறு உள்ளே சென்றார். மங்களத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு பையன் கண் முன்னால் இருந்தால் போதும்.

இரண்டு நாள் சுரத்தில்லாமல் இருந்தார் பரசுராமர். அன்று மாலை அப்பா, அப்பா

மகிழ்ச்சியுடன் கூப்பிட்டுக்கொண்டே வந்தான் ரகு. என்ன ரகு? என்று இவர் வினவ

அவன் ஒரு பெரிய ஆல்பம் ஒன்றை அவர் கையில் கொடுத்தான்.அப்பா, நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்களே என் பிரண்ட்ஸ், அவங்க இதை உனக்கு அனுப்பிச்சிருக்காங்க, என்று சொல்லிவிட்டு ஒரு கடிதமும் கையில் கொடுத்தான். இது என் மெயில்ல வந்துச்சு.படிச்சு பாருங்க.

சார் உண்மையிலேயே ரகு கொடுத்து வச்சவன், அன்பான அப்பா, அம்மா, அதுமட்டுமில்லாம நாங்க வந்தப்ப எங்களை பாக்க வந்த உங்க சொந்தம், நண்பர்கள், அக்கம்பக்கத்துகாரங்க, அப்புறம் ரகு ஒவ்வொரு உறவு சொல்லி எங்களை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவான். அவங்க உபசரிப்பு, எல்லாம் எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.

எங்க பாத்தாலும் கூட்டம் கூட்டமா பேசிகிட்டு இருக்காங்க. எங்களுக்கு இது ஆச்சர்யமா இருந்துச்சு. நாங்க எவ்வளவு கூட்டமா இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் தனிமையாத்தான் இருப்போம், ஆனா இங்க அப்படி என்னதான் சந்தோசமா பேசுவாங்களோ தெரியாது, பேசி கிட்டே இருக்காங்க. எல்லாத்துலயும் எங்க ஊர்ல ஒழுங்கு முறை இருக்கு உண்மைதான், ஆனா அதுவே கூட எங்களுக்கு சலிப்பை தருது.அவங்கவங்க இயற்கையா சந்தோசமோ, வருத்தமோ, அழுகையோ, சண்டையோ, அங்கங்க்கே காட்டிடறாங்க.இது எங்களுக்கு ஆச்சர்யமாவும் வித்தியாசமாவும் இருக்கு.

சில இடங்கள் பாக்க, அருவருப்பாகவும் அசிங்கமாக இருந்துச்சு, இல்லைங்களை.நாங்க இந்தியாவுல இருந்து உலகத்து வெளிச்சத்துக்கு வந்த நிறைய பேரை பத்தி படிச்சிருக்கோம், அதனாலதான் உங்க நாட்டை பாக்க ஆசைப்பட்டோம். இங்க வந்து பாத்த பின்னாடிதான் தெரிஞ்சுகிட்டோம். இந்த மாதிரி இடங்களில் இருந்து அவங்க தன்னை வளர்த்துகிட்டதாலேதான் உலகத்துக்கு மகான்களாகவும், மேதைகளாகவும் கிடைச்சிருக்காங்க அப்படீங்கறதை தெரிஞ்சுகிட்டோம். ரகு அதுக்கு ஒரு வார்த்தை சொன்னான் “சேற்றில் முளைக்கற செந்தாமரைதான் பிரகாசமா இருக்கும் அப்படீன்னான். அது உண்மைதான்.

கடைசியா ஒரு வார்த்தை உங்க மனைவியை பத்தி, அவங்க எங்களுக்கு செஞ்சு கொடுத்த சமையல் இன்னும் அப்படியே நினைவுல் நிக்குது. பாக்கெட்டுல அடைச்ச உணவை சாப்பிடும்போதெல்லாம், உங்க மனைவி செஞ்சு கொடுத்த இடியாப்பம், ஆப்பம், இட்லி,தோசை, அப்புறம் வகை வகையா குழம்பு, உண்மையிலேயே ரகு கொடுத்து வச்சவன்.

உங்களோட நாங்க எடுத்த போட்டோவெல்லாம் இந்த மெயில்ல அனுப்பிச்சிருக்கோம்..

மறு நாள் பரசுராமருக்கு நம்மூரை பார்க்க சந்தோசமாக இருந்தது. அதுமட்டுமல்ல

ரகுவும் ஒரு நாள் சேற்றுக்குள்ள இருந்து செந்தாமரையா வருவான் என்ற நம்பிக்கையும் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *