கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 14,781 
 
 

2.9.99

பைத்தியக்கார நிலா. வெறி பிடித்து வழிந்தது. அதனுடன் ‘மேசையில் அமர்ந்து ஒரு டீ சாப்பிடவேண்டும்.’ மாyaa காவ்ஸ்கியின் விருப்பம். பாவி கடவுள் இவனைப் பார்த்தால் தொப்பியைத் தூக்கி மரியாதை செய்ய வேண்டுமாம். வார்த்தைகளில் நெருப்பு. பேப்பர் எரியுமோ? பாரதிக்குக் கூட வார்த்தை மந்திரம்.

நிறைய்ய வேலை. பைகொள்ளாத வேலை. இன்று பார்த்து லலிதா அவள் மேசையில் கவிழ்ந்து படுத்து அழுதாள். என்ன என்றதற்கு ஒண்ணுமில்லை என்று பதில். ஒண்ணுமில்லாததற்கா ஒருத்தி அழுவது. அவள் சிநேகிதன் ஏதாவது முகம் காட்டியிருப்பானோ? இருந்தால் என்ன? பீடையை ஆபிசுக்கு எதற்குத் தூக்கிவர வேண்டும்? நாளைக்கு விசாரிக்கணும்.

திடுமெனப் பெய்தது மழை. நனைஞ்சுட்டேன். புதுச் சுரிதார். நனைஞ்சதைப் பத்தி வருத்தமில்லை. பிங்க் கலர் நூல் கசிந்து வெள்ளையில் ஏறி அசட்டுத்தோற்றம். எழுநூத்தைம்பது காலி. வாழ்க ஜனநாயகம். வாழ்க சுதந்திரம்.

3.9.99

லலிதாவைக் கேட்டேன். முதலில் வாயே திறக்கவில்லை. அப்புறம், மென்று முழுங்கிக் கொண்டு சொல்கிறாள்.

லலிதா எவனோடயோ கன்னியாகுமாரிக்குப் போய் வந்ததாக வதந்தியைப் பொய்யாகக் கிளப்பி விட்டானாம் மேனேஜர். அந்தச் சில்லறை, அதைச் சூபரிண்டெண்டிடம் வேறு சொல்லிச் சொல்லிச் சிரித்தானாம். அந்த சூப் கிளர்க்கிடம் சொல்ல, கிளார்க் டீப் பையன் ரெங்குகிட்ட செய்தி கடத்த, ரெங்கு டீ கொடுக்கும் போது லலிதாவிடம் போட்டுக் கொடுத்தான். மானம் போய்விட்டதாக இவள் அழுகை ஒப்பாரி.

”நீ எவனோடு போனாலும் அது உன் சொந்த விஷயம். மேனேஜர் நாய் உள்பட எந்த நாய்க்கும் அதைப் பத்திப் பேச உரிமை இல்லை. அருகதையும் இல்லை. தூஷணைக்குச் சுருண்டு போதல் அவமானம். அழவைப்பதுதான் அவன் நோக்கம். நீ அழுவது அவன் வெற்றி. அழாதே”ன்னு தேத்தினேன்.

நல்ல வேளை. இன்னிக்கு மழையில்லை. கருஞ்சாம்பலில் புரட்டிய ஆகாயம். துணிகளை வாஷ் பண்ணினேன். ‘ஜென்’காரன் கத்துகிறான்.

‘மண் வெட்டினேன். ஆழமாய் வெட்டினேன். என்ன சந்தோஷம். வேலை செய்தால் ஆனந்தம்.’

9.9.99

‘ஓ வீனஸே!

உன் காதல் தீவில்

ஒரு கற்பனைத்

தூக்கு மரத்தில்

என் உருவம்

தொங்கிக் கொண்டிருக்கிறது

ஆண்டவனே!

என் உடம்பையும்

இதயத்தையும்

வெறுப்பில்லாமல் பார்க்க

எனக்கு ஆற்றலைக் கொடு!’

உடம்பை நாற்றப்பிண்டம், ஊத்தைப்பிண்டம் என்கிற ‘சினிக்குகள்’ மத்தியில் போதலேர் ஒரு ஆரோக்கியவான்.

17.9.99

நிலைமை சாதாரணம் இல்லை. வதந்தி அவளுக்கு முன்னால் அவள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. யாரவன் என்று கேட்டாளாம் அவள் அம்மா. இவள் மறுத்திருக்கிறாள். நெருப்பையும் புகையையும் சாட்சிக்கு அழைத்தாளாம் அம்மா. என்ன பண்றது என்று இவள் அழுகை. வாட் அபவுட் அக்னிப் பிரவேசம் என்றேன். சீதைக்கு அடுத்த ரேங்க் நீ வரவேண்டாம், எதிர்த்து நில் என்றேன். பார்க்கணும், மனுஷியாக நிற்பாளா? காகிதமாகிப் பறப்பாளா?

26.9.99

இன்று சூரியன் இறங்கி வந்து என் அறைக் கதவைத் தட்டினான். பூழுக்கம்.

லலிதா வேலையை இன்று ராஜினாமா செய்தாள். ஏனாம்? வதந்தி எனும் காட்டுத் தீ முதலில் அவள் அம்மாவை, பிறகு அவளுடைய ‘ஃபியான்சியை’ எதிர்த்தது. சந்தேகமாம். தன் ராஜினாமாவின் மூலம் லலிதா, தன் கற்பை நிரூபித்துக் குலவிளக்கு ஆனாள்.

லலிதாவுக்குப் பார்ட்டி, பிரிவு உபசாரம். பிரிவை ஏற்படுத்தியவர்களின் ஏற்பாடு. மேனேஜர் அண்ட்கோ. நினைவுப் பரிசாம். தரப் போகிறார்களாம். எதன் நினைவாகப் பரிசு? கேவலப்படுத்தினார்களே அதன் நினைவாகவா? வேலை செய்ய வந்த பெண்ணை வீட்டுக்குத் துரத்தினார்களே அதன் நினைவாகவா? விழா தொடங்கு முன்பே நான் வந்து விட்டேன். விழாவில் இடி விழ.

2.10.99

இன்று காந்தி பிறந்தார். கையில் தடியுடன் இருக்கும் காந்தியை எனக்குப் பிடிக்கும். அதை உபயோகிக்காத காந்தியை எனக்குப் பிடிக்காது. தெருவில் குழந்தைகள் மூவர்ணக் கொடியுடன் மிட்டாய் தின்று கொண்டு போனார்கள். தேசீயத்தை ‘ஊட்டி’ வளர்க்கிறார்கள்.

லலிதா அந்த விழாவில் கலந்து கொண்டது எரிச்சல். மேனேஜர் இவளை வானத்தில் தூக்கி வைத்துப் புகழ்ந்தானாம். அசடு. சந்தோஷப்பட்டிருக்கிறது. கண்ணீர் வர, நாக்கு தழுதழுக்க நன்றி வேறயாம்.

”என்னடி அவனுக்குப் போய் நன்றியா? நீ வேலையை விட்டதுக்கு அவன்தானே காரணம். அதுக்கா நன்றி?” – இது இந்திராணி.

”என்ன பண்றது இந்து? துஷ்டனைக் கண்டா தூரமாப் போவணும். சுமுகமாப் பிரியணும். அதான் நல்லது. உலை வாய், ஊர் வாய் மாதிரி இவனுக்குப் பேய் வாய். நாளைக்கு எதுனா பண்ணி வச்சா” – இது லலிதா நாய்.

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டாரடி – useless பெண்களடி.

6.10.99

நெஞ்சத்தில் பழமரம் நடு. பறவைகள் வந்து பாடும். – சீனப்பழமொழி.

8.10.99

லலிதாவைப் பார்க்கப் போனேன். அழுதாள். எத்தனைத் திறமைசாலி. நெஞ்சில் ரத்தம் வடிந்தது. கயவர் சொல்லைக் காலில் மிதி. கண்ணியம் காக்க ஏந்து செந்தீ.

9.10.99

டென்ஷன் என்னால் அம்மாவுக்கும் அம்மாவால் எனக்கும்.

கண்ணீரில் நனைந்து ஒரு கடிதம் ‘கல்யாணம் பண்ணிக்க’. அந்தத் தேவை ஒரு நாள் என் மனசைத் தட்டும். அப்போது பார்க்கலாம். ஐ வில் மீட் மை மிஸ்டர். ரைட் சம் டே. அதுவரை சும்மாயிரேன் அம்மா. என் முதுகில் டென்ஷனை ஏற்றாதே. நீயும் ஏத்திக்காதே. முகம் தெரியாத கல்லூரிப் பெண் ஏதோ ஒரு சஞ்சிகையில் எழுதியது நினைவில். ‘வெளியில் சென்ற நான் வேளையோடு வீட்டுக்குத் திரும்பவில்லை என்று நீங்கள் அடையும் டென்ஷன் எனக்குள் தொற்றிப் பெருக்கும் டென்ஷனே என்னை விபத்தை நோக்கிச் செலுத்தும்.’

ஓ! தாய்க்குலமே. உங்கள் புத்திரிகள் நாளை செவ்வாய்க் கிரகத்தில் பால் காய்ச்சப் போகிறவர்கள். சூரியனில் நெருப்பெடுத்து நிலாவில் குளிர் காயப் போகிறவர்கள், ‘மடி நெருப்பு’ தியரியிலேயிருந்து வெளியே வந்துடுங்களேன் ப்ளீஸ்.

15.10.99

இன்று எங்கள் ஆபீசில் விஜய சப்தமி. பத்தாம் நாள் நடப்பதால் தசமி. அதாவது விஜயதசமி. ஏழாம் நாளே எங்க ஆபீஸ்லே ஆயுத பூஜையை நடத்திட்டாங்க. அப்ப அது விஜய சப்தமிதானே? நம்ப சௌகரியத்துக்குத்தானே பண்டிகை?

பெரியார் சொல்கிறார்: ”கல்விக் கடவுளுக்குப் பூஜை செய்யும் நாடு. தற்குறிகள்அதிகம் உள்ள நாடு”. இதைத்தான் இங்கிலீஷ்காரன் Ironyன்னு சொல்றான்.

இன்னிலேயிருந்து மூணு நாள் லீவ். ஆனந்த சுதந்திரம். விடுமுறையில் விடுதலை. நம் கையில் நாம் விரும்பும் வாழ்க்கை என கைக் களிமண். பிள்ளையார் அல்லது குரங்கு பிடிப்பேன். பிள்ளையார்தான் ஈஸி, குரங்கு கஷ்டம்.

16.10.99

ஆபீஸ் லீவ்தானே. காலையில் ஒன்பது மணிக்கு எழுந்தேன். காலை, வெள்ளை வெல்வெட். என்னுடைய கெனடிக் தேர் ஏறி ப்யூட்டி பார்லர் போனேன். தென்னாட்டுக் குலவிளக்குகளின் ஜாடை போச்சு. பாப் வந்தது. மல்லிகா ‘அச்சச்சோ’ என்பாள். அவள், வாங்கும் சம்பளத்தில் முக்கால் பாகத்தை மயிர் வளர்க்கச் செலவு செய்பவள். சூர்யா. மறுநாளே இதே போல பாப் வெட்டிக் கொள்வாள். என் கார்பன் காப்பி காப்பி ரெங்கு, ‘எனக்கா’ என்று இரங்குவான். போகட்டும் மயிர் விஷயம் ஷவரின் கீழ் ஒரு மணி! சௌராஸியாவின் நீண்ட புல்லாங்குழலிசையில் குளித்தேன். சிலோனைப் போட்டேன். என்னால ஒட்டகத்தைக் கட்டிக் கொள்ள முடியாது. டீயைப் போட்டுக் கொண்டேன்.

சமைக்கலாமே, பேக்ரோனி வேகல். தொட்டுக்க ஃப்ரிட்ஜில் இருக்கும் கார்லிக் சில்லி சாஸ் சூப்பர். சமையலில் நான் பீமி.

தூங்கினேன். கனவுகள் அற்ற தூக்கம். ஏதோ சத்தம். எழுந்தேன். மீட்டர் படிக்கும் ஆள். தூக்கம் கெட்டது. டி.வி. போட்டேன். ‘இந்த இழவு தொலைக்காட்சி ரிமோட்டை தொட்ட விரலே எனக்கு நக சுத்தி வர…’ திருந்திய கணவன், ‘மன்னித்து விடு கண்ணே’ மாமூல்.

”அப்படிச் சொல்லாதீங்க. அந்த வார்த்தை உங்க வாயில் வரலாமா? என்னை இன்னும் வேணுமானா அடிங்க” கற்புக் கண்ணில் வழிந்தது. புல்லரிப்பு. திரைப்படங்களில் கற்பு. திகட்டத் திகட்ட கற்பு. நம் தாய்க்குலங்களின் பெரு விருப்பு. சிந்திப்பவர்களுக்கோ அருவறுப்பு, தீஸிஸ் எழுதுபவர்களுக்கு நல்ல தலைப்பு.

நிலாவுக்குக் கீழே இந்தக் கோமதிப் பெண் மயிலாள் கொழுக்கட்டை சாப்பிட்டாள். நிலாமயிலாள் கை நீட்டி ‘ஒரு கொழுக்கட்டை வேணு’ மென்று கேட்டாள். ‘தரமாட்டேன் போடி’ என்று சொல்லிவிட்டுத் தூங்கிப் போனேன்.

17.10.99

இன்று சூரியனை (லேஸிபாய்) நான்தான் எழுப்பினேன். தெருவைப் பார்த்தால், பெண்கள் பொன்விழா வளைவு மாதிரி குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் ஆசை. பெரிய பெரிய ஆசை. கோலமாவைத் தேடி எடுத்தேன். தெருவுக்கு வந்தேன். கோமதி… ஒரு கோலராணி… ஹஹ்ஹா!

என்ன கோலம் போட… என்ன புள்ளி வைக்க… சரஸ்வதி கோலம். சரஸ் கோலம். பதினைந்து புள்ளி, பதினைந்து வரிசை நேர்ப்புள்ளி சிரிக்கும் சரஸ். அருகே மயில். வீணைதான் கொஞ்சம் கிடார் சாயலில் வந்துடுச்சி. பரவாயில்லை. சரஸ்வதி வேண்டாங்காம அதைக் கையில் வச்சுக்கிட்டாங்க.

கண்ணேறு பட்டிருக்கும். அம்மா இருந்தால் சுத்திப் போட்டிருப்பாள். இன்றைக்கு என்னவோ மனசு சலங்கை கட்டிக் கொண்டது. ‘ஆடு ஆடு’ என்றது. டேப்பில் தில்லானா சுழன்றது. திக்குகள் எட்டும் சிதற தீம்தரிகிட தீம்தரிகிட, தீம்தரிகிட தீம். வானில் பறக்கும் நான். தாளச் சிறகில் என் கால்கள் மிதந்தன.

குதூகலம்.

நாட்டியம் உடம்பின் அழகு. விஸ்வத்தின் இயக்க அலைகளுடன் என்னை நான் பொருத்திக் கொள்கிறேன். ஆசுவாசம்.

படுக்கப் போகும் முன் ஓஷோ படித்தேன். There is no home, unless we find it is Ourselves. இதுதான் ஓஷோ, அவரை, ‘செக்ஸ் சாமியார்’ என்று சிதைத்தது நம் யுக அவலம். கவிதைக் களஞ்சியம் புரட்ட, ‘அறநெறிச் சாரம்’ கண்ணில் பட்டது. முனைப்பாடியார் சொல்லுகிறார்.

தானே தனக்குப்

பகைவனும்

நண்பனும்

தானே தனக்கு

மறுமையும இம்மையும்

தானே தான் செய்த

வினைப்பயன் – துய்த்தலால்

தானே தனக்குக் கரி!

சுழலில் சிக்கிய மரத்துண்டு போல இந்த நான்கு வரிகளும் என் மனசுக்குள் சுழன்றன. சுழன்று கொண்டேயிருந்தன.

18.10.99

இன்று எழுந்ததும் நீச்சல் ஆசை. நீச்சல் குளம் போனேன். தண்ணீரில் குளோரின் அதிகம். ஒரே கண் எரிச்சல். சீக்கிரத்திலேயே கரை ஏறினேன். ஜிம்மில் கல்பனாவைப் பார்த்தேன். வழக்கம்போல புருஷனைப் பற்றி ஒரு பாட்டம் அழுதாள்.

மத்தியான்னத்துக்கு புது அயிட்டம் காளான்+குடை மிளகாய் ஃபிரைட் ரைஸ். சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (கிழங்கு தின்ற கிழங்காகி கிழமுமாவேனா?). பண்ணுபவளும் நானே. தின்னுபவளும் நானே. இன்றைய தினம் சமையல் தினமா? இல்லை ஃப்ரைட் ரைஸ் தினம்.

மாலை வீடு திரும்பினேன். நாளைக்கு ஆபீஸ். மனசு ஷெனாயில் அழுத்து. படுக்கையில் தேவாவின் கானாப் பாடல்கள் கேட்டேன். ”மீனு திங்க ஆசைப்பட்டா முள்ளிருக்கும் ஒத்துக்கப்பா… காதலிக்க ஆசைப்பட்டா கஷ்டப்பட கத்துக்கப்பா”

நல்லவேளை எனக்கு இந்த கஷ்டமெல்லாம் இல்லை.

19-.10.99

இருளோடு சேர்ந்து சோம்பலும் கரைந்தது. இனி வரும் ஆறு நாளும் உற்சாகம் உற்சாகமே. உழைப்புதான் மானம். உழைப்புதான் கௌரவம்.

25.10.99

இந்திராணி ஒரு மீன் ஸ்பெஷலிஸ்ட். தொட்டி மீன் நிபுணி.

‘கோல்டன் ஃபிஷ், வளரு கோமு. உன் ரூமே தங்கமாயிடும்’னா. ‘நோ’ என்று சொல்லிட்டேன். குட்டியூண்டு தொட்டியில நீந்தற தங்கங்கள் கண்ணாடிச் சுவரை முட்டி முட்டித் திறக்க மாட்டாம ஏமாந்து போற இந்தப் பாவம் என்னால பார்க்கவே முடியாது.

27.10.99

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம். துணிக்கடைகள், நகைக் கடைகள், வீட்டுச் சாதனக் கடைகள், டி.வி.க் கடைகள், மிட்டாய் கடைகள் தங்கள் நரக வாசல்களை அலங்காரமாகத் திறந்து வைத்து மக்களை, ‘வா வா’ என்றழைத்தன. காற்றெங்கும் கன்ஸ்யூமர் காலராக் கிருமிகள். தேவையற்றவைகளை வாங்கிக் குவித்தல். அதுவே மனநிறைவின் சின்னம் எனக் கருதல். வாங்காது விட்டு விட்டால் குறைப்பட்டு, மூளியாகி நிற்கிற பிரமை. எதையும் வாங்கிக் குவிக்காதவன் அரை மனிதன். வாங்கு வாங்கு, வாங்கு வாங்குவதற்காகவே வாங்கு, வாங்கக் கடன் வாங்கு. இன்ஸ்டால்மென்டில் கடனாக வாங்கு. வாங்கு லஞ்சம் வாங்கு. லஞ்சத்தையே பொருட்களாக வாங்கு. தேசத்தை நாசம் செய்.

7.11.99

தெருவைப் புரட்டும் பட்டாசுச் சத்தம். எதிர் ஃப்ளாட் பக்கத்துப் ஃப்ளாட்டுகளிலிருந்து பலகாரத் தட்டுகள். தீபாவளியை அடித்துச் சொல்லும் அறிவிப்புகள்.

தீபாவளிக்கு வரச்சொன்ன அம்மாவின் கடிதம் மேசையின் மேல். எதிர்பார்த்திருக்கும். ஏனோ, கிளம்பி ஊருக்குப் போற மூட் இல்லை.

ஊரும் உலகமும் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. இவர்கள் நரகாசுரனை அழித்தார்களா? இல்லை நாராயணனையே அழித்தார்களா? கடந்த இரண்டு நாட்களில் எங்கள் மேல் படிந்த ஆயிரங்கால அழுக்கை எரிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

லலிதாவின் மேல் மேனேஜர் இறைத்த அதே சேற்றை என் மேலும் இறைத்தார். அப்போதுதான் டீ சாப்பிட்டு விட்டுத் திரும்பினோம் நானும் வல்சராஜூம். ரெங்கு என் பக்கம் வந்து நின்றான். முகத்தில் வருத்தம். அவன்தான் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னான். நான் யாரோ ஒருத்தனோடு ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமாரி போய் ராத்திரி தங்கினேனாம். இந்த அரிய கண்டுபிடிப்பை அந்தச் சில்லறை கிளர்க்கிடம் சொல்ல, கிளார்க் ரெங்குவிடம் சொன்னானாம்.

ஒரு வெகாளம் கிளம்பியது எனக்கு. கிளர்க் பல் குத்திக் கொண்டிருந்தான். மேனேஜர் அப்படியா சொன்னார் என்றதும் மிரண்டான். மேனேஜர் அறைக்குள் நுழைந்தேன். கரப்பான் பூச்சியின் ரத்தம் போலச் சட்டை. நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தேன். அதிர்ந்தான்.

”நான் போனதை நீங்க பார்த்தீங்களா”ன்னேன்.

”நம்ப ஆபீஸ் ஸ்டாஃப்பை கண்காணிக்க சீக்ரெட் ஸ்குவாட் வச்சிருக்கோம். அவங்க குடுத்த தகவல் இது”ன்னான்.

”சரி, சீக்கிரம். ஸ்குவாட் குடுத்த தகவல் எந்த அளவுக்குச் சரிங்கறதை நீங்க செக் பண்ணிட்டீங்களா? செக் பண்ணி, அது ஊர்ஜிதமாகியிருந்தா எனக்கு நீங்க மெமோ குடுங்க. இது வரைக்கும் நீங்க கிடைச்சதா சொன்ன தகவலை அடிப்படையா வச்சி ஒரு முழுமையான விசாரணைக்கு உத்தரவு போடுங்க”ன்னேன்.

அவன் மூஞ்சி லாண்டிரி வேஷ்டி ஆச்சு. ”எதுக்கும்மா… எதுக்கு பிரச்னையைத் தோண்டி இழுத்து மேலே போட்டுக்கிட்டு அசிங்கம் பண்ணிக்கறே” என்று ஏதோ எனக்கு உதவி செய்வது போல நடிச்சான்.

”இதோ பாருங்க சார். நான் தப்புப் பண்ணேன்னு நீங்க உறுதியா நம்பறதா இருந்தா நீங்க எம்மேல விசாரணை வைங்க. இல்லேன்னா, அநாவசியமா என்னைப் பத்தி தப்பா வதந்தியைப் பரப்பினதுக்காக ஆபீசைக் கூட்டி எல்லார் முன்னிலையிலேயும் நீங்க மன்னிப்புக் கேக்கணும். ஏன்னா, இப்படி ஆபீஸ்லே வேலை செய்யற பொண்ணுங்க மேலே நீங்க வீணான அபவாதத்தை இப்படிக் கிளப்பறது இது முதல் தடவையில்லை. முதல்ல சந்திரிகா தற்கொலையே பண்ணிக்கிட்டா. (நான் அவளுக்காகப் பரிஞ்சுகிட்டு வரலை. இதுக்கே செத்துப் போற பூஞ்சைங்கள்லாம் சீக்கிரமாப் போய்த் தொலையட்டும்) கடைசியா லலிதா. உங்களாலே அருமையான வேலையை விட்டுட்டுப் போனா. இப்படி கமா போட்டுகிட்டே போனீங்கன்னா நல்லாயில்லை. இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சி ஒரு இடத்துல நிறுத்தியாகணும். அந்த முற்றுப் புள்ளியா நான் இருக்கிறேன். அப்படி நீங்க மன்னிப்புக் கேக்கலைன்னா நான் உங்க மேலே நடவடிக்கை எடுக்க வைப்பேன்; எப்படி அதைப் பண்ணப் போறேன்னு தெரியுமா? இந்த ஆபீஸ்லே இருக்கறவங்களையெல்லாம் திரட்டிகிட்டு போய் எம்.டி., சேர்மேன் எல்லாரையும் பார்த்துப் புகார் கொடுப்பேன். அது மட்டுமில்ல… சேர்மென் ரூமுக்கு எதிர்ல தர்ணா பண்ணுவோம்.”

வெலவெலத்துப் போயிட்டான் மனுஷன்.

”யாரோ ஒருத்தன் சொன்னான் கோமதி. உன்னை ஒரு பையனோட பார்த்ததா… இதைப் பெரிய விஷயமா எடுத்துக்காதே. ப்ளீஸ் ஃபர்கெட் இட்”ன்னு கெஞ்சினான்.

”சரி, சார். அலுவலகத்துக்கு வெளியே எங்க நடவடிக்கையை கவனிக்கறதுக்கு ஏதோ சீக்ரெட் ஸ்குவாட் போட்டிருக்கறதா சொன்னீங்களே… அதுல யார் இருக்காங்க சார்”னேன். பத்துப் பேரைச் சொன்னார். ஒரு பெண் கூட இல்லை. ‘‘பெண்களோட ஒழுக்கத்தைக் கண்காணிக்க பூதக் கண்ணாடி, பைனாகுலர், டெலஸ்கோப், தராசு, மட்டப் பலகைன்னு ஒழுக்கமானிகள் அடங்கிய கிட் பாக்சோட பத்து பேர் கத்தறீங்களே, அந்த ஸ்குவாட்ல அஞ்சாறு பொம்பளைங்களையும் போடுங்க. ஆறு மணிக்கு மேலே நம்ப ஆபீஸ் ஆம்பளைங்க என்னென்ன பண்றாங்கங்கறதையும் கவனிக்லாம்’’னேன்.

அவன், கால்ல விழாத குறையா ”என்ன கோமதி இவ்வளவு சீரியஸாயிட்டே, நான் செஞ்சது தப்புதான். என்னை மன்னிச்சுடு. இனிமே உன்னைப் பத்தி நான் அப்படியெல்லாம் பேச மாட்டேன்”னான்.

”என்னைப் பத்தி நீங்க சொன்னதுக்காக நான் கவலையே படலே சார். இதுக்கெல்லாம் தூக்கு மாட்டிக்கற முட்டாள் இல்ல நான். வேலையை விட்டுடுற மடச்சியும் இல்ல. அவசியம் ஏற்பட்டா உங்களை மாதிரியான ஆளுங்கள நான் ஆபீசை விட்டுத் தூக்கற டைப்”ன்னு சொன்னேன்.

உடனே ஆளு மாறிட்டான். ரொம்ப சிநேகிதமான தொனியில ”ஒண்ணு மட்டும் சொல்லலாமா கோமதி. இந்தத் தெரு முனையில இருக்கற டீ கடைங்களிலே எல்லாம் டீ குடிக்காதே கோமதி. அது கௌரவமாகவே இல்லை”ன்னான்.

”பாருங்க சார், எனக்குத் தண்ணி குடிக்கணும்னு தோணறப்ப தண்ணி குடிப்பேன். டீ குடிக்கணும்னு தோணறப்ப டீ குடிப்பேன். இல்லே டீ எங்கே நல்லாயிருக்கோ அங்கேயும் குடிப்பேன். மனுஷங்களோட கௌரவம் அவங்க டீ குடிக்கற கடையைப் பொறுத்ததில்லன்னு நான் நம்பறேன் சார். அதுதான் உண்மையும் கூட”ன்னேன். வெளியே வர எழுந்தேன். உடனே ரொம்பப் பணிவா கெஞ்சற தோரணையில நாத் தழுதழுக்க, ”கோமதி இங்க நமக்குள்ள நடந்த பேச்சு வார்த்தையை வெளியிலே சொல்லிடாதம்மா… ப்ளீஸ்” ன்னான்.

வெளியே வந்தேன். ஆவலா ஓடி வந்தா இந்திராணி. ”என்னாச்சு கோமு. நல்லா குடுத்தியா சூடா”ன்னா.

”சே…சே… சும்மா ஆபீஸ் மேட்டர்தான்”னுட்டேன்.

வெளியே இன்னும் பட்டாசுச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ புறப்பட்ட ராக்கெட் வாணம் உயரத்தில் வெடித்தது. ஒளிப்பூக்களாய் தீக்கங்குகளைச் சொரிகிறது. தீ பார்க்கவும் அழகு. பழகவும் அழகு.

”தீயே நின்னைப்போல, நமது உள்ளம் சுடர் விடுக

தீயே நின்னைப்போல எமது அறிவு கனலுக.”

***

திலகவதி

தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். என்கிற புகழுக்கு சொந்தக்காரர். முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர். காவல்துறை பணியையும் எழுத்துப் பணியையும் இரு கண்களாக பாவித்தவர். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், பல குறுநாவல்கள், நாவல்கள் எழுதியிருக்கிறார். அவை முழுத் தொகுப்பாக வெளியாகியுள்ளன. கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய ‘கல்மரம்’ நாவல் 2005ம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. இவருடைய நாவல் ஒன்று திரைப்படமாகியிருக்கிறது. இயல்பான, மிரட்டாத தொனியில், எளிமையாக இவர் விவரிக்கும் எழுத்துகள் வியக்கவைப்பவை, ரசனைக்கு உரியவை. இன்னமும் பல பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார். காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ‘அம்ருதா’ இலக்கியப் பத்திரிகையின் சிறப்பாசிரியராக செயல்பட்டு வருகிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *