ஓநாய் வயிற்றில் ஒரு குட்டி முயல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 27, 2022
பார்வையிட்டோர்: 3,765 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டில் ஒரு பெரியமுயல் இருந்தது. அதற்கு நான்கு குட்டிகள். அந்தக் குட்டிகள் மெல்ல மெல்ல வளர்ந்தன. உடம்பில் வலு ஏற்பட்டதும் துள்ளி ஓடி விளையாடின. ஓடத் தெரிந்து விட்ட அவற்றிற்கு நல்லது கெட்டது தெரியவேண்டும் என்று தாய் முயல் விரும்பியது. இல்லா விட்டால் வெள்ளை மனம் படைத்த அவற்றைத் தீங்கு வந்து சூழ்ந்து கொள்ளும் என்று அது அஞ்சியது.

ஒரு நாள் தாய்முயல் குட்டிமுயல்களைக் கூட்டிக் கொண்டு காட்டைச் சுற்றிக் காட்டியது.

மரம், செடி கொடிகளை யெல்லாம் அது காட்டி யது. எந்தெந்த இலைகளைத் தின்னலாம், எது எதைத் தின்னக்கூடாது, எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்றெல்லாம் அது விளக்கிச் சொல்லியது. அது ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கிச்சொல்லச் சொல்ல மூன்று குட்டிமுயல்கள் மிக உன்னிப்பாகக் கேட்டுத் தெரிந்து கொண்டன. சொன்னவற்றையெல் லாம் திரும்பத் திரும்பக் கேட்டுச் சொல்லிப் பார்த்துத் தெரிந்து கொண்டன. ஆனால் ஒரு முயல்குட்டி அப் போது, தாய் சொன்ன செய்திகளைக் கவனிக்காமல், பாப்பாத்திப் பூச்சிகளைத் துரத்திப் பிடித்து விளை யாடிக் கொண்டிருந்தது. அது தன் வாழ்க்கைக்கு வேண்டிய அரிய செய்திகளைத் தெரிந்து கொள் ளாமல் விளையாடிக் கொண்டிருந்தது.

தாய் முயல் அடுத்த பாடமாகப் புல் வகைகளைப் பற்றி விளக்கிக் கூறியது. எந்தெந்தப் புல் சுவையாக இருக்கும். எது தின்றால் உடம்புக்கு நல்லது, எது கெட்டது என்றெல்லாம் விளக்கிச் சொல்லியது.சில முட் செடிகளைக் காட்டி, இவற்றின் இலைகள் இருக்கிற பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது. நச்சுத்தன்மை யுள்ளவை என்றெல்லாம் எடுத்து விளக்கியது.

அந்த ஒரு முயல் குட்டி தவிர மற்ற குட்டிகள் எல்லாவற்றையும் கவனமாகத் தெரிந்து கொண்டன.

அதுமட்டும் அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஏதேதோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

அடுத்தாற்போல் பெரிய முயல். குட்டிகளுக்கு விலங்குகளைப் பற்றிக் கூறியது.

இதோ இந்தச் சிறிய அடிச்சுவடுகள் அணிலின் சுவடுகள். கீறல் கீறலாக இருக்கும் இந்தச் சுவடுகள் காட்டுக் கோழிச் சுவடுகள். கலைமான்களின் சுவடு களைப் பார்த்தீர்களா? பெரியவை. கலைமான் களும் பெரியவைதான். ஆனால் நமக்கு அவற்றால்

துன்பமில்லை. குள்ளநரிகள் ஓநாய்கள் நமக்குத் துன்பம் தருபவை. ஏன் நம்மையே உண்டு வாழ்பவை. அவற்றின் சுவடுகளை நன்றாகக் கவனித்துக் கொள் ளுங்கள். அவை சென்ற பாதையில் கூடச் செல்லக் கூடாது.

மூன்று முயல் குட்டிகளும் தாய் சொன்ன அந்தச் செய்திகளை நன்றாகக் கவனித்து மனத்தில் இருத்திக் கொண்டன. ஓநாய்கள், நரிகள் வாழக் கூடிய இடங் கள், அவை கையாளும் போர்த்தந்திரங்கள். மற்ற விலங்குகளை அவை வேட்டையாடும் முறைகள், உண வாகக் கொள்ளும் வழக்கம் எல்லாவற்றையும் விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டன.

நான்காவது முயல்குட்டியோ, எந்தக் கவலையும் இல்லாமல் வெட்டுக் கிளிகளை விரட்டி விரட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

நாள்தோறும் தாயின் சொல்லைக் கவனித்துக் கேட்டுக் கட்டுப்பாட்டோடு வளர்ந்த முயல் குட்டிகள் பெரிதாக வளர்ந்தன, நான்காவது குட்டியும் பெரிதாகி விட்டது.

இனிமேல் நீங்கள் விருப்பம் போல் காட்டுக்குள் போய் வரலாம். என் துணை வேண்டியதில்லை. இனி மேல் நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொண்டு வாழுங்கள்! என்று கூறி அவற்றைத் தனிவாழ்க்கை நடத்த அனுப்பியது தாய்.

அவை விடுதலை யுணர்வோடு அங்கும் இங்கும் ஓடின. உணவைத் தேடின. பசித்தபோது உண்டன. தூக்கம் வந்த போது புதர்களில் பதுங்கின. இன்பமாக வாழ்ந்தன.

நான்காவது முயல்குட்டியும் காட்டுக்குள் ஓடியது. பாப்பாத்திப் பூச்சிகளையும், வெட்டுக்கிளிகளையும் துரத்தி விளையாடியது. பசி வந்தது. சில பச்சை இலைகளைக் கொரித்துத்தின்றது. அவை நச்சுத் தன்மையுள்ளவை. வயிற்றில் இறங்கியவுடன் குட்டி முயல் மயங்கி விழுந்தது. மயக்கம் தெளிந்து அது எழுவதற்கு முன் ஓர் ஓநாய் அந்த வழியாக வந்தது. லபக்கென்று அதை விழுங்கியது.

அவ்வளவு தான் அதன் கதை முடிந்தது.

பொறுப்பற்றவர்களின் வாழ்க்கை பொசுக்கென்று போய்விடும் என்பதற்கு அந்தக் குட்டி முயலின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.

– அப்பம் தின்ற முயல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1989, தமிழாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *