யாகாவாராயினும் நாகாக்க!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 6, 2013
பார்வையிட்டோர்: 9,858 
 

எவரெவரோ வந்துபோகிறார்கள். என்னென்னவோ கதைக்கிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறார்கள். பொருத்தமில்லாமல் அனுதாபப்படுகிறார்கள். வலிந்து ஆறுதல் கூறுகிறார்கள்.

அவசரமென்று உதவி கேட்கும்போது அலட்சியத்துடன் ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அழையா விருந்தாளிகளாக வந்துபோகிறார்கள். “ஏதாவது உதவி தேவையா?” என்ற பாவனையில் விசாரித்துச் செல்கிறார்கள்.

அவர்களது செய்கைகளையும் நடவடிக்கைகளையும் அரைகுறையாகவாவது அவதானிக்க முடிகிறது. வியப்பாக இருக்கிறது. அவர்களைப்பற்றி அவள் தனக்குள் போட்டுத் தீர்மானித்த முடிவுகள் யாவும் அங்கே தடுமாறி, அவர்களின் புதிய முகங்களைத் தரிசிக்க நேரும் விந்தைகள் யாவும் புதியனவாக இருக்கிறது. அதேநேரத்தில் வேதனையான வேடிக்கையாகவும் இருக்கிறது.

சத்தியநாதன் எப்போதும் இல்லாத புதுமையாய் கடந்த ஒரு கிழமையாக அவளையே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கிறான். அடிக்கடி அவளை நோக்குவதும் பெருமூச்சுவிடுவதுமாக வாடிச் சோர்ந்துபோய் அங்கே ஒரு மூலையில் போடப்பட்டுள்ள கதிரையில் அமர்ந்திருக்கும் சத்தியநாதனைப் பார்க்க மனதில் ஏதோ குடைந்தது. அந்தக் குடைதல் பழைய நினைவுகளைக் கிளறி குமுறலாக வெளிவர முற்பட்டது.

அவன் இந்த ஒரு கிழமையாக ஏன் இப்படி மாறிப்போனான்? மாறவேண்டிய நேரத்திலெல்லாம் தன்னை மாற்றிக்கொள்ளாமல், காலங்கடந்து இப்போது மாறுவதாலோ அல்லது துயரப்படுவதாலோ என்ன பிரயோசனம்? இந்தத் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? சுடலை ஞானமா? சுயநலமா? வாழ்வின் வசந்தங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் கைதவறவிட்ட பரிதவிப்பா?

எண்ணங்கள் நெஞ்சகத்தில் உருண்டோடின.

வராதவர்களெல்லாம் வரும்போது, உதவாதவர்களெல்லாம் உதவி தேவையா என்றபோக்கில் உருகி நிற்கும்போது சத்தியநாதனும் தன்னை மாற்றத்துக்குள்ளாக்கி வேசம்போடுகிறானா?

நிசமோ? வேசமோ? இவையெல்லாம் தற்போது எதற்குத் தேவை? வாழும்போது இந்த மாற்றங்களும் ஆதரவுகளும் அனுதாபங்களும் எங்கே ஒளிந்துகொண்டன? வாடி உதிரப்போகும் நிலையில், அனுபவிப்பதை எல்லாம் அனுபவித்து, எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கெல்லாம் வளைந்து குழைந்து தனித்துவத்தை இழந்து ஏனையவர்களின் திருப்திக்காகத் தினமும் உழைத்து, அதனையே வாழ்க்கையாய் பெயர்கூறித் தற்போது களைத்து விழுந்து முடிவின் முழுவியளத்துக்காகக் காத்திருக்கும்வேளையில் இந்த ஆதரவுகளால், ஆறுதல்களால், சோகங்களால் என்ன பயன்?

கேட்க வேண்டும் போலிருந்தது. இயலவில்லை.

வாழ்வதற்காக நிதமும் புதுப்புதுத் தேடல்களுடன் ஓடியோடிச் சுழன்று சுற்றி, எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டுமென்ற நியதிக்குட்பட்டவளாய், அந்த ஜேர்மன் நாட்டின் நகரமொன்றின் வைத்தியசாலைக் கட்டிலொன்றில் படுத்தாகிவிட்டது.

இந்த நேரத்தில் எங்கிருந்தோ புற்றீசல்கள்போல் எத்தனையோ தமிழ் முகங்கள் உறவுகள் உரித்துக்கள் பழகியவர்கள் என்ற ரீதியில் வந்து கட்டிலைச் சுற்றிக் குனிந்துநின்று கதைகதையாய்க் கதைக்கிறார்கள். அவள் சாதாரணமாகச் செய்த செயற்பாடுகளை எல்லாம் அருமை பெருமையாக மனம்போனபோக்கில் கதைத்து, அவளை எங்கோ உச்சத்தில் தூக்கிவைத்துக் கொண்டாட விழைகிறார்கள்.

அத்தனையும் எங்கோ வெகுதொலைவில் இருந்து ஒலிப்பதுபோலக் கேட்கிறது.

அவற்றைக் கேட்க அவளுக்கே சிரிப்பாக இருந்தது. மறுகணம் சிரிப்பு சீற்றமானது.

ஏன் இப்படிக் கதைக்கிறார்கள்? பயணம் அனுப்புவதற்கு முன்னால் வார்த்தைகளால் விருந்து வைக்கிறார்களா? அவளைப்போல் அவர்களும் அதேமாதிரியான கட்டிலில் தேடப்போகும் முடிவின் பயத்தால் ஏற்பட்ட பாதிப்புத் தரும் கதைகளா இவை? கதைகளால் பாவ மன்னிப்புத் தேடுகிறார்களா? அந்தப் பாவமன்னிப்புக் கோரல்களுக்கு அவளா பாத்திரவாதி?!

அதேபோல அவன்…. அவளின் அவன் அந்தக் கதைகளை எப்படிச் செவியேற்கிறான்… அதுவும் பொறுமையாக… அவனால் முடிகிறதா… அந்தச் சகிப்புத்தன்மையைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.

பாறாங்கற்களாகக் கனக்கும் விழி மடல்களைத் திறந்து அவனைப் பார்ப்பதற்கு முயற்சித்தாள். முடியவில்லை.

சகிப்புத்தன்மை அவனுக்கு… அவளின் சத்தியநாதனுக்கு ஒத்துவராதது என்பது அவளது அனுபவம். அவளைப் பொறுத்தவரையில், அவனுக்கு எதற்குமே பொறுமை கிடையாது. எடுத்ததற்கெல்லாம் “வெடுக், வெடுக்” என்று எகிறிப் பாயும் குணம்….

எதற்கெடுத்தாலும் பொறுமையின்றிக் கத்துவான். ஏதாவது காரணம் சொன்னால் கோபம் வந்துவிடும். கோபத்தின் உச்சிக்குப்போய் வார்த்தைகளாக வெளிக்கிளம்பும் சுடுசொற்களின் தாக்குதல்களால் ஏற்பட்ட மன ரணங்களுக்குள் உடல் குன்றி, உள்ளம் நொந்து, அவைகளெல்லாமே தழும்புகளாய், அவைகளால் தோன்றிய வலிகள் எல்லாம் வாழ்வே இதுதான் என்ற தோரணையில் அவளை உருக்குலைக்க, அவனது உணர்வுகளுக்கும் மூச்சுக்காற்றுக்கும்கூட வளைந்துகொடுப்பவளாய் அவள் பழகிவிட்டாள்.

“எது அவனுக்குப் பிடிக்காது…. எவை அவனின் கண்களில் தென்பட்டுவிடக் கூடாது” என்பதையெல்லாம் அனுபவித்து, அவற்றுக்கேற்பத் தனது தனித்தன்மைகளை, சுதந்திரமான உணர்வுகளை எல்லாம் உருமாற்றி, சுய உணர்வற்ற மானுடப் பிராணியாய் தன்னை மாற்றி வாழப் பழகி, அதே வாழ்க்கையாகி இவ்வளவு காலமாய் அவனுக்காக வாழ்ந்துவிட்டாள்.

அவனது தேவைகளுக்காக, திருப்திக்காக தினமும் மனைவி என்ற வேசத்தில் நடித்து ஓய்ந்து கட்டிலில் விழுந்துவிட்டாள். இந்த வேசங்களுக்கும் போலிகளுக்கும் முடிவு காணப்போகும்வேளையில், கடந்த ஒரு கிழமையாய் அவளைச் சுற்றியவாறு சத்தியநாதன் என்றுமில்லாத புதினமாய்.

அன்று நண்பன் ஒருவனின் திருமண வைபவத்துக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.

‘தேத்தண்ணி எங்கை?”

தூங்கி எழுந்து முகம் கழுவாத குறையாகத் தனது அதிகாரத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டான்.

மூத்தமகன் மதனுக்கு உடைகளை அணிவித்துக்கொண்டிருந்தவள், அதை அப்படியே விட்டுவிட்டு பரபரப்புடன் சமையலறையினுள் சென்று தேனீரைக் கொண்டுவந்தாள்.

“தேத்தண்ணி கொண்டு வாறத்துக்கு இவளவு நேரம்… உனக்கு ஒண்டுக்கும் விடியாது..” என்றவாறு தேனீரை அருந்தி ஒரு “சிகரட்”டை உருவி வாயில் பொருத்தியவன், அடுத்த உத்தரவுக்குத் தயாரானான்.

“என்ரை உடுப்புகள் எங்கை….”

“கோல்ட் செயின்” மணிக்கூட்டைக் கொண்டு வா… எல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேணும்…”

அவள் மூச்சுவிடுவதற்குக்கூட அவகாசமின்றி அவனதும், பிள்ளைகளினதும் தேவைகளுக்காக இயங்கிக்கொண்டிருந்தாள்.

அவன் இருந்த இடத்தில் தனது தேவைகளை நிறைவேற்றித் திருமண வைபத்துக்குச் செல்ல ஆயத்தமாகிவிட்டான்.

“இன்னும் வெளிக்கிடேல்லையே…. ஒரு அலுவலையும் நேரவழிக்கு ஒழுங்காய்ச் செய்யத் தெரியாது” என்று சத்தியநாதனின் குரல் உஸ்ணமாக வெளிவந்தது.

அவனது அந்த நேரத்துத் தேவைகள் நிறைவேறிவிட்டன. இனி அவள் எப்பாடுபட்டாலும் பரவாயில்லை, அதிகாரத்தால் எதையும் அவளிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற போக்கு அவனுக்கு.

“இதுகள் ரண்டையும் வெளிக்கிடுத்தி, நானும் வெளிக்கிட வேண்டாமே… சுடூது மடியைப் பிடியெண்டால் முடியுமே…” என்று முணகினாள்.

“ம்…. உந்தக் கதைக்கொண்டும் குறைச்சலில்லை…. எப்ப பார்த்தாலும் வாய்க்கு வாய் காட்டிப்போடுவாய்… வாறதெண்டால் வாற வழியைப் பார்… நீ வெளிக்கிடுற வேகத்தைப் பார்த்தால் சாப்பாட்டுக்கும் போகமாட்டம்போலை…”

அவனுக்குத் தேனீர் கொடுத்து, அவர்களுக்கு எல்லாம் உடைகளை எடுத்துவைத்து, பிள்ளைகள் மதனுக்கும் சுதனுக்கும் உணவூட்டி, அவர்களுக்கு உடையணிந்து, அவளும் அலங்காரம் செய்வதற்குள் சத்தியநாதன் பொறுமையிழந்தவனாய் உருத்திரமூர்த்தியாகி, அவளைச் சுடுசொற்களால் வதைக்கத் தொடங்கிவிடுவான்.

இது இந்த திருமணவைபவத்துக்குச் செல்வதில் மட்டுமல்ல. பிறந்தநாள் என்றாலும் சரி, அவன் வேலைக்குச் செல்வதானாலும் சரி, எங்கு செல்ல நேர்ந்தாலும் இந்த உரையாடல்கள் வழமையாகி அவளைப் பாதிப்பதே வாழ்வாகிவிட்டது.

அவளின் கஸ்டங்களை, உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், கோபத்தாலும் அதிகாரத்தாலும் அவளை வதைத்துத் தனது தேவைகளை நிறைவேற்றுவதே வாழ்க்கை என்று பெரும் சுமையை அவள்மீது திணித்துவிட்டான்.

இந்தத் திணிப்புகளுக்குள் திக்கித் திணறி இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டுவரை வாழ்வதாகப் பெயர் சொல்லி, தனது இறுதிப் பயணத்துக்கு ஆயத்தமாகிவிட்டாள் நந்தினி.

ஜேர்மனிக்கு வந்து ஏறக்குறைய முப்பது ஆண்டுகள்.

“ஜேர்மன் மாப்பிளை. நல்ல விசாக்காரன். கைநிறையச் சம்பாதிக்கிறான். அவன் தனியே வசிப்பதால் மாமியார் மைத்துனிமார் பிரச்சினைகள் இல்லை” என்ற களிப்புடன் நந்தினியைச் சத்தியநாதனுக்கு மனைவியாக்க அனுப்பிவைத்தனர் பெற்றோர்.

அவளும் வெளிநாடு, சுகமாயிருக்கும் என்ற எண்ணத்துடன்தான் ஆயிரத்துத் தொயிரத்துத் தொண்ணூறாம் ஆண்டு ஜேர்மனிக்கு வந்தாள்.

கைக்கெட்டிய தூரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில்தான் உலகத்தைப் பார்க்க முடிந்தது. கட்டிடங்கள் காடுகளாகி, சிறையாகி தனிமை கொடுமையாக வாட்டியது. அவசரத்துக்கு உதவ இனசனமென்று எவருமே இல்லாத வெறுமை பயமுறுத்தியது.

மொழியைப் படிக்கலாமென்றால் அதற்கும் தடை. திருமணமாகி ஒரு வருடத்துக்குள் குழந்தை பெற்றால்தானாம் தான் ஆண்மகன் என்று பெருமை காட்டலாமாம். “முதலிலை குழந்தை… அதுக்குப் பிறகு “டொச்” படிக்கிறதைப்பற்றி யோசிக்கலாம்…” என்று தட்டிக் கழித்துவிட்டான். ஆனால் தனது நண்பர்களுக்கு முன்னால், “ஜேர்மனிக்கு வந்து எவளவு காலம்…. இன்னும் “டொச்” தெரியாது…. எல்லாத்துக்கும் நான்தான் போகவேணும்…” என்று ஒரு பிரலாபம்.

எடுத்ததற்கெல்லாம் “உனக்கு ஒண்டும் தெரியாது” என்று அவளை மட்டம்தட்டுவதே அவனது பழக்கமாகி, அதைக் கேட்பதே அவளது வழக்கமாகி, அவளது பிள்ளைகளைப் பொறுத்தவரையிலும் அவள் ஒண்டும் தெரியாதவளானதுதான் கண்ட மிச்சம்.

“மதன்! இண்டைக்கு என்ன படிச்சனீ…”

“சொன்னால்போலை உங்களுக்கு விளங்கப்போகுதே…”

திருப்பிக் கேட்டான் மதன்.

“அம்மாவுக்கு ஒண்டும் தெரியாது”

மதனுடன் சேர்ந்து சுதனும் சிரிக்கும்போது அவளுக்கு நெஞ்சில் வலிக்கும்.

“ஓமடா… உங்கடை ஒவ்வொரு தேவையளையும் கவனிச்சு, உனக்கு இது பிடிக்கும், உனக்கு அது பிடிக்கும் எண்டு ஆளாளுக்கு வாய்க்கு ருசியாய் அவிச்சுப்போட்டு, வளர்த்துவிட்ட அம்மாவுக்கு இன்னும் என்னடா தெரியவேணும்…?”

கத்தவேண்டும் போலிருக்கும்.

“அப்பன் சொல்லுறதைத்தானே பிள்ளையளும் மனப்பாடம்பண்ணிக் கதைக்குதுகள்…”

தனக்குள் சமாதானமாகிவிடுவாள்.

சத்தியநாதன்மீது ஆத்திரமாகவரும். மறுகணம் “எனக்கா ஒண்டும் தெரியாது… உனக்குத்தான் முக்கியமான ஒண்டு தெரியாது… தெரிந்தால் உன்னால் தாங்கமுடியுமா?” என்று தனக்குள் கேட்டு, அவனைப் பழிவாங்குவதாகத் திருப்தியடைவாள்.

“என்னருமை ஆண் துணையே… குடும்பமென்றால் பெண்ணுக்கும் ஆணுக்குமிடையே ஒழிவு மறைவற்ற இணைவும் உறவும் வேண்டும் என்பதை அறிவாயா… உடலைப் பொறுத்தளவில் நிர்வாண ஒளிவு மறைவற்ற நிலையின் சங்கமம்மட்டுமே ஒரு குடும்பத்தின் ஆணிவேரென நினைத்தாயா? மனங்களின் நிர்வாணத் தன்மையில் எழும் சமநிலைச் சந்திப்புத்தான் உண்மையான குடும்பத்தின் அமைப்பும் குதூகலமும் என்பதை ஏன் உணர மறுக்கிறாய்…. உன் தேவைகளுக்காக மனதில் கபடம்வைத்துக் கழுத்தறுக்க நினைத்தால் வாழ்க்கையே கபடமாகிவிடும் என்பதை ஏன் நினைக்க மறந்தாய்…. அந்தக் கபடம் உன்னில் மட்டுமல்ல, உன் துணையிலும் பிரதிபலிக்கும் என்பதை ஏன் அறியாமல் உள்ளாய்?”

மூத்தவன் மதன் வளர்ந்து வாலிபனாகியபோது, அவனுக்கொரு வாழ்க்கைத் துணை தேடவேண்டும் என்ற எண்ணம் எழுந்தபோது, அதிலும் சத்தியநாதனின் கபட நோக்கத்திலெழுந்த விருப்பம்தான் முன்னின்றது.

“ஊரிலை பிறந்ததுகள் எண்டால் நாலு இடம் அடிபட்டு நாலு நல்லது கெட்டதுகளைத் தெரிஞ்சு வைச்சிருக்குங்கள்… மதன் இஞ்சை பிறந்தவன்… படிப்பும் “ரீவி”யும் வீடும் வேலையும்தான் உவருக்கு தெரிஞ்சதெல்லாம்… வெளுத்ததெல்லாம் பால் எண்டு நம்பி ஏமாறுவான்… அவனைக் கொண்டுநடத்த அவனுக்கொரு சரியான சோடியைத் தேட வேணுமெண்டால் இந்த நாட்டிலை ஏலாது…”

“என்ன இருந்தாலும் அவன் இந்த நாட்டு சூழலிலை வளர்ந்த பிள்ளை…. இஞ்சை பிறந்ததுகள் தங்கடை போக்கிலை சுதந்திரம் அது இதெண்டு திரியேக்கை கொஞ்சமாலும் தாய் தேப்பனெண்டு மரியாதை குடுக்கிறான்….”

“அதுக்கென்ன இப்ப…. ”

“இந்த நாட்டிலை வாழுற ஒருத்தியாலைதான் அவனோடை அனுசரிச்சு வாழேலும்….”

‘ப்பூ…. எனக்கு நீ பெரிய பொருத்தம்தானே…. பெரிசாய் சொல்ல வந்தீட்டாய்… எங்கடை நாட்டிலை பிறந்து வாழுற ஒருத்திதான் அவனுக்குச் சரி… ஊர்ப் பெட்டையள்தான் அவன்ரை போக்குக்கு விட்டுக்கொடுத்து நடக்குங்கள்…”

“சளீர்” என்று அவளது கன்னத்தில் அறைந்தாற்போல் தெறித்தன வார்த்தைகள்.

நந்தினிக்கு அவனது உள்நோக்கத்திலிருந்த கபடம் புரிந்தது.

மதனுக்கும் அவளைமாதிரி ஒரு அடிமையைத் தேடுகிறான்… அந்த அடிமைத்தனமுள்ள பெண் தாயகத்தில்தான் சுலபமாகக் கிடைப்பாள் என்று நம்புகிறான்.

அவன் நினைத்தமாதிரியே மதனுக்குத் துணையாக தாயகத்து உறவு ஒன்றிலிருந்து பெண் ஒருத்தி வந்தாள். பெயர் தமிழினியாகத் தமிழில் நிறைந்திருந்தது.

ஆனால் பாவம் சத்தியநாதனின் கணக்குகள் வேறு விதத்தில் தோற்றுவிட்டன.

அவள் மதனது தேவைகளை அக்கறையாகக் கவனிப்பதுபோல, அவனது கள்ளங்கபடமற்ற குணத்தை மாற்றுவதையும் அக்கறையாகக் கவனித்தாள். பெற்றோர் சகோதரன் எல்லோருமே ஒரே குடும்பம் என்று வளைய வந்தவன் ரொம்பத்தான் மாறிவிட்டான். “தான், தனது குடும்பம்” என்ற எண்ணங்கள் அவனது செய்கைகளில் தமிழினிமூலமான மாற்றங்களாக வெளிப்பட்டன.

சத்தியநாதனும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டான். ஓய்வூதியம் என்ற பெயரில் ஏதோ ஒரு சொற்ப தொகை “யூறோ”க்களில் வந்து அல்லாட வைத்தது.

நந்தினிதான் சமாளித்தாக வேண்டும்.

மூத்தவன்தான் நம்பிக்கை ஒளியாகத் தோன்றினான்.

“மதன்… நீதானடா இந்தக் குடும்பத்தைப் பார்க்கவேணும்…. அப்பாவுக்கு வாற காசு ஒண்டுக்குமே பத்தாது…”

அவன் தமிழினியைப் பார்த்தான். அவள் முந்திக்கொண்டாள்.

“ஏன் மாமி…. இவர்ரை “கின்டர் கெல்ட்”… “எக்சியூம் கெல்ட்” எல்லாம் எடுத்தது காணாதே… இனியும் ஏன் தொந்தரவு தாறியள்… மாமாவுக்கு வாற “பென்சன்” காசு காணாதெண்டால்…. ஏதாலும் “அல்ரர்ஹைம்”மிலை போய் இருந்தால் கவனிப்பாங்கள்தானே…. நாங்களும் இடைக்கிடை வந்து பாப்பம்தானே…”

மதனும் “ஆமாம்” போட்டான்.

இவ்வாறு சிறுசிறு பிரச்சினைகள் பெரிதானபோது, இளையவன் சுதனும் தனியாகப் போய்விட்டான்.

அவள் எவ்வளவோ தடுத்தாள். கேட்காமல் வெளியேறினான்.

“ஜேர்மன்காரரைப் பாருங்கோ… இப்பிடி ஒரு வீட்டுக்கையே அடைஞ்சு கிடக்கிறாங்கள்…. இப்பிடி ஒண்டாய் இருந்து ஒருத்தரோடை ஒருத்தர் ஒட்டாமை வாழுறதிலையும் பார்க்க தனியாய் இருக்கிறது எவளவு சந்தோசம் தெரியுமே… உங்களுக்கு ஒண்டும் தெரியாது…”

சுதன் தனக்குத் தெரிந்த நியாயங்களைச் சொல்லி வெளியேறிவிட்டான்.

குடும்பத் தலைவனான சத்தியநாதனே தனது நலன்தான் முக்கியம் என்ற சுயநலப்போக்கில் வாழ்ந்தவனாச்சே?! அந்தச் சூழ்நிலையில் வளர்ந்த பிள்ளைகளும் தங்கடை சுயநலத்தைத்தானே கவனிக்கும்?!

ஆனால் தற்போது….

ஓரங்கட்டியவர்கள் எல்லாம் கட்டிலருகே ஒட்டி நிற்கிறார்கள். மருமகள் நேரம் தவறாமல் வந்து பார்க்கிறாள். மதன் அவளது தலையைக் கோதி, கண்கள் கலங்க என்னவோ எல்லாம் கேட்கிறான்.

காலில் பம்பரம் கட்டினால்போல் எந்நேரம் பார்த்தாலும் நண்பர் நண்பிகளென்று கும்மாளமிட்டுக் கொண்டு திரியும் சுதன்கூட அடிக்கடி வந்து அவளின் கட்டிலில் மணிக்கணக்காக அமர்ந்துகொண்டு, அவளைப் பார்ப்பதும் எங்கோ வெறித்து நோக்குவதுமாக இருக்கிறான். சில சமயங்களில் அவனது கண்களில் இருந்து உருண்டோடும் நீர்த்திவலைகள் அவளது கன்னங்களைக் கழுவிச் செல்கின்றன.

“மகனே… அம்மா என்ற அன்பு வற்றிவிடப் போகிறதென்று அழுகிறியா… என் கண்ணே… இப்பவாவது அன்பு பாசங்கள் உன்ரை கண்களைத் திறந்தால் எனக்கு மகிழ்ச்சிதான்… வேடிக்கைகளும் கேளிக்கைகளும் அன்பு உறவுக்கு முன்னாலை வெறும் தூசு என்பது உனக்குப் புரிந்து, மனிதம் உன்னுள் புகுந்தால் அதுவே எனக்குப் போதும் கண்ணா…”

அந்தத் தாயுள்ளம் பிள்ளைகளுக்காக உருகியது. அவர்களின் எதிர்காலப் பிரகாசங்களுக்காகப் பிரார்த்தித்தது.

எல்லோரும் போய்விட்டார்கள். நாளை அவளைச் சந்திப்போமா என்ற கவலைகளை முகத்தில் ஏந்தியவாறு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.

அமைதி…. அங்கே அமைதி….

அருகில் ஏதோ அசைவது போலிருந்தது. யாரோ நெருங்கி வந்து அவளருகே உட்காருவதை உணரமுடிகிறது. தலையைத் திருப்பிப் பார்க்க இயலவில்லை.

“சத்தியநாதனாக இருக்குமோ…?”

அவளையும் அறியாமல் ஒருவித வெறுப்பு எங்கிருந்தோ வந்து உட்புகுந்துகொண்டது.

திடீரெனக் கட்டில் குலுங்கியது.

அவளின் கரங்கள் இரண்டையும் எடுத்துத் தனது கைகளுள் அடக்கியவாறு, உடல் குலுங்க சத்தியநாதன் விம்ம ஆரம்பித்தான். கண்கள் தாரைதாரையாக நீரைச் சிந்தின.

“நந்தினி…. நந்தினி…”

உணர்ச்சிப் பெருக்கீட்டால் நாக்குழற விம்மினான்.

“என்னை மன்னிச்சிடு நந்தினி…. உன்ரை அருமை பெருமையள் புரியாமை இவ்வளவு காலமாய் உன்னைக் கஸ்டப்படுத்தீட்டன்… என்னைத் தனிய விட்டூட்டுப் போடாதை… எனக்கு இந்த உலகத்திலை எப்பிடி வாழுறதெண்டே தெரியாது… எல்லாத்துக்கும் உன்னை நம்பித்தானிருந்தன்… நீயும் போவிட்டி எண்டால் என்னாலை எப்பிடி வாழேலும்…”

திக்கித் திணறி வார்த்தைகள் அழுகையினூடே வெளிவந்தன.

காலங்கடந்த ஞானமா? தனிமை தரப்போகும் பயத்தில் எழுந்த சுயநல ஒப்பாரியா?

பாவமாக இருந்தது. அதேநேரம் வேடிக்கையாக இருந்தது.

ஆண் என்ற மமதையுடன் நெஞ்சு நிமிர்த்தி வாழ்ந்தவனின் திமிரும் ஆணவமும் அதிகாரமும் எங்கே ஒளிந்துகொண்டன?!

“மன்னிப்புக் கேட்கிறான்!”

“மன்னிப்பதற்கு நான் யார்… எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா?”

ஏதோ ஒன்று நந்தினியின் நெஞ்சில் எழுந்து முள்ளாகக் குத்தியது.

“உனது ஆண் என்ற கர்வத்துக்கும் போலிக் கௌரவத்துக்கும் பயந்து இதுவரை நான் மூச்சுவிடுவதற்காக மறைத்த உண்மை ஒன்றை இப்போது சொன்னால் தாங்குவாயா என் கணவனே…?!”

கேட்கத் துடித்தாள். சொல்லி நெஞ்சில் குத்திக்கொண்டிருக்கும் முள்ளைப் பிடுங்கி அவன் முன்னால் போடலாமா என்று நினைத்தாள். ஜேர்மனியை மிதித்ததில் இருந்து மனதில் அடக்கிவைத்த அந்த இரகசியத்தை வெளியேபோட்டு உடைக்கலாமா என்று சிந்தித்தாள்.

தாங்குவானா…?!

அன்று… ஜேர்மனிக்கு வரும்வழியில் ஏஜென்சிக்காரன் காமுகனாக மாறி, அவளைச் சித்திரவதைசெய்து சக்கையாக்கியதைச் சொன்னால்… தாங்குவானா? இதேமாதிரி அவளிடம் மன்னிப்புக் கேட்பானா? அல்லது மீண்டும் ஆண் என்று அகந்தையுற்று விலகி ஓடுவானா?!

சுற்றி நின்ற சொந்த பந்தங்கள், தெரிந்த உறவுகள் யாவும் அவளின் சடலத்தைத் தகனம் செய்யவாவது முன்வருமா?! அவள் கற்பிழந்தவள் என்று காரணம் கூறி ஒதுங்கிவிடுவார்கள். பச்சாதாபங்கள் யாவுமே பறந்தோடி விடும்.

கணத்துக்குக் கணம் மாறும் மனித மனங்களை எண்ணும்போது எழுந்த வேதனை புன்னகையாக வெளிக்கிளம்பி அவளது முகத்தில் நிரந்தரமானது.

அந்தப் புன்னகையில், வெண்தாடிக் கிழத் தமிழனான திருவள்ளுவன் ‘யாகாவாராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற திருக்குறளுடன் வந்து உட்கார்ந்துகொண்டான்.

(பிரசுரம்: மண் 2000
10வது ஆண்டுநிறைவு ‘2000″ ‘மண்” சிறுகதைப்போட்டியில் முதலாம் பரிசு பெற்றது.)

Print Friendly, PDF & Email

பார்வை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

தந்தை யாரோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *