ஓர் இரவில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 2, 2023
பார்வையிட்டோர்: 7,979 
 

நேற்று காலை தினசரி பார்த்தீர்களா? சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்த்து. அதில் பெண் ஒருவர் ஓட்டும் நிலையில் பிணமாக கிடந்தார்” அவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டுள்ளது. இது கொலையா, தற்கொலையா? தெரியவில்லை போலீஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறது”

இந்த செய்தியை படித்ததும் சற்று முகத்தை சுழித்து பார்த்து விட்டு அடுத்த செய்திக்கு போயிருப்பீர்கள். அல்லது கார் நின்று கொண்டிருந்த இடத்துவாசிகள் “போய் பார்ப்போமே” என்று அதை வேடிக்கை பார்த்து விட்டு அரக்க பரக்க ஆபிசோ, காலேஜோ, ஸ்கூலுக்கோ கிளம்பியிருபீர்கள்.

ஆனால் இதில் தெரியாமல் சம்பந்தபட்ட என்னுடைய பிரச்சினையை நான் யாரிடம்தான் சொல்ல முடியும்?

மாலை ஆறு மணி இருக்கலாம் ! கோவையில் பிரசித்தி பெற்ற ஆனால் நகரத்தை விட்டு தள்ளி இருந்த அந்த நட்சத்திர ஹோட்டலில் முற்றிலும் குளிர்சாதன வசதி பெற்றிருந்த இரண்டாம் தளத்தில் அமைந்திருந்த பிரமாண்டமான ஹாலில் “பார்ட்டி” களை கட்ட ஆரம்பித்திருந்தது. கலந்து கொண்டவர்கள் பெரும் பெரும் செல்வந்தர்கள், சென்னையில் வாசம் செய்திருந்தாலும் பிரத்யேக அழைப்பின் பேரில் வந்து கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், மற்றும் பல பெரிய தலைகள்..

போதும் இதோடு விட்டு விடுவோம். இனி அவர்களின் ஆட்டம் பாட்டம் நமக்கு அநாவசியம். நாம் கவனிக்க வேண்டியது அப்பொழுதுதான் உள்ளே வந்திருந்த ரமேஷ் என்னும் வாலிபனையும் அவனுடன் வந்த பெண்ணையும் கவனிப்போம்.

ரமேஷ் ஆறடிக்கும் குறையாமல் இருந்தான், தற்கால சினிமா கதாநாயகனுக்குரிய எல்லா அம்சங்களும் அவனிடம் இருந்தன. பார்ப்பதற்கு அழகான தோற்றமுடைய அவனை அங்குள்ளவர்களின் கண்கள் மொய்ப்பது இயற்கைதானே. அவனும் உள்ளூர அதைத்தான் விரும்புகிறான். அதோ கதாயாகியாக திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீலதா யாரோ ஒருவருடன் வந்திருந்தாலும், அவளது கண்கள் இவனைத்தான் மொய்த்து கொண்டிருந்தது. இப்படி ஆண்கள் அனைவரும் பெருமூச்சுவிட்டு பார்த்துக்கொண்டிருக்க அவரவர்கள் பக்கத்தில் இருந்த திரையுல, மற்றும் பெரிய புள்ளிகளின் கம்பானியன்களாக தற்சமயம் நியமிக்கப்பட்டு வந்துள்ள இள வயது பெண்கள், அனைவரின் பார்வையும் அவனைத்தான் சுற்றி வந்தன. இதற்கும் இவன் இன்னும் திரையுலகில் அதிகமாக சாதிக்கவில்லை. இருந்தாலும் ஒரு சில படங்களில் தலை காட்டியதால், பல கதாநாயகர்களில் கண்களின் தூக்கத்தை கெடுத்து கொண்டுதான் இருக்கிறான்..

அவனுடன் ஒரு பெண் ஒட்டியபடி வந்திருந்தாள். அவள் யார் என்று அதிகமாக அங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை. என்றாலும் பல பெண்களின் பொறாமை கலந்த பார்வையை அவள் சந்திக்கவேண்டியிருந்தது. அதை விட வேடிக்கை அந்த பெண்  பார்ப்பதற்கு சற்று கண்ணியமாக காணப்பட்டாள். இவன் அந்த பெண்ணின் காதில் ஏதோ சொல்ல அவள் சற்று சிரித்து அவனை விட்டு விலகினாள். அவன் இப்பொழுது அந்த பிரபலங்களின் கூட்டத்துக்குள் தன்னை நுழைத்த்துக்கொள்ள அவனை சுற்றி “மொய்’ ‘மொய்’ என்று இளம் பெண்கள் கூட்டம்.

அந்த பெண் அதை பற்றி கவலைப்படாமல் ஹாலின் ஓரத்தில் இருந்த மேசையை நோக்கி சென்று அங்கிருந்த ஒரு நாற்காலியில் தன்னை இருத்திக்கொண்டு நடப்பவைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

அந்த கூட்டத்துக்குள் அத்தனை பேர் இருந்தாலும், அனைவரையும் தொட்டு உரசி “எக்ஸ்கியூஸ் மீ’ என்று சொல்லி லாவகமாய் நடந்து செல்லும் பாக்கியம் படைத்த நான் தற்பொழுது அந்த பெண்ணை நோக்கி போகிறேன். ( நீங்கள் பொறாமை படுவது தெரிகிறது, சற்று பொறுங்கள் அப்படிப்பட்ட பாக்கியம் பெற்ற என் தொழிலை பற்றி தெரிந்து கொள்ளலாம் )

எக்ஸ்கியூஸ் மீ மேடம் நீங்கள் என்ன சாப்பிடுகிறீகள்? “ஹாட் இல்லை கூல்” குரலில் வெண்னையை தடவினேன். சற்று என்னை உற்றுப்பார்த்தாள் (நானும் ஓரளவுக்கு பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறேன்) என்ன செய்ய என் சீருடை எனக்கு இடைஞ்சலாகி விடுகிறது. சர்வர் “ஷம்பெய்ன்” ஜஸ்ட் ஸ்மால் “சைகையால் விரலை குறுக்கி காட்டினாள். எனக்கு ஆச்சர்யமில்லை, பார்ப்பதற்கு திருத்தமாய் இருந்தாலும் இந்த மாதிரி இடத்தில் எதை பருக வேண்டும் என்று தெரிந்து கொண்டிருக்கிறாள். “ஹாட்” நாட் நெளவ்” தலையை திருப்பிக்கொண்டாள்.

எனக்கு அவளிடம் சற்று நேரம் நின்று பேச வேண்டும் என்று தோன்றியது. காரணம் தெரியவில்லை. செண்டிமெண்டலா? பார்ப்பதற்கு சேலை கட்டி பாந்தமாய் இருப்பதாலா? இருந்தாலும் கட்டழகன் ரமேஷுடன் வந்திருக்கிறாள். அவனுடன் என்னை பொருத்தி பார்த்தால் நான் எல்லாம் ஜுஜுபி.. இருந்தாலும் மனம் கேட்க மறுக்கிறதே. கொண்டு வந்து கொடுத்த ஷாம்பெய்னை வாங்கியவள் “தேங்க்ஸ்” ஒற்றை வார்த்தையுடன் முடித்துக்கொண்டு சற்று தள்ளி நகர்ந்து தலையை கவிழ்த்து உட்கார்ந்து கொண்டாள்.

இனி நான் நகர்வதுதான் நல்லது, மறுபடி அந்த கூட்டத்துக்குள் நுழைந்து கேட்பவர்களுக்கு வேண்டியதை கொடுத்து பசியாற்றினேன். (தப்பு தப்பு அவர்களின் போதை மயக்கத்தை தூண்டிவிட்டேன்)

எல்லாம் முடிய இரவு மணி இரண்டை தாண்டி விட்டது. நானும், என்னைப்போல் பத்து பதினைந்து பேர்கள் எங்கள் முதலாளியின் முன் நின்று கொண்டிருந்தோம்.. (நட்சத்திர ஹோட்டலின் முதலாளிதான் ). “ஒ கே பாய்ஸ்” இந்தாங்க உங்களுக்கு என்று அந்றைய பார்ட்டியில் உழைத்ததற்கு என்று எங்களுக்கு பேசிய தொகை “ஒரு கட்டை” எடுத்துப்போட அதை லாவகமாய் பெற்று கொண்ட நாங்கள் மிக்க சந்தோசமாய் வெளியே வந்தோம். எப்படியும் ஆளுக்கு இரண்டாயிரம் பக்கம் வரும் மனக்கணக்குடன் இருந்தேன். அங்கேயே எங்கள் அணித்தலைவன் “பூபால்” பணத்தை பிரித்து கொடுத்தான். அவன் அந்த நட்சத்திர ஓட்டலில் பணியாள். இதுமாதிரி பெரிய பார்ட்டி நிகழ்ச்சிகளுக்கு எங்களை கூப்பிடுவான். (இதற்கு தனியாக அவனுக்கு கவனிப்பு கொடுக்க வேண்டும். என்னிடம் கேட்கமாட்டான். காரணம் நான் அவன் சற்று தள்ளிய சொந்தம்)

அப்பாடா ஒரு வழியாக அறிமுகம் முடிந்தது. இரண்டு மணிக்கு மேல் அந்த நட்சத்திர ஓட்டலை விட்டு வெளியே வந்தவர்கள் ஆளாளுக்கு கொண்டு வந்திருந்த வண்டிகளில் ஏறி பறந்து விட்டனர். நான் மட்டும் அந்த நேரத்தில் எப்படி போவது என்று விழித்து பார்த்தேன்.

என் அருகில் ஒரு விலையுயர்ந்த கார் என்னை உரசுவது போல நின்றது. “ஓட்டும் நிலையில் முன்னால் அமர்ந்திருந்த அந்த பெண் (அடடா திருத்தமாய் இருந்த அந்த பெண்தான்) வேர் ஆர் யூ கோயிங் ? ஆங்கிலத்தில் கேட்க நான் திகைத்து போனேன். அந்த பெண்ணுக்கு என்னை அடையாளம் தெரியுமா? பரவாயில்லை நீங்கள் போங்கள் என்று சொன்னேன்.( மனதுக்குள் ஏற்றிக்கொண்டால் நன்றாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு ) “கமான் மேன்” ஏறு, அந்த பெண் வலுக்கட்டாயமாய் என்னை ஏற்றிக்கொண்டாள். பின்புறமா, முன்புறமா? யோசிக்கும்போது முன்னாடி வா மேன், அவளின் அருமையான அழைப்புக்கு அடிபணியாமல் என்ன செய்வது?

ஆமாம் இவளுடன் வந்த அந்த ரமேஷ் எங்கே? இவள் மட்டும் தனியாக டிரைவிங் செய்து கொண்டு போகிறாள்? மனதுக்குள் சிந்தனை வந்தாலும் ஒன்றும் பேசாமல் அந்த வண்டிக்குள் இருந்த குளுமையால் சித்தம் மயங்கி இருந்தேன். வண்டி பறந்தது.

எங்கு போகிறாய் என்று கேட்கவில்லையே? எங்கு இறக்கி விட்டாலும் சரி மனதுக்குள் நினைத்துக்கொண்டவன் மேலும் என்ன பேசுவது என்று புரியாமல் உட்கார்ந்திருந்தேன். வண்டி அந்த நடு நிசி தாண்டிய வேளையில் காற்றாய் பறக்க அதன் வேகத்தை கண்டு பிரமிப்புடன் அவளை பார்க்க அவள் பார்வை நேர் கோட்டில் இருந்தது. மேடம்..மேடம் ஹூஹூம் அசைவே இல்லை. மை காட் தெளிவாய் இருக்கிறாளா? பயத்தில் முதுகுத்தண்டு ஜில்லிட என் கையை அவள் முகத்தின் முன்னால் ஆட்டினேன். “நோ..ரெஸ்பான்ஸ்” அப்படியானால் என் மூளை உயிர்ப்பெற சட்டென அந்த பெண்ணின் அருகில் உட்கார்ந்து அவள் கால்களால் அழுத்தி பிடித்திருந்த ஆக்ஸிலேட்டரை என் கால்களால் விடுவித்து கிளட்சை அவள் இன்னொரு காலின் மீதே வைத்து அழுத்து கியரை மாற்றி சமநிலைக்கு கொண்டு வந்தேன். இதை செய்வதற்கு எனக்கு இரண்டே நிமிடங்கள்தான் ஆயின என்றாலும் அதன் படபடப்பு ஆயுளுக்கும் மறக்காமல் இருந்தது..இப்பொழுது முழு கட்டுப்பாட்டிற்குள் வண்டி என் கைக்கு வர வண்டியை அப்படியே ஓரம் கட்டி நிறுத்தினேன்.

இத்தனை களேபரத்திலும் அந்த பெண்ணிடமிருந்து எந்த அசைவும் காணப்படவில்லை. இந்த அகால வேளையில் காரை நிறுத்தி அந்த பெண்ணை இறக்கி மாற்றுவது முடியாத காரியம். மூச்சு வருகிறதா என்று கையை கிட்டே வைத்து பார்த்தேன். வருவதற்கான அறிகுறிகளே காணப்படவில்லை. இது ஏதுடா வம்பாய் போயிற்று, சத்தமில்லாமல் இறங்கி போய் விடலாமா/ ஆம் அதுதான் சரி ஓசைப்படாமல் காரை விட்டு இறங்கியவன், சுற்று முற்றும் பார்த்தேன் ஒருவரும் தென்படவில்லை. இனி இங்கிருந்தால் அவ்வளவுதான், சட்டென பாதையை விட்டு விலகி சற்று ஓட்டமும் நடையுமான பார்ப்பவர்களுக்கு இயல்பாய் இருக்கும்படி நடக்க ஆரம்பித்தேன். மனசு பட படவென அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. கடவுளே, பெரிய கண்டத்திலிருந்து தப்பித்தேன். எப்படி தப்பித்தாய்? நாளை காலையிலோ அல்லது இன்னும் சற்று நேரத்திலோ கண்டிப்பாய் போலீஸ் உன்னை தேடி வரலாம். நீதான் அந்த பெண்ணை கொன்று விட்டாய் என்று. சே பேசாமல் போலீஸ் ஸ்டேசன் போயிருக்கலாமா? அவ்வாளவுதான், என்னையே குற்றவாளி ஆக்கி கேசை முடிவிடுவார்கள்..

அந்த பயத்தில் கிட்டத்தட்ட மூன்று ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து வந்த பின்னால்  படபடப்பு சற்று குறைந்தது போலிருந்தது. இனி பயமில்லை, அந்த பெண் யாரோ நான் யாரோ? மனது படபடப்பு குறைய காந்திபுரம் வந்து நூறடி ரோட்டை தொட்டு நான்கைந்து சந்துகள் கடந்து வந்து எனது அறைக்கதவை திறந்தேன். அதற்குள் தெருவில் ராஜாவாய் உலா வந்த நாய்களின் குரைப்பும் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே வந்தது.

காலையில் எழுவதற்கு நெடு நேரமாகிவிட்டது. தலையை வலித்தது. எப்படியோ காலை கடன்களை முடித்துக்கொண்டு பட பட வென கல்லூரிக்கு கிளம்ப ஆரம்பித்தேன், இங்கிருந்து மருதமலை அடிவாரம் போக வேண்டும். சட்டக்கல்லூரி, இறுதியாண்டு வேறு. முதலில் தினசரித்தாள் பார்க்க வேண்டும். ஏதாவது செய்தி வந்திருக்கிறதா? என்று. கல்லூரி நூலகத்தில் பார்த்துக்கொள்ளலாம் முடிவு செய்தவன் காந்திபுரத்திற்கு நடக்க ஆரம்பித்தேன். டவுன் பஸ் பிடிக்க.

கல்லூரி நூலகத்தில் பரபரப்பய் நுழைந்து பத்திரிக்கை புரட்டியதில் மூன்றாம் பக்கம் வலது ஓரத்தில்“மிகப்பெரிய தலைப்பில் “காரில் பெண் பிணமாய் கிடந்தார்”” யாரென்று தெரியவில்லை போலீஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறது”. அதன் விளக்கமாக ‘மர்ம கார்’ ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாறு பெண் ஒருவர் மரணமடைந்து கிடந்தார். இது இயற்கை மரணமா இல்லை கொலையா என்று போலீஸ் விசாரனை செய்து கொண்டுள்ளார்கள்.” இதை படித்தவுடன்,நெஞ்சில் பயம் வந்து உட்கார்ந்தது.

மணி மூன்றுக்கு மேல் ஆகி இருந்தது, இதைப்பற்றியே நினைத்து மதியம் ஒன்றும் சாப்பிடாத்தால் உடல். களைப்பாக இருந்தது. கடைசி வேளை அனுமதி கேட்டு விட்டு பஸ் ஏறினேன். காந்திபுரம் வந்தவுடன் “என் பாஸை” பார்த்து இதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்தவன் ஒரு மணி நேரம் தூக்கம் போட்டு விட்டு போகலாம் முடிவு செய்து அறைக்கு திரும்பினேன்.

பரசுராம் M.A,M.L. போர்டு மாட்டியிருந்த அலுவலகத்துக்குள் நுழையும்போதே இருட்டிவிட்டது. உள்ளே “டைப்படித்துக் கொண்டிருந்த குப்பண்ணன்” தலையை தூக்கி பார்த்து,என்ன இவ்வளவு லேட்? பார்வையால் கேட்க தலையை தொட்டு காட்டி வலி என்றேன் கிசு கிசு குரலில். போ பாஸ்” இரண்டுவாட்டி உன்னை கூப்பிட்டாரு. நான் பதற்றத்துடன் அவரது அறை கதவை தட்டினேன்., யெஸ்..சொன்னவுடன் அறைக்குள் தலையை எட்டி பார்த்தேன்.. வா வா உன்னைத்தான் தேடிகிட்டூ இருந்தேன். ஆமா அந்த ஆறாவது வீதி கடை விவகாரம் என்ன ஆச்சு? போய் பார்த்தியா? கேஸ் கொடுத்தவன் கோர்ட்டுக்கு போகாம முடிச்சு கொடுக்க சொல்றான்.

சாரி சார் இப்பவே போய் பார்க்கறேன். ஏன் நேத்தே போக சொன்னேனே? சார் நேத்து ஒரு பார்ட்டிக்கு கூப்பிட்டாங்க தலையை சொறிந்தேன்.

இங்க பாரு நான் கொடுக்கற சமபளம் பத்தாது, அதனால உன்னைய வேற வேலையும் பாத்துக்க சொன்னேன், இல்லேங்களை, அதுக்கோசரம் உன்னுடைய தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் இது. தெரியுதா? போகாம இருந்திருக்கே ? மிரட்டினார் ( சும்மாத்தான், என் மீது அளவு கடந்த அன்பு ). அவரும் என்னைப்போல கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்து “லா” முடித்து முன்னேறியவர்.

சரி சார் இப்பவே போறேன். சொல்ல வந்த விஷ்யத்தை அப்புறம் சொல்லிக்கொள்ளலாம். முடிவு செய்து நடையை கட்டினேன். நில்லு நில்லு..உங்கிட்ட இன்னொரு விசயம்? நேத்து நைட்டு ஒரு கார் அநாதையா நின்னுகிட்டிருந்துச்சு. அதுல ஒரு பொண்ணு இறந்து கிடந்துச்சுன்னு நியூஸ் வந்துச்சே பாத்தியா? ம் என்று பயத்துடன் தலையாட்டினேன். அந்த பொண்ணு ரமேஷ் அப்படீங்கறவரோட ஹோட்டல்ல பார்ட்டியில கலந்துகிட்ட பொண்ணாம். அதனால பொலீஸ் அது விசயமா ரமேஷை போலீஸ் எங்கொயரிக்கு கூப்பிட்டிருக்காங்களாம், ரமேஷை தெரியுமா? அதாம்ப்பா கோயமுத்தூருல இருந்து போயி பட்த்துல நடிச்சிகிட்டு இருக்கானில்லை.. நான் தெரியாது என்று தெரிந்தே தலையாட்டினேன். சரி பரவாயில்லை.அவன் நாளைக்கு என்னைய கூப்பிட்டிருக்கான், நாளைக்கு என் கூட வர்றியா?, காலேஜுக்கு லீவு போட்டுடு, போலீஸ் “என்கொயரிய அட்டெண்ட் பண்ணினா” உனக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்..

முகத்தில் இரத்தம் பாய பயத்துடன் குனிந்து கொண்டே தலையாட்டினேன்.  என் முகம் போன போக்கை அவருக்கு காட்டி என்னையே காட்டிக்கொடுக்க நான் தயாராகவில்லை.

மறு நாள் எப்படி தயாராகி அவருடன் சென்றேன் என்பதே எனக்கு தெரியவில்லை. மனதில் பயம் கலந்த நடுக்கத்துடனே ரமேசுடன் போலீஸ் அலுவலகம் சென்றோம்.. போலீஸ் விசாரணையில் அவன் தெளிவாக சொன்னான். அந்த பெண்ணை கம்பெனிக்காக அந்த பார்ட்டிக்கு கூட்டிச்சென்றேன்,

சென்னையில் இதே போல் ஒரு பார்ட்டியில் அறிமுகமானாள், மும்பையிலிருந்து இங்கு வந்திருக்கிறேன் என்று சொன்னாள். அவள்தான் எனக்கு போன் செய்து இந்த பார்ட்டிக்கு வருகிறாயா என்று கூப்பிட்டாள் வருவதாக கூறினேன்.. தனித்தனியாக அவரவர்களின் காரில்தான் வந்தோம். இறங்கி உள்ளே வந்தவுடன் என்னை போய் என்ஞ்சாய் பண்ணு”  நான் உட்கார்ந்து இரசிக்கிறேன் என்று ஒதுங்கிக்கொண்டாள். அவ்வளவுதான், மற்றபடி அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை.

இரவு பனிரெண்டுக்கு நான் போவதாக கூறினேன். நீ போ நான் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று சொன்னதால்  நான் அப்பொழுதே கிளம்பி விட்டேன். சாட்சிக்கு வேண்டுமானால் அந்த கேட் செக்யூரிட்டியிடம் கேட்டுக்கொள்ளுங்கள், நான் கிளம்பும்பொழுது அவன் என்னை பார்த்து கை கூட அசைத்தான்.

இவன் போலீசிடம் விவரங்களை தெரிவிக்கும்போது நானும், பாஸும் அருகில்தான் உட்கார்ந்திருந்தோம். எனக்கு எங்கே என்னை அவன் அடையாளம் கண்டு கொள்வானோ என்று  மனம் திக் திக் என்று அடித்துக்கொண்டது. கடைசியாக “கேட் செக்யூரிட்டியை” கேளுங்கள் என்று சொன்னது என் காதில் பெரிய இடியாய் விழுந்தது.

அடடா அந்த பெண் என்னை ஏற்றி செல்லும்போது செக்யூரிட்டி பார்த்துக் கொண்டுதானே இருந்திருப்பான். என்னை கண்டிப்பாய் அடையாளம் கண்டு கொள்வான். இப்பொழுது என்ன செய்வது மனம் பரபரத்தது. எப்படா இந்த விசாரணை முடியும், இங்கிருந்து போகலாம் என்று துடித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக விசாரணை முடிந்து மறுபடி அழைக்கும்போது வரவேண்டும் போலீசார் ரமேஷிடம் சொல்லிவிட்டு கிளம்பினர். நாங்களும் அலுவலகம் வந்டைந்தோம். வந்தவுடன் பாஸை அலுவலக்த்தில் விட்டு விட்டு சார் நான் கிளம்பட்டுமா? கேட்டவனை கொஞ்சம் உள்ளே வா, அழைத்துக்கொண்டு சென்றார்.

நாற்காலியில் உட்கார்ந்தவர் நான் நிற்பதை பார்த்து உட்கார் என்றார். அவர் குரலில் இருந்த கட்டளை என்னை சட்டென உட்கார வைத்தது சொல்லு என்ன பிரச்சினை?

பிரச்சினை?, வியப்பாய் முகத்தை காட்ட (முயற்சித்தேன்) அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை சார்

முட்டாள் உன் முகத்தை கண்ணாடியில் பார். சொல்லு என்ன பிரச்சினை?

சார் இப்பொழுது மெதுவாய் குரல் இழைக்க ஆரம்பித்த்து.

நான் அந்த ரமேசை போலீஸ் விசாரிக்குபொழுது உன் முகத்தை கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். அது போன போக்கை பார்த்து உனக்கு இதில் ஏதோ சம்பந்தம் இருக்கும்னு தோன்றி விட்டது. உண்மையை சொல், ரமேஷ்  சொன்ன பார்ட்டிதான் நீ போன பார்ட்டியா?

அதற்குமேல் என்னால் நிலை கொள்ளமுடியவில்லை. நடந்தது அனைத்தும் சொல்லி விட்டேன்.

அரைமணி நேரம் நான் சொன்ன அத்தனையும் உன்னிப்பாய் கேட்டுக்கொண்டிருந்தவர், நான் முடித்த பிறகும் யோசிப்பதை நிறுத்தவில்லை. தன் தாடையை தடவிக்கொண்டே இருந்தார்.

நீ அவள் காரில் ஏறும்பொழுது அவள் நன்றாக இருந்தாளா?

நன்றாக இருந்தாள் என்று சொல்ல முடியவில்லை, போதையில் இருந்தது தெரிந்தது, என்னை அந்த உடையில் பார்த்தவளுக்கு நான் வேறு உடை மாற்றியபின் எப்படி அடையாளம் தெரிந்திருக்க முடியும். போதை மயக்கத்தில்தான் என்னை ஏறும்படி பிடிவாதம் பிடித்தாள் என்று நினைக்கிறேன்.

ம்..ம்…வண்டியில் ஏறியபின் வண்டி தடுமாறியதா/ இல்லை சார் நன்றாக போய்க்கொண்டிருந்தது, பத்து நிமிடம் கழித்து வேகம் கூடிய பின்னால்தான் நான் அவள் முகத்தை பார்த்தேன். அதன் பின்னால்தான் இப்படி….

நீ காரை விட்டு இறங்கும் போது யாராவது உன்னை கண்காணிப்பதாக உனக்கு தோன்றியதா? இல்லை உள்ளுணர்வு சொல்லுமே, அந்த மாதிரி உனக்கு தோன்றியதா?

அந்த பதட்டத்தில் அதை எல்லாம் பார்க்கமுடியவில்லை சார், இடத்தை விட்டு ஓடினால் போதும் என்றுதான் இருந்தேன்.

சரி..கொஞ்சம் பொறு இதை போலீசிடம் கொண்டு போகலாம். சார் மெல்ல இழுக்க, கவலைப்படாதே “அன் அபிசியலா” முதலில் தகவல் கொடுத்து விடுவோம். என் நண்பனுக்கு போன் செய்கிறேன். அடித்த நம்பர் போலீஸ் கமிசனரின் அலுவலகத்துக்கு என்பது நம்பரை வைத்து புரிந்து கொண்டேன்.

தொடர்பில் அவர் கிடைத்தவுடன் இருவரும் பேசிக்கொண்டனர். பத்து நிமிடம் பேசிவிட்டு சரி வா என்று அழைத்து சென்றார்.

பார்த்தால் போலீஸ் அலுவலகம் போல் தெரியாவிட்டாலும் அங்கு அமர்ந்திருந்த ஒரு இளைஞனின் தோற்றமே அந்த துறையை சேர்ந்தவன் என்று காட்டிக்கொடுத்தது.

என் பெயர் “முஸ்தபா” பரசுராமிடம் கையை குலுக்கினார். கமிஷனர் உங்களை பார்க்க சொன்னார். பரசுராம் என்னை அறிமுகப்படுத்தினார்.

இவன் சட்டக்கல்லூரி மாணவன், என்னுடைய ஆபிசுல “பார்ட் டைமா” வேலையும் செய்யறான், அது போக “ஸ்டார் ஹோட்டல்ல” நடக்கற பெரிய பார்ட்டிகள்’ல கூப்பிட்டாங்கன்னா பேரர் வேலைக்கு போவான். அன்னைக்கு நடந்த பார்ட்டியில இவன் வேலை செஞ்சிருக்கான். மத்ததை இவர்கிட்டே சொல்லு.

முஸ்தபா எதிரே என்னை உட்கார வைத்தவர் பயப்படாமல் நடந்ததை சொல்லு என்று சொல்லி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். நான் மீண்டும் அங்கு நடந்த நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன்.

மறு நாள் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தவன் கதவை யாரோ தட்டுவதை கேட்டு திறந்திருக்கும் கதவை யார் தட்டுவது என்று பார்த்தேன். சட்டென முகம் கலவரமானது. நேற்று பார்த்த அந்த அதிகாரி நின்று கொண்டிருந்தார்.

என் முகம் போன போக்கை பார்த்தவர் “ஏய் பையா கூல் நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன். காலேஜூக்கு டைம் ஆச்சா? ஒரு பத்து நிமிசம் என் கூட வர்றீயா? சட்டென அவர் முகம் பார்த்தேன். முகம் புன்னகையுடன் இருந்தது. போலீஸ் என்றாலே கொஞ்சம் உதறல்தான். என்றாலும் இவரிம் முகம் அப்படி தெரியவில்லை. அவருடன் கதவை சாத்தி விட்டு நடந்தேன்.

காரை அமைதியாக ஓட்டிக்கொண்டு வந்தார் முஸ்தபா. .அவரின் மெளனம் பொறுக்காமல் சார் அந்த பொண்ணூ யாருன்னு கண்டு பிடிச்சுட்டாங்களா?

அந்த பெண் மும்பையை விட்டு சென்னைக்கு வந்து இரண்டு மாசம் ஆச்சாம், ஒரு துணிக்கடை மும்பையில வச்சு நடத்தி வந்திருக்கிறாள். சென்னையில் ரமேஷ் கிட்டே நட்பாயிருந்திருக்கிறாள். என் திருப்திக்கு சொன்னாரா என்று தெரியவில்லை.

சார் பாரன்சிக் ரிப்போர்ட் என்ன சொல்லுது?

சட்டென என் முகத்தை பார்த்து  “குட்” .உடலில் பாயிசன் இருந்திருக்கிறது., இரண்டு மணி நேரத்துக்கு முன்னாலதான் சேர்ந்திருக்கு.

சார் என்னால முடிஞ்ச உதவிய உங்களுக்கு செய்யறேன் சார், பணிவுடன் சொன்னேன்.

அவர் சிரித்தார், உனக்கு இது ஒரு அனுபவம் இல்லையா? ஆம் என்று தலையசைத்தேன், அன்னைக்கு அந்த கார்ல இருந்து தப்பிச்சது கூட இன்னுமே என்னால நம்ப முடியலை.

சரி உன்னை இறக்கி விட்டுட்டு போறேன், காலேஜுக்கு டைம் ஆச்சு.

நன்றி சார்..மகிழ்ச்சியுடன் இறங்கியவன், சார் இந்த கேசுல் என்னையும், உங்களோட சேர்த்துக்குங்க சார.

கண்டிப்பா…. அந்த பையன் பேர் என்ன சொன்ன?  ம்…..பூபால் நாளைக்கு நீ காலேஜ் கிளம்பறதுக்கு முன்னாடி அவனை. இந்த இடத்துக்கு கூட்டிட்டு வா ஒரு விசிட்டிங்க் கார்டை கொடுத்தார். அது அவரது வீடாய் இருக்கவேண்டும். படித்து பார்த்தேன், பீளமேட்டில் இருந்தது.

பூபாலன் முஸ்தபாவின் முன்னால் உட்கார்ந்திருந்தான். இவங்க எல்லாம் உங்கிட்ட இருந்து பணத்தை வாங்கிட்டு போன பின்னால நீ என்ன பண்ணினே?

சார், நான் அந்த பார்ட்டி முடிஞ்ச இடத்தை “ஹவுஸ் கீப்பங்” ஆளுகளை வச்சு கிளீன் பண்ண வைச்சேன் சார், மறு நாள் இன்னொரு “பங்சன்” அங்க நடக்க இருந்துச்சு சார்.

இந்த பொண்ணு எத்தனை மணிக்கு வெளியே போச்சு?

தெரியலை சார்..ஒரு நிமிசம் சார்,. என் கூட வேல செஞ்ச ஒருத்தன் இருக்கான் அவன் பேர் பாபு, அவன் நாங்க உள்ளே இருக்கும்போது வெளியே யார் கூடயோ பேசிகிட்டு இருந்தான் சார், நான் அங்கிருந்தே கேட்டேன், யார் பாபுன்னு? வந்து சொல்றேன்னு சொன்னான் சார்.

மறு நாள் பாபுவை அழைத்து விசாரிக்கையில் சார் பார்ட்டி எல்லாம் முடிஞ்சு இந்த லேடி மட்டும்  உட்கார்ந்து தலையை டேபில்ல கவுந்து கிட்டு கிடந்தாங்க சார், நான் தான் மேடம் லேட்டாயிடுச்சு, போயிடுவீங்களா அப்படீன்னு கேட்டேன், அவங்க மெதுவா தள்ளாடி தள்ளாடி போனாங்க, நான் கீழே விழுந்துடுவாங்களேன்னு பின்னாடியே போனேன். அவங்க கீழ கிரவுண்டுல நின்னுகிட்டு இருந்த கார் கதவை திறந்து உட்கார்ந்து வண்டி கேட்டுகிட்ட போற வரைக்கும் பார்த்தேன் சார்.

 அப்ப கார் எப்படி போச்சு?

சார் சும்மா சொல்லக்கூடாது, அந்தம்மா கார்ல எறின வரைக்கும் தான் தள்ளாடினாங்க, ஆனா வண்டியை ரிவர்ஸ் எடுத்து ஒடிச்சு திருப்பறப்ப அவ்வளவு கரெக்டா போனாங்க, மத்தவங்களா இருந்தா இரண்டு முறை முன்ன பின்ன போய்தான் திரும்புவாங்க, ஆனா இவங்க ஒரே திருப்புல போயிட்டாங்க.

  அங்கிருந்து மெயின் கேட்ட பார்க்க முடியுமா?

முடியாது சார் முன்னாடி இருக்கற  மரங்களோட கிளைகள் மறைச்சுக்கும்.

   காருக்குள்ள ஏறும்போது வண்டிக்குள்ள யாராவது இருக்கற மாதிரி? இல்லை ஏதாவது அசைஞ்ச ,மாதிரி இருந்துச்சா? ஒண்ணும் தெரியலை சார்

   இரண்டு நாட்கள் கழித்து என்னையும் அழைத்துக்கொண்டு சென்றவர் அந்த நட்சத்திர ஓட்டலின் கேட் செக்யூரிட்டியிடம் விசாரித்தார்.. அவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. சார் அந்தம்மா கொஞ்சம் போதையில இருந்த மாதிரிதான் இருந்துச்சு. கேட் முன்னாடி வெளியில் நின்னுகிட்டிருந்த ஒரு பையனை வண்டியில ஏறு ஏறுன்னு சொல்லிகிட்டிருந்தாங்க, அப்புறம் அந்த பையன் ஏறுன பின்னாடி கார் வேகமாக போச்சு, அதுக்குள்ள பின்னாடி ஒரு கார் வெளியில போக வந்ததுனால நான் இந்த பக்கம் திரும்பிட்டேன்.

பின்னாடி போன கார் எந்த பக்கம் போச்சு?

அவங்க போன பக்கம்தான் போச்சு?

திரும்பி என்னை பார்த்தவர் நீ இறங்கி பாக்கறப்ப வண்டி ஏதாவது தென்பட்டுச்சா?

இல்லை சார் மறுத்தேன் கண்ணுக்கு எட்டின தூரம் எதுவும் தெரியலை.?

கொஞம் யோசனையுடன் பின்னாடி போன கார்ல யார் போனாங்கன்னு தெரியுமா?

ஒரு ஆளும், ஒரு பொண்ணும் இருந்தாங்க சார்.

தட்ஸ் குட், தலையை ஆட்டிக்கொண்டமுஸ்தபா, சரி வா போகலாம் என்று அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தார்.

இப்பொழுது நாங்கள் இருவரும் அந்த பார்ட்டி நடந்த ஹாலில் நின்று கொண்டிருந்தோம். அந்த பெண் எங்கு உட்கார்ந்திருந்தாள்?

நான் அவள் இருந்த இடத்தையும், நான் எப்படி அங்கு வந்து அவளிடம் பேசினேன் என்பதையும் சொல்லி காட்டினேன்.

     அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து பதினைந்து அடி தூரத்தில் கழிவறை ஒன்று இருந்த்தை பார்த்தவர் அதுவரை நடந்து சென்றார். பின் அவள் உட்கார்ந்திருந்த இடம் வரை நடந்து வந்தவர் சற்று உன்னிப்பாய் கீழே பார்த்தார்.கூடவே வந்த பூபால் சார் ஒரு “பக்சன்” முடிஞ்சுதுன்னா.சுத்தமா தரைய கூட்டி கழுவிடுவோம். இதை கேட்டதும் சற்று ஏமாற்றமடந்தவர் போல் தென்பட்டார்.

இருவரும்  இப்பொழுது அவரது அலுவலக அறையில் அமர்ந்திருந்தோம். சற்று நேரத்தில் ஒரு காவலர் உள்ளே வந்து விசிட்டிங்க கார்டை நீட்ட வாங்கி பார்த்து வரச்சொல் என்றார். . . 

வந்தவர் ஒரு கவரை இவரின் கையில் கொடுக்க வாங்கி பார்த்தவர் முகம் சற்று பிர்காசமாய் ஆனது. இப்படித்தான், இப்படித்தான் சொல்லியபடி அவர் தலை ஆடியது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் முகத்தையும் அதில் தெரியும் மாற்றங்களையும் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

வா அந்த நட்சத்திர ஓட்டலுக்கு போகலாம் சொன்னவர் அந்த பாபு சொன்ன ஆள் எந்த இடத்திலிருந்து அந்த பெண் காரை எடுத்த்தாக சொன்னான். அவள் கார் எடுத்த இடத்திலிருந்து வண்டி திரும்பி கேட்டை அடைய இருநூறு மீட்டர் செல்ல வேண்டும். ஆனால் ஹாலில் இருந்து பார்த்தால் அந்த கார் சற்று நின்று சென்றிருந்தாலும் தெரியாது, என்னிடம் சொன்னவர் மறுபடி அந்த பையனிடம் அந்த பெண் எத்தனை மணிக்கு அங்கிருந்து கிளம்பினாள்/ மணி 2.30 இருக்கலாம் சார். மீண்டும் கேட் செக்யூரியிட்டிடம் அதே கேள்வியை கேட்க அவர் 2.40 என்று எழுதியிருந்த்தை காட்டினார்.

 . என்னிடம் நீ எத்தனை மணிக்கு ஏறினாய்> நான் சற்று தடுமாறியபடி 2.30 க்கு மேலதான் இருக்கும் சார்.

  அப்படியானால் வேகமாக வந்த வண்டி கேட்டை அடைய பத்து நிமிடம் என்றால் அது அதிகமல்லவா?

இப்பொழுது சி.சி டி.வியை நோண்டி பார்க்கலாம். அதில் இவர்களில் ஆட்டம் பாட்டம் எல்லாம் நடப்பதையும் அதன் பின்னால் இவள் டேபிளில் இருந்து எழுந்து நடந்து செல்வதையும் கார் கிளம்பும் வரை தெரிந்த்து. அதன் பின்னால் ஒன்றும் தெரியவில்லை.

செக்யூரியிட்டிடம் அவர்கள் பின்னால் சென்ற கார் எத்தனை மணிக்கு உள்ளே வந்தது? என்று விசாரித்தார். அவர்கள் எழுதி வைத்திருந்த நோட் புத்தகத்தை பார்த்து சார் இராத்திரி பத்து மணிக்கு வந்திருக்கு சார். அவர்கள் கார் எங்கு நின்றது என்று சி.சி.டி.வி காமராவில் பார்த்தார்கள். ஆனால் அது எங்கு நின்று கொண்டிருந்தது என்பதை பார்க்க முடியாமல் இருந்தது.

அப்படியானால் காரை நிறுத்தியவர்கள் அந்த ஓட்டலில் எங்கெங்கு கண்காணிப்பு கேமரா இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

இறந்து போன பெண்ணின் வீட்டுக்கு என்னையும் அழைத்துக்கொண்டு சென்றார்.. நல்ல வசதியான வீடு..  பங்களா என்று சொல்லலாம் வீட்டுக்குள் வட இந்திய பெண்கள் நான்கைந்து பேர் உட்கார்ந்து ஏதோ பேசிகொண்டிருந்தனர்.  இருவரும் அறிமுகப்படுத்திக்கொண்டதும் மோத்தி, மோத்தி என்றழைத்தவுடம் உள்ளிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள். அவளை பார்த்தவுடன் எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவளின் தோற்றம் அன்று என்னை ஏற்றிச்சென்று இறந்து போன பெண்ணை போலவே இருந்த்து.

நாங்கள் அறிமுகப்படுத்திக்கொண்டதும் அந்த பெண் என்னை சிநேகிதாமாய் பார்த்து சிரித்து எல்லாம் எங்கள் விதி என்று விரக்தியாய் சொன்னாள்.

நல்ல வசதி, சொந்தமாய் மும்பையில் மூன்று கட்டிடங்கள், எல்லாம் இருந்தும், இங்குதான் வந்து வசிக்கவேண்டும் என்று வந்து விட்டாள். திருமணமே வேண்டாம் என்று இருந்திருக்கிறாள்…

நீங்கள்? நான் அவளது சித்தப்பா பெண். நாங்கள் வசிப்பது மும்பையில். விஷயம் கேள்விப்பட்டு இங்கு வந்தோம். அடுத்த வாரம் கிளம்பி விடுவோம்.

மற்றபடி வேறு விவரங்கள் எதுவும் பெயரவில்லை. கொஞ்சம் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கம் உண்டு என்பது மட்டும் கிடைத்தது.

ஆனால் உங்கள் சகோதரி வந்த கார்? அது போலீஸ் கஸ்டடியில் இருக்கிறது. விடைபெற்று வெளியே வந்தவுடன் தனது காரை சற்று ஒதுக்கி மறைவாக நிறுத்தினார் முஸ்தபா.எதையோ எதிர்பார்த்து காத்திருப்பவர் போல் இருந்தார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் ஏன் இங்கு வண்டியை நிறுத்தியிருக்கிறார் என்று திகைத்து உட்கார்ந்திருந்தேன்

திடீரென அவர் முகம் பரபரப்படைவதும், வண்டியை மிக மெதுவாக இயக்கினார்.. அப்பொழுது அந்த பங்களா வாசலிலிருந்து நீல நிற கார் ஒன்று வெளியேறியது. முஸ்தபா அந்த காரை பின் தொடர்ந்தார்,

முன்னால் சென்ற கார் பாரஸ்ட் கல்லூரி வழியாக சென்று வடவள்ளி செல்லும் பாதைக்கு வந்து வேகமெடுக்க, முஸ்தபா சந்தேகம் வராமல் அந்த காரை பின் தொடர்ந்தார்.

வடவள்ளி தாண்டி சற்று தயங்கி பாதைக்கு வலது புறம் திரும்பி அங்கிருந்த மண் பாதை வழியாக உள்ளே சென்றது. முஸ்தபா சற்று யோசித்தவர் அதே பாணியில் தனது காரையும் திருப்பி மண் பாதையை அடைந்த பொழுது முன்னால் சென்ற கார் காணாமல் போயிருந்தது.

எங்கு போயிருக்கும்? ஒரு கணம் திகைத்தாலும் வண்டி மெதுவாக நகர்த்தியபடி இரு பக்கமும் பார்த்தார். வலது புறம் நான் பார்த்துக்கொண்டு வர அவர் இடது புறமாய் பார்த்துக்கொண்டு வந்தார். நான் மூன்றாவது சந்தில் முன்னர் சென்ற கார் ஒரு பங்களா வாசலுக்குள் நுழைவதை பார்த்தவன் சார் அந்த கார் இங்க போகுது.

 சட்டென காரை மெதுவாக்கியவர். கொஞ்சம் தள்ளி ஒரு மறைவான இடத்தில் கொண்டு போய் நிறுத்தி விட்டு நீ இங்கேயே உட்கார்ந்து என்ன நடக்கிறது என்று கவனி. நான் அந்த பக்கம் போய் வருகிறேன். இறங்கியவர் அந்த சந்திற்கு முன்புறம் ஒரு சலவைக்கார்ர் துணி தேத்துக்கொண்டிருப்பவரிடம் செல்வது, “காரின் சைடு மிர்ரர் வழியாக எனக்கு தெரிந்த்து. 

அரை மணி நேரமாய் உட்கார்ந்திருக்கிறேன். போனவர் இன்னும் வரவில்லை. மிர்ர்ர் வழியாக பார்த்த்தில் அந்த சலவைக்கார்ர் மட்டும் இருந்தார். இவர் எங்கே போனார்? ஆரம்பத்தில் சுறுசுப்பாய் அங்கும் இங்கும் கண்கானித்துக்கொண்டிருந்தவன் கொஞ்ச நேரத்தில் சலிப்புற்று கொட்டாவியுடன் பொழுதை ஓட்ட ஆரம்பித்து கண்களும் செருகிக்கொள்ள ஆர்மபித்தன..

கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் கழிந்திருக்கலாம். கார் கதவு திறக்கும் சத்தம் கேட்டே கண் விழித்தேன். தூக்கமா? எனக்கு வெட்கமாக போய் விட்டது. சாரி சார்.. நேத்து கொஞ்சம் லேட்டா தூங்கினேன்.

மறு நாள் கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த போது முஸ்தபாவிடமிருந்து அழைப்பு, ஐந்து நிமிடம் வந்து விட்டு போகமுடியுமா? வர்றேன் சார்.. சட்டென கிளம்பினேன்.

அவர் வீட்டை அடைந்த போது எனக்காக காத்திருந்தார். இங்கு பார் என்று சில போட்டோக்களை காட்டினார். அதில் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்களாக இருந்தன. ஒவ்வொன்றாய் எடுத்துப்போட அட..ஒரு போட்டோவில் நான் அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தபடி இருந்தது. சார், இது எப்படி கிடைச்சுது? வியப்புடன் கேட்டேன். அதைப்பற்றி இப்போ வேண்டாம். இப்ப நல்லா கவனி இந்தம்மா காதுல தெரியறது என்ன?

“தொங்கு கம்மல்”  காதின் நுனியை விட்டு சற்று நீட்டிக்கொண்டிருந்தது. ஆனால் வேலைப்பாடாய் இருந்தது. இந்த கம்மல் உன் கவனத்தை கவர்ந்ததா?

நான் “சாரி சார்” கவனிக்கலை. என்றேன். சரி இதைப்பார், என்று மற்றொரு புகைப்படக்கட்டை எடுத்து போட்டார். அதில் காரில் இறந்த பெண்ணின் போட்டோ விதம் விதமாய் படமாக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு போட்டோவை காட்டி இப்பொழுது கவனி ! என்ன தெரிகிறது.                 அந்த பெண் உட்கார்ந்த நிலையிலேயே இருப்பது மட்டும் எனக்கு தெரிந்தது. ஒன்றும் தெரியவில்லை சார்.

அவள் காதை கவனி. ஆம் காதில் பொட்டு போன்ற சிறிய கம்மல் மட்டும் தெரிந்தது. அப்படியானால்? நான் வியப்புடன் அவரை பார்க்க, நீ கல்லூரிக்கு கிளம்பு மாலை பார்க்கலாம்

சார்…… எனக்கு பொசுக்கென்று ஆகிவிட்டது. சார் இன்னைக்கு லீவு போட்டு விடுகிறேன். நோ..இன்னும் ஒரு சில முடிவுகள் எடுக்க வேண்டி உள்ளது. மாலை வா. இப்போ காலேஜுக்கு கிளம்பு. அனுப்பி வைத்து விட்டார்.

மாலை அவர் வீட்டுக்கு சென்று காத்திருந்தேன். அவர் வரவே இல்லை. தொடர்பு கொண்டாலும் தொடர்பு எல்லைக்கு வெளியேயே நின்றுகொண்டிருந்தார். வெறுத்து இரவு ஆகி விட்டதால், “பாஸிடமாவது வரலாம்” என்று வந்தேன். பாஸ் சீட்டில் இல்லாததால் குப்பண்ணன் சுவாரசியமாய் “கைபேசியில்” படம் பார்த்துக்கொண்டிருந்தார். என்னை பார்த்த்தும் சட்டென அணைத்துவிட்டார். சார் நான் வந்த உடனே ஏன் ஆப் பண்ணிங்க? கோபமாய் கேட்டேன்.

     தம்பி உன் வயசுக்கு இந்த மாதிரி படமெல்லாம் பாக்க கூடாது. “பாஸ்” மாதிரி எதிர்காலத்துல ஆகணும்னா ஒரு சில கட்டுப்பாடுகளை வச்சுக்க? இல்லே என்னைய மாதிரி ஆகணும்னா, இந்தா வந்து பாரு.

எனக்கு சொரேர் என்றது. நல்லா பேசறீங்க சார். சிரிப்புடன் சொல்லிவிட்டு நான் போயிட்டு வரேன் சார். அந்த கடை மேட்டர் என்னாச்சு? பாஸ் கேட்டாரா? இல்லை, அதுக்குள்ளே வேற ஏதோ பிரச்சினையில மட்டிகிட்டயாம்.

யாரு சொன்னா? என்ன தம்பி எங்களுக்கு நியூஸ் வராதா?

அதெல்லாம் ஒண்ணுமில்லே, சரி நான் வர்றேன், விடை பெற்றேன்.               

மறு நாள் முஸ்தபாவின் கைபேசிக்கு கூப்பிட்டும் அவர் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருந்தார். இன்னுமா வெளியே இருக்கிறார். ஆச்சர்யமுடன் வீட்டுக்கு சென்றால், அவர் அம்மா நேத்து இராத்திரி முழுக்க வரவேயில்லை என்றார். காலையில வர்றேன்னு போன் பண்ணி சொல்லிட்டான்.

னக்கு ஆச்சர்யமாக இருந்தது. பாவம் போலீஸ் துறை. வீட்டுக்கு வருவது கூட நிச்சயமில்லை. சரி வருகிறேன், என்று கிளம்ப அதற்குள் சூடான காப்பி என் கைக்கு அவர்கள் வீட்டு வேலையாள் மூலம் வந்தடைந்தது. குடித்து விட்டு போய்ட்டு வர்றேம்மா, அவரிடம் விடைபெற்று கிளம்பினேன்.

கல்லூரி நூலகத்தில் பத்திரிக்கை புரட்டியவனின் கண்கள் இந்த செய்தியை கண்டவுடன் வியப்பு அடைந்து விட்டது. “காரில் பிணமாய் கிடந்த பெண் கொலைதான் செய்யப்பட்டாள்” என்ற துப்பு துலங்கி போலீசார் கொலையாளிகளை தேடி போலீஸ் அதிகாரி முஸ்தபா தலைமையில் மும்பை சென்றுள்ளார்கள்.

அதற்கு பின் உங்களுக்கு பொழுது எப்படி போனதோ தெரியாது, எனக்கு ஒருவாரம் ஒன்றும் ஓடவில்லை. எப்படியோ ஒரு வாரம் கழித்து முஸ்தபாவை பிடித்து விட்டேன். சார்

சார் எப்படி சார் அது கொலைதான் முடிவு பண்ணினீங்க?

இறந்து போன பொண்ணுக்கு விஷத்தை கொடுத்தது நாங்கதான்னு குற்றவாளிங்க ஒத்துகிட்டாங்க.

பாவம் சார் அந்த பொண்ணு, பார்ட்டியில என் கிட்டே ஷம்பெயின் வாங்கி குடிச்சு, அதுக்கப்புறம் தான் சாகப்போறோமுன்னு தெரியமயே எனக்கு வலுக்கட்டாயமா லிப்ட் கொடுத்துச்சு.

முஸ்தபா சிரித்தார், நீ நினைக்கிற மாதிரி உன் கிட்டே ஷாம்பெயின் வாங்கி குடிச்ச பொண்ணு சாகலை.

சார் வியப்புடன் கூவினேன்.

இறந்து போனது அவளோட உறவுக்கார பொண்ணொண்ணு. பாவம் ஏழை பொண்ணு இவ கடையில வேலை பார்த்துட்டு இவ வீட்டுல தங்கியிருந்த பொண்ணு.

கொஞ்சம் கூட வித்தியாசமே தெரியலையே சார்.

 இது ரொம்ப நாளா அவங்க போட்டு வச்ச திட்டம், அதுவும், இந்த ஐடியாவை சென்னையிலோ, மும்பையிலோ நடந்தா அடையாளம் கண்டு பிடிச்சிடுவாங்க அதனால கோயமுத்தூருல வச்சு இதை நிறைவேத்திக்க திட்டம் போட்டிருக்காங்க, அப்பத்தான் வசதியா ரமேஷை பிடிச்சு இந்த பார்ட்டியில் இதை முடிக்கணும்னு முடிவு செஞ்சிருக்காங்க. அதனால சென்னையில இருந்து இந்த பெண்ணை நேத்தே கூட்டிகிட்டு வந்துட்டாங்க. பாவம் இவங்களை நம்பி வந்து அது பலிகடாவாயிடுச்சு.

தான் சாகப்போறோமுன்னு தெரியாம எனக்கு அந்நேரத்துக்கு உதவியும் பண்ணுச்சு.

அங்கதான் சின்ன தப்பு நடந்திடுச்சு., அவங்க ஏற்கனவே பிளான் பண்ணி அந்த பொண்ணை இராத்திரி பத்துமணிக்கு கூட்டிகிட்டு வந்திருக்காங்க. அப்பவே கொஞ்சம் போதையேத்தி அதுல விஷத்தை கலந்துட்டாங்க. இந்த பொண்ணு 2.30 க்கு காரை எடுத்து கிளம்பும்போது அவளுக்காக வெளியே காத்திருந்த இந்த பொண்ணும், இவ கூட வந்த ஆளும், இவ ஓட்டிகிட்டு வந்த காரை நிறுத்தி, இவன் கூட வந்தவகிட்டே “நீ அக்கா காரை ஓட்டிகிட்டு வா அக்கா, ரொம்ப போதையில இருக்கறதால அவளை நான் என் கார்ல கூட்டிகிட்டு பின்னாடி வர்றேன்னு சொல்லியிருக்காங்க. பாவம் வயித்துல ஏற்கனவே விஷம் இருக்கறது தெரியாம அக்காவை இறக்கிட்டு அவ ஓட்டிகிட்டு வந்திருக்கா, அப்பத்தான் கேட்டுல உன்னை பாத்து லிப்ட் கொடுத்திருக்கா..

அதுக்கப்புறம்தான் பிளான்ல கொஞ்சம் ஓட்டையாயிடுச்சு,அப்படீங்கறது இவங்களுக்கு புரிஞ்சிடுச்சு.. ஏன்னா ஆக்சிடெண்ட் ஆயிருந்தா.அவ முதல்லயே செத்துப்போனது தெரியாம மறைச்சிருக்கலாம். இப்ப இவ இறந்து போனது உனக்கு கட்டாயம் தெரிஞ்சிடும்., மேற்கொண்டு என்ன பண்ணறதுன்னு இவங்க உங்க பின்னாடி உடனே வராம மெதுவா வந்து பார்த்திருக்காங்க..

அதுக்குள்ள காரை நீ நிறுத்திட்டதை பாத்தவங்க, சட்டுன்னு பின்னாடி திரும்பி அப்படியே போயிட்டாங்க. நீ அதை கவனிக்காம பயத்துல ஓட்டமா ஓடிட்டே..

இதுனால அந்த பொண்ணுக்கு என்ன லாபம்?.

மும்பையில் அவளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டமாகி தலைமறைவாத்தான் சென்னைக்கு ஓடி வந்திருக்கா. அப்ப அவளுக்கு கிடைச்ச யோசனை நம்மளையே விபத்துல சாகடிச்சுட்டா எல்லா பிரச்சினையும் முடிஞ்சிடும், அதுமட்டுமில்ல அவள் பேர்ல ஒரு கோடி ரூபாயிக்கு இன்சூரன்ஸ் இருக்கு. அதையும் அவ தங்கச்சியா நடிச்சு வாங்கிடமுன்னு திட்டம் போட்டிருக்கா. இதுக்கெல்லாம் மூளையா மும்பையில இருந்து ஒருத்தன் உதவி பண்ணியிருக்கான். அதுனாலதான் இவளே ரமேசை சிநேகிதம் பிடிச்சு, இந்த பார்ட்டியை தேர்ந்தெடுத்து கோயமுத்தூருக்கு வந்திருக்கா. அவங்க இரண்டு பேரையும் கைது பண்ணிட்டோம்.

சார் என்னைய கோர்ட்டுல விசாரிப்பாங்களா ?

நீ லாயருக்கு படிச்சவன் கோர்ட்டுன்னா பயந்துக்கறே? சிரித்துக்கொண்டே கேட்டார். சார் நான் உங்களை மாதிரி போலீஸ் துறைக்கு வரணும்னு நினைக்கிறேன்.

எதுக்கு உன்னைய நம்பி கார்ல உக்காரவச்சுட்டு போனா உன்னை தாண்டி அந்த பொண்ணும் ஆளும் போறாங்க, நீ தூங்கிட்டு இருந்தியே?

சார் நிசம்மாவா சார்? வெட்கத்துடன் கேட்டேன். அப்புறம்? சிரித்தவர், நீ முதல்ல “லா” முடி அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம்…சொல்லிக்கொண்டிருந்தவர் முன்னால் வேலையாள் எங்கள் இருவருக்கும் டீ கொண்டு வந்து வைத்தார்.. .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *