மகனுக்குத் தெரிந்தது தந்தைக்குத் தெரியவில்லை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2023
பார்வையிட்டோர்: 2,940 
 

(1980 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்னதான் படித்தாலும் முடிகிறதில்லை. ஒவ்வொரு பரீட்சையின்போதும் ஏதாவது ஒரு சப்ஜெக்டில் இழுத்துக்கொண்டு விடுகிறது. இந்த முறை கணக்கு, குறைந்த பட்சம் பாஸ் மார்க் வாங்குவதற்குக்கூட தங்கராசு வாத்தியார் மனசு வைத்தால்தான் உண்டு.

ஏழுமலைக்குக் கலக்கிக் கொண்டு வந்தது பயம்.

கோபத்தில் கத்துவதற்கென்றே அப்பாவிடம் தனியாக ஒரு குரல் இருந்தது. ”என்ன எழவுக்குன்னு சாம்பார்ல தெனம் இவ்வளவு உப்பைக் கொட்டறே?” என்று அம்மாவை அதட்டுவதற்கும். “எங்கேடி… அவனைக் காணோம்?” என்று பெரிய அண்ணனைப் பற்றிக் கேட்பதற்கும் அந்தக் குரலைத் தான் அவர் பயன்படுத்துவார்.

அடுத்த வாரம் ஆண்டுத் தேர்வு ரிசல்ட் அப்பாவின் இரும்புப் பிடியில் மாட்டிக் கொள்ளாதிருக்க வழி செய்யவேண்டும்.

ஏழுமலை வாத்தியார் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான்.

“குட்மார்னிங் ஸார்…”

இவன் போனபோது வாத்தியார் தமது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“என்னடா?” பதில் வருவதற்குச் சிறிது நேரமாயிற்று.

இவனுக்குச் சங்கோசம். திடீரென்று எப்படிச் சொல்வது என்கிற தயக்கம்.

“வேறென்ன? வழக்கம் போலவே பாஸ் மார்க் போடுங்க சார்னு கேக்க வந்திருப்பான். இல்லையாடா ஏழுமலை?”

வாத்தியார் மனைவி அழகாகச் சிரித்தாள், பல் வரிசை எடுப்பாக இருந்தது.

“ஏண்டா… அப்பா கிட்ட இவ்வளோ பயம் உள்ளவன் ஒழுங்கா படிக்க வேணுமா?”

ஏழுமலை பதில் சொல்லவில்லை.

“நாளைக்கு உனக்கு வாத்தியார் நான் தான்னு கேக்கறவன் சிரிப்பான். எதுல போச்சி?”

“கணக்கு ஸார் …”

“அதிலென்னடா கஷ்டம். ரொம்ப தான் ஈஸியாத்தாலே இருந்திச்சு..”

“…..”

“உங்கப்பா முகத்துக்காகப் பாக்க வேண்டியிருக்கு. ஒருநாள் சொல்லத்தான்போறேன்!”

ஏழுமலைக்குக் காரியம் கைகூடி வருகிற சமிக்ஞை தெரிந்தது. வாத்தியார் வீட்டுத் தோட்டத்தில் கத்தரிக்காய் முளைத்திருந்தது, பிஞ்சு பிஞ்சாய்க் காய்கள். இடையிடையே ஊதாப் பூப் பூத்து, பார்க்க அழகாயிருந்தது. போன பரீட்சையின்போது சரித்திரப் பாடத்துக்கு பாஸ் மார்க் போடும் படி கேக்க ராமுவும், இவனும் வந்தபோதுட சேர்த்து நட்டது.

“சார்… தோட்டத்துக்குத் தண்ணி பாச்சட்டுமா?”

“அதெல்லாம் வாணாம். முத்துச்சாமி வரேன்னிருக்கான். அவன் பாத்துக்குவான். கொஞ்சம் இரு. உனக்கு வேறே வேலை இருக்கு” என்று சொன்னவர் மனைவியைப் மளிகை சாமான்லாம் வாங்கணும்னியே குடுத்து அனுப்பறதுதானே? ஏண்டா போயிட்டு வந்துடறியா?” என்றர்.

“சரிங்க சார்…”

வாத்தியார் மனைவி பையை எடுத்து வர உள்ளே போனாள். ஏழுமலைக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

***

இரண்டு நாள் லீவுக்குப்பிறகு முதலியார் ஆபீஸுக்கு வந்திருந்தார்.

வேலைகள் குவித்திருந்தன. நிறையக் கடிதங்கள்.

பொதுப்பணித் துறையின் கோட்டத் தலைமை அலுவலகம் அது. அதன் கட்டுப் பாட்டின் கீழ் ஜில்லாவின் பல இடங்களில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வாய்க்கால், குளம், சில்லறை மராமத்துக்கள்…

“நான்தான் ரெண்டு நாளா வரலியே, கடிதங்களையாச்சும் ஒழுங்காவச்சிருப்போம்னு எவனுக்காவது தோணியிருக்கா பாரு.”.

முதலியார் எல்லாவற்றையும் பிரித்து அடுக்கினர். அர்ஜெண்ட் – ஆர்டினரி, இரண்டு பைல்களில் கட்டி வைத்தார்.

பெரிய கான்ட்ராக்டர்களுக்குப் பரவாயில்லை. இரண்டு நாள் தாமதமானாலும் தாங்கும். சில்லறை ஆசாமிகளுக்குத் தான் கஷ்டம். அனுப்பி விட வேண்டும்.

முதலியார் சிவப்பு இங்க் பேனாவைக் கையில் எடுத்துக் கொண்டார்.

இரண்டு பில்கள் முடிவதற்குள் பியூன் ராமகிருஷ்ணன் வந்து கூப்பிட்டான்.

“சார்… டி.ஈ கூப்பிடறார்”

டி.ஈ. – டிவிஷனல் இஞ்சினீயர்.

“என்ன விஷய்ம்?”

“தெரியலை சார்”

“யாராச்சும் பார்ட்டி வந்திருக்கா?”

“ஆமா…ரெண்டு பேர் வந்திருக்காங்க.”

“என்ன கம்பெனி”

“தெரியலை சார்.”

கள்ளப் பயல். இவனுக்கா தெரியாது? முதலியார் எழுந்து போனார்.

“மிஸ்டர் முதலியார்… என்ன தகராறு? இவுங்க பீல் ரெண்டு வாரமா நிக்குதாமோ!”

முதலியார் ஆசாமி.களைப் பார்த்தார். சமீபத்தில் ஆரம்பித்த பிராஜக்ட் ஒன்றின் பெரிய கான்ட்ராக்டர், போன வாரமே விவரத்தைச் சொல்லி அனுப்பியிருந்தார்.

”சார்..ஏ.இ.யின் சர்டிபிகேட் இல்லாமலேயே பில் வந்திருக்கு. வேலை முடிஞ்சிருச்சா இல்லையான்னு தெரியலை, அதான் எழுதிக் கேட்டிருக்கேன்,”

“என்னய்யா – வேலை முடியாம் யாராச்சும் பில் அனுப்புவாங்களா? சர்டிஃபை பண்ணாதது யார் தப்பு? நம்ம பக்கம் தவறை வச்சுக்கிட்டு அவுங்க பணத்தை அனுப்பாம இருக்கிறது என்ன நியாயம்?”

“….”

“வீணா வேலை கெடுது, போங்க போயி பில்லை பாஸ் பண்ணி அனுப்புங்க…”

“அடுத்த வாரத்துக்குள்ள ஏ.இ. ரிப்போர்ட் வந்திரும் சார், அப்புறமா பாஸ் பண்ணறதுதான் நல்லது. நாளைக்கு-ஆடிட்ல…”

“என்னய்யா ஆடிட்? ஃபீல்ட் ஓர்க்கைப் பத்தி அவனுகளுக்கு என்ன தெரியும்? போங்க, உடனே பணத்தை அனுப்புங்க…”

இது விரோதம். சட்டத்துக்கு முரண், எந்த நடைமுறை விதியிலும் இப்படிச் செய்யலாம் என்று சொல்லவில்லை. முதலியாருக்குப் புரிந்தது டி.ஈ. ஆதாயம் இல்லாமல் பேசவில்லை.

இவன்களெல்லாம் காரியவாதிகள். தங்கள் லாபத்தைப் பார்த்துக் கொண்டு போய்விடுவான்கள், கடைசியில் மாட்டிக் கொள்ளுவது எவனாவது தலைநரைத்த அப்பாவி ஹெட் கிளார்க்கா?

முதலியாருக்குத் தன்மானம் பொத்துக் கொண்டு வந்தது.

“என்னால முடியாது ஸார்”.

“முடியாது?”

டி ஈ. க்குக் கோபம் வந்தது. அன்னிய மனிதர்களுக்கு மத்தியில் தமது அதிகாரம் எடுபடவில்லையே என்கிற
கோபம்.

“முடியாது…..”

“சரி, பார்க்கலாம் போங்க…”

முதலியார் வெளியே வத்துவிட்டார்.

***

அடுத்த வாரம்.-

பரீட்சை ரிசல்ட் வந்தபோது ஏழுமலை பாஸ் கணக்கில் நல்ல மார்க்.

அப்பாவிடம் தைரியமாகக் காட்ட, முடியும், பள்ளிக்கூடத்திலிருந்து ஒரே ஓட்டமாக வீட்டுக்கு வந்தான்.

“அக்கா… நான் பாஸ்,”

“சத்தம் போடாம உள்ளே போ”

ஏழுமலை சமையல் அறைக்கு ஓடினான்.

“அம்மா….நான் பாஸாயிட்டேன்,”

“இந்த மனுஷருக்கு ஆரு சொல்றது? இரோட வேலைக்குப் போனவன்லாம் ஊர்ல மாமனார் பேர்லியும், மச்சினன் பேர்லியும் வயலும் மனையும் வாங்கிப் போட்டுண்டிருக்கான், இங்க உள்ளதுக்கே ஆபத்து வந்து நிக்குது. குடும்பம் இருக்கே, பொழப்பு நடக்கணுமேன்னு கொஞ்சமாவது நெனைப்பு வேணாம்.”

“அம்ம்ம்மா… நான் பாஸ்.”

“அது ஒண்ணுதான் கொறச்சல் இப்ப போடா அப்பாலே.” அம்மா எரித்து விழுந்தாள், “நாளைக்கு உங்கப்பா ஒன்னைக் கலெக்டருக்குப் படிக்க வைப்பாரு, போ.”

ஏழுமலையின் ஆர்வமெல்லாம் சட்டென்று வடிந்தது. வீட்டில் ஏதோ ஒரு அசாதாரண தன்மை இருப்பது புரிந்தது. அப்போதுதான் உள்ளே கவனித்தான், அப்பா படுத்திருந்தார். இந்த நேரத்துக்கு இவர் எப்படி?

“என்னக்கா?”

“ஒண்ணுமில்லே. அப்பா கோவமா இருக்கார், சத்தம் போடாம வா” – அக்கா அவனை இழுத்துக் கொண்டு போவதற்காக வந்தாள்.

“யார் எக்கேடு கெட்டா நமக்கு என்ன? ஆபீஸர் சொன்னபடி செஞ்சிட்டுப் போக வேண்டியதுதானே, இப்ப வூட்ல உட்கார்ந்தாச்சு, தர்ம நியாயமா சோறு போடும்? பொழைக்கத் தெரியாத மனுஷர், எனக்குன்னு எழுதி வச்சிருக்கு…”

அம்மா பின்னும் ஏதோ புலம்பிக்கொண்டிருந்தது. திண்ணைக்குக் கேட்டது. பாத்திரங்கள் “ணங்… ணங்” என்று தரையில் மோதின.

“என்னக்கா?” ஏழுமலை மறுபடியும் கேட்டான்.

“ஒண்ணுமில்லேடா…”

“சொல்லுக்கா..”

விஜயா கொஞ்ச நேரம் பிகு செய்து கொண்டாள். பிறகு சொன்னாள்.

ஆபீஸ் மேலதிகாரி ஏதோ சொன்னதற்கு அப்பா செய்யவில்லையாம். அதனால் அவரை வேலையிலிருந்து கொஞ்ச நாட்கள் நிறுத்தி வைத்திருக்கிறார்களாம்.

ஏழுமலைக்குப் புரியவில்லை.

தனக்கு வாத்தியார் மாதிரிதானே அப்பாவுக்கு மேலதிகாரி, இது ஏன் அப்பாவுக்குத் தெரியவில்லை?

கையிலிருந்த கணக்குப் பேப்பரைப் பார்த்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான் ஏழுமலை.

– 04-05-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *