சேராத இடம் சேர்ந்தால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 6,821 
 

`தினேசு! நீயும் ஒங்கப்பாமாதிரி ஆகிடாதேடா!’

அவன் பிறந்தபோது, கோயில் அர்ச்சகரிடம் போய், `ஷ்டைலா ஏதாவது சாமி பேரு வைங்க, சாமி!’ என்று பாட்டி கேட்டதற்கு, `இந்தக் காலத்திலே யாரு பகவான் பேரை வைக்கறா? நீங்க தினேஷ்னு வைங்கோம்மா. சூரியன்மாதிரி குழந்தை அமோகமா பிரகாசிப்பான்! நாகரீகமாவும் இருக்கும்!’ என்றாராம்.

அம்மா சொல்லிச் சொல்லி ஆனந்தப்படுவாள். ஆனால், அவள் கூப்பிடும்போது என்னவோ ஸ்டைலாக இல்லை. வாயில் நுழையாத பெயரை ஏன் வைக்க வேண்டுமாம்!

அம்மாவிடம் அவனுக்குப் பிடிக்காத பலவற்றில் இதுவும் ஒன்று. என்னதான் தாலி கட்டின கணவன் ஆனாலும், இப்படியா தினமும் அவரளிக்கும் அடி உதைகளைப் பொறுத்துப்போவாள் ஒருத்தி?

ஒரு முறை அவன் கேட்டேவிட்டான்: `எதுக்கும்மா இப்படி அடிவாங்கிச் சாகறீங்க?’

`அப்பா முன்பெல்லாம் இப்படியா இருந்தாரு!’ என்று சொல்லிச் சமாளித்தாள் அப்போது.

அதன்பின் அவன் அப்பாவைப்பற்றிய பேச்சை எடுப்பது கிடையாது. அவரைப் பார்த்தால் சற்று பரிதாபமாக இருந்ததும் ஒரு காரணம்.

இரண்டாண்டுகளுக்குமுன் நடந்த தெரு விபத்தில் அப்பாவுக்கு இரு விதத்தில் நஷ்டம். விபத்தாகி அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, எவனோ அவர் ஓட்டிப்போன பைக்கை எடுத்துப் போய்விட்டான். ஒரு வருடம் படுக்கையில் இருந்ததில், வேலையும் போய்விட்டது. இப்போது நடமாட்டம் வீட்டுக்குள் மட்டும்தான்.

`ஆண்பிள்ளை தானிருக்க, எனக்கு அடங்கியிருக்க வேண்டியவள் வெளியில் போய் சம்பாதிப்பதாவது!’ என்று அவரது சுயகௌரவம் உசுப்பியிருக்க வேண்டும். தான் இப்போதும் மனைவியைவிட உயர்த்திதான் என்று அவருக்கே உணர்த்திக்கொள்ள வேண்டியிருந்தது. இடுப்பில் கட்டியிருந்த பெல்டை அவிழ்த்து அவளை அடித்தார். நாள் தவறாது. அதன்பின், அழுகையும் கொஞ்சலும்! அப்போதுதானே காசு கைமாறும்!

அதற்குமுன் காலை, மாலை இரு வேளைகளிலும் அருகிலிருந்த கோயிலைக் கூட்டிப்பெருக்கி சுத்தமாக்குவதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்த அம்மா அந்த விபத்துக்குப்பின் பிற வீடுகளில் அதே வேலையைச் செய்து பொருளீட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானாள்.

`ஏம்மா தினமும் கோயிலைச் சுத்தம் செய்யறீங்க? காசா கிடைக்குது?’ என்று முன்பு ஒரு முறை அவன் கேட்டபோது, அம்மா அதிர்ந்தாள். `பாட்டி சின்ன வயசிலேயே கோயில்லே இருக்கற சாமியைக் கட்ட இருந்தவங்கடா,’ என்று ஆரம்பித்தாள்.

`பண்டாரத்தையா?’

`சேச்சே! கர்ப்பக்கிரகத்திலே வெச்சிருக்கிற சாமியை!’

முகபாவத்திலிருந்தே அவனுடைய குழப்பத்தை உணர்ந்துகொண்ட அம்மா சிறு சிரிப்புடன் தொடர்ந்தாள்: `நம்ப குடும்பத்துக்கு இனிமே பாட்டு, டான்ஸே வேணாம்னு அவங்க அண்ணா — அவர் ஒரு பெரிய நட்டுவனாராம் — பாட்டியை மலாயாவுக்கு கப்பலேத்தி விட்டுட்டாரு’.

`ஏன் பாட்டு வேணாம்?’ அவனுக்கு மேளம், மிருதங்கம் எல்லாம் பிடிக்கும். சில காலம் கற்றிருக்கிறான்.

`அங்க ராஜாக்களோட காலம் முடிஞ்சதோட நம்பளைமாதிரிப்பட்டவங்களுக்கும் மவுசு கொறைஞ்சிடுச்சு,’ என்று என்னமோ சொன்னாள்.

பள்ளிக்கூடத்தில் அவனுக்குப் புரியாத மலாய் மொழியில் ஆசிரியை சரித்திர வகுப்பு நடத்துவது போல் போரடித்தது. புரியவில்லை என்று ஒத்துக்கொண்டால், என்றோ நடந்து முடிந்ததை இன்னும் கிளறுவாள்.

`ஏன் இந்தப் பேச்சை எடுத்தோம், அம்மா எங்கே வேண்டுமானாலும் போய் கூட்டட்டும், மெழுகட்டும், நமக்கென்ன என்று இருந்திருக்கலாம்,’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டான்.

அம்மா விடுவதாகயில்லை. `பாட்டி இங்க வந்தாங்களா? வந்து கொஞ்ச நாள் கூலி வேலை செஞ்சாங்க. பாட்டியோட அழகைப் பாத்து மயங்கி, ஒங்க தாத்தா கல்யாணம் கட்டிக்கிட்டாரு!’ பெருமையால் விகசித்த முகத்துடன் தொடர்ந்தாள். `ஒன்னோட தங்கச்சியும் அப்படியே பாட்டிமாதிரி இருக்கு. கலை ரத்தத்திலேயே ஊறிடுச்சில்ல! அதான் காசு வாங்காம, சும்மாவே அவளுக்கு டான்ஸ் சொல்லிக் குடுக்கறாங்க பள்ளிக்கூடத்திலே — டீச்சர்!’

வருத்தத்துடன் தலையைக் குனிந்துகொண்டான் தினேஷ். அப்பா வம்சத்தில் இப்படிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி யாருமில்லையோ?

தானும் பெண்ணாகப் பிறந்திருக்கலாம்! அழகாகவாவது இருந்திருப்போமே!

வீட்டில்தான் தங்கை அழகிலும் திறமையிலும் அவனைவிடச் சிறப்பாக இருந்தாள் என்று அம்மா கொண்டாடினால், பள்ளிக்கூடத்திலும் நிம்மதி இல்லை.

`நான் இனிமே பள்ளிக்கூடத்துக்குப் போகமாட்டேம்மா,’ என்று சொல்லிப்பார்த்தான்.

`ஏண்டா? வாத்தியாரு அடிச்சாரா?’

அடித்தால்தான் தேவலியே! அவன் நடந்ததைச் சொன்னான். வகுப்பில் ஏதாவது தொலைந்துபோனால், அவனுடைய புத்தகப்பையைத்தான் முதலில் சோதனை போடுவார்கள். இதுவரை எதுவும் கிடைத்ததில்லை. ஆனாலும், `இந்தியப் பையன்!’ என்ற அலட்சியம். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விஷயம்போல்.

அவனுக்குச் சில விஷயங்கள் புரிவதேயில்லை. பாட்டி, அம்மா, அவன், தங்கை இவர்களில் யாருமே இந்தியாவில் காலெடுத்து வைத்ததுகூடக் கிடையாது. எப்போதாவது பக்கத்து வீட்டில் ஓசியாக தமிழ்ப்படங்கள் பார்ப்பதோடு சரி. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கேதான். பின் ஏன் தொட்டதற்கெல்லாம், `ஓராங் இந்தியா’ (இந்திய மனிதர்) என்கிறார்கள்? பரீட்சைத்தாளில்கூட அப்படித்தான் குறிக்க வேண்டுமாம்.

`தமிழ் பள்ளிக்கூடத்தில படிச்சப்போ ஒரு தொல்லையுமில்லே. இப்போ..!’ என்று பெருமூச்செறிந்தவள், `நாடு விட்டு நாடு வந்தா இப்படித்தான். சும்மாவா சொல்லி வெச்சாங்க, மொதலைக்குத் தண்ணியிலதான் பலம்னு!’ என்று பழமொழியில் ஆறுதல் தேடினாள்.

`இன்னும் ரெண்டு மாசம்தானே! போயிட்டு வா, தினேசு!’ குரலில் கெஞ்சலும் விரக்தியும் ஒலித்தன.

படிப்பு கசந்தது. யாருக்குமே நம்மைப் பிடிக்கவில்லை, எதுவுமே புரிவதுமில்லை என்ற நினைப்பில் அழுகை வந்தது. தான் ஆண்பிள்ளை. அழக்கூடாது என்று உதடுகளை இறுக்கிக்கொண்டான்.

அந்த எண்ணம் தோன்றியபோதே தன்னை அழவைப்பவர்கள் மதிக்க ஏதாவது வழி செய்ய வேண்டும் என்ற ஆத்திரமும் உள்ளூர கிளர்ந்தது.

ஆனால், தன்னைப் பார்த்தால் யாருக்குத்தான் நட்புடன் பழகத் தோன்றும் என்ற எண்ணமும் உடன் எழாமலில்லை. கன்னத்தில் முளைத்த பருக்களை ஓயாது கிள்ளியதால் அவை பெருகி விகாரமான முகம், ஒல்லியான உருவம் — இதையெல்லாம் பார்க்க அவன் கண்ணாடியைத் தேட வேண்டியிருக்கவில்லை.

“என்னடா, இவ்வளவு சோனியா இருக்கே! காலையிலே என்ன சாப்பிடறே?”

கதிரின் கையில் எப்போதும் பணம் புரளும். பேச்சிலும் வல்லவன். அப்படியொன்றும் பெரிய உருவம் இல்லாத ஒருவனிடம் பிற மாணவர்கள் நடுங்குவது கண்டு தினேஷ் ஆச்சரியப்பட்டிருக்கிறான்.

“வரகோப்பிதான்!” சற்று அவமானத்துடன் பதிலளித்தான் தினேஷ்.

“அப்புறம் இங்கேயும் ஒண்ணும் சாப்பிடறதில்லே. படிக்கிறது எப்படிடா மண்டையிலே ஏறும்?”

இஸ்திரி போட்டு, மடிப்பு கலையாத சீருடை அவர்களது பின்தங்கிய வகுப்பில் அவனுடைய தனிச்சிறப்பு. இத்தனைச் சிறப்புகளுடைய ஒருவன் தன்னுடன் வலிய வந்து உறவாடுகிறான்! பலம் கூடியது போலிருந்தது தினேஷுக்கு.

“காசில்லடா. எங்கப்பாவுக்கு வேலை போயிடுச்சு”. சொல்லும்போதே, `வேலை என்ன, பெரிய வேலை!’ என்று முகம் சுளிக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு வங்கியில் ஆபீஸ் பையன்! அப்படித்தான் சொன்னார்கள். தலைக்குமேல் வளர்ந்த மகன் இருந்தாலும், அவர் `பையன்’தான்.

“அம்மா வீட்டு வேலை செஞ்சு கொண்டாற காசில ஸேவா (வீட்டு வாடகை)..,” என்று இன்னும் ஏதோ சொல்லப்போனவனைத் தடுத்தான் பள்ளி நண்பன். “எத்தனை காலம்தான் அப்பா, அம்மான்னு சொல்லிக்கிட்டு இருக்கப்போறே! இன்னும் ஒண்ணு, ரெண்டு வருஷத்திலே கல்யாணமாயிட்டா, ஒன்னோட பெண்டாட்டி பிள்ளைங்களுக்கு நீதானே சோறு போடணும்? இல்லே, அப்பவும் ஒங்கம்மாகிட்டே போய் நிப்பியா?”

கல்யாணமா!

அந்த நல்ல விஷயத்தைப்பற்றி யோசித்தே இராத தினேஷ் சிலிர்ப்படைந்தான். வெட்கத்துடன் சிரித்தான்.

தன்மேல் இவ்வளவு அக்கறை காட்டுபவன் சுட்டும் வழியில் நடப்பது என்ன தவறு! அப்பா செய்யாததையா அவன் செய்யப்போகிறான்! என்ன, அவர் கட்டிய மனைவியை அடித்துப் பிடுங்குகிறார். இவன் அதே பணத்துக்காக அதிகம் பழக்கமில்லாதவர்களை அடிக்கப்போகிறான். தான் சம்பாதித்தால், பெண்டாட்டியையாவது அடிக்காமல் இருக்கலாம்.

ஐந்து வெள்ளி, பத்து வெள்ளியெல்லாம் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பொருட்டில்லை என்பது ஆச்சரியத்தை விளைவித்தது. சிலர் நூறு வெள்ளிகூட கொண்டு வருகிறார்களாமே!

`அவர்களுடைய அப்பா எங்கே திருடுகிறாரோ!’ அந்த எண்ணம் எழும்போதே அவனுக்குச் சிரிப்பு வந்தது.

அன்று ஆரம்பித்த பழக்கம் பள்ளிக்கு வெளியிலும் தொடர்ந்தது. யாரோ கதிர்மூலம் ஏவிய வேலையைச் செய்தான்.

கத்தியைக் காட்டி மிரட்டியபோது, பிறர் தன்னைக்கண்டு பயப்பட்டது அவனுக்குப் பெருமையாக இருந்தது. தன்னையும் பிறர் மதிக்காமலில்லை என்று ஆனந்தப்பட்டான்.

“நீ கறி வாங்கிட்டு வந்தியா! காசு ஏதுடா, தினேசு?” என்று அம்மா கேட்டபோது ஆத்திரமாக இருந்தது. ஊரெல்லாம் அவனைப் பார்த்து நடுங்குகிறார்கள். இந்த அம்மாவுக்கோ அவனைப் பார்த்தால் எப்போதுமே இளக்காரம்தான்!

“ஆக்கிப் போடுங்கம்மா. சும்மா ஏதாவது கேட்டுக்கிட்டு!” என்று முறைத்தபடி நகரப்பார்த்தான். அம்மாவின் குரல் அவனை நிற்கச் செய்தது.

“தினேசு! நீயும் ஒங்கப்பாமாதிரி ஆகிடாதேடா!”

அவன் கேட்க அம்மா அப்பாவைப் பழித்ததில்லை. வியப்புடன் திரும்பிப் பார்த்தான்.

சட்டென தன்னைச் சுதாரித்துக்கொண்டவள் பேச்சை மாற்றினாள். முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டாள். “சொல்ல மறந்துட்டேன், பாரு! அடுத்த வாரம் நவராத்திரி வருதில்ல? அதுக்கு ஒன்னை உறுமி வாசிக்கக் கூப்பிட்டிருக்காங்க, தினேசு! கோயில்ல எங்கிட்ட சொல்லிவிட்டாங்க!’.

எப்போதோ கற்றுக்கொண்டது! தான் கலைக்குடும்பத்தில் பிறந்தவன் என்ற பெருமிதம் இருந்தது அப்போது.

இன்று அவன் குண்டர் கும்பலில் ஒரு அங்கத்தினன். அதுதான் மாதாமாதம் சந்தா கட்டுகிறானே! யாருமே அவனை ஏற்காதபோது, அரவணைத்தவர்கள் அவர்கள்.

`அங்கு எல்லாரும் பக்தியோடு இருப்பார்களே! நான் மட்டும் முரடாய், வித்தியாசமா இருக்க மாட்டேன்?’ என்ற சந்தேகம் எழ, உடல் இன்னும் குறுகிப் போய்விட்டது போலிருந்தது.

எப்படித் தப்பிக்கலாம் என்று சிறிது யோசித்துவிட்டு, “பரீட்சை வருதும்மா,” என்று முனகினான்.

தாய் ஏமாறவில்லை. “நீ பாஸ் பண்ணவா போறே? எப்படியும் வேலைக்குத்தான் போவணும் — ஏதாவது சாப்பாட்டுக்கடையிலே!”

“ஐயே! எச்சில் தட்டு கழுவற வேலை எனக்கு வேணாம்!” யாரோ வலிய அழைத்து வேலையே கொடுத்துவிட்டதைப்போல முகத்தைச் சுளித்தான்.

“சரி. அது வேணாம். மெகானிக்கா போலாமில்லே? ஒனக்குத்தான் காடி பிடிக்குமே!” என்றவள், மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்தாள். “கோயில் காரியம், தினேசு. அப்படியே புண்ணியம்! இப்படி ஒன்னைக் கூப்பிட்டிருக்காங்கன்னு பாட்டிகிட்ட சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோசம்! கலை நம்ப ரத்தத்திலேயே ஊறிக்கிடக்குன்னு என்னென்னவோ சொன்னாங்கடா!” என்று கெஞ்சலில் முடித்தாள்.

`பாட்டி!’

அவன் முகத்தில் சிறு நகை அரும்பியது.

`தினேஷ் கண்ணா!’ என்று வாய் நிறைய அழைக்கும் பாட்டி! சிறு வயதில் கடவுள் கதைகளெல்லாம் சொல்லிச் சாப்பாடு ஊட்டுவாளே! அவனைத் தூங்க வைக்கப் பாட்டுப் பாடுவாள். குரல் இனிமையாக இருக்கும்.

ஒரு முறை அவன் அவர்கள் வீட்டிலிருந்த ஒரே நாற்காலிமேல் ஏறிக் குதித்ததில் அது உடைந்துபோயிற்று. ஆத்திரத்துடன் அம்மா ரோத்தான் (பிரம்பு) எடுத்துவர, அவனைத் தன் முதுகுப்புறத்தில் மறைத்துக்கொண்டு, `இவ்வளவு சின்னப்பிள்ளை குதிச்சு ஒடைஞ்சு போயிட்டா, அது என்ன நாற்காலி! தூக்கிப் போடுவியா!’ என்று ஒரேயடியாய் அம்மாவை அடக்கிவிட்டவள் பாட்டி. அதனால் அன்று அவன் முதுகு தப்பித்தது.

அந்த நல்ல பாட்டிக்குத் தன்னால் ஏதாவது செய்ய முடியுமென்றால், செய்து வைப்போமே! “சரிம்மா,” என்று தலையாட்டினான்.

“மொத்தம் நீங்க ஆறுபேரு. போய் வாசிச்சுப் பளகு. அன்னிக்கு வேஸ்டி எல்லாம் குடுக்கறாங்களாம்!”

நெடுநாளைக்குப் பிறகு வாத்தியத்தைத் தொட்டபோது, இனம்புரியாத ஆனந்தம் உண்டாயிற்று. இதழ்கள் சிரிப்பில் மலர்ந்தன. கத்தி எடுத்தபோது ஏன் இப்படிச் சிலிர்ப்பாக இல்லை என்று யோசித்தான். புரியவில்லை. `எழவு மண்டைக்கு எதுவும் வெளங்கறதில்லே!’ என்று தலையில் போட்டுக்கொண்டான்.

இரவில் பயிற்சி முடிந்ததும் அருகிலிருந்த வீடு நோக்கி நடந்தான், கையை வீசியபடி. இவ்வளவு நிம்மதியாக இருந்து எவ்வளவு காலமாகிவிட்டது! உதடுகள் குவிந்து பாட்டு ஒன்றை விசிலடித்தன.

இருட்டாக இருந்த சந்தில் அவனுக்காகக் காத்திருந்தான் கதிர். `எங்கடா தினேஷ், ஒன்னை ஆளையே காணும்? பெரிய மண்டை (குண்டர் கும்பல் தலைவன்) ரொம்ப விசாரிச்சாரு!” கரிசனத்துடன் வந்தது கேள்வி. அவனுக்கல்லவா தெரியும் அவர்கள் கும்பலுக்கு ஆள் தேடுவதில் உள்ள சிரமம்!

`இவர்களுக்குத் தெரியாத ஒன்று எனக்குத் தெரியுமே!’ என்ற பெருமை உண்டாயிற்று தினேஷுக்கு. “என்னைக் கோயில்ல மோளம் வாசிக்கக் கூப்பிட்டிருக்காங்கடா! தினமும் பிராக்டிஸ் பண்ணப் போயிட்டு இருக்கேன்!”

“கோயில்லியா? அப்போ ஓசிதான்!” நண்பன் இளக்காரமாகச் சிரித்தான். “நீ கேங்கில இருக்கிறவன். மறந்துடாதே! நம்பளைமாதிரி இருக்கிறவங்க கோயிலுக்குப் போனா, அது பொம்பளைங்க போட்டுட்டு வர்ற சங்கிலியை அறுக்கறதுக்காகத்தான் இருக்கணும்”.

சங்கிலியைத் திருடுவதா!

ஒரு வெள்ளிக்கிழமையன்று பாட்டியின் தாலிக்கொடி சூறையாடப்பட்டபோது, அதைத் தனக்கு அணிவித்தவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று எவ்வளவு பயந்தாள்! எப்படியெல்லாம் புலம்பி அழுதாள்! தான் பிற பெண்களையும் அப்படிக் கலங்க வைக்கவேண்டுமா!

“சீ!” என்றான் தினேஷ்.

அவன் சற்றும் எதிர்பாராவண்ணம், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவன் வலதுகை மணிக்கட்டிலிருந்து முழங்கைவரை ஆழமாகக் கீறிவிட்டு ஓடினான் கதிர். போகிற போக்கில், “நீயெல்லாம் ஆம்பளையா, இல்லே ஒம்போதா? எல்லாத்துக்கும் பயம்! யாரைப் பாத்துடா `சீ’ங்கிறே?” என்று கத்திவிட்டுப் போனான்.

ரத்தம் பெருக்கெடுத்துக்கொண்டிருந்த கரத்தையே பார்த்தான் தினேஷ்.

எதிர்பாராத அதிர்ச்சியில் மூளை உறைந்தது போலிருந்தது.

முதலாவதாக எழுந்த எண்ணம்: `பரீட்சை அவ்வளவுதான்! கோவிந்தா!’

சிறிது பொறுத்துத்தான் நிதரிசனம் புலப்பட்டது. உடல் வலியைவிட மனத்தின் வேதனைதான் அதிகமாக இருந்தது. `கோயில்ல வாத்தியம் வாசிக்க முடியாம போயிடுமே!’

பாட்டியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட வேண்டும். `கூடாத சகவாசம்! கர்ணன்மாதிரி!’ என்று சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்வாள். அவன் சொல்வதை ரகசியமாக வைத்திருப்பாள். திட்டாமல் புத்தி சொல்வாள்.

அதையெல்லாம் மனதில் அசை போடும்போதே அவனுக்குச் சமாதானமாக இருந்தது. ஒவ்வொரு வருஷமும் நவராத்திரி வந்துகொண்டேதான் இருக்கப்போகிறது. அடுத்த வருஷம் புதிய வேஷ்டி கட்டி, தலையை ஆட்டி ஆட்டி வாசிக்கலாம்.

நிறைய பேர் கைதட்டுவார்கள், இல்லை?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *