ஒரு குயில் கூவப் போகிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2023
பார்வையிட்டோர்: 1,519 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கெட்டியான இருள் என் ஆத்மாவை நசுக்கிக் கொண்டிருக்கிறது. இருள் – கதிரவனைக் கடல் விழுங்கிவிட்ட பிறகு மட்டுமல்ல, அவன் மலைவாயில் முளைத்துக் கொண்டு வந்த போதிலும் இருள் என் ஆத்மாவை நசுக்கிக் கொண்டிருக்கிறது. இனம் பிரிக்க முடியாத உணர்ச்சிகள், வினாக்கள், விடைகள் சிக்கல் விழுந்த வலைக்குள் மாட்டிக் கொண்டுள்ளன.

புறத்தே,

மிகக் கடினமான கற்சுவர்கள் என்னை அடைத்துக் கொண்டுள்ளன. காலை நீட்டவும், மடக்கவும் அங்குல இடமும் கிடையாது. நெஞ்சை நிமிர்த்தி மார்பை விரித்து மூச்சை ஆழ்ந்து இழுக்கும்போது என் தலை கூரையில் அல்லது கூரை போன்ற பாறையில் “ணங்”கென்று மோதிக் கொள்கிறது. “வலிக்கிறதே” என்று கத்துவதற்கு நினைக்க மட்டுமே முடிகிறது.

இந்தச் சிறையில் காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் இடமில்லை, வழியில்லை, அதனால் புயலுக்கும் வெள்ளத்துக்கும் பயமில்லை என்கிறது மனம். அப்படி அது சொல்லும்போது பாய்ந்துவரும் அம்புக்கு முதுகைக் காட்டுகிறது.

அகத்தே,

இந்த வீட்டுக்குக் கூரையைக் காணோம். சுவர்கள் கூடக் காணோம். எந்த நேரத்தில் எப்படி புயல் வருமோ, வெயில் வருமோ. எந்தக் கொடிய விலங்கு என் முகத்தைக் கிழித்து விலாவெலும்புகளை முறிக்கப் போகின்றதோ?

பனி, உணர்வை உறைய வைத்துவிடும் கட்டியாய்க் கொட்டுகிறது. மழைச்சாரல் அலைக் கோவையாய்த் தாக்குகின்றன. வெயில் வருகின்றது. அதில் எரியும் கொள்ளிக்கட்டைகள் தீய்ந்து போகின்றன.

எனக்குப் பாதுகாப்பு இல்லை

முன்பொரு நாள்…!

நான் என் தாயின் கருவில் இருந்த அந்த ஒரு நாள்! என் தாயின் நெஞ்சம் துடித்ததைத் தெளிவாகக் கேட்டேன். அது கலைமகள் வீணையின் ராக மாலிகையாகப் பொங்கியது.

அவளுடைய தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்த இனிய வாழ் வை, வீரம் விளைத்த நிகழ்ச்சிக் கோவைகளை அந்த ராகமாலிகை தூண்களாகக் கொண்டிருந்தது. அந்த இசை பருவகால மலர்களின் கோபுரக் குவியலைத் தென்றல் தீண்டிக் கலைப்பதைப் போல அத்துணை மென்மையாய் நடந்தது.

என் தாயிடம் இருந்த சோம்பல் மண்தின்றுவிட்ட அவளு டைய தாத்தாவிடமும் பாட்டியிடமும் இல்லை. அவர்களுக்கென கால்கள் இருந்தன. கைகள் இருந்தன. (சிறகுகளைத்தான் சொல்கிறேன்) கூடுகள் இருந்தன. எல்லாம் இருந்தன.

என் தாய் அவளொரு சோம்பேறி, அட்டச் சோம்பேறி! எனக்கு ஆத்திரம் வரும்பொழுது இப்படித்தான் திட்டத் தோன்றுகிறது. ஆனால், அவள் நிலை அப்போது எப்படியோ? கம்சனுக்குப் பயந்து ஆண் குழந்தைகளையெல்லாம் எங்கெங்கோ விட்டு வளர்க்கச் செய்தார்களாமே, அதுபோல இவள் என்னைக் காக்கைக் கூட்டில் போட்டு விட்டுப் போய் விட்டாள்.

இதோ, என் ஆத்மாவை இருள் நசுக்குகிறது.

கருவில் இருக்கும்போது நான் கேட்ட ராகமாலிகை, என் நெஞ்ச நாடாவில் பதிவானது. இதோ நினைவென்னும் காந்த ஊசி பட்டு இசைவெள்ளமாய்ப் பெருகுகிறது.

மது சொட்டும் தம் குரலால் அத்தனை உயிர்களும் பதுமையெனச் சமைந்து போகும்படிப் பாடிய என் தாத்தாவின், பாட்டியின் குரலை நான் கேட்கிறேன். கல்யாணியும், காம்போதியும், சாருகேசியும் அடுக்கிய அலைவரிசையாய் அந்த ராக மாலிகை உயர்ந்து தாழ்ந்து என் மனக் கரையைத் தழுவுகின்றது. அந்த இசைப் பொதிக்குள்ளே என் நெஞ்சம் புதையலாகிப் போகின்றது. இரும்புத் துண்டாய், தங்கக் காசாய் என் நெஞ்சம் இருந்திருந்தால் பரவாயில்லை. ஆலவிதையாய் அல்லவோ அது ஆகிவிட்டது. எத்தனை நாள் புதைந்து கிடக்கும்?

என் நெஞ்சம் கனிந்துவிட்டது.

என் மனத்தரையில் பூத்தெழுந்த கல்யாணி காற்றோடு கலந்து விடத் துடிக்கிறாள். அப்படியே அந்த சாருகேசியும் காம்போதியும்…! என் குரல்வளை துடிக்கிறது. நாக்கு அசைகிறது. உள்ளமும் உணர்வும் முறுக்கேறுகின்றன. ஆனால், அந்த ராகமாலிகை என் குரல்வளைக்குள் சமாதியாகிவிடுகிறது.

எனக்கோர் அண்ணன். இந்தக் கூட்டில்தான் அவனும் பிறந்தான். எனக்கு வழி காட்டுவான் என்றிருந்தேன். என் துன்பங்களுக்குத் தீ வைப்பான் என இறுமாந்தேன். ஆனால் அவனோ என் தோளில் நின்றுகொண்டு அந்தக் காக்கைகளின் கால்களை வருடிக் கொண்டிருக்கிறான்.

ஏன்?

நான் கேட்ட அந்த ராகமாலிகையை அவன் கேட்டிருக்க மாட்டானோ! கேட்டிருந்தும் மறந்துபோய் விட்டானோ? அல்லது என் சாண் உடலும் வயிறென்று எண்ணி அதை நிரப்பும் வழியைத் தேடிக் கொண்டானோ?

அவனை எனக்குப் புரியவில்லை. என்னை அவனுக்குப் புரியவில்லை. ஆனால் அவனை “அண்ணா” என்கிறேன். அவனும் “தம்பீ” என்கிறான். உறவுக்கொன்றும் குறைச்சல் இல்லை.

என் தாய், அவளெங்கே?

காண வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருந்த அந்த ஒரு நாள் அவள் வந்தாள்.

எட்டு மரம் தாண்டி அப்பால் இருந்தபடியே, மகனே! என்றாள். அந்த இசை…! அந்தக் குரல்…! எனக்குப் புரிகின்றது. அவலத்தை அள்ளிவரும் முகாரியில் அவள் குரலை நான் கேட்டதே இல்லை. இன்று ஏன் குரலில் ஒரு நடுக்கம். ஏன்? அவள் குரல்வளை சிதைந்து போய்விட்டதா? ஐயோ!

“மகனே”

“அம்மா” என்று பதில் சொல்ல நான் நினைக்கிறேன். அப்போது ஓர் அம்பு. என நடுத்தலையில் பாய்கிறது. “ஆ” வென்று அலறிவிடாதபடி வாயை இறுக்கிக் கொண்டு திரும்பிப் பார்க்கிறேன். என் அண்ணன், அவனது கூரான அலகின் நுனி இரத்தத்தால் பூண் போட்டுக் கொண்டிருக்கிறது. என் தலையின் ரத்தம், என் ரத்தம்.

“முட்டாளே, கூவிக் காட்டப் போகிறாயா? இருக்கும் இடம் மறந்து போய்விட்டதா? நீ “வாயைத் திறந்தாலே போதும். உன்னைச் சுற்றியுள்ள காக்கைகள் கூட்டம் உன்னைச் சதையணுக்களாய் மாற்றிவிடும். வாயை மூடிக் கொண்டு பேசாமல் கிட” என்ற என் அருமை அண்ணன் வேறென்னென்னவோ சொல்லி முணகிக் கொண்டிருந்தான்.

தலையில் பட்ட காயம் வலிக்கவில்லை. நெஞ்சில் ரத்தம் வடிந்தது.

என் அண்ணன். அவனுக்கு அவன் கெட்டிக்காரன். பிழைக் கத் தெரிந்தவன் என்று அவனுக்கே அவன் முடி சூட்டிக் கொள் கிறான். கொள்ளட்டும். காக்கைக் கூட்டில் அவனுக்கென கொஞ்சம் தனியிடம் உண்டு. ஏவலுக்குச் சில காக்கைக் குஞ்சுகள். அந்தக் காக்கைக் குஞ்சுகளிடம் கொஞ்சம் பணிவு. இவற்றையெல்லாம் அவன் பெற்றிருந்தான். வாடகைக்குப் பெற்றிருக்கும் குடியிருப்பைப் போல.

“மகனே”

என் தாய். அவளேன் இங்கு வந்தாள்? எனக்கு ஏதோ தட்டுப்படுகிறது. குருடன் காலில் பட்ட கல்லைப் போல. என் மனம் வலிக்கிறது. அந்த முகாரியில் நழுவி விழும் பொருள் எனக்குப் புரிகிறது. ஆம், அவளுக்கே இப்போது கூடு இல்லை. மழையிலும் வெயிலிலும் வாடிய அவள் குரல் அதைத்தான் உணர்த்தியது.

உலகில் எத்தனை காடு, எத்தனை கூடு?

நான் என் குச்சிக்கால்களை நீட்டிச் சோம்பல் முறிக்க, குளத்து நீரில் மூழ்கிக் குளித்தபின் படபட வென்று கருநீலச் சிறகினை அடித்து, குளிர்ந்த நீரைப் பனிப்பூக்களாய் உதிர்க்க எங்கே என் கூடு? வானத்திலா, தரையிலா, கருநீலக் கடலின் பாறைச் சந்திலா? எங்கிருந்தாலும் சரி. அது எங்கே?

எல்லாக் காட்டிலும் கூட்டிலும் என்போன்ற பறவையின் மாயோன் குழலில் பிறந்து சேயோன் குரலில் வளர்ந்த குயிலினத்தின் நிலை அப்படித்தானோ? எங்காவது ஒரு கூடு…! எனக்கென…! ஒரே ஓர் அங்குல இடம் கிடைக்குமா?

நான் கனவுக்குள் ஆழ்ந்து போகிறேன். வேனிற்கால வண்ணப் பூக்களின் நடுவில் பொன் வேய்ந்த வீடு. அதில் என் தாய். அவள் கருவறைக்குள் நான். தாய் சொன்னாள்.

“அன்பே, என்னிலும் இனிய குரலால் உலகெல்லாம் இசைக் காற்றால் நிரப்பு. எனக்குப் பிடித்த ராகம் காம்போதி. அதுவே உன் பேருமாகட்டும்.

கனவு மறைந்தது.

ஓடுகளை உடைத்துக் கொண்டு காக்கையின் சொர- சொரப்பான சிறகுகளை மீறிக் கொண்டு பனிக்காற்றைச் சுவாசித்தவுடன் சொன்னேன் என் பெயர் காம்போதி என்று. என் மொழி தெரியாத காக்கைக் கூட்டம் என்னை அழைக்கத் தொடங்கியது.

“கபோதி…கபோதி…” என்று

காம்போதி கபோதியாய் ஆக்கப்பட்டேன்

என் அண்ணனுக்குக் கண் தெரியவில்லை.

இத்தனை பெரிய உலகில் கடவுள் எனக்கெனக் கொடுத்த அந்த ஒரே ஓர் அங்குல இடம் எங்கே? மன விமானத்தில் ஏறி உலகின் காடுகள் யாவும் சுற்றி வந்தேன். என்னைப் போலவே என்னைப் போன்றவர்களும். காக்கைக் கூட்டின் விளிம்புகளில் எந்தக் காற்றில் எங்கே விழப்போகிறோமோ?

“சே” எனக்கு அலுத்துவிட்டது. இப்படியொரு வாழ்வு. எப்போது நான் நானாவது? அந்தக் காம்போதியும், கல்யாணியும் சாருகேசியும் என் நெஞ்சில் அடைபட்டு வெளியேறும் வேளை பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த இசைவெள்ளத்தை எத்தனை நாள் அடைத்து வைத்திருப்பேன்! பொங்கப் போகும் அப்புது வெள்ளத்தால் காடுங் கழனியும் புத்தாடை பூணப் போகிறது என்று இரைகிறது மனம்.

நான் நானாக ஆவதற்கு அந்த இசைவெள்ளத்தின் மதகைத் திறந்துவிடுவதே சிறந்த வழியெனப்படுகிறது.

ஆனால், இந்தக் காக்கைக் கூட்டில் அது முடியுமா? அண்ணன் வேறு தலையில் கொத்துவான். அதுமட்டுமன்றி வயிற்றை வேறு அடிக்கடி நினைவு படுத்துகிறான். அவனுக்கு உடம்பெல்லாம் வயிறு. அப்படியென்ன வயிறு? அதற்கு உணவு? காக்கைக் குஞ்சுகள் தின்று மீந்தவை. எனக்கு அதில் சுவை கிடையாது.

ஆ…….அந்த ராகங்கள்!

என் தாய் அவளொரு சோம்பேறியாகவே இருக்கட்டும்.

ஆனால், கருவறையில் அவள் கற்றுத் தந்த பாடங்கள். அந்த ராகங்கள். அவைதாம் எத்துணை இனிமையானவை. நான் என்னைக் காட்டிக்கொள்ள அந்த ராகங்கள்தாம் அடையாளம்.

இந்த அடையாளங்கள் என் உடன் பிறப்புக்கள் சிலருக்கும் புரிகிறது. ஆனால் வேண்டாம் என்கிறார்கள். சிலருக்குத் தெரிவதே இல்லை. அவர்களுக்கும் என்னைப் போல் கருநீல நிறம்தான். செம்மை பாய்ந்த அழகு வாய்ந்த அலகுதான். ஆனால் ஏன் அந்த ராகங்கள் மட்டும் நினைவுக்கு வருவதில்லை?

காக்கைக் கூட்டில் பிறந்தாலும் கூவத் தெரிய வேண்டுமே, கூவக் காணோமே, ஏன்? நூற்றாண்டு காலமாய்க் காக்கைக் கூடுகளிலேயே பொரிக்கப்படுவதாலா? அல்லது காகத்திற்குக் காட்டும் “நன்றி” அந்த இனிய ராகங்களை அழித்து விட்டனவா?

“மகனே”

நான் சிலிர்த்துக் கொள்கிறேன்.

காலை நீட்டி மடக்க, கருநீலச் சிறகினைப் படபடவென்று அடித்து என் மாளிகையெல்லாம் பன்னீர் தெளிக்க எனக்கோர் அங்குல இடம். ஆம், எனக்கே எனக்கென்று…!

“மகனே’

என் ரத்தநாளங்கள் முறுக்கேறுகின்றன. குரல்வளை துடிக்கின்றது. அந்த ராகங்கள், கல்யாணியும், சாருகேசியும் காம்போதியும் ராக மாலிகையாய்க் கலந்து வெள்ளமெனப் பாய் அணு அணுவாய்க் கழியும் நேரத்தைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

“மகனே”

என்னால் இனிப் பொறுப்பதற்கில்லை விண் விண்ணெணத் துடிக்கும் நரம்புகள் அறுந்து போவதற்குள், கம்பிச் சட்டங்களாய் விறைத்துப் போயிருக்கும் என் சிறகுகளைக் கிளப்பிக் கொண்டு நான் பறக்கவே போகின்றேன்.

“அண்ணா”

“தம்பி”

அவன் கிடக்கட்டும். நான் பறந்துவிட்டேன்.

ஆவெனப் பரந்துகிடக்கும் வானவிதானத்தில் தங்கு தடையே இல்லாத பாதையில் காற்றுப் பாதையில் நான் பறக்கிறேன்.

கீழே,

ஓவென முழங்கும் கடல் பரணி பாடுகிறது. அங்கே மோகனராகம் களை கட்டுகிறது.

இதோ, என் மனமதகு திறந்து கொள்கிறது. நான் கூவப் போகிறேன். இங்கே ராகமாலிகை கொடிகட்டுகிறது.

குக்கூ….! இது நான்!

குக்…குக்…கூ….! இதுயார்? எங்கிருந்து?

அங்கே! எப்போது நான் குந்தப் போகிறேனோ அப்போது எனக்கோர் அங்குல இடம்!

எனக்கே எனக்கென்று!

எனக்கே எனக்கென்று!

– வானம்பாடி 1978, ‘கோணல் ஆறு’ தொகுதியின் மறுபதிப்பு

– கம்பி மேல் நடக்கிறார்கள், முதற் பதிப்பு: 2006,சிவா எண்டர்பிரைஸ், கோலாலம்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *